வியாழன், 31 ஜனவரி, 2013

மெல்லக் கொல்லும் கழிவுகள்


சா. சுமித்திரை

 எமது நாட்டில் அண்மைக் காலங்களில்  காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு , நில தாழிறக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் ஏற்படுகின்ற பல்வேறு பாரிய பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுத்து வருகின்ற நிலையிலே, பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் எம்மை அச்சுறுத்தி மிரள வைக்கின்றன.

 உணவுக் கழிவுகள் , விலங்குக் கழிவுகள் , மருத்துவக் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் , பொலித்தீன் கழிவுகள் ,  இலத்திரனியல் கழிவுகள், கண்ணாடிக் கழிவுகள் போன்றவை வருடாந்தம் கோடிக்கணக்கான தொன்களாக சேர்கின்றன. ஏற்கனவே கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகள் உட்பட பல வர்த்தக நகரங்கள் குப்பைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலே, கழிவுகள் , குப்பைகள் மேலும் அதிகரிக்குமானால் உயிரினப் பல் வகைமைக்கே அபாயமாக மாறும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கழிவுகள், குப்பைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவற்றினைத்  தரம் பிரித்து சரியான முறையில் வெளியேற்றுவதற்கான திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டங்களோ வழிமுறைகளோ இல்லாமையே இந் நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு அதிக அச்சுறுத்தலாக பிளாஸ்ரிக் , பொலித்தீன் மற்றும் கண்ணாடிக் கழிவுகளே உள்ளன. இவைகளை நாம் குப்பைகள் எனக் கருதாத நிலையில் அவை அபாயக் குப்பைகளாக உருவெடுத்து வருகின்றமை கவலை தரக் கூடிய விடயமாகும். உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்ரிக் , பொலித்தீன் பொருட்களின்  பாவனைகளால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. 
 ஏனெனில் , இம் மூலப் பொருட்களாலான உற்பத்திப் பொருட்களின் மோகத்துக்கு அடிமைப்பட்டுள்ள எம்மால் எப்படி இலகுவாக இதிலிருந்து வெளிவர முடியும் ? அதேபோல், தொழில் நுட்ப சாதனப் பொருட்களும் குப்பைகளாக உருவாகின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் மின்குமிழ்கள் , தொலைக் காட்சி, கையடக்கத் தொலைபேசி ,கணினி, மிக்ஸி  போன்ற மின்னியல் ,  இலத்திரனியல் பொருட்களின் பாவனை முடிந்ததும் அவற்றை சாதாரண குப்பைகளாகக் கருதி வீசி விடுகிறோம்.

அண்மையில் , தொழில் நுட்ப சாதனங்களின் பாவனையாலேயே அதிகளவு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார். இவை உடல் சுகாதாரத்திற்கு பாரிய கெடுதலைத் தருகின்ற அதேவேளை , சுற்றுச் சூழல் பல்வகைமைத் தன்மையை இல்லாதொழித்து விடுகின்றன என சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் , பிளாஸ்ரிக் , பொலித்தீன் , கண்ணாடி , மின்னியல் , இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை மண்ணில்  புதைக்கும் போது அவை உக்குவதில்லை.  அதேவேளை அவை நீண்ட காலம் மண்ணில் தங்கியிருந்து, மண் மற்றும் மண்ணுயிரிகளின் தரத்தினையும் மாற்றி விடுகின்றன. மாறாக நாம் அக்கழிவுகளை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை வளிமண்டலத்துடன் கலந்து விடுகின்றது. இதன் மூலம் சுவாசப் பிரச்சினைகள், அமில மழை , ஓசோன் படலத்தில் துவாரம் என ஏற்பட்டு வேறுபல சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

 உதாரணமாக , உலகம் முழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் பாதரசத்தில் சுமார் 25 சதவீதம், மின்னியல் இலத்திரனியல் சாதன உற்பத்திகளுக்கே பயன்படுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், பாதரச உற்பத்திகளைக் கட்டுப்படுத்த 140 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுவிற்சர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உடன்படிக்கையொன்று எதிர்வரும் ஒக்டோபரில் , ஜப்பான் மினமடா நகரில் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஒரு கணினியை உற்பத்தி செய்ய சுமார் 7 கிலோ கிராம் பிளாஸ்டிக் மூலப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது. சாதாரணமாக அன்றாடம் இப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டுமே சிறுநீரகப் பாதிப்புகள், சுவாசப் பிரச்சினை, ஆண்மைக் குறைபாடு எனப் பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் அடிக்கடி கூறுகின்றனர். இந்நிலையிலே, அவை குப்பைகளாக மண்ணில் போடப்படும் போது ஏற்படப் போகும் அபாயங்களை சாதாரணமாகக் கருதி விடமுடியாது. 

 அதேபோல, மருத்துவக் கழிவுகள் பற்றியும் கட்டாயம் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இலங்கையில் ஆரோக்கியமான துறையாக இருந்த சுகாதாரத் துறை இன்று பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. அச்சவால்களிலொன்றாக மருத்துவக் கழிவுகள் உள்ளன.

அநேகமான மருத்துவமனைகளிலோ , சிகிச்சை நிலையங்களிலோ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ஊசிகள் , செலைன் போத்தல்கள், இரத்தம்  தோய்ந்த பஞ்சுகள் , கையுறைகள், ஊசி மருந்துக் குப்பிகள் என மருத்துவக் கழிவுகள் பொது இடங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன. இவைகளால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவையாகவும்  இவை காணப்படுகின்றன.

இதேபோல , உணவு மற்றும் விலங்குக் கழிவுகளும் சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றினால் நீண்ட கால பிரச்சினைகள் எனப் பெரிதாக இல்லாத போதிலும் சுகாதார மற்றும் தொற்று நோய்கள் என குறுங்காலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அழுகிய , பழுதடைந்த உணவுப் பொருட்களையோ, கால்நடை விலங்குகளின் கழிவுகளையோ மண்ணில் புதைக்காது, பொது இடங்களில் போடுகின்றனர். இந்நடவடிக்கைகளால் நுண்ணங்கிகளின் பெருக்கம் அதிகரித்து மண், வளி , நீர் என்பன மாசடைவதற்கான வழி ஏற்படுகின்றது.

இந்நிலையில், பொது மக்களால் சுற்றாடலில் தினமும் சேர்க்கப்படுகின்ற குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளமையால் அரசாங்கம் அவற்றினை சேகரிப்பதிலிருந்து ஒரு இடத்தில் சேர்த்து வைக்கும் வரை அதிகளவில் பணம் செலவிடுகின்றது.
இதேவேளை , நாட்டில் திண்மக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், எதிர்காலத்தில் நகரங்களில் வசிப்பவர்களிடம் குப்பைகளை அகற்ற வரி அறவிடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வருமென சுற்றாடல்துறை அமைச்சராகவிருந்த அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் , கொழும்பு மாநகர சபையால் மட்டும் தினமும் சேகரிக்கப்படும் 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது என்பது இலகுவான காரியமல்ல. இது போன்றே ஏனைய பெரிய நகரங்களும் குப்பைகளால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. இதனைக் கருத்திற் கொண்டே வரி அறவிடுவது தவிர்க்க முடியாதுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 இந் நிலையில் , ஏற்கனவே கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற பிரதான பகுதிகளிலும் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற நகரப் பகுதிகளிலும் குப்பை ஏற்ற வரும் ஊழியர்களுக்கு மாதமோ அல்லது வருடமோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ சிறு தொகை பணம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில்  அப் பகுதிக் குப்பைகள் முறையாக அகற்றப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கின்றனர். அதேவேளை உரிய தவணையிலே வந்து குப்பைகள் அகற்றப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஒரு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள்  ஒரு பொது இடத்தில் குவித்து விடப்பட்டு நாள், கிழமைக் கணக்காக அப்படியே காணப்படுகின்றன.  அதேபோல பொது மக்களாகிய தாமும் வீதிகளில் செல்கின்றதை மறந்து தமது வீட்டுக் குப்பைகளை எறிந்து விட்டுச் செல்கின்றனர்.
பொது இடங்களில் குவிக்கப்பட்டு இருக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. குப்பைகளால் அப் பகுதி வடிகான்களும் அடைபடுகின்றன.  
தொடர்ந்து இந்த வடிகான்கள் சீராக துப்புரவு செய்யப்படாமையால் மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாதுள்ளது. இந் நிலையில் தான் தாழ்வானப் பகுதி நிலங்கள், வீடுகளுள் வெள்ள நீர் செல்கின்றது. குறிப்பாக அடிக்கடி பாரிய வெள்ளப்பெருக்கு அபாயத்திற்குள் சிக்கிக் கொள்ளும் கிழக்கு மாகாணத்திற்கு நிலத் தோற்றப்பாடுகள் தவிரவுள்ள காரணங்களில் இதுவுமொன்றாகும்.
 இதேபோல, தெருவோரங்களில் வீசப்படும், குவிக்கப்படும் குப்பைகளால் மழை , வெள்ளப் பெருக்கு காலங்களில் அதிக சிரமங்களுக்குள்ளாக வேண்டி வருகின்றது
. எனவே, இவ் விடயங்கள் தொடர்பாக மாநகர சபை , நகர சபை உறுப்பினர்கள் அறிக்கைகளை விடுவதை நிறுத்தி விட்டு, உரிய கவனமெடுத்து முறையான கழிவு அகற்றும் பணிகளுக்கு உதவ முன்வர வேண்டும். 
இதேபோல, பொது மக்களும் குப்பைகள் தொடர்பான விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அதிகரித்துவரும் சனத்தொகை பெருக்கத்தால் காணிகள் துண்டாக்கப்படுகின்றன. நிலப் பற்றாக்குறை பாரியளவில்  காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளைப் போடுவதற்கென நிலங்களை ஒதுக்குவது என்பது உண்மையிலேயே , இயலாத காரியமாகும்.
பல நாடுகளில் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன. இவை ஏனைய கரையோர நாடுகளில் கரையொதுங்குகின்றன. இந் நடவடிக்கைகளில் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனாலேயே அதிகளவான மீன்கள், கடற் தாவரங்கள் இறந்து கரையொதுங்குகின்றன. குறிப்பாக மேல் மாகாணத்தில் சேரும் குப்பைகளின் அளவு மாததாந்தம் குறிப்பாக மேல் மாகாணத்தில் சேரும் குப்பைகளின் அளவு 1540 மெற்றிக் தொன்களாகும். நாட்டில்  சேரும் குப்பைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயேயுள்ளதென அறியப்படுகின்றது.

தற்பொழுது கொழும்பு மாவட்டத்தில் குப்பைகளைப் போடுவதற்கு இடமில்லை. எனவே, இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கழிவுப் பொருட்கள் உரியவாறு முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். இப் பிரச்சினைகளை இனிமேலும் உணராதிருந்தால் , பாரிய அழிவுகளை நாமே விரைவில் தேடிக் கொள்ள வேண்டி வரும். மனித இனத்தை மெல்ல மெல்லக் கொல்லும் இந்தக் குப்பைக் கழிவுகளால் உருவெடுத்துள்ள பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த பல மேலைத்தேய நாடுகள் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டன.

அந்நடவடிக்கைகளிலொன்றாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் மட்டுமன்றி , மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் மின்னியல் இலத்திரனியல் பொருட்களை கழிவாக அகற்றுவதில்லை. அவை மீள் சுழற்சிக்காக சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவை புதிய வடிவத்தில் பாவனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந் நடவடிக்கைகளை எமது நாட்டில் மேற்கொள்வதன் மூலம் ஓரளவு குப்பைக் கழிவுகள் ÷ சர்வது குறையும். அதேபோல  ஒரு முறையோ அல்லது இரு முறையோ பயன்படுத்தப்பட்ட பின்னர்  பிளாஸ்ரிக் கண்ணாடிப் பொருட்கள் எறியப்படுகின்றன. இவற்றையும்  மீள் பாவனைக்கு உட்படுத்தலாம். ஆனால், பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைகளை நாம் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மீள்பாவனைக்கு அவற்றினை பயன்படுத்தும் போது கூட நச்சுத் தன்மையடைகின்றது. எனவே அவற்றிற்குப் பதிலாக கடதாசி, மரப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

குப்பைகள் சேர்வதற்கு இன்னொரு காரணம் நவீன ரகத்திலான கவர்ச்சியான வடிவங்களுக்காக அநேக பொருட்களை அடிக்கடி  மாற்றிக் கொள்வதும், பழையவற்றை குப்பைகளாகப் போடுவதுமாகும். இச் செயலையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கொழும்பை பொறுத்தவரை  அநேகமானவை மாடிக் கட்டிடத் தொகுதிகளேயாகும். ஒரு சிறு நிலப் பகுதி கூட இல்லாத  இக் கட்டிடத் தொகுதிகளில் சிறு கடதாசித் துண்டுகளைக் கூட கொழும்பு மாநகர சபையே வந்து அகற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 இந்நிலையில் குடியிருப்பாளர்களால்  நாளொன்றுக்கு அகற்றப்படும் கடதாசிகள், பழைய துணிமணிகள் ,  உடைந்த கண்ணாடிப் போத்தல்கள் , உணவுக் கழிவுகள் என்பவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு பையினுள் கட்டிப் போட்டு விடுகின்றனர். இதனால் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து சேமிப்பதிலோ அல்லது அழிப்பதிலோ அல்லது மீள் சுழற்சிக்குட்படுத்துவதிலோ மாநகர சபை சுத்திகரிப்புப் பணியாளர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
 எனவே, இவற்றை குப்பைகள் அகற்றும் குடியிருப்பாளர்கள் சிரமம் பாராது வகைப்படுத்தி பைகளில்   அடைத்து அகற்றுவதன் மூலம் குப்பை அகற்றும் முகாமைத்துவம் ஓரளவு பாதுகாக்கப்படும். இதுபோன்று நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன்  செயற்பட்டால் குப்பைகளால் ஏற்படும் அழி வையும் ஆபத்தையும் ஓரளவுக்காவது தடுக்க முடியும்.