திங்கள், 14 அக்டோபர், 2013

கென்யாத் தாக்குதல்

சா.சுமித்திரை

கென்யாவின் தலைநகர் நைரோபியிலுள்ள வெஸ்ட் கேட் வணிக வளாகத்தின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த சில நாட்களாக சர்வதேசம் நிலை குலைந்து போயிருந்தது.

கென்யாவில் இந்த மோசமான சம்பவம் அரங்கேறிய போதிலும் அதன் பாதிப்புகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, கானா என பல நாடுகளிலும் பிரதிபலித்திருந்தமையாலேயே இத்தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

நைரோபியிலுள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்திற்கு பணக்காரர்களே அதிகம் வந்து செல்வர். இம்மையத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கடை வைத்திருந்தனர். மேலும், மேற்கத்திய நாட்டவர்களைத் தவிர இந்தியர்களுக்கும் இதுவொரு விருப்பமான வர்த்தக மையமாக இருந்து வருகின்றது.

கடந்தவார இறுதி நாளான சனிக்கிழமை வழமை போலவே வெஸ்ட் கேட் வணிக வளாகம் நெரிசலான ஆரவாரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. நடக்கப் போகும் விபரீதங்கள் எதுவும் அறியாத நிலையில் சிறுவர்கள், பெண்கள் என பல தேசங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்.

இத்தருணத்திலே அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன், வெடி குண்டுகளையும் வீசி கடும் தாக்குதல் நடத்தினர். கலகலப்பாக காணப்பட்ட பகுதிகளில் அழுகுரல்களும் அலறல் சத்தங்களும் கேட்டன. பளபளத்த மாபிள் தரைகள் இரத்த வெள்ளமாகின.

முஸ்லிம்கள் அல்லாத இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியாதவர்களை இலக்கு வைத்து சிறுவர், பெண்கள் என எந்தப் பாகுபாடுமின்றி ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது.
முதுகில் ஆயுதங்களுடனும், கையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடனும் தீவிரவாதியொருவர், தான் வந்த வழியெங்கும் சுட்டுக் கொண்டே வந்தார். துப்பாக்கிச் சன்னங்கள் பல திசைகளிலும் சரமாரியாக பாய்ந்தன. இடையே அவர்கள், முஸ்லிம்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்தவர்களை அழைத்தார்கள். முஸ்லிம்களா என சோதித்த பின் சிலரை வெளியே அனுப்பி வைத்தனர். 

இந்தத் தாக்குதலில் தப்பிய ஒருவர் கூறுகையில்; எனது அடையாள அட்டையிலிருந்த ஜோஷûவா ஹக்கீம் என்ற பெயரில், ஜோஷûவா என்ற கிறிஸ்தவ பெயரை விரலுக்குள் மறைத்துக் கொண்டு ஹக்கீம் என்ற பெயரை மட்டும் காண்பித்தேன்.

உடனே, என்னை போகச் சொன்னார்கள். எனக்கு அடுத்து வந்த இந்தியரான ஸ்ரீதர் நடராஜன் என்பவரிடம் முகமது நபியின் தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உடனே, அவரை என் கண் முன்னேயே சுட்டுக் கொன்றனர் என உயிர் தப்பி வந்த ஹக்கீம் என்பவர் விபரித்தார்.

பல மோசமான வரலாற்றுத் தடயங்களை பதிவுசெய்து கொண்டிருந்த வணிக வளாக தாக்குதல்கள் புதன்கிழமை மதியத்துடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்த பின்பே அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களில், பல நாடுகளையும் சேர்ந்த 70 பேர் உட்பட 130 பேர் கொல்லப்பட்டனர். 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 11 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளதாக கென்யா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 50இற்கு மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், வெஸ்ட் கேட் வணிக வளாகத்திலிருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 சிறுவர்கள் உட்பட 51 பேரின் நிலையென்ன? என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, வணிக வளாகத்தில் இடம்பெற்ற சமையல் போட்டி யொன்றில் சுமார் 500 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். இத்தருணத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் குஜராத்தை சேர்ந்தவர்களில் கணிசமானவர்களும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

இத்தாக்குதல், பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைக்கார பெண் சமந்தா வெல்த் வெயிட் (வயது 29) என்பவர் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள இவரைப் பிடிக்க சர்வதேச பொலிஸின் உதவியை கென்யா அரசு நாடியுள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச பொலிஸான இன்றபோல் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு பிடியாணை உத்தரவினை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், சமந்தாவை கைது செய்ய தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதவையான சமந்தா, பிரிட்டனின் முன்னாள் இராணுவ வீரரொருவரின் மகளாவார்.

இவர் அல்ஹைடா இயக்கத்தைச் சேர்ந்தவர். 2005இல், லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகியிருந்தனர். இச்சம்பவத்துடன் சமந்தாவின் கணவரான ஜெர்மயின் லிண்ட்சே தொடர்புபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

1819 வயதுகளை உடைய சோமாலியா அல்லது அரபு பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கர்களும் பிரிட்டன் பெண்ணும் இணைந்து மேற்கொண்ட இத்தாக்குதலுக்கு சோமாலியாவைத் தளமாகக் கொண்ட அல்ஸபாத் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

அல்ஸபாத் என்பது அரபு மொழியில் “இளைஞர்கள்’ அல்லது “ஆண்கள்’ என பொருள்படும். 2006இல் சோமாலியத் தலைநகர் மொகாதிசுவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்லாமிய சபைகளின் ஒன்றியத்தின் கடும் போக்கு கிளையாக அல்ஸபாத் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. 2012இல் அல்ஹைடா, போகோ ஹரம் ஆகிய குழுக்களுடன் தொடர்புடையதாக, அல்ஸபாத் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இஸ்லாத்தின் எதிரிகளுக்கெதிராகவே போராடுவதாக கூறிக்கொள்ளும் இந்த அமைப்பினை மேற்குலக நாடுகள் சில பயங்கரவாத அமைப்பாகவே சித்திரித்து வருகின்றன.

சோமாலியாவில், இஸ்லாமிய தேசமொன்றை உருவாக்க போராடி வரும் அல்ஸபாத் தென்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆயினும், 2011இல் அந்நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, மேற்குலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதித்தமையால், அல்ஸபாத் மக்களின் ஆதரவை பெருமளவில் இழந்திருந்தது.

இருந்தபோதிலும், சோமாலியாவில் அல்ஸபாத்திற்கெதிராக நடத்தப்படும் யுத்தத்தில், ஆபிரிக்க ஒன்றிய துருப்புகளின் பங்காளியாக கென்யா தனது இராணுவத்தையும் அனுப்பியமையை கண்டித்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவ்வமைப்பு தம்மை நியாயப்படுத்தியுள்ளது.

அல்ஸபாத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சோமாலியாவின் தலைநகர் மொகதிசு; ஆபிரிக்க ஒன்றிய துருப்புகளின் வசமாகியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்துள்ள அல்ஸபாத், கென்யாவின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு தாக்குதல்களை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றது.

சோமாலியாவை விட்டு, கென்ய துருப்புகள் வெளியேறும் வரை அந்நாட்டினை கடுமையாகத் தாக்குவோம் என்று அல்ஸபாத் இயக்கம் தொடர்ந்தும் கூறி வருகின்றது.

அல்ஸபாத் தனது எச்சரிக்கையை நிரூபிப்பது போல, வெஸ்ட் கேட் சம்பவத்திலிருந்து எவரும் மீளாத நிலையிலேயே, அடுத்தடுத்ததாக மேலும் இரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக கென்ய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே வணிக வளாகத்தில் வியாழக்கிழமை முதல் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட பன்னாட்டு தடயவியல் நிபுணர்கள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் தடயங்கள் சேகரிக்கப்படுமென்றும் கென்ய உள்துறை அமைச்சர் ஜோஸப் ஒலே லெங்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெஸ்ட் கேட் வணிக வளாக தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக அல்ஸபாத் தனது டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அல்ஹைடாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கமொன்று கென்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ ரீதியில் பலவீனமான நாடுகளைத் தாக்கி, அங்கு இஸ்லாமிய சட்டமான ஷரிஆ சட்டத்தினை அமுல்படுத்தி தமது செல்வாக்கை நிலை நாட்டுவதே அல்ஸபாத்தின் நோக்கமாகும். 

அதனால்தான் நாளாந்தம் பட்டினி மரணங்கள் தொடரும் சோமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த அல்ஸபாத் இயக்கம், வறிய நாடுகளிலொன்றாகவும் வெளிநாட்டு உதவிகளுடன் கொஞ்சம் உயிர்த்துக் கொண்டிருக்கும் நாடாகவுமுள்ள கென்யா மீது இலக்குவைத்து தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

அல்ஹைடாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள தொடர்புகள் மூலம், அக்குழுவின் பாணியில் தாக்குதல்களை நடத்தும் அல்ஸபாத்தின் திட்டங்களிலொன்றாக வெஸ்ட் கேட் வணிக வளாகத் தாக்குதலும் இருந்துள்ளது.

ஆபிரிக்க ஒன்றிய படைகளுக்கும், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில், சோமாலியாவில் நடந்துவரும் போரில், கென்யா தலையிட்டமைக்கு பழிவாங்கவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அல்ஸபாத் கூறியுள்ளது.

ஆயினும், வணிக வளாகத்திலிருந்தவர்களில் அமெரிக்கர்களே இலக்கு வைக்கப்பட்டு, சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டிஷ்காரர்களும் ஏனைய நாட்டவர்களும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக, அல்ஸபாத் தெரிவிக்கின்றது.

எனினும் பிரிட்டன், இந்தியா, சீனா என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? முஸ்லிம் அல்லாத காரணத்துக்காக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உயிர்தப்பிய பலரும் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக, முஸ்லீம்களுக்கெதிரான நெருக்கடிகள் சர்வதேச ரீதியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்லாமிய கடும்போக்குவாதிகளால் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்களேயாகும்.

எந்த மதமும், இன்னொரு மதத்தினை அழிக்கவோ, பழிக்கவோ அல்லது அடிமையாக்கவோ இடமளிக்கவில்லை. அப்படியானதொரு நிலையிலே, அல்ஸபாத்தின் இந்தப் பயங்கரவாத தாக்குதல் முஸ்லிம் சமூகத்திற்கும், அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மதத்திற்கும் அவதூறாகவே பார்க்கப்படுகின்றது.

தாக்குதலில், இறந்தவர்களில் ஆபிரிக்கக் கவிஞரும் பேராசிரியருமான கொபி அவ்நூரும் ஒருவராவார். 78 வயதான கானா பிரஜையான கொபி அவ்நூரும், பெரிய ஆபிரிக்க ஆளுமை என்று ஆபிரிக்கர்களால் கொண்டாடப்பட்டு வந்த ஒருவராவார். அவ்நூறும் அனைத்து ஆபிரிக்க இலக்கிய விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த போதே, தாக்குதலில் பலியானார். 

அதேபோல கென்ய ஜனாதிபதியின் மருமகன் மபுஹா முஹாங்ஹியும் அவருடைய காதலி ஹாஹிடோவும் இதில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவின் அயர்லாந்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த மபுஹா, கடந்த 6 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர் வெளிநாட்டுப் பிரபலங்களாகும். அர்த்தமற்ற தாக்குதலால் ஏற்பட்ட இந்த மரணம், வேதனைகள், இழப்புகள் என்பவற்றை சர்வதேச சமூகமும் இன்று பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், உலகில் பல சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக அல்ஸபாத் அமைப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்களை விட, இஸ்லாமில் மனித உயிர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகின்றது. முஸ்லிம் தேசமாக உருவாக்க வேண்டுமென போராடும் அல்ஸபாத்திற்கு, இக்கொள்கையை பின்பற்ற முடியாது, பழி தீர்த்துக் கொண்டிருக்குமானால், அதனை அனைத்து நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2010இல் உகண்டாவின் தலைநகர் கம்போலாவில் உலக உதைப்பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்கள் மீது இவ்வமைப்பு குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்போது 70 பேர் பலியாகினர். சோமாலியாவில் தமக்கெதிரான போரில் உகண்டா படையினர் ஈடுபட்டிருப்பதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையே இதுவெனவும் கூறியிருந்தனர்.

அபிவிருத்தி காணாத, வறுமையான நாடுகளான உகண்டா, கென்யா, சோமாலியா போன்றவற்றினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எந்தக் காரணமும் இல்லாமல் தினமும் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சர்வதேசத்தையும் கடும் சீற்றமடையச் செய்துள்ளது.

பொது மக்களை படுகொலை செய்தும், காயப்படுத்தியும் தனது பயங்கரவாதத்தை உலகளவில் நடத்தி வருவதில் வெற்றி கண்டுள்ளதாக அல்ஸபாத் கொக்கரிப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை. மேற்குலக நாடுகளையோ அல்லது ஆபிரிக்க நாடுகளையோ தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தம் விரல்களை அல்ஸபாத் துண்டித்து வருகின்றனர் என்றே கூறவேண்டும்.

சர்வதேச ரீதியில் இதுவொரு ஆபத்தான தருணமாகும். ஏனெனில், தனது செல்வாக்கையும் அதிகாரங்களையும் இழந்துள்ள அல்ஸபாத்தின் தற்போதைய இலக்கு அப்பாவிப் பொது மக்கள் மட்டுமேயாகும். இனிமேல் பொது இடங்கள் நிச்சயமாக பயங்கரவாதிகளால் இலக்கு வைக்கப்படும். அது மட்டுமல்லாது, வெஸ்ட்கேட் தாக்குதலை விடவும் மிக மோசமானதாகவும் அமையலாம்.

அப்பாவி பொதுமக்கள் மீது, எந்தவொரு அர்த்தமும் இல்லாமல் திரும்பியுள்ள தாக்குதல்களைக் கட்டுப்படுத்த சர்வதேச தலைமைகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும். இல்லையெனில், இத்தாக்குதல்கள் வழமையாகிவிட, கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியுமென வலியுறுத்தப்படுகிறது.

மதங்கள், மனித மனங்களை பண்புள்ளவராக மாற்றுவதற்கே துணை நிற்கின்றவையாகும். ஆனால், மதங்களை வளர்ப்பதற்காகவும் இன்னொரு மதத்தை அழிப்பதற்காகவும் இன்று ஆயுதங்கள் எடுக்கப்படுகின்றமையா னது, மனித குலம் அழிவின் விளிம்பினை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.

நோபல் பரிசுகள்-2013

சா.சுமித்திரை

மனித குலத்திற்கு அரிய சேவையாற்றுபவர்களை கௌரவித்து வழங்கும் நோபல் விருது, இவ்வருடத்திற்கான ஒவ்வொரு துறைகளின் சாதனையாளர்களின் பெயர்களும் கடந்த வார ஆரம்பத்திலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இரசாயனவியல், பௌதீகவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. 

அண்மைக்காலமாக, நோபல் பரிசு வழங்கும் நிகழ்வும், அதனையொட்டிய  விழாக்களும் உலகளாவிய  பொது நிகழ்ச்சியாக மாறி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதினை இரு அமெரிக்கர்களும், ஒரு ஜேர்மனியரும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஓமோன்கள்   நொதியப் பொருட்கள் மற்றும் மூலக் கூறுகள், கலங்களுக்குள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைக் கண்டு பிடித்ததற்காகவே மருத்துவத்துக்கான நோபல் பரிசு இந்த மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் யாவே பல்கலைக்கழகப் பேராசிரியர் ரொத்மான் (வயது 62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்சேக்மன் (64 வயது), 2008 இல் ஸ்ரான்ட் போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள  பேர்கிலே சுயோ டோப் (வயது 57) ஆகிய மூவருமே இந்த விருதினை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை, பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பெற்றோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். அணுக்கூறு பௌதீகத்திற்கான சிறப்புடன் பணியாற்றிய பிரிட்டன், பிரான்ஸ் விஞ்ஞானிகள் இருவர் இதனைப் பகிர்ந்து கொள்கின்றனர். 

1964 இல் சிறுதுகள்கள் எவ்வாறு பெரும் துணிக்கையாகவும் பொருளாகவும் உருவாகின்றன என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும் பொறிமுறையை பீற்றர் ஹிக்ஸ் மற்றும் பிரங்கோயிஸ் இங்லெற் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர். 

இவர்களது கண்டுபிடிப்பு, நவீன அணுக் கூறு பௌதீகத்திற்கு வழிகோலியுள்ளது. “ஹிக்ஸ் போசன்’ என்னும் கடவுளின் துகள், கடந்த வருடம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனை அங்கீகரிக்கும் வகையிலே, இவ்விரு விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

ஆயினும், கடவுளின் துகள் கண்டு பிடிப்புக்கு, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதில், சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த விருது சுவிற்ஸர்லாந்திலுள்ள சி.இ.ஆர்.என் பரிசோதனையின் கூடத்திற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென நோபல் பரிசுக்கான நடுவர் குழு உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வு கூடத்திற்குப்  பரிசு வழங்காததை ஒரு தவறான முடிவாகக் கருதுகிறேன். சி.இ.ஆர்.என். பரிசோதனைக்  கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இடம்பெற்ற ஆய்வின் பயனாகவே கடந்தவருடம் கடவுளின் துகள் கோட்பாடு முழுமை பெற்றுள்ளது. 

அந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முயற்சி அற்புதமானதும் பாராட்டத்தக்கதுமாகும். அத்தகைய ஆராய்ச்சி நடந்த பரிசோதனைக் கூடத்திற்கும் நோபல் பரிசு கிடைக்குமென பலர் எதிர்பார்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆயினும், இதுவரை காலமும் இவை சார்ந்த விருதுகள் தனிநபருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளது. இச்சர்ச்சை தொடர்பில் ஏனைய குழு உறுப்பினர்கள் என்ன முடிவெடுப்பார்களென பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 
புதன்கிழமை, இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இரசாயன செயற்பாடுகளை எதிர்வு கூறுவதற்கும், புரிந்து கொள்வதற்குமான கணினி வடிவங்களுக்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுத்த மார்ட்டின் கார்பளஸ், மிக்ஷெல் லெவிட் மற்றும் ஆரி வார்ஷல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிக்கலான இரசாயனவியல் செயல்முறைகளை, பல அடுக்கு மாதிரிகள் மூலம் எளிமைப்படுத்தி விளக்கும் செயல்முறையை உருவாக்கியதற்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

சூரியத் தகடுகளை திறனேற்றம் செய்வது, வாகனங்களின் செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகள் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் வேதியியல் விஞ்ஞானிகளுக்கு இவர்களது கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாகும். 

வியாழக்கிழமை, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவின் எழுத்தாளர் அலிஸ்  முன்ரோவுக்கு இவ்வருடத்துக்கான விருது வழங்கப்படுகின்றது. 

டியர் லைப் மற்றும் டான்ஸ் ஒப் தி ஹப்பி ஸ்டோஸ் ஆகியவை உட்பட பல நூல்களை எழுதிய 82 வயதான முன்ரோ, 1901 ஆம்ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை வெல்லும் 13 ஆவது பெண் மணியாவார். வெள்ளிக்கிழமை, இரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஒபிசி டபிள்யூ) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. 

நெதர்லாந்தினை தளமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பில் 190 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் இரசாயன ஆயுத ஒழிப்புக் குழுவினர், தற்போது சிரியாவில் இரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட இறுதிப் பட்டியலில் பாகிஸ்தானிய சிறுமி மாலாலா யூசுப்பின், இணைய ஊடுருவி எட்வெட் ஸ்நோடேன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இவ்வருடத்துக்கான அமைதி நோபல் பரிசு, சிறுமி மலாலாவிற்கே கிடைக்குமென சர்வதேச அளவில் பேசப்பட்டிருந்த நிலையில், இந்த அமைப்புக்கு கிடைத்துள்ளது. 

சமூகத்திற்கென அரிய தொண்டாற்றியவர்கள் எதற்கும் நிகரில்லாத பல ஆய்வுகளை  மேற்கொண்டவர்கள் மற்றும் பாரிய தொழில்நுட்பங்கள் அல்லது பயன் நிறைந்த உபகரணங்களைக் கண்டு பிடித்தவர்கள் என சேவையாளர்களை கௌரவிக்கும் விருதே நோபல் பரிசாகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. 

1895 இல், இரசாயனவியலாளர் அல்பிரட் நோபல் என்பவரால் நோபல் விருது ஆரம்பிக்கப்பட்டது. 1901 இல் முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு பரிசு கூட, அறிவிக்கப்படாமல் போன சில வருடங்களும் உண்டு. எனினும், குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு ஒரு தடவையாவது இந்த விருது அறிவிக்கப்படும் அதேசமயம் நோபல் பரிசு திரும்பப் பெறத்தக்கதல்ல. 

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதியன்று, சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் அல்பிரட் நோபெல் பிறந்தார். பொறியியலாளர் குடும்பத்தில் பிறந்த இவர், தனது வாழ்நாளை இரசாயனவியலாளராகவும், பொறியியலாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் பணியாற்றினார். 

1894 இல் நோபெல், போபர்சு இரும்பு மற்றும் உருக்கு ஆலையை வாங்கினார். அதனைபாரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். இவர் தான்  புகையில்லாத இராணுவ வெடி பொருட்களுக்கான மூலப் பொருட்களைக் கண்டு பிடித்தவராவார். இதுவே, பிரிட்டன் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்டுக்கும் முன்னோடியாகும். 

நொபெல் 335 இற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் டைனமைட் மூலக் கூறு பிரதானமாகும். இத்தகையதொரு தருணத்தில் 1888 இல் பிரான்ஸ் செய்தி நாளேட்டில் “மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்ற தலைப்பில் தனது இறப்புச்  செய்தி கண்டு  அதிர்ந்தார். அல்பிரட் நோபெல். 

ஆனால், அப்பொழுது அல்பிரட்டின் சகோதரரான லுட்விக்கே இறந்தவராவார். ஆனால், திரிபுபடுத்தப்பட்ட செய்தி, நோபெலை கவலையடையச் செய்தது. இதையடுத்து, தான் இறந்த பிறகு, எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என தீவிரமாக சிந்தித்தார். 

இந்தச் சிந்தனையில் உதயமானதே, நோபல் பரிசாகும்.  மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களை கௌரவிக்கும் இந்த நோபல் பரிசுக்கென அவரின் சொத்தில் 94  வீதமானவை செலவளிக்கப்படுகின்றன. 
1895 டிசம்பர் 10 ஆம் திகதி இத்தாலியின் சான்ரெமோ மாளிகையில் அல்பிரட் நோபெல் தனது 63 ஆவது வயதில் காலமானார். 

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் அமைதி ஆகிய துறைகளுக்கே, நோபெல்லின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். 1968 இல், சுவீடன் வங்கி தனது 300 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, பொருளியலுக்கான நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டது. 

அமைதிக்கான நோபல் பரிசை அளிக்கும் பொறுப்பு நோர்வேயிடமும், ஏனைய பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடன் அமைப்புகளின் வசமும் உள்ளன. 
பௌதீகவியலுக்கான முதல் நோபல் பரிசை வென்றவர் வில்கேம் கென்ராட் ரோங்க்டேன் ஆவார். எக்ஸ் கதிர்களை கண்டு பிடித்தமைக்காக, இவருக்கு இவ்விருதுவழங்கப்பட்டிருந்தது. இயற்பியலுக்கான பரிசு, கதோட்டுக் கதிர்களை கண்டு பிடித்த பிலிப் லெனார்ட்டுக்கு வழங்கப்பட்டது. 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேர்மனிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியியலாளரான வழங்கப்பட்டது. 1890 களில் எரிக் வான், தொண்டையழற்சிக்கான நோயெதிர்ப்பூக்கியை கண்டு பிடித்தார். அதுவரை காலமும் தொண்டையழற்சி நோயினால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாகவே, விருது வழங்கும் முறை உள்ளது. ஆனால்,  போட்டியாளர்களை யார் ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதே இதன் முக்கிய வேறுபாடாகும். 

நோபல் ஆணைக்குழு மூலம் 3 ஆயிரம் தனிநபர்கள் பற்றிய பரிந்துரை வடிவங்கள் அனுப்பப்படுகின்றன. பொதுவாக செப்ரெம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே பரிந்துரைகள் அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணைகள், அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள் என உயர் மட்டத் தலைமைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பரிந்துரை வடிவங்கள் திரும்பி வருவதற்கான  காலக்கெடு, விருது ஆண்டின் ஜனவரி 31 ஆம் திகதியாகும். நோபல் பரிசு குழு, இந்தப் பரிந்துரைகளிலிருந்து சுமார் 300 பேரை தெரிவு செய்யும். பின்னர், இவர்களிலிருந்து அந்தத் துறைகளைச் சேர்ந்த நிகரில்லா சேவையாற்றிய ஒரு சிலரை தெரிவு செய்து நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கும். 

வருடந்தோறும், நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் திகதியன்று அமைதிக்கான நோபல் பரிசு தவிர, ஏனைய அனைத்து விருதுகளும், சுவீடனிலுள்ள ஸ்ரொக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றது. அன்றைய தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வும்  இடம்பெறும். 

இதேவேளை, நோபல் பரிசினைப் பெறாமல் நிராகரித்தவர்கள், அதனை பெற அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் குறித்த நபர்களுக்கு அவ்விருதுக்கான அங்கீகாரம் வழங்காமை போன்ற வரலாறுகளும் இதற்கு உண்டு. 

மெய்யியலாளர், நாடகாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல்வாதி இலக்கியத் திறனாய்வாளர் என பல்முகங்களைக் காண்பித்தவர் ஜோன் பவுல் சாட்டர். 1964 இல் ஜோன் பவுலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். 

ஜோன் பவுல் சாட்டர் என கையெழுத்திடுவதும், நோபல் பரிசு பெற்ற ஜோன் பவுல் சாட்டர் என கையெழுத்திடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தானொரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாதெனக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற மறுத்து விட்டார். 

இதேவேளை, 1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜேர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதை ஹிட்லர் தடை செய்திருந்தார். இதனால், எழுத்தாளர் கார்ல் வான் ஒஸ்ட்ஸ்கி (1935), வேதியியலாளர் ரிச்சர்ட் (1938), மருத்துவவியலாளர் ஜெர்ஹார்ட் டொமாக் (1939) மற்றும் இரசாயனவியலாளர் அடொல்ப் புடேனட் (1939) ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுகளை பெற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

அதேவேளை, 2010 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும்  மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியோபோவிற்கு அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் லியூ சீன அரசினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால், லியூ இந்தப் பரிசை பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே, அந்த வருட நிகழ்வில் அவரது புகைப்படம்  வைக்கப்பட்ட நாற்காலிக்குப் பரிசளிக்கப்பட்டது. 

இவ்வாறு ஏமாற்றங்கள்,  நிராகரிப்புகள், சர்ச்சைகள், மகிழ்ச்சிகள் என பல விடயங்களுடன் நோபல் பரிசு என்னும் வரலாற்றுத் தடம் கடந்த 112 வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. 

ஸ்தம்பித நிலையில் அமெரிக்கா

சா.சுமித்திரை

அமெரிக்க அரச சேவைகள் அனைத்தும், கடந்த வார ஆரம்பத்திலிருந்து முடங்கிப் போயுள்ளன. சாதாரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அரச சேவையாளர்கள் ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டாலேயே அதன் பாதிப்புகள் என்னென்னவென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரச துறையின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டிருக் கும் பணிப்பகிஷ்கரிப்பால் அவர்கள் சார்ந்த ஏனைய பிரிவுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கும்.

ஆனால், அமெரிக்காவில் தற்பொழுது நிகழ்ந்திருப்பது பணி பகிஷ்கரிப்பல்ல. அப்படியிருந்தும் கடந்தவார ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவின் அரச சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த ஸ்தம்பித நிலைமையால், அரசின் மீது அமெரிக்கர்கள் விசனமடைந்து காணப்படுகின்றனர். அதேசமயம், அரசின் முடக்கம் தொடர்பாக அமெரிக்கர்கள் பல்வேறு வடிவங்களிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் “ஒபாமா கெயார்’ என்னும் சுகாதாரத் திட்டம், அக்டோபர் 1 இல் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே அதனை முறியடிக்க குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். ஒபாமாவின் இந்தத் திட்டம் வெற்றிகரமானது. இந்தத் திட்டம் ஒபாமாவின் தற்போதைய வரவு செலவுத் திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இத்திட்டத்தின் சட்ட அமுலாக்கம் தொடர்பாக ஆலோசித்திருந்த ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடன் இணைந்து குடியரசுத் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை தோல்வியடையச் செய்திருந்தார்.

ஆயினும், அக்டோபர் 1இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கு அனுமதியளிக்க இரு காங்கிரஸ் சபைகளும் மறுத்து விட்டதால் வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், அரசின் ஒரு பகுதி முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புதிய வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கம் காண அமெரிக்காவின் இரு சபைகளும் தவறிவிட்டதால் எல்லாமே ஸ்தம்பிதமடையும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த மோசமான நிலைமைகளுக்கு காரணமான “ஒபாமா கெயார்’ திட்டத்தினை விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினரான எதிரணியினரை “வலது சாரிகளின் பைத்தியக்காரத் தனங்கள்’ என இலாப நோக்கற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் குடும்பஸ்தரான மார்க் கூறியுள்ளார்.

2010இல் உருவான “ஒபாமா கெயார்’ என்ற அவரது திட்டமானது மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டதொன்றாகும். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் அவர் கூறியுள்ளார். இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் தங்கள் செல்வாக்கு சரிந்துவிடுமென குடியரசுக் கட்சி கருதுகிறது. 

அதேசமயம் இத்திட்டம் ஆரம்பத்தில் குடியரசுக் கட்சியினராலேயே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் இறுதி வடிவமும், அமுலாக்கமும் ஜனநாயகக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது என 49 வயதான குடும்பஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.

“ஒபாமா கெயார்’ என்று நன்கு அறியப்பட்டதும், குறைந்த வருமானமுடைய அமெரிக்கர்களுக்கு காப்புறுதி செய்யப்படாமலேயே சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பராமரிப்பு வாய்ப்பளிக்கும் சட்ட மூலமே, ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் பிணக்கிற்கான அடிப்படை விடயமாக அமைந்துள்ளது.

மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம், இரு கட்சி தலைமை களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளால் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறானதொரு தருணத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரமுமேயாகும்.
இந்நிலையில் ஒபாமாவின் இந்தத் திட்டத்தை தடுப்பதற்கு அல்லது தாமதமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். அதேசமயம், அவர்கள் இதற்காக கப்பம் கோருவதாகக் குற்றஞ் சாட்டியுள்ள ஒபாமா, தனது சுகாதார நலன்புரி சட்டமூலத்தினை சீர்குலைப்பதற்கு குடியரசுக் கட்சியினருக்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் கூறியுள்ளார்.

4 நாட்களுக்கு மேலாக தொடரும் அரசசேவை முடக்கத்திற்கு மத்தியிலே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வி கண்டுள்ளன. கடந்த 17 வருட கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இதுதான் முதல் முறையாகும். முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பதவிக் காலத்தில் 21 நாட்கள் அரச நிறுவனங்கள் முடங்கிக் கிடந்தன. இப்பொழுது, அமெரிக்க முடக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்தும். குறிப்பாக மசகு எண்ணெய் விலை பல மடங்காக உயரும். இதனைத் தொடர்ந்து உலக பொருளாதாரம் பல கட்டங்களாகப் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலைக்கு வழிகோலும்.

அமெரிக்காவின் கடன் நெருக்கடியை தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிடின் உலகப் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, மொத்தமாக அரசாங்கத்தையே முடக்கி வைத்துள்ளார் ஜனாதிபதி ஒபாமா என லூசியானா மாகாண ஆளுநரும், அமெரிக்க வாழ் இந்தியருமான பொபி ஜிண்டால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்பொழுது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பாரிய பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு சவால்களில் ஜனாதிபதி ஒபாமாவும் நாட்டின் தேசியத் தலைவர்களும் சரியான தீர்வைக் காணவில்லை. வெள்ளை மாளிகையில் யார் ஆட்சி செலுத்துகின்றார்கள்? யார் பிரமுகர்களாக இருக்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை. வெள்ளை மாளிகையில் உள்ளோர்கள் செயலிழந்து போய்விட்டனர் என்பதே பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச சேவை முடக்கத்தால் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஊழியர்களில் 70 வீதமானோருக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம், நாட்டின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றி வருகின்றது. கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை இத்துறை கவனித்து வருகின்றது.

வலு திணைக்களத்தின் பணிகளும் முடங்கியுள்ளன. இதனால் சக்தி, வலு ஆகியவற்றை மையப்படுத்திய கைத்தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 13,814 பணியாளர்களில் 12,701 பேருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வர்த்தக நடவடிக்கைகளுக்கான திணைக்கள பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 46,420 பணியாளர்களில் 40,233 பேருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பொது பாதுகாப்புக்காக கால நிலை மற்றும் ஏனைய அறிக்கைகளை வழங்கவென 6186 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேபோல, போக்குவரத்து திணைக்களத்திலிருந்து 18,481 பேரும், சுமித் சோனியன் என்ற மிகப் பெரிய நிறுவனத்திலிருந்து 3514 பேரும், தேசிய பூங்காங்களுக்கான நிறுவனத்திலிருந்து 21,379 பேரும், உள்ளூர் பாதுகாப்பு சேவை திணைக்களத்திலிருந்து 31,295 பேருக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் அவசர சேவைகளுக்கான திணைக்களத்திலிருந்து 40,512 பேரும் கல்வித்திணைக்களத்திலிருந்து 4013 பேரும், சூழல் பாதுகாப்பு அமைப்பில் 15,136 பேரும் கடமைகளிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் முடக்கத்தால் மேற்படி நிறுவனங்கள் ஊழியர்களை சம்பளமில்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளன. இதனால் 7 இலட்சத்து 83 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்த மாதத்துக்குரிய சம்பளத்தை மட்டும் வழங்கி விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதில், அத்தியாவசிய தேவையாக சுகாதாரம், இராணுவம், பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரச முடக்கத்தால் தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம், தனியார் துறையினரும் முடங்க வேண்டிய நிலையேற்படும். தற்போதைய முடக்க நடவடிக்கையால் வாரத்திற்கு பலநூறு கோடி ரூபா இழப்பு ஏற்படுமென பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த இழுபறி நிலைமை, தொடர்வதால் சர்வதேச முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தனது கடனின் உச்ச வரம்பான 14.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை, கடந்த மே மாதமே எட்டியுள்ள நிலையில் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் 2ஆம் திகதிக்குள், இப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், அரசு அன்றாடச் செலவுக்கே திண்டாட வேண்டி வரும். அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் பல மடங்காக உயர்ந்து விடுமென அமெரிக்க நிதி அமைச்சகம் அப்போது எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்த போதிலும், இன்றுவரை அதில் எந்த முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவின் தற்போதைய மோசமான நிலைமை, அந்நாட்டினை மட்டுமல்லாது உலகப் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அரசாங்கத்தின் கடன் தொடர்பாக எழும் வாக்குவாதங்கள், நிதி நிர்வாகத்தில் வரும் நாளாந்த செலவுகளைக் கூட பாதிப்பாதாகவுள்ளது. 

அமெரிக்காவின் வரலாற்றுத் தொடர்புடைய இடங்கள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இதனால் செல்லுமிடங்களில் கால தாமதம் ஏற்படும். ஒவ்வொரு அரசதுறை தொடர்பிலான விடயங்களிலும் காலதாமதம் ஏற்படுமென இங்கிலாந்து, ஜேர்மனி ஆகியவை தங்கள் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் புருணே ஆகிய 4 ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஒபாமா இரத்துச் செய்துள்ளார். இதனால், ஆசியபசுபிக் ஒத்துழைப்புக்கான மாநாடு உட்பட இரு மாநாடுகளிலும் பங்குபற்ற மாட்டார்.

ஒபாமா மருத்துவத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால், ஜனநாயகக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும். இதன் மூலம், அடுத்த தேர்தலிலும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகும். எனவே, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி ஆரம்பத்திலிருந்தே இதனை கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்துக்கு அதிக நிதியொதுக்குவதால் ஏனைய துறைகளுக்கு போதிய பணம் வழங்க முடியாது என்றும் கூறிவந்தது.

இரு தலைமைகளுக்கும் இடையிலான பதவிப் போட்டியால், நாட்டு மக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதன் எதிர்விளைவுகள் சர்வதேசத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதிக்குள், அமெரிக்காவின் கடன் உச்ச வரம்புகளை உயர்த்த நடைபெறும் ஒரு நடவடிக்கை தான் இந்தப் பணி நீக்கம் என்று ஒரு சாராரும், இன்னொரு பாரிய வேலை நீக்க நடவடிக்கைக்கான முன்னோடி தான் இந்த தற்காலிக பணிநீக்கம் என்றும் மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளன.

1996ஆம் ஆண்டின் பின்னர், மீண்டும் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை தவிர்த்துக் கொள்ளக் கூடியது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், உலக சந்தைக்கு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமையுமென பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


வல்லரசான அமெரிக்காவில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த அரசசேவை முடக்கத்தினால் உலக பொருளாதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

சனி, 12 அக்டோபர், 2013

இலங்கையரின் விதியைத் தீர்மானிக்கும் வீதிகள்

சா. சுமித்திரை

 ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றவென  அரசு எடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் காபெட்  வீதியிடல் திட்டம் முன்னிலை பெறுகின்றது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படுகின்ற அல்லது ஏற்படப் போகின்ற அபிவிருத்திகளுக்கு சிறப்பான போக்குவரத்து பிரதான காரணியாக அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நகரங்கள், கிராமங்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பல கோடி ரூபா செலவில்  காபெட் கொங்கிரட் வீதிகள் இடப்பட்டு வருகின்றன. 

வடக்கினையும் தெற்கினையும் இணைப்பதாகக் கூறிக் கொண்டு சன நடமாட்டம் இல்லாத வன விலங்குகளின் பகுதிகளையும் ஊடறுத்துக்  கூட வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

ஒருபுறம்  வீதி அபிவிருத்தி , புனரமைக்கப்பட்ட வீதிகள் பயனாளிகளிடம் கையளிப்பு என திறப்பு விழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையிலே மறுபுறம் வீதி விபத்துகளும், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

மனிதனின் விதியை வீதி விபத்துக்களே தீர்மானிக்கின்றன என்று சொல்லும் அளவிற்கு அவை மலிந்து காணப்படுகின்றன. தினமும் செய்தித் தாளைப் புரட்டும் போதோ அல்லது இணையச் செய்திகளைப் பார்க்கும் போதோ விபத்துகள் மட்டுமே பிரதானமாக இடம்பெற்றிருக்கும். 

இலங்கையில் நாளொன்றுக்கு 100 வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ் விதம் வருடமொன்றுக்கு 50 ஆயிரம் வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன. இவற்றில் 20 ஆயிரம் வீதி விபத்துகள் பாரதூரமானவையாகும். வாகன விபத்துகளினால் நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார். 

 2010 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 630  பேரும், 2011 இல் 2 ஆயிரத்து 684 பேரும் வாகன விபத்துக்களினால் பலியாகியுள்ளனர்.  2012 ஆம் ஆண்டில் 42,145 வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 444 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 320 பேர் தனியார் பஸ் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர். மது போதையிலும் , மித மிஞ்சிய வேகமாகவும் மோட்டார் வாகனங்களையும் , மோட்டார் சைக்கிளையும் மற்றும் முச்சக்கர வண்டிகளையும் ஓட்டுபவர்களே இத்தகைய கோர வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றனர். 

இதனைவிட தலைநகர் கொழும்பிலும் ஏ 9 வீதியிலும் தனியார் பஸ் சாரதிகளுக்கிடையே ஏற்படும் போட்டியால் வேகமாக பஸ்களை செலுத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  இதன் மூலம் வாகன விபத்துக்களுக்கும் வழி கோலுவதுடன் அதனுள் பயணிக்கும் பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பஸ் சாரதி திடீரென வேகத்தை அதிரிக்கும் போது அதில் பயணிக்கும் பயணிகள் விழுந்து காயங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. 

 இதே சமயம் பாதசாரிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திடீரென்று வீதியின் இரு பக்கங்களையும் பார்க்காமல் கடக்கும் போதும் அதிகளவிலான வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன.  இதனை விட பாதசாரிகள் மஞ்சள் கோட்டுக் கடவையினால் கடக்கும் போதே அவர்களை வந்து மோதி விட்டு தலைமறைவாகியுள்ளனர் எத்தனையோ சாரதிகள். 

 கடந்த வருடம் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டினைக் கடந்த இரு சிறுவர் உட்பட மூவரை வாகனமொன்று மோதி விட்டுச் சென்ற சம்பவத்தை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. இதுபோன்ற விபத்துகள் தற்பொழுது அதிகளவு இடம்பெறுவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர்  அண்மையில் தங்களிடமுள்ள புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி கருத்து வெளியிட்டிருந்தார். 

 இதேவேளை , விபத்தின் மூலம் மரணங்களை ஏற்படுத்தி விட்டு சட்டத்தின் முன் வராது தப்பிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு சில பொலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை போகின்றமை வேதனை தரக் கூடியது. 

வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் பிரதானமானது வீதி ஒழுங்கு  விதிகளை அனுசரித்து நடக்காமையாகும். குறிப்பாக தலைநகர்  கொழும்பில் ஆங்காங்கே மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல சாரதி பயிற்சி மையங்கள் திறக்கப்படுகின்றன. அப் பயிற்சி நிலையங்களில் அநேகமானவை  இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன. சாரதி பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு தேவையான நேரம் வழங்கி பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. மாறாக அதிக மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் நோக்கில் பயிற்சி மையங்கள் செயற்படுகின்றன.  

 இதனால், சாரதிப் பயிற்சியை முறைப்படி முடிக்காது இலஞ்சம் கொடுத்து சாரதி அனுமதிப் பத்திரம் பெற்று வாகனங்களை செலுத்துகின்றனர். சாரதிப் பயிற்சியை முறைப்படி பூர்த்தி செய்யாது, சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களே அதிகமென ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.   ஆயினும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையிலே விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வேகமாக வாகனங்களைச் செலுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை ஓட்டுநர்கள் சிந்தித்துப்  பார்க்கத் தவறுவதும்  வீதி விபத்துகளுக்குக் காரணமாகும். நான் பல மாதக் கணக்காக எனது வாகனத்தை வேகமாகவே செலுத்துகின்றேன். ஒரு நாளும் எந்த விபத்திலும் சிக்கவில்லை. நான் வாகனம் செலுத்துவதில்  அவ்வளவு திறைமைசாலியென சிலர் நினைக்கலாம். 

 ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல என்றோ ஒரு நாள் ஏற்படும் விபத்தினால் கிடைக்கும் விளைவுகள் பாரதூரமானவையே என்பதை மறுக்க முடியாது. இதனை விட இலங்கையில் வாகனம் செலுத்தக் கூடிய அதிவேகம் என்னவெனும் அறிவித்தல் பலகையோ அல்லது வளைவுகள் , செங்குத்துப் பாதை போன்றவற்றுக்கான வீதிக் குறியீடுகளோ அநேகமான வீதிகளில் காணப்படாமையும் ஒரு குறையாகும். 

இதனைவிட சில நகரங்களில் வைக்கப்பட்டிருக்கும் வீதிச் சட்ட ஒழுங்கு குறியீடுகள் மற்றும் அறிவித்தல் பலகைகளை சில விஷமிகள் கழிவு ஒயில் மற்றும் மை தெளித்து சேதப்படுகின்றனர். இத்தகைய சமூக விரோதிகளின் செயற்பாடுகள் உயிரிழப்புகள் ஏற்பட மட்டுமே வழி கோலும். 

 அதேசமயம் அநேகமான வீதிகளில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை . அல்லது செயலிழந்து காணப்படுகின்றன. இதனாலேயே இரவு வேளைகளில் வீதி விபத்துகள் அதிகளவு  இடம்பெறுவதற்கு காரணமாகின்றன.  வீதிகளில் தெரு விளக்குகளைப் பொருத்தவும் மாதாந்தம் அவை செயபடுகின்றனவா ? என அறிந்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அந்தந்தப் பகுதி மாநகர , நகர சபை அதிகாரிகள் முன் வர வேண்டும். 

 இந் நடவடிக்ககளினாலும் வீதி விபத்துகளை குறைத்துக் கொள்ளக் கூடிய அதேசமயம் வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகள், நாய்களின் தொந்தரவுகளையும் கட்டுப்படுத்த இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏனெனில் வீதி விபத்துக்களுக்கு வீதிகளுக்குக் குறுக்கே திடீரென பாயும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களும் காரணமாக அமைந்துள்ளன. 
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு பிரதான காரணிகளாக இவையே சொல்லப்படுகின்றன. சில சமயம் வாகனங்களுடன் மோதுண்டு என்பு முறிவுகள் ஏற்படும் சில கட்டாக் காலி மாடுகள், கவனிப்பாரற்று சில நாட்கள் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. 

இதேவேளை வாகன விபத்துகள் ஏற்படுவதற்கு இன்னொரு காரணம், வீதிகள் சரியாக  போடப்படாமையாகும். சில வீதிகள் அதிகம் வழுக்கிச் செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும் சில வீதிகள் குண்டும் குழியுமாக உள்ளன. அத்துடன் வேகமாக செல்லும் நெடுஞ்சாலைகளில்  ஏற்படும் வளைவுகளுக்கு முன்னால் வேகத் தடைகள் போடப்படுவதில்லை. 

 இதன் மூலம் சாரதி செலுத்தி வந்த வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமலே வளைவில் திரும்பும் போது வீதியின் அருகிலிருக்கும் வீடுகளின் மீதே கட்டிடங்களின் மீதோ மோத வேண்டிய நிலையேற்படும்.  எனவே, வேகத்  தடைகள் தேவையான இடங்களுக்கும் பாதசாரிகள் கடவைகள் தேவையான இடங்களுக்கும் போடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். 

அதேபோல பயணிப்பதற்குத் தகுதியில்லாத வாகனங்களும் தற்பொழுது வீதிகளில் செலுத்தப்படுகின்றன. அதாவது பிரேக் இல்லாமை, எஞ்சின் கோளாறு , வாகனங்களை அலங்கரிக்கவென புதிய உலோகப் பொருட்களை இணைத்தல், ரயர்கள் தேய்ந்திருத்தல் போன்ற பல குறைபாடுகள் கொண்ட வாகனங்கள்,  வீதிகளில் செலுத்துவதற்கு தகுதியற்றவையாகும்.   

அதேவேளை, மது போதையில் வாகனம் செலுத்து வோருக்கு எதிராகக் கடும் சட்டங்கள் உள்ள போதிலும் அவர்கள் குறித்த அதிகாரிகளிடம் சிறு தொகை பணத்தைக் கொடுத்து விட்டு தப்பிச் செல்கின்றமை கவலை தரக் கூடியதாகும்.  இதனைவிட தொலைபேசியில் கதைத்துக் கொண்டும், குறுஞ் செய்தி அனுப்பிக் கொண்டும் வாகனங்களைச்  செலுத்துவதும் விபத்துக்குக் காரணமாகும். 

இதேவேளை, நீண்ட தூரம் பயணங்களின் போது வாகனச் சாரதிகள் இரவு முழுவதும் கண் விழித்தே இருக்க வேண்டியுள்ளது. இதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நீண்ட தூர பயணங்களின் போது வாகன சாரதிகள் தமக்குத் தேவையான அளவு ஓய்வினை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதனை விடுத்து வாகனங்களைச் செலுத்துவாராயின் அவரே உணராததொரு தருணத்தில் உறங்கிவிடுவார். இதுவும் பாரிய விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் வீதி விபத்துகள் குறைந்து கொண்டு வருகின்றன. ஆனால், ஆசிய நாடுகளில்  வீதி விபத்துக்கள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதிலும் இலங்கையில் தற்பொழுது வாகன விபத்துகள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கான அறிகுறியல்ல. 

 கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற 120, 150 வாகன விபத்துகளில் 10,890  விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சாரதிகளின் மது பாவனையால் 6,235 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. விபத்தில் உயிரிழப்பவர்களை விட காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். அதுவும் இத்தகையோரில் எத்தனை பேரின்  எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது !

கடந்த கால யுத்தத்தால் ஊனமுற்றோரின் எண்ணிக்கையை விட விபத்துக்களால் அங்கவீனமானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையையே அண்மைக்கால புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. 

இலங்கையில் வாகன விபத்துகள் அதிகரிப்பதிற்கு வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த சரியான திட்டமிடல் இன்மை  போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர்களில் இரண்டு இலட்சம் பேருக்குச் சாரதி ஆசனத்திற்குப் பின்னால் நிற்கக் கூடத் தகுதியில்லையெனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப் பெரும ஒரு தடவை பகிரங்கமாகவே கூறிச் சாரதிகளின் இலட்சணத்தை வெளிப்படுத்தியிருந்தார்
அரசாங்கம் “மதுவுக்கு முற்றுப் புள்ளி’ என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மது போதையால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்த நிலையிலேயே மதுவுக்கு முற்றுப் புள்ளி எந்தளவிற்கு வெற்றியடைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. எனவே,  எங்கோ ஒரு இடத்தில் காணப்படும் குறைபாட்டைக்  கண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். 

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் சிறைத் தண்டனையும் பெருமளவான அபராதமும் விதிக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாக கடந்த வருடம் வீதி விபத்து தவிர்ப்பு வாரத்தை சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்தது. 

 அக்டோபர் 26 ஆம் திகதியன்று உலகின் வீதி விபத்து தவிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை மையப்படுத்தி எமது நாட்டிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதனொரு பகுதியாக விபத்துகளைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு தடவையாவது அந்தந்த பிரதேச கிராம சேவகர்களினூடாகவும் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளினூடாகவும் மேற்கொள்ள பொலிஸ்  திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

அதேபோல  பாடசாலை மாணவர்களிடையேயும்  கருத்தரங்குகள், நாடகங்கள் மூலமும் விபத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை . ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளால் தேசிய பொருளாதாரத்தில் 9.34 பில்லியன் ரூபா நஷ்டமாகின்றதாகவும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

உயிரிழப்புகள் , உடல் அங்கவீனம், பொருளாதார  நஷ்டம் எனப் பாரிய பாதிப்புகளை வீதி விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றன. வீதி விபத்துகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி மேலும் முன் வராவிடின் ஒவ்வொரு இலங்கையரின் விதியையும் வீதி விபத்தே தீர்மானிக்க வேண்டிய  நிலையேற்பட்டு விடும்.

வாஷிங்டன் கடற்படைத்தள தாக்குதல் மூலம் சந்தேகத்திற்கிடமாகியுள்ள அமெரிக்க இராணுவப் பாதுகாப்பு

சா.சுமித்திரை

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலுள்ள கடற்படைத் தளத்தினுள் கடந்தவார ஆரம்பத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மூலம் அந்நாட்டின் இராணுவ பாதுகாப்பு சந்தேகத்திற்கிடமாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை, வாஷிங்டன் கடற்படை தளத்தினுள் இராணுவ உடையில் வந்த ஆயுததாரிகள் மூவரால் இந்த துணிகரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலேயுள்ள, மிகவும் பாதுகாப்பான பகுதியான இந்த கடற்படைத் தளத்தில் துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும், பொது மக்கள், பொலிஸார் என 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், கொல்லப்பட, ஏனைய இருவர் பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வாஷிங்டன் கடற்படைத்தளம் பதற்றம் நிறைந்தாகவும் இரத்தம் தோய்ந்த பகுதியாகவுமே காட்சியளித்தது. வீதியெங்கும், அமெரிக்க இராணுவ வீரர்களின் நடமாட்டமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காணப்பட்டது. சோதனைகள், சுற்றி வளைப்புகள் தேடுதல்கள் என எதற்கும் குறைவில்லாமல் வாஷிங்டன் நகர் காட்சியளித்திருந்தது.

உலகில்; தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தைரியத்தோடு செயற்படுத்தும் ஒரேயொரு நாடு அமெரிக்காதான். வியட்னாம் தொடங்கி சிரியாவாகட்டும் அனைத்து நாடுகளினதும் அரசியல் விவகாரங்களிலும் தலையிட்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போலவே அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது.

உலகின் தீவிரவாதத்தை அடக்க போராடி வரும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினால் தனது நாட்டில் மேலோங்கிக் காணப்படும் துப்பாக்கிக் கலாசாரத்தை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.

வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி; முன்னாள் கடற்படை வீரரான 34 வயதுடைய அரோன் அலோசியஸ் என இனங்காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைத்தளங்களின் பாதுகாப்பினை ஆராய்ந்து உறுதிசெய்யுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. கடற்படைத் தளத்தில் பல்வேறு முறையற்ற நடத்தைகளால் பணி நீக்கம் செய்யப்பட்ட அலோசியஸ் எவ்வாறு கடற்படைத் தளத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்தது? என்று விசாரணை நடத்தவும், அமெரிக்கப் படைத்தளங்களின் பாதுகாப்பை பரிசீலித்து உறுதி செய்யுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப கட்டிடவியலாளராக பணிபுரியும் செல்லு படியான அனுமதிப்பத்திரம் மற்றும் உள் செல்வதற்கான நுழைவுச் சீட்டு என்பனவற்றை காண்பித்தே அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அலோசியஸ் நுழைந்திருந்ததாக அந்நேர அதிகாரிகள் தெரிவிக்கின்றார்.

அதேசமயம், தாக்குதல் சம்பவம் அன்றைய தினம் அந்நாட்டு நேரப்படி காலை 8.20 மணியளவில் அலோசியஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அரோன் அலோசியஸ் காலை 9மணிக்கு பின்னரே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அப்படியாயின் சுமார் 40 நிமிடங்களாக, அலோசியஸ் குழுவினர் அங்கிருந்த ஏனைய பாதுகாப்புத் தரப்பினருக்கு தண்ணீர் காட்டியுள்ளனர். இதனால் இத்தாக்குதலின் பின்னணியில் வாஷிங்டன் கடற்படைத் தள அதிகாரிகள் சிலரும் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

கடந்த 5 நாட்களுக்கு மேலாக, நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. அந்நகரின் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என தனித்தனியே பாதுகாப்பு வழங்கப்பட்டு சோதனைகளும் இடம்பெற்று வருகின்ற போதிலும் தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவராததுடன் தப்பிச் சென்றுள்ள ஏனைய இரு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்படவில்லை.

இதன்மூலம் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினரின் பலவீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அமெரிக்காவிற்குள் உள்நாட்டு மாபியா குழுக்களால் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதா? என இன்னும் சில காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அதேசமயம், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் நடைபெறும் மனிதஉரிமை மீறல், குற்றவியல் நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவது வழமையானதொன்றாகும்.

கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தன் நாட்டில் நடைபெறும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவங்கள் மீதான விசாரணைகளையும் இனிமேல் ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இவ்வருட ஆரம்பத்தில், வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, துப்பாக்கிகளின் உரிமங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மிதமிஞ்சிய சுதந்திரம் சமூகத்தை என்றும் அமைதியாக வைத்திருக்காது என்பது போல, அமெரிக்காவில் தினமும் துப்பாக்களால் பள்ளிச் சிறுவர்கள் துளைக்கப்படுவது அந்நாட்டையே பாரிய அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்ததே துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும், துப்பாக்கி உரிமத்தை கட்டுப்படுத்த ஒபாமா தலைமையிலான அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளுமாகும்.

உலகின் பல நாடுகளில், பயங்கரவாதம் தலைதூக்குவதற்கும், வன்முறைகள் வெடிப்பதற்கும் முதல் காரணியாக செயற்படுவது அமெரிக்கா தான் என்பது அரசியல் விமர்சகர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஆபிரிக்க நாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் அனைத்து மோசமான வன்முறைகளுக்கும், புரட்சிகளுக்கும் ஆரம்பம் அமெரிக்கா என்பதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வர்.

அதேசமயம், உலக வர்த்தகத்தில் அதிக பணம் கொழிக்கும் வியாபாரமான ஆயுத விற்பனை, இன்று ஒரு மரக்கறி வியாபாரம்போல மாற்றப்பட்டுள்ளது. உலக ஆயுத வர்த்தகத்தின் பெறுமதி 70 பில்லியன் டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனையில் முன்னிலையில் இருப்பவை மனிதஉரிமைகள், சமாதானம் பேசும் நாடுகள் தான். அதிலும் குறிப்பாக, உலக ஆயுத வர்த்தகத்தில் அரைவாசிக்கும் அதிகமான அளவு பங்கு வகிப்பது அமெரிக்கா தான். அதனைத் தொடர்ந்து ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகியவை தமக்குரிய ஆயுத வியாபார இடங்களை தக்கவைத்துள்ளன.

ஜேர்மனியைத் தவிர்ந்த ஏனைய 5 நாடுகளும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ உரிமை கொண்டவை என்பது இன்னொரு சுவாரசியமான விடயமாகும்.

இருந்தபோதிலும், உலக ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவற்கு சர்வதேச ரீதியில் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த ஐ.நா.பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த உடன் படிக்கையை கொண்டு வர மனிதஉரிமை அமைப்புகள் நீண்டகாலம் போராடி வந்த நிலையில் கருத்தில் கொள்ளாத மேற்குலக நாடுகள் இன்று இந்த உடன்படிக்கையை ஏற்றுள்ளன.

மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளுக்கு விற்ற தமது ஆயுதங்களின் முனை தற்போது தம் பக்கம் திருப்ப முயலும் போதே மேற்கு நாடுகள் விழித்துக் கொண்டன.

ஆயினும், ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் எத் தீர்மானத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் எந்த நாட்டுக்கும் இல்லாத நிலையில், இந்த உடன்படிக்கை எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பதும் சந்தேகமே.

மத்திய நாடுகளின் உள் விவகாரங்களில் பல்வேறு வழிகளிலும் தலையிட்டு வரும் அமெரிக்காவிற்கு அந்நாடுகளின் கிளர்ச்சிக் குழுக்கள் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்நிலைமையில், தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற குற்றஞ்சாட்டில் அமெரிக்காவும் அவ்வப்போது, அக்கிளர்ச்சியாளர்களின் தலையில் குட்டி அடக்கி வருகின்றது.

இருந்தபோதிலும், அக்கிளர்ச்சியாளர்களின் கை நிலை மாறிப்போய், அமெரிக்காவிற்கெதிராகவும், அதன் பிராந்திய தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு நல்ல உதாரணம் பொஸ்டன் குண்டுத்தாக்குதலாகும்.

இனிமேலும், அமெரிக்கா தான் ஒரு வல்லரசு நாடு என்பதைக் காண்பித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைக் குறைத்துக் கொள்ளாவிடின் இதுபோன்ற தாக்குதல்கள் அங்கு வழமையாகிவிடும்.

பகிடிவதைக் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள்

 சா. சுமித்திரை

  பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும் தலைமைத்துவ பயிற்சியானது கிட்டத்தட்ட இராணுவப் பயிற்சிகளுக்கு சமாந்தரமானதெனக் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகிய நிலையில் அப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது,

 முதலாம் இரண்டாம் கட்டம் என தலைமைத்துவப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் மாணவர்களாலேயே மீண்டும் பகிடிவதைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன என்பதற்கு அண்மையில் இடம்பெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

 பல்கலைக்கழக  கல்வியாண்டு காலப்பகுதியில் பகிடிவதை என்பது பாரியதொரு பிரச்சினையாக மீண்டும்  உருவெடுத்து வரும் நிலையில் சப்ரகமுவ  பல்கலைக்கழக பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய சகலமாணவர்களுக்குமெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களுக்கு எதிராகத் தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில மாணவர்கள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மாணவர்களுக்கெதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையினை முற்றாக ஒழிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே பகிடிவதை என்னும் வேடிக்கையானதொரு கலாசாரம் காணப்பட்டிருந்தாலும் அண்மைக் காலமாக கல்விச் மூகத்தினரிடை÷ய காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியமாக பகிடிவதை மாறியுள்ளது.

 பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி பாடசாலைகள், உயர் கல்லூரிகள் அலுவலகங்கள், விடுதிகள் போன்ற இடங்களிலும் பகிடிவதை இடம்பெறுவதுடன் அது நாகரிகமானதொன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

 முன்னைய காலங்களில் பகிடிவதையானது புதிதாக இணையும் மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களுடன் ஆழமானதொரு நட்பினையும் புரிந்துணர்வுகளையும்  ஏற்படுத்திக்கொள்ளும்  நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் வன்முறைச் செயல்களுக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்கும்  பாலியல்  ரீதியான குற்றங்களுக்கும் வித்திடுபவையாக உருவெடுத்தன.

 பல்கலைக்கழங்களாகட்டும் அல்லது அலுவலகங்களாகட்டும் அங்கு புதிதாக செல்வோரின் மனநிலை குடும்பம், சூழல் மற்றும் புறக் காரணிகள் சார்ந்ததாகவே அமைந்திருக்கும், அன்றைய தினம் வீட்டிலோ வீதியிலோ அல்லது உடல் ரீதியாகவோ குறித்த நபர் மனதளவில்  பாதிக்கப்பட்டிருப்பார். அவரின் மனநிலையை அவரால் விபரிக்கவோ அல்லது எம்மால் தானும் உணர்ந்து கொள்ளவோ முடியாது.

இப்படியானதொரு தருணத்தில் பகிடிவதை என்னும் நடவடிக்கையால் உடல், உள ரீதியாகக் கொடுமைப்படுத்துவதன் மூலம் எவ்வாறு புரிந்துணர்வுகளை ஏற்படுத்த முடியும்?

இங்கிலாந்தில் 18 ஆம் நூற்றாண்டுகளிலே தோற்றம் பெற்றதாகக்கூறப்படும் பகிடிவதைக் கலாசாரத்தில் பொதுவாக பேச்சு ரீதியான துன்புறுத்தல் உடல் ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறத்தல் என 3 வகையான செயற்பாடுகள் குற்றச்செயல்களாகப் பதியப்பட்டுள்ளன.

 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்குமிடையேசிநேகபூர்வமான உறவினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பகிடிவதைக்கு புதிய முகங்களாக பல்கலைக்கழகங்களில் உள்நுழைவோரை உடல், உள ரீதியாக சிரேஷ்ட மாணவர்கள் துன்புறுத்துவதே என இன்றைய காலத்தில் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.

 இத்தகைய சில பகிடிவதைகளால் எத்தனையோ மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். பலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். உடல் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர்.மேலும் பலர் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்.

 இதனைவிட  பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு என்னும் ஒரேயொரு இலட்சியத்துடன் இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்தரக் கல்வியைக் கற்கின்றனர்.அவர்களுள் சில ஆயிரக்கணக்கானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது.எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியிலே பல கனவுகளுடன்   பல்கலைக்கழகத்திற்கு  காலடியெடுத்து வைத்தவர்கள் இறுதியி பட்டப்படிப்பைத் தொடராது இந்தப் பகிடிவதையாலேயே இடை விலகுகின்றனர்.இதன் மூலம் இம்மாணவர்களின், இவர்களுடைய பெற்றோர்களுடைய எதிர்கால சமூகத்தினருடைய கனவு தவிடுபொடியாகிவிடுகின்றது.

இலங்கையின் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்களில் அநேகமானோர் அப்பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முதல் மாத காலப்பகுதியில் ஏதோவொரு சித்திரவதைக் கூடங்களுக்கு சென்று வருவதைப் போலவே உணர்கின்றனர். தம்மைவிட ஓரிரு வயதுகள் பெரிய அவர்களைப் போலவே பட்டம் பெறவுள்ள மாணவர்களால் வழங்கப்படும் பகிடிவதைகளாலேயே உன்னதமான உயர்வான ஓர் கல்விக்கூடம் சித்திரவதைக்கூடமாகத் தெரிகின்றது.

கல்வி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தது. கல்வியை இதுதான் என வரைவிலக் கணப்படுத்த முடியாது. அதேசமயம்  நற்பண்புகளையும் உயர்கல்வியையும் பெற்று ஒழுக்க சீலர்களாக வெளியேறி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற மனப்பான்மையை வழங்குவது பல்கலைக்கழகங்கள் மட்டுமேயாகும்.

 எனவே தான் ஏனைய நாடுகளை போலல்லாது இலங்கையில் உயர்கல்வி இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்விச் சமூகத்தினரிடையே குற்றச்செயல்களைச் செய்யத்தூண்டும் இந்தப் பகிடிவதை மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

இவைகளால் புதிய நட்பு உருவாகும் என்பதற்குப் பதிலாக வக்கிரங்களே உருவாகின்றன. பகிடிவதை ஒரு போதை போன்றதே.  போதை தலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற என்ன விளைவுகளைக் கொடுக்குமோ அதனைப் போலவே இதன் விளைவுகளும் காணப்படுகின்றன.

பகிடிவதைக் கலாசாரம் மேலைத்தேய நாடுகளை விட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளிலேயே அதிகரித்துக் காணப்படுகன்றது. எமது நாட்டின் கல்வி முறையிலே ஆரம்ப காலங்களில் பகிடிவதை என்ற அத்தியாயம் காணப்படவில்லை. பின்னர் தொற்றிக்கொண்ட பகிடிவதைகள் சிநேகபூர்வமான உறவுகளுக்கே வழிவகுத்திருந்ததால் பெரியளவில் பேசப்பட்டிருக்கவில்லை. 

ஆனால் இன்று அநேகமான அரச பல்கலைக்கழகங்களிலும் சில தனியார் கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக  இடம்பெற்றுவரும் பகிடிவதைகளால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 பழிக்குப் பழி, நிர்வாகக் கண்காணிப்பின்மை, மாணவர் அமைப்புகளின் தலையீடுகள், சட்டத்தின் நெகிழ்வுத்தன்மை, விரிவுரையாளர்களது அக்கறையின்மை என பலகாரணங்களால் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன.

“நான் பல்கலைக்கழகத்துக்குள் புதிய மாணவனாக வந்தபோது பல வகையான பகிடிவதைகளுக்குள்ளாகியிருந்தேன். எனவே என்னைவிட இப்பொழுது புதிதாக உள்நுழைந்திருக்கும் புதிய மாணவர்களுக்கு கூடுதலான வதைகளை அனுபவிக்க விட வேண்டும்’ என்ற பழிக்குப் பழி தீர்க்கும் எண்ணம் மட்டுமே ஏற்பட்டு விடுகிறது. இதன்விளைவு அதிகரித்த பகிடிவதைகளாகும்.

2011 டிசம்பரில் றுகுணு பல்கலைக்கழக மாணவியொருவர் பகிடிவதையால் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து 2 ஆம் வருட மாணவியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இத்தகைய சம்பவத்தால் இவ்விரு மாணவிகளது எதிர்காலமும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

படிக்கவோ அல்லது  தொழில் புரியவோ பல்வேறு கனவுகளுடனும் இலட்சியங்களுடனும் வருவோரிடம் விளையாட்டுக்காகவும் சிறு சந்தோஷத்திற்காகவும் செய்யும் இந்த பகிடிவதைகளால் பாதிக்கப்படுவது இரு தரப்பினருமாகும்
.
இப்பகிடிவதைகளால் மாணவர்களிடையே மோதல்கள், குற்றச் செயல்கள் உருவாகுவது மட்டுமன்றி அவை பேராசிரியர் போன்ற கல்வியாளர்களையும் பாரியளவில் பாதித்து விடுகின்றன. இதற்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவரொருவர் விரிவுரையாளரைத் தாக்கிய சம்பவம் நல்லதொரு உதாரணமாகும்.

இப்படி எத்தனையோ பகிடிவதைகளால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் வரலாறுகளை பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் பக்கம் பக்கமாகச் சொல்லும். இருந்தபோதிலும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களும் திருந்துவதாக இல்லை. அவற்றினைக் கட்டுப்படுத்தவும் எவரும் அதிக அக்கறை காட்டுவதுமில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு குறித்த உடையுடனும் குறித்த தலையலங்காரத்துடனும் தான் வர வேண்டும். தரையில் நீச்சலடிக்க வேண்டும். மரங்களுக்கு முத்தமிட வேண்டும். கழிவுப் பொருட்களை அவர்கள் மீது எறிதல், பட்டப் பெயர் சொல்லல், சக மாணவர்கள் முன் கேவலப்படுத்தல், சகோதரர்களை வர்ணிக்கும் படி சொல்லல் உடைகளைக் களையச் சொல்லல் போன்றே மிகவும் கீழ்த்தரத்தான படித்தவனுக்குரிய  பண்பில்லாத பல செயல்கள் பகிடிவதை எனும் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதைகளில் 60 வீதமானவர்கள் உளரீதியாகவும் 30 வீதமானோர் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 13 வீதமானோர் கல்வியிலே பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனர்.

 சில பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகளில் அரசியல் நேரடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பல்கலைக்கழக அனுமதிபெறும் சில அரசியல்வõதிகளின் பிள்ளைகளும், மேலும் சிலர், அரசியல்வாதிகளின் செல்வாக்குகளுடன் பல்கலைக்கழக வளாகங்களில் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவையும் மோசமான பகிடிவதைகள் உருவாகக் காரணியாக அமைந்துள்ளன.

 பகிடிவøதகளைத் தடுப்பதற்காக அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் இணைந்து பரந்தளவில் வழங்கி வருகின்ற தலைமைத்துவப் பயிற்சி நடவடிக்கைகளின் பின்பே பகிடிவதைகள் அதிகரித்துள்ளமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்வுள்ளது.

 அதேசமயம்  பகிடிவøதகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பொலிஸில்  முறைப்பாடுகள் செய்யப்படுகின்ற போதிலும் மாணவர்கள் என்ற ரீதியிலும் அவர்களது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும் பொலிஸ் நிலையங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இதனாலும் பகிடிவதைகள் அதிகரிக்கும் நிலையே உருவாகியுள்ளது.

 பகிடிவதைகளைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிகளிலும் ஏதோவொரு குறைபாடு உள்ளமையாலேயே அவை அதிகரித்துள்ளமையை மறுக்க முடியாது. எனவே எங்கு குறைபாடு உள்ளதோ அவற்றினைக் கண்டுபிடித்து திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

பகிடிவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்ய சட்டத்திலும் இடமுள்ளது. எனவே பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான கல்விச் சமூகத்தை உருவாக்குவது இன்றைய அவசியத்  தேவையாகும் 

சனி, 5 அக்டோபர், 2013

அரச பாரம்பரியத்தை மீறுவாரா கேட்?

இளவரசர் ஜோர்ஜுக்கு
23 ஆம் திகதி ஞானஸ்தானம்

 பிரிட்டனின் மூன்றாவது முடிக்குரிய இளவரசர் ஜோர்ஜுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளதென பங்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.

 கேம்பிரிட்ஜ் சீமான் வில்லியம் மற்றும் சீமாட்டி கேட் தம்பதியின் குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு கிறிஸ்தவ மதத்தவர்களின் சமய நிகழ்வுகளிலொன்றான ஞானஸ்தானம் வழங்குதல் எனும் நிகழ்வு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதியன்று சென். ஜேம்ஸ் மாளிகையின் சாம்பல் ரோயலில் நடைபெறுமென அரச குடும்பத்தினர் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.

 இந்நிகழ்வில் இளவசர் ஜோர்ஜின் ஞானஸ்தான பெற்றோர் (கோட் பேரன்ஸ்) ஆறு பேர் பங்கு கொள்வரென நம்பப்படுகின்றது. பூட்ட பேர்த்தி மகாராணி மேரி, பூட்டன் ஜோர்ஜ் உட்பட 8 பேரும் இளவரசர் சாள்ஸ், இளவரசர்களான வில்லியம், ஹெரி ஆகிய வரிசையில் ஆறுபேரும் இளவரசர் ஜோர்ஜின் பரம்பரைக்கு உரித்துடையவர்களாவர்.

 ஆயினும் இன்றைய காலப்பகுதிக்கேற்ற ரோல் மொடலாக இருக்கும் ஒருவரையே கேட்  வில்லியம் தம்பதி தங்களுடைய குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு ஞானஸ்தான உரிமையுடையவராக இருக்க தெரிவுசெய்ய விரும்புவர். ஆனால் அரச பாரம்பரிய வழக்கத்தினை மாற்றியமைக்க  இத்தம்பதி முன்வருவார்களா என்பது கேள்விக்குரியதே.

முன்னைய காலத்தில் இராஜ வம்ச காரணங்களுக்காகவே ஞானஸ்தான பெற்றோரை தெரிவு செய்வர். ஆனால் தற்போது இளவரசர் ஜோர்ஜின் வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து அவருக்குரிய ஆலோசனைகளை வழங்கி நல்வழிப்படுத்தத்தக்க கூடிய ஒருவரே  தேவையாகும் என வரலாற்றியலாளர் ரெபோட் லாசேய் கூறுகின்றார்.

இப்படியானதொரு சிறப்பான தருணம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. ஆனால் இத்தகைய எண்ணம் பயனுள்ளது என நூற்றாண்டின் அரச குழந்தைகள் (செஞ்சுவரி ஒவ் ரோயல் சில்ரன்) என்ற நூலின் ஆசிரியர் இன்கிரிட் சீவெட் கூறுகின்றார்.
அரச பாரம்பரிய பழக்கவழக்கங்களை உடைத்து சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு கேம்பிரிட்ஜ் இளவரசர் மற்றும் இளவரசி கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.சாதாரண குடும்பத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு மருமகளாக வந்த கேட் மிடில்டன் ஏற்கனவே அரண்மனையின் பல விதிமுறைகளை உடைத்தெறிந்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் வில்லியமை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னரும் எந்தவொரு எதிர்பார்ப்புகளோ அல்லது கௌரவப் பட்டங்களையோ பெறாது சாதாரணதொரு பெண்ணாகவே இன்னும் இருக்கின்றார்.
கேட் தனது குழந்தையை அரச வாரிசாக வளர்க்காமல் சாதாரண குழந்தையைப் போலவே வளர்க்க விரும்புகின்றார். அதனை வெளிப்படுத்தும் முகமாக தனது குழந்தைக்கென்று ஒரு சில புதிய விதிமுறைகளையும் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே பழங்கால பாரம்பரியத்தினை பின்பற்றி வரும் அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேட் தனது குழந்தையை வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

இளவரசர் ஜோர்ஜ் அரச குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது பணிப்பெண்களுடனோ செலவிடுவது குறைவாகும். இளவரசர் ஜோர்ஜ் தனது தாய் வழி வீட்டினருடனே அதிக நேரம் செலவிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேநேரம் இளவரசர் ஜோர்ஜுடனான எதிர்கால வாழ்வில் அதிக செல்வாக்கு செலுத்தப் போகும் நபர்கள் தொடர்பிலான பெயர்களை சண்டே மெயில் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

கௌரவ பராமரிப்பாளர் 

1. பிப்பா மிடில்டன்  (வயது 30) இளவரசர் ஜோர்ஜின் சித்தி. இளவரசர் ஜோர்ஜின் ஞானத் தாயாக பிப்பா மிடில்டன் வருவாரெனில் பிரிட்டிஷ் அரச பாரம்பரியத்தில் அதுவொரு முறிவாகவே பார்க்கப்படும். ஆனால் மிடில்டனின் சகோதரியாக மட்டும் அவரில்லை சிறந்த நண்பியாகவும் உள்ளார்.

2. ஜேம்ஸ் மிடில்டன்  (வயது 26), ஜோர்ஜின் மாமா

3. விளையாட்டு ஹீரோக்கள் 
மார்க் ரொபின்சன் (வயது 31) லாரா ரோமின்சன் (வயது 28)
ஏன்- இருவரும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள்
ஏன் இல்லை-கணவன்  மனைவி இருவரும் ஒரு குழுவில் இணைந்து விளையாடுவதில் ஆர்வமற்றவர்களாக இருப்பதால்

4. பிளேக் ஹேர்ஸ்
ஜேம்ஸ் மிடேய் (வயது 31)

5. பழைய குடும்ப நண்பர் 
ஹப் வான் கட்ஸம் (வயது 39)
இளவரசர் சார்ல்ஸின் மிகவும் நெருங்கிய நண்பர்

6. வைல்ட் கார்ட்
ஹை பிலேய் (வயது 31)
இளவரசர் வில்லியமின் பால்ய நண்பர்

வில்லியமின் ஒன்றுவிட்ட சகோதரி லாரா லோபேஸ் (வயது 35)
கோன்வோல் சீமாட்டியின் மகளாவார்.

7. கேட்டின் நெருங்கிய நண்பர்
கத்ரீனா போலே (வயது 32)
ஹனாய் கார்டர் (வயது 31)

8. முன்பள்ளி நண்பர்கள்
தோமஸ் வான் ஸ்ரூபென்ஸ் (வயது 31)
லேடி வான் ஸ்ரூபென்ஸ் (வயது 26)
இளவரசர் வில்லியம், ஹெரி ஆகியோருக்கு ஞானப் பெற்றோர்களாக இருப்பதற்கு இளவரசி டயானாவின் நண்பர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரச வாரிசுகளுக்கென பாரம்பரியமாக தெரிவு செய்யும் ஞானஸ்தான பெற்றோர் வரிசையை இந்த நவீன தொடர் மூலம் உடைத்தெறியப்படுமா? என்பதை எதிர்வரும் 23 ஆம் திகதி கண்டுகொள்ள முடியும்.

ஆயினும் இளவரசர் ஜோர்ஜிற்கு அரச பாரம்பரிய வரிசையிலே ஞானப் பெற்றோருக்கு தகுதியுடையவர்களாக இருப்பவர்கள் வருமாறு;

1.  இளவரசர் ஹெரி (வயது 29)
2. வெஸௌஸ் கோமானின் மனைவி (வயது 48)
3. பீற்றர் பீலிப் (வயது 35)
4. லேடி எமிலோ மெக்கோர் குடாலோ (வயது 30)
5. நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் ஹாஹோன் (வயது 40)
6. கிறிஸின் ஜோர்ஜ் டி மன்னரின் பேரன் இளவரசர் பிலிப் (வயது 46)
7. விஸ்கவுண்ட் லின்லே (வயது 51)
இளவரசி மார்கிரெட்டின் மூத்த மகள்
8. பிரிடைரிக் வின்ஷேர் (வயது 34)
9. லேடி பிரிடைரிக் வின்ஷேர் (வயது 33)
10. ஜேம்ஸ் ஒலேவி (வயது 49)
11. லேடி ரோஸ் ஜில்மன் (வயது 33)

அரச பாரம்பரிய வழக்கத்தினை கேம்பிரிட்ஜ் இம்முறை மீறுவாரா?