வியாழன், 1 ஆகஸ்ட், 2013

மீற்றர் வட்டிக்கு பலியாகும் உயிர்கள்


சா.சுமித்திரை

இலங்கையிலே வரையறையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கடன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக் கொடுமையால் இதுவரை 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த வாரம் அதிர்ச்சி தகவலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

வடக்கின் வசந்தம், திவிநெகும,கமநெகும, கிழக்கின் உதயம் என பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற அதேசமயம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மின் கட்டணம் உயர்வு, இயற்கை வளங்களை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை, பட்டம் பெற்றும்வேலை வாய்ப்புகள் எதுவுமில்லை  எனப்பல பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன.

“வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற நிலையிலே எந்தவொரு பொருளையோ அல்லது சேவையையோ பெற பண நோட்டுக்களே அவசியமாகியுள்ளன. எனவே தான் காலிலே சில்லினைக் கட்டிக்கொண்டு பணம், பணம் என நாயாக பேயாக அலைந்து கொண்டிருக்கின்றோம். இருந்தும் போதிய வருமானம் கிடைக்காத நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.

ஆகவே தான் கடன் என்பது தவிர்க்க முடியாத தொன்றாகி விட்டது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் ஒரு முறை கடன் என்ற மாய வலைக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவு தான் செக்கு மாடாகி சுற்றிச் சுற்றி நுரை தள்ளிச் சாக வேண்டியது தான்.

குடாநாட்டில் வரையாறையில்லாத வகையில் நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு பணம் பெறுவோர் தொகை அதிகரித்துச் செல்வதினால் பல்வேறு முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் பொது மக்களும் ,வர்த்தகர்களும் பெரும் பாதிப்படைந்து வருவதுடன் அவமானங்களுக்குள்ளாகி குடும்பத்துடன் தலைமறைவாதல், தற்கொலைக்கு முயற்சித்தல், தற்கொலை செய்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எதற்கும் ஒரு வரையறை , சட்ட திட்ட விதிமுறைகள் உள்ள போதிலும் இந்த மீற்றர் வட்டிக்கு என ஒரு வரையறை இல்லாமல் போயுள்ளது. இதனால், மக்கள் தமது வீடு வாசல்களையும் காணிகளையும், நகைகளையும் ,வாகனங்களையும் வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கும் அவல நிலையொன்று தற்பொழுது உருவெடுத்துள்ளது.

கடன் வாங்கி விட்டு அதனைத் திருப்பிக்கொடுக்கவும் முடியாமல் வட்டி கட்டவும் முடியாமல் தனது குடும்பத்தையே கொலை செய்து விட்டு தற்கொலை செய்த மகனும் கணவன்,பிள்ளைகளுக்கு உணவில் நஞ்சு வைத்து கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட மனைவி என இரு சம்பவங்கள் கடந்த வருடம் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வட்டிக்கு பல முகங்கள் உள்ளன சிலது, கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் குடிக்கும், வேறு சில வகையான வட்டிகள் மிகவும் சீக்கிரத்திலேயே உயிரைக் குடித்துவிடும். நாள் வட்டி, வார வட்டி,  மீற்றர் வட்டி, ரன் வட்டி, மணி நேர வட்டி,  கம்ப்யூட்டர் வட்டி என வட்டிகளின் பட்டியல் நீண்டு கொண்டேபோகும்.
ஆயிரம் ரூபாவினை வாங்கிக் கொண்டு தினமும் நூறுரூபா வட்டி கொடுத்து பின்னர் பத்தாவது நாள் முடிவில் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். பத்தாவது நாள் தாண்டினால் ரொக்கெட்டைப் போலவே வட்டியும் உயரும் இதுதான் ரொக்கெட் வட்டியாகும்.

வார வட்டி என்பது 2 ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை கடன் தருவார்கள். கடன் தொகையில் 15 சதவிகிதத்தை முன் கூட்டியே கழித்தும் கொள்வார்கள். அத்துடன் 10 வாரங்களில் கடன் பெற்றவர் நிலுவையின்றி வாரம் ஒரு முறை  ஆயிரம் ரூபா வீதம் செலுத்த வேண்டும்.

கம்பியூட்டர்  வட்டி எனில் 10 ஆயிரம் கடன் வாங்கினால் எட்டாயிரம் கொடுப்பார்கள் அதனை ஒரு வாரத்துக்குள் பத்தாயிரமாக செலுத்த வேண்டும்.
ஆனால், சாதாரண வர்க்க மக்கள் அதிகம் வாங்குவது மீற்றர் வட்டியாகும். ஒரு இலட்ச ரூபாய் கடன் கேட்டால் 85 ஆயிரம் ரூபா மட்டுமே கடனாக கிடைக்கும் கடன் பெற்றவர் வாரம் 10 ஆயிரம் ரூபா வீதம், 10 வாரங்கள் செலுத்த வேண்டும், தவறினால் வட்டி வீதம் இரட்டிப்பாகி விடும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அதுவும் மணித்தியாலக் கணக்கில் திருப்பித்தர வேண்டுமென்ற அடிப்படையில் தரப்படும் கடன் தான் ரன் வட்டியாகும்.
கடன் பெறுபவர்கள் வீடு, நிலம், தொழில் நிறுவனம் தொடர்பான சொத்துப் பத்திரங்களை ஈடு வைத்து இலட்சக்கணக்கில் கடன் பெறுவார்கள். ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்ட படி மாதம் தவறாமல் வட்டி செலுத்துவதுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மொத்த கடன் தொகையும் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சொத்துக்களை இழக்க நேரிடும் இது தான் மாதவட்டியின் நடைமுறையாகும்.

இப்படி பல வகையான வட்டிகளுக்கு பணத்தினை வாங்கி செலவழித்து விட்டு வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலையேற்படும் போதே எல்லோரும் தடுமாற ஆரம்பிக்கின்றனர்.

குறிப்பாக வடகிழக்கு பகுதி, யுத்தம் தின்ற பிரதேசமாகும். அப்பகுதியில் பெரும்பாலானோர் உயிர்களைத் தவிர அனைத்தையும் இழந்திருந்தனர். இந்நிலையில் அன்றாட வாழ்க்கைச் செலவு, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் அத்தியாவசிய தேவைகள் என பலவற்றுக்கு பணம் தேவையாகவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நிதிநிறுவனங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்று  அவர்களுடன் கவர்ச்சியாக பேசி கடனும் வழங்கி வருகின்றன. தங்களுடைய தேவைக்கு பணம் கிடைத்து விட்டது. என்ற மகிழ்ச்சியில் பின் விளைவை பற்றி யோசிக்காது செலவழித்து விடுகின்றனர்.

பின்னர் கொடுத்த கடனுக்கு வட்டியுடன் செலுத்துமாறு கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் நின்று கழுத்தை நெரிக்கும் போதே அதன் பயங்கரம் அறியப்படுகின்றது.

யுத்தம் நிறைவடைந்த கடந்த 4 வருட காலப்பகுதிக்குள் தான் வட,கிழக்கில் அதிகளவான நிதி நிறுவனங்கள் மழைக்கு முளைக்கும் காளான்களை போல் முளைத்தன.அத்துடன் மக்களுக்கு கடன் வழங்கவும் முட்டி மோதிக் கொண்டன.

பலர், இதன் மூலம் கடனை பெற்று தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். இந்நிதி நிறுவனங்கள் ஏழை மக்கள் முதல் கோடீஸ்வரர் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை. பல நிதி நிறுவனங்கள் மக்களுக்கு நுண்கடன் என்ற பெயரில் கூடிய வட்டி வீதத்திற்கு குறிப்பிட்ட தொகைப் பணத்தினை வழங்கி அதனை வாராந்தம் மாதாந்த தவணை அடிப்படையில் வசூலித்து வருகின்றன.

நிதி நிறுவனங்களின் முண்டியடிப்பு வேகத்தில் கல்முனையிலுள்ள ஒரு நிதி நிறுவனம் பிச்சைக்கார பெண்ணுக்கே ஒரு இலட்சம் ரூபாவினை கடனாக வழங்கியுள்ளது. இன்று அந்நிறுவனம் அப்பெண்ணுக்கு பின்னால் அலைந்து திரிகின்றது.

அதேபோல வீடு கட்டும் கடனுக்கான வட்டியை வணிக வங்கிகள் அதிகரித்து வருவதால் அவற்றில் கடன் வாங்கியவர்களில் கணிசமானோர் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாது திணறுகின்றனர். இவர்களை இனங்காணும் மீற்றர் வட்டிக்காரர்கள், வங்கியின் கெடுபிடியிலிருந்து உங்களை பாதுகாக்கின்றோம் என கூறிக்கொண்டு கடன் கொடுக்கின்றனர்.

அப்படிக் கொடுக்கும் பணத்துக்காக இவர்கள் வசூலிக்கும் வட்டியின் வீரியத்தை கடன் பெற்றவர்கள் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகே புரிந்து கொள்வார். எலிக்குப் பயந்து புலியிடம் சிக்கிய கதையை அப்பொழுதுதான் உணர்ந்து கொள்வார்கள்.

இதேவேளை, கடனை கொடுப்போர் வட்டியையும் வசூலித்துக்கொள்ள கூலிக்கு ஆள் வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கிருக்கும் மனைவி, பிள்ளைகளிடம் முரட்டுத்தனமாக பேசி அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் கடன் பெற்றவர் அயலவர்களின் கேலி பேச்சுக்குள்ளாகி அவமானப்படுவதுடன் குடும்பப் பிரச்சினைகளும் ஏற்பட வழி கோலுகின்றன. கடன் பெற்று வாழ்க்கை நடத்திய எத்தனையோ பேர் இன்று தமது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமையாகியுள்ளனர்.

அதேசமயம், ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்குகின்றனர். சிலர் பின்னர் இரு கடனுக்கு வட்டி கட்டுவதிலே அவர்கள் ஆயுட்கால கடனாளியாகி விடுகின்றனர்.

ஒரு வட்டிக்காரரின் குடும்ப தலைமுறைக்கே, கடன் பெற்றவரின் தலைமுறை வட்டி செலுத்தி வரும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
ஏதோவொரு தவிர்க்க முடியாத காரணத்துக்காக கடன் வாங்குவதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் கடன் வாங்கியே தனது வாழ்க்கையை கொண்டு செல்லும் சிலரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் ஆடம்பர விரும்பிகளாக இருப்பர் இத்தகையோரது இறுதி முடிவு தற்கொலையாகவோ அல்லது மனநல பாதிப்பாகவோ மட்டுமே இருக்கும்.

எதுவாயினும், கடன் அன்பை முறிக்கும் என்பது போல எங்களுடைய மகிழ்ச்சியை கூட தொலைத்து விடும். அதனை விட கடனைக் கொடுத்து விட்டு மிக மோசமான வகையில் வட்டிகளை அறவிடுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.




இத்தகையோருக்கெதிராக கடும் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே மீற்றர் வட்டிக்காரர்களின் அடாவடித்தனங்கள் ஓரளவேனும் குறைவடையும் அத்துடன் சுய தொழில் வாய்ப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம் ஓரளவு வறுமை இல்லாத நிலையேற்படும் எனவே சுயதொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க அந்தந்த பகுதி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இதனை விட ஆடம்பர பொருட்கள் மற்றும் வாழ்க்கையின் மோகத்தினை கை விடுவதன் மூலம் கடனில்லாத மகிழ்ச்சியான வாழ்வும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக