ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மற்றொரு போருக்கு ஜப்பான் தயாராகிறதா?

சா.சுமித்திரை

நான்காவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், அதிக பட்ச இராணுவ செலவீனங்களைக் கொண்ட 5 ஆவது நாடாகவும் உள்ள ஜப்பான், உலக நாடுகளின் மீது போர் தொடுப்பதற்கு தயாராகி வருகின்றனவா? என்ற சந்தேகம் அண்மைக் காலமாக வலுவடைந்துள்ளது.

அதற்குக் கட்டியம் கூறுவது போல, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யவுள்ளமை, வருடாந்த இராணுவ செலவீனங்களை அதிகரித்தமை, சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு பிரதமர் ஷின் ஷோ விஜயம் செய்திருந்தமை, சீனா தனது வான் பரப்பு எல்லையை பிரகடனப்படுத்தியமை என ஒவ்வொரு சம்பவங்களாக அரங்கேறி வருகின்றமையானது,  சர்வதேச ரீதியில் அதிர் வலைகளையும் பதற்ற நிலைமையினையும் தோற்றுவித்துள்ளது. 

குறிப்பாக, தமது படைகள், பிற நாடுகளின் மீது படையெடுக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஜப்பான், உலகப் போரின் போதும் இயற்கை அனர்த்தங்களின் போதும் பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது. சுனாமி தாக்கிய போது ஜப்பானின் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

ஜப்பானின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்குமென பொருளியலாளர்களால் எதிர்வு கூறிக் கொண்டிருக்கும் போதே, சாம்பலில் இருந்து எழும்பும் பீனிக்ஸ் பறவைகள் போல, அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு அதன் பொருளாதாரம் அபிவிருத்தி கண்டிருந்தது. 

குறிப்பாக, ஜப்பானின் அபிவிருத்தி எப்பொழுதுமே வியப்புக்குரியதாகவே அமைந்துள்ளது. அதேசமயம், இரண்டாம் உலகப் போரின் போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே தனது முப்படைகளும் பயன்படுத்தப்படுமென வரையறை செய்யப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை  கருத்திற் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக பிரதமர் சின்சோ அபே தெரிவித்திருந்தார். 

மேலும், நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு, 68 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் மாறிவரும் சூழலுக்கேற்ப, அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்படுமெனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை, கடந்த மாதம் 26 ஆம் திகதி சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு அபே விஜயம் செய்திருந்தமையானது. இராஜதந்திர அனர்த்தமொன்றினை உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. 

பிரதமர்  அபே, யாசூகூனி நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய விவகாரமானது, சர்வதேச கவனத்திற்குள்ளாகியுள்ள அதேசமயம், இந்த விஜயம் தனது தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஒரு வருடத்தை குறிப்பதாகவும், ஜப்பான் மீண்டும் ஒரு போதும் யுத்தத்தை மேற்கொள்ளாது என்ற உறுதி மொழியை புதுப்பிக்கவே அங்கு சென்றதாகவும் அவர் கூறியிருப்பது பலரையும் சினமடைய வைத்துள்ளது. 

ஆனால், அவரது அரசாங்கம் தான், இந்த தசாப்தத்தில் முதற் தடவையாக இராணுவ செலவீனங்களை அதிகரித்துள்ளதுடன் கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளின் மீதான பதற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. 

ஏனெனில், 1945 களிலிருந்து, சென்யாகு அல்லது டையாகு தீவுகளின் பிரச்சினை, யப்பானுக்கும் சீனாவுக்குமிடையே இருந்து வருகின்றது. இத்தீவுகளை தாய்வானும் உரிமை கோரி வந்த நிலையில், அத் தீவுக் கூட்டங்களை அதன் உரிமையாளரிடமிருந்து ஜப்பான் 2012 இல் வாங்கிக் கொண்டது. இதனையடுத்து, சீனா ஆத்திரமடைந்துள்ளது. 

இந்நிலையிலேயே, தற்பொழுது சீனாவுடன் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும், சீனாவிற்கெதிராக அமெரிக்க யுத்த தயாரிப்புகளை ஜப்பான் கொள்வனவு செய்து வருகின்றது. இதேசமயம், பிராந்திய பதற்ற நிலைமையை அதிகரிக்கும் வகையில், அபே யாசூகூனி நினைவகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  

கடந்த 7 வருடங்களில் இங்கு சென்ற முதலாவது ஜப்பானிய பிரதமராக அபே உள்ளார். அபேயின் விஜயமானது, ஏற்கனவே, அப்பிராந்தியத்தில் தூண்டி விடப்பட்டுள்ள பதற்ற நிலைமையை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. 

ஆசியாவின் நாசி கல்லறை என வர்ணிக்கப்படும், யாசூகூனி நினைவகத்திற்கு அபே சென்றமைக்கு சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. 

யாசூகூனி கல்லறை ஒரு யுத்த நினைவிடமாக மட்டுமல்லாது, 1930, 1940 களின் ஜப்பானிய இராணுவ வாதத்தின் முக்கிய சின்னமாகவும் அமைந்துள்ளது. மேலும் யுத்த குற்றவாளிகள் உட்பட  யுத்தத்தின் போது கொல்லப்பட்ட 2.5 மில்லியன் ஜப்பானியர்களையும் அடையாளப்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றது. இந்நிலையில் அபேயின் யாசூகூனி விஜயமானது, ஜேர்மனியில் ஒரு  அரசியல் தலைவர், நாசி தலைவர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்தால் எவ்வாறு இருக்குமோ அதற்கு ஒத்த விதத்திலேயே அமைந்துள்ளது. 

இதேவேளை, யப்பான், சீனா மற்றும் தாய்வான் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக கிழக்கு சீனக் கடலில் ஒரு வான்  பாதுகாப்பு வலயத்தினை கடந்த மாதம் சீனா பிரகடனப்படுத்தியிருந்தது. 

இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு இரு நாட்களுக்குள்ளேயே அமெரிக்காவின் பி52 ரக போர் விமானங்கள் பறந்து சீனாவிற்கு தண்ணி காட்டின. தொடர்ந்து, ஜப்பானும் தென்கொரியாவும் தாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர், என்பது போல தங்களது போர் விமானங்களையும் அந்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டிருந்தன. 

இந்தவொரு காரணத்தினைக் காட்டியே, இவ்வருடத்துக்கான இராணுவ செலவீனத்தையும் அபே தலைமையிலான அரசாங்கம் அதிகரித்துள்ளது. 
இந்த நெருக்கடிக்குள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், சைபர் தாக்குதல் உபகரணங்கள் மற்றும் செய்மதிகளை செயலிழக்கச் செய்யும் உபகரணங்கள் என அனைத்தும் நவீன ரகத்திலான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவே இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சர்ச்சைக்குரிய தீவுகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய வாகனங்கள் மற்றும் சத்தமின்றி சென்று தாக்கும் போர் விமானங்கள் ஆகியவையும் வாங்கப்படுவதாக அபேயின் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

ஜப்பானின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் அது யுத்த பிரியமுள்ள நாடாகவே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், சீனா மற்றும் பலமிக்க நாடுகள் யுத்தத்திற்கு தயாராகி வருகின்ற அதேசமயம், சாதாரண நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களுக்கும் தூவமிட்டு வருகின்றன. 

இத்தகையதொரு மோசமான நிலைமை, மூன்றாம் உலக யுத்தத்திற்கான அறிகுறியாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே, இனிமேலும் யுத்தம் ஏற்படுமாயின் அது நீருக்கான யுத்தமாக, அல்லது நீர் சார்ந்த யுத்தமாகவே இருக்குமென எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவு விவகாரமும் நீர் சார்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, மூன்றாம் உலகப் போருக்கு ஜப்பான் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.  

வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ்

 சா.சுமித்திரை

 பிரிட்டனின் முடிக்குரிய முதலாவது இளவரசர் சார்ள்ஸுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் 65 வயதாகின்றது. இதனையடுத்து பிரிட்டன் வரலாற்றில்   பேரரசராக வருவதற்கு காத்திருக்கும் மிகவும் வயதானவராக வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் வர்ணிக்கப்படுகிறார்.

 1830 ஜூனில் வில்லியம் ஐங  தனது 64 ஆவது வயதில் தான் பேரரசராக முடி சூடிக் கொண்டார். இந்த வரலாற்றுப் பயணத்தினை 183 வருடங்களின் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் முறியடிக்கவுள்ளார். இதேவேளை இலங்கையில்   பொதுநலவாய அரசுத் தலைவர்களின்  மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி  முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இம்முறை  நடைபெறவுள்ள மாநாட்டில் மகாராணி எலிசபெத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ள்ஸே மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். 

 இம் மாநாட்டு நிகழ்வுகளுக்கு மத்தியிலேயே பேரரசராக முடி சூடுவதற்கு காத்திருக்கும் மிகவும் வயதானவர் என்ற கௌரவப் பட்டத்தினை அடுத்த 8 நாட்களில் பெறவுள்ளார். இந் நிலையில் சார்ள்ஸ் நவம்பர் 14 ஆம் திகதியன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தினை எங்கு எவ்வாறு கொண்டாடுவார் என்றதொரு கேள்வி நிச்சயம் எல்லோரின் மனதிலும் எழலாம். 

குறிப்பாக எமது நாட்டு தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களிடமும் இந்தக் கேள்வி சிலவேளைகளில் எழலாம்.  ஏனெனில் இக் காலப் பகுதியில் இளவரசர் சார்ள்ஸ்  இலங்கை வருவதற்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளார். சில வேளைகளில் பல நாட்டு அரசு தலைவர்களுடனும்  அன்றைய தினம் செலவிடப்படலாம். இதனால் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸின் 65 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்  எமது நாட்டிலேயே கொண்டாடப்படும் வாய்ப்புமுள்ளது. 

உலகின் மிகப் பிரபல்யமான ஓய்வூதியராக பதவி பெறும் நிலையிலுள்ள இளவரசர் சார்ள்ஸிற்கு இம்முறை ஹப்பி பேர்த் டே வாழ்த்து சொல்லும் வாய்ப்பு இலங்கையர் எமக்கும் கிடைக்கும் நிலையில் நிச்சயம் பெருமை கொள்ளலாம். சார்ள்ஸ் பிரிட்டனின் முதலாவது  முடிக்குரிய இளவரசர் என்பதற்கு மேலாக அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியான, துயரமான , கொந்தளிப்பான 65 சுவாரசிய நிகழ்வுகளை அண்மையில் லண்டன்  “ டெய்லி மெயில்’ வரிசைப்படுத்தியிருந்தது.  

இளவரசர் சார்ள்ஸ் பற்றிய 65 சுவாரசியங்கள் 

இளவரசரின் முழுப் பெயர்  சார்ள்ஸ்  பிலிப் அர்தூர் ஜோர்ஜ், இளவரசர் வேல்ஸ், கேஜீ, கேரி, ஜீ.சிபி, ஒஎம். ஏகே, கியூஎஸ்ஒ, பிஸி, ஏடிசி. , இங்கிலாந்தின் பிரபு, கோர்வல் கோமகன் , ரோத்ஸே கோமகன். 

இளவரசர் சார்ள்ஸிற்கு கையடக்கத் தொலைபேசி  பயன்படுத்தும் பழக்கமில்லை . ( அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பின் உளவுப் பணிகளின் போது , இளவரசர் சார்ள்ஸ் தொடர்பான விவகாரங்கள் இதனால் தான் பாரியளவில் பெற்றுக் கொள்ள முடியவில்லை ). 

1976  இல்  பிரின்ஸ் நிதியம் என்ற அமைப்பொன்று வேல்ஸ் இளவரசரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  ( அரச கடற்படையிடமிருந்து தனது ஓய்வூதியத்தினைப் பெற்று இந்த அமைப்பிற்குச் செலவிட்டு வருகின்றார்) 

நீண்ட தூரம் பயணங்களாயினும் விமானப் பயணங்களின் போதும் இளவரசர் சார்ள்ஸ் உணவு எதுவும் உட்கொள்வதில்லையாம். 

மார்ஷல் ரோயல் விமானப் படை , அட்மிரல் விமானப் படை மற்றும் மார்ஷல் அதிவிசேட விமானப் படை ஆகிய 3 இராணுவ  சேவைகளிலும் அதி விசேட தரத்தினை இளவரசர் சார்ள்ஸ் பெற்றுள்ளார். 

இளவரசர்  சார்ள்ஸ் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 

இளவரசர் சார்ள்ஸ் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் மரத்துண்டுகளாலான தள்ளு வண்டியே அவரின் குழந்தைப் பருவத்தில் பிடித்த விளையாட்டுப் பொருளாகும்.  

அமெரிக்க பாடகர் லியொனட் கோகென்னின் இசையையே சார்ள்ஸ் அதிகம் விரும்பி கேட்பார். 

1954 இல் இருந்து இளவரசர் சார்ள்ஸ் 105 நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா  , பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவற்றுக்கு அடிக்கடிச் சென்று வந்துள்ளார். 

இளவரசர் வேல்ஸ் 32 அரச குழந்தைகளுக்கு ஞானஸ்தான தந்தையாக  உள்ளார்.  

ஒவ்வொரு கிறிஸ்மஸ் பண்டிகையின் போதும் தவறாது தனது படைப் பிரிவிலுள்ள அனைத்து படை வீரர்களுக்கும் விஸ்கி  போத்தல்களை அனுப்பி வைப்பார். 

அரச பாரம்பரியங்களை பேணுவதில் ஆர்வம் கொண்டவர்.  

எலிசபெத் மகாராணியின் குரலினை போல் பேசும் ஆற்றலுடையவர். 

சார்ள்ஸ் தனது இளமைப் பருவத்தில்  பானைகள், சட்டிகள் போன்றவற்றை  வடிவமைப்பதில்  ஆர்வம் கொண்டிருந்தார். 

2012 இல் தான்சானியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இளவரசருக்கு அங்குள்ள பழங்குடியின தலைவரால் “பசுக்களின் பாதுகாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது. 

பண்ணைகள் , குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிலப்பரப்புகள்  உட்பட 133, 658 ஏக்கர் நிலத்திற்கு உரிமையுடையவர். 

800 யூரோவிற்கு மேற்பட்ட பெறுமதியான 50 இற்கும் மேற்பட்ட தோல் சம்பாத்துகளை வைத்துள்ளார். 

1974 இல் பிரிட்டனின் நீச்சல்  கழகத்தின் இணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.   

பிரின்ஸ் நிதியத்தினூடாக பாடகர் , பாலோமா பைத் , நடிகர்கள் இரிஸ் எல்பார் ,மக்சியன் டைனமோ ,தொழிலதிபர் மிக்கேல் மொனி ஆகியோருக்கு  உதவிகளை வழங்கியுள்ளார். 

அரச குடும்ப உறுப்பினர்களில் பாடசாலைக்கு சென்று பட்டம் பெற்ற முதலாவது நபராக இளவரசர் சார்ள்ஸ் உள்ளார். 

கண் கட்டி மந்திர வித்தைகள் செய்யும் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். 

இளவரசருக்கு  தேன்  என்றால் மிகவும் விருப்பம். 

1992  இல் சேதன உணவு விற்பனை நிறுவனமொன்றினை ஆரம்பித்து 21 வருடங்களாக நடத்தி வருகின்றார். 

2008 இல் ஈக்குவடோரில் கண்டுபிடிக்கப்பட்ட தவளையின மொன்றிற்கு இளவரசர் சார்ள்ஸ் பெயரிடப்பட்டுள்ளது. 

மண்ணிற கோழி முட்டைகளையே விரும்பி சாப்பிடுவாராம்,. 

விலங்குகளை அதிகம் நேசிப்பாராம். ஆனால், பூனைகளைப் பிடிக்காதாம்.  
400 இற்கும்  மேற்பட்ட அமைப்புகளின் தலைவராக இளவரசர்  வேல்ஸ் உள்ளார். 

கோழி வளர்ப்பில் ஆர்வமுடையவர்  . 

சலவை இயந்திரத்தில் தோய்த்த ஆடைகளை இளவரசர் அணிவதில்லையாம். 

இளவரசருக்கும், இளவரசி ஆனுக்கும்  அவர்களுடைய சிறுவதியல் இளவரசர் பிலிப்பினால் கையுறைகள் உள்ள பெட்டியொன்று கொடுக்கப்பட்டது. இவற்றினை பகிர்ந்து கொள்வதற்காக இருவரும் சண்டை பிடித்துக் கொண்டனராம். 

இளவரசர் சார்ள்ஸிற்கு பிடித்த மதுபானம் மார்டினிஸ். 

முஸ்லிம் மற்றும் அரபு நண்பர்களுக்கு ஏதேனும்  கடிதமோ அல்லது குறிப்போ  எழுதும் போது தனது பெயரினை அரபு மொழியிலேயே கையொப்பம் இடும் வழக்கத்தினைக் கொண்டுள்ளார். அதேசமயம் தற்பொழுது அரபு மொழியைப்  பேசுவதற்கும் கற்று வருகின்றாராம்.   

எக்காளம்  இசைக் கருவியை வாசிப்பதை தனது 15 ஆவது வயதில் கற்றிருந்தார். 

கடந்த 10 வருடங்களில் 99 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 

வெள்ளித் தகட்டிலான பல் குச்சி (Tooth Pick  )  எங்கு சென்றாலும் கொண்டு செல்லும் பழக்கமுடையவர். இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கும் பல் குச்சியை நிச்சயம் கொண்டு வருவாரென எதிர்பார்க்கலாம்.

இளவரசருக்கு பாணும் , பட்டர் புடிங்கும் தான் பிடித்த உணவாகும். அவுஸ்திரேலியாவில் தான் முதல் முதலாக சமைக்க இளவரசர்  கற்றுக் கொண்டார்.  

இளவரசர் தனது 14 ஆவது வயதில் முதற் தடவையாக பொது இடமொன்றில் மதுபானம் அருந்தியுள்ளார். 

2012 இல் , அரச மாளிகையில் இடம்பெற்ற 657 அரச நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் அங்கு வந்திருந்த 7500 பொது விருந்தினர்களுடனும் உரையாடியுள்ளார். 

பிரிட்டனின் முதலாவது மீள் சுழற்சி முறையில் வீட்டுப் பொருட்களை பயன்படுத்தும் திட்டத்தினை பங்கிங்ஹாம் மாளிகையிலே தான் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இளவரசர் தனது பணியில் புனிதத் தன்மையே பேணும் ஒருவராவார். 

இளவரசர் மரண சடங்குகளில் அணியும் அரச குடும்ப உடையினையும் எங்கு சென்றாலும் கொண்டு செல்வார். 

கால்பந்தாட்ட கிளப்புகளுக்கு உதவி வருகிறார். 

இளவரசர் சார்ள்ஸ் மதிய உணவு கட்டாயமாக சாப்பிடுவதில்லை. மாறாக சில வேளைகளில் சாண்ட் விச் மதிய உணவாகச் சாப்பிடுவார். 

இளவரசருக்கு பிடித்த நொறுக்குத் தீனி வெல்ஸ் புருட் கேக். 

தினமும் நடைப் பயிற்சி செய்யும் வழக்க முடையவர் . ( நடைப் பயிற்சியின் போது , சிலர் அவரிடம் சிகரெட் தேவையெனக் கேட்டால் உடனே  எனக்கு நடை பயிற்சியே தேவை என அவர்களிடம் கிண்டலடிப்பாராம்)  

அணில்களுக்கு உணவூட்டும் பழக்கமுடையவர். சிலவேளைகளில் சமையலறைக்குள்ளேயே வரவழைத்து அவற்றுக்கான உணவினை  வழங்குவார். 

கோரடொனிலுள்ள ஸ்கொட்டிஸ்  பாடசாலையில் கல்வி கற்கும் போது தலைமை மாணவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

ஹைரோவிலுள்ள வீட்டுப் பண்ணையில் பல் வகையான புல் புதர்களை வளர்த்து வருகின்றார். 

விவசாய மற்றும் கலாசார திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ரன்ஸேவேனியாவில் இளவரசருக்கு பல சொத்துக்கள் உள்ளன. 

இளவரசர் தனது கார் , ஆசனம் மற்றும் விமான  இருக்கை என அனைத்திலும் கோல்ட் மற்றும் சிவப்பு நிறத்திலான ஒரு சிறிய குஷனொன்றினை வடிவமைத்து வைத்துள்ளார்.

பல வருடங்களாக லேக் மாவட்டத்திலுள்ள ஜெ ரீ பண்ணையில் தனது பொழுது போக்கினைச் செலவிட்டு வருகின்றார். 

1976 இல் இருந்து 750,000 இளைஞர், யுவதிகளுக்கு பிரின்ஸ் நிதியம் மூலம்  உதவி வழங்கப்படுகிறது. 

1983  இலிருந்து பிரிட்டனிலுள்ள 80,000  இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கு இந்த நிதியம்  மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இளவரசர் கடந்த 30 வருடங்களாக குறித்த உடல் நிறையினையே சராசரியாகப் பேணி வருகின்றார். 

395, 000 பொது மக்களின்  வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பிரின்ஸ் நிதியம் செயற்பட்டு வருகின்றது. 

இளவரசர் அணியும் சேட் கள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 350 யூரோவாகும். லண்டன் ஆடை வடிவமைப்பாளர்களான ரென்புல் மற்றும் அஸர் ஆகியோராலேயே இவருக்கான சேட்கள் தைக்கப்படுகின்றன. 

2010 இல் நார் பொருட்களில்  நன்மைகள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தார். 

இங்கிலாந்திற்காக நான் எதனையும் செய்வேன் என்பதே இளவரசருடைய தாரக மந்திரமாகும். 

பாற்கட்டி உற்பத்தி பொருட்களை அதிகம் விரும்பி உண்பார்.  
இளவரசர் தனது பள்ளி பருவத்தில் சீம் பாடசாலையில் கற்கும் போது தலைமை ஆசிரியராக பீற்றர் போக்கினால் இரு தடவை பிரம்படி வாங்கியுள்ளார். 

நுட்பமான ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வமுடையவர். 

இளவரசி டயனாவினை விவகாரத்துச் செய்த பின்னர் கொந்தளிப்பான ஒழுங்கீன மற்ற வாழ்க்கை நடத்துபவரென பேசப்பட்டவர். 

நேர்மையானவராகவும் கடுமையான உழைப்பாளியாகவும் வலம் வருபவர். 

பல விதமான கார்களைச் செலுத்துவதில் ஆர்வம் கொண்டவர். 

1. கடல் அலைகளில் சறுக்கி விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கொழுந்து விட்டெரியும் எண்ணெய் வள நாடு

சா.சுமித்திரை

சுதந்திரம் பெற்று சிறிது காலத்திற்குள்
அதிகாரப் போட்டிக்குள் சிக்கித்
தவிக்கும் தென் சூடான்


உலகில் புதிய நாடாக உதயமாகிய தென் சூடானில் இனப்படுகொலைகள், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வீதிப் பேரணிகள், கொந்தளிப்புகள் என கடந்த இரு வார காலமாகவே ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இரு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்திருந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருந்த சூடானியர்களுக்கு தற்போதைய  பதற்றமான நிலைமை மிக மோசமான விளைவுகளையே நிச்சயம் ஏற்படுத்தப் போகின்றது. 

தற்போதைய நிலைமை மூலம், சிவில் யுத்தத்திற்கான உள்மறைவொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் மிக மோசமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் அங்குள்ள ஐ.நா. தூதரகங்களில் புகலிடம் கோரி ஆயிரக்கணக்கான தென் சூடானியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்த போதிலும் உயிருக்குப் பயந்து தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி மக்களின் முகாம்களைக் கூட, விட்டு வைக்காது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அப்பாவி மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இரு தலைமைகளின் அதிகார மோதல்களே காரணமாக அமைந்துள்ளன. 

சுதந்திரம் கண்ட பின்னர் குறுகியதொரு வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ள தென் சூடான், பாரியதொரு சவாலுக்கு சர்வதேச ரீதியில் முகம் கொடுத்துள்ளது. 

தென் சூடானின் பெரும்பான்மை பழங்குடியினமான டிங்கா பிரிவைச் சேர்ந்தவர் ஜனாதிபதி சல்வா கிர். இவர் தன்னை கவிழ்க்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ் சாட்டியதையடுத்தே இந்த பாரிய வன்முறைகள் வெடித்துள்ளன. 

இதற்குக் காரணமானவரெனக் குற்றஞ் சாட்டப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ரியேக் மக்சார் முதலில் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்த போதிலும் பின்னர் அரச எதிர்ப்புப் படைகள் மக்சார் தலைமையிலேயே செயற்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொண்டார். தென் சூடானின் இரண்டாவது பெரும்பான்மையினமாக நூர் பிரிவு உள்ளது. மக்சார் இந்தப் பிரிவையே சேர்ந்தவராவார். 

மக்சார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்து கீர் அகற்றியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு மேலாக, அதிகார உட்பூசல்களே இந்தப் பதவி அகற்றலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததென பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

இந்நிலையிலேயே ஆளும் சூடான் மக்கள் விடுதலை முன்னணிக்குள் மீண்டும் அதிகார மோதல்களுக்காக சொந்த மக்களையே படுகொலை செய்யும் அளவுக்கு ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஏற்கனவே, தென்சூடானில் 90 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். அதிக எண்ணெய் வளம் நிறைந்த நாடாக உள்ள போதிலும் பல்வேறு நிலைகளிலும் எவ்வித அபிவிருத்தி  இல்லாமலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தென் சூடான் தனித்து இயங்கும் நிலையை எட்டுதற்கு நாட்டின் உருவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளிலும் பாரிய சவால்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன், துறைசார் நிபுணத்துவமும் ஆளணி வளங்களும் பெருமளவில் தேவைப்படுகின்றது. 

அதிக எண்ணெய் வளம்  தென் சூடானில் காணப்படுகின்ற போதிலும் எண்ணெய் ஏற்றுமதிக்காக சூடானையே பெரிதும் தங்கியிருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. ஏனெனில், தென்சூடானது கடல் தொடர்புகள், துறைமுகம் என்பன இல்லாத புவியியல் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. 
எனவே, எண்ணெய்க் குழாய்கள் மூலம் சூடான் துறைமுகத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டு  செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி  செய்யப்பட வேண்டும். 

இதுபோன்று தென் சூடானின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வேறு நாடுகளை அது தங்கியுள்ளது. அத்துடன், அங்குள்ள மக்கள் கல்வியறிவு, சுகாதார வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளிலும் பின்தங்கியே உள்ளனர். இந்நிலைமையில் இப்படியான வன்முறைகளும் ஆர்ப்பாட்டங்களும் நிச்சயம் எதிர் விளைவுகளை மட்டுமே அங்கு ஏற்படுத்தப் போகின்றது. 

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புப் படையினரால், நூர் இனத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஐ.நா. அதிகாரிகள் முன் சாட்சியம் அளித்துள்ளனர். 

டிங்கா இனக்குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரர்களே நூர் இனத்தைச் சேர்ந்தவர்களை சரமாரியாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐ.நா. பொதுச் செயலர் பான்கீ மூனின் பரிந்துரைக்கமைய மேலதிக துருப்புகளை அனுப்பும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பும் இடம்பெற்றிருந்தது. 

இதில் 12,500 அமைதி காக்கும் படையினரையும் 1323 சர்வதேச பாதுகாப்புப் பொலிஸாரையும் அனுப்புவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த நெருக்கடிக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாதெனவும் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த அரசியல் மூலமே தீர்வு காண வேண்டுமெனவும் ஐ.நா. பொதுச்செயலர் பான்  கீ மூன் வலியுறுத்தியதுடன் ஐ.நா. குழுவினரை அங்கு 48 மணித்தியாலங்களுக்குள் சென்று பணியைத் தொடருமாறு கூறியுள்ளார். 

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென் சூடானில் சமாதான உடன்படிக்கைக்கு உலகத் தலைவர்களும் வலியுறுத்தி அழைப்பு விடுத்துள்ளனர். 

யேசு கிறிஸ்து பிறப்பின் மகிமையைக் கூறும் இம் மாதத்தில் இரத்தம் படிந்த வாரமாக தென்சூடான் காணப்படுகின்றமை வேதனையானதாகும். அதுவும் அங்கு மூன்று பாரிய மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தலைநகர் ஜுபாவில் இரு மனித புதை குழிகளும் பென்ரியூவில் ஒரு மனிதப் புதை குழியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். 

இன ரீதியாக மக்கள் கொல்லப்படுகின்ற தற்போதைய நிலைமையானது ஒரு நோக்கத்திற்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் புதிய நாடு இனக் கலவரத்தை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளது. 

இந்த திசை திருப்பல் மூலம் தென் சூடானினுள் நேரடியாகவே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் மேலோங்கியிருக்கப் போகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் கிழக்குப் பிராந்தியமான யொங்லைய்யின் தலைநகர் பொரில், விமானமொன்று சுடப்பட்டதில் அமெரிக்கப் பிரஜைகளை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். 

இச்சம்பவத்திற்கு அமெரிக்கா தனது பலத்த கண்டனங்களை வெளியிட்டிருந்ததுடன் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதானது அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தினரால் வழங்கப்படும் நீண்ட கால ஆதரவினை முடிவுக்கு கொண்டு வரக் காரணமாகி விடுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்தும் இருந்தார்.

நாட்டிலுள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய  பொறுப்பு தென் சூடானியர்களுக்கு உள்ளதென வலியுறுத்திக் கூறியதுடன் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் சும்மாவே தலையிட அமெரிக்கா முயலும், இந்நிலைமையில் தென் சூடானில் கணிசமான முதலீட்டுத் திட்டங்களை அமெரிக்கா வைத்துள்ளது. எண்ணெய் விவசாய அபிவிருத்தி மற்றும் நீரலை மூலமான சக்தி உருவாக்கம் குடிநீர் (நைல் நதி) போன்ற முதலீட்டினை மேற்கொள்ளும் திட்டங்களை கைவசம் வைத்துள்ளது.  இத்திட்டங்களை மேம்படுத்த இந்த விமானத் தாக்குதலென்ற காரணமே போதுமானதாகும். 

ஏற்கனவே, இந்த காரணத்தைக் கூறி நகரில் பீரங்கிகள், ஹெலிகொப்டர்கள், சிவி22 ஒஸ்பிரேஸ் ரக எறிகணை விமானங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. 

மேலும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டிருந்த 150 கடற்படையினரை டஜிபோரில் உள்ள தனது தளத்திற்கு ஒபாமா நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. டயிபோரிக்கும் தென் சூடானுக்குமிடையிலான தூரம் வெறும் ஆறு மணித்தியாலங்களேயாகும். 

அதேபோல் தென் சூடானை சுற்றியுள்ள தனது பிராந்திய இராணுவ முகாம்களிலும் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஏற்கனவே, சூடானிலிருந்து தென் சூடான் பிரிந்து செல்வதற்கு அமெரிக்கா இரு காரணங்களுக்காக தனது ஆதரவினை வழங்கியிருந்தது. ஒன்று, எண்ணெய் வள ஏற்றுமதிக்கான தனியுரிமையினை சூடான் அரசாங்கம் சீனாவிற்கு வழங்கியிருந்தமையாகும். மற்றையது எல்லை கடந்த இஸ்லாமிய தீவிரவாதத்திற்கான தளமாக சூடான் செயற்பட்டமையாகும். 

இவ்விரண்டிலும் அமெரிக்காவின் சுயநலமே காணப்பட்டது. தற்பொழுது, உள்நாட்டு நெருக்கடியையும் தனக்கு சாதகமாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. 

இந்த நிலையில் சீனாவின் தலையீடு என்னவாக இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதேவேளை, தலைநகர் ஜுபாவில் ஜனாதிபதி கீருடன் எதியோப்பியா மற்றும் கென்யா ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தையொன்றினை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கென்யாவின் தலைநகர் நைரோபியில் கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த எட்டு அரச தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

தென் சூடானிய நெருக்கடியினை முடிவுக்கு கொண்டு வரும் நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் இரு தலைமைகளுக்குமிடையிலான அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் அந்நாட்டின் மீதான சர்வதேசத்தின் கள்ளக் காதலை தடுத்து நிறுத்துவதன் மூலமே நிரந்தரமான தீர்வு எட்டப்பட முடியும். 

இதேவேளை, இந்த நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாவது காணப்பட வேண்டும்.  சிறிய தீப்பொறி போல உருவான நெருக்கடி 14 நாட்களுக்குள் தென் சூடானின் அனைத்து பிராந்தியங்களிலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. அதன் தாக்கம் அயல் நாடுகளிலும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டுமாயின், உடனடித் தீர்வு கட்டாய தேவையாகின்றது. 

சுதந்திரம் கிடைத்த பின்னரான  மிகவும் குறுகிய வரலாற்றினைக் கொண்ட தென்சூடான் மிக மோசமான வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளமையானது  அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும் அதேவேளை, எதிர்காலத்தில் பிரிவினை கோரும் நாடுகளினதோ அல்லது தீவுகளினதோ  சுதந்திர பிரகடனங்களுக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்குமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. 

சனி, 28 டிசம்பர், 2013

இன்னும் துலங்காத மர்மம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி உயிரிழந்து 50 வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அவரின் படுகொலைக்கான காரணம் இதுவரை அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கப்படவே இல்லை.

 இருந்த போதிலும் எத்துறை பிரபலங்களாயினும் அவர்கள் உயிரிழந்த பின்னரும் அவர்கள் தொடர்பான சுவாரசியங்கள் சர்ச்சைகள் மர்மங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கும். அவற்றில் எந்தளவிற்கு உண்மை உள்ளது அவை எந்தளவிற்கு போலியானவை என எதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கென்னடியின் 50 ஆவது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் உயிரைப் பறித்த மர்மத் தோட்டா தொடர்பான திடுக்கிடும்  தகவலை அவருக்கு முதலுதவியளித்த தாதியொருவர் வெளியிட்டிருந்தார்.

கென்னடியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்திலே 28 வயது இளநங்கையாகவிருந்த பைலிஸ் ஹால் என்ற இந்த மருத்துவ தாதிக்கு தற்பொழுது 78 வயதாகிறது. அந்த நிகழ்வு பற்றி அவர் கூறுகையில்,
தலையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கென்னடியின் தலையைத் தூக்கிப் பிடித்தபடியே அவரது சுவாசம் சீரடைவதற்காக முதலுதவியை நான் வழங்கினேன்.

 அப்பொழுது நான் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சையளித்துள்ளேன். ஆனால் அன்று கண்டது போல் நான் இதுவரை பார்த்ததே இல்லை. கென்னடியின் காதுக்கும் தோள் மூட்டுக்கும் இடையில் கூர்மையான ஒரு விசித்திர துப்பாக்கி ரவையைப் பார்த்தேன். அந்த ரவை சுமார் 1 1/2 அங்குள நீளமிருந்தது.
 சாதாரணமாக துப்பாக்கியிலிருந்து வெடித்து சீறிப் பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப் போயிருக்கும். ஆனால் கென்னடியின் தலையில் பாய்ந்த அந்த தோட்டாவின் முனையில் கூர்மை மழுங்காமல் இருந்தது.

அத்துடன் துப்பாக்கிக் குழலிலிருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதியில் தேய்வது போன்ற உராய்வுகளுக்கான அறிகுறி தென்படும். அதுவும் அந்தத் தோட்டாவில் காணப்படவில்லை.இந்தத் தோட்டா எந்த வகைத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்ததாகவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களிலிருந்து அது மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தது.
ஆயினும் அந்த தோட்டாவும் சத்திர சிகிச்சை  மூலம் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் கடைசி வரை அந்த தோட்டா நீதிமன்ற விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லையெனவும் பைலிஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் பைலிஸினால் தற்பொழுது வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. எந்தக் கருத்துகளையும் வெளியிடவோ அல்லது விசாரணையை நடத்தவோ இல்லை.

அதேசமயம் பைலிஸ் இந்த தகவல்களை 50 வருடங்களின் பின்னர் அம்பலப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை.
ஏற்கனவே இதனையறிந்திருந்த பைலிஸ் இத்தகவலை வெளியிடக்கூடாதென எவராலும் அச்சுறுத்தப்பட்டிருந்தாரா? அல்லது அக்காலப்பகுதியில் இதனை வெளியிடுவதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சியிருந்தாரா? எனத் தெரியவில்லை.

எப்படியாயினும் இந்த இரகசியம் தற்பொழுது கசிய விடப்பட்டுள்ளதால் இனிமேலும் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படாது  என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? அதேபோல் நற்பெயரைப் பெறுவதற்காக பொய்யான தகவலை வெளியிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆயினும்  இவ்விவகாரம் தொடர்பிலே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை உண்மைகள் வெளியாகப் போவதில்லை. அத்துடன் கென்னடியின் படுகொலையின் மர்மம் துலங்கும் வரை இது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதியன்று டெக்சாஸ் மாகாணத்தின் ரெஸ்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும் போதே எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு கென்னடியின் தலையில் பாய்ந்தது. ஆயிரக் கணக்கானோர் அவரை வரவேற்கக் காத்திருந்த போது அங்கேயே திறந்த காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த கென்னடியின் உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்கப்பட்ட சம்பவம் சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

உலகின் மிகப்பெரும் தலைவர்களின் ஒருவராக விளங்கிய கென்னடி மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்ற போது வீதியின் இருபுறமும் திரண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்த படியே சென்று கொண்டிருந்த கென்னடியின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கி ரவைகள் திடீரெனப் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்த கென்னடியை ஜாக்குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண் இமைப்பதற்குள் அனைத்து சம்பவங்களும் முடிந்திருந்தன.

கென்னடி கொல்லப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள்ளேயே லீ ஹார்வே ஒஸ்வோல்ட் என்ற 24 வயதான இளைஞனொருவன் கைது செய்யப்பட்டிருந்தான்.

ஒஸ்வோல்ட் கடற்படையில் முன்பு பணியாற்றியிருந்தவன் எனக் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட அவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக 1963 நவம்பர் 24 ஆம் திகதியன்று பொலிஸார் வெளியே அழைத்து வந்தனர்.

சிறைக்கு முன்னால் பெரும் கூட்டமொன்று கூடியிருந்தது. இக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜேக் ரூபி என்ற 42 வயதான ஒருவர் ஒஸ்வோல்டை மிகவும் அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டார். குறி தவறாது ஒஸ்வோல்டின் மார்பைக் குண்டு துளைக்க அவன் அதேயிடத்தில் உயிரிழந்தான்.

ஒஸ்வோல்ட் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கென்னடி ஏ ன் சுட்டுக் கொல்லப்பட்டார் அவர் படுகொலை செய்யப்படுவதற்கான பின்னணி என்ன? ஒஸ்வோல்ட்டினை யாரும் தூண்டி விட்டார்களா? என எதுவுமே தெரியாமல் உலகம் திகைத்துப் போனது.

ஒஸ்வோல்டை சுட்டுக் கொலை செய்த ரூபியையும் பொலிஸார் கைது செய்து அவர் மீது வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ரூபி இரவு விடுதியொன்றின் உரிமையாளராவார். 1964 ஆம் ஆண்டு மார்ச்சில் ரூபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் ரூபி ஒரு மன நோயாளியென அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டார். 1967 இல் சிறையிலிருந்தே உயிரிழந்தார்.ரூபி ஒரு மனநோயாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் மீதான விசாரணைகளும் மூடப்பட்டன.இதன் மூலம் கென்னடியின் படுகொலையின் இரகசியமும் அம்பலமாகவில்லை.

2 ஆம் உலகப் போர் முடிந்து 16 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையிலேயே ஜோன் எப். கென்னடி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். 1954 இல் ஜனாதிபதியாகவிருந்த ட்ரூமனின் நிர்வாகம் உலகின் ஏகபோக  முதலாளித்துவ வல்லரசு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வறிய நாடுகளையெல்லாம் கபளீகரம் செய்யும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

கென்னடியும் தனது அரசியல் பயணத்தினை அவ்வாறே ஆரம்பித்திருந்தார். கென்னடி பதவியேற்ற காலப்பகுதியில் பல நாடுகளில் முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் மக்கள் புரட்சிகளும் உச்சக் கட்டத்திலே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இவற்றினை தடுத்து நிறுத்தி தனது ஆளுமைக்குள் கொண்டு வர அமெரிக்கா முயற்சித்தது.

இதனொரு கட்டமாக கியூபா வியட்நாம் மீது படையெடுக்க கென்னடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆயினும் தனது நிலைப்பாட்டை கென்னடி பின்னர் மாற்றிக் கொண்டார்.

இக்காலப்பகுதியில் சகல அதிகாரம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரமைப்பு (சி.ஐ.ஏ.) தன்னை வளர்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில்  கென்னடியின் நிலைப்பாட்டினால் அவரோடு முப்படைத் தளபதிகளும் முரண்பட்டனர். இதனால் கென்னடியின் கருத்துகளுடன் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்துகளும் முரண்பட்டுக் கொண்டன.

இந்நிலையிலேயே கென்னடி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயினும் தனிநபர் ஒருவரின் ஆத்திரமே கென்னடியின் படுகொலைக்குக் காரணமெனக் கூறி அவரின் சகாப்தத்தினை முடித்து விட்டது அமெரிக்கா.

உலகத் தலைவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் விடயங்களையும் உள்நாடுகளில் குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. யிற்கு தன் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்குக் காரணம் கண்டு பிடிக்க முடியாது போனமை வேடிக்கையான விடயமாகும்.


இளவரசரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சா.சுமித்திரை

உலகளாவிய ரீதியில் சாந்தசொரூபரான யேசு நாதரின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் பண்டிகையின் ஆரவாரங்கள் வழமை போலவே காணப்படுகின்ற நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் மட்டும் தமது குட்டி இளவரசர் ÷ ஜார்ஜின் வருகை காரணமாக வழமைக்கு மாறான வகையில் பிரமாண்டமாகவும் அரச குடும்பத்தின் ஆழமான கலாசார விழுமியங்களை உள்வாங்கியும் கிறிஸ்ஸ்மஸைக் கொண்டாடுகின்றனர்.

பிரிட்டனின் வரலாற்றில் சுமார் 100 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக முடி சூடுவதற்காகக் காத்திருக்கும் மூன்று இளவரசர்களுடன்  கிறிஸ்மஸ் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகின்றது.

1992 இல் வின்ஸர் கோட்டையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது அரச குடும்பத்தினர் ஒன்று கூடும் இடமாக இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குச் சொந்தமான நோவூத் பெருந்தோட்டத்திலுள்ள சாடிரிங்ஹம் மாளிகை காணப்படுகின்றது
.
கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணையவுள்ளனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேட் வில்லியம் தம்பதி பக்லேபேரியில் இருந்தனர். இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் கடமையின் நிமித்தம் சென்றிருந்தார். ஆனால் இம்முறை கொண்டாட்டங்களின் போது இவர்களுடன் நத்தார் பண்டிகையின் முதன்மை விருந்தினராக இளவரசர் ஜோர்ஜ்ஜும் இருக்கப் போகின்றார்.

இளவரசர் வில்லியமிற்கு இந்த நத்தார் பண்டிகைக் கொண்டாட்டம் புதியதல்ல. ஆனால் கேட் மிடில்டனுக்கு இது புதிய சடங்குகள் கொண்டதொரு நத்தாராகும்.

பிரிட்டன் அரச குடும்பத்தினரின் நத்தார் பண்டிகை மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். எனினும் நடைபெறவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மிடில்டன் தான் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மாலைநேர உடை, பகல் நேர உடைகள், அவற்றுக்குரிய அணிகலன்கள் என பல்வேறான அலங்காரங்கள் இதற்காக தேவைப்படுகின்றன. நத்தார் தினத்தன்று மட்டும் கேட் மிடில்டன் ஐந்து உடைகளை மாற்ற வேண்டும். இதேவேளை இளவரசர் ஜோர்ஜின் குறும்புத் தனங்கள் மீதும் சிறு கண் வைக்க வேண்டிய பொறுப்பும் கேட்டுக்கு உள்ளது.

நிகழ்வின் போது இளவரசர் ஹரி, இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா, ஸாரா ரின்டால் மற்றும் அவருடைய கணவர் மைக், இளவரசர் எட்வேட் மற்றும் அவருடைய மனைவி, லேடி ஸாரா ஸாடோ மற்றும் கணவர் டானியல் உட்பட அரச குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொள்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின் போது அரச குடும்பத்தின் குட்டி வாரிசு ஜோர்ஜினை வரவேற்க எடின்பேர்க் இளவரசர் பிலிப் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோர் தயாராக இருப்பர்.

தொடர்ந்து 20 அடி உயரமான நத்தார் மரத்தினை அலங்கரிப்பதற்கு சகல குடும்பத்தினரும் உதவிகளை வழங்குவர். பின்னர் வழமை போலவே இளவரசர் பிலிப் தங்கத்திலான நட்சத்திரத்தை கிறிஸ்மஸ் மரத்தின் உச்சியில் வைப்பார் அதேபோல் மகாராணி கண்ணாடியிலான தேவதை (ஏஞ்சல்) யை வைப்பார்.

இதனையடுத்து காலை நேர உணவுடன் நிகழ்வுகள் இடம்பெறும். பின்னர் அரச குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவினை எடுப்பர். இதற்கென 50 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓய்வினைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும். இரவு  நேர உணவில் வாத்து இறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியிலான உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும் இளவரசர் பிலிப்பிற்காக வைன் வைக்கப்படுகின்றது.

அடுத்த மூன்று நாட்களும் பாரம்பரியமான கலாசார நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெறும். இதன்பொழுது அரச குடும்ப உறுப்பினர்கள் தமக்கே உரிய பிரத்தியேகமான பாணிகளுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனில் மகாராணியின் வாழ்த்துச் செய்தி முக்கியமானதொன்றாகும். ஆகவே சான்டிஹம் மாளிகையிலிருந்தே தனது வாழ்த்துச் செய்தியை அனைவருக்கும் வெளியிடுகின்றார்.

இதேவேளை இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது அரச குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் அரச நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் முதலிடம் பெறுவது கேட் மிடில்டனின் பெற்றோரான மிஷெல் மற்றும் கரோல் மிடில்டன் ஆகியோராவர். மிடில்டன் தம்பதி சாதாரண குடும்பத்தினர் ஆன போதிலும் எதிர்கால மன்னரின் பேரப் பெற்றோர்களாவார்கள்.

இதனையடுத்து இளவரசர் ஹரியின் காதலி கிறிஸ்டா போனஸ் அத்துடன் 2005 இல் கமிலா இளவரசர் சார்ள்ஸினை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவரின் பிள்ளைகளும் கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கவில்லை. எனினும் இம்முறை கமிலாவுடன் இணைந்து அவர்கள் கிறிஸ்மஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பில் செய்திகள் வெளிவரவில்லை.

இருந்த போதிலும் அரச குடும்பம் அல்லாத சிலருக்கும் இம்முறை நிகழ்வில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை தெரிவிக்கின்றது.

அரச குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் சான்டிஹமில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை பக்கிங்ஹாம் மாளிகையிலும் 50 இற்கு மேற்பட்ட அரச விருந்தினர்களுக்கு இன்று மதிய விருந்துபசாரம் வழங்கப்படுகின்றது.

எனினும் பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு இளவரசர் ஜோர்ஜுடனான  கிறிஸ்மஸ் பண்டிகை பிரமாண்டமாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஏன் இந்தப் பாய்ச்சல்?

இந்திய அமெரிக்க உறவில்  விரிசல் ஏற்படுமா?


சா.சுமித்திரை

தனது இராஜ தந்திரிகளில் ஒருவரை கைது செய்து, அவரை அகௌரவப்படுத்தும் வகையில், நடந்து கொண்ட அமெரிக்காவிற்கெதிராக, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை இரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கையெடுத்துள்ளது. 

நியூயோர்க் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரக டேவை, விசா மோசடி வழக்கில், பொலிஸார் கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.

பாடசாலையில் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு திரும்பியபோது, பொது இடத்தில் பொலிஸார் அவரைக் கைதுசெய்து கைவிலங்கிட்டு ஒரு தீவிரவாதியை கொண்டு செல்வது போல அழைத்துச் சென்றிருந்தனர்.

39 வயதான தேவயானி, அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு அமெரிக்கா விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியே கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆயினும், கைது செய்யப்பட்ட தேவயானிக்கு, அவரின் பதவிக்குரிய கௌரவம், அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவரை நிர்வாணப்படுத்தி, சோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன் போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் விபசாரிகளை அடைத்து வைக்கும் சிறைக் கூடத்திலேயே தேவயானியும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில், உடனடியாக இந்திய அரசிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சாதாரண வெளிநாட்டு பிரஜை வேறு நாடொன்றில் குற்றமிழைத்தால் அது தொடர்பில் அப்பிரஜையின் நாட்டு அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவிற்கான இந்தியத்துணைத் தூதுவராக இருக்கும் தேவயானியின் கைது விவகாரம் உடனடியாக இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படாதது, அவர் திட்டமிட்டு சதி வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

250,000 அமெரிக்க டொலர் பெறுமதியிலான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானிக்கு அவரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், விசா மோசடிக்காக 10 வருடங்கள் சிறையும் தவறான தகவல்களை வழங்கியமைக்காக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

இந்நிலைமையில், தேவயானியின் கைது மற்றும் மிக மோசமான உடல் சோதனைகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது.

இதேவேளை, அமெரிக்கத் தூதர அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான சேவைகளுக்கான பாஸ் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள அமெரிக்கப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் விசா விபரங்கள் அப்பாடசாலைகளில் பணியாற்றும் இந்தியர்களின் சம்பளம் மற்றும் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் ஆகியவற்றையும் உடனடியாக வழங்குமாறும், அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்களின் விபரங்கள் மற்றும் அவர்களது சம்பளம் ஆகியவை குறித்தும், தகவலைத் தருமாறும் கேட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்கத் தூதரகத்தினால் இறக்குமதி செய்யப்படும் மதுசாரம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும், இனிமேல் விமான நிலையத்தில் கடும் பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், வீதியில் தடுப்புகளை வைத்து போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து அந்த வீதித்தடுப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதுடன், அந்தத் தூதரகம் அமைந்துளள பிரதான வீதியையும் பொதுப் போக்குவரத்துக்காக, பொலிஸார் திறந்து விட்டுள்ளனர். இது தூதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

மேலும், புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கெதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகின்ற போதிலும், வழமை போலவே அமெரிக்கா தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருவதுடன், தங்களுடைய உறவில் விரிசல் எதுவும் ஏற்படவில்லையெனவும் கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதிகார வரம்பின் கீழேயே, தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. துணைத்தூதர் கைது நடவடிக்கையின் போதும் அந்த விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட்டுள்ளன. தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் படி, இந்தியத் துணைத்தூதர், தூதராக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மட்டுமே நீதிமன்றத்தில் விலக்கு உரிமை பெற்றுள்ளார். இதுபோன்ற பல்வேறு வகையிலான சிறப்பு விலக்கு உரிமைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விலக்கு உரிமை, அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவனதாகும். தேவயானி கைது விவகாரத்தை பொறுத்தமட்டில், அவர் குறித்த வகையிலான விலக்கு உரிமையின் கீழ வருகின்றார். எனவே, அவர் மீது வழக்கு விசாரணை உள்ளதால் குற்றவாளி என்ற வகையில் கைது செய்யத் தகுதியானவர் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி இந்தியவவிடம் கவலை தெரிவித்துள்ளார்.

தேவயானி, கோப்ரகடே கைது செய்யப்பட்டமை தொடர்பாக அவரையொத்த வயதுகளையுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் மிகவும் வருந்துகின்றேன் எனவும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் தொலைபேசியில் உரையாடிய போது, ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளிலுள்ள எமது நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ? அதற்கு இணையான கௌரவத்தினை எங்கள் நாட்டில் தங்கியிருந்து, பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கைது விவகாரத்தால், இந்தியா அமெரிக்க இடையிலான நெருங்கிய நட்பு பாதிக்கப்படுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என்றும் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் சதியில் சிக்கியுள்ள தேவயானியை மீட்டு,  நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவேன் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சபதம் செய்துள்ளார்.

தேவயானி, சதி செய்யப்பட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்காமல் பாராளுமன்றத்திற்கு திரும்பி வரமாட்டேன் எனவும் அவர் கூறிச்சென்றுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் சட்ட விரோதமாக நடக்கவில்லை. இருப்பினும், தூதரின் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும். அவரை, இந்தியா அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பாகும். அவரை கைது நடவடிக்கையிலிருந்து, வெளியே கொண்டு வந்த பின்னரே, அமெரிக்கா மீது இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முடிவெடுக்கப்படுமெனவும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையில் தேவயானியை கைது செய்வதற்கு சூத்திரதாரியாக செயற்பட்டவர் இந்திய வம்வாளியான ப்ரீத் பராரா என்ற சட்டத்தரணி என்ற விடயமும் அம்பலமாகியுள்ளது.

45 வயதான ப்ரீத், நியூயோர்க்கின் வட பிராந்தியப் பகுதி பொது சட்டத்தரணியாவார். இவருடைய தந்தை பஞ்சாப் பிரோஸ்பூரைச் சேர்ந்த சீக்கியராவார். இவருடைய தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

2009இல், நீயூயோர்க் நகரின் சட்டத்தரணியாக பதவியேற்ற இவர் சட்டவிரோதமாக செயற்பட்ட அரச அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

உலக பங்குச்சந்தை உள்பேர மோசடி வழக்கில் சிக்கியவர் இலங்கைத் தமிழரான ராஜரத்தினம். இந்த வழக்கில் இந்தியரான ரஜத் குப்தாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், குப்தா கைது செய்யப்பட்டபோது, அரச வழக்கறிஞராக ப்ரீத் இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்னொரு வழக்கொன்றில் இந்திய தொழிலதிபரான சந்தீப் அகர்வால் கைது செய்யப்பட்ட போதிலும், ப்ரீத்தே முக்கிய பங்கு வகித்தவராவார். தற்பொழுது, தேவயானி மீதான விசா மோசடி விவகாரத்திலும், அவருக்கெதிரான அரச தரப்பு சட்டத்தரணியாக ப்ரீத் செயற்பட்டு வருகிறார்.

இதுபோன்று, தொடர்ந்தும் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் பலரும் இந்திய வம்சாவளியான ப்ரீத்தினால் சிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது இந்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்பொழுது கண்காணிப்பு வலயத்தின் கீழ் ப்ரீத் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ப்ரீத்  ஏதேனும் உள்நோக்கத்துடன் இந்திய முக்கியஸ்தர்களையும் தொழிலதிபர்களையும் இலக்கு வைத்து செயற்படுகின்றாரா அல்லது அவரை யாராவது கைப்பாவையாக பயன்படுத்துகின்றனரா? என்பது இனிவரும் விசாரணைகளின் மூலமே தெரியவரும்.

ஆயினும், வீட்டு வேலைக்கு அமர்த்திய பெண்ணுக்கு பேசிய படி உரிய சம்பளத்தை தேவயானி வழங்க வில்லை. கடுமையாக வேலை வாங்கியுள்ளதுடன், இந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்துவதில் விசா மோசடியும் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தேவயானி மீது நடவடிக்கை யெடுக்கப்பட்டது. இந்த விடயத்தில் ஏழை, பணக்காரர், அமெரிக்கர் என்ற பேதம் எதுவும் பார்க்க முடியாது என ப்ரீத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு முன்பொரு போதுமில்லாத அளவிற்கு இந்திய அரசாங்கம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், கடும் பதிலடி நடவடிக்கைகைளையும் மேற்கொண்டுள்ளமையானது, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நோக்கங்களுக்காகவே, தேவயானி விவகாரம சர்ச்சைக்குள்ளாக் கப்பட்டுள்ளது. அதேநேரம் தேவயானியை கௌரவிக்கும் வகையில், அவரை ஐ.நா. பிரதிநிதியாக மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது.

தேவயானி வழக்கு ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண் தொடர்பில் இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அத்துடன், தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

தனிப்பட்ட வழக்கினை இந்திய அரசாங்கம் அரசியலாக்கி உள்ளது. அதேசமயம், அமெரிக்கா இந்திய அரசாங்கத்தினை களங்கப்படுத்தும் நோக்கில், துணைத் தூதுரை சதி வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்பட்டாலும், தேவயானியால் பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண்ணும்  ஒரு இந்தியர் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், இரு நாடுகளும் தனிப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்கி தம் அதிகாரத்தினை நிலைநாட்டவே விரும்புகின்றன.

ஆயினும், தேவயானி துணைத்தூதர் என்பதைவிட, குடும்பப் பெண்ணொருவராவார். இந்தக் கைது விவகாரம் நிச்சயம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதாகவே அமைந்திருக்கும். அவர் கைது செய்யப்பட்ட விதமும் மிகக் கீழ்த்தரமாக சோதனையிட்ட முறையும் இந்தியர்களை கடும் சீற்றமடையச் செய்துள்ளன.

இருந்தபோதிலும், இந்த வழக்கை அரசியலாக்காது, சுமுகமான முறையில் கொண்டு சென்றாலே, அமெரிக்க இந்திய உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும் எனவும் இதனை அரசியலாக்க முனையக் கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சிக்கு எதிராக வீதியிலிறங்கியுள்ள மக்கள்

சா.சுமித்திரை

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் மீண்டும் பாரிய மோசமான அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக உக்கிரமடைந்திருக்கும் வீதி ஆர்ப்பாட்டங்களாலும், போராட்டங்களாலும் தாய்லாந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், வீதி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் குறைந்தபாடில்லை. இதன் மூலம் தலைநகர் பாங்கொக்கின் இயல்பு நிலைமை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவை பதவி விலகக் கோரியும், மக்களில் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், தேர்தல் இடம்பெறும்வரை காபந்து பிரதமராக செயற்படுவது தனது கடமையென இக்கோரிக்கையை ஜின்லுக் சினவத்ரா நிராகரித்துள்ளார்.

வாழ்வில் எந்த இழப்பினையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் விரும்பாது. பல குழுக்களிலிருந்து இந்த அரசாங்கத்துக்கெதிரான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மக்கள் யாருக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென நினைக்கிறார்களோ, அவர்களை தெரிவுசெய்ய சரியான வழி தேர்தலாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தாய்லாந்து மக்களே தமது எதிர்காலத்தை தீர்மானிக்க தான் உதவுவதாகவும் அதுவரை தனது கடமையை சரிவரச் செய்ய ஆதரவு வழங்குமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார் ஜின்லுக்.

ஆனால், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி இலகுவில் வெற்றியடைக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2011இல் இடம்பெற்ற தேர்தலில், ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் முன்னாள் தலைவரும் ஜின்லுக்கின் சகோதரருமான தக்சின் சினவத்ராவின் கட்டுப்பாட்டின் கீழேயே அரசாங்கம் செயற்படுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாய்லாந்து அரசின் கோட்டைகள் மற்றும் வறிய பிரதேசங்களிலிருந்து ஆதரவினை பெறும்வகையில், ஜின்லுக் கட்சி சட்டம் இயற்றியுள்ளது. இதனால், அக்கட்சி தேர்தலில் இலகுவாக வெற்றியடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும், தக்சின் ஆட்சி வேரோடு அழிக்கப்படுவதே இலக்காகுமென அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை வகிக்கும் சுதெப் தாங்சுபான் தெரிவிக்கிறார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றாலும், அங்கு தக்சின் அதிகாரம் நிலைத்துக் காணப்படுமெனவும் சுதெப் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை, அரசாங்கத் தலையீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அரிசிக்கு, இன்னும் பணம் வழங்கப்படாததால், விவசாயிகளும் வீதி மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக வியாழக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவுக்கு இது புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

தாய்லாந்து விவசாயிகள், பிரதமர் ஜின்லுக்கையும், அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவையும் ஆதரித்து வருபவர்களாவர். 2006இல் தக்சின் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன் வறிய மக்களுக்கும் உதவும் கொள்கையொன்றினை அமுல்படுத்தியிருந்தார்.

சந்தை விலையைவிட அதிகமாக, ஒரு தொன் அரிசியை 15,000 தாய்லாந்து பாட் விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழி மூலமே, கிராமப்புற மக்களின் ஆதரவுடன் 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலைமையில், இவர்களின் ஆதரவும் கை நழுவிப் போகுமானால், தேர்தலில் தோல்வியடைவது நிச்சயமாகிவிடும். ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு ஜின்லுக் தீர்வு காணப் போகின்றார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அண்மைய வருடங்களாக எகிப்து, துருக்கி என பல நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியை நீடிப்பதற்காக உழைக்கும் மக்களை தூண்டி தங்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துகின்றனர்.

அந்த நடைமுறைக்குள் தாய்லாந்தும் சிக்கத் தவறவில்லை. 2010இல் அப்போதைய பிரதமர் அபிசிட் விஜ்ஜேஜிவா பாராளுமன்றத்தை 30 நாட்களுக்குள் கலைக்க வேண்டுமென கோரி, தலைநகரில் பல வாரங்களாக செஞ்சட்டை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

செஞ்சட்டை எதிர்ப்பாளர்களில் 2006ஆம் ஆண்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்களே பெருமளவில் இருந்தனர்.

ஆனால், 30 நாள் காலக்கெடு ஒரு பிரச்சினையல்ல. பாராளுமன்றத்தைக் கலைப்பது முழுநாட்டுக்கும் நன்மை தரவேண்டும். இந்த செஞ்சட்டைக்காரர்களுக்காக அதனைச் செய்ய முடியாது. 2010ஆம் ஆண்டின் இறுதிக்குள் உரிய காலத்துக்கு முன்னமே தேர்தலை நடத்த இணங்குவதாகவும் அப்போதைய பிரதமர் அபிசிட் தெரிவித்திருந்தார்.

நீண்டகால நெருக்கடியின் பின்னர் இடம்பெற்ற தேர்தலிலே வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் சதி மூலமாக ஜின்லுக் சினவத்ரா ஆட்சியை கைப்பற்றியதாகவும், தக்சினின் அதிகாரமே இருப்பதாகவும் கூறி, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.

1992இற்கு பின்னர் தாய்லாந்தில் ஜனநாயக கட்சியால் மிகப்பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை. இதனால், கடந்த சில வருடங்களாகவே அங்கு ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்ப்பாளர்களால் அரசியல் புயல் கிளம்பியுள்ளது.

“ஓட்டப்பம் வீட்டைச் சுடும், தன்வினை தன்னைச் சுடும்’ என்பது போல், 2010இல் அபிஜித்துக்கு ஏற்பட்ட நிலைமை தற்பொழுது ஜின்லுக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

ஜின்லுக்கின் ஆட்சியை கலைக்க வேண்டுமென ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான அபிஜித் தலைமையில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலைமையில், அபிஜித் மீது கொலைக்குற்றச்சாட்டொன்றினையும் அரசாங்கம் சுமத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டினால் அவர் கைது செய்யப்படும் நிலைகூட ஏற்படலாம்.

அபிஜித் கைது செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளே தற்பொழுது இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. 

2001இல் தக்சின் ஆட்சியிலிருந்தபோது, சாதாரண மக்களுக்கான சில நல்வாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தியிருந்தார். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ காப்புறுத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தார்.

மேலும், கல்விக்கும் விவசாயத்துக்கும் சலுகைகளுடன் கூடிய கடன், உதவித் தொகை வழங்குவது போன்றவற்றையும் நடைமுறைப்படுத்தினார்.

1997இல், தென்கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. அவ்வேளையில், சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளுடன் கடனுதவிகளை வழங்கியிருந்தது. 2001இல் பிரதமராக பொறுப்பேற்ற தக்சின், அந்த நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காமல் நலவாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தினார். இத்திட்டங்களை அமுல்படுத்த மது, சூதாட்டம் போன்றவை மீது வரியை விதித்திருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச் செலுத்தவும் செய்திருந்தார்.

நலவாழ்வு திட்டங்கள், வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றிய தக்சின் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

ஆனாலும், தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத பாரம்பரிய ஆளும் கட்சியினர் 2006 செப்டெம்பரில் நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் ஐ.நா.வில் உரையாற்ற தக்சின் சென்றவேளை, இராணுவப் புரட்சிமூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அத்துடன், அவரது கட்சியையும் தடைசெய்து சொத்துக்களையும் முடக்கியது. அவர் மீதான விசாரணைகளை நேரடியாக விசாரிக்காமல் 2 வருட சிறைத்தண்டனையையும் விதித்தது. இதனையடுத்து நாடு திரும்பாத தக்சின் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

ஆயினும், நாடு ஸ்திரத்தன்மை பெற்று அமைதியடையவில்லை. மீண்டும் வீதிப்போராட்டங்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது, பொது மன்னிப்பு வழங்கும் சட்டமூலமொன்றை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சியெடுத்து வருவதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சட்ட மூலம் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா நாட்டுக்குள் திரும்பி வருவதற்கு வழி செய்து கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, தக்சின் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி தோல்வியடைந்தால், நாட்டையே விட்டு வெளியேற வேண்டிய நிலையேற்படும்.

அதேநேரம், பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிரணியினரிடமும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய வலுவான மாற்த்திட்டமெதுவும் இல்லையென கூறப்படுகின்றது.

அரசியலில், எப்பொழுதுமே ஒரு கொந்தளிப்பு காணப்பட வேண்டுமென்ற நோக்கிலே தான்தோன்றித்தனமாக செயற்படுவது போன்றே எதிரணியினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தாய்லாந்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமை ஜனநாயக நிர்வாகத்தை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.

தாய்லாந்தில் போராட்டமானது மக்கள் நலன் சார்ந்தாக அமைந்திருக்கவில்லை. மாறாக, யார் நாட்டை ஆள்வது என்பது தொடர்பாக அமைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் மாற்றப்பட்டு, மக்களுக்கான போராட்டமாக மாற்றப்பட்டால் மட்டுமே நிலையான அமைதி அங்கு ஏற்படும்.