புதன், 13 மார்ச், 2013

இலட்சாதிபதிகளாகும் பிச்சைக்காரர்கள்


சா.சுமித்திரை

யாசித்தல் என்பது பலருக்கு சிரமமின்றி சமூகத்தை ஏமாற்றி பணம் உழைக்கும் தொழிலாக மாறி வரும்  நிலையில் இ. போ. ச. தனியார் பஸ்களிலோ, ரயில்களிலோ  பிச்சை எடுப்பதற்கு கடந்த 1 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவேஎமது நாட்டைப் பொறுத்தவரை பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன், இது போன்று பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக முன்பும் தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் காலத்தின் சில தேவைகளால் அத்தடைகளும் மறக்கப்பட்டிந்தன.
இந்நிலையிலே மீண்டும் பஸ் , ரயில் போன்றவற்றில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிச்சைக்காரர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தம்மை பல்வேறாக அடையாளப்படுத்துகின்றனர். யுத்த மற்றும்  இயற்கை  அனர்த்தத்தாலோ அல்லது பிறவியிலேயோ அங்கவீநர்களாக தொழில் செய்ய முடியாதவர்கள்சொந்த பந்தங்களால் கைவிடப்பட்ட முதியோர்கள், யுத்த காலத்தில் சொத்துகளை இழந்து  நிர்க்கதியானவர்கள், உடல்  வளம், கல்வி வளம் இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொதுவாக தலைநகர் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற வர்த்தக நகர் பகுதிகளிலேயே பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படும். சன நெரிசல் நிறைந்த பொதுஇடங்களில் குறிப்பாக பஸ் நிலையங்களை அண்டிய பகுதிகளில் அநேகமான பிச்சைக்காரர்களை நெஞ்சை உருக்கும் பரிதாபக் கோலங்களில் காணலாம்.
இவர்களால் அப்பகுதியால் செல்வோருக்கும், பயணிகளுக்கும் தொந்தரவுகளும் சிரமங்களும் ஏற்படுகின்ற அதேவேளை, வீதி விபத்துகளும் ஏற்படுகின்றன.இந்நிலையில்தான் பஸ், ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, ரயிலில் பிச்சை எடுத்து மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரை பணம் பெற்று வந்த 60 வயதான பெண்ணொருவருக்கு கடந்த 5 ஆம் திகதி கொழும்பு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் 6மாதச்  சிறைத் தண்டனையையும் 2 ஆயிரம் ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதேபோல, கடந்த டிசம்பர் மாதம் ராகம ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரது சொத்து மதிப்பு 20 இலட்சம் என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது போன்று பிச்சை எடுத்தே இலட்சாசிபதியாகும்  சில சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பிச்சை எடுத்தலை ஒரு வருமானம் பெறும் தொழிலாக உயர்த்தி, அதன் மூலம் பணம் தேடும் சட்ட விரோதக் குழுக்கள் உருவாகி வருவதே ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்குத்  தடை  உருவாக பிரதான காரணமாகும். ஆயினும், வேறு தொழில் செய்ய இயலாத, ஒரு நேர உணவுக்காக மட்டும் கையேந்துபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, பிச்சைக்காரர்களுக்கு எதிராக வைக்கப்படட இந்த இலக்கு எத்தகையதொரு பொருத்தமாக அமையும் என்பதை தெளிவாகக் கூறி விடமுடியாது. இன்று வறுமையில்லாத தேசத்தை நோக்கி என்னும் திட்டத்தினூடாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரசு பிச்சைக்காரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது ?.

குறிப்பாக இலங்கையில் எவ்வளவு வருமானத்திற்கு குறைந்த மட்டத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளடக்கப்படுகின்றனர் என்றோ, பிச்சைக்காரர்களும் நாட்டுப்  பிரஜைகள் என்ற வகையில் உரிமைகளையோ, வசதிகளையோ  ஏற்படுத்திக் கொடுப்பதிலோ அல்லது மேலும் பிச்சைக்காரர்களாக உருவாகுவதை தடுப்பது தொடர்பிலோ எந்த விதமான கவனங்களும் இதுவரை செலுத்தப்பட்டதாகத்  தெரியவில்லை.
சமாளிக்க முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால் செல்வந்தர்கள் முதல் சாதாரண வர்க்கத்தினர் வரை திணறிக் கொண்டிருக்கும் நிலையில், பிச்சைக் காரர்களுக்கு எந்தவிதமான மாற்று வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல்  பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்துள்ளமையானது மிகவும் இன்னல் படுபவர்களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் செயலாகும்.

இந்தத்  தடைகளையும் மீறி சிலர் தமது வயிற்றுப் பிழைப்பிற்காக பஸ்களில்  ஏறிப் பிச்சை எடுக்க முயற்சி எடுக்கும் போது பஸ் நடத்துனர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்குமிடையே வாய், கைத் தகராறுகளும் ஏற்படுகின்றன. இதனால் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல என்ன செய்வதென்று தெரியாமல்  விழிக்கின்றனர்.
 
யாரும் பிச்சைக்காரர்களாகப் பிறப்பதில்லை. சமுதாயத்தால் தான் பிச்சைக்காரர்களாக உருவாக்கப்படுகின்றனர் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. எனவே, நாட்டில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கு அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கு நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கின்றது.

"கிராமத்தில்  விவசாயம் செய்து வந்தேன்விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு கடனுக்கு சொத்து பறிமுதலாகி விட்டது. நகரத்தில் வேலை தேடி வந்தும் வேலை கிடைக்கவில்லை. இறுதியில் நிரந்தரமாக பிச்சை எடுப்பது தொழிலாகி விட்டது' என்கின்றார் ஒருவர். அதேபோல் பிள்ளைகளால் கவனிக்கப்படாமல், துன்புறுத்தப்படுகின்றமையால் வெளியேறும் முதியவர்கள்,   பல காரணங்களால் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுவர்கள் வயிற்றுப்பசிக்குப் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இது போன்ற காரணங்கால் பிச்சை எடுக்கும் சூழல் உருவாகின்றது.

பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை உயர்வடைய சமுக விரோதக் குற்றங்களும் அதிகரிக்கின்றன. தலைநகரில் மட்டுமல்லாது கண்டி, காலிகுருநாகல், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைக்கும் ஈனக் கும்பல்கள் பெருகி வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் போதை வஸ்து, மது பாவனைகளுக்கு அடிமையானவர்கள் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கும் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் மேலெழுந்து வருகின்றன.

அதேபோல , ஒரு மனிதனின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் அருகதை எமக்கு இல்லாத போதிலும், ஒரு சில பிச்சைக்காரர்களது முறையற்ற நடவடிக்கைகள் எம்மை அருவருக்கச் செய்வதுடன், ஏனையோருக்கு சுகாதாரப் பிரச்சினைகளும், தொற்று நோய்களும் ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளன.

இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உடனடி நடவடிக்கைகளையோ அல்லது தடைகளை விதிப்பதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
பிச்சைக் காரர்கள் தொடர்பான அக்கறையுள்ள செயற்றிட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாவிட்டாலும் அவர்களின் வாழ்வியல் போராட்டத்திற்கு மென்மேலும் சவாலான விடயங்களை முன்னெடுப்பதினூடாக எவ்வாறு வறுமையற்ற தேசம் என்னும் திட்டத்தை வெற்றியளிக்கச் செய்ய முடியும்?

இன்றைய உலகில்  பிச்சைக்காரர்கள் இல்லாத நாடே இல்லையெனக் கூறலாம். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான் போன்ற அபிவிருத்தி கண்ட நாடுகளில் கூட பிச்சைக்காரர்கள் என்ற வர்க்கமொன்று இருக்கின்றது. ஆனால், அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்களின் வாழ்க்கைத் தரமும் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் யுக்திகளும் வேறுபடுகின்றன. அத்துடன், அந்நாடுகளின் அரசு குறிப்பிட்ட வருமானம் பெறும் வர்க்கத்தினரை விட மிகக் குறைந்த வருமானத்தை பெறுவோரை வறியவர்கள் என்னும் மட்டத்திற்குள் நிர்ணயித்துக்  கொள்கின்றது.

இதேவேளை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குறிப்பிட்ட தொகை பணம் என்பவற்றையும் மாதந்தோறும் வழங்கி வருகின்றது. அத்துடன், சுய தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி நிலையிலும் அதிக கவனம் செலுத்தி வறுமைக் கோட்டு மட்டத்திலிருந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்றது.

ஆனால், எமது நாட்டில் இது  போன்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வட கிழக்கு பகுதி கடந்த கால யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சொத்து, உயிரிழப்புகளை சந்தித்து, மன நிலை பாதிக்கப்பட்டு, உறவுகளாலும்  கைவிடப்பட்ட நிலையில் வீதியோரப் பிச்சைக்காரர்களாக நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

பொது வாகனங்களில்  ஏறி பிச்சை எடுப்போரில் சிலர் இலட்சாதிபதியாக உருவாகி வர பலர் கட்டாக்காலி நாய்கள் போன்று வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பிச்சை எடுப்பதிலேயே ஏன்  இந்த ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எமது நாட்டை பிச்சைக்காரர்கள் அற்ற தேசமாக மாற்ற வேண்டுமாயின் அவை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பிச்சைக்காரர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அவை பெரிதாக வெற்றியளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

  கடந்த பல வருடங்களாக பிச்சைக்காரர்களுக்கென அமைக்கப்பட்ட நலன்புரி முகாம்களிலிருந்து பிச்சைக்காரர்கள் தப்பிச் சென்றிருப்பதே உண்மை. அவர்களில் 87 வீதமானோர்  சமூகத்தில் வாழ்வாதார உதவிகளை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்கள் பிச்சைக் காரர்களாகவே இருக்க  விரும்புவதாகவும் அரச அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இத்தகையோருக்கு மன வள ஆலோசனைகளையே முதலில் வழங்க வேண்டும். இதனை விடுத்து, நலன்புரி முகாம்களில் சிறைக் கைதிகள் போல அடைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ஏனெனில் வாழ்வதற்கு இலகுவான வழி பிச்சை எடுத்தலே என்ற மனநிலைக்கு அவர்கள் பழக்கப்படுகின்றனர். குறிப்பாக வீடுவாசல் இல்லாதவர்கள்தொழில் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் எனப் பல வகையினர் பிச்சை எடுத்தாலும் இன்று பிச்சை எடுப்பது ஒரு தொõழிலாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது.

சில பெண்கள் சிறு குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பரிதாபகரமாகக் காண்பித்து வெயில், மழை எனப் பாராது அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நடவடிக்கைக்காக சிறு குழந்தைகள் வாடகைக்கு விடப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
 இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு புனர்வாழ்வளித்து மன  நிலையினையும் ஆரோக்கியமாக வளப்படுத்த வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதினூடாக  அவர்களுக்கு வாழ்க்கையை வாழ ஆர்வம் ஏற்படுகின்றது.

தமது நிகழ்கால எதிர்கால வாழ்க்கைமீது பற்று ஏற்படுகின்றமையால் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உந்து சக்தி மனதில் ஏற்படும்போது சுயதொழில் வாய்ப்புகளோ அல்லது வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளோ வழங்கலாம். அதனை அவர்கள் விருப்பத்துடன் ஏற்று தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

 அதே போல சில மறுவாழ்வு  நலன்புரி நிலையங்களில் சேர்க்கப்படும் சில வயோதிபர்கள் அங்குள்ளவர்களால் சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அவ்வமைப்புக்களை விட்டு வெளியேறி மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, அந்நிலையங்களில் சிறப்பான முகாமைத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை இலவசக் கல்வி, இலவச வைத்தியசேவை என்பன வழங்கப்படுகின்றன.
ஆனால் பிச்சைக்காரர்களுக்கோ அவர்களது பிள்ளைகளுக்கோ இச்சேவை முழுமையாகச் சென்றடைகின்றதா? என்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இதேவேளை புதிதாக பிச்சைக்காரர்கள் உருவாகாமல்  தடுக்க அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன் சுயதொழில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும்.

பிச்சைக்காரர்களின் தொகை அதிகரிக்கின்றது. அவர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகின்றன. பொதுமக்களுக்கு தொந்தரவுகளை உருவாக்குகின்றனர் என்று அரசு கூறிக் கொண்டு பிச்சை எடுப்பதற்குத் தடை செய்வதால் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அதே போல பிச்சைக்காரருக்கு எழுந்தமான தீர்வுகள் வழங்குவதாலும் எதுவும் நடக்கப் போவதுமில்லை.

 எனவே பிச்சைக்காரர்களின் இன்றைய நிலைக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் காரணமாக அமைந்துள்ளனர் என்பதே உண்மை. அவை ஒவ்வொன்றும் இனங்கண்டு தீர்க்கப்படுவதன்மூலமும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் மாற்றுத் தொழில்கள், பயிற்சிகள், உதவித் தொகைகள், அடிப்படை வசதிகள், மனநல ஆலோசனைகள் என்பவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருகி வரும் போலி விளம்பரங்கள்


சா.சுமித்திரை

பத்திரிகைகள் மற்றும் ஏனைய வெகுஜன ஊடகங்களினூடாக பிரசுரிக்கப்படும் போலி விளம்பரங்கள் மூலம் இளம்பெண்கள் உட்பட அதிகளவானோர் மோசடிக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் நிலையத்தின் பொது மக்கள் தொடர்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல நிறுவனங்களின் புலமை பரிசில்களுடன் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, நடிப்புத்துறைகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் என் பல வகையிலான போலி விளம்பரங்கள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், சமூகத்தளங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவை ஊடாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சில பரீட்சை முடிவுகள் வெளியாகும் போது அப்பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற சில மாணவர்களின் விபரங்களை பெற்று தமது கல்வி நிறுவனங்களில் கற்றதன் மூலமே அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றனர் என சில கல்வி பயிற்சி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

சில கல்வி நிறுவனங்களில் பரீட்சையின் இறுதிக் கருத்தரங்குகளில் மட்டும் பங்குபற்றியிருப்பார்கள் அல்லது அங்கிருந்து சில பாடக்குறிப்புகள் பெற்றிருப்பார்கள். ஆனால் இதனை மட்டும் வைத்துக் கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தமது கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்கள் என விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்நிலையங்களில் பரீட்சையின் இறுதி வாரங்களில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் மாதிரி பரீட்சைகளில் மட்டும் அம்மாணவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள். அவ்வாறு இறுதிக்காலப்பகுதியில் மட்டும் பங்குபற்றி எவ்வாறு அதிக மதிப்பெண் பெறமுடியும்? அப்படியாயின் அந்நிலையில் கற்ற ஏனைய மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இம்மாணவர்கள் தம்மிடம் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றனர் என விளம்பரப்படுத்துகின்றனர். இவை எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் அதிக மாணவர்களை உள்ளீர்த்து இலாபம் உழைக்கும் திட்டமாகவே அமைந்துள்ளது.

இதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த போலி கல்வி நிறுவனமொன்றினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்து கற்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானியாவில் பட்டப்படிப்பினையும் தொழில் வாய்ப்பினையும் பெற்றுத் தருவதாக தெரிவித்து மாணவர்களிடம் பெரும் தொகை பணம் அறவீடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான அளவில் இயங்கி வந்த கல்வி நிறுவனம் தம்மிடம் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கேம்ரீட் ஏசியன் ஒப் மெனேஜர்ஸ் என்று பொறிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களில் பாரியளவு விளம்பரங்கள் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்ததுடன் சில பத்திரிகைகள் இக்கல்வி நிறுவனச் சேவையை புகழ்ந்து கட்டுரைகளும் வெளியிட்டிருந்தன.

ஆனால் அங்கு கற்ற மாணவர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தி மேற்குலக நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும் பிரித்தானியாவிற்கு விசா கோரிய போதும் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்த இக்கல்வி நிறுவனத்தின் பெயரில் பிரித்தானியாவில் எந்தவொரு கல்வி நிறுவனமும் இயங்கவில்லையென விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
அச்சு ஊடகங்களில் வெளியாகும் சில சிறு விளம்பரங்களில் நிறுவனத்தின் பெயரோ முகவரியோ அல்லது வேறு எந்த விபரங்களோ குறிப்பிடப்படாமல் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

அத்துடன் இவை பிரசுரமாகி சிறிது காலத்தின் பின் ஏதேனும் காரணங்களுக்காக அத்தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அவ்விலக்கங்கள் செயலிழந்து இருப்பதாகவும் குற்றஞ் சாட்டப்படுகின்றது.

கவர்ச்சிகரமான சம்பளம், இலவச உணவு, தங்குமிடம் மருத்துவ உதவிகள் எனக் கூறி பிரசுரிக்கப்படும் சிறு விளம்பரங்கள் மூலம் அநேகமான இளம் பெண்களும் இளைஞர்களும் கவரப்படுகின்றனர். இதனால் பாடசாலை கல்வியை முடித்து வெளியேறியோர் பாடசாலையை விட்டு இடைவிலகியோர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்விளம்பரதாரர்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.
 விளம்பரதாரர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை இவ்விளம்பரங்கள் வறுமையில் பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களையும் கவர்வதால் இலவச கல்வியைக் கூட தொடராது கை விட்டு வேலை பெறச் செல்கின்றனர். இந்த விளம்பரங்களும் இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைய காரணமென அது தொடர்பான ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேபோல் போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறி வைத்து விளம்பரங்கள் மூலம் களமிறங்கியுள்ளன. தலைமுடி உதிர்வதை தடுக்க, உடல் நிறை குறைவடைய, நீண்ட நாள் நோய்கள் குணப்பட மற்றும் புற்று நோய்களுக்கான மாற்று வைத்திய முறைகள் என பலவகையிலும் மருந்துவ துறையையும் ஆட்டங்கான வைக்கும் வகையில் போலி விளம்பரங்கள் உருவெடுத்துள்ளன.

பொதுவாக பல மாற்று மருந்துகளில் அனேகமானவை நிச்சயமாக பலன் தருமென நிரூபிக்கப்படாதவையாகவே இருக்கும் போது சில போலி விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் தொலைத்து வருகின்றோம்.

அதேபோல் தொப்பை குறைக்கும் கருவி, இளமையை மீண்டும் கொண்டு வரும் அழகு சாதனப் பொருட்கள், சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம், தவளை வைத்தியம், காந்த வைத்தியம், எயிட்ஸ் மூலிகை என ஒவ்வொரு நவின நோய்களுக்கும் புதுமை சேர்த்து பல பொருட்களை விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பெரும்பணம் சம்பாதித்து வருகின்றன சில கம்பனிகள்.

இதனைவிட பேய் பிசாசு விரட்ட, பிரிந்தவர் ஒன்று சேர, சேர்ந்தவரை பிரிக்க, பணம் சம்பாதிக்க என பலவற்றைக் கூறிக்கொண்டு பரிகாரம் தோசம் செய்து தரப்படுமெனவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இதனை நம்பி பெரும்பாலான குடும்பப் பெண்கள் மோசடிகளுக்குள்ளாகி வரும் சம்பவங்களும் ஊடக வாயிலாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. எம்மால் உருவாக்கப்படும் பிரச்சினைகளோ அல்லது எம்மை சார்ந்தோரால் உருவாகும் பிரச்சினைகளுக்கு எம்மால்  மட்டுமே தீர்வு காண முடியும். இவ்வாறு இருக்கையிலே ஏன் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு ஏமாறுகின்றனர்.

பல துறைகளில் காணப்படும் குறைபாடுகளை மறைத்து நுகர்வோர் சந்தைக்கு விடுவதற்கு அநேகமானோர் கையில் எடுப்பது விளம்பரங்களாகும். திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பரங்களில் தோன்றி பொருட்களை விற்க உதவுகின்றனர். ஒரு பொருளினை அறிமுகப்படுத்தும் விளம்பரத்திற்கு விவேகானந்தர், விபுலானந்தர் போன்ற சமயத் தலைவர்கள் போலவோ அல்லது சமூக சேவையாளர்கள் போலவோ தோன்றினால் அவ்விளம்பரத்திற்குபெரிதாக ஆதரவு கிடைப்பதில்லை. இவ்வாறானவர்களால் சொல்லப்படும் கருத்துகளை விட திரைப்பட நடிகர், நடிகை  தோன்றினாலே விளம்பரத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கின்றது.

இவர்களால் விளம்பரங்களில் அறிமுகப்படுத்தும் பொருட்களில் பல தரமற்றவையாகவே உள்ளன. அத்துடன் சில ஊடகங்களில் இதில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல என்றும் குறிப்பொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றமை வேடிக்கையான விடயமாகும்.
ஏனெனில் மறைந்து கிடக்கும் உண்மைகளை பாமர மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நியதியிலேயே ஊடகங்கள் தொழிற்படுகின்றன. இந்நிலையில் தமது ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல என்றால் இலாபம் உழைக்கும் ஒரு நோக்கிலேயே இவ்வாறான ஊடகங்கள் செயற்படுகின்றமை தெளிவாகின்றது.

அதேபோல் சமூகத்தளங்களான பேஸ்புக், ஜீமெயில், டுவிட்டர் போன்றவற்றினூடாகவும் போலி விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்நிலையிலே விளம்பரங்கள் பாதுகாப்பானவையாகவும் அனுமதியின்றி நுழையாத படியும் மேலும் முடிந்தளவு தொடர்புடையதாக இருப்பதையும் உறுதிப்படுத்த கடுமையாக பணியாற்றி வருகின்றோம் என கூகிள் தேடுதல் பொறி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் போலியான பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்லது பயனரின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவை உள்ளிட்ட தமது கொள்கைகளை மீறும் விளம்பரதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் பல்லாயிரக்கணக்கான கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் தடை செய்வதாகவும் கூகிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பின் உந்து சக்தியாக பங்களிப்புச் செய்து வருகின்றவை விளம்பரங்கள். ஆனால் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் வர்த்தக மயமாக்குதல், பொது அமைவிடங்களை தனியார்மயப்படுத்துதல், விரும்பம் மற்றும் வாழ்க்கை முறைகளின் மாற்றம், சுற்றுச்சூழல் மீது மேற்கொள்ளப்படும் எதிர்மறை தாக்கம் உட்பட போதுமான அளவில் விளம்பரங்கள் மீது கவனம் செலுத்தப்படாமையாலேயே போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற உண்மைத்தன்மை இல்லாத விளம்பரங்களை நம்பி இளம் பெண்கள் தவறான வழிக்குச் செல்வதுடன் பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். அத்துடன் அதிக இளைஞர்கள் பண மோசடிகளுக்கும் உள்ளாகின்றதாக பொலிஸில் முறைபாடுகள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் உறுதிப்படுத்திய பிறகே அவை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து தீர விசாரிக்காது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆபத்தானவையாகவே முடியும்.
இந்நிலையில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் போலி விளம்பரங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் பொருட்கள், வியாபார நோக்க தயாரிப்புகள் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் தொடர்புபட்ட விடயங்கள் மக்களை சென்றடைய வேண்டுமானால் விளம்பரங்கள் என்பது அவசியம். ஒரு விளம்பரத்தின் ஊடாகவே அப்பொருளை அல்லது நிறுவனங்களை பிரபல்யப்படுத்தி மக்களை அதன்பால் கவர்ந்திழுக்க  முடியும். ஆனால் இந்த விளம்பரங்களை போலிகளும் மோசடி பேர்வழிகளும் பயன்படுத்துவதால் தரமான பொருட்கள் நாணயமான நிறுவனங்களின் விளம்பரங்களைக் கூட மக்கள் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விளம்பரங்களை அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பிரசுரிக்கும் போதோ அல்லது ஒளி, ஒலி பரப்பும் போதோ அவை தொடர்பிலான உண்மைத்தன்மைகள் தரம் போன்றவற்றை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பதிவுகளை உறுதி செய்வது அவசியம். இதன்மூலம் தமது வாசகர்கள், நேயர்கள், ரசிகர்களை இந்த அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பாதுகாப்பதுடன் தமது நம்பகத்தன்மையையும் மக்களிடத்தில் மேலும் அதிகரிக்க முடியும்.

இலங்கையில் ஒருவாரத்தில் உருவாகும் ஐந்து லட்சாதிபதிகள்


சா.சுமித்திரை

இலங்கையைப் பொறுத்தவரையில்  உழைத்து வாழ வேண்டும் என நினைப்பவர்களைவிட அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் தான் அதிகம் என நினைக்குமளவுக்கு அதிர்ஷ்டலாப சீட்டுகளின்  விற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன. வாரத்தின் ஏழு நாட்களும் ஏதோவொரு  பெயர்களில் பல மில்லியன் அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் விற்பனையாகி கோடிக்
கணக்கான பணத்தை லொத்தர் சாலைகள் ஈட்டிக் கொள்கின்றன.
அதிர்ஷ்டலாப சீட்டுகள் மூலம் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு பங்களிப்பைச் செய்து வருவதாக இந்த லொத்தர் சாலைகள் கூறுகின்றன. அதேவேளை, பல வறிய குடும்பங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி நிர்க்கதியாகி வீதிக்கு வரும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

 பொருளாதார நெருக்கடி, தேவைகளை விட அதிகரித்து வரும் விருப்பங்கள், இயந்திரங்களுடனான போட்டிகள் என பலவற்றுக்கும் முகம் கொடுத்து கடல் பேரலைகளுக்குள் சிக்கியவர்களாக வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றோம். அச்சவால்களை இலகுவாக முறியடிக்க முக்கிய  தேவையாகவுள்ள பணத்தைப் பெற இந்த அவசரமான உலகில் உறக்கத்தைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து
கொண்டிருக்கின்றோம்.

தன்னம்பிக்கையுள்ள கடின உழைப்பாளிகளோ அல்லது வேலையில்லாத சோம்பேறிகளோ தமது நிறைவான வாழ்வாதாரத்தை முன்னடத்திச் செல்ல பணம் அவசியத் தேவையாகவுள்ளது. பணத்தை மையப்படுத்தியே குடும்பங்களுக்குள் சச்சரவுகள், சமூகப் பிரச்சினைகள், தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள் எனப் பல துரதிர்ஷ்டமான சம்பவங்களும் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையிலேதான் அதிர்ஷ்ட தேவதை உருவிலே பணம் வீட்டுக் கதவைத் தட்டாதா என ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். மனிதனின் பண்டமாற்று வியாபாரத்தை இலகுவாக்க ஒரு அலகாக அவனாலேயே வெற்றுத் தாள்களில் அச்சடிக்கப்பட்ட பணம் என வரையறுக்கப்பட்ட தாள்களுக்காகவே பல போராட்டங்களைச் சந்திக்கின்றமை வேடிக்கையானதுதான். ஆனால், பணம் என்ற இலக்கைக் கொண்டே உலகில் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கையில் என்ன செய்ய முடியும்?
 இதற்கமைய சிறு மூலதனம் மூலம் அதிர்ஷ்ட வடிவில் பணத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து இலட்சாதிபதிகளாக்குவோமெனக் கூறிக் கொண்டு உலகின் பல நாடுகள் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இலங்கை, இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது அபிவிருத்தி கண்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்றவற்றிலும் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முறைகளுக்கு அதிக வரவேற்புக் காணப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு சட்ட திட்டங்களுக்கேற்ப ஒரு நியதி, நிபந்தனைகளை வரையறுத்து அவற்றின் கட்டுப்பாட்டுகளின் கீழ் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 இதேவேளை, சில நாடுகளில் தனியாரின் அனுசரணையுடனும் இது நடைபெறுவதுடன் சட்டவிரோதமான அதிர்ஷ்டலாப சீட்டு விற்பனைகளும், சீட்டிழுப்புகளும் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், இதுபோன்ற முறைகளில் பாரியளவான மோசடிகளே இடம்பெற்று வருகின்றமையால் அதற்கான வரவேற்பு அந்நாட்டு மக்களிடையே கிடைக்கப்பெறுவதில்லை. இவை ஒரு சில குறுகிய காலங்களிலேயே மழைக்கு முளைக்கும் காளான்கள் போல வந்து  பின்னர் காணாமல் போய் விடுகின்றன.
 எமது நாட்டைப் பொறுத்தவரை சட்டத்துக்கு முரணான சிறுசிறு அதிர்ஷ்டலாப சீட்டு விற்பனைகளும், சீட்டிழுப்புகளும் இடம்பெற்று வருகின்ற போதிலும் அவற்றினால் பாரிய மோசடிகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவரவில்லை.

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு முறையும் ஒரு சூதாட்டமாகவே பார்க்கப்படுகின்ற போதிலும் இலங்கை அரசின் மேற்பார்வையின் கீழ் சட்ட மூலங்களாலும் வரையறுக்கப்பட்டுள்ளமையால் இம்முறை மூலம் பொது மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

 அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை என இரு அங்கீகாரம் பெற்ற சபைகள் இயங்குகின்றன. இவற்றினூடாக பல பெயர்களில் பல்வேறு நோக்கங்கள் கருதி தினமும் அதிர்ஷ்டலாப சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வாசனா சம்பத, ஜயோதா, சனிதா வாசனா, சனிக்கிழமை அதிர்ஷ்டம், சூப்பர் போல்ட், ஜனஜய, கொவிசெத, ரணவிரு எனப் பல பெயர்களில் வாரத்தின் ஏழு நாட்களும் சீட்டிழுப்புகளை நடத்தி வருவதுடன், நாட்டின் அபிவிருத்தி இலக்குக்கென கோடிக்கணக்கான பணத்தை வழங்கி அதிர்ஷ்டசாலிகளை உருவாக்கி வருகின்றன.

அந்த வகையில் 50 ஆண்டுகளை நெருங்கும் இலங்கையில் தேசிய லொத்தர் சபையானது நாட்டு மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மக்களினூடாக பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.

ஒரு வாரத்திற்கு 5 இலட்சாதிபதிகளை உருவாக்கி வருவதுடன் குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களையும் உருவாக்கும் நோக்கிலேயே அதிர்ஷ்டலாப சீட்டுக்களை விற்பனை செய்து வருவதாக தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் எம்.எஸ். கருணாரட்ண தெரிவிக்கிறார்.
 முன்னைய ஆண்டுகளில் 10 பில்லியன் ரூபா வருடாந்த கையிருப்பு மாற்றாகவிருந்த போதிலும் கடந்த 2012 இல் 12 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

 அத்துடன் கடந்த வருடம் மட்டும் 10.9 பில்லியன் மில்லியன் அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த  அவர் இச்சீட்டுக்களை விற்பனை செய்யவென 27 மாவட்ட பங்காளர்களும் 2700 சிறுமுகவர்களும், 300 நிறுவன ஊழியர்களும் பணியாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

 இதேவேளை ஒரு முகவர் ஒரு அதிர்ஷ்டலாப சீட்டினை விற்பனை செய்தால் 3 ரூபா 50 சதம் தரகுப் பணமாக வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
 அதேபோல 1981 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி முதல் அபிவிருத்தி லொத்தர் சபையும் மக்களின் வாழ்வை வழப்படுத்தி வருகின்றது. இதுவும் தனது ஆரம்பத்திலிருந்து பல மில்லியன் ரூபாவை பணப்பரிசுகளாகவும் மேலும் பல மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கும் இலாபமாக வழங்கி வருகின்றது.

கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கு மேலதிகமாக 10, 20 இலட்சம் உள்ளிட்ட வெவ்வேறு பெறுமதியிலான பரிசுகளை வென்ற இலட்சாதிபதி வெற்றியாளர்களையும் இச்சபை உருவாக்கியுள்ளது.

 எனவேதான் கடந்த 5 வருட காலப்பகுதிகளில் இச்சபைகள் 4565.27 மில்லியன் ரூபா இலாபமீட்டியது என கடந்த வருடம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.  அபிவிருத்தி லொத்தர் சபை 2009 இல் 9014.82 மில்லியனும், 2007 இல் 860.06 மில்லியன் ரூபாவும், 2008 இல் 731.22 மில்லியன் ரூபாவும், 2009 இல் 726.18 மில்லியன் ரூபாவும், 2010 இல் 1081.82 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியது. அதேபோல தேசிய லொத்தர் சபை 2006 இல் 58.32 மில்லியன் ரூபாவும், 2007 இல் 70.76 மில்லியன் ரூபாவும், 2008 இல் 43.04 மில்லியன் ரூபாவும், 2009 இல் 45.51 மில்லியன் ரூபாவும், 2010 இல் 31.63 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 இதேவேளை இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் உண்டு. என்றோ ஒருநாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பி பலர் தினமும் சிறு
பணத்தை செலவிட்டு அதிர்ஷ்டலாப சீட்டுக்களை கொள்வனவு செய்கின்றனர். பல இலட்சக் கணக்கானோரிடமிருந்து அதிர்ஷ்டம் என்ற பெயரில் சுரண்டப்படும் கோடிக்கணக்கான பணத்திலேயே வாரத்திற்கு 5 இலட்சாதிபதிகள் உருவாக்கப்படுகின்றனர்.

அபிவிருத்தி லொத்தர் சபையோ அல்லது தேசிய லொத்தர் சபையோ நாட்டு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதைவிட அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை வாங்கும் ஒவ்வொரு கொள்வனவாளர்களே பங்களிப்புச் செய்கின்றனர் என்றே கூற வேண்டும்.

 அதிர்ஷ்டம் என்ற போதைக்குள் இருக்கும் அதிர்ஷ்டலாபச் சீட்டுக் கொள்வனவாளர்கள் தம்மை அறியாமலே தினமும் குறிப்பிட்டதொரு தொகையை செலவு செய்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்காற்றி வருகின்றனர்.

 அதிர்ஷ்டத்தை நம்பும் பல இலட்சம் பேரில் சிலரே அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். பல இலட்சம் பேர் செலவிடும் தொகையில் ஒரு சிலருக்கு சில இலட்சங்களை கொடுப்பதால் பெரிதாக என்ன நடந்து விடப்போகின்றது. ஆயிரக்கணக்கானோர் நன்மையடைய இலட்சக் கணக்கானோர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேபோல அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கிய ஒருவருடைய எண்ணுக்கு ஒரு கோடி ரூபா அதிர்ஷ்டமாக விழுந்துள்ளது. இதன்மூலம் குறித்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இந்நிலையில் அவருடைய மனநிலை கொஞ்சம் கூட வர்ணிக்க முடியாதளவுக்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

 ஆனால், அதிர்ஷ்டம் கிடைத்த இலக்கத்துக்கு முன்போ அல்லது அடுத்து வரும் ஒரு இலக்கமோ  எழுத்தோ மாறியமையால் ஒரு கோடி ரூபா பெறும் அதிர்ஷ்டத்தை இழந்தவரின் மனநிலையை எப்படிச் சொல்ல முடியும்.

 அதாவது அ 2013 என்ற இலக்கமுள்ள அதிர்ஷ்டலாப சீட்டுக்கே ஒரு கோடி ரூபா விழுந்துள்ளதெனில், 2014 அல்லது அ 2012 என்ற எண்களைக் கொண்ட அதிர்ஷ்டலாப சீட்டுகளை வாங்கியவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும்.
எனவே, எதிர்வு கூறப்படாத அதிர்ஷ்டத்தை நம்பி வருமானத்தை இழக்க முடியும்? இதனால் மத்திய தர வர்க்கத்தினரும், வறிய மக்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

 வாரம் 5 இலட்சாதிபதிகளை உருவாக்குவதாக கூறும் லொத்தர் சபைகள் இதுவரை காலமும் எத்தனை மக்களினதோ அல்லது பிச்சைக் காரர்களினதோ  வாழ்க்கையை ஒளியேற்றி வைத்துள்ளன? இச்சம்பவங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும் என்பது போல சாதாரண வர்க்கத்தினர் அதிர்ஷ்டலாப சீட்டுகளை வாங்கி  வைத்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். சில வீடுகளில் இவ்வாறு வாங்கப்படும் அதிர்ஷ்டலாப சீட்டுகள் சுவாமிப் படங்ளுக்கு ஒப்பானவையாகவே பாதுகாக்கப்படுகின்றன. அப்படிப் பாதுகாக்கின்ற போதிலும் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கடவுள்கள் கூட கைவிட்டு விடுகின்றனர்.

 இதேபோல இவ்வாரத்திற்கு இவ்வளவு பரிசுத் தொகை எனக் குறிப்பிடப்படும் பெருந்தொகை அநேகமாக யாராலும் வெற்றி கொள்ளப்படுவதில்லை. இது மக்களைக் கவர்ந்திழுப்பதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகின்றது.

என்றோ ஒருநாள் எமக்கும் அதிர்ஷ்டம் இந்த அதிர்ஷ்டலாபச் சீட்டுகளின் வடிவில் வருமெனக் காத்திருப்பவர்களின் மனநிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.  அதேபோல அதிர்ஷ்டலாபச் சீட்டுகள் கிடைக்கும் இலாபங்கள் உரிய முறையிலே அந்தந்த துறைகளுக்கு சென்றடைகின்றதா என்பதும் கேள்விக்குறியே.

 அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் மூலம்  கோடீஸ்வரர்கள் ஆனவர்களில் எத்தனைபேர் அப்பணத்தை முறையாக. உரியவகையிலும் பணத்தை செலவிட்டுள்ளனர். சும்மா வந்த பணந்தானே என களியாட்ட நிகழ்ச்சிகளுக்கும் தேவையில்லாமலும் செலவிடுகின்றனர். கஷ்டப்பட்டு உழைக்கும் பணமே நிலையானது. அதன் மூலம் கிடைப்பதே உண்மையான மகிழ்ச்சி தரும்.

 ஏனெனில், பணத்தை சேமித்து வைத்து பாதுகாப்போரில் எத்தனைபேர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் எனச்சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, அதிர்ஷ்டலாபச்சீட்டு குலுக்கல் முறைகளால் நன்மை சொல்லக் கூடியதாக உள்ளபோதிலும் பாரிய  எதிர்விளைவுகளே காணப்படுகின்றன.

 இவைமூலம் நாட்டு மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு பாரிய பங்களிப்பு கிடைக்கின்றது என சொல்லிக் கொண்டிருக்காது அம்முறையில்  உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அவை தீர்க்கப்பட வேண்டும். இதனால் அதிர்ஷ்டத்தை நம்பி தமது வருமானத்தை இழக்கும் குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.