புதன், 21 ஆகஸ்ட், 2013

மக்கள் புரட்சியும் இராணுவப் புரட்சியும் எந்தவித மாற்றமும் இல்லாத எகிப்து


சா.சுமித்திரை

சர்வதேசத்தின் நாளாந்தக் கவனத்தை ஈர்த்துள்ள எகிப்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, நீடித்துவரும் உள்நாட்டுக் குழப்பத்தால் அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

குறிப்பாக, இஸ்லாமிய அரசியலின் பிறப்பிடமான எகிப்து, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினராகட்டும் பதவி கவிழ்க்கப்பட்ட (முன்னாள் ஜனாதிபதி) முர்சியின் ஆதரவாளர்களாகட்டும் தாம் செய்வது மட்டுமே சரி என்ற கொள்கையுடன் தத்தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருதரப்பினரும் தாங்கள் செய்வதுதான் சரி மற்றவர் செய்வது பிழை என்ற நோக்கில் செயற்பட்டால் எவ்வாறு நடுநிலையானதொரு தீர்மானத்தினை எட்டமுடியும்?

தமக்கு நீதி வேண்டுமென்றும் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டுமெனக் கோரியும் வீதியில் இறங்கி முர்சியின் ஆதரவாளர்கள் பேராடுவதாலோ அல்லது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூரமான வன்முறைகளை பிரயோகிப்பதாலோ நாடு உருப்படப் போவதில்லை, மாறாக மிக மோசமான நிலைமைக்கே தள்ளப்படும்.

2011 பெப்ரவரியில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரு வருடங்களுக்குள் இன்னொரு ஆட்சிக்கவிழ்ப்பு அங்கு அரங்கேறியுள்ளது.

ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கவிழ்ப்புக்கான போராட்டத்திற்கு தலைமை வகித்தவரே இந்த முகமது முர்சிதான். ஆனால், இஸ்லாமிய வாதியான முர்சி ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள்ளேயே அவரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டு அவர் வீட்டுக்காவலில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டுள்ளார்.

முர்சியின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்று அவருக்கெதிரான போராட்டத்திற்கும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இரத்தம் தோய்ந்த நிலைப்பாட்டினை முர்சி மாற்றிக் கொள்ள வேண்டுமென மக்கள் பொங்கியெழுந்த போது, மக்கள் படை மாபெரும் புரட்சிகரமான இயக்கமாக உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் முர்சிக்கெதிரான இராணுவச் சதிப்புரட்சிக்கு அமெரிக்காவும் ஐரோபிய நாடுகளும் நேரடியாக ஆதரவு காட்டின. எனினும், இராணுவம் முர்சியின் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை வன்முறைகளினூடாக அடக்க நினைப்பது எகிப்தையும், முழு மத்திய கிழக்கையும் மேலும் சீர் குலைத்துவிடச் செய்வதோடு மிகப்பெரும் வெகுஜன போராட்டங்களுக்கு தூண்டிவிட்டுவிடும் ஆபத்தான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, முர்சி ஆதரவு ஆர்ப்பாட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு தரப்பினர் கடந்த புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறைகள் இன்னமும் நிற்கவில்லை. 650இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எனினும், தமது புரட்சிப்போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லையென அறிவித்துள்ள முஸ்லீம் சகோதரத்துவ கட்சி, வெள்ளிக்கிழமை தொழுகையுடன் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளது. 

இதேவேளை முர்சி ஆதரவு முகாம்களை கலைக்க பாதுகாப்பு படையினரை ஏவிவிட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு எகிப்து துணை ஜனாதிபதி முஹமட் அல்பரதி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

புதன்கிழமை நடந்த சம்பவமானது, தீவிர வாதத்தினை தூண்டுபவர்கள் மற்றும் கடும்போக்கு அமைப்புகளுக்கே சாதகமானதாக இருக்கின்றதென தனது இராஜிநாமா கடிதத்தில் முஹமட் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், முஸ்லீம் சகோதரத்துவ கட்சியை வளர்த்துவிட எகிப்திய இராணுவம் உதவுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

1928இலிருந்து, பலம் வாய்ந்ததொன்றாக முஸ்லீம் சகோதரத்துவ கட்சி செயற்பட்டு வருகின்றது. எகிப்தினை மறுசீரமைப்பதற்கு முர்சி தலைமையிலான முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இத்திட்டங்களில் கடும்போக்கு வாதங்களே காணப்படுவதாக கூறி அவற்றினை எகிப்தியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கும் பொது மக்களுக்குமிடையே உருவாகிய மௌனப் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி புரட்சியாக வெடித்தது. இதற்கு இராணுவம் உதவியதுடன் பின்னர் அது, இராணுவப் புரட்சியாக மாற்றமடைந்து ஆட்சி அதிகாரமும் கைமாறியது.

ஆனால், தற்போதைய சிரேஷ்ட இராணவத் தளபதி ஜெனரல் அப்துல் பத்டாத் அல்சிசியும், அவருடைய ஆதரவாளர்களும் முர்சியின் இலக்குகளைக் கொண்டே செயற்படுகின்றனர்.

நாட்டின் இத்தகையதொரு குழப்பமான போக்கு எதிர்கால சந்ததியினரை எங்கு கொண்டு செல்லும் என்பதற்கு தற்போதைக்கு பதில் கிடைக்கப்போவதில்லை.

இந்நிலையில், தலைநகர் கெய்ரோ மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அவசர காலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்த காலகட்டத்தில் எகிப்தில் ஏற்பட்ட படுமோசமான இந்த இரத்தக்களரிச் சம்பவத்தால் தலைநகர் கெய்ரோ மற்றும் ஏனைய மாகாணங்களிலும் தினமும் இரவுவேளைகளில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது ஒழுங்குக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாதுகாப்பை மேற்கொள்ள பொலிஸாருக்கு இராணுவம் உதவும். மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து வரையறுக்கப்படும், செய்திகள் மற்றும் ஊடகங்கள் கண்காணிக்கப்படும்.

ஏற்கனவே, இரு தரப்பு முரண்பாடுகளால் நிலை தடுமாறியுள்ள எகிப்தில், ஊரடங்குச் சட்டம் என்ற பெயரில் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் பாரிய வன்முறைகளுக்கே வழி கோலுமென அஞ்சப்படுகிறது.

அத்துடன், வன்முறை ஆர்ப்பாட்டங்களின்போது ஊடகங்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டாலோ அல்லது தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டாலோ அதிகாரப் போக்காளர்களின் கை மேலோங்கும். பொது மக்களின் உரிமைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும். எனவே, இந்த ஊரடங்குச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடக வரையறைகளை நீக்குவதன் மூலம் எகிப்திய நெருக்கடி சர்வதேசக் கண்காணிப்புக்குள்ளாகும். சர்வதசே சமூகத்தின் தலையீட்டால் ஓரளவேனும் எகிப்திய நெருக்கடிக்கு தீர்வு எட்ட முடியும்.

இதேவேளை, முர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டுமென நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இன்று முர்சியை மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்தக்கோரி பெருமளவானோர் ஆர்ப்பாட்ட ஈடுபட்டுள்ளனர். இந்த இரு நாள் ஆர்ப்பாட்ட வன்முறைகளில் மட்டும் 600இற்கும் மேற்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரு சம்பவங்களும் சர்வதேசத்திற்கு என்ன செய்தியை சொல்கின்றன. எகிப்தியர்களுக்கு இன்றைய தேவை என்னவாக உள்ளது? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, புதன்கிழமைச் சம்பவத்தின்போது இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டனின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியின் புகைப்படவியலாளரும், டுபாயைத் தளமாகக் கொண்டியங்கும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பெண் ஊடகவியலாளரொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோல முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணித் தலைவர் மொஹமட் அல்பல்டஜியின் 17 வயதான மகளும் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். இதேவேளை, வன்முறைகளின் போது படுகாயமடைந்தவரை இராணுவ புல்டோஸர் ஏறிச் செல்வதைத் தடுக்க பெண்ணொருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது தனித்து நின்று பேராடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தினை ஏ.எப்.பி. செய்திச் சேவை வெளியிட்டிருந்தது. அவரது முயற்சியில் வெற்றி பெற்றரா? என்பது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை.

இதுபோன்ற மிக மோசமான பல சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அரங்கேறியிருந்த நிலையில், மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 3இல், இஸ்லாமிய அடிப்படைவாத ஜனாதிபதி முர்சியை, ஆட்சியை விட்டு அகற்றியது, தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கெதிராக நடந்த மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தது.

ஆனால், இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் நடைபெறும் போராட்டம் இராணுவ ஆதரவு சர்வாதிகாரத்தைப் பகிரங்கமாக மீட்கும் முயற்சியாக மாறியுள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.

தலைநகர் கெய்ரோவில் மத்திய எதிர்ப்புத்தளமாக இருந்து வந்த ரபா அல்அடவியா பள்ளிவாசல் கூட தாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டங்களின்போது பள்ளிவாசல்கள் தகர்க்கப்படுவது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இது மக்களின் மத்தியில் வன்முறை உணர்வுகள் அதீதமாக தூண்டப்பட்டு வருவதை காட்டுகிறது.

இதேவேளை, தாம் ஜனநாகய ரீதியான அரசியலை நிலைநாட்டவே விரும்புவதாக எகிப்திய இடைக்கால அரசு கூறி வருகின்றது. ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனமான தாக்குதல்களானது, அக்கட்சியை அரசியலிருந்து முற்றாக நசுக்கி வெளியேற்றுவது போலவே பார்க்கப்படுகின்றது.

அண்மைக்கால அரபுப் புரட்சிகளின் போது பாரிய வெற்றியை பெற்று, நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருந்தது முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி. எகிப்தில் மட்டுமல்லாது ஏனைய முஸ்லீம் நாடுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பேணிவரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தனது நாட்டில் மீண்டும் பலம் வாய்ந்ததாக மாறுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

அடக்குமுறையான ஆட்சி வேண்டாம் என்றே மக்கள் புரட்சிக்கு ஆதரவு வழங்கிய எகிப்திய இராணுவம் இன்று சர்வதிகாரப் போக்கினை கடைப்பிடித்து வருகின்றது.

எகிப்தின் இரு தரப்பு முரண்பாடுகளால் பாதிக்கப்படுவது பொது மக்கள் மட்டுமே. பொது மக்களுக்கான சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு அவர்களை நசுக்குவது எந்த வகையில் நியாயம்?

எகிப்திய நெருக்கடியில் இனிமேலும் காலம் தாழ்த்தாது உடனடி நடவடிக்கையெடுக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் இல்லையெனில், மத்திய நாடுகளுக்கு இதுவொரு ஆபத்தான தருணமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக