புதன், 21 ஆகஸ்ட், 2013

சீரழிவுகளை ஏற்படுத்தும் சிறுவர் திருமணங்கள்

சா. சுமித்திரை

இலங்கையில் சிறுவர் திருமணங்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் சிறுவர் மற்றும் கல்விக்கான நிதியத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போதிய அறிவின்மை, பொருளாதார நிலைமைகள், தகுந்த பாதுகாப்பின்மை, பெற்றோரின் அலட்சியப் போக்கு, மூட நம்பிக்கைகள் போன்றவற்றால் சிறுவர் திருமணங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதிநிதி ரிஸா ஹொனாசனி தெரிவிக்கின்றார்.
உலகளாவிய ரீதியில் ஆபிரிக்கா மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே சிறுவர் திருமணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக 7 நிமிடங்களுக்கு  ஒரு பால்ய விவாகம் என்ற வீதத்தில் நடைபெறுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்நிலைமை இன்னும் 10 வருடங்களில் இரு மடங்காகுமெனவும் ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலைமையிலே சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றினைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தரம் தழுவிய ஆய்வொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென குழுவொன்றை நியமித்திருந்தது.

இதன்போது குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் இளவயது திருமணங்களும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சிறுவயதில் திருமணம் செய்த 71 பேரை மையப்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வின் போது 30 வீதமானோர் 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரிய வருகின்றது. இது தேசிய சராசரியை விட 20 சதவீதம் உயர்வாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எமது நாடு ஏனைய துறைகளில் கண்ட அபிவிருத்தியை விட சுகாதாரத் துறையில் முன்னிலை வகிக்கின்றது. குறிப்பாக தாய், சேய் நலன் ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற அதேநேரம் சிசு மரண வீதமும் குறைவாகுமென்பதை எவராலும் மறுக்க முடியாது.

இருந்த போதிலும் சிறு வயது திருமணங்களால் இந்த அபிவிருத்தியை தொடர்ச்சியாக பேண முடியுமா என்பது கேள்விக்குறியே. சிறுவர் திருமணங்களால் மன உளைச்சல், சிசு மரணங்கள், சட்டவிரோத கருக்கலைப்புகள், சுகாதார சீர்கேடுகள், பாலியல் மற்றும் ஏனைய குடும்ப வன்முறைகள் என பலவகையிலான சமூக பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. 

இந்நிலையில் எமது நாடு சுகாதார ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அல்லது கல்வி ரீதியாகவோ பாரியளவில் பின்னடைவைச் சந்திக்கப் போகின்றது. இவற்றுக்கான தீர்வினை உடனடியாக பெறாவிடின் எதிர்காலச் சமூகம் ஆரோக்கியமற்றதொன்றாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் சிறுவர் திருமணங்களால் பல பிரச்சினைகள் ஏற்பட வழிகோலுகின்றன. குறிப்பாக பாடசாலைக் கல்வியை இடைநடுவிலே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இளவயது திருமணங்களுக்கு இன்னொரு காரணமாகும்.

இலங்கையிலே ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை கைவிடுவதாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார சபை தெரிவிக்கின்றது.
கல்வியை இடைநடுவில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை வட, கிழக்கு  மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமாகக் காணப்படுவதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மாணவர்கள் கல்வியை இடைநடுவிலே கைவிடுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதானமாக வறுமையே சுட்டிக் காட்டப்படுகின்றது. இலவசக் கல்வி வழங்கப்படும் இலங்கையில் வறுமை காரணங் காட்டப்படுகின்றது என்றால் எங்கோ ஒரு இடத்தில் குறைபாடு உள்ளது என்பதே அர்த்தமாகும். எனவே இக்குறைப்பாட்டை இனங்கண்டு அதனைத் தீர்க்க கல்வி சமூகம் முன்வர வேண்டும்.

அதேபோல் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இதன்போது இங்கிருக்கும் அவர்கள் பெண் பிள்ளைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகின்றது. அத்துடன் வெளிநாடு செல்லும் அநேக பெண்களின் கணவன்மார் சரியான முறையில் குடும்பத்தைக் கவனிக்காமல் தமது மனைவிமாரின் வெளிநாட்டுப் பணத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனாலும் அப்பெண் பிள்ளைகள் தமது பாதுகாப்பு கருதி சிறு வயதிலே திருமணம் செய்து கொள்ள எத்தனிக்கின்றனர்.
இதேவேளை பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது சீதனம் வழங்கும் வழக்கம் எம் சமூகத்தினரிடையே காணப்படுகின்றது. எனவே சீதனம் கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை வயதான பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைத்து கடமைகளை முடித்துக் கொள்கின்றனர்.

இதன்மூலம் அப்பெண் மட்டுமே உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்றாள். திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு கடமையல்ல. திருமண பக்குவத்தில் தமது பிள்ளை இருக்கின்றாளா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்வார்களாயின் ஓரளவேனும் இளவயது திருமணங்கள் குறைவடையும்.
கடந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே சுமார் 1200 சிறார்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி செய்தி வெளியிட்டிருந்தனர்.

கடந்த வருடம் 157 சிறுவர் திருமணங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இவை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்ததாக அநுராதபுர மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்திருந்தார்.

இதேபோல் பாடசாலை மாணவர்களிடையே மதுபானம், போதைப்பொருள் மற்றும் சிகரெட் பாவனைகளும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவையும் ஒரு வகையில் சிறுவர் திருமணங்களுக்கு வழிகோலியுள்ளன.

அதேசமயம் இன்றைய மாணவர்கள் கணினிகள் மற்றும் இணையத்தள வசதிகள் கையடக்கத் தொலைபேசி வசதிகள் என தொழில்நுட்ப யுகத்தில் இருக்கின்றனர். இதன்மூலம் பல சாதகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவர்களுக்கு கிடைத்துள்ள இந்த வசதிகளை அவர்கள் தவறாக பயன்படுத்துவது பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன.

இத்தகைய சிறுவர் திருமண முறையானது சிறுமியர் தங்கள் கல்வியை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தி வருவது மட்டுமன்றி கர்ப்ப காலத்திலும் சரி பிரசவ காலத்திலும் சரி தாய் மற்றும் குழந்தைக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றது. அத்துடன் குழந்தைகள் பிறந்த பின்னர் போஷாக்கின்மை அடிக்கடி நோய் வாய்ப்படல் உட்பட உடல், உள குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
இதனைவிட அப்பெண் உலக அறிவு அனுபவங்களை எட்டும் போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். இதன்போது மன அழுத்தங்களுக்கு உள்ளாவதுடன் குடும்பப் பிரிவு மற்றும் விவாகரத்து போன்ற நிலைகளுக்கும் தள்ளப்படுகின்றாள்.

எனவே தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறுவர் திருமணங்கள் அதிகரிக்கின்றதோ அந்தளவுக்கு விவகாரத்துகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக 18 வயதுக்கு குறைந்த ஆண், பெண் வழக்காற்றுத் திருமணத்தையோ அல்லது பதிவு செய்யப்பட்ட திருமணத்தையோ மேற்கொள்ள முடியாது. ஆயினும் எம் சமூகத்தினரிடையே  இன்னும் பல்வேறு இடங்களில் சிறுவர் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்விடயம் ஒரு சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் பார்த்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனை தரக்கூடிய விடயமாகும்.
மேலும் பொருளாதார பிரச்சினையால் பாடசாலை செல்கின்ற வசதியற்ற பிள்ளைகள் வேலையும் இல்லாத சமயம் தமது பாதுகாப்பும் அரவணைப்பும் பெறும் பொருட்டு தாம் விரும்பிய ஒருவருடன் வீட்டை விட்டுச் செல்கின்றனர்.

இத்தகையோரை அந்தந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனங்கண்டு அவர்களுக்குரிய கல்வி வசதியையோ சுயதொழில் முயற்சிகளையோ வழங்க முன் வர வேண்டும். இதன்மூலம் இத்தகைய சிறுவர் திருமணங்களை தடுக்க முடியும்.

சில பெண் பிள்ளைகள் தமது வீடுகளிலேயே உறவினர்களால் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளாகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அச்சம்பவம் பற்றிப் பொலிஸில் முறைப்பாடு செய்து மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட குறிப்பிட்ட நபருக்கே திருமணம் செய்து வைத்தல் சிறந்தது எனக்கருதி அப்பிள்ளையின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

உண்மையிலேயே இப்படியானதொரு பிரச்சினை கவலை தரக்கூடியதாகும். எனினும் ஒரு பெண் பிள்ளை குறித்த வயதினை எட்டும் போது பெற்றோர் எச்சந்தர்ப்பத்திலும் அப்பிள்ளையை தமது கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இத்தகைய பிரச்சினைகள் பெரியளவில் ஏற்பட õட்டாது.

இலங்கையில் 14 வயது பிள்ளையொன்று கட்டாயக் கல்வி பெற வேண்டுமென்ற சட்ட ஏற்பாடு உள்ளமை எத்தனை பேருக்குத் தெரியும்? இதனை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சிறுவர் திருமணங்கள் கல்விக்கான உரிமையைப் பாதிக்கின்றன. அத்துடன் இத்திருமணங்கள் சில சந்தர்ப்பங்களில் நீண்டகாலம் நிலைத்திருப்பதில்லை. அவ்வாறான நிலையில் தமக்குப் பிறந்த பிள்ளைகளுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையுமின்றி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு கைவிடப்படும் பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு கேலிப் பேச்சுகளுக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் உட்படவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

எனவே சமூகப் பிரச்சினையாக மாறி வருகின்ற சிறுவர் திருமணங்களை முற்றாக நிறுத்துவதற்கு அனைத்து தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். இளவயது திருமணத்தின் விளைவு பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட வேண்டும்.
அதேசமயம் இளம் பருவத்தினருக்கான இனவிருத்தி, சுகாதார சேவைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பலவந்தமாக திருமணம் செய்தல் மற்றும் இளவயது கர்ப்பம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க மகளிர் பாதுகாப்புத் தரப்பினர் முன்வர வேண்டும்.

மக்கள் புரட்சியும் இராணுவப் புரட்சியும் எந்தவித மாற்றமும் இல்லாத எகிப்து


சா.சுமித்திரை

சர்வதேசத்தின் நாளாந்தக் கவனத்தை ஈர்த்துள்ள எகிப்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, நீடித்துவரும் உள்நாட்டுக் குழப்பத்தால் அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

குறிப்பாக, இஸ்லாமிய அரசியலின் பிறப்பிடமான எகிப்து, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினராகட்டும் பதவி கவிழ்க்கப்பட்ட (முன்னாள் ஜனாதிபதி) முர்சியின் ஆதரவாளர்களாகட்டும் தாம் செய்வது மட்டுமே சரி என்ற கொள்கையுடன் தத்தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருதரப்பினரும் தாங்கள் செய்வதுதான் சரி மற்றவர் செய்வது பிழை என்ற நோக்கில் செயற்பட்டால் எவ்வாறு நடுநிலையானதொரு தீர்மானத்தினை எட்டமுடியும்?

தமக்கு நீதி வேண்டுமென்றும் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டுமெனக் கோரியும் வீதியில் இறங்கி முர்சியின் ஆதரவாளர்கள் பேராடுவதாலோ அல்லது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூரமான வன்முறைகளை பிரயோகிப்பதாலோ நாடு உருப்படப் போவதில்லை, மாறாக மிக மோசமான நிலைமைக்கே தள்ளப்படும்.

2011 பெப்ரவரியில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரு வருடங்களுக்குள் இன்னொரு ஆட்சிக்கவிழ்ப்பு அங்கு அரங்கேறியுள்ளது.

ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கவிழ்ப்புக்கான போராட்டத்திற்கு தலைமை வகித்தவரே இந்த முகமது முர்சிதான். ஆனால், இஸ்லாமிய வாதியான முர்சி ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள்ளேயே அவரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டு அவர் வீட்டுக்காவலில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டுள்ளார்.

முர்சியின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்று அவருக்கெதிரான போராட்டத்திற்கும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இரத்தம் தோய்ந்த நிலைப்பாட்டினை முர்சி மாற்றிக் கொள்ள வேண்டுமென மக்கள் பொங்கியெழுந்த போது, மக்கள் படை மாபெரும் புரட்சிகரமான இயக்கமாக உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் முர்சிக்கெதிரான இராணுவச் சதிப்புரட்சிக்கு அமெரிக்காவும் ஐரோபிய நாடுகளும் நேரடியாக ஆதரவு காட்டின. எனினும், இராணுவம் முர்சியின் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை வன்முறைகளினூடாக அடக்க நினைப்பது எகிப்தையும், முழு மத்திய கிழக்கையும் மேலும் சீர் குலைத்துவிடச் செய்வதோடு மிகப்பெரும் வெகுஜன போராட்டங்களுக்கு தூண்டிவிட்டுவிடும் ஆபத்தான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, முர்சி ஆதரவு ஆர்ப்பாட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு தரப்பினர் கடந்த புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறைகள் இன்னமும் நிற்கவில்லை. 650இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எனினும், தமது புரட்சிப்போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லையென அறிவித்துள்ள முஸ்லீம் சகோதரத்துவ கட்சி, வெள்ளிக்கிழமை தொழுகையுடன் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளது. 

இதேவேளை முர்சி ஆதரவு முகாம்களை கலைக்க பாதுகாப்பு படையினரை ஏவிவிட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு எகிப்து துணை ஜனாதிபதி முஹமட் அல்பரதி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

புதன்கிழமை நடந்த சம்பவமானது, தீவிர வாதத்தினை தூண்டுபவர்கள் மற்றும் கடும்போக்கு அமைப்புகளுக்கே சாதகமானதாக இருக்கின்றதென தனது இராஜிநாமா கடிதத்தில் முஹமட் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், முஸ்லீம் சகோதரத்துவ கட்சியை வளர்த்துவிட எகிப்திய இராணுவம் உதவுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

1928இலிருந்து, பலம் வாய்ந்ததொன்றாக முஸ்லீம் சகோதரத்துவ கட்சி செயற்பட்டு வருகின்றது. எகிப்தினை மறுசீரமைப்பதற்கு முர்சி தலைமையிலான முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இத்திட்டங்களில் கடும்போக்கு வாதங்களே காணப்படுவதாக கூறி அவற்றினை எகிப்தியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கும் பொது மக்களுக்குமிடையே உருவாகிய மௌனப் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி புரட்சியாக வெடித்தது. இதற்கு இராணுவம் உதவியதுடன் பின்னர் அது, இராணுவப் புரட்சியாக மாற்றமடைந்து ஆட்சி அதிகாரமும் கைமாறியது.

ஆனால், தற்போதைய சிரேஷ்ட இராணவத் தளபதி ஜெனரல் அப்துல் பத்டாத் அல்சிசியும், அவருடைய ஆதரவாளர்களும் முர்சியின் இலக்குகளைக் கொண்டே செயற்படுகின்றனர்.

நாட்டின் இத்தகையதொரு குழப்பமான போக்கு எதிர்கால சந்ததியினரை எங்கு கொண்டு செல்லும் என்பதற்கு தற்போதைக்கு பதில் கிடைக்கப்போவதில்லை.

இந்நிலையில், தலைநகர் கெய்ரோ மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அவசர காலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்த காலகட்டத்தில் எகிப்தில் ஏற்பட்ட படுமோசமான இந்த இரத்தக்களரிச் சம்பவத்தால் தலைநகர் கெய்ரோ மற்றும் ஏனைய மாகாணங்களிலும் தினமும் இரவுவேளைகளில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது ஒழுங்குக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாதுகாப்பை மேற்கொள்ள பொலிஸாருக்கு இராணுவம் உதவும். மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து வரையறுக்கப்படும், செய்திகள் மற்றும் ஊடகங்கள் கண்காணிக்கப்படும்.

ஏற்கனவே, இரு தரப்பு முரண்பாடுகளால் நிலை தடுமாறியுள்ள எகிப்தில், ஊரடங்குச் சட்டம் என்ற பெயரில் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் பாரிய வன்முறைகளுக்கே வழி கோலுமென அஞ்சப்படுகிறது.

அத்துடன், வன்முறை ஆர்ப்பாட்டங்களின்போது ஊடகங்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டாலோ அல்லது தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டாலோ அதிகாரப் போக்காளர்களின் கை மேலோங்கும். பொது மக்களின் உரிமைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும். எனவே, இந்த ஊரடங்குச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடக வரையறைகளை நீக்குவதன் மூலம் எகிப்திய நெருக்கடி சர்வதேசக் கண்காணிப்புக்குள்ளாகும். சர்வதசே சமூகத்தின் தலையீட்டால் ஓரளவேனும் எகிப்திய நெருக்கடிக்கு தீர்வு எட்ட முடியும்.

இதேவேளை, முர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டுமென நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இன்று முர்சியை மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்தக்கோரி பெருமளவானோர் ஆர்ப்பாட்ட ஈடுபட்டுள்ளனர். இந்த இரு நாள் ஆர்ப்பாட்ட வன்முறைகளில் மட்டும் 600இற்கும் மேற்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரு சம்பவங்களும் சர்வதேசத்திற்கு என்ன செய்தியை சொல்கின்றன. எகிப்தியர்களுக்கு இன்றைய தேவை என்னவாக உள்ளது? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, புதன்கிழமைச் சம்பவத்தின்போது இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டனின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியின் புகைப்படவியலாளரும், டுபாயைத் தளமாகக் கொண்டியங்கும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பெண் ஊடகவியலாளரொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோல முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணித் தலைவர் மொஹமட் அல்பல்டஜியின் 17 வயதான மகளும் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். இதேவேளை, வன்முறைகளின் போது படுகாயமடைந்தவரை இராணுவ புல்டோஸர் ஏறிச் செல்வதைத் தடுக்க பெண்ணொருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது தனித்து நின்று பேராடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தினை ஏ.எப்.பி. செய்திச் சேவை வெளியிட்டிருந்தது. அவரது முயற்சியில் வெற்றி பெற்றரா? என்பது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை.

இதுபோன்ற மிக மோசமான பல சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அரங்கேறியிருந்த நிலையில், மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 3இல், இஸ்லாமிய அடிப்படைவாத ஜனாதிபதி முர்சியை, ஆட்சியை விட்டு அகற்றியது, தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கெதிராக நடந்த மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தது.

ஆனால், இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் நடைபெறும் போராட்டம் இராணுவ ஆதரவு சர்வாதிகாரத்தைப் பகிரங்கமாக மீட்கும் முயற்சியாக மாறியுள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.

தலைநகர் கெய்ரோவில் மத்திய எதிர்ப்புத்தளமாக இருந்து வந்த ரபா அல்அடவியா பள்ளிவாசல் கூட தாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டங்களின்போது பள்ளிவாசல்கள் தகர்க்கப்படுவது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இது மக்களின் மத்தியில் வன்முறை உணர்வுகள் அதீதமாக தூண்டப்பட்டு வருவதை காட்டுகிறது.

இதேவேளை, தாம் ஜனநாகய ரீதியான அரசியலை நிலைநாட்டவே விரும்புவதாக எகிப்திய இடைக்கால அரசு கூறி வருகின்றது. ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனமான தாக்குதல்களானது, அக்கட்சியை அரசியலிருந்து முற்றாக நசுக்கி வெளியேற்றுவது போலவே பார்க்கப்படுகின்றது.

அண்மைக்கால அரபுப் புரட்சிகளின் போது பாரிய வெற்றியை பெற்று, நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருந்தது முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி. எகிப்தில் மட்டுமல்லாது ஏனைய முஸ்லீம் நாடுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பேணிவரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தனது நாட்டில் மீண்டும் பலம் வாய்ந்ததாக மாறுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

அடக்குமுறையான ஆட்சி வேண்டாம் என்றே மக்கள் புரட்சிக்கு ஆதரவு வழங்கிய எகிப்திய இராணுவம் இன்று சர்வதிகாரப் போக்கினை கடைப்பிடித்து வருகின்றது.

எகிப்தின் இரு தரப்பு முரண்பாடுகளால் பாதிக்கப்படுவது பொது மக்கள் மட்டுமே. பொது மக்களுக்கான சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு அவர்களை நசுக்குவது எந்த வகையில் நியாயம்?

எகிப்திய நெருக்கடியில் இனிமேலும் காலம் தாழ்த்தாது உடனடி நடவடிக்கையெடுக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் இல்லையெனில், மத்திய நாடுகளுக்கு இதுவொரு ஆபத்தான தருணமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அமெரிக்காவை உரசும் ரஷ்யா?

பனிப்போருக்கு வித்திடப்போகும் ஸ்நோடென் விவகாரம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் சி.ஐ.ஏ.உள்ளிட்ட புலனாய்வுத்துறை அமைப்புகளின் இரகசிய நடவடிக்கைகளை வெளி உலகுக்கு கசியவிட்ட எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யா புகலிடம் வழங்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இரகசியங்களை அழித்து நாசமாக்கி விடுவதற்கு இடமளிக்க முடியாதென சமூக இணையத்தளங்கள் உட்பட முன்னணி இணையச் சேவை நிறுவனங்களின் “சேவர்’களுக்குள் ஊடுருவி இரகசியத் தகவல்களைப் பதிவு செய்யும் சி.ஐ.ஏ.யின் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்பப் பணியாளர் எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளினதும் இணையத்தளங்கள், தொலைபேசி உரையாடல்களுக்குள் ஊடுருவி அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளை வாஷிங்டன் தீவிரமாக கண்காணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு, சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டது.

மறுபுறம், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள அமெரிக்காவானது இணைய உளவு என்பது தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் தவிர்க்க முடியாதென நியாயப்படுத்திக் கொண்டதுடன், அமெரிக்கா முழு உலகிலும் உளவு பார்க்கும் இரகசியத்தை கசியவிட்டு வர்ட் எட் ஸ்நோடெனையும் வலைபோட்டு தேட ஆரம்பித்தது.

அத்துடன் ஸ்நோடெனை பிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, ஹொங்கொங், ஈக்குவடோர் மற்றும் பொலிவியா என பல நாடுகளை ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இராஜதந்திர ரீதியில் அச்சுறுத்தியும் வந்தது. இதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோதப் போக்கு சர்வதேசத்திற்கு அம்பலமாகியது.

இதேநேரம் ரஷ்ய அரசாங்கம், தப்பியோடிய ஒருவருக்கு உதவுகின்றது என்று வொஷிங்டனின் குற்றச்சாட்டுகள் பிதற்றல்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிக்கொண்டார். ஆனால், இன்று ஸ்நோடெனுக்கான புகலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவிற்கும் ஸ்நோடெனுக்குமான கண்ணாம்பூச்சி விளையாட்டில் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டுள்ளது. ஒரு மாதகாலமாக, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள விமான நிலையத்தின் மாற்றுப் பயண வலயத்திற்குள் தங்கியிருந்த ஸ்நோடென் முதற்தடவையாக அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன், தனக்குப் புகலிடம் வழங்கியமைக்காக ரஷ்ய மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஒரு வருடகாலம் தற்காலிகமாக தங்குவதற்கு வியாழக்கிழமை ஸ்நோடெனுக்கு ரஷ்ய அரசு அனுமதிச் சான்றிதழை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மொஸ்கோவிலுள்ள செரிமெடிவோ விமான நிலையத்தை விட்டு தனது சட்டத்தரணி அனாடலி குசெரினாவுடன் சினோடென் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை மொஸ்கோ வழங்கியமையானது கடும் சீற்றம் தரும் விடயமென அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்தமாதம் சென்.பீற்றர்ஸ் பேர்க்கில் நடைபெறவுள்ள 
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒரு நிகழ்ச்சி நிரலாக ரஷ்யா ஜனாதிபதி விளா டிமிர் புட்டினுடனான சந்திப்பொன்றுக்கு ஒபாமா திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நடைபெறவிருந்த சந்திப்பு தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டுமென அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம், ஸ்நோடென் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒபாமாவின் ரஷ்ய பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தின் போது, சிரிய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புட்டினுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் ஒபாமா திட்டமிட்டிருந்தார். இவ்விவகாரத்தால் சிரியா குறித்த பேச்சு வார்த்தையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதேசமயம், முன்னைய காலப்பகுதிகளிலும் அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவு ஒன்றும் மெச்சும் படியாக அமைந்திருக்கவில்லை. 1917இல் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஸ்விக் புரட்சியைத் தொடர்ந்தே இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

எதிர் எதிர்த் துருவங்களாக செயற்பட்டு வந்த இவ்விரு நாடுகளும், இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனியை தோற்கடிக்க கைகோர்த்தன. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இருவேறு துருவங்களாகப் பிரிந்து நின்று பனிப்போரில் ஈடுபட்டிருந்தன.

1962ஆம் ஆண்டு கியூபாவில் சோவியத் யூனியன் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்த போரின் உச்ச கட்டத்திற்கே உலக நாடுகள் சென்றன. 1999இல் விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் லிபியா, சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரசாங்கங்களுக்கெதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. உடனடியாக தான் ஒரு வல்லரசு நாடு என்பதை காண்பித்துக் கொள்ள அந்நாடுகளின் உள்விவகாரங்களுள் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. யுத்தம் நடைபெறும் நாடுகளில் அமைதியைக் கொண்டு வருவது போல செய்து நிலைமையை மோசமடையச் செய்வதும் ஒற்றுமை கொண்ட நாடொன்றினுள் கோள் சொல்லி குழப்புவதுமே அமெரிக்காவின் பொழுது போக்காகும். தற்பொழுது, மேற்குலக விவகாரங்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்குள் அவ்வப்போது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிலொரு பிரதிபலிப்பாகவே, வரலாற்று பாரம்பரியம் கொண்ட பொஸ்டன் மரதனோட்டப் போட்டியில், வெறும் 19,24 வயதுடைய சகோதரர்களால் இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தினால் அமெரிக்கா நிலை குழம்பிப் போய் இருந்தது. 

இதனைவிட இன்னொரு சிறப்பான விடயம் என்னவென்றால், அவ்விரு சகோதரர்களின் பூர்வீகம் ரஷ்யாவாகும். தற்பொழுது அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள் கூட வசிப்பது ரஷ்யாவின் ஒரு பழங்குடியின கிராமத்தில் தான்.

இதேவேளை, தமது கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத்தினை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பதில் ரஷ்யா உறுதியாகவிருக்க, அவரை ஆட்சியிலிருந்து விரட்டுவதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.

தற்போது சி.ஐ.ஏ.யின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஸ்நோடென் தப்பிச் செல்ல ரஷ்யா உதவியுள்ளது. இதன் மூலம், பொஸ்டன் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி தொடர்பான வழக்குகள் கூட சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் ஒற்றாடல் திட்டங்களை தைரியமாக அம்பலப்படுத்திய ஸ்நோடெவனுக்கு, எந்தவொரு அரசாங்கமும் தஞ்சத்திற்கான ஜனநாயக உரிமையை வழங்க தயாராக இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையை பல நாடுகள் கொண்டிருந்ததே இதற்கு காரணமாகும்.

அத்துடன், வல்லரசுடன் ஏன் மோதிக்கொள்வான் எனவும் சிலநாடுகள் ஒதுங்கிக் கொண்டன. இந்நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக வெனிசுலா உட்பட சில நாடுகள் ஸ்நோடெனை பொறுப்பேற்க முன் வந்த போதிலும், அங்கு செல்வதற்கான வழிதான் கிடைத்திருக்கவில்லை. 

இதேவேளை, ஸ்நோடென் ஏதாவதொரு விமானத்தில் இருக்கிறார் என அமெரிக்கா சந்தேகிக்குமானால், அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் வான் வழியில் இடைமறித்து எந்த விமானத்தையும் கீழிறக்குமென அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோவை அழைத்துச் செல்லும் விமானத்தைக்கூட, அமெரிக்கா கீழிறக்கும் என்றுகூறிய கெரி கூறி, ஜனாதிபதி க்குத்தான் விதிவிலக்கு, விமானத்திற்கு அல்ல எனக்குறிப்பிட்டிருந்தார்.

இப்படியானதொரு தருணத்திலே ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை வழங்கியுள்ளது ரஷ்யா. துன்புறுத்தலிலிருந்து தப்பித்து மற்ற நாடுகளில் தஞ்சம் கோரவும் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் உண்டு எனக் கூறும் மனிதஉரிமைகள் பிரகடனத்திற்கு ஏற்றாற் போலவா ரஷ்யா, ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதியை வழங்கியுள்ளது? அல்லது அமெரிக்க அரசுக்கு ஆப்பு வைக்கவா? என்பதைத் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஸ்நோடெனுக்கு தஞ்சம் கொடுக்கும் சாத்தியமுடைய நாடுகளுக்கெதிராக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தல் பிரசாரத்தையே சர்வதேச ரீதியில் நடத்திக் கொண்டிருந்தது.

மக்களுக்கெதிரான தமது சதித்திட்டங்கள் அம்பலமாகி விடுமென்ற அச்சத்தில் வாஷிங்டன் இருக்கின்றது. மாறாக, ஸ்நோடெனின் செயல்களுக்கு அமெரிக்க உட்பட பல நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரவு வழங்கி வருகின்றன.

வொஷிங்கடனுக்கும், மொஸ்கோவிற்குமிடையே எத்தனையோ பனிப் போர்கள் அரங்கேறியுள்ள போதிலும், இரு அரசாங்கங்களும் பேராசை பிடித்த முதலாளித்துவ அதிகாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவையா கும். தத்தமது நாட்டு மக்களிடையே தமது குற்றங்கள் அம்பலப்படுத்துவது குறித்து அச்சத்தில் மறைமுகமாக ஒன்றிணைந்து தான் நிற்கின்றன.

எனவே, தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் கீர்த்திக்கு பாதகம் விளைவிக்கும் ஆவணங்களை வெளியிடப் போவதில்லையென ஸ்நோடென் உறுதியளித்த பின்னரே ரஷ்யா புகலிட அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்க தேசப்பற்றாளர்களின் வீடொன்றில் தான் ஸ்நோடென் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய சட்டத்தரணி குச்செரனா கூறியுள்ளார்.

எதுவாயினும் ஸ்நோடெனுக்கு புகலிட அனுமதி வழங்கப்பட்டமையானது ஸ்நோடெனுக்கா? அமெரிக்காவிற்கா? அல்லது ரஷ்யாவிற்கா? தலையிடியாகப் போகின்றது என்பதை பொறுத்திருதுதான் பார்க்க வேண்டும். இந்த முக்கோண புள்ளிகளில் வெற்றி பெறப் போவது யார்? 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

மீற்றர் வட்டிக்கு பலியாகும் உயிர்கள்


சா.சுமித்திரை

இலங்கையிலே வரையறையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கடன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக் கொடுமையால் இதுவரை 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த வாரம் அதிர்ச்சி தகவலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

வடக்கின் வசந்தம், திவிநெகும,கமநெகும, கிழக்கின் உதயம் என பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற அதேசமயம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மின் கட்டணம் உயர்வு, இயற்கை வளங்களை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை, பட்டம் பெற்றும்வேலை வாய்ப்புகள் எதுவுமில்லை  எனப்பல பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன.

“வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற நிலையிலே எந்தவொரு பொருளையோ அல்லது சேவையையோ பெற பண நோட்டுக்களே அவசியமாகியுள்ளன. எனவே தான் காலிலே சில்லினைக் கட்டிக்கொண்டு பணம், பணம் என நாயாக பேயாக அலைந்து கொண்டிருக்கின்றோம். இருந்தும் போதிய வருமானம் கிடைக்காத நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.

ஆகவே தான் கடன் என்பது தவிர்க்க முடியாத தொன்றாகி விட்டது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் ஒரு முறை கடன் என்ற மாய வலைக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவு தான் செக்கு மாடாகி சுற்றிச் சுற்றி நுரை தள்ளிச் சாக வேண்டியது தான்.

குடாநாட்டில் வரையாறையில்லாத வகையில் நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு பணம் பெறுவோர் தொகை அதிகரித்துச் செல்வதினால் பல்வேறு முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் பொது மக்களும் ,வர்த்தகர்களும் பெரும் பாதிப்படைந்து வருவதுடன் அவமானங்களுக்குள்ளாகி குடும்பத்துடன் தலைமறைவாதல், தற்கொலைக்கு முயற்சித்தல், தற்கொலை செய்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எதற்கும் ஒரு வரையறை , சட்ட திட்ட விதிமுறைகள் உள்ள போதிலும் இந்த மீற்றர் வட்டிக்கு என ஒரு வரையறை இல்லாமல் போயுள்ளது. இதனால், மக்கள் தமது வீடு வாசல்களையும் காணிகளையும், நகைகளையும் ,வாகனங்களையும் வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கும் அவல நிலையொன்று தற்பொழுது உருவெடுத்துள்ளது.

கடன் வாங்கி விட்டு அதனைத் திருப்பிக்கொடுக்கவும் முடியாமல் வட்டி கட்டவும் முடியாமல் தனது குடும்பத்தையே கொலை செய்து விட்டு தற்கொலை செய்த மகனும் கணவன்,பிள்ளைகளுக்கு உணவில் நஞ்சு வைத்து கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட மனைவி என இரு சம்பவங்கள் கடந்த வருடம் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வட்டிக்கு பல முகங்கள் உள்ளன சிலது, கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் குடிக்கும், வேறு சில வகையான வட்டிகள் மிகவும் சீக்கிரத்திலேயே உயிரைக் குடித்துவிடும். நாள் வட்டி, வார வட்டி,  மீற்றர் வட்டி, ரன் வட்டி, மணி நேர வட்டி,  கம்ப்யூட்டர் வட்டி என வட்டிகளின் பட்டியல் நீண்டு கொண்டேபோகும்.
ஆயிரம் ரூபாவினை வாங்கிக் கொண்டு தினமும் நூறுரூபா வட்டி கொடுத்து பின்னர் பத்தாவது நாள் முடிவில் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். பத்தாவது நாள் தாண்டினால் ரொக்கெட்டைப் போலவே வட்டியும் உயரும் இதுதான் ரொக்கெட் வட்டியாகும்.

வார வட்டி என்பது 2 ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை கடன் தருவார்கள். கடன் தொகையில் 15 சதவிகிதத்தை முன் கூட்டியே கழித்தும் கொள்வார்கள். அத்துடன் 10 வாரங்களில் கடன் பெற்றவர் நிலுவையின்றி வாரம் ஒரு முறை  ஆயிரம் ரூபா வீதம் செலுத்த வேண்டும்.

கம்பியூட்டர்  வட்டி எனில் 10 ஆயிரம் கடன் வாங்கினால் எட்டாயிரம் கொடுப்பார்கள் அதனை ஒரு வாரத்துக்குள் பத்தாயிரமாக செலுத்த வேண்டும்.
ஆனால், சாதாரண வர்க்க மக்கள் அதிகம் வாங்குவது மீற்றர் வட்டியாகும். ஒரு இலட்ச ரூபாய் கடன் கேட்டால் 85 ஆயிரம் ரூபா மட்டுமே கடனாக கிடைக்கும் கடன் பெற்றவர் வாரம் 10 ஆயிரம் ரூபா வீதம், 10 வாரங்கள் செலுத்த வேண்டும், தவறினால் வட்டி வீதம் இரட்டிப்பாகி விடும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அதுவும் மணித்தியாலக் கணக்கில் திருப்பித்தர வேண்டுமென்ற அடிப்படையில் தரப்படும் கடன் தான் ரன் வட்டியாகும்.
கடன் பெறுபவர்கள் வீடு, நிலம், தொழில் நிறுவனம் தொடர்பான சொத்துப் பத்திரங்களை ஈடு வைத்து இலட்சக்கணக்கில் கடன் பெறுவார்கள். ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்ட படி மாதம் தவறாமல் வட்டி செலுத்துவதுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மொத்த கடன் தொகையும் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சொத்துக்களை இழக்க நேரிடும் இது தான் மாதவட்டியின் நடைமுறையாகும்.

இப்படி பல வகையான வட்டிகளுக்கு பணத்தினை வாங்கி செலவழித்து விட்டு வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலையேற்படும் போதே எல்லோரும் தடுமாற ஆரம்பிக்கின்றனர்.

குறிப்பாக வடகிழக்கு பகுதி, யுத்தம் தின்ற பிரதேசமாகும். அப்பகுதியில் பெரும்பாலானோர் உயிர்களைத் தவிர அனைத்தையும் இழந்திருந்தனர். இந்நிலையில் அன்றாட வாழ்க்கைச் செலவு, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் அத்தியாவசிய தேவைகள் என பலவற்றுக்கு பணம் தேவையாகவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நிதிநிறுவனங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று  அவர்களுடன் கவர்ச்சியாக பேசி கடனும் வழங்கி வருகின்றன. தங்களுடைய தேவைக்கு பணம் கிடைத்து விட்டது. என்ற மகிழ்ச்சியில் பின் விளைவை பற்றி யோசிக்காது செலவழித்து விடுகின்றனர்.

பின்னர் கொடுத்த கடனுக்கு வட்டியுடன் செலுத்துமாறு கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் நின்று கழுத்தை நெரிக்கும் போதே அதன் பயங்கரம் அறியப்படுகின்றது.

யுத்தம் நிறைவடைந்த கடந்த 4 வருட காலப்பகுதிக்குள் தான் வட,கிழக்கில் அதிகளவான நிதி நிறுவனங்கள் மழைக்கு முளைக்கும் காளான்களை போல் முளைத்தன.அத்துடன் மக்களுக்கு கடன் வழங்கவும் முட்டி மோதிக் கொண்டன.

பலர், இதன் மூலம் கடனை பெற்று தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். இந்நிதி நிறுவனங்கள் ஏழை மக்கள் முதல் கோடீஸ்வரர் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை. பல நிதி நிறுவனங்கள் மக்களுக்கு நுண்கடன் என்ற பெயரில் கூடிய வட்டி வீதத்திற்கு குறிப்பிட்ட தொகைப் பணத்தினை வழங்கி அதனை வாராந்தம் மாதாந்த தவணை அடிப்படையில் வசூலித்து வருகின்றன.

நிதி நிறுவனங்களின் முண்டியடிப்பு வேகத்தில் கல்முனையிலுள்ள ஒரு நிதி நிறுவனம் பிச்சைக்கார பெண்ணுக்கே ஒரு இலட்சம் ரூபாவினை கடனாக வழங்கியுள்ளது. இன்று அந்நிறுவனம் அப்பெண்ணுக்கு பின்னால் அலைந்து திரிகின்றது.

அதேபோல வீடு கட்டும் கடனுக்கான வட்டியை வணிக வங்கிகள் அதிகரித்து வருவதால் அவற்றில் கடன் வாங்கியவர்களில் கணிசமானோர் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாது திணறுகின்றனர். இவர்களை இனங்காணும் மீற்றர் வட்டிக்காரர்கள், வங்கியின் கெடுபிடியிலிருந்து உங்களை பாதுகாக்கின்றோம் என கூறிக்கொண்டு கடன் கொடுக்கின்றனர்.

அப்படிக் கொடுக்கும் பணத்துக்காக இவர்கள் வசூலிக்கும் வட்டியின் வீரியத்தை கடன் பெற்றவர்கள் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகே புரிந்து கொள்வார். எலிக்குப் பயந்து புலியிடம் சிக்கிய கதையை அப்பொழுதுதான் உணர்ந்து கொள்வார்கள்.

இதேவேளை, கடனை கொடுப்போர் வட்டியையும் வசூலித்துக்கொள்ள கூலிக்கு ஆள் வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கிருக்கும் மனைவி, பிள்ளைகளிடம் முரட்டுத்தனமாக பேசி அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் கடன் பெற்றவர் அயலவர்களின் கேலி பேச்சுக்குள்ளாகி அவமானப்படுவதுடன் குடும்பப் பிரச்சினைகளும் ஏற்பட வழி கோலுகின்றன. கடன் பெற்று வாழ்க்கை நடத்திய எத்தனையோ பேர் இன்று தமது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமையாகியுள்ளனர்.

அதேசமயம், ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்குகின்றனர். சிலர் பின்னர் இரு கடனுக்கு வட்டி கட்டுவதிலே அவர்கள் ஆயுட்கால கடனாளியாகி விடுகின்றனர்.

ஒரு வட்டிக்காரரின் குடும்ப தலைமுறைக்கே, கடன் பெற்றவரின் தலைமுறை வட்டி செலுத்தி வரும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
ஏதோவொரு தவிர்க்க முடியாத காரணத்துக்காக கடன் வாங்குவதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் கடன் வாங்கியே தனது வாழ்க்கையை கொண்டு செல்லும் சிலரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் ஆடம்பர விரும்பிகளாக இருப்பர் இத்தகையோரது இறுதி முடிவு தற்கொலையாகவோ அல்லது மனநல பாதிப்பாகவோ மட்டுமே இருக்கும்.

எதுவாயினும், கடன் அன்பை முறிக்கும் என்பது போல எங்களுடைய மகிழ்ச்சியை கூட தொலைத்து விடும். அதனை விட கடனைக் கொடுத்து விட்டு மிக மோசமான வகையில் வட்டிகளை அறவிடுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.




இத்தகையோருக்கெதிராக கடும் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே மீற்றர் வட்டிக்காரர்களின் அடாவடித்தனங்கள் ஓரளவேனும் குறைவடையும் அத்துடன் சுய தொழில் வாய்ப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம் ஓரளவு வறுமை இல்லாத நிலையேற்படும் எனவே சுயதொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க அந்தந்த பகுதி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இதனை விட ஆடம்பர பொருட்கள் மற்றும் வாழ்க்கையின் மோகத்தினை கை விடுவதன் மூலம் கடனில்லாத மகிழ்ச்சியான வாழ்வும் கிடைக்கும்.