ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

அழகு ராணிப் போட்டியிலும் இனத்துவேஷம்!

சா.சுமித்திரை

இன, மத அடக்கு முறைகளுக்கெதிராக, காலம் காலமாக தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ள போதிலும் அவற்றினை இன்றைய காலத்திலும் ஏற்க பலரும் தயாரில்லை என்பதற்கு கடந்த வாரம் அமெரிக்க அழகியாக தெரிவு செய்யப்பட்ட நினா தவுலுரி தொடர்பான விமர்சனங்கள் நல்ல உதாரணமாகும். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயோர்க் அழகி நினா தவுலுரி இவ்வருடத்துக்கான மிஸ் அமெரிக்கா பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவில்  நடந்த இறுதிப் போட்டியில் மிஸ் அமெரிக்கா பட்டம் வென்று இவர் சாதனை படைத்துள்ளார். 

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியன்று நியூயோர்க்கில் சைராகுஸ் பகுதியில் நினா தவுலுரி பிறந்தார். தனது 4 ஆவது வயதில் லஹோமாவிற்கு குடும்பத்துடன் சென்ற நினா, தனது ஆரம்பக் கல்வியை மிச்சிகனிலுள்ள சென்.ஜோசப் பாடசாலையில் தொடர்ந்தார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை முடித்தார். 

தொடர்ந்து 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து சைராகுஸின் புறநகர்ப் பகுதியான பயாட்வலியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நினாவின் தந்தை தவுலுரி கோடீஸ்வர சௌத்ரி சென்.ஜோசப் மருத்துவமனையில் பெண்ணியல் மருத்துவ நிபுணராக கடமையாற்றி வருகின்றார். இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவிலேயே கோடீஸ்வரர் சௌத்ரி பிறந்தவராவார். 

இந்து மதத்தினைப் பின்பற்றும் இவர், 1981 இல் தொழில் நிமித்தம் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நினாவின் தாயார் ஷீலா ரஞ்சினி மென்பொருள் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார். லீலாவும்  இந்தியாவைச் சேர்ந்த ஒருவராவார். 

நினா, தனது சிறு வயதில் பெற்றோரின் தாய் வீடான இந்தியாவிற்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தாலும் இந்திய மண்ணில் உள்ள பற்று நினாவிற்கு அதிகமாகும். எனவே தான், தன் பெற்றோரை அரவணைத்த இந்திய மண்ணுடன் எந்த நேரத்திலும் தொடர்புகளை வைத்திருக்க வேண்டுமென்பதற்காக, தெலுங்குத் திரைப்படங்களையே பார்த்து இரசிப்பதுடன் தெலுங்கு மொழியையும் சரளமாகப் பேசக் கூடியவர். 

நினா, தனது பல்கலைக்கழக காலத்தில் டீன் லிஸ்ட், மிச்சிக்கன் மெரிட் விருது, தேசிய சமூக கௌரவ விருது உட்பட சில விருதுகளையும் பெற்று தான் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள நினா, 2006 இல், இடம்பெற்ற மிஸ், ரீன் அமெரிக்கா போட்டியிலும் தனக்கொரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டார். 

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி அழகி இவர் தான். மேலும், இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக நியூயோர்க் அழகி வென்றுள்ளார். கடந்த வருடம், நியூயோர்க்கைச் சேர்ந்த மலோரி ஹேகன் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் சிற்றியில் நடந்த மிஸ் அமெரிக்காவிற்கான இறுதிப் போட்டியில் 53 பேர் கலந்து கொண்டனர். இதில் 24 வயதான நினாவுக்கு மிஸ் அமெரிக்கா பட்டம் கிடைத்துள்ளது. 

இப்படியானதொரு பெருமை நிறைந்த தருணத்தில், அமெரிக்கர் அல்லாத, பொன்னிறக் கூந்தல் இல்லாத, நீல நிறக் கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தெரிவு செய்தமை தொடர்பில் இன ரீதியான விமர்சனங்கள் உருவாகியுள்ளன. 

நினாவை, அரேபியரொருவரே மிஸ் அமெரிக்கா ஆகியுள்ளார் எனவும் இவரை அல்  ஹைடாவுடன்  தொடர்புபடுத்தி தீவிரவாதி என சமூக தளங்களின் மூலம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அல்ஹைடாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கிண்டல் அடித்துள்ளனர். 

இனவெறியை தூண்டுபவையாகவுள்ள இந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நினா, சமூக சேவைகளில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளமை, அவரின் வயதிற்கு கூட, இல்லாத பக்குவத்தினை காண்பித்துள்ளது. 

இவரிடம் இறுதிச் சுற்றில் நடுவர்களால் கேட்கப்பட்ட கேள்வி, பிளாஸ்டிக் முகமாற்று சத்திரசிகிச்சை பற்றியதாகும். உங்கள் இமை மற்றும் கண்கள் மூலம் நீங்கள் ஒரு ஆசிய நாட்டவர் என்பதைக் காட்டிக் கொடுக்கிறதே. அதை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் அகற்றச் சொன்னால் என்ன செய்வீர்கள் என நடுவர்கள் கேட்ட போது, நீங்கள் எப்படி இயல்பாக இருக்கிறீர்களோ, அதில் நம்பிக்கை வையுங்கள் என்றார் நினா. 

தனது வம்சாவளிக்கு பெருமை சேர்த்துள்ள நினா உண்மையிலேயே மிஸ் அமெரிக்காவிற்குத் தகுதியானவர் என்பதை மறுக்க முடியாது. சாதாரண போட்டிகளில் கூட, இத்தகைய இன, மத துவேஷங்களைக் காட்டுவதை உலகம் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாகும். 

புதன், 18 செப்டம்பர், 2013

போதைப் பொருள் கடத்தலின் மையமாகும் இலங்கை

சா.சுமித்திரை

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்க அரசு உலகெல்லாம் கடன்களை வாங்கிக் குவித்து அபிவிருத்திப் பணிகளையும் அழகுபடுத்தல்களையும் முன்னெடுத்து வர சர்வதேச கடத்தல்காரர்களும் இலங்கை அரசியல் வாதிகள் உட்பட செல்வாக்கு மிக்க பெருந்தலைகளும் இலங்கையை ஆசியாவின் போதைப் பொருள் கடத்தல் மையமாக மாற்றி வருவதையே குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கொழும்புத் துறைமுகம் ஊடாக இடம்பெற்ற மிகப் பாரியளவான போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கொழும்புத் துறைமுகம் ஊடாக சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட மதுபானத் தயாரிப்புக்கான பாரியளவான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான “எத்தனோல்’ கைப்பற்றப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு அழுத்தங்கள், தலையீடுகளால் விசாரணைகள் நகர முடியாமல் நிற்கும் நிலையிலேயே 200 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் கடத்தலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் முகவரியிடப்பட்டு 40 அடி நீள கொள்கலனொன்று கிறீஸ் டின்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வந்திறங்கியுள்ளது. இக்கொள்கலன் தொடர்பில் துறைமுக சுங்கத் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொள்கலனைச் சோதனையிட்டபோது கொள்கலனுக்குள் இருந்த கிறீஸ் டின்களுக்குள் மிகவும் நுட்பமான முறையில் 125 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

 பிரபல சர்வதேச போதைவஸ்து கடத்தல் மன்னனான தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான டி கம்பனியினராலேயே இலங்கைக்கு  இந்த 40 அடி கொள்கலன் அனுப்பப்பட்டிருந்தது விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  சில நாட்களுக்குள் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட 20 அடி நீளமான இரண்டு கொள்கலன்களும் சந்தேகத்தால் கொழும்புத் துறைமுகத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அக்கொள்கலன்களில் அப்படியொன்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இல்லையென சுங்கத் திணக்கள அத்தியட்சகர் மாலிபிய சேனவினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அடங்கிய 40 அடி கொல்கலனை இறக்குமதி செய்ததாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களின் தகவலின் பேரிலேயே இவ்விரு கொள்கலன்களும் சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தன. 

அக்கொள்கலன்களில் சுமார் 1000 பொதிகள் இருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான போதைப் பொருளும் அவற்றுக்குள் இல்லையென சுங்கத் திணக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது

இதேவேளை 125 கிலோ ஹெரோயின் விவகாரம் தொடர்பில் திறந்த புலன் விசாரணைகளை நடத்துவதற்காக அமெரிக்காவின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இவ்வார இறுதிக்குள் இலங்கை வரவுள்ளதாகவும் பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவிக்கின்றது.

தாவூத் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரால் பாரியளவில் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் போதைவஸ்து வியாபாரம் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நடத்தவுள்ள விசாரணை தாவூத் இப்ராஹிம் பற்றிய புலன் விசாரணைக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கிலேயே  அமெரிக்க அதிகாரிகள்  இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம் இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கஞ்சா ஹெரோயின் கடத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  நாளாந்தம் 150 பேர் கைது செய்யப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் என்பது மெக்ஸிக்கோ போன்ற வட அமெரிக்க நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பாரிய போதைப்பொருள் கடத்தல் பிரச்சினைக்குள் ஆசிய நாடுகள் சிக்கவில்லை. இருந்தபோதிலும் தற்பொழுது போதைப் பொருள் கடத்தல் மையமாக ஆசிய நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசிய நாடுகள் என்று பார்க்கும் போது ஏனைய நாடுகளை விட இலங்கை நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட குட்டித் தீவாகும். அத்துடன்  எமது நாடு அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவுள்ளமையால் சுற்றுலாத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலைமையில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு கடல் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவே அவற்றினைக் கடத்துவதற்கு இலங்கை ஒரு சாதகமான மையமாக அமைந்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறுமானால் இங்கு போதைப் பொருள் பாவனையாளர்களின் வீதம் அதிகரிப்பதுடன் மாபியா குழுக்களும் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல உருவாகுவர்.இதன்மூலம் வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் எந்த விதக் குறையும் இல்லாமல் அதிகரிக்கும்.


ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்கள் விற்கப்படல், பாவனை போன்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன.தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர்களால் சக மாணவர்களும் பாதிக்கப்படும் அச்சம் காணப்படுவதாகவும் குறித்த பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களில் பெருமளவானவை போதைவஸ்து பாவனையளர்களினாலேயே இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கும் அதேவேளை இலங்கைச் சிறைகளில் உள்ளவர்களில் 100 க்கு 80 வீதமானோர் போதைவஸ்துப்  பாவனையாளர்கள் என்றும் இந்த 80 வீதமானோரில் அதிக எண்ணிக்கையிலானோர் இளைஞர்கள் என்றும் சிறைச்சாலைகள் திணக்களம் தெரிவிக்கின்றது.

 இலங்கையைப் பொறுத்தவரையில் போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமாகவே  காணப்படுகின்றது. போதைப் பொருட்களுடன் ஆண்களும் பெண்களும் கைது செய்யப்படுவதும் போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சிறைச்சாலைகளுக்குள் கூட போதைப் பொருள் பாவனையும் விற்பனையும் சிறப்பாக நடப்பதாக கூட கூறப்படுகின்றது. சிறை ச்சாலைக்குள் அடிக்கடி இடம்பெறும் சோதனைகளின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதும் இதனை உறுதி செய்கின்றது.

 இலங்கைக்குள் வெளிநாடுகளிலிருந்தே போதைப் பொருட்கள்  குறிப்பாக ஹெரோயின் பிரவுண் சுகர் போன்றவை கொண்டு வரப்படுகின்றன. இவற்றை கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவே கொண்டு வர வேண்டும். அதற்கு கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத் துறைமுகமே பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையைச் சுற்றிய கடற் பகுதிகள் கடற் படையினரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் படகுகள் மூலம் கொண்டு வருவது சாத்தியமில்லை. எனவே கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத்துறைமுகம் ஊடாகவே போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைகின்றன.

 இலங்கைக்கான இவ்விரண்டு நுழைவாயில்களும் கடும் பாதுகாப்பைக் கொண்டுள்ள பகுதிகள் என்பதால் உயரதிகாரிகள், பெருந் தலைகள் அரசியல்வாதிகள் தொடர்புகளின்றி இவற்றைக் கொண்டு வர முடியாது. எனவே இப் போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணி பெரிய வலையமைப்பைக் கொண்டது. சில வேளைகளில் பொலிஸார் நெருங்கக்கூட முடியாத இடங்களாகவும் இருக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். அத்துடன் பிடிபட்டது இவ்வளவு என்றால் பிடிபடாதது எவ்வளவு என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

 இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறுகின்றதோ இல்லையோ ஆசியாவின் போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக மாறி வருகின்றது என்பதே உண்மை. இதன் விளைவுகள் இளைய தலைமுறைக்கு பெரும் சவாலாகவே இருக்கப் போவதும் உண்மை. எனவே இப்போதைப் பொருட்கள் கடத்தல்கள், பாவனைகள் தொடர்பில் அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் உடனடித் தேவை

தாக்க முயலும் அமெரிக்காவும் தடுக்க முயலும் ரஷ்யாவும்

சிரியவிவகாரம்

சா.சுமித்திரை

சிரிய விவகாரம் தொடர்பான இராஜ தந்திர நகர்வுகள் தோல்வியடைந்தால் பதில் நடவடிக்கைக்குத் தயார் நிலையில் அமெரிக்க இராணுவம் இருப்பதாக ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ள நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத் தலைமையிலான ஆட்சியை பாதுகாக்க ரஷ்யா கடும் பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது.

சிரிய நெருக்கடியில் இராணுத் தலையீட்டுக்கு அதிகாரமளிக்கும் வாக்கெடுப்பு அமெரிக்க காங்கிரஸினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும், சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அப்புறப்படுத்தும் இராஜ தந்திர முயற்சிகள் தொடர்வதாகவும் அந்நகர்வுகள் தோல்வியடைந்ததால், இராணுவம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் ஒபாமா கூறியுள்ளார்.

எனினும், இரசாயன ஆயுதங்கள் ஏதும் இருப்பின் அவற்றை சர்வதேச அவதானிகள் யாரேனும் கண்டறிய வேண்டுமென்று ரஷ்யா யோசனை ஒன்றை முன் வைத்திருந்தது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் இந்த யோசனையை, சிரிய அதிகாரிகளும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதில் தொடர்ந்தும் முழுமையான நம்பிக்கையற்ற தன்மையிலேயே இருக்கின்றன.

அதேசமயம், ரஷ்யா ஜனாதிபதியின் திட்டமானது, செவ்வாய்க்கிழமை ஐ.நா.வில் இராஜதந்திர சர்ச்சைக்கும் வழிவகுத்திருந்ததாக கூறப்படுகின்றது. சிரியாவிற்கெதிரான இராணுவ நடவடிக்கையை தடுப்பதற்கு ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட யோசனையானது, சர்வதேசத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிரியாவின் இரசாயன ஆயுதக் களஞ்சிய சாலையை கொண்டு வருவதுடன் பின்னர் அதனை அவர்களே அழித்துவிட வேண்டும் என்பதை சிரிய அரசிடம் கேட்பது போலவே அமைந்துள்ளது. ஆகவே, சிரியா மீதான ரஷ்யாவின் யோசனை எப்படி சச்தியமானதொன்றாக அமையுமென்ற கேள்வியும் எழுகிறது.

சிரியாவின் இரசாயனக் களஞ்சிய சாலையை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோ அல்லது அதனை அழிப்பது என்பதோ இராஜதந்திர ரீதியில் அவ்வளவு இலகுவான விடயமல்ல.

முதலில், சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதப் பாவனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனது மக்களுக்கெதிராக நான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்குரிய எதுவிதமான ஆதாரங்களும் கிடைக்காது என சிரிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், இரசாயன ஆயுதங்கள் இருந்திருந்தாலும், அது மத்திய அரசின் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படவில்லை. ஒரு தாக்குதலுக்கெதிரான தாக்குதலுக்கென தனது ஆதரவாளர்கள் இரசாயன ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம் எனவும் அசாத் கூறியுள்ளார்.

அசாத்தின் இந்த உரை மூலம், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது கொஞ்சம் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. அசாத், தனது கட்டுப்பாட்டில் இரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முற்படாது இதனைக் கூறியுள்ளார்.

ஈரானிலும், இதுபோன்ற குற்றச்சாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவென, கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக பல தடவைகள் ஐ.நா.ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் விசாரணையாளர்கள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமையில் சிரியாவுக்கெதிராக அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்துமாயின், அது புதிய பயங்கரவாத அலையொன்றை கட்டவிழ்த்து விடுவதாக அமையுமென புட்டின் எச்சரித்துள்ளார். மில்லியன் கணக்கானோர் அமெரிக்காவை ஒரு ஜனநாயகத்தின் முன் மாதிரியாகப் பார்க்கவில்லையெனவும் புட்டின் குற்றஞ்சாட்டுகின்றார்.

எதுவாயினும் சிரியா மீது அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டினையோ அல்லது அசாத்துக்கெதிரான முன்னேற்பாடுகளையோ ரஷ்யா விரும்பவில்லை என்பதை அவருடைய கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இரு வருடங்களுக்கும் மேலாக, யுத்தம் தின்று கொண்டிருக்கும் சிரிய பிராந்தியத்தின் மீது இராணுவத் தலையீட்டினை திணிப்பது பலமிழந்துள்ள சிரிய மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாகவே அமைந்துவிடும்.

ஆயினும், பஷார் பதவி விலகக்கோரி, ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தம், இன்று எவ்வித இலக்குமின்றி ஆபத்தான கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் அந்நாட்டினை மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க ரஷ்யா எத்தனிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதேவேளை சிரிய விவகாரம் தொடர்பில் அக்கறை காட்டிவரும் தமது ஜனாதிபதி புட்டினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குமாறு அந்நாட்டு கல்வி ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது.

இரசாயன ஆயுத தாக்குதல் விவகாரம் தொடர்பில் கிரிகிஸ்தானில் நடைபெறும் பிராந்திய மாநாட்டிலும் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.

இதன்போது சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா 4 கட்டத் திட்டத்தை உருவாக்கி அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

சிரிய இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் இணைய வேண்டும், இரசாயன ஆயுத களஞ்சியசாலையும் அவை எங்கு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் சிரியா தெரிவிக்க வேண்டும். அவற்றை ஆயுத தடுப்பு குழுவின் விசாரணைகள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும், இரசாயன ஆயுதங்கள் ஐ.நா.குழு விசாரணையாளரகளின் உதவியுடன் அழிக்கப்பட வேண்டும் என்ற 4 திட்டங்களையே ரஷ்யா வகுத்துள்ளது.

மறதி’யை மறக்க முடியாத பிரிட்டன் பிரதமர்

சா.சுமித்திரை

உலகளவில் பல கசப்பான சம்பவங்களுக்கும் துயரமான நிகழ்வுகளுக்குமே முகம் கொடுத்து வருகின்ற இன்றைய காலப்பகுதியில் பலரை மறதி என்னும் பண்பே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை எவராலும் மறந்து விட முடியாது.

மறதி மட்டும் இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே இருப்பர். அத்துடன் நாம் அனுபவிக்கும் ஒரு துக்க சம்பவத்தை ஓரிரு நாட்களிலோ அல்லது சில காலப்பகுதியிலோ மறந்து விடாவிடின் மோசமான மனநிலை பாதிப்புகளுடன் வாழ நேரிடும்.

“மறதிக்கு மருந்து மாஸ்டரின் பிரம்பு’ என்ற காலம் மாறிப் போய் இன்று மறதியே கட்டாய தேவையாகிவிட்டது. ஆயினும் மறதியால் ஏற்படும் பாதிப்புகளும் சொல்லிலடங்காதவை.

மறதியால் எத்தனையோ உயிரிழப்புகள், சொத்து சேதங்கள், நோய்கள், உறவுகளுக்குள் விரிசல் எனப் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ஆனால் தன் மறதியால் ஒரு நாட்டின் முக்கியஆவணங்களையே தொலைத்து சர்சைக்குள் சிக்கியுள்ளார் பிரிட்டன் பிரதமர்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது உத்தியோகபூர்வ இரகசிய ஆவணங்களைக் கொண்டு செல்லவென பயன்படுத்தும் ஒரு சூட்கேஸ் பெட்டியை தான் பயணித்த ரயிலின் பெட்டியிலேயே மறந்து வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

டேவிட் கமரூனுக்கு மறப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே தனது 9 வயது மகளை சாப்பிடச் சென்ற ரெஸ்ரோடன்டிலேயே விட்டு விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

கடந்த  ஜூன் மாதம் காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ரெஸ்ரோ டிரன்டிற்கு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிட்டு முடிந்த பின்னர் 9 வயதான தன் மகள் நான்சியை மட்டும் அந்த உணவகத்திலேயே விட்டு விட்டு தானே காரினை செலுத்திக் கொண்டு ஏனையவர்களுடன் வீடும் வந்து சேர்ந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பின்பே நான்சியை எல்லோரும் தேடியுள்ளனர். அப்பொழுதுதான் கை கழுவும் பகுதியில் நான்சியை விட்டு வந்தது கமரூனுக்கு நினைவுக்கு வந்தது.

பின்னர் மீண்டும் காரினை செலுத்திக் கொண்டு உணவகத்திற்குச் சென்ற போது அச்சிறுமி அமைதியாக தனது தந்தைக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இரகசிய ஆவணங்களை கொண்டு செல்வதற்கென உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும் சூட்கேஸினை தான் பயணித்த ரயில் பெட்டியிலேயே வைத்து விட்டு மறந்து போய் இறங்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்ற ஜீ20 மாநாட்டில் பங்குபற்றி விட்டு நாடு திரும்பியவுடனேயே ரயிலில் யோர்க்ஸ்ரேக்கு சென்றுள்ளார்.
யோர்ஸ்ரேயில் கமரூனின் மனைவி சமந்தாவின் சகோதரிக்கு திருமணம் இடம்பெற்றது. இந்த திருமண நிகழ்விலும் கலந்து கொள்ளவே தனது மனைவி சமந்தாவுடன் லண்டன் வடக்கிலுள்ள கிங்ஸ் குரோஸிலிருந்து யோர்க்ஸ்ரேக்கு ரயிலில் புறப்பட்டுள்ளார்.

ஜீ 20 மாநாட்டில் கமரூன் பங்குபற்றிய போது கூட இரகசிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் சிவப்பு நிற சூட்கேஸினை வைத்திருந்துள்ளார். மாநாட்டில் பங்கு பற்றிய போது சிவப்பு நிற சூட்கேஸுடன் கமரூன் காணப்படும் புகைப்படம் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜீ 20 மாநாட்டில் சிரியா விவகாரம் தொடர்பாக புலனாய்வு தரவுகள் பற்றியும் பேசப்பட்டிருந்தது. இவை தொடர்பான ஆவணங்களும் அச்சிவப்பு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற பல இரகசிய ஆவணங்களைக் கொண்ட இப்பெட்டியை கமரூன் மறந்து  வைத்து விட்டுச் சென்றுள்ளார். அதனை விட சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் சூட்கேஸ் பெட்டியின் சாவியும் அதனுடன் இருந்தமையேயாகும்.

உயர் பதவிக்கென விஷேடமாக பயன்படுத்தும் இந்த சிவப்பு நிற சூட்கேஸின் வெளி மேற்பரப்பில் “பிரை மினிஸ்டர்’ (பிரதமர்) என அவருடைய பதவி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுள் உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்துக் கொண்டு யோர்ஸ்ரேக்கில் நடைபெறும் தனது மைத்துனியின் திருமணத்தில் கலந்து கொள்ளவும் சென்றுள்ளார்.

குறித்த ரயிலிலிருந்து மாறி இன்னொரு ரயிலில் ஏறி தனது பயணத்தினை கமரூன் தொடர்ந்துள்ளார். இதேசமயம் கமரூன் பயணித்த முதல் ரயில் பெட்டியில் தவற விடப்பட்டிருந்த சிவப்புப் பெட்டியை  அதில் பயணித்த பயணியொருவர் படம் பிடித்துள்ளார்.

இதேவேளை, பிரிட்டன் பிரதமரின் வாசஸ்தலமான டவிங் ஸ்ரீட்டிற்கு இவ்விடயம் தொடர்பாக செய்தி அனுப்பப்பட்டது. இதற்கிடையே சிவப்பு பெட்டி கமரூனின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

இதேசமயம் இந்த சிவப்புப் பெட்டி கமரூனின் பொலிஸ் பாதுகாப்புக் குழுவின் முழுமையாக கண்காணிப்பின் கீழேயே இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த சிவப்பு நிறப் பெட்டி எவரினதும் கண்காணிப்பும் இன்றி இருந்துள்ளதாகவும் தான் விரும்பியிருந்தால் அதனை எடுத்துக் கொண்டு சென்றிருக்க முடியுமெனவும் ஒரு ரயில் பயணி பிரிட்டன் ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

அப்பெட்டியுடன் சாவியும் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன் சாவி இல்லாமலேயே அப்பெட்டியின் பூட்டினை இலகுவாக உடைக்கக்கூடிய நிலைமையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் பிரதமர் கமரூனின் சிவப்புப் பெட்டியை தவற விடவில்லையெனவும் அவருடைய பாதுகாப்பில் இருந்துள்ளதாகவும் பிரதம அலுவலக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தருணத்தில் கமரூன் குழப்பமடைந்தவராக இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது வாகனங்களில் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ தனித்துச் செல்லும்  போது  அவர்களுடைய அலுவலக ஆவணங்களைக் கொண்டு செல்வது தொடர்பில் அறிவுறுத்தப்படுகின்றது.

1999 இல் அந்நாட்டின் அப்போதைய தொழிற்துறை அமைச்சராகவிருந்த பீற்றர் கீல்பைல்லும் இது போன்றதொரு சங்கடத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமரூன் தனது கடமையுணர்ச்சியை  காண்பிக்கப் போய் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். ஆயினும் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது போன்ற விடயங்களில் கமரூன் இனிமேலும் அக்கறை செலுத்தாவிடின் பிரிட்டனின் பிரதமர் தான் என்பதையும் அவர் மறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

அதேசமயம் இப்படியானதொரு பிரதமரோ ஜனாதிபதியோ நம் நாட்டிற்கு கிடைத்திருந்தால்?

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆஸி.ப் பிரதமரும் அகதிகள் பிரச்சினையும்

சா.சுமித்திரை

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்ட ரொனி அபொட், படகுகள் மூலம் வருகை தரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்த, துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார். 

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் மூலம்  தொழிற் கட்சியின் 6 வருட கால ஆட்சியை அபொட்டின் லிபரல் தேசியக் கூட்டணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர் மத்தியில்  ரொனி அபொட் உரையாற்றும் போது கூட, முக்கியமாக புகலிடக் கோரிக்கையை தடுப்பது  தொடர்பாகவே அவரது உரை அமைந்திருந்தது. 
இறையாண்மையுள்ள எல்லைகள் பாதுகாக்கும் நடவடிக்கைகள் விரைவில் அமுல்படுத்தப்படும். அதனூடாக, புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை தடுக்கப்படுமென, 55 வயதான அபொட் தன் மக்கள் முன் உறுதியாக கூறியுள்ளார். 

2001 இலிருந்தே அவுஸ்திரேலிய அரசிற்கு புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம்  பெரும் தலையிடியாகவே இருந்து வருகின்றது. 
அவுஸ்திரேலியாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பல நாடுகளைச் சேர்ந்தோர் புகலிடம் கோரி சட்ட விரோத குடியேற்றவாசிகளாக உள்ளனர். ஆரம்பத்தில், பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு வெளியேறி புகலிடம் கோரி வந்தவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது போல அவுஸ்திரேலிய அரசு காட்டிக் கொண்டது. 

ஆயினும், தனது நாட்டினுள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன்  மூலம் பல சவால்களை எதிர் கொண்டது. உலக  பொருளாதார வீழ்ச்சி, யூரோ வலய நெருக்கடி, சட்ட விரோத செயல்கள், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என பல பிரச்சினைகள் உருவாகின.

இதனைத் தொடர்ந்தே, பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவுகளில், புகலிடம் கோரி வருவோரை தடுத்து வைத்து விசாரிக்கும் “பசுபிக் தீர்வு’ என்னும் கொள்கையை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. 

இதனையடுத்து படகுகளில் சட்ட விரோதமாக வருவோரை கிறிஸ்மஸ் தீவு, நவுறு தீவு மற்றும் பப்புவா நியு கினியாவின் மனுஸ் தீவுகளிலுள்ள தடுப்பு நிலையங்களில் வைத்து விசாரிக்கப்படுவர். நியாயமான கோரிக்கை எனில், அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவர். 

ஆயினும் இனிமேல், சட்ட விரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்பட மாட்டாதென ரொனி அபொட் கடுமையாகக் கூறியுள்ளார். 

ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சீனா, வியட்நாம், இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தே புகலிடம் கோரி அதிகளவானோர் பாதுகாப்பற்ற படகுகளில் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயல்கின்றனர். 

நீண்ட காலப் படகுப் பயணங்களை மேற்கொண்டு உயிரிழப்புகளை சந்தித்து, உணவு உறக்கமின்றி அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லையென அந்நாட்டு அரசினால் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், புகலிடக் கோரிக்கையாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தாமை வேதனைக்குரிய விடயமாகும். 

நம் நாட்டிலிருந்தும் பல இலட்சங்களை செலவழித்து பிஞ்சுக் குழந்தைகளுடன் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் மீண்டும்  நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், சட்ட விரோத கடற்பயணத்தினைத் தடுக்கும் வகையில் இலங்கையுடன் அந்நாட்டு அரசாங்கம் உடன்படிக்கையொன்றினையும் கைச்சாத்திட்டுள்ளது. 
“பசுபிக் தீர்வுத் திட்டத்தின் கீழ், 30 வீதமானோர், மீண்டும் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 43 வீதமானோர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் ஏனைய நாடுகளுக்கு குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, 2007 இலிருந்து தொழில் வாய்ப்புக் கோரி செல்லும் சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு நீதிமன்றங்களில் தண்டனையும் வழங்கப்படுகிறது. 2013 ஜூன் மாதம் 1 ஆம் திகதியன்று சட்ட விரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவோருக்கான சிவில் தண்டனைகளையும் அபராதங்களையும் புதிய சட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சட்ட விரோத குடியேற்ற வாசிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதை அவுஸ்திரேலிய நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 
2007 இல், கெவின் ரூட்டின் தொழிற் கட்சி அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட போதிலும், புகலிடம் கோருவோருக்கும், அகதிகளுக்கும் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை. 

ரூட் தலைமையிலான தொழிற் கட்சி “எல்லைப் பாதுகாப்பு’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அதற்கென 650 மில்லியன் டொலர் செலவழித்ததுடன் மேலும் நிதியொதுக்கீடுகளை கண்காணிப்பிற்கு ஒதுக்கியது. அவுஸ்திரேலிய, இந்தோனேசிய அதிகாரிகளின் இரகசிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. 

அதேசமயம், இந்தோனேசியா சர்வதேச புகலிட சட்ட விதிகளில் கையெழுத்திடாத நாடாகும். எனவே, அங்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கோ அல்லது அகதிகளுக்கோ அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படமாட்டாது. 

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்குள் சட்ட விரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் முயற்சியாக, இந்தோனேசியாவின் மீன் பிடிப் படகுகளை வாங்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு முன் வைத்திருந்தது. 

அபொட்டின் இந்தத் திட்டத்தினை, இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ரைய நரெலிஹவா நிராகரித்துள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதாகவும் கூறியுள்ளார். 

இதேவேளை, அபொட் தனது பிரசாரத்தின் போது, ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தரும் இந்தோனேசியர்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் சன்மானமாக வழங்கப்படுமெனவும் கூறியிருந்தார். 

அதுபோலவே, அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் பிரசாரத்தின் போதும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து  நிறுத்துவது, காபன் வெளியேற்ற வரியினை நீக்குவது போன்ற இரு  உறுதி மொழிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலைமையில், எல்லை பாதுகாப்பு தொடர்பில், இந்தோனேசிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜூலி பிசெப் தெரிவித்துள்ளார். 

அபொட் இது தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், புகலிடம் கோருவோருக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.  புகலிடம் கோரி வருவோரை தரையிறங்க விடாது திருப்பி அனுப்பும் திட்டத்தை அபொட் அறிமுகப்படுத்தியுள்ளார். 

அவுஸ்திரேலியாவிற்கு எத்தனையோ ஆபத்துகளை கடந்து புகலிடம் கோரி வருவோரின் எண்ணிக்கை குறைவடையவில்லையென்றால் அதற்கான காரணத்தினையும் கண்டறிய முயல வேண்டும். 

அவுஸ்திரேலியாவில், தொழிலாளர்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் குடியேற்றம், புகலிடம் என்று அழைக்கப்படும் போலி முகவர்களின் வாக்குறுதி, அவுஸ்திரேலிய அதிகாரிகள் சிலரின் சட்ட விரோத செயற்பாடுகள் போன்றவை கட்டாயம் நிராகரிக்கப்பட வேண்டும். இவையே, அவுஸ்திரேலியாவிற்கு  குறைந்த செலவில் செல்ல முடியுமென்ற எண்ணம் புகலிடம் கோருவோர் மத்தியில் ஏற்பட சாதாரணமாய் அமைந்து விடும். 

உலக அகதிகளுக்கான நெருக்கடி, முதலாளித்துவ இலாப முறையின் அழிவினால் உருவாகுவதாகும். இன, மத, படுகொலைகள், பொருளாதாரமின்மை, வறுமை, ஏகாதிபத்திய அதிகாரம், உள்நாட்டுப் போர் போன்றவையாலேயே அகதிகள் அதிகளவில் உருவாகின்றனர். 

இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு உரிய தீர்வினை வழங்க அவுஸ்திரேலியா உட்பட அனைத்து மேற்குலக நாடுகளும் முன் வர வேண்டும். அதன் மூலமே அகதிகளும், புகலிடக் கோரிக்கையாளர்களும் உருவாகுவது தடுக்கப்படும். 

இல்லாவிட்டால் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் என்னதான் கடுமையான சட்ட  நடவடிக்கை மேற்கொண்டாலும் உயிரிழப்புகளை மட்டுமே சந்திக்க முடியும். அகதிகள் தொடர்பில் அபொட் எடுத்த கடுமையான நிலைப்பாடும் அவரது தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது. தற்போது தனது ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் அபொட் எல்லைப் பாதுகாப்புக்கு  எடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் உருவாகுவதை தடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க முன் வருவதே இப்பிரச்சினைகளைத் தடுக்க ஆரோக்கியமானதாக அமையும். 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சிரியா மீது போர் தொடுக்க முண்டியடிக்கும் மேற்குலகம்

சா.சுமித்திரை

சிரியாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தினை எட்டியுள்ளது என்பதைத் தொடர்ந்து சர்வதேச தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக  சிரிய விவகாரம் தொடர்பில் வெளியாகி வரும் செய்திகள் திகில் நிறைந்ததாகவே பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அங்கு நடைபெறும் அநேகமான சம்பவங்கள் பூசி மெழுகப்பட்டு திரிபுபடுத்தப்பட்டவையாகவே உள்ளன என சிரிய அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, மிக மோசமான பல சம்பவங்கள் சிரியாவில் அரங்கேறிக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர். 

திங்கட்கிழமை, சிரியா மீதான இராணுவப் படையெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காங்கிரஸிடம் அனுமதி கோரியிருந்தார். 

சிரியா இரசாயனத் தாக்குதலில், பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள் உட்பட 1,429 பேர் கொல்லப்பட்டதையடுத்து சிரியா மீதான தீவிர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அமெரிக்கா, இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது. 
சிரிய விவகாரம் தொடர்பில், தீர்மானமெடுக்க நாளை திங்கட்கிழமை காங்கிரஸ் மீண்டும் கூடவுள்ளது. 

இதேவேளை, எந்த நடவடிக்கையும் வரையறைக்கு உட்படுத்தப்படும் எனக் கூறியுள்ள  ஒபாமா, தரை  மூலமான நடவடிக்கையை  நிராகரித்துள்ளார். அதற்கு கட்டியம் கூறுவது போல, அமெரிக்காவின் ஏவுகணை தாங்கிய கப்பல், மத்திய தரைக் கடலில் தாக்குதலுக்கு தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ்.ஹாரி, எஸ்.ட்ருமான் விமானத் தாங்கிக் கப்பல் சுயஸ் கால்வாய் ஊடாக செங்கடலைச் சென்றடைந்துள்ளது. 

அத்துடன், ஜோர்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் எப்.16 ரக போர் விமானங்களும் பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபடுமென கூறப்படுகின்றது. அதேசமயம், மத்திய தரைக் கடல் டவுலான் துறைமுகத்தில் பிரான்ஸின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபுக் குடியரசில் நிறுத்தப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானங்களும்  சிரியாவின் மீது தாக்குதல் நடத்த கடல் வழியாக சுற்றி வளைத்துள்ளன. 

பிரிட்டனும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் சைப்பிரஸின் அனுமதியுடன் அதன் இராணுவத் தளத்தை பயன்படுத்தவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. பல நாடுகளின் உதவியுடன் மேற்குலக நாடுகள் சிரியாவை தாக்க கடல் வழியாக சூழ்ந்து கொண்டுள்ளன. 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, சிரிய ஜனாதிபதி பஷாத் அல்  அசாத்தினை பதவி விலகக் கோரி, ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தம், இன்று எவ்வித இலக்குமின்றி நகர்ந்து செல்கிறது. 

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக, நீடித்து வரும் சிரியாவின் உள்நாட்டு போர், பிராந்திய யுத்தமாக மாற்றமடைந்திருந்தது. தொடர்ந்து பிராந்திய நெருக்கடிக்கு பாரிய அளவில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டாதிருந்த நிலையில் இன்று மூன்றாம் உலகப் போருக்கு வழி கோலுகின்றது. 

இத்தகையதொரு மோசமான கட்டத்திலும், ரஷ்யா அரபுலகின் தனது ஒரேயொரு நட்பு நாடான சிரியாவிற்கு ஆதரவு காட்டுவது வேடிக்கையானதொன்றாகும். தனது சொந்த நாட்டு மக்களையும் பச்சிளங் குழந்தைகளையும்  கண் மூடித்தனமாக கொன்று குவித்து வரும் நிலையில், சிரிய ஜனாதிபதி பஷாத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆதரவு காட்டி வருகின்றார். 

சிரிய அரசாங்கம், கிளர்ச்சிக்காரப் படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெற்று வருகின்ற ஒரு நேரத்தில் மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான துருப்புச் சீட்டு மாதிரியான ஒரு காரியத்தை சிரியாவின் அரசாங்கம் செய்யும் என்று சொல்வது முட்டாள் தனமாக உள்ளதெனவும் விளாடிமிர் புட்டின் தனது ஆதரவினை நியாயப்படுத்தியுள்ளார். 

ஆனால், சிரியா இத்தகையதொரு செயலை செய்துள்ளது என்பது கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் திகில் நிறைந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. பூனை கண்ணை மூடிக் கொண்டு  பால் குடிப்பது போலவே புட்டினின் கருத்தும் அமைகின்றது. 

எனினும், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்க ஜனாதிபதியுமான பராக் ஒபாமா, சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அதனால் அந்நாட்டில் பாதிக்கப்படக் கூடிய மக்களின் கஷ்டங்களை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுமென புட்டின் கேட்டுள்ளார். 

இரு வருடங்களுக்கு மேலாக, யுத்தம் நீடித்துக் கொண்டிருக்கும் சிரியாவின் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், உடல் அவயவங்கள் இழப்பு, சொத்து,  தொழில் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் என சொல்லிலடங்காத துன்ப துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் இருக்கும் சிரியா மீது மேற்குலக நாடுகள் தான் தோன்றித் தனமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின் மோசமாக பாதிக்கப்படப் போவது சிரிய மக்களேயாவர். எனவே,  தான் சிரியா மீதான சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் துருப்புகள் பங்கேற்க அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

எனவே, எந்தவொரு பிரச்சினைக்கும் சமாதான பேச்சுவார்த்தையே தீர்வாக அமையும். அதிலும் குறிப்பாக, பொது மக்கள் சார்ந்த பிரச்சினைக்கு எப்படி இராணுவத் தலையீடு தீர்வாக அமையும்? ஆகையால், மேற்குலக நாடுகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். 

சிரியாவின் இரு தரப்பிற்கும் இராணுவ ஆயுத உதவி, நிதியுதவிகளை மேற்குலக நாடுகளே மாறி மாறி  செய்து வந்துள்ளன. புகைந்து கொண்டிருந்த சிரிய உள்நாட்டு போரினை பற்ற வைத்தது மேற்குலக நாடுகளே. இன்று பற்றி எரியும் தீயினை தண்ணீர்  ஊற்றியணைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதும்  இந்த மேற்குலக நாடுகள் தான். 

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சிரியாவில் இராணுவத்தினரை படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. 

சிரிய விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தமது அதிகாரத்தினை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டன. எவ்வாறாயினும், சிரியா மீது இராணுவத் தலையீடு அற்ற முன்னெடுப்புகளே அந்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும். 

அமெரிக்கா, சிரியா மீது எடுத்து வரும் கரிசனை அந்நாட்டுக்கு சாதகமாக அமையுமா என்பதும் கேள்விக் குறியே. 

சிரிய நெருக்கடி மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தில்


சா.சுமித்திரை

சிரிய நெருக்கடி மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை கடந்த வார சம்பவங்கள் வலுவாக நிரூபித்துள்ளன. 

சிரியாவின் இத்தகைய மோசமான போக்கு பிராந்திய ரீதியான யுத்தத்தினை உறுதிப்படுத்தியுள்ள அதே சமயம் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
கடந்த வாரம், சிறு பிள்ளைகள் உட்பட பல  நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் இரத்தம் தோய்ந்த வெள்ளைத் துணிகளால் சுற்றப்பட்ட  நிலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை சர்வதேச  ஊடகங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. 

கிளர்ச்சியாளர்களோ அல்லது ஜனாதிபதி பஷார் அல் அஷாத் தலைமையிலான அரச படைகளோ மக்களிற்காகவே போராடி வருவதாக சர்வதேசத்திற்கு கூறிக் கொள்கின்ற நிலையில் மிக மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இப்படியானதொரு தருணத்தில், கண் மூடித்தனமானதொரு தாக்குதல் மூலம் சொந்த மக்களையும், ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கின்றனர். இந்நிலைமை சிரியாவில் போரிடும் இருதரப்பும் நீதியாகச் செயற்படவில்லையென்பதை நிரூபித்துள்ளன. 

எவ்வித நோக்கமுமின்றி தான் ÷ தான்றித்தனமாக செயற்படும் இரு தரப்பினரும் எவ்வாறு மக்களுக்காகத் தான் போராடுகின்றோமெனக் கூறிக் கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை. 

கிளர்ச்சியாளர்களுக்கெதிராக பசாத் தலைமையிலான அரசாங்கம், சிறப்பு விடுபாட்டு உரிமையுடன் கண்மூடித்தனமான தாக்குதல்களை மிகவும் உக்கிரமாக மேற்கொள்வதினூடாக, அந்நாட்டில் நீடித்துவரும் உள்நாட்டு யுத்தம் மோசமான கட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
2011 இல் சிவில் யுத்தமாக உருவாகிய சிரிய நெருக்கடி இன்று எவ்வித இலக்குமின்றி கொண்டு செல்லப்படுகின்றது. 

பல மாதங்களாக,  கிளர்ச்சியாளர்களின்  நிலைகள் இலக்கு வைக்கப்பட்டு சிரிய அரசினால் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தலைநகரின் கிழக்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 

இத்தாக்குதலில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சிறு சந்தேகம் உள்ளதாக அமெரிக்கா முதலில் தெரிவித்திருந்தது. 
ஒரு வருடத்திற்கு முன்பு, சிரிய நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சிரிய அரச படைகள் இரசாயனத் தாக்குதலை மேற்கொள்வதே, அங்கு அமெரிக்கப் படைகளின் தலையீட்டுக்குரிய காலக்கெடுவாக அமையுமெனக் குறிப்பிட்டிருந்தார். 

தற்போது கூற்றினை சாத்தியமாக்கும் வகையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினரின் கப்பல்களின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கு சிரியா இணங்கியதை அடுத்தே ஐ.நா.வின் விசாரணையாளர்கள் அங்கு சென்றிருந்தனர். இருந்த போதிலும் இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதிக்கு செல்லும் வழியில், ஐ.நா. விசாரணையாளர்களின்  வாகனத் தொடரணி இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், ஐ.நா. குழுவின் காரொன்று சேதமடைந்திருந்தது. ஆயினும் இத் தாக்குதலில், விசாரணையாளர்கள்   யாரேனும் காயமடைந்தனரா? என்பது தொடர்பில் ஐ.நா. தகவல் தர மறுத்து விட்டது. 

ஏற்கவே, ஐ.நா. விசாரணையாளர்களை அப்பகுதிக்கு அனுமதிக்க சிரிய அரசாங்கம் இணங்கியமை தொடர்பில் மேற்குலக நாடுகள் மத்தியில் சிரியா குறித்த சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது. 

எனினும், சிரியாவில் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் விசாரணைகளை ஐ.நா. குழுவினர் ஆரம்பித்துள்ளனர். இத்தாக்குதலில் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் ஐ.நா. குழு சென்று பார்வையிட்டுள்ளது. 
இதேவேளை, வியட்நாம் விவகாரத்தில் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா தலைமையிலான எந்தவொரு இராணுவத் தலையீடும், தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதென சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத் கூறியுள்ளார். 

சிரியாவை, மேற்குலக நாடுகளின் கைப் பொம்மையாக மாற்றும் முயற்சியில் மேற்குலக நாடுகளின்  தலைவர்கள் ஈடுபட முடியாதென ரஷ்ய பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். 

இரசாயனத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சென்றடைவதற்கு ஐ.நா. குழுவின் அதிகாரிகள் அரச கட்டுப்பாடுகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின்  பகுதிகளுக்கு அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 
ஏற்கனவே, இப்பகுதிகளில், விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஐ.நா. குழுவினர் நீண்ட காலம் காத்திருந்தனர். மாதக் கணக்காக  அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அனுமதியைப் பெற்றக் கொள்வதற்கான மத்தியஸ்தம் ஐ.நா.வின் கட்டுப்பாட்டு தலைவர் அஞ்சலா கேனினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, அப்பகுதிகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அக்குழுவினர் விசாரணகைளை முன்னெடுத்துள்ளனர். நச்சு வாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்ற ஐ.நா. குழு, அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடமும், நோயாளிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளது. 

இருந்த போதிலும், விசாரணைகளின் போது, அந்நாட்டவர்களால் தகுந்த விளக்கம் வழங்கப்படும் என்பதும் சந்தேகமே. அவ்வாறு  வழங்கப்பட்டாலும், ஐ.நா. குழுவினர் நீதியாக செயற்படுவார்களா? என்பதும் சந்தேகமே.  தற்பொழுது கடும் சவால்களுக்கு மத்தியில் இந்த விசாரணைக் குழு எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் ஓரளவேனும் சிரிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய உந்துதலாக அமையும் என்பதை மறக்க முடியாது. 

அரபு நாடுகளில், நட்புறவாகவுள்ள சிரியாவைப் பாதுகாக்க, ரஷ்யா பல வகைகளிலும் பகீரதப் பிரயத்தனம்   செய்து வருகின்றது.  இந்நிலையில் சிரியாவை இலக்கு வைத்து மத்திய தரைக் கடற்பகுதியில் தனது இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. 

இவ்விரு நாடுகளினதும், இரு வேறு போக்கானது மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்குமா? என்ற  சிறு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே, சிரியாவைக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன், எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட ஏதாவது காரணம் கிடைக்காதா? என தேடி வருகின்றனர் என சிரிய ஜனாதிபதி பஷார் கூறி வருகின்றார். 

ஜனநாயக ரீதியில், மக்கள் ஆட்சி  நடத்தப்படுமாயின், உள்நாட்டு கலவரம் ஏன் ஏற்பட்டது? சொந்த மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கண் மூடித்தனமாக படுகொலை செய்வது ஏன்? 

இன்று அயல் நாடுகளில் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது பிராந்திய போருக்கு வித்திட்டுள்ளது. 
சிரிய ஜனாதிபதி பஷாரை பதவி விலகக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தத்தின், திகில் நிறைந்த விளைவுகளே இவையாகும். இந்நிலைமையில் தனது நாட்டினை கைப்பொம்மையாக மாற்றும் முயற்சியாகவே மேற்குலக நாடுகள் தலையிடுவதாக கூறுவது உண்மையிலே வேடிக்கையானதாகும். 
இதேவேளை, அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல், மத்திய தரைக் கடலை சென்றடைந்துள்ளது. அக்கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.எஸ்.ஹாரி, எஸ்.ட்ருமான் விமானத் தாங்கிக் கப்பல் சுயஸ் கால்வாய் ஊடாக செங்கடலை சென்றடைந்துள்ளது. ஜோர்தானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனைத் தாக்குதலில் ஈடபடுமெனவும் அஞ்சப்படுகின்றது. 

சிரியா மீதான தாக்குதலுக்கு தயாரான நிலையில், மத்திய தரைக் கடல் டவுலான் துறைமுகத்தில் பிரான்ஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு குடியரசில் நிறுத்தப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட்  விமானங்களும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது. 

பிரிட்டனும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தி வைத்துள்ளது. சைபிரஸின் அனுமதியுடன் அதன் இராணுவத் தளத்தை பயன்படுத்தவும் பிரிட்டன் தீர்மானித்துள்ளது. 

சிரியாவை மையப்படுத்தி தாக்குதல் மேற்கொள்ள மேற்குலக நாடுகள் தயாராகவுள்ள நிலையில், அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்கினால், மத்திய கிழக்குப் பிராந்தியமே  தீப்பற்றி எரியுமென சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய தரைக் கடலில், போர்க்கப்பல்களை நிறுத்துவதால் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர, இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது போகுமென ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பாரிய அழிவுகளை சந்தித்திருக்கும் நாடொன்றின் மீது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது, பேரழிவு மிக்க பின் விளைவுகளையே ஏற்படுத்தும். இப்படியானதொரு நிலைமையினை உருவாக்கியதே மேற்குலக நாடுகள் தான் என்பதை எவராலும் மறுக்க இயலாது. 

சிரிய படையுடன் லெபனானிய ஹிஸ்புல்லா குழுவும் இணைந்து போராடி வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவின் பின்னணியில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. 
சிரியாவில் இரு தரப்பினரிடையேயும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம், மாறி மாறி செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. இந்த முக்கோண ஆட்டத்தில் பாதிக்கப்படுவது பொது மக்களே. 

ரஷ்யா, அமெரிக்காவுக் கிடையிலான சிரிய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலும் ஸ்நோடேன் புகலிடம் அனுமதி விவகாரத்தால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில், சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். 
சிரிய அரசு சொந்த மக்களுக்கெதிராகவே,  இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கும் நிலையில் உலக நாடுகள் அதை வெறுமனே பார்த்துக் கொண்டு வீணாக காலத்தை விரயம் செய்து கொண்டிருக்க முடியாது எனவும் கமரூன் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வார ஆரம்பம் முதல், சிரிய விவகாரத்தில் மேற்குலக நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் எந்தளவிற்கு வெற்றி தரப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

யுத்தம் தின்ற நாடொன்றில், இராணுவ அடக் கமுறைகளைப் பிரயோகிப்பதால், மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்பது யதார்த்தமாகும். உள்நாட்டிலும் சரி, சர்வதேச ரீதியிலும் அதிகளவுக்கு நிராகரிக்கப்பட்டவராக உருவாகியுள்ள சிரிய  ஜனாதிபதி பஷார் அல் அசாத், தனது அதிகாரத்தை  எவ்விதத்திலும் தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யக் கூடியவராகவே இருப்பாரென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். 

சதாம் ஹுசைன், ஹொஸ்னி முபாரக், முகமது முர்சி என்ற வரிசையில் பஷார்  அல்  அசாத்தும் இணைந்து கொள்ளும் தருணம் வெகு தூரத்திலில்லை. 

இருந்த போதிலும், அசாத்தின் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர்  ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அந்நாட்டில் மிதவாத அமைப்புகளோ தலைவர்களோ இல்லை. இந்நிலையில் எகிப்து போன்றே இங்கும் மோதல்களும், வன்முறைகளும் தொடரும் நிலையே காணப்படுகின்றது. 
உள்நாட்டு போரும் சர்வதேச தலையீடும் சிரியாவின் எதிர்காலத்தை நிச்சயமாக கேள்விக்குறியாக்கப் போகின்றது.