புதன், 31 ஜூலை, 2013

இலங்கையை ஆட்டுவிக்க போகும் கசினோக்கள்?

சா.சுமித்திரை


இலங்கை மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பெரும் தலையிடியாகவுள்ள சூதாட்டம் சட்டவிரோதமான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.  ஆயினும் சில நாடுகள் சட்ட மூலங்களை பயன்படுத்தி அதன் கட்டுப்பாட்டின் கீழ் கசினோ நிலையங்களை அமைத்து மறைமுகமாக சூதாட்டத்தினை பாதுகாத்து வருகின்றன.




 இந்நிலையில் தலைநகர் கொழும்பிலுள்ள டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் 36 மாடிகளைக் கொண்ட கசினோ சூதாட்ட மையமொன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 350 மில்லியன் டொலர் முதலீட்டில் க்ரவுண் கலம்போ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்த சூதாட்ட மாளிகையில் நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பார்க்கர் இலங்கையில் கசினோ வர்த்தகத்தை ஆரம்பிக்கவுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை பணத்தை முதலீடு செய்யவுள்ளதாகவும் தலைநகரிலுள்ள பிரதான ஹோட்டல் உரிமையாளர்களையும் சில அமைச்சர்களையும் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருந்தது.

 இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கிலேயே இந்த முதலீட்டைச் செய்யவுள்ளதாக பிரபல கசினோ மன்னர் பார்க்கர் கூறியுள்ளதாகவும் ராய்ட்டர் கூறியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சூதாட்ட பந்தய சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சூதாட்டம் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது இதன் நன்மைகள் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டத்தின் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் சூதாட்டம் மற்றும் பந்தய நிலையங்களை ஒரு இடத்திற்கு கொண்டு வர முடியுமெனவும் மதத்தலங்கள்  உட்பட பொது இடங்களுக்கு அண்மையில் அவற்றின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் கூறியிருந்தனர்.


 ஆயினும் தற்போது லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனம், அரச அலுவலங்கள் மற்றும் மதத்தலங்கள் உள்ள பகுதியிலே கசினோ நிலையம் கட்டப்படவுள்ளமையை சட்ட மூலம் நிறைவேற்றியோருக்கு தெரியாதுள்ளது வேடிக்கையான விடயமாகும்.

 சூதாட்டம் இன்றோ அல்லது நேற்றோ உருவானதொன்றல்ல. மிக மிக புராதன காலங்களிலேயே சூதாட்டத்தினால் ஏற்பட்ட பாரிய சம்பவங்களை வரலாறு சான்று பகிர்கின்றன. பணத்தையோ அல்லது பெறுதியான பொருட்களையோ அல்லது நம்பி வந்த உறவுகளையோ வைத்து ஆடுகின்ற மோசமான விளைவுகளைதத் தரக்கூடிய ஒரு விளையாட்டாகவே சூதாட்டம் உள்ளது. பணயமாக வைக்கப்படும் பொருளிலும் கூடிய பெறுமதியை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே  சூதாட்டம் ஆடப்படுகிறது.

 அத்துடன் சூதாட்டத்தின் முடிவை குறுகிய நேரத்திலே பெற்றுக் கொள்ள முடியும். அதாவது ஆண்டியானவன்  சிலவேளைகளில் கோடிஸ்வரனாவான். பணக்காரன் ஒரு சில நிமிடங்களிலே பிச்சைக் காரனாகவும் போவான்.
 சூதாட்டத்தின் பாதிப்புகளை அனைத்து மதங்களுமே போதித்துள்ளன.
மகாபாரதம், நளவெண்பா போன்றவற்றில் சூதாட்டம்  தொடர்பான விழிப்புணர்வுகள்  நன்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. மகாபாரதத்திலே துரியோதனனுடன்  சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள் பொருள் பண்டங்களையும், ஆட்சியையும் இறுதியில் நாட்டினையும் இழந்தனர். மனைவி திரௌபதியை வைத்தும் ஆடினர். இறுதியிலே கட்டிய மனைவியைக் கூட காப்பாற்றத் திறனற்றவர்களாக அவர்கள் வெளியேறினர்.
 அதேபோல திருவள்ளுவர் கூட திருக்குறளில் சூதாட்டங்களால் ஏற்படும்  பிரதி கூலங்கள் தொடர்பாக “சூது” என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். எனவேதான் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பல நாடுகளில் சூதாட்டம்  தடை செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் முற்றாகத் தடை  விதித்துள்ளதுடன் அத்தகையோருக்கு எதிராக மிகக் கடுமையான  சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன.

 நல்லொழுக்கங்களை போதிக்கின்ற பல அற நூல்களிலே சூதாட்டம் ஒரு தீய பழக்கமாக சொல்லப்படுகின்றது. அத்துடன் இன்றைய காலத்திலே எத்தனையோ பழைமையான  விடயங்கள் மறைந்து கொண்டு போகின்ற போதிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சூதாட்ட பந்தய விளையாட்டு மட்டும் மறைந்து போகவில்லை. இந்த ஆட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பவர்களாக அரசின் பின்னணியிலுள்ள பணம் படைத்தவர்களே  உள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், தாயம், கோழிச் சண்டை என சூதாட்டத்ததில் பல வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இலங்கையிலே அரச அனுமதியுடனும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் தான் அதிர்ஷ்ட லாபச் சீட்டு, குதிரைப் பந்தயம் என்பன இடம்பெற்று வருகின்றன. எனவே தான்  தலைநகர் உட்பட நகர்ப்பகுதிகளில் காளான்களைப் போல ஆங்காங்கே நியோன் விளக்குகளின் கீழ் பகிரங்கமாக சூதாட்டங்கள் ஆடப்படுகின்றன.
 கடந்த வருடம் நாடு முழுவதிலும் சுமார் 810 கசினோ சூதாட்ட மையங்கள் இயங்கி வருவதாக பிரதிநிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன கூறியிருந்தார்.

இவை மாகாண சபை சட்டங்களின் கீழ்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சூதாட்டங்களுக்காக தனியான சட்டங்களை அமுல்படுத்தும் திட்டம் கிடையாதெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 2010 ஆம் ஆண்டில் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து 245 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் இந்த வருடம்  முதல் (2012) கசினோ சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்படுமெனவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் சூதாட்டம் மற்றும் பந்தயத்துக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனையடுத்து நாட்டில் பல்வேறு தரப்பட்டவர்களால் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்களது  எதிர்ப்புக் கருத்துகளோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ எந்தகளவுக்கு கசினோ மையங்கள் மீது தாக்கம் செலுத்தும் என்று கூறமுடியாதுள்ளது.

 பந்தய சூதாட்ட வரி விதிப்பனவுத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 100 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மகிந்த சிந்தனையினூடாக நாட்டை தர்மதீவாக மாற்றுவதாக கூறிக் கொண்டு  கசினோ தீவாக அரசு மாற்றுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜீத் பெரேரா தெரிவித்திருந்தார்.
 இதேவேளை கலாசாரம் மரபு என்பவற்றை சீர்குலைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் கசினோ மையங்களை எதிர்பார்ப்பதில்லை. எமது நாட்டின் மரபுகளையும், கலாசாரத்தையும் ஆயுர்வேத வைத்திய முறையையும் பின்பற்ற விரும்பியே  சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இந்த கசினோ  நிலையம் அமைக்கப்படுமானால் மதுபான விற்பனையும், விபசார நடவடிக்கைகளும் அதிகரிக்கும் எனவும் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

 அதேபோல ஜனநாயக உரிமை மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கசினோ சூதாட்ட முதலாளிகளுக்கு வழங்கப்படுவதாக காலணித்துவத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வண. தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

 கசினோ சூதாட்ட நிலையங்களில் ஆட்சி கவிழ்ப்பு இரகசிய சூழ்ச்சிகள், சதித் திட்டங்கள் போன்றன கலந்துரையாடப்படுகின்றன. 1990 களில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர்,கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு கசினோ மையங்களே காரணமாக அமைந்திருந்தமையை எவரும் மறந்து விட முடியாது.

 எமது நாட்டிலும் ஆங்காங்கே நடைபெறும் சூதாட்டங்களால் குடும்ப, சமூக பிரச்சினைகளுக்கும் வித்திட்டுள்ளன. மன்னார்  தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய கரிசல் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக சூதாட்டங்கள் இடம்பெறுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இவற்றினால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு குடும்பப் பெண்கள் முகம் கொடுக்க மறுபுறம் கணவன்மார் தங்க நகைகள், வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள் என ஒன்றையும் விடாது அனைத்தையும் வைத்து சூதாட்டத்தில்  ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு இலட்சம்  ரூபா திரட்டி பெரு மூச்சு விடும் இவர்கள் மறுநாள் அனைத்தையும் தொலைத்து விட்டு வருகின்றனர்.

 இத்தகையோரது பொறுப்பற்ற தன்மையை நம்பி எவ்வாறு குடும்பத்தவர்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியும்? கசினோ வலயங்களை ஊக்குவிக்கும் போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.

அதேபோல கடந்த வருடம் மங்காத்தா, ஆடுகளம் போன்ற படங்கள் அதிக வசூலை தேடித் தந்திருந்தன.  இவை சூதாட்டங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை சூதாட்டம்  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தாது அவற்றினை ஊக்குவிப்பது போலவே படமாக்கப்பட்டிருந்தன. சமூகத்திற்கு நல்ல செய்திகளைத் தரும் திரைப்படங்களே காலத்துக்கும்  நிலைத்து நிற்கக்கூடியவை  என்பதை திரைப்பட இயக்குனர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

 இதேவேளை உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும். இது போன்ற சூதாட்டங்களை ஊக்குவிக்கும் கசினோ மையங்கள் மனித நேயமற்ற தொன்றாகவே கருத முடியும்.

 அதேபோல தாயம் போடுதல் என்பது உண்மையிலே தாயம் ஆடுபவர்களின் வாழ்க்கையைத் தடுமாறச் செய்கின்றது. எனவேதான் தாயக் கட்டைகளை மனித தலைக்கு ஒப்பாக குறிப்பிடுவர்.

 மேலைத்தேய நாடுகளில் சூதாட்டங்களால் பாரியளவில் பாதிப்புகள் என்று சொல்ல முடியாத போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. எனவேதான் இந்தியாவில் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டம் ஆடுபவர்களது கண் நரம்புகளிலும்,மூளை நரம்புகளிலும் சில இரசாயனப் பொருட்கள் சுரப்பதினால் குறைபாடுகள் ஏற்பட்டு ஆரோக்கியத்தை கெடுக்கின்றதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆரோக்கிய ரீதியிலும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பான தொன்றாகவே  சூதாட்டம் உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டவர்களுக்காகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளுக்காகவோ கசினோ மையங்களை  அமைப்பதை விடுத்து அந்நிதியை பொருளாதார அபிவிருத்தியில் முதலிட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்

 இந் நடவடிக்கைக்கு பொது சமூக அமைப்புகள் உதவ வேண்டும்.
சாதாரண மக்களை சூதாட்டங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் ஏதோவொரு குறைபாடு உள்ளது போலவே தோன்றுகின்றது. இச்சட்டமூலம் சூதாட்டங்களை பாதுகாப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அக்குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையேல் இலங்கை சூதாட்ட தீவாக மாறுவதுடன், அதில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அதற்காக அடகு வைக்கப்படுவோம் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக