ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஏன் இந்தப் பாய்ச்சல்?

இந்திய அமெரிக்க உறவில்  விரிசல் ஏற்படுமா?


சா.சுமித்திரை

தனது இராஜ தந்திரிகளில் ஒருவரை கைது செய்து, அவரை அகௌரவப்படுத்தும் வகையில், நடந்து கொண்ட அமெரிக்காவிற்கெதிராக, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை இரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கையெடுத்துள்ளது. 

நியூயோர்க் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரக டேவை, விசா மோசடி வழக்கில், பொலிஸார் கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.

பாடசாலையில் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு திரும்பியபோது, பொது இடத்தில் பொலிஸார் அவரைக் கைதுசெய்து கைவிலங்கிட்டு ஒரு தீவிரவாதியை கொண்டு செல்வது போல அழைத்துச் சென்றிருந்தனர்.

39 வயதான தேவயானி, அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு அமெரிக்கா விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியே கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆயினும், கைது செய்யப்பட்ட தேவயானிக்கு, அவரின் பதவிக்குரிய கௌரவம், அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவரை நிர்வாணப்படுத்தி, சோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன் போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் விபசாரிகளை அடைத்து வைக்கும் சிறைக் கூடத்திலேயே தேவயானியும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில், உடனடியாக இந்திய அரசிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சாதாரண வெளிநாட்டு பிரஜை வேறு நாடொன்றில் குற்றமிழைத்தால் அது தொடர்பில் அப்பிரஜையின் நாட்டு அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவிற்கான இந்தியத்துணைத் தூதுவராக இருக்கும் தேவயானியின் கைது விவகாரம் உடனடியாக இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படாதது, அவர் திட்டமிட்டு சதி வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

250,000 அமெரிக்க டொலர் பெறுமதியிலான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானிக்கு அவரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், விசா மோசடிக்காக 10 வருடங்கள் சிறையும் தவறான தகவல்களை வழங்கியமைக்காக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

இந்நிலைமையில், தேவயானியின் கைது மற்றும் மிக மோசமான உடல் சோதனைகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது.

இதேவேளை, அமெரிக்கத் தூதர அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான சேவைகளுக்கான பாஸ் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள அமெரிக்கப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் விசா விபரங்கள் அப்பாடசாலைகளில் பணியாற்றும் இந்தியர்களின் சம்பளம் மற்றும் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் ஆகியவற்றையும் உடனடியாக வழங்குமாறும், அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்களின் விபரங்கள் மற்றும் அவர்களது சம்பளம் ஆகியவை குறித்தும், தகவலைத் தருமாறும் கேட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்கத் தூதரகத்தினால் இறக்குமதி செய்யப்படும் மதுசாரம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும், இனிமேல் விமான நிலையத்தில் கடும் பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், வீதியில் தடுப்புகளை வைத்து போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து அந்த வீதித்தடுப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதுடன், அந்தத் தூதரகம் அமைந்துளள பிரதான வீதியையும் பொதுப் போக்குவரத்துக்காக, பொலிஸார் திறந்து விட்டுள்ளனர். இது தூதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

மேலும், புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கெதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகின்ற போதிலும், வழமை போலவே அமெரிக்கா தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருவதுடன், தங்களுடைய உறவில் விரிசல் எதுவும் ஏற்படவில்லையெனவும் கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதிகார வரம்பின் கீழேயே, தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. துணைத்தூதர் கைது நடவடிக்கையின் போதும் அந்த விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட்டுள்ளன. தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் படி, இந்தியத் துணைத்தூதர், தூதராக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மட்டுமே நீதிமன்றத்தில் விலக்கு உரிமை பெற்றுள்ளார். இதுபோன்ற பல்வேறு வகையிலான சிறப்பு விலக்கு உரிமைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விலக்கு உரிமை, அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவனதாகும். தேவயானி கைது விவகாரத்தை பொறுத்தமட்டில், அவர் குறித்த வகையிலான விலக்கு உரிமையின் கீழ வருகின்றார். எனவே, அவர் மீது வழக்கு விசாரணை உள்ளதால் குற்றவாளி என்ற வகையில் கைது செய்யத் தகுதியானவர் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், தேவயானி கைது விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி இந்தியவவிடம் கவலை தெரிவித்துள்ளார்.

தேவயானி, கோப்ரகடே கைது செய்யப்பட்டமை தொடர்பாக அவரையொத்த வயதுகளையுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் மிகவும் வருந்துகின்றேன் எனவும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் தொலைபேசியில் உரையாடிய போது, ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளிலுள்ள எமது நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ? அதற்கு இணையான கௌரவத்தினை எங்கள் நாட்டில் தங்கியிருந்து, பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கைது விவகாரத்தால், இந்தியா அமெரிக்க இடையிலான நெருங்கிய நட்பு பாதிக்கப்படுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என்றும் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் சதியில் சிக்கியுள்ள தேவயானியை மீட்டு,  நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவேன் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சபதம் செய்துள்ளார்.

தேவயானி, சதி செய்யப்பட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்காமல் பாராளுமன்றத்திற்கு திரும்பி வரமாட்டேன் எனவும் அவர் கூறிச்சென்றுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் சட்ட விரோதமாக நடக்கவில்லை. இருப்பினும், தூதரின் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும். அவரை, இந்தியா அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பாகும். அவரை கைது நடவடிக்கையிலிருந்து, வெளியே கொண்டு வந்த பின்னரே, அமெரிக்கா மீது இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முடிவெடுக்கப்படுமெனவும் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையில் தேவயானியை கைது செய்வதற்கு சூத்திரதாரியாக செயற்பட்டவர் இந்திய வம்வாளியான ப்ரீத் பராரா என்ற சட்டத்தரணி என்ற விடயமும் அம்பலமாகியுள்ளது.

45 வயதான ப்ரீத், நியூயோர்க்கின் வட பிராந்தியப் பகுதி பொது சட்டத்தரணியாவார். இவருடைய தந்தை பஞ்சாப் பிரோஸ்பூரைச் சேர்ந்த சீக்கியராவார். இவருடைய தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

2009இல், நீயூயோர்க் நகரின் சட்டத்தரணியாக பதவியேற்ற இவர் சட்டவிரோதமாக செயற்பட்ட அரச அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

உலக பங்குச்சந்தை உள்பேர மோசடி வழக்கில் சிக்கியவர் இலங்கைத் தமிழரான ராஜரத்தினம். இந்த வழக்கில் இந்தியரான ரஜத் குப்தாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், குப்தா கைது செய்யப்பட்டபோது, அரச வழக்கறிஞராக ப்ரீத் இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்னொரு வழக்கொன்றில் இந்திய தொழிலதிபரான சந்தீப் அகர்வால் கைது செய்யப்பட்ட போதிலும், ப்ரீத்தே முக்கிய பங்கு வகித்தவராவார். தற்பொழுது, தேவயானி மீதான விசா மோசடி விவகாரத்திலும், அவருக்கெதிரான அரச தரப்பு சட்டத்தரணியாக ப்ரீத் செயற்பட்டு வருகிறார்.

இதுபோன்று, தொடர்ந்தும் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் பலரும் இந்திய வம்சாவளியான ப்ரீத்தினால் சிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது இந்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்பொழுது கண்காணிப்பு வலயத்தின் கீழ் ப்ரீத் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ப்ரீத்  ஏதேனும் உள்நோக்கத்துடன் இந்திய முக்கியஸ்தர்களையும் தொழிலதிபர்களையும் இலக்கு வைத்து செயற்படுகின்றாரா அல்லது அவரை யாராவது கைப்பாவையாக பயன்படுத்துகின்றனரா? என்பது இனிவரும் விசாரணைகளின் மூலமே தெரியவரும்.

ஆயினும், வீட்டு வேலைக்கு அமர்த்திய பெண்ணுக்கு பேசிய படி உரிய சம்பளத்தை தேவயானி வழங்க வில்லை. கடுமையாக வேலை வாங்கியுள்ளதுடன், இந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்துவதில் விசா மோசடியும் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தேவயானி மீது நடவடிக்கை யெடுக்கப்பட்டது. இந்த விடயத்தில் ஏழை, பணக்காரர், அமெரிக்கர் என்ற பேதம் எதுவும் பார்க்க முடியாது என ப்ரீத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு முன்பொரு போதுமில்லாத அளவிற்கு இந்திய அரசாங்கம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், கடும் பதிலடி நடவடிக்கைகைளையும் மேற்கொண்டுள்ளமையானது, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நோக்கங்களுக்காகவே, தேவயானி விவகாரம சர்ச்சைக்குள்ளாக் கப்பட்டுள்ளது. அதேநேரம் தேவயானியை கௌரவிக்கும் வகையில், அவரை ஐ.நா. பிரதிநிதியாக மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது.

தேவயானி வழக்கு ஒரு தனிப்பட்ட விவகாரமாகும். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண் தொடர்பில் இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அத்துடன், தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

தனிப்பட்ட வழக்கினை இந்திய அரசாங்கம் அரசியலாக்கி உள்ளது. அதேசமயம், அமெரிக்கா இந்திய அரசாங்கத்தினை களங்கப்படுத்தும் நோக்கில், துணைத் தூதுரை சதி வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்பட்டாலும், தேவயானியால் பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண்ணும்  ஒரு இந்தியர் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், இரு நாடுகளும் தனிப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்கி தம் அதிகாரத்தினை நிலைநாட்டவே விரும்புகின்றன.

ஆயினும், தேவயானி துணைத்தூதர் என்பதைவிட, குடும்பப் பெண்ணொருவராவார். இந்தக் கைது விவகாரம் நிச்சயம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதாகவே அமைந்திருக்கும். அவர் கைது செய்யப்பட்ட விதமும் மிகக் கீழ்த்தரமாக சோதனையிட்ட முறையும் இந்தியர்களை கடும் சீற்றமடையச் செய்துள்ளன.

இருந்தபோதிலும், இந்த வழக்கை அரசியலாக்காது, சுமுகமான முறையில் கொண்டு சென்றாலே, அமெரிக்க இந்திய உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும் எனவும் இதனை அரசியலாக்க முனையக் கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக