ஞாயிறு, 22 டிசம்பர், 2013

குடும்ப ஆட்சிக்கு எதிராக வீதியிலிறங்கியுள்ள மக்கள்

சா.சுமித்திரை

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் மீண்டும் பாரிய மோசமான அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக உக்கிரமடைந்திருக்கும் வீதி ஆர்ப்பாட்டங்களாலும், போராட்டங்களாலும் தாய்லாந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், வீதி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் குறைந்தபாடில்லை. இதன் மூலம் தலைநகர் பாங்கொக்கின் இயல்பு நிலைமை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவை பதவி விலகக் கோரியும், மக்களில் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தியும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், தேர்தல் இடம்பெறும்வரை காபந்து பிரதமராக செயற்படுவது தனது கடமையென இக்கோரிக்கையை ஜின்லுக் சினவத்ரா நிராகரித்துள்ளார்.

வாழ்வில் எந்த இழப்பினையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் விரும்பாது. பல குழுக்களிலிருந்து இந்த அரசாங்கத்துக்கெதிரான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மக்கள் யாருக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென நினைக்கிறார்களோ, அவர்களை தெரிவுசெய்ய சரியான வழி தேர்தலாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தாய்லாந்து மக்களே தமது எதிர்காலத்தை தீர்மானிக்க தான் உதவுவதாகவும் அதுவரை தனது கடமையை சரிவரச் செய்ய ஆதரவு வழங்குமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார் ஜின்லுக்.

ஆனால், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி இலகுவில் வெற்றியடைக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2011இல் இடம்பெற்ற தேர்தலில், ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் முன்னாள் தலைவரும் ஜின்லுக்கின் சகோதரருமான தக்சின் சினவத்ராவின் கட்டுப்பாட்டின் கீழேயே அரசாங்கம் செயற்படுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாய்லாந்து அரசின் கோட்டைகள் மற்றும் வறிய பிரதேசங்களிலிருந்து ஆதரவினை பெறும்வகையில், ஜின்லுக் கட்சி சட்டம் இயற்றியுள்ளது. இதனால், அக்கட்சி தேர்தலில் இலகுவாக வெற்றியடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும், தக்சின் ஆட்சி வேரோடு அழிக்கப்படுவதே இலக்காகுமென அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை வகிக்கும் சுதெப் தாங்சுபான் தெரிவிக்கிறார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றாலும், அங்கு தக்சின் அதிகாரம் நிலைத்துக் காணப்படுமெனவும் சுதெப் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை, அரசாங்கத் தலையீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அரிசிக்கு, இன்னும் பணம் வழங்கப்படாததால், விவசாயிகளும் வீதி மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக வியாழக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும், பிரதமர் ஜின்லுக் சினவத்ராவுக்கு இது புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

தாய்லாந்து விவசாயிகள், பிரதமர் ஜின்லுக்கையும், அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவையும் ஆதரித்து வருபவர்களாவர். 2006இல் தக்சின் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன் வறிய மக்களுக்கும் உதவும் கொள்கையொன்றினை அமுல்படுத்தியிருந்தார்.

சந்தை விலையைவிட அதிகமாக, ஒரு தொன் அரிசியை 15,000 தாய்லாந்து பாட் விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழி மூலமே, கிராமப்புற மக்களின் ஆதரவுடன் 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலைமையில், இவர்களின் ஆதரவும் கை நழுவிப் போகுமானால், தேர்தலில் தோல்வியடைவது நிச்சயமாகிவிடும். ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு ஜின்லுக் தீர்வு காணப் போகின்றார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அண்மைய வருடங்களாக எகிப்து, துருக்கி என பல நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியை நீடிப்பதற்காக உழைக்கும் மக்களை தூண்டி தங்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துகின்றனர்.

அந்த நடைமுறைக்குள் தாய்லாந்தும் சிக்கத் தவறவில்லை. 2010இல் அப்போதைய பிரதமர் அபிசிட் விஜ்ஜேஜிவா பாராளுமன்றத்தை 30 நாட்களுக்குள் கலைக்க வேண்டுமென கோரி, தலைநகரில் பல வாரங்களாக செஞ்சட்டை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

செஞ்சட்டை எதிர்ப்பாளர்களில் 2006ஆம் ஆண்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்களே பெருமளவில் இருந்தனர்.

ஆனால், 30 நாள் காலக்கெடு ஒரு பிரச்சினையல்ல. பாராளுமன்றத்தைக் கலைப்பது முழுநாட்டுக்கும் நன்மை தரவேண்டும். இந்த செஞ்சட்டைக்காரர்களுக்காக அதனைச் செய்ய முடியாது. 2010ஆம் ஆண்டின் இறுதிக்குள் உரிய காலத்துக்கு முன்னமே தேர்தலை நடத்த இணங்குவதாகவும் அப்போதைய பிரதமர் அபிசிட் தெரிவித்திருந்தார்.

நீண்டகால நெருக்கடியின் பின்னர் இடம்பெற்ற தேர்தலிலே வெற்றி பெற்று ஜின்லுக் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் சதி மூலமாக ஜின்லுக் சினவத்ரா ஆட்சியை கைப்பற்றியதாகவும், தக்சினின் அதிகாரமே இருப்பதாகவும் கூறி, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.

1992இற்கு பின்னர் தாய்லாந்தில் ஜனநாயக கட்சியால் மிகப்பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை. இதனால், கடந்த சில வருடங்களாகவே அங்கு ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்ப்பாளர்களால் அரசியல் புயல் கிளம்பியுள்ளது.

“ஓட்டப்பம் வீட்டைச் சுடும், தன்வினை தன்னைச் சுடும்’ என்பது போல், 2010இல் அபிஜித்துக்கு ஏற்பட்ட நிலைமை தற்பொழுது ஜின்லுக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

ஜின்லுக்கின் ஆட்சியை கலைக்க வேண்டுமென ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான அபிஜித் தலைமையில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலைமையில், அபிஜித் மீது கொலைக்குற்றச்சாட்டொன்றினையும் அரசாங்கம் சுமத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டினால் அவர் கைது செய்யப்படும் நிலைகூட ஏற்படலாம்.

அபிஜித் கைது செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளே தற்பொழுது இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. 

2001இல் தக்சின் ஆட்சியிலிருந்தபோது, சாதாரண மக்களுக்கான சில நல்வாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தியிருந்தார். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ காப்புறுத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தார்.

மேலும், கல்விக்கும் விவசாயத்துக்கும் சலுகைகளுடன் கூடிய கடன், உதவித் தொகை வழங்குவது போன்றவற்றையும் நடைமுறைப்படுத்தினார்.

1997இல், தென்கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. அவ்வேளையில், சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளுடன் கடனுதவிகளை வழங்கியிருந்தது. 2001இல் பிரதமராக பொறுப்பேற்ற தக்சின், அந்த நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காமல் நலவாழ்வுத் திட்டங்களை அமுல்படுத்தினார். இத்திட்டங்களை அமுல்படுத்த மது, சூதாட்டம் போன்றவை மீது வரியை விதித்திருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச் செலுத்தவும் செய்திருந்தார்.

நலவாழ்வு திட்டங்கள், வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றிய தக்சின் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

ஆனாலும், தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத பாரம்பரிய ஆளும் கட்சியினர் 2006 செப்டெம்பரில் நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் ஐ.நா.வில் உரையாற்ற தக்சின் சென்றவேளை, இராணுவப் புரட்சிமூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அத்துடன், அவரது கட்சியையும் தடைசெய்து சொத்துக்களையும் முடக்கியது. அவர் மீதான விசாரணைகளை நேரடியாக விசாரிக்காமல் 2 வருட சிறைத்தண்டனையையும் விதித்தது. இதனையடுத்து நாடு திரும்பாத தக்சின் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

ஆயினும், நாடு ஸ்திரத்தன்மை பெற்று அமைதியடையவில்லை. மீண்டும் வீதிப்போராட்டங்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது, பொது மன்னிப்பு வழங்கும் சட்டமூலமொன்றை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சியெடுத்து வருவதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சட்ட மூலம் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா நாட்டுக்குள் திரும்பி வருவதற்கு வழி செய்து கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, தக்சின் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் ஜின்லுக் தலைமையிலான கட்சி தோல்வியடைந்தால், நாட்டையே விட்டு வெளியேற வேண்டிய நிலையேற்படும்.

அதேநேரம், பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிரணியினரிடமும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய வலுவான மாற்த்திட்டமெதுவும் இல்லையென கூறப்படுகின்றது.

அரசியலில், எப்பொழுதுமே ஒரு கொந்தளிப்பு காணப்பட வேண்டுமென்ற நோக்கிலே தான்தோன்றித்தனமாக செயற்படுவது போன்றே எதிரணியினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தாய்லாந்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமை ஜனநாயக நிர்வாகத்தை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.

தாய்லாந்தில் போராட்டமானது மக்கள் நலன் சார்ந்தாக அமைந்திருக்கவில்லை. மாறாக, யார் நாட்டை ஆள்வது என்பது தொடர்பாக அமைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் மாற்றப்பட்டு, மக்களுக்கான போராட்டமாக மாற்றப்பட்டால் மட்டுமே நிலையான அமைதி அங்கு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக