சனி, 30 நவம்பர், 2013

மற்றொரு போருக்கு தூபமிடுகிறதா அமெரிக்கா?

சா.சுமித்திரை

ஜப்பானில் இரு தீவுகளை உள்ளடக்கிய வான் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கியுள்ளதாக சீனா கடந்தவாரம் அறிவித்திருந்தது. 

ஏற்கனவே, சர்ச்சைக்குரிய தீவு விவகாரத்தால், சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் இரு தீவுகளை உள்ளடக்கிய சீனாவின் வான் பாதுகாப்பு வலயம் சர்வதேச கவனிப்புக்குள்ளாக்கியுள்ளது.

கிழக்கு சீனக் கடலின் பெரும் பகுதியை உள்ளடக்குவதுடன், சீனாவினால் டயாகு என அழைக்கப்படுவதும், ஜப்பானினால் சென்யாகு என அறியப்படுவதுமான சர்ச்சைக்குரிய தீவுகளும் இந்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தீவுகள் பெய்ஜிங்கிங்கும், டோக்கியோவிற்கும் இடையிலான மையப்பகுதியில் அமைந்துள்ளன.

கிழக்கு சீனக்கடல் பிராந்தியத்தில், சீனா குறிப்பிடும் வான் பாதுகாப்பு  வலயத்தில் பறந்து செல்லும் பிறவிமானங்கள் சீனாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், இந்தப் பகுதிக்காக ரோந்து விமானங்கள் அனுப்பப்படும் என்றும் சீன அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆயினும், வான் பாதுகாப்பு வலயத்தினால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளிலிருந்து ஜப்பானை பாதுகாக்க எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுமென வாஷிங்டன் தெரிவித்திருந்தது.

சீனாவின் இந்தச் செயலை ஜப்பான் மிகவும் ஆபத்தானது என்று விபரித்துள்ளது. ஏற்கனவே, இவ்விரு நாடுகளுக்குமிடையே தீவுக்களுக்கான உரிமைப் பிரச்சினை, கடற்பரப்பு ஆளுகை, எல்லை போன்றவை பிரச்சினைக்குரியனவாக இருக்கும்போது, சீனாவின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு பெரும் ஆத்திரத்தை தூண்டுவதாகவே உள்ளது.

இது குறித்து, தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெரி சீனாவின் இந்த ஒரு தலைபட்சமான முடிவு இந்தப் பகுதியில் அழுத்தங்களை அதிகரித்து, ஜப்பானுக்கு பாதகமாக முடியுமெனவும் எச்சரித்திருந்தார்.

சீனாவிடம் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாத அல்லது சீனாவின் உத்தரவுகளை ஏற்காத பிறநாட்டு விமானங்கள் மீது சீனா நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கேட்டிருந்தார்.

இதேவேளை, அமெரிக்கா தங்களின் நட்பு நாடான ஜப்பானைக் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

அக்கூற்றினை மெய்ப்பித்துக் காட்டுவது போல, சீனாவின் புதிய வான் பாதுகாப்பு செயற்பாடுகளை மீறி, கிழக்கு சீனக்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு மேலாக பி52 ரக அமெரிக்க போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை பறந்துள்ளன.

தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனைகளை நடத்திவரும் நிலையிலேயே பி52 ரக அமெரிக்க போர் விமானங்கள் அத்தீவுகளினூடாக பறந்துள்ளன.

தடைசெய்யப்பட்ட வான் எல்லை வழியாக, எவ்வித முன்னறிவிப்புமின்றி பி52 ரக இரண்டு குண்டு வீச்சு போர் விமானங்கள் பறந்த விவகாரம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்த பதில் அறிக்கையையோ கருத்துக்கனையோ வெளியிடவில்லை.

குவாமிலிருந்து ஒரு போர் விமானம் புறப்படும் அதேவேளை இன்னொரு போர் விமானம் குவாமை வந்தடையும் வகையில் ஒத்திகை பார்க்க நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். அதன் படியே செவ்வாய்க்கிழமை அந்த ஒத்திகை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் இதற்கான காரணத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும், சென்யாகு பகுதியில் இதுபோன்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமெனவும் பென்டகன் குறிப்பிட்டிருந்தது.

சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தினை பிரகடனப்படுத்தி மூன்று நாட்களுக்குள்ளேயே, அமெரிக்காவின் பி52 ரக இரண்டு குண்டு வீச்சு போர் விமானங்கள் சீன செய்மதிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெற்றிகரமாகப் பறந்து பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.

அதேவேளை, இந்த வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலாக, தென்கொரியா, ஜப்பானின் போர் விமானங்களும் பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

சீனாவிற்கு எந்தத் தகவல்களும் தெரிவிக்காத நிலையிலேயே இவை பறந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் வான் பாதுகாப்பு எல்லையினூடாக விமானமொன்று வழமையான கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜப்பானிய அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்கொரியாவும் தங்கள் விமானத்தை அவ்வலயத்தினூடாக வியாழக்கிழமை பறக்கவிட்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு வான் வழியிலான அச்சுறுத்தல் உயர்மட்டத்திலே அதிகரித்துள்ளதாகக்கூறி அதனை கட்டுப்படுத்தும் வகையிலே அப்பகுதிக்கு போர்க் கப்பல்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலைமையில், சீனாவிற்கும் ஜப்பானுக்குமிடையே பிரச்சினைக்கு உட்பட்ட கிழக்கு சீனக்கடல் பகுதியில் போர் மூண்டால், அமெரிக்கஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோரிக்கப்பட்டுமென வாஷிங்டன் எச்சரித்துள்ளது.

ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தனது செயற்பாடுகளில் அதிகளவில் ஆசிய நாடுகளுக்கே முன்னுரிமை அளித்துவரும் நிலையில், சீனக்கடல் பிராந்தியத்தில் இராணுவ அழுத்தங்களின் அதிகரிப்பு பதற்றமான நிலைமையொன்றினை தோற்றுவித்துள்ளது.

சீனாவினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு எல்லை விதிமுறை மூலமாக, கிழக்கு சீனா, தென் சீனக் கடல்களில் சீனாவிற்கும் அதன் அயல் நாடுகளான ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்றவற்றிற்கும் இடையே நீண்டகாலமாக புகைந்து கொண்டிருக்கும் நில உரிமை மோதல்களை வாஷிங்டன் தூண்டிவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், தனது வான் பாதுகாப்பு பிராந்தியத்தில் சீன விமானங்கள் பறப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. சீனாவின் ஆட்களற்ற விமானமான டிரோன்களை சுட்டு வீழ்த்துவதாகக் கூட, பிரதமர் ஷின்ஷோ அபே தலைமையிலான அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சீனாவின் தற்போதைய நிலைப்பாடு என்னவோ, அது போலவே ஜப்பானும் அப்பொழுது நடந்து கொண்டது.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், ஒகினாவா பிராந்தியத்தில் பாரிய இராணுவ ஒத்திகையை ஜப்பான் மேற்கொண்டிருந்தது. போர் கப்பல்களுடன் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் 350 போர் விமானங்களும் சீனக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவது போன்று பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு முன்னர், வான் பாதுகாப்பு வலயமொன்றை சீன அரசாங்கம் பிரகடனப்படுத்தியதில்லை. ஆனால், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளான ஜப்பான், தாய்வான், தென்கொரியா ஆகியவை பல தசாப்த காலமாக இந்த பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வந்துள்ளன.

அக்காலப்பகுதிகளில் மௌனம் சாதித்து வந்த வாஷிங்டன், சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்தினால் ஆத்திரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்தை அமெரிக்கா கணக்கெடுக்காது எனத் தெரிவித்துள்ளது.

தானும், தனது நேச நாடுகளும் எந்த பிழைகள் செய்தாலும் அதனை சரியென வாதிடுவதே அமெரிக்காவின் வேலையாகும். இதனை மெய்ப்பிப்பது போலவே, சீன விவகாரத்தில் வாஷிங்டன் நடந்து கொண்டுள்ளது.

சீனாவின் வான் பாதுகாப்பு வலயம் தொடர்பான தவறான கணிப்பீடுகளும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் யுத்த விமானங்கள் சீனாவின் பிரகடனத்தை ஏற்று நடக்க மறுப்பதும் பிராந்திய மோதலுக்கே வழிகோலும்.

2010இற்கு பின்னர், சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இடம்பெறும் சின்னச் சின்ன சம்பவங்களையும் முக்கிய அரசியல் பிரச்சினையாக மாற்றி, அப்பிரச்சினைகளில் டோக்கியோவிற்கு தனது ஆதரவை ஒபாமா தலைமையிலான அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இந்நிலைமையில், கடந்த வருட இறுதியில், பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சின்சோ அபே, வலுவான இராணுவ தேசமாக ஜப்பானை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அபே பிரதமராக பதவியேற்ற திலிருந்தே பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்துள்ளதுடன் சீனாவிற்கெதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஜப்பானை ஒருங்கிணைப்பதையும் அதிகரித்திருந்தது.

இந்நிலைமையில் சீனாவுடன் மோதல்களை ஏற்படுத்தவே டோக்கியோ விரும்புகின்றது. ஆயினும், இவ்விவகாரம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவென அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோய் பைடன், சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரம், ஆசியாவிற்கான விஜயமொன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பைடன், ஜப்பான், தென்கொரியாவுக்கும் செல்லவுள்ளார்.

இந்நிலைமையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையேயான மோதல்கள் அல்லது நேரடிப் போர் ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயினும், இவ்விவகாரத்தை தணிக்கும் முயற்சியில் பைடன் ஈடுபடுவாரென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள போதிலும், அது பெரிதும் சாத்தியப்படப் போவதில்லையெனக் கூறப்படுகிறது.

ஏனெனில், சீன விவகாரத்தில் எப்பொழுதுமே அமெரிக்கா ஒரு எதிரி போலவே நடந்து வந்துள்ளது. அதேபோல, சீனாவிற்கெதிராக அதன் அயல் நாடுகளையும் தூண்டிவிட்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவுடனான அமெரிக்காவின் பேச்சு வார்த்தை எவ்வாறு வெற்றியளிக்கும் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சீனா தனது தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் பிரகடனத்திற்கு முன்பே பல நாடுகள் இதுபோன்ற வலயத்தினை பேணி வருகின்றன.

குலாம், ஹவாய், அலஸ்ஹா மற்றும் முக்கிய தொடர் தீவுகளை உள்ளடக்கிய வலயம் உள்ளடங்கலாக நான்கு தனி வான் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அவற்றினை தற்பொழுதும் அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது. அதேபோல பிரிட்டன், ஜப்பான் மற்றும் கனடாவிலும் இதுபோன்ற வலயங்கள் காணப்படுகின்றன.

இந்தத் தருணத்தில் சீனாவின் வான் பாதுகாப்பு வலயத்திற்காக கண்டனம் வெளியிடுவது தேவையற்றதொன்றாகும். இல்லையெனில் சர்வதேச விதிகளுக்கு அமைய அனைத்து நாடுகளும் இந்த வலய பிரகடனங்களை கைவிட வேண்டும். அவ்வாறு இயலாதெனில், சீனா மீதான அமெரிக்காவின் இலக்கிற்கு பகடைக்காய்களாக ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்வான் போன்ற நாடுகளை பயன்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

வியாழன், 28 நவம்பர், 2013

காணாமல் போகும் சில்லறைகள்


சா. சுமித்திரை 

போதியளவு சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான பாவனை சுற்றோட்டத்தில் சமமின்மை காணப்படுவதாக அண்மையில் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

நாட்டில் பயனின்றி வைத்திருக்கப்படும் நாணயக் குற்றிகளின் தொகை பல மில்லியன்களாகும். அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் நாணயக் குற்றிகளுக்கு பெரிதும் மதிப்பு வழங்கப்படுவதில்லை. இந்நிலைமையில்  கோயில் உண்டியல்களில் போடல் ,  வீட்டில் உண்டியல்களில் சேர்த்தல் இ  குபேர சிலைகள் போன்றவற்றின் மீது போடல் ,  நகைகள் செய்யவென நாணயக் குற்றிகளை உருவாக்குதல் இ  நிறை அளக்கப் பயன்படுத்தல் ,  பொருட் கொள்வனவு , பஸ் போக்குவரத்துகளின் போது மிகுதி சில்லறைகள் வழங்காமை ,  மூட நம்பிக்கைகளுக்கு பயன்படுத்தல் போன்ற பல காரணங்களால் நாட்டில் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளின் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது.

20.6 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் 15 கோடியே 74 இலட்சத்து 45 ஆயிரத்து 382  மில்லியன் பத்து ரூபா நாணயக் குற்றிகள் பயன்பாட்டுக்காக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அத்துடன் 71 கோடியே 13 இலட்சத்து 34 ஆயிரத்து 933 மில்லியன் ஒரு ரூபாய் நாணயக் குற்றிகளும் 50 கோடியே 33 இலட்சத்து 68 ஆயிரத்து 315 மில்லியன் இரண்டு ரூபா நாணயக் குற்றிகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

மேலும் 60 கோடியே 43 இலட்சத்து 67 ஆயிரத்து 758 மில்லியன் ஐந்து ரூபா நாணயக் குற்றிகளும் 27 கோடியே 14 இலட்சத்து 22 ஆயிரத்து 434 மில்லியன் ஐம்பது சதக் குற்றிகளும் மக்களின் பாவனைக்காக புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்  சுட்டிக்காட்டியிருந்தது. 

இருப்பினும் இந்நாணயக் குற்றிகளை மக்கள் பயன்படுத்தாது அவற்றினை தேவையற்ற வகையில்  சேமித்து வைப்பதால் அல்லது பாவனைக்கு உட்படுத்தாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

கோயில்களிலோ அல்லது தேவாலயங்களிலோ அல்லது ஏனைய பல மதம் சார்ந்த தலங்களிலுள்ள உண்டியல்களில் போடப்படும் சில்லறை நாணயங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் மாத ,  வருடக் கணக்கில் அவ்வாறே காணப்படுகின்றன.

அதேபோல் வீடுகளில் சிறுவயது முதலே சேமிக்க பழக்க வேண்டுமென்ற நோக்கில் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதேசமயம் வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கும் சிறார்களுக்கு அந்தந்த வங்கிகளினூடாகவே உண்டியல்களும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.
 உண்டியல்களில் பணம் சேர்ந்த பின்னர் அத்தொகையினை வங்கிக் கணக்கில் வைப்பிலிடவே உண்டியல்கள் வழங்கும் திட்டத்தினை வங்கி முகாமைத்துவங்கள் நடைமுறைப்படுத்துகின்றன.


ஆனால் ,   சிறுவர்களோ அல்லது பெரியவர்களோ அவ்வாறு செய்வதில்லை. மாறாக ஒரு அலுமாரியில் அத்தனை உண்டியல்களிலும் பணத்தைச் சேர்த்து அடுக்கி வைத்து விடுவார்கள்.

அதேபோல் குபேர சிலைகள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு முன்னால் சில்லறை நாணயக் குற்றிகளை  சேர்த்து வைக்கும் பழக்கமும் காணப்படுகின்றது.  குபேர சிலைக்கு நாணயக் குற்றிகள் சேர சேர வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை எம்மில் பலரிடம் காணப்படுகின்றது.
திருப்பதி ஏழுமலையானுக்கே குபேரன் கடன் கொடுத்ததாக புராண கதைகளுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.


மேலும் குபேர இயந்திரம் ,  குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்குமென மக்கள் நம்புகின்றனர். அதேபோல் சிங்களவர்கள் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இராவணனின் ஆட்சிக்கு முன்பு இலங்கையை ஆண்டதாகவும் சிங்களவர்களிடம் நம்பிக்கை உள்ளன. இதனாலேயே இலங்கையில் குபேர சிலைகளில் சில்லறை குற்றிகள் போடும் வழக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

 இதேவேளை , புதிதாக வெளியிடப்படும் நாணயக் குற்றிகளையும் நாணயத் தாள்களையும் சேகரித்து வைத்திருக்கும் பழக்கமும் சிலரிடம் காணப்படுகின்றது. இதுவும் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளின் தொகை அதிகரிப்புக்கு காரணமாகும். 

இதேபோல் நாணயக் குற்றிகளை உருவாக்கி நகைகள் ,  பிளேட்டுகள் மற்றும் பிற பொருட்களும்  தயாரிக்கப்படுகின்றன.  இந்தியாவில் கடந்த வருடம் நாணயக் குற்றிகளுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. பிளேட்டுகள் தயாரிப்புக்காக  சென்னையில் சிறு வியாபாரிகளிடமும் சந்தைகளிலும் நாணயக் குற்றிகள் மொத்தமாக வாங்கிச் செல்லப்படுகின்றமையே இத்தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமென்பது இதன்போது அம்பலமாகியிருந்தது.

இந்தியாவில் இந்த நாணயக் குற்றிகளை சிலர் அதிக விலை கொடுத்து சில்லறை வியாபாரிகளிடமும் நடைபாதை வியாபாரிகளிடமும் வாங்கிச் செல்கின்றனர். இதன் விளைவாக மறைமுகமாக மக்களிடமிருந்து நாணயக் குற்றிகளின் பயன்பாடு குறைந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது.

 நூறு ரூபா நாணயக் குற்றிகள் 200 ரூபாவிற்கு வாங்கப்படுகிறது. இந்த நாணயங்களிலுள்ள ஒருவகை உலோகம் பிளேட்டு தயாரிக்க பயன்படுகின்றது என்பதால் அவை  வாங்கப்படுகின்றன. பிளேட் தயாரிப்புக்கான  மூலப் பொருட்களை வாங்கும் விலையை விட நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தினால் குறைவான மூலதனத்தில் அதிக இலாபம் ஈட்டலாம் என்பதாலேயே இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வராத வகையில் இடம்பெற்று வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட ஒரு ரூபா நாணயக் குற்றி மற்றும் 5 ரூபா குற்றிகளை உருக்கி தங்க நகைகள் போலவே சங்கிலி ,  வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவொரு சட்ட விரோத செயற்பாடென தெரிந்தும் பலர் இது தொடர்பில் எதனையும் அலட்டிக் கொள்வதில்லை. 

 குறிப்பாக கொழும்பு  யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களில் ஏறும் சில நடைபாதை வியாபாரிகள்  நாணயக் குற்றிகளில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி அவற்றுக்கு குறித்த கால உத்தரவாதமும் வழங்கி 100 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியில் விற்பனை செய்கின்றனர்.

 அப்பஸ்களில் எத்தனையோ அதிகாரமிக்க  உத்தியோகத்தர்கள் பயணித்துக் கொண்டிருந்தாலும் அந்நேரத்தில் இவ்விடயம் தொடர்பில் எந்தக் கவனமும் செலுத்தாமை வேதனை தரக் கூடிய விடயமாகும். இதேபோல் சில்லறைக் கடைகளிலோ அல்லது பல்பொருள் அங்காடிகளிலோ பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதிச் சில்லறை பணம் வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக  தேநீர் கடையொன்றில் கோப்பி ,  பால் ,  தேநீரின் விலை 36 ரூபா எனில் அதற்கு 40 ரூபா கொடுப்பதால் நான்கு ரூபா சில்லறை வழங்கப்படுவதில்லை. மாறாக சொக்லேட்டு ,  ரொபிகளை கொடுத்து சமாளிக்கின்றனர்.

இந்த சொக்லேட்டுகளை வாங்க மறுப்போருக்கு மட்டுமே சில்லறை நாணயங்களை கொடுக்கின்றனர். சொக்லேட்டுகளை கொடுப்பதால் அவற்றின்  விற்பனை அதிகரிப்பதோடு ,  அதில்வரும் இலாபமும் சேர்ந்து கிடைக்கின்றது. அதேசமயம் சில்லறைக்குப் பதிலாக கிடைக்கும் சொக்லேட்டுகளில் சில தரமற்றவையாகவும் உள்ளதுடன் , வாடிக்கையாளர்களையும் நீரிழிவு நோயாளிகளாகவும் மாற்றவும் செய்கின்றது.

அதேபோல் பஸ்களில்  சில்லறைகள் முற்றிலுமாக கிடைப்பதில்லை. பஸ் ஆரம்ப கட்டணம் 9 ரூபாவாகும். இம்மாத ஆரம்பத்திலும் பல காரணங்களைக் கூறிக் கொண்டு பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால் இந்த ஆரம்பக் கட்டணத்தின் பெறுமதி மட்டும் உயர்த்தப்படவில்லை.

 ஏனெனில் 9 ரூபாவென டிக்கெட் கொடுக்கப்பட்டாலும் மிகுதி 1 ரூபா சில்லறை வழங்கப்படமாட்டாது. ஆனால் பஸ் நடத்துனர்கள் 1 ரூபா குற்றிகளை கைகளில் வைத்திருப்பர்.இந்நிலையில் மிகுதிப் பணத்தை கேட்டால் தகாத முறையில் நடந்து கொள்வர்.

இதேவேளை சில்லறை நாணயக் குற்றிகள்  மூட நம்பிக்கைகளுக்கும் சமய விடயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. இந்த இடத்தில் காசு எறிந்தால் நினைத்த காரியம் நடைபெறுமென யாரும் கூறினால் கைப்பைகளிலுள்ள அனைத்து சில்லறைக் காசுகளும் அங்கு எறியப்படும்.இவ்வாறு கடல்களிலும் நீர் நிலைகளிலும் சில்லறைக் காசுகள் வீசப்படுகின்றமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனை விட புதையல் கிடைக்க வேண்டுமாயின் ஒரு தொகை சில்லறை நாணயங்களை புதைக்க வேண்டும் என்றதொரு  மூட நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகின்றது.

இதனை விட இந்து ஆலயங்களில் வளர்க்கப்படும் யாகங்களின் போது  சில்லறை நாணயக் குற்றிகள் தீயுடன் போடப்படுகின்றன. இவ்வாறு பல காரணங்களால் சில்லறை நாணயக் குற்றிகளின்  மிகப்பெரிய தொகை பயனின்றி காணப்படுகின்றன.

சில்லறை நாணயக் குற்றிகளின் தட்டுப்பாடு பல மடங்காக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் தற்போது தாள் காசுகளில் பவனை அதிகரித்துக் காணப்படும்  அதேவேளை ,   சில்லறை நாணயங்களின் பாவனை குறைவடைந்துள்ளது. அதேசமயம் 500 ரூபா தாள் அச்சிடப்பட்டு வெளியானதையடுத்து 1 ரூபா ,  2 ரூபா ,  5 ரூபா குற்றிகள்  குறைந்ததாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலைமையில் கோயில் உண்டியல்களிலும் பாவனைக்குப் பயன்படுத்தப்படாமல் வீட்டின் ஓரங்களிலும் சில்லறை நாணயங்கள் காணப்படுகின்றன.

 இதேவேளை ,  அண்மைக்காலமாக யாழ்ப்பாண பஸ் நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களில் சில்லறை நாணயக் குற்றிகள் இல்லாத நிலை காணப்படுவதனால் பிரயாணிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை  எதிர்நோக்கி வருகின்றனர்.

சில்லறை நாணயக் குற்றிகள்  இல்லாவிடின் கோயில்களுக்கு அருகிலிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு சிலர் 10 ரூபா , 20 ரூபா தாள்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இந்நிலைமையில் நாம் ஒரு ரூபா குற்றியையோ அல்லது 2 ரூபா குற்றிகளையோ கொடுத்தால் ஆத்திரத்தில் அவர்கள் எம்மிடமே திருப்பித்தரும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.


மேலும் சிலர் பிச்சைக்காரர்களிடம் சென்று காசு மாற்றிச் செல்கின்றனர். இந்நிலைமையில் பிச்சைக்காரர்களிடமே  சில்லறை நாணயக் குற்றிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.நாட்டில் பயனின்றி வைத்திருக்கப்படும் நாணயக் குற்றிகளின் தொகை மிகப் பெரியது. அவற்றை சுற்றோட்டத்திற்கு விடுவதன் மூலம் அவற்றைப் புதிதாக வார்ப்பதற்கு ஏற்படும் பெரும் தொகைப் பணத்தை சேமிக்க கூடியதாகவிருக்கும். 

புதிய நாணயக் குற்றிகளை வார்க்க ஏற்படும் குறிப்பிடத்தக்களவு செலவு நீண்டகாலத்தில் மறைமுகமாக மக்களை பாதிக்குமென இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் பணப் பெறுமதியில் பயனின்றி வைத்திருக்கும் நாணயக் குற்றிகளால் பாரிய துண்டு விழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த மத்திய வங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதேவேளை ,  இதன் முதற்கட்டமாக சில்லறை  நாணயக் குற்றிகள் அதிகம் தேங்கி நிற்கும் முக்கிய இடமான கோயில்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சில்லறை நாணயக் குற்றிகளின் தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொரு துறைகளிலுமுள்ள ஒவ்வொருவருமே காரணமாக உள்ளோம். இவ்விடயம் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் உடனடி கவனமெடுக்க வேண்டியது இன்றைய தேவையாகவுள்ளது. 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

அமெரிக்காவின் இராஜதந்திரம் மத்திய கிழக்கில் எடுபடுமா?

ஜோன் கெரியின் விஜயம்
எழுப்பும் கேள்வி


 சா.சுமித்திரை

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், உலகின்  மிகப் பெரிய வல்லரசு நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அமெரிக்கா, அந்நிலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக   பல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகின்றது. 

அதனொரு பகுதியாகவே, அரபு கூட்டாளிகளுடனான  இழுபறியான  உறவினை புதுப்பிக்கும்  வகையிலே, பிராந்திய பதற்ற நிலைமைக்கு மத்தியிலே, மத்திய  கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கான  விஜயமொன்றினை அமெரிக்க இராஜங்க செயலர் முன்னெடுத்துள்ளார்.

கடந்த மாத ஆரம்பத்தில்  முடங்கிப் போயிருந்த அரச சேவைகள், உலக கடன் சுமை அதிகரிப்பு, ஒபாமா நலன்புரித் திட்டத்தின் தோல்வி, எட்வெட் சிநோடன் விவகாரம், நட்பு நாடுகளைக் கூட வேவு பார்த்தமை அம்பலம், கிளர்ச்சியாளர்களால்  மேற்கொள்ளப்படும் திடீர்த் தாக்குதல்கள் என நிலை  குழம்பி பேõயுள்ள அமெரிக்கா, அரபுக் கூட்டாளிகளுடனான உறவினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நவம்பர் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சவூதி அரேபியா, இஸ்ரேல், யோர்தான், மொரோக்கோ,போலந்து, எகிப்துது, மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கும் சென்று சமரச முயற்சிகளில் ஈடுபடும் நடவடிக்கைகளில் அமெரிக்க இராஜங்க செயலர்  ஜோன் கெரி ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, எதுவித முன்னறிவிப்புமின்றி எகிப்துக்கு திடீர் விஜயமொன்றை கெரி மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, கடந்த யூலையில் எகிப்திய ஜனாதிபதி முஹமட் முர்சி பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து, அந்நாட்டிற்கு விஜயம் செய்த அதி சிரேஷ்ட அமெரிக்க அதிகாரியாக ஜோன் கெரி  விளங்குகின்றார்.

முகமது முர்சி உட்பட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய தலைவர்கள்  திங்கட்கிழமை  நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருந்த நிலையிலேயே ஜோன் கெரி அங்கு சென்றிருந்தார்.

ஏற்கனவே, இவ்வருட ஆரம்பத்தில், எகிப்திற்கென வருடாந்தம் வழங்கும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அமெரிக்கா, எகிப்தின் ஸ்தீரத்தன்மையற்ற அரசியல் நிலைமையைக் காரணங் காட்டி இடைநிறுத்தியிருந்தது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையினை எகிப்தின்  இடைக்கால அரசாங்கம் கடுமையாக  விமர்சித்திருந்தது.

இந்த  விமர்சனங்கள் தொடர்பில், அமெரிக்கா பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாத அதேசமயம், எகிப்தில் கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று வரும்  அரசியல் நெருக்கடியிலும் சரியான  தீர்மானத்தினை கொண்டு வர எதனையும் செய்யவில்லை.

இந்நிலையில், நாம் எல்லோரும் ஒரு வீட்டுப் பிள்ளைகள் என்பது போல, காட்டிக் கொள்ள ஒபாமா தலைமையிலான அரசாங்கம், அமெரிக்க இராஜங்க செயலர் ஜோன் கெரி  மூலம் தூது அனுப்பியுள்ளது. இந்த தருணத்தினை அமெரிக்காவாகட்டும், எகிப்தாகட்டும் எந்த வகையில்  பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

எகிப்துடனான பழைய உறவினை புதுப்பிக்கும்  வகையிலேயே ஜோன் கெரி தனது  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக  கூறப்பட்ட போதிலும், அது எவ்வகையிலான நடவடிக்கை  எனத் தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கு  நாடுகளுக்கான  உத்தியோகபூர்வ  விஜயத்தில் முதல் நிறுத்தமாக, சவூதி அரேபியாவிற்கு சென்ற ஜோன் கெரி, உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு  இன்று அல்லது நேற்று உருவானதா? என்றும் கேள்வி எழுப்பினாராம்.

ஏற்கனவே எகிப்து அரசாங்கத்துடன் உறவைப் பேணுவதில் அமெரிக்கா காட்டி வந்த அசிரத்தை, சிரியாவில் அமைதியை ஏற்படுத்த போதியளவு அக்கறை கொள்ளாமை போன்ற அமெரிக்காவின் செயற்பாடுகளில் சவூதி அரேபியா திருப்திகொண்டிருக்கவில்லை.

இதனால்தான் சவுதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான  இராஜதந்திர உறவுகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, ஐ.நாவில்  நிரந்தரமற்ற  உறுப்பினர் பதவி சவுதி அரேபியாவிற்கு வழங்கப்பட்ட போதிலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

என்னதான், பதவி,பட்டம், பண உதவி வழங்கினாலும் தனது கொள்கையிலும் மாற்றமில்லை என்பது போல அடம்பிடிக்கும் சவூதி அரேபியாவுடனான உறவு நிலைமைகளைச்  சரி செய்யும்  பேச்சு வார்த்தைகளிலேயே கெரி ஈடுபட்டிருந்தார்.

சவூதி அரேபியாவுடனான  உறவு, அமெரிக்காவிற்கு அவசியமானதொன்று எனவும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கெரி, சுட்டிக்காட்டியிருந்தார்.அதேபோல, 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், இஸ்ரேல், பலஸ்தீனிய தலைவர்களுடனான சந்திப்பினையும் அமெரிக்க இராஜங்க செயலர் மேற்கொண்டிருந்தார்.

கடின நிலைமைகளை பற்றிய ஏதாவது மாயத் தோற்றங்கள் இங்கிருக்கலாம். ஆனால், நான் ஆரோக்கியமான  சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுடன் இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடாக  விளங்கியது. இராணுவ தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது. 2010 இல், இஸ்ரேல் அமெரிக்காவிடையே பாரிய ஆயுதக் கொள்வனவு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

மிக உக்கிரமாகப் போரிடும் ஆற்றலைக் கொண்ட  எப்  35 ரக ஜெட் விமானங்கள், மத்திய கிழக்கில் வேறு எந்த நாடுகளிடமுமில்லை. இஸ்ரேலின் பாதுகாப்புக்கென அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை  வழங்கியுள்ளது.

சிரியா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் கட்டுப்படுத்தவும் இந்நாடுகளிடமிருந்து இஸ்ரேல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்களை முறியடிக்கவுமே இந்த  நவீன  ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

இவ்வளவு ஆதரவினை இஸ்ரேலுக்கு வழங்கி வரும், அமெரிக்கா, பலஸ்தீனத்துடனான  பேச்சுவார்த்தை களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என்பது , பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதைப் போலாகும்.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில், சிறிதளவான முன்னேற்றமே தென்படுவதாக இஸ்ரேல்  பலஸ்தீனத்துக்கிடையிலான  நிலைமையினை ஜோன் கெரி விபரித்திருந்தார்.

அதேசமயம், இடைக்கால சமாதான உடன்படிக்கையொன்றினை கெரி முன்வைத்திருந்தாக ஊடகங்கள் எதிர்வு கூறியிருந்தமையும் அவர் நிராகரித்துள்ளார்.தடைப்பட்டுப் போயிருந்த மத்திய  கிழக்குப் பேச்சு வார்த்தைகளை நேரடியாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகளை  முன்னெடுத்துள்ள அமெரிக்காவின்  இச்செயற்பாடுகள் உண்மையில் சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தையும்  சந்தேகத்தையுமே  ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மத்திய கிழக்கு பல்வேறு பாரிய மோதல்களைக் கண்டுள்ளது. இன்றும் பல நாடுகளில் மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், ஸ்தீரத்தன்மையற்ற அரசியல் நிலைமையும் பல நாடுளில் காணப்படுகின்றது.

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளை நீண்ட காலமாக ஆக்கிரமித்திருந்த மேற்குலக காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து, இந்நாடுகளை  விடுவிக்க நடந்த விடுதலைப் போர் முக்கியமாகும்.

மேற்குலக நாடுகள், இன்றைய காலப்பகுதியிலும் தமது படைகளுக்கும், பொருளாதாரத்திற்கும் முதலீடு செய்யும் நிலமாக மத்திய கிழக்கை நடத்தி வருகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றுடன் ஒன்று சகோதர யுத்தம் செய்து வரும் வேளையிலே, மேற்குலக நாடுகளின் தாக்குதல்களுக்கும், அதிகாரங்களுக்கும் உட்பட்டே  இவை காணப்படுகின்றன.

பழைய சக்திகளான  பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா போன்றவற்றின் ஆதிக்க மோகம் கலைந்த பின், மத்திய கிழக்கு நாடுகள் மீது ஆளுமையும், அதிகாரமும் செய்ய அமெரிக்கா நீண்ட காலமாகத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது.

மத்திய கிழக்கு ஆட்சியாளர்கள் சிலரையும், பொருளாதார உதவிகள் சிலவற்றையும்  காட்டி, அமெரிக்கா  இவற்றை வளைத்துப் போட்டது. பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ  உதவி, அபிவிருத்தி மற்றும் கலாசார உதவிகள் என எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கிய அமெரிக்கா அரபு நாடுகளில் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டு, தன் திட்டங்களைச் செயற்படுத்திக் கொண்டது.

அமெரிக்காவின் இச்செயற்பாடுகள் மத்திய கிழக்கில் பெரும் மோதல்களை தூண்டுவதாகவே அமைந்துள்ளன. இந்நிலைமையில், அரபுக் கூட்டாளிகளுடன் இழுபறியாகியுள்ள  உறவினை  புதுப்பிக்கும்  வகையிலே அமெரிக்க இராஜங்கச்செயலர்  சமரச பேச்சவார்த்தைகளில் நேரடியாகச் சென்று ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தியோக பூர்வ பயணத்தின்போது, அமெரிக்காவின் பாரிய வேவு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலும் ஜோன் கெரி தள்ளப்பட்டிருந்தார்.

எங்களுக்கு உதவினால் உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளோம் என்பதே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா தற்பொழுது சொல்லும் செய்தியாகும்.
ஜோன் கெரியின், மத்திய கிழக்குப் பயணம் மூலம் நன்மையடையப் போவது அமெரிக்காவா? அல்லது மத்திய கிழக்கு நாடுகளா? என்பதை பொறுத்திருந்தே  பார்க்கவேண்டும்.

இயற்கையால் வஞ்சிக்கப்படும் பிலிப்பைன்ஸ்

கடும் புயல்களால்
தொடரும் பேரழிவுகள் 


சா.சுமித்திரை

உலகின் பல்வேறு நாடுகளிலும் அவ்வப்போது , இயற்கை அனர்த்தங்களும் உயிரிழப்புகளும் பாரிய பெரும் சேதங்களும்  ஏற்படும் நிலையில், பிலிப்பைன்ஸில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம், கடுமையாகத் தாக்கிய ஹையான்  என்ற சூறாவளியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், 80 வீதமானோர் குடியிருப்புகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர்.

உலகின் நான்காவது மிகப் பெரிய சூறாவளியாகக்  கருதப்படும் ஹையான் புயலின் தாக்கம்  குறைவடைந்து ஒரு வார காலமாகியும் , இதுவரை  உயிரிழப்புகளின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி, ஏற்கனவே கடந்த மாதம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. 7.2 மக்னிரியூட் அலகளவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருந்ததுடன், உடைமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

 பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல, அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாத நிலையில் பிலிப்பைன்ஸிற்கு, இந்த அனர்த்தம் நிச்சயம் பேரிடியாகவே அமைந்திருக்குமென்பதை எவராலும் மறுக்க இயலாது.

70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் வருடத்திற்கு 20 இற்கும் மேற்பட்ட சூறாவளி அனர்த்தங்களை  சந்தித்து வருகின்றது. ஆனால், இம்முறை ஏற்பட்ட சூறாவளி மிகவும் சக்தி வாய்ந்தது.
கடலில்  மணித்தியாலத்திற்கு 242 மீற்றர் வேகத்தில் வீசிய காற்று, ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகளை அண்மித்த போது 20 அடி உயரத்திற்கு அலைகளை எழுப்பியது.

சூறாவளியுடன், சுனாமியும் ஏற்பட்டுவிட்டது போன்ற நிலையே அன்றைய தினம் வெளியாகியிருந்தது. 20 அடி உயரமான அலைகள் தீவுகளை  கடந்தபோது, அங்கிருந்த மரங்கள், கட்டிடங்கள், உயிரினங்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தன.

ராலோபன் நகரிலுள்ள லோரி தீவு பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளது. 80 வீதமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீதிகளெங்கும் பிணங்களே காணப்படுகின்றன. இவற்றில் சில உடல்கள் துண்டாடப்பட்டும் காணப்படுகின்றன. குடிநீர் அசுத்தமடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில், இப்பொழுதும் கூட சேற்று நீரும், இடிபாடுகளின் சேதங்களுமே நிரம்பிக் காணப்படுகின்றன. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள் என எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாத நிலைக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில், ஹையான் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3691 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ சபை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

41 மாகாணங்களைச் சேர்ந்த 6.9 மில்லியனுக்கு மேற்பட்டோர் இதன்போது , பாதிக்கப்பட்டுள்ளனர். 582,303 பேர் இடம்பெயர்ந்துள்ள போதிலும், 993 தற்காலிக முகாம்களில் 286,433 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரையோர  மாவட்டங்களிலுள்ள 80,087 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. சமர் தீவின் கிழக்கு பகுதியிலிருந்து 162 உடல்களும், மேற்கு பகுதியிலிருந்து 200 உடல்களும், வெட்டியிலிருந்து 1299 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பல உடல்களை அடையாளம் காணமுடியவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தின் போது, 3624 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.

இதற்கும் மேலாக, தற்காலிக முகாம்களில் வழங்கப்படும் உணவுப் பொதிகளுக்காக  பட்டினியுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவற்றினை பெற முண்டியடித்தவர்கள் சிலர் நசுக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

கோர அனர்த்தத்தில், உயிர் தப்பியுள்ளவர்களுக்கு அவசர உதவிகளை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் மீட்பு படையினரும் இராணுவத்தினரும் வழங்கி வருகின்ற போதிலும், அவர்களின் நிலைமை  இருண்டதாக்கப்பட்டுள்ளதாக  விபரிக்கப்படுகின்றது.

மீட்பு மற்றும் உதவி பணிகளுக்கென அமெரிக்காவும், பிரிட்டனும் போர்க் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளன. புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காகவும், அமெரிக்கா தனது குழுவை அனுப்பியுள்ளது. அ“ததுடன் விமானத்தாங்கி கப்பலான ஜோர்ஜ் வாஷிங்டன் லெய்தே தீவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

21 ஹெலிகொப்டர்களுடன் சென்றுள்ள ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலில், மக்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இங்கிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் மக்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வரப்படுவதுடன், கடல் நீரைக் குடிநீராக  மாற்றும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, சுத்தமான குடிநீரும் வழங்கப்படுவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 3 ஆவது கடற்பிரிவைச் சேர்ந்த 90 வீரர்களுடன் முதலாவது போர் விமான பிரிவைச் சேர்ந்த கேசி  130 ஜே,ஹேர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு புயலினை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலத்தில் ஹரிகென் என சொல்லப்படுகின்ற புயல், அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசுபிக் பகுதியிலிருந்தும், சைக்லோன் எனும் புயல் தென் பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்தும் தைபூன் எனும் புயல் வடமேற்கு பசுபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன.

அமெரிக்காவின் தைபூன் எச்சரிக்கை மையம் வரையறுத்துள்ளபடி, புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் என்னும் வேகம்கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகள் சுப்பர் தைபூன் என அழைக்கப்படும்.

வெப்ப மண்டலப் புயலான ஹையான்,தைபூன் வகையைச் சேர்ந்ததாகும். பிலிப்பைன்ஸினை  தாக்கிய ஹையான், இதுவரை அளவுக்கு மண்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ பாரிய இரைச்சல் சத்தம். கடும் மழையுடன் கேட்டது. உடனே, அது என்னவென்று வெளியே வந்து பார்த்தேன் .சில விநாடிகளில், நான் மரத்துடன் தூக்கி வீசப்பட்டேன். மயக்கமுற்ற நிலையிலிருந்த நான் சில மணித்தியாலங்களின் பின்னர், சுயநினைவு பெற்று வீட்டை பார்த்தபோது, அது மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. எனது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதையுண்டு மாண்டு போயுள்ளனர்.

எனது வீட்டை அண்மித்த ஏனைய கட்டிடங்களும் தரைமட்டமாகியிருந்தன.  சில உடல்கள் வெள்ள நீரில்  அடித்துச் செல்லப்படுவதையும் கண்டேன். என இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய ஒருவர், தனது அனுபவத்தை விபரித்திருந்தார்.

இரு தினங்களுக்கு முன், பிரசவித்த ஒரு சிசுவை வெள்ளநீர் அள்ளிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த தாயின் அலறல், உண்மையிலேயே அனைவரையுமே  பதற வைக்கும் நிகழ்வொன்றாகும்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதால், பெண்ணின் இடுப்புக்கு கீழ்  செயற்படமுடியவில்லை. இரத்த வெள்ளத்திலிருந்த அப்பெண் தனது குழந்தையை  இயலாமையினால்  கைவிட்டுள்ளார். துடித்துக் கொண்டிருந்தபோது, பிறந்து இரு நாட்களேயான சிசுவை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. தான் பெற்ற குழந்தையை, கண்முன்னே பறிக்கொடுத்த இந்த தாயினை எவ்வாறு ஆறுதல்படுத்த முடியும்?

இவ்வாறு பல்வேறு சோகங்களையும், அழுகுரல்களையும் தன்னகத்தே கொண்டு பயணிக்கின்றது பிலிப்பைன்ஸ். இந்நிலையில் , வலிகளையும், இழப்புகளையும் சந்தித்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டினர், தமது எதிர்காலத்தையும் தொலைத்துள்ளனர்.

போதுமான உணவு, மருத்துவம், வாழ்வாதாரம், கல்வி மற்றும் இதர வசதிகள் என 11.3 மில்லியன் மக்களுக்கு அவசர தேவை காணப்படுவதாக மனிதநேய விவகார ஒத்துழைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் கிழக்கு கரையோர பகுதிகள் முழுமையாக  அழிவடைந்துள்ளன. உலகத்தின் முடிவு போல, அன்றைய  தினம் அமைந்திருந்ததாக யோலண்டா மேயர், அனர்த்தத்தின் கோர தாண்டவத்தை விபரித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட 6000 மக்களில், 480 குடும்பங்களுக்கே உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான உணவுப் பொதிகளே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட ஏனையோர் ஆத்திரமடைந்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பட்டினிக்கான போராட்டம் மோசமடைந்துள்ளதாகவும் அவர் அங்குள்ள தற்போதைய நிலைமையை வெளிக்கொண்டு  வந்துள்ளார்.

பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ துருப்புகள் இணைந்து அவசர உதவிப் பணிகளை  முன்னெடுத்து வருகின்றன.மேற்குலக ஊடகங்கள், நிவாரணப்பணிகளுக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடன் நடவடிக்கைகளுக்கும் 23 மில்லியன் டொலர்களை மீட்பு பணிகளுக்குமென ஒதுக்கியுள்ளது.

தற்காலிக கூடாரங்கள், மருத்துவ ஊழியர்கள், மீட்பு பணிக்கான  விமானங்கள், உணவுப்பொதிகள்  உட்பட 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

சீன அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஐரோப்பிய ஒன்றியம் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், யப்பான் 50 மில்லியன் டொலர்களையும், தென்கொரியா 5 மில்லியன் டொலர்களையும், சவுதி அரேபியா 10 மில்லியன் டொலர்களையும், அமெரிக்கா 20 மில்லியன் டொலர்களையும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன.

மருந்துகள், மின் பிறப்பாக்கிகள், உலர் உணவுப் பொதிகள் உட்பட பல மனிதநேய உதவிகளை இந்தோனேசியா வழங்கியுள்ளது. ஆயினும், இந்நிலையில் இது போதாது என்ற  விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

அனர்த்தத்தில், உயிர் தப்பியவர்களில் 45,000 பேரின் எதிர்காலம் இருளடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அனர்த்தத்திலிருந்து மீள முடியாமல் உள்ள  மக்களை வறுமையும் சுகாதாரச் சீர்கேடும் ஆட்கொண்டுள்ளன. தினமும் கொள்ளைச் சம்பவங்களும், வன்முறை மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

 பிலிப்பைன்ஸை இதற்கு முன் 1964 இல், சாலி என்ற தைபூன் புயலும்,2011 இல் வஷி, 2012 இல் போபா எனும் தைபூன் புயல்களும் சூறையாடியுள்ளன.பிலிப்பைன்ஸை மட்டும் அதிகளவில் புயல் தாக்குவதற்கு காரணம் அந்தப் பகுதி பசுபிக் பெருங்கடலை அண்மித்து காணப்படுவதேயாகும்.

அப்போது, இத்தகைய புயல் எழும்புவதற்கும், புயலின் வேகம் அதிகரிப்பதற்கும் பருவகால நிலை மாற்றமே முக்கிய காரணமாகுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கு பசுபிக் கடற் பகுதியில், கடந்த சில வாரங்களாகவே மேற்பரப்பு நீர் மற்றும் ஆழத்திலுள்ள நீர் இரண்டிலும் வெப்பம் அதிகமாகவே, இருந்துள்ளது. வெப்ப அதிகரிப்பினால், அதை காற்று உள்வாங்கிக் கொண்டது. இதுவே, ஹையான் புயல் உருவானதற்கும், தீவிரமடைந்ததற்கும் காரணமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற உலக நாடுகளும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கைகொடுக்கும் என்றாலும், அழிவடைந்த  வீடுகளையும், சிதைவடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் மீள கட்டியமைக்க நிச்சயம் நீண்ட காலம் எடுக்கும்.

மெல்ல மெல்ல மீண்டு வரும் காலப்பகுதியில், இதுபோன்ற புயல்களும், நிலநடுக்கங்களும் மீண்டும் தாக்கலாம். ஆகவே, இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டை பாதுகாக்க நடவடிக்கையெடுப்பதே உடனடித் தேவையாகும்.

புதன், 6 நவம்பர், 2013

தொடர் மாடிகளில் தொல்லை கொடுக்கும் செல்லப் பிராணிகள்

சா. சுமித்திரை

வேலிச் சண்டைகள், பாதைச் சண்டைகள் என்பவற்றுக்கு மேலாக அயல் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால் ஏற்படும் மோதல் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமையைக் காணக் கூடியதாகவுள்ளது. 

தலைநகர் கொழும்பு மற்றும் நகர்ப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் செல்லப்பிராணிகளின் தொல்லைகளால் பல்வேறு வகையிலான மோதல்கள் அயலவர்களிடையே தினமும் அரங்கேறி வருகின்றன. 

முன்னைய காலங்களில் செல்லப் பிராணி வளர்ப்பென்பது மேலைத்தேய நாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. அந்நாடுகளில் நாகரிகமானதொன்றாகவும் செல்வம் படைத்தவர்களது சமூக அந்தஸ்தினை வெளிக்கொண்டு வரும் பொழுது போக்கு அம்சமாகவும் செல்லப் பிராணி வளர்ப்பு காணப்பட்டது.

குறிப்பாக பல ரகமான நாய்கள் , பறவைகள்  மற்றும் பூனைகளையே அதிகளவானோர் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இலங்கை, இந்தியா போன்ற வளர் முக நாடுகளில் இத்தகைய செல்லப் பிராணி வளர்ப்பு என்னும் பொழுதுபோக்கு அம்சம் முக்கியமானதொன்றாகக் காணப்படவில்லை. ஆயினும் ஆடு ,மாடு,கோழி போன்வற்றை தமது உணவுத் தேவைகளுக்காகவும் நாய்களை பாதுகாப்புக்கெனவும் குதிரை, கழுதை போன்ற  விலங்குகளை தமது  சுய தேவைகளுக்காகவும் மட்டுமே வளர்த்து வந்தனர். 

எனினும், அவ் விலங்குகளுக்கென தனிப்பட்ட ஒதுக்குப் புறமான இடங்களில் சிறிய  குடிசைகளோ அல்லது  கூடுகளோ அமைத்து அவைகளுக்கேற்றவாறு வளர்த்து வந்தனர். அதேபோல அவற்றின் கழிவுகள் மற்றும் அவை உண்ட எஞ்சிய உணவுகள் என்பவற்றை பாதுகாப்பாக குழிகளுக்குள் போட்டு புதைத்து விடுவர். 

மேலைத்தேய நாகரீக கலாசார பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல பின்பற்ற நாம் தொடங்கிய போதே வீட்டுக்குள் விலங்குகளை வளர்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. அதுவும் மனித தேவைகளுக்கு அவசியமில்லாத விளங்குகளை பொழுது போக்குக்காக மட்டும் வளர்க்கத் தொடங்கினார்கள்.

செல்லப் பிராணிகளாக 100 இற்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த உயர் ரக நாய்கள், பூனைகள் , முயல்கள், லவ் பேர்ட்ஸ் என ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த விலங்குகளை வளர்க்கின்றனர். 


சிலர் அவர்களது வசதிகள் மற்றும் சமூக அந்தஸ்துகளுக்கேற்ப அதிகளவு பணம் கொடுத்து இவ் விலங்குகளை வாங்குகின்றனர். அத்துடன், தமது குடும்ப உறுப்பினர்களைப் போல சீராட்டி பராமரித்து வளர்த்து வருகின்றனர். போஷாக்குணவுகள், நோய்த் தடுப்பு ஊசிகள், குளியல் பொருட்கள், மருந்துகள் என கால் நடை வைத்தியர்களது ஆலோசனையுடனும் அனுமதியுடனும் பல ஆயிரக்கணக்காக  ரூபாவினை செலவழித்து வாங்கி எந்தக்குறையும் இல்லாமல் ஒரு குழந்தை போல தமது செல்லப் பிராணிகளை பாதுகாத்து வருகின்றனர். 

தமக்கோ குடும்ப உறுப்பினருக்கோ அல்லது தமது பிள்ளைகளுக்கோ ஏதேனும் சிகிச்சை பெற மாதாந்தம் கிளினிக்கிற்கு தவறாது செல்கின்றார்களோ இல்லையோ ஆனால் செல்லப் பிராணிகளுக்குரிய குறித்த கிளினிக்கிற்கு செல்வோர் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. 

அத்துடன், தமது செல்லப் பிராணிகளுக்கு பொருத்தமான  உடை, ஆபரணங்களை அணிந்து அழகு பார்க்கும் செல்வந்தர்களும் காணப்படுகின்றனர். இதனை விட தலைநகர் கொழும்பின் பிரதான வர்த்தக  பகுதிகளில் வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கு தேவையான உணவு, உடைகள் , போசனை மருந்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. சில தையலகங்களில் அவைகளுக்குரிய அளவுகள் பிரத்தியேகமாக எடுக்கப்பட்டு உடைகள் தைத்துக் கொடுக்கப்படுகின்றன. 

 இன்றைய காலத்தில் மனிதனிடம் இல்லாத அன்பு , நன்றியுணர்வு, பொறுமை  போன்ற பண்புகள் மற்றும் நேரத்தினை இந்த செல்லப் பிராணிகளிடமிருந்து பெற்று விடலாமென்ற நம்பிக்கையிலேயே அதிகளவானோர் செல்லப் பிராணிகளை வளர்க்கும்  எண்ணங்களை உருவாக்கி கொள்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. 

வயதானவர்களிலும் சிலர் தமது பிள்ளைகளை விட தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த பொழுது போக்கு ஏனையவற்றிலிருந்து விலகி நிற்கும் அதேசமயம். ஒரு மனிதனின் அன்பு கலந்த மனிதநேயத்தின் அடையாளமென ஒருசாரார் கருதுகின்றனர். ஆனால் இந்த மனித நேயம் மிருக வதையாகக்  கருதப்படுவதுடன், மனிதனுக்கும் அந்த செல்லப் பிராணிகளுக்கும் கூட ஒரு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகின்றது.

என்ன தான் நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வளர்த்து வந்தாலும் அத்தகைய விலங்குகளால் எமக்கு எந்தவிதமான நோய்த் தொற்றுகளும் ஏற்படாதென திட்டவட்டமாகக் கூற முடியாது. இவற்றினால் வீட்டிலுள்ள சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் நேரடியாகவும் மறை முகமாகவும் பல விதமான நோய்ப் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகின்றன. 

கிராமப் புறங்களில் இதுபோன்ற செல்லப் பிராணி வளர்ப்பதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுவதாக அலட்டிக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அங்கு புற சூழல் ஓரளவு ஆரோக்கிய காற்றோட்டம், நீர் நிலைகள், மற்றும் சூரிய ஒளி என்பன உள்ளன. ஆனால், தலைநகர் கொழும்பு உட்பட நகர்ப் பகுதிகளில் இத்தகைய செல்லப் பிராணி வளர்ப்புகளால் சுற்றுச் சூழலுடன் அயலிலுள்ள குடியிருப்பாளர்களும் அதிகளவு பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர். ஏனெனில் இத்தகைய நகரங்களிலுள்ள பெரும்பாலான தொடர் மாடிக் குடியிருப்புகளில் மக்கள் மிகவும் நெரிசலாக அவர்களது தனி நில சுகாதாரத்திற்கு கேடான வகையிலேயே வாழ்கின்றனர். 

இப்படியானதொரு நிலைமையில் நாய்,பூனை மற்றும் கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகள் எனக் கூறி வளர்ப்பதை பார்க்கும் போது வேதனையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. 

இவை வீடுகளில் வளர்ப்பதற்கென தனிப்பட்ட அல்லது பிரத்தியோகமான இடவசதிகளோ காணப்படுவதில்லை. எனவே, அவைகளும் வீட்டு அங்கத்தவர்களுடனேயே படுக்கையறையில் படுத்திருக்கும். அவர்களது சமையல் அறைக்கருகில் தான் சாப்பிடுகின்றன. தமது செல்லப் பிராணிகளை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் பாவிக்கின்ற குளியலறையிலேயே குளிப்பாட்டுவார்கள். 

இதனையும்  விட சில வீடுகளில் வளர்க்கின்ற அவர்களது  செல்லப் பிராணிகள் படுக்கின்ற போது மின்விசிறி போட வேண்டும். அவைகள் அந்த மின் விசிறி காற்று பட்டால் மட்டுமே உறங்குகின்றன. மேலும்  சில வீடுகளில் அவற்றுக்காக தொலைக்காட்சிகள் கூட போட்டு விடப்படுகின்றன. அவையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அழகாக படுத்துக் கொண்டே பார்க்கின்றன. 

இந்த செல்லப் பிராணிகள் ஒரு சராசரி மனிதனின் வாழ்வினை வாழ்கின்றன என்பதை நாம் பார்த்து இரசித்துப் பெருமைப்படுகின்ற போதிலும் அவற்றினால் எமக்குக் கிடைக்கும் நன்மை  எதுவுமில்லை என்றே சொல்லலாம். இதனையும் விட அந்த விலங்குக்குரிய இயற்கையான குணவியல்புகளும் பண்புகளும் அற்றுப் போய்விடுகின்றன. இந்த மாற்றம் உயிரியல் பல்வகைமையிலும் என்றோ ஒரு நாள் பாரிய தாக்கம் செலுத்தியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. 

வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை வளர்க்கும் போது அவை செல்லும் படுக்கும் இடமெல்லாம் அவற்றின் உரோம முடிகள்  கொட்டுகின்றன. இந்த முடிகள் நேரடியாக பல வழிகளிலும் எமது உடலினுள் செல்கின்ற  போது ஆஸ்மா, ஒவ்வாமை, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல்  அவற்றின் உமிழ் நீரிலிருந்தும் பல வகையான நோய்க்  காவிகள் பரவுகின்றன. அந்த உமிழ் நீர் எமது உடலில் அடிக்கடி படும் போது தோல் புற்றுநோய் ஏற்படவும் வழிகோலுகின்றன. 

இதேவேளை குடியிருப்புத் தொகுதிகளில் வாழும் போது அயலவர்களின் வீட்டுச் சூழலிலும் பொது இடங்களிலும் மலங்கழிக்கின்றன . இதனை செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் முறையாக அகற்றாமையால் ஏனைய குடியிருப்பாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.  உதாரணமாக நாயென்னும் போது அவை இயல்பாகவே குரைக்கும், ஊளையிடும் , கழிவு குப்பைகளைக் கொண்டு வந்து பொது இடங்களில் போடும் ,கெட்ட மணம் வீசும் .இதனால் அந் நாயை வளர்ப்பவரை விட அயல் பகுதிகளில்  உள்ளவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். 

 அயல் வீட்டில் வளர்க்கும் நாய் இப்படி எல்லாம் செய்வதாகக் கூறிக் கொண்டு அந்த நாய் போய் வரும் பாதை எல்லாம்  தடியால் அடித்து துரத்துவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை.  நாய் வளர்ப்பதற்குரிய சூழலை நான் கொண்டுள்ளேனா என அதன் உரிமையாளரே சிந்தித்து அதற்குரிய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை விடுத்து அயல் வீட்டாருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது. 

 கொழும்பிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இரு குடியிருப்பாளர்கள் நாயினை வளர்த்து வந்தனர். அண்மையில் அவ்விரு நாய்களும் பொது இடமொன்றில் திடீரென சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அவ்விடத்தில் வந்த முதியவரொருவர் அச்சண்டையில் தடுமாறி வீழ்ந்ததில் அவருக்கு காலில் என்பு முறிவு ஏற்பட்டது. தற்பொழுது அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதேபோல பல சம்பவங்கள் நாள்தோறும் தொடர்மாடிகளில் அரங்கேறி வருகின்றன. சிறுவர்கள் நாய், பூனை  போன்ற விலங்குகளை அரவனைத்தும் ,தொட்டும்   விளையாடுவார்கள். அவைகளுடன் விளையாடும் போது, அவை அவர்களின் கை , கால் , வாய்ப் பகுதி போன்றவற்றை நக்கி தமது அன்பை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் எச்சிலிலுள்ள நுண்ணங்கி கள் தோலின் ஊடாக மறைமுகமாக   உடலைப் பதம் பார்க்கின்றன. எனவே, இதன் மூலம் சிறார்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.  

 சிலர் தமது செல்லப் பிராணிகளுக்குரிய தடுப்பூசிகள் உரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளதால் தமக்கு எந்த வித  நோய் காரணிகளும் பரவாது   என்று எண்ணுகின்றனர். ஆனால், இந்தத் தடுப்பூசிகள் நோய்க் காவிகள் பரவும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவே வழங்கப்படுகின்றன. அதனை முற்றாகத் தடுப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

தொடர் மாடிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால் மழை காலங்களிலேயே அதிக அசௌகரியங்கள் அனுபவிக்க நேரிடுகின்றன. தொடர்மாடிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு வெளிநாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட அரசு தடை விதித்துள்ளது.  ஆனால், இந்தத் தடைகளை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட அலட்சியம் செய்து வருவதையே காணக் கூடியதாகவுள்ளது. இது தொடர்பான எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களில் இன்றும்  தேங்கிக் கிடக்கின்றன. 

எனவே, செல்லப் பிராணிகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்? முறையற்ற வகையில் வளர்க்கும் போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் அந்தந்த பகுதிக்குரிய கால் நடை மருத்துவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த  முன்வர வேண்டும். அதேபோல செல்லப் பிராணிகளின்  உரிமையாளர்களும் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

திங்கள், 4 நவம்பர், 2013

உலகக் காவலனின் “உளவு’கள் அம்பலம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையும் பதவியேற்ற காலத்திலிருந்தே, பராக் ஒபாமா தலைமையிலான அரசாங்கத்திற்கு போதாத காலமென்றே கூற வேண்டும். 

இம்மாத ஆரம்பத்திலிருந்து முடங்கிப் போயிருந்த அரச சேவைகள், ஒபாமா கெயார் திட்டம், பொஸ்டன் குண்டுத் தாக்குதல் உட்பட அவ்வப்போது கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் திடீர் தாக்குதல்கள், எட்வேட் சினோடன் விவகாரம் என பல சவால்களை சுமந்து கொண்டு பயணிக்கும் அமெரிக்காவிற்கு இப்பொழுது இன்னொரு தலையிடி ஏற்பட்டுள்ளது. 

தனது நட்பு நாடுகளின் நடவடிக்கைகள், அந்தந்த நாட்டுத் தலைவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் என்பவற்றைக் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை வெளியே கசிந்தமையே புதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

அனைத்து சமூகப் பண்புகளிலும் ஒட்டுக் கேட்டல், வேவு பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் நாகரிக மற்றதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆயினும், அரசாங்கத்தின் அல்லது தேசத்தின் நலனுக்காக சில சமயங்களில் இதில் விதி விலக்குகளும் உள்ளன. 

எதிரிகளின் தொடர்பாடல்களை முறியடிக்கும் நோக்கிலேயே இந்த உளவு, வேவு பார்த்தல் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். ஆனால், தனது நட்பு நாடுகளைக் கூட, சந்தேகக் கண்கொண்டு வல்லரசு நாடான அமெரிக்கா வேவு பார்த்த விடயம் அம்பலமாகியுள்ளது.

தனது எதிரி நாடுகளை விட, நேச நாடுகளின் தலைவர்களை முன்னொருபோதுமில்லாத வகையில் அதிகளவுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு உளவு பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகத் தலைவர்களில் 35 பேரின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. அவர்களது நடவடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மார்கெலின் தொலைபேசி அழைப்புகளே 2002 இலிருந்து அமெரிக்க உளவாளிகள் ஒட்டுக் கேட்டுள்ளனர். 
2002 இல், அஞ்சலா மார்கெல் சான்சிலராகத் தெரிவு செய்யப்படவோ அல்லது பதவியேற்கவோ இல்லை. 2005 இல் தான், ஜேர்மனியின் சான்சிலராக அஞ்சலா மார்கெல் பதவியேற்றிருந்தார். ஆனாலுமென்ன? நாளைய தலைவர்களை இன்றிலிருந்தே கண்காணிப்போம் என்ற நோக்கில் அமைந்திருந்தது அமெரிக்காவின் உளவுப் பணி.

கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக, யாராகவிருந்தாலும் தங்களுக்கு அச்சமோ, தலைகுனிவோ அல்லது அவமானமோ இல்லையென்ற கொள்கையிலேயே அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் உளவுப் பணியை செய்து வருகின்றது. 

இதனால், தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு கடும் விசனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில், அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் பிரெஞ்சு தொலைபேசி அழைப்புகளுக்குள் ஊடுருவியிருந்தமை தொடர்பான விவகாரம், நட்பு நாடுகள் நியாய பூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளதை வெள்ளைமாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி  பிராங் கொய்ஸ் ஹொலண்டே ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்றினைத் தொடர்ந்து வெளியான அறிக்கையொன்றில் என்.எஸ்.ஏ.இன்.முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் சினோடனின் வெளிப்படுத்தலினால் ஏற்பட்டுள்ள இராஜதந்திர தாக்கங்களை வெள்ளை மாளிகை முதற்தடவையாக சந்தித்துள்ளது. 

பிரான்ஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா பூரண விளக்கமளிக்க வேண்டுமென பிரான்ஸிற்கான அமெரிக்க தூதுவரிடம் அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர உறவில் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இருந்தபோதிலும் என்.எஸ்.ஏ.யின் செயற்பாடு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி தனது முற்றான நிராகரிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களிடையே இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறி பூரண விசாரணைக்கு ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஆரம்பத்தில் இந்த  வேவு நடவடிக்கைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லையென வெள்ளை மாளிகை மறுத்திருந்தது. ஆனால், உலகத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது தெரியாதென்று வெள்ளை மாளிகை கூறினால் தங்கள் வசமுள்ள பதிவேடுகளை அவர்கள் படிப்பதில்லை என்ற முடிவுக்குத் தான் வரமுடியுமென என்.எஸ்.ஏ.தெரிவித்தது.

ஒட்டுக் கேட்பு நடவடிக்கைகளுக்காக உளவு அமைப்புகள் மீது பழி சுமத்துவதை விட்டு விட வேண்டும். இதனை சட்ட ரீதியாகவே  செய்கிறோம். உளவுத் தகவல்களை வெள்ளை மாளிகையும் பயன்படுத்திக் கொள்கிறது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்தே, விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையென்பது போல பாசாங்கு செய்து கொண்டு இந்த உளவுப் பணிகளால் தான் ஏராளமானோரின் உயிர்களைக் காப்பாற்றவும் நட்பு நாடுகளை பாதுகாத்திடவும் முடிந்துள்ளதெனவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டது வாஷிங்டன். 

ஆயினும், ஒட்டுக் கேட்பு நடவடிக்கைகளால் நட்பு நாடுகள் கவலையடைவதை புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் நியாயமான கவலைகளை அமெரிக்கா பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது எனவும் கூறி தன்னை பாதுகாத்துக் கொண்டது. 

நாம் செய்யும் தவறுகளை செய்து கொண்டே இருப்போம். ஏதேனும் நெருக்கடி வந்தால் மட்டும் மிகவும் கவலையடைகிறோம் என்று ஒரு சொல் சொன்னால் போதும் என்பது தான் அமெரிக்காவின் தற்போதைய தலையாய மந்திரமாகவுள்ளது. 

அந்த தலையாய மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல, பாதிக்கப்பட்ட நாடுகளும் தலையாட்டுகின்றன. பிறகென்ன? இந்தப் பிரச்சினை முடிவடைந்து விட்டது. இனி அடுத்த புதிய பிரச்சினை என்பது போலவே அமெரிக்காவின் மாயாஜாலங்களுக்குள் சிக்குண்டு இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் அநேக நாடுகள் தவிர்த்து வருகின்றன. 

ஜேர்மன் சான்சிலர் அஞ்சலாவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படும் விவகாரத்தை என்.எஸ்.ஏ.யின் தலைவரால் ஏற்கனவே, ஒபாமாவிடம் விவரிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஒபாமா அதனை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக, அஞ்சலாவிடமிருந்து ஒட்டுக் கேட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரிக்குமாறு வெள்ளை மாளிகை உத்தரவிட்டது.

ஏற்கனவே, யூரோவின் பணப் பெறுமதியை உயர்த்த ஜேர்மனி மேற்கொண்ட நடவடிக்கைகள், ஈராக் போரின் போது படைகளை அனுப்ப மறுத்தமை, லிபியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளிடையே கசப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டது. 

இந்நிலையில், தனது நட்பு நாடுகளிலொன்றாக ஜேர்மனியும் உள்ளதென அமெரிக்கா வெளியே காண்பித்துக் கொண்டு, உள்ளே ஆப்பு வைக்கும் நோக்கில் செயற்பட்டு வந்துள்ளது. 

வேவு பார்த்தல் தொடர்பான சர்ச்சைகள் குறித்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் இவ்வருட இறுதியில் அமெரிக்காவுடனான பேச்சுகளை நடத்த விரும்புவதாக ஜேர்மன் சான்சிலர் அஞ்சலா அழைப்பு விடுத்துள்ளார். 

அதாவது, அவநம்பிக்கைக்கான விதைகளை ஒரு தடவை கண்டு விட்டால் அதன் மூலம் புலனாய்வு ஒத்துழைப்புகள் மேலும் மோசடைமந்து சிக்கல் நிலைமையினை தோற்றுவிக்கும் என்பதாலேயே இந்த அழைப்பினை அஞ்சலா மார்கெல் விடுத்துள்ளார். 

இந்நிலையில் தனது நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். 

நட்பு நாடுகளையே உளவு பார்த்த நடவடிக்கையால் இராஜதந்திர சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள அமெரிக்காவின் உறவினை அந்தந்த நாடுகள் இனிமேல் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது. 

இதேவேளை, தனது நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை  நிறுத்தி வைக்குமாறு பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளமையானது நிரந்தரமாகவா? அல்லது தற்காலிகமானதா?  என்பதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது.

இதேவேளை, வல்லரசு நாடான அமெரிக்கா தன்னை உலகக் காவலனெனக் காட்ட எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக இல்லையென்பதை இந்த ஒட்டுக் கேட்டல் நடவடிக்கை அம்பலமாகியுள்ளது. 
அமெரிக்காவின் நடவடிக்கைகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கூட வேவு பார்க்கும் நிலைமையும் எதிர்காலத்தில் ஏற்படலாம். 

அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ளும் குடியேற்ற வாசிகள்

சா.சுமித்திரை

உள்நாடுகளில் காணப்படும் அசாதாரண நிலைமைகளான போர், வறுமை, வேலை வாய்ப்பு இன்மை, உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமையுடன் மேலைத்தேய நாடுகள் மீதான மோகத்தை அடிப்படையாகக் கொண்டு, தமது உயிரையும் துச்சமெனக் கருதி மிகவும் அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ளும் குடியேற்ற வாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அண்மைக் காலங்களில் வெகுவாக அறிய முடிகின்றது. 

அதேசமயம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நம்பிக்கைத் தீவாக இத்தாலியின் லம்பீடுஸா மாறி வருகின்றது என்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அனர்த்த நிகழ்வுகள் காண்பித்துள்ளன.  வட ஆபிரிக்க கரைப் பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்கு சட்ட விரோதமாக செல்வதற்கு  இந்தக் கடல் மார்க்கம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. 

அக்டோபர் 3 இல் 500 இற்கும் மேற்பட்ட குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று இத்தாலியத் தீவான லம்பீடுஸா கடலில் மூழ்கியதில் 359 பேர் உயிரிழந்தனர். மத்திய தரைக் கடலில் மூழ்கிய இப்படகிலிருந்த எதியோப்பியர், சோமாலியர் மற்றும் சிரியர்கள் உட்பட 545 பேரில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது வெறும் 155 பேர் தான். 

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து மற்றொரு படகு மால்ட்சே நீர்நிலையில் லம்பீடுஸா தீவிற்குத் தெற்கே அக்டோபர் 11 இல் மூழ்கியது. இதில் 34 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தனித்தனி சம்பவங்களில், இத்தாலியத் தீவான சிசிலிக்கு அருகே 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் மத்திய தரைக் கடலைக் கடந்து, இத்தாலிக்குள்  நுழைய முயன்றுள்ளனர். இவர்களில், பலர் துனிசீயா, லிபியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து போர் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க வெளியேறியவர்கள். 

இந்நிலைமையில் அகதிகள் மீட்பு நடவடிக்கையை மிக மோசமாகப் பின்பற்றுவதாகக் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. 

ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுவதற்கு முயற்சிக்கும் குடியேற்றவாசிகள் மத்திய தரைக் கடற் பிராந்தியத்தில் அதிகளவு ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் மீட்பு நடவடிக்கையை கடுமையாகப் பின்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
படகு அகதிகள் அதிகளவில் பலியாகும் எண்ணிக்கைகள்  தொடர்பாக ஐ.நா.வின் தரவுகள் அதிகரித்துக் காட்டுகின்றன. அடுத்த வாரம் நடைபெறும் பிராந்திய மாநாடொன்றில் இவ்விவகாரங்கள் குறித்து பேசப்படுமென மால்ட்டா, இத்தாலியப் பிரதமர்கள் கூறியுள்ளனர். 

அதேசமயம், ஒரு வார காலத்துக்கு பொறுமை காக்க முடியாதெனக் கூறியுள்ள இத்தாலியப் பிரதமர்  என்றிகோ வெட்டா, மத்திய தரைக் கடலில் தமது படைகளை மும்மடங்காக அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, எம்மால் பல கோடி டொலர்களை செலவளிக்க முடியும். இராணுவ, மனித நேயப் பணிகளுக்காக நாம் திட்டமிட்டுள்ளோம். இதனால், எம்மால் சிறப்பாக பணியாற்ற முடியும். மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையும் உள்ளதெனவும் லெட்டா சுட்டிக் காட்டியுள்ளார். 

அதேசமயம், தமது, கடல், வான் மார்க்க ரோந்துப் பணிகளையும் கடந்த வாரம் ஆரம்பத்திலிருந்து இந்த நாடுகள் அதிகரித்துள்ளன. அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் அப்பகுதியில் பலியாவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்தாலியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த இரு தசாப்தங்களில், ஐரோப்பிய கோட்டைக்குள் நுழைய எத்தனிக்கும் முயற்சியில் மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன.  அதேசமயம், அகதிகளில் 95 வீதமானோருக்கு ஐரோப்பாவில் எங்கும் புகலிடம் கோருவதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. 

ஐ.நா.வில் 1.6 மில்லியன் சிரியர்கள் தம்மை அகதிகள் என உத்தியோக பூர்வமாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் 3.45 மில்லியன் சிரியர்கள் அகதிகளாகலாமெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த நூற்றாண்டின் பாரிய யுத்தம் தின்ற தேசமாக சிரியா பார்க்கப்படுகின்றது. மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல்கள், வன்முறைகள், இடம்பெயர்வுகள், போஷாக்கின்மை, வறுமை என அண்மைய வரலாற்றில் நினைத்துக் கூட, பார்க்க முடியாத சம்பவங்கள் அங்கு அரங்கேறி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிரியர்கள் சுற்றுலா விசாவில் தங்கள் நாட்டுக்குள் நுழைய லெபனிய அரசாங்கம் அனுமதிக்கிறது. அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவில்லை. லெபனானில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிரியர்கள் உள்ளனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான சிரியர்கள், ஜோர்தான் எல்லையில், ஆபத்தான சூழலில், எல்லையைத் தாண்டி நுழைவதற்காக காத்திருக்கின்றனர். 

அதேசமயம், லம்பீடுஸா வழியாக ஐரோப்பாவை அடைய முயலும் அகதிகளைக் கொண்ட பல லிபிய துறைமுகங்கள் வழியாக ஆபத்தான  படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், இத்தகைய சட்ட விரோத நுழைதலை தடுக்கும் வகையில், வருடாந்தம் 30 மில்லியன் யூரோக்கள் என்னும் உடன்படிக்கையொன்றை லிபிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. யூபம் லிபியா என்ற இந்த உடன்பாடு எல்லை நிர்வாகம் மூலோபாயம், எல்லை நிர்வாகத்திற்கான சட்ட பூர்வமான வடிவமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது. 

இதுபோன்ற இரகசிய உடன்படிக்கைகளை, இடைத் தரிப்பிடங்களாகவுள்ள நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேணி வருகின்றது. இறைமை, எல்லை நிர்ணயம், எல்லைப் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ரகசிய உடன்படிக்கைகளே புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு இட்டுச் செல்கின்றன. 

கடந்த மாதம் சட்ட விரோதமான முறையில் ஐரோப்பாவினுள் நுழைய முயன்ற 700 பேரை இத்தாலிய கடற்படையினர் கைது செய்திருந்தனர். 
அதுவும்   இரு நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே  கைது செய்யப்பட்டனர். இதில், சிரியா, எகிப்து, எரித்ரியா, நைஜீரியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகச் சென்று கொண்டிருந்ததாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

கைதுகள், தடுத்து வைப்புகள் என்பவற்றுக்கு மேலாக, உயிர்களை பணயம் வைத்து, ஆபத்தான கடற்பயணங்களை திறந்த படகுகளில் மேற்கொண்டு வருவோரின் எணணிக்கை இரட்டிப்பாகி வருகின்றமை அதிர்ச்சி தரக் கூடியது என்பதை விட, உண்மையிலே வேதனை தரக் கூடியதாகும். 

உள்நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை, அச்சுறுத்தல்கள், சித்திரவதைகளுக்குப் பயந்து, அயல் தேசங்களுக்கு தஞ்சம் கோரி செல்வோர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதானது, வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போலாகும். 

பெண்கள், கைக் குழந்தைகள் உட்பட பல நூற்றுக் கணக்கான அகதிகளை பலியெடுக்கும் மயான பூமியாக மத்திய தரைக் கடல் பகுதி மாறியுள்ளது. அதேசமயம், இந்த உயிரிழப்புகள் தற்பொழுது அதிகரித்திருப்பதற்கு காரணம் சிரிய நெருக்கடியாகும். 
இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும்  உள்நாட்டுப் போரினால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

சிரியாவின் அயல் பிராந்தியங்களான ஜோர்தான், லெபனான், ஈராக், துருக்கி மற்றும் எகிப்திலும் இலட்சக் கணக்கான சிரியர்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். 

அகதிகள் நெருக்கடி இந்த ஆண்டு அதிகரித்து விட்டது என சுட்டிக் காட்டியுள்ள ஐ.நா.வின் அறிக்கை இந்நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அச்சம் வெளியிட்டுள்ளது. 

அகதிகளாக சென்ற சிரியர்களின் அடிப்படை உரிமைகள், அத்தியாவசிய வசதிகள் அப்பிராந்திய நாடுகளில் மறுக்கப்படுவது அகதிகளை அபாயத்துக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையிலேயே அவர்கள் ஐரோப்பிய கடற் பரப்புக்குள் நுழைந்து அபாயகரமான பயணங்களை மேற்கொள்கின்றனர். 

ஜோர்தானில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும். குடியுரிமை இல்லாமலும் 5 இலட்சம் சிரியர்கள் முகாம்களில் உள்ளனர். இதன் மூலம், அந்நாட்டு சனத்தொகையில் இரு வருடங்களில் 8 சதவிகிதம் ஆகிவிட்டனர். ஜாடரி முகாமில் 1,30,000 மக்கள் மிக மோசமான நிலையில் கடும் நெரிசலுக்குள் வாழ்கின்றனர். 

இதேவேளை, 2011 இல் லிபியத் தலைவர் முகம்வர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அது லிபியாவின் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதுடன், ஜனநாயகத்திற்கும் ஒரு முன் மாதிரி எனப் பேசப்பட்டது. ஆனால், லிபியாவில் ஒரு குற்றம் நிறைந்த ஆட்சியும் கிளர்ச்சியாளர்களின் வன்முறை அட்டகாசங்களுமே வெளிப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி லிபியர்கள் துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் அனுபவிக்கின்றனர். 

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர்கள், உயிர் அச்சுறுத்தல்கள் வாழ்வதற்கான சூழல் இன்மை ஆகிய காரணிகளே இந்த ஆபத்தான கடற்பயணங்களை மக்கள் மேற்கொள்ள பிரதான காரணங்களாகும் இந்நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை படகுப் பயணங்கள் குறையப் போவதில்லை. உயிரிழப்புகளும் சாதாரணமாகி  விடும். எனவே, படகு அகதிகளின் அபாய நிலையினைத் தடுப்பதற்கான பல்வேறு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேசமயம் அதற்கான காரணிகளை இல்லாதொழிக்க வேண்டும். 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை ஐரோப்பிய எல்லைகளை பலப்படுத்துவது தான் உயிர்களை காப்பாற்றுவதற்குரிய வழி என்று கருதுகிறது.இக்கருதுகோளின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், இச்செயற்பாடு எதிர்விளைவுகளை மட்டுமே தந்து கொண்டிருக்கின்றது. எனவே, இச் செயற்பாடுகளில் குறைபாடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் காணப்படுகின்றமை அம்பலமாகின்றன. 

இக் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் வரை  அலைகடலில் உயிரிழக்கும் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது.