திங்கள், 16 டிசம்பர், 2013

உறவைப் பிரித்த உளவு!

சா.சுமித்திரை

அவுஸ்திரேலியா இந்தோனேஷியா
இடையே பெரும் முறுகல் நிலை


அமெரிக்கா தனது எதிரி நாடுகளை மாத்திரமல்லாது, கூட்டாளி நாடுகளின் அரசியல், தனிப்பட்ட விவகாரங்களையும் உளவுபார்த்த விடயம் அம்பலமாகி விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில்,இந்தோனேசியாவை அவுஸ்திரேலியா வேவு பார்த்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2013இல் எந்தளவிற்கு நவீன தொழில்நுட்பத்துறை வளர்ச்சி கண்டிருக்கோ, அந்தளவிற்கு இணையத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகுதல், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள் வேவு பார்த்தல், இரகசிய ஆவணங்களை கசியவிடல் போன்றவையும் பல மடங்காக அதிகரித்துள்ளன.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கே இன்று பாரியதொரு சவாலாக இணைய ஊடுருவிகள் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஒரு தனிப்பட்டவரின் விபரங்களை வேவு பார்க்கப்படுவதன் மூலம் ஏற்படும் எதிர்த்தாக்கங்களை விட ஒரு நாட்டின் இராஜாங்க விடயதானங்களை அரசியல் விவகாரங்களை கண்காணிப்பதும் அதன் இரகசிய ஆவணங்களை வெளியே கசிய விடுவதும் அந்நாட்டிற்கே பாரிய அச்சுறுத்தலாகும்.

அமெரிக்க உளவு முகவரமைப்பின் முன்னாள் ஒப்பந்த தொழில்நுட்ப பணியாளரான எட்வெட் சிநோடன் உலக நாடுகளின் விவகாரங்களை அமெரிக்கா வேவு பார்க்கின்றது என்பதை கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அம்பலப்படுத்தியிருந்தார்.

உலகத் தலைவர்கள் பலரும் அமெரிக்காவின் இந்த வேவு நடவடிக்கைக்கு பலத்த கண்டனங்களையும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். அமெரிக்கர்களுக்கும் தமது அரச தலைமைகளின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், வாஷிங்டனோ தனது பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்றது.

இணைய ஊடுருவிகளின் “ஹீரோ’வாக வர்ணிக்கப்படும் எட்வெட் சிநோடன், சர்வதேச அரசியலின் எதிரியா? அல்லது நண்பனா? என்ற விவாதம் இடம்பெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலிய உளவு நிறுவனங்கள் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுஹோயோனா, அவரது மனைவி, துணை ஜனாதிபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக்கேட்ட விவகாரம் வெளியாகியுள்ளது.

அதுவும், உளவுத்தகவல்களை கசியவிடும் எட்வெட் சிநோடன் அண்மையிலே அம்பலப்படுத்தியிருந்த ஆவணத்திலேயே, அவுஸ்திரேலிய உளவு நிறுவனம் இந்தோனேசிய தலைமைகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்தமை வெளியாகியிருந்தது.

சிநோடனிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஒற்றுகேட்பு விடயம் தொடர்பான ஆவணங்களை இரு ஊடகங்கள் வெளியிட்டதையடுத்து அவுஸ்திரேலியாவிற்கான தனது தூதுவரை இந்தோனேசியா திரும்பி அழைத்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய இலத்திரனியல் உளவுப் பிரிவானது, 2009ஆம் ஆண்டு ஆகஸ்டில் சுசிலோ பம்பாங்கின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்திருந்தமை, சிநோடனின் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஏற்கனவே, உளவு பார்த்தல் விவகாரம், அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருகின்றமை உள்ளிட்ட சில விவகாரங்களால் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்கான தனது தூதுவரை திரும்பி அழைத்துள்ளமையானது, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய இராணுவத்துடனான கூட்டு ஒத்துழைப்பையும் இந்தோனேசியா இரத்துச் செய்துள்ளது. அத்துடன் ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கை மற்றும் இரு நாட்டுக்கும் இடையிலான உளவுப் பரிமாற்றம் உட்பட அனைத்து இராணுவ செயற்பாடுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுஹொயொனா அறிவித்துள்ளார்.

“அவர்கள் எம்மை உளவு பார்க்கவில்லை என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது’ சாத்தியமில்லை, என்றும் சுசிலோ கூறியிருந்தார்.

அதேசமயம், இந்த உளவு விவகாரம் குறித்து உத்தியோக பூர்வமாக விளக்கமளிக்குமாறும், அந்நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோருமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் சுசிலோ.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிற்காக மன்னிப்புக் கோர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய விவகாரத்தில் அவுஸ்திரேலியா மன்னிப்புக் கேட்காது. சரியான காரணத்துக்காகவே, உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மற்ற நாடுகளோ அல்லது அரசாங்கமோ இதுபோன்ற காரணத்துக்காக உளவு நடவடிக்கையில் இறங்கினால், அவை மன்னிப்பு கேட்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அயல் நாடுகளுக்கு அதிக மதிப்பளிக்கும நாங்கள், தகவல் தொடர்பு உள்ளிட்ட அவுஸ்திரேலிய வளங்களை அவற்றுக்கு உதவுவதற்கே பயன்படுத்துகிறோமே ஒழிய, தீங்கு விளைவிப்பதற்கில்லை. 

எனினும், இந்தோனேசியா அவுஸ்திரேலியா நல்லுறவுக்கான பாதை அருகிலேயே உள்ளது. வெகு தூரத்தில் இல்லையெனவும் ரொனி அபொட் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையில், ஜகார்த்தா அலுவலகங்களை வேவு பார்த்த கன்பெராவின் அறிக்கைகளுக்கு மேலான சர்ச்சைகளுக்கு மத்தியிலே, அவுஸ்திரேலிய பொலிஸ் மற்றும் அந்நாட்டு சேமிப்பு வங்கியின் இணையத்தளங்கள இணைய ஊடுருவிகளால் தாக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் காரணம்? இதற்கும் இந்தோனேசியா அதிகாரிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? என்பது தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.

ஆயினும், தனது கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் மறுப்புத் தெரிவித்தமையால், கடும் எதிர்ப்பினை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது. அத்துடன், இவ்விடயத்தை அவுஸ்திரேலியா மிக இலகுவாக எடுத்துக்கொண்டதாக இந்தோனேசிய ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் விரிசல் அதிகரித்துள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்குமிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

1640களின் ஆரம்பத்திலேயே அவுஸ்திரேலியாவிற்கும், இந்தோனேசியாவிற்குமிடையே வெளிநாட்டு உறவுகள் இருந்துள்ளன. தொடர்ந்து இதனைப் பேணி வந்துள்ளமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

அண்மைய வருடங்களாக, குறிப்பாக 20112012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான வர்த்தக நடவடிக்கைகளை இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. அதேசமயம், 20122013இன் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தோனேசியாவின் அபிவிருத்தி பணிகளுக்கென 541.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருந்தது.

அத்துடன், ஜீ 20 ஆசியான் பிராந்திய அமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாநியூஸிலாந்துஆசியான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளனர். 1991இலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு மாதாந்தம் செல்லும் இந்தோனேசியர்களில் ஒரு தொகையினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் 2011 புள்ளிவிபரப்படி, 38.1 வீதமான இந்தோனேசியர்களுக்கு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும், அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே 27,500 இற்கு மேற்பட்டோர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஆகாயம், கடல், தண்டவாளம் மற்றும் வீதி போக்குவரத்துகளின் அபிவிருத்திகளும் இவ்விரு நாடுகளும் இணைந்தே மேற்கொள்கின்றன.

இவ்வாறு தத்தமது நாட்டின் பல அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பணிகளிலும் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவதாகவே பார்க்கப்படுகின்றது.

இதேவேளை புகலிடம் கோரி, படகுகளில் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

2007இல் கெவின் ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கம், தெரிவு செய்யப்பட்ட போதிலும், புகலிடம் கோருவோருக்கும், அகதிகளுக்கும் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை. அத்துடன், இந்த தடுப்பு நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கத்துடன் இணைந்தே மேற்கொண்டிருந்தன.
அதேபோல, ரூட் தலைமையிலான தொழிற்கட்சி எல்லைப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அதற்கென 650 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவழித்ததுடன், மேலும் நிதியொதுக்கீடுகளை கண்காணிப்பிற்கென ஒதுக்கியது. அவுஸ்திரேலிய இந்தோனேசியா அதிகாரிகளின் இரகசிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதேசமயம், இந்தோனேசியா சர்வதேச புகலிட சட்டவிதிகளில் கையெழுத்திடாத நாடாகும். எனவே, அங்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கோ அல்லது அகதிகளுக்கோ எந்தவித அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படமாட்டாது.

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்கும் சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் முயற்சியாக, இந்தோனேசியாவின் மீன்பிடிப் படகுகளை வாங்கும் திட்டத்தினை தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் முன் வைத்திருந்தது.

அபொட்டின் இந்த திட்டத்தினை இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்ரைய் நரெலிஹவா நிராகரித்துள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனால் இரு நாடுகளின் உறவில் ஏற்கனவே சிறு விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தன. ஆயினும், அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்கள் தன் நாட்டினுள் உள்நுழைவதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் அவற்றுக்கு பக்க பலமாக இருப்பது இந்தோனேசிய அதிகாரிகள் என்பதை மறுக்க முடியாது.

அவுஸ்திரேலியாவிற்கு தலையிடியாகவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தோனேசியாவின் உதவிகள் தேவைப்படுவதால் அந்நாட்டின் உறவினை புதுப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆயினும், பழையை உறவை புதுப்பிக்க இந்தோனேசியா தயாராகுமா? என்பது கேள்விக்குறியே. ஒரு வீட்டை இரு திருடர்கள் சென்ற கொள்ளையிட்டுள்ளனர். அதேசமயம் ஒரு திருடனின் வீட்டையே மற்றைய திருடன் கொள்ளையிட்டுச் சென்றால் பாதிக்கப்பட்ட திருடனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? தனது வீட்டுப் பொருட்களை இழந்த திருடனிற்கு சொல்ல முடியாதளவு ஆத்திரமும், விரக்தியும் காணப்படும். மாறாக, கொள்ளையடித்த திருடனின் மனநிலை இறுமாப்புடனே இருக்கும். ஏனெனில், திருடனின் வீட்டையே கொள்ளையடித்து விட்டேன் என்ற பெருமிதமே இருக்கும். இந்நிலைமையே இன்று அவுஸ்திரேலியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் ஏற்பட்டுள்ளது.

இதில், தனது பொருட்களை பறிகொடுத்த திருடன் போல இந்தோனேசியாவும், திருடனின் வீட்டிலேயே திருடிய திருடன் போல அவுஸ்திரேலியாவும் உள்ளது.

ஏனெனில், இவ்விரு நாடுகளும் இணைந்து ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது நாட்டினை அவுஸ்திரேலிய அரசாங்கம் வேவு பார்த்துள்ளது என்பதை அறிந்துள்ள இந்தோனேசியா அரசாங்கம், அதனை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்?

பல நூற்றாண்டுகளாக, பேணி வரும் இந்த உறவில் இன்று விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயினும், வேவு பார்த்ததில் எந்தத் தப்பும் இல்லையென அமெரிக்காவைப் போல அவுஸ்திரேலிய அரசாங்கமும் நியாயம் சொல்லி வருகின்றது. வேவு பார்க்கப்படுவதால், ஏற்பட்ட ஏற்படப் போகும் நன்மைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு எவரும் அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகள் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கோ, அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கோ ஏற்படும்போது மட்டுமே வேவு பார்க்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த உண்மை புலப்படும்.

எனினும், இந்தக் காரணத்துக்காக இந்தோனேசியா அவுஸ்திரேலியாவுக் கிடையிலான உறவில் நிரந்தரப் பிரிவு ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக