செவ்வாய், 22 மார்ச், 2011

எமது கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டியது


யுத்தத்திற்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் மீன் பிடித்துறை தன்னிறைவு கண்டிருந்தது. திரைகடல் ஓடி திரவியம் தேடிய பலர் இம்மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளான முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளிலும் மீன் பிடித்துறை சிறப்புற்று விளங்கியது. இம்மாகாணத்தின் கடலுணவுத் தேவையை நிறைவு செய்ததுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடல் உணவு வகைகளை ஏற்றுமதி செய்யுமளவுக்கு மீன்பிடித்துறையில் கைதேர்ந்தவர்களாக இம்மாகாண மீனவர்கள் விளங்கினர்.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் இவர்கள் பயன்படுத்திய மீன்பிடி முறைமை நாட்டின் ஏனைய பகுதி மீனவர்களாலும் பின்பற்றப்பட்டன. இவர்கள் பாட்டன், பூட்டன் காலத்து மீன்பிடி நுட்பங்களுடன் நவீன மீன் பிடிச் சாதனங்களைக் கையாள்வதிலும் சிறந்து விளங்கினர். அதே போல் தமது கடல் வளத்தினைப் பாதுகாக்கக் கூடிய மீன்பிடி முறைகளைக் கொண்டு மீன் பிடித்தலிலும் அவர்கள் அக்கறையுடன் செயற்பட்டனர்.
இந்த நிலை கடந்த கால யுத்தத்தின் பொழுது மாற்றமடைந்தது. கடல் வலயத் தடைச்சட்டங்களினால் இம்மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்ததுடன் ஏ-9 பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டதால் கடல் உணவு வகைகளுக்கான சந்தை வாய்ப்பினை பெறுவதிலும் இவர்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக நொந்து போயிருக்கும் மீனவர்களால் இந்திய மீனவர்களின் அதி நவீன மீன்பிடிக் கலங்களுடன் போட்டி போட்டு மீன் பிடிக்க முடியாதுள்ளது.
யுத்தத்தின் பின்பு மீள்குடியமர்த்தப்பட்ட இம்மீனவர்கள் தமக்குக் கிடைத்த வாழ்வாதார உதவிகளையும் வங்கிக் கடன்களையும் கொண்டு சிறியளவான மீன்பிடிச் சாதனங்களின் உதவியுடன் தமது தொழிலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இவர்களின் இந்த சிறியரக கடற்றொழில் உபகரணங்கள் இந்திய மீன்பிடிப் படகுகளால் தினமும் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளிடம் முறையிடுகின்றனர். ஆனால் எந்த ஒரு பரிகாரங்களையும் இதுவரை அதிகாரிகள் இந்த மீனவர்களுக்கு செய்து கொடுக்கவில்லை.
தமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அண்ணிய தேசத்தவர் தமது கடற்பரப்பினுள் அத்துமீறி தமது கடல் வளத்தினையும் தமது சொத்துக்களையும் அழிப்பதாகவும் இந்த நிலைமை யுத்த காலத்தில் இருந்ததை விடவும் மிகவும் அபாயமாக உள்ளதாகவும் இம்மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் மட்டத்திலான பல சந்திப்புக்களும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் மட்டத்திலான சந்திப்புக்களும் நடைபெறுகின்றன. யாழ் குடாநாட்டையும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற ஏனைய பகுதிகளையும் பொறுத்தவரையில் யுத்தத்தினால் முழுமையான சொத்தழிவுகளைச் சந்தித்த பல மீனவர்கள் வாழ்கின்ற பகுதிகளாகக் காணப்படுகின்றன.
இவர்கள் யுத்தத்தின் போழுது இடம்பெயர்ந்து தற்பொழுது சொந்த இடங்களில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீண்ட கால நோக்கில் நமது பொருளாதார மீள் எழுச்சிக்குரிய உரிய செயற்திட்டங்களையும் முன்வைக்குமாறு கோரியுள்ளனர். தொண்டு நிறுவனங்களினூடாகவும் அரச நிவாரணங்கள், மானியங்கள் ஊடாகவும் தமது எதிர்கால வாழ்வு வளம் பெற உதவுமாறும் தமக்கு வட்டி இல்லாத இலகு வட்டி அடிப்படையில் கடன்களைத் தருமாறும் கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாகவே தெரிகின்றன.
சீரும் சிறப்பும் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வடபுல மீனவர் இன்றி அந்நிய நாட்டு மீனவர் தமது கடல் வளங்களைச் சுரண்டிச் செல்ல பார்த்துக கொண்டு கை கட்டி மெளனிகளாக நிற்க வேண்டிய வர்களாகவுள்ளனர். அதிநவீன மீன்பிடி முறைகளை பயன்படுத்தி எமது மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் இந்திய மீனவர்களுடன் போட்டி போட்டு ஆழ் கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் என்பது சில மீனவப் பிரதிநிதிகளின் கருத்தாகவுள்ளது.
குடா நாட்டுச் சந்தைகளில் மீன், கணவாய், இறால், நண்டு போன்ற கடலுணவு வகைகளின் விலைகளினை கேட்டால் தலை சுற்றுமளவுக்கு இருக்கிறது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டுமாயின் யுத்தப் பாதிப்பிக்களை எதிர்கொண்ட மீனவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட அரசாங்கமும் அரச சார்பற்ற அமைப்புகளும் உதவ வேண்டும் வறிய மீனவர்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட வேண்டிய வாகளாக உள்ளனர்.
எனவே யுத்தத்தின் பின்னரான பொருளாதார அபிவிருத்திக்கு இந்த வட புல மீனவர் சமூகத்தின் முழுமையான வினைத்திறனை ஒத்துழைப்பினைப் பெற வேண்டுமா யின் இவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் செய்து கொடுக்கப் பட்டு இவர்களுடைய தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இயல் பான கடற்றொழிலுக்கு ஏற்ற வழி வகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாக இந்திய தென்னிந்திய மீனவர்கள் அழிக்க முன்னர் எமது கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இயற்கை அழிவை தடுக்க மனித சக்தி ஒன்றுபடல் அவசியம்


இயற்கை அழிவு அதை சார்ந்த மக்கள், சுற்றுச் சூழல் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மையுடைய அபாயங்களை அல்லது அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகும். அழிவு சம்பவம், துன்பங்கள் அனைத்தும் மனிதர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அர்த்தமுடையதாகின்றது.

மனிதன் சுயநலம் போட்டி, பொறாமை காரணமாக இயற்கை அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று, ஒலி போன்றவற்றை மாசடையச் செய்கின்றான். அதை இயற்கை சமனிலைக்கு மாறான வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாற்றுகின்றான்.
இதனால் அதிகரிக்கும் சனத்தொகை, சூழல் மாசடைதல், இயற்கை சமனிலை குழம்புதல் போன்ற தொடர்ச்சியான மாற்றங்களால் இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக உருவாகின்றன.
இயற்கை அழிவுகள் அதிகம் இடம்பெறக் காரணம் மனிதனின் நடத்தை பழக்கவழக்கங்களின் மாற்றங்களாகும். கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ தமது திமேயஸ் மற்றும் கிரேட்டிஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் லிபியா மற்றும் துருக்கியில் பெரும் பகுதிகளை விட அட்லாண்டிக் தீவுகளில் முதிர்ச்சியடைந்த சமுதாயம் காணப்பட்டது.
அச் சமுதாயம் பல்தேசங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பின் செல்வச் செழிப்பு, அதிகாரம் போன்றவற்றால் சமுதாயம் சீரழிந்தது. அதனைத் தொடர்ந்து பெரும் நில நடுக்கங்களாலும், எரிமலை சீற்றத்தாலும் அழிந்தது என்று கூறியிருந்தமை இன்று எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது தொடர் வன்முறைகள், கலாசார சீரழிவுகள், பாகுபாடுகள் உலகில் எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம் மனித வாழ்வின் இயல்பு நிலையை குலைத்து இடப்பெயர்வு, மனித சொத்து சூறையாடுதல், உயிர் சேதம் போன்ற பல பகுதிகளிலும் பணக்காரன், ஏழை, மதம் என எந்த பேதமின்றி காவு கொள்கின்றது.
வாழும் வரை தான் வாழ்க்கை. அழிவு வந்தால் எல்லோரும் ஒன்றுதான். இயற்கையான அனர்த்தங்கள் பொருட்சேதம், உட்கட்டமைப்பு சேதம், வாழ்வாதார சேதம், தொழிற் சேதம் என்பன போனால் தேடிக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் திரும்பக் கிடைக்குமா? ஆனால் இன்றைய காலப் பகுதியில் இதுவும் சாத்தியமில்லை.
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியாக சுனாமி, சூறாவளி, வெப்ப பேரலை, வர்சி, ஆலங்கட்டி மழை, எரிமலை வெடிப்பு, பெரு வெள்ளம், தீ, சூரிய கிளர் ஒளிக் கற்றை, கம்மா ஒளிக்கற்றை வெடிப்பு என இயற்கை அனர்த்த கோலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் யப்பானில் தொடர்ந்து மூன்று நாட்களுள் 168 தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலநடுக்கமானது உலக அணுவாயுத கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடருமாயின் உலகமே அழிவுக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கின்றார்கள்.
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்ட சேரிட்டி ஆக்ஸ்போம் அமைப்பு பொதுப்படையாக 2015ம் ஆண்டுக்குள் 375 மில்லியனுக்கு மேற்பட்டோர் வெப்ப வானிலை சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று அறிக்கையிட்டு உள்ளது.
எனவே இயற்கை மனித உயிர்கள் எஞ்சியிருந்தாலும் வரட்சி, சூழல் மாற்றம், தொற்றுநோய் அபாயம், தொடர்ந்து வாழ வளங்கள் பற்றாக்குறை என மனித எச்சங்களும் படிப்படியாக மடிந்து அழியும் நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருகின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. மனித சக்தி ஒன்று சேர்ந்தால் சகல சக்திகளையும் வெல்லலாம். உலக மனித சக்தி ஒன்றுபட்டு உலகைக் காக்கப் புறப்படும் காலம் வந்துவிட்டது என்றே கூறலாம்.