புதன், 18 செப்டம்பர், 2013

போதைப் பொருள் கடத்தலின் மையமாகும் இலங்கை

சா.சுமித்திரை

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்க அரசு உலகெல்லாம் கடன்களை வாங்கிக் குவித்து அபிவிருத்திப் பணிகளையும் அழகுபடுத்தல்களையும் முன்னெடுத்து வர சர்வதேச கடத்தல்காரர்களும் இலங்கை அரசியல் வாதிகள் உட்பட செல்வாக்கு மிக்க பெருந்தலைகளும் இலங்கையை ஆசியாவின் போதைப் பொருள் கடத்தல் மையமாக மாற்றி வருவதையே குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கொழும்புத் துறைமுகம் ஊடாக இடம்பெற்ற மிகப் பாரியளவான போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.

கொழும்புத் துறைமுகம் ஊடாக சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட மதுபானத் தயாரிப்புக்கான பாரியளவான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான “எத்தனோல்’ கைப்பற்றப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு அழுத்தங்கள், தலையீடுகளால் விசாரணைகள் நகர முடியாமல் நிற்கும் நிலையிலேயே 200 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் கடத்தலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் முகவரியிடப்பட்டு 40 அடி நீள கொள்கலனொன்று கிறீஸ் டின்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வந்திறங்கியுள்ளது. இக்கொள்கலன் தொடர்பில் துறைமுக சுங்கத் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொள்கலனைச் சோதனையிட்டபோது கொள்கலனுக்குள் இருந்த கிறீஸ் டின்களுக்குள் மிகவும் நுட்பமான முறையில் 125 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

 பிரபல சர்வதேச போதைவஸ்து கடத்தல் மன்னனான தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான டி கம்பனியினராலேயே இலங்கைக்கு  இந்த 40 அடி கொள்கலன் அனுப்பப்பட்டிருந்தது விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  சில நாட்களுக்குள் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட 20 அடி நீளமான இரண்டு கொள்கலன்களும் சந்தேகத்தால் கொழும்புத் துறைமுகத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அக்கொள்கலன்களில் அப்படியொன்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இல்லையென சுங்கத் திணக்கள அத்தியட்சகர் மாலிபிய சேனவினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அடங்கிய 40 அடி கொல்கலனை இறக்குமதி செய்ததாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களின் தகவலின் பேரிலேயே இவ்விரு கொள்கலன்களும் சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தன. 

அக்கொள்கலன்களில் சுமார் 1000 பொதிகள் இருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான போதைப் பொருளும் அவற்றுக்குள் இல்லையென சுங்கத் திணக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது

இதேவேளை 125 கிலோ ஹெரோயின் விவகாரம் தொடர்பில் திறந்த புலன் விசாரணைகளை நடத்துவதற்காக அமெரிக்காவின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இவ்வார இறுதிக்குள் இலங்கை வரவுள்ளதாகவும் பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவிக்கின்றது.

தாவூத் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரால் பாரியளவில் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் போதைவஸ்து வியாபாரம் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் நடத்தவுள்ள விசாரணை தாவூத் இப்ராஹிம் பற்றிய புலன் விசாரணைக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கிலேயே  அமெரிக்க அதிகாரிகள்  இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம் இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கஞ்சா ஹெரோயின் கடத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  நாளாந்தம் 150 பேர் கைது செய்யப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் என்பது மெக்ஸிக்கோ போன்ற வட அமெரிக்க நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பாரிய போதைப்பொருள் கடத்தல் பிரச்சினைக்குள் ஆசிய நாடுகள் சிக்கவில்லை. இருந்தபோதிலும் தற்பொழுது போதைப் பொருள் கடத்தல் மையமாக ஆசிய நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசிய நாடுகள் என்று பார்க்கும் போது ஏனைய நாடுகளை விட இலங்கை நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட குட்டித் தீவாகும். அத்துடன்  எமது நாடு அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவுள்ளமையால் சுற்றுலாத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலைமையில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு கடல் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவே அவற்றினைக் கடத்துவதற்கு இலங்கை ஒரு சாதகமான மையமாக அமைந்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறுமானால் இங்கு போதைப் பொருள் பாவனையாளர்களின் வீதம் அதிகரிப்பதுடன் மாபியா குழுக்களும் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல உருவாகுவர்.இதன்மூலம் வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் எந்த விதக் குறையும் இல்லாமல் அதிகரிக்கும்.


ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்கள் விற்கப்படல், பாவனை போன்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன.தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர்களால் சக மாணவர்களும் பாதிக்கப்படும் அச்சம் காணப்படுவதாகவும் குறித்த பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களில் பெருமளவானவை போதைவஸ்து பாவனையளர்களினாலேயே இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கும் அதேவேளை இலங்கைச் சிறைகளில் உள்ளவர்களில் 100 க்கு 80 வீதமானோர் போதைவஸ்துப்  பாவனையாளர்கள் என்றும் இந்த 80 வீதமானோரில் அதிக எண்ணிக்கையிலானோர் இளைஞர்கள் என்றும் சிறைச்சாலைகள் திணக்களம் தெரிவிக்கின்றது.

 இலங்கையைப் பொறுத்தவரையில் போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமாகவே  காணப்படுகின்றது. போதைப் பொருட்களுடன் ஆண்களும் பெண்களும் கைது செய்யப்படுவதும் போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சிறைச்சாலைகளுக்குள் கூட போதைப் பொருள் பாவனையும் விற்பனையும் சிறப்பாக நடப்பதாக கூட கூறப்படுகின்றது. சிறை ச்சாலைக்குள் அடிக்கடி இடம்பெறும் சோதனைகளின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதும் இதனை உறுதி செய்கின்றது.

 இலங்கைக்குள் வெளிநாடுகளிலிருந்தே போதைப் பொருட்கள்  குறிப்பாக ஹெரோயின் பிரவுண் சுகர் போன்றவை கொண்டு வரப்படுகின்றன. இவற்றை கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவே கொண்டு வர வேண்டும். அதற்கு கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத் துறைமுகமே பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையைச் சுற்றிய கடற் பகுதிகள் கடற் படையினரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் படகுகள் மூலம் கொண்டு வருவது சாத்தியமில்லை. எனவே கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத்துறைமுகம் ஊடாகவே போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைகின்றன.

 இலங்கைக்கான இவ்விரண்டு நுழைவாயில்களும் கடும் பாதுகாப்பைக் கொண்டுள்ள பகுதிகள் என்பதால் உயரதிகாரிகள், பெருந் தலைகள் அரசியல்வாதிகள் தொடர்புகளின்றி இவற்றைக் கொண்டு வர முடியாது. எனவே இப் போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணி பெரிய வலையமைப்பைக் கொண்டது. சில வேளைகளில் பொலிஸார் நெருங்கக்கூட முடியாத இடங்களாகவும் இருக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். அத்துடன் பிடிபட்டது இவ்வளவு என்றால் பிடிபடாதது எவ்வளவு என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

 இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறுகின்றதோ இல்லையோ ஆசியாவின் போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக மாறி வருகின்றது என்பதே உண்மை. இதன் விளைவுகள் இளைய தலைமுறைக்கு பெரும் சவாலாகவே இருக்கப் போவதும் உண்மை. எனவே இப்போதைப் பொருட்கள் கடத்தல்கள், பாவனைகள் தொடர்பில் அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் உடனடித் தேவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக