திங்கள், 4 நவம்பர், 2013

உலகக் காவலனின் “உளவு’கள் அம்பலம்

சா.சுமித்திரை

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையும் பதவியேற்ற காலத்திலிருந்தே, பராக் ஒபாமா தலைமையிலான அரசாங்கத்திற்கு போதாத காலமென்றே கூற வேண்டும். 

இம்மாத ஆரம்பத்திலிருந்து முடங்கிப் போயிருந்த அரச சேவைகள், ஒபாமா கெயார் திட்டம், பொஸ்டன் குண்டுத் தாக்குதல் உட்பட அவ்வப்போது கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் திடீர் தாக்குதல்கள், எட்வேட் சினோடன் விவகாரம் என பல சவால்களை சுமந்து கொண்டு பயணிக்கும் அமெரிக்காவிற்கு இப்பொழுது இன்னொரு தலையிடி ஏற்பட்டுள்ளது. 

தனது நட்பு நாடுகளின் நடவடிக்கைகள், அந்தந்த நாட்டுத் தலைவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் என்பவற்றைக் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை வெளியே கசிந்தமையே புதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

அனைத்து சமூகப் பண்புகளிலும் ஒட்டுக் கேட்டல், வேவு பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் நாகரிக மற்றதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆயினும், அரசாங்கத்தின் அல்லது தேசத்தின் நலனுக்காக சில சமயங்களில் இதில் விதி விலக்குகளும் உள்ளன. 

எதிரிகளின் தொடர்பாடல்களை முறியடிக்கும் நோக்கிலேயே இந்த உளவு, வேவு பார்த்தல் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். ஆனால், தனது நட்பு நாடுகளைக் கூட, சந்தேகக் கண்கொண்டு வல்லரசு நாடான அமெரிக்கா வேவு பார்த்த விடயம் அம்பலமாகியுள்ளது.

தனது எதிரி நாடுகளை விட, நேச நாடுகளின் தலைவர்களை முன்னொருபோதுமில்லாத வகையில் அதிகளவுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு உளவு பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகத் தலைவர்களில் 35 பேரின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. அவர்களது நடவடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மார்கெலின் தொலைபேசி அழைப்புகளே 2002 இலிருந்து அமெரிக்க உளவாளிகள் ஒட்டுக் கேட்டுள்ளனர். 
2002 இல், அஞ்சலா மார்கெல் சான்சிலராகத் தெரிவு செய்யப்படவோ அல்லது பதவியேற்கவோ இல்லை. 2005 இல் தான், ஜேர்மனியின் சான்சிலராக அஞ்சலா மார்கெல் பதவியேற்றிருந்தார். ஆனாலுமென்ன? நாளைய தலைவர்களை இன்றிலிருந்தே கண்காணிப்போம் என்ற நோக்கில் அமைந்திருந்தது அமெரிக்காவின் உளவுப் பணி.

கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக, யாராகவிருந்தாலும் தங்களுக்கு அச்சமோ, தலைகுனிவோ அல்லது அவமானமோ இல்லையென்ற கொள்கையிலேயே அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் உளவுப் பணியை செய்து வருகின்றது. 

இதனால், தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு கடும் விசனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில், அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் பிரெஞ்சு தொலைபேசி அழைப்புகளுக்குள் ஊடுருவியிருந்தமை தொடர்பான விவகாரம், நட்பு நாடுகள் நியாய பூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளதை வெள்ளைமாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி  பிராங் கொய்ஸ் ஹொலண்டே ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்றினைத் தொடர்ந்து வெளியான அறிக்கையொன்றில் என்.எஸ்.ஏ.இன்.முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் சினோடனின் வெளிப்படுத்தலினால் ஏற்பட்டுள்ள இராஜதந்திர தாக்கங்களை வெள்ளை மாளிகை முதற்தடவையாக சந்தித்துள்ளது. 

பிரான்ஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா பூரண விளக்கமளிக்க வேண்டுமென பிரான்ஸிற்கான அமெரிக்க தூதுவரிடம் அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர உறவில் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இருந்தபோதிலும் என்.எஸ்.ஏ.யின் செயற்பாடு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி தனது முற்றான நிராகரிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களிடையே இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறி பூரண விசாரணைக்கு ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஆரம்பத்தில் இந்த  வேவு நடவடிக்கைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லையென வெள்ளை மாளிகை மறுத்திருந்தது. ஆனால், உலகத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது தெரியாதென்று வெள்ளை மாளிகை கூறினால் தங்கள் வசமுள்ள பதிவேடுகளை அவர்கள் படிப்பதில்லை என்ற முடிவுக்குத் தான் வரமுடியுமென என்.எஸ்.ஏ.தெரிவித்தது.

ஒட்டுக் கேட்பு நடவடிக்கைகளுக்காக உளவு அமைப்புகள் மீது பழி சுமத்துவதை விட்டு விட வேண்டும். இதனை சட்ட ரீதியாகவே  செய்கிறோம். உளவுத் தகவல்களை வெள்ளை மாளிகையும் பயன்படுத்திக் கொள்கிறது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்தே, விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையென்பது போல பாசாங்கு செய்து கொண்டு இந்த உளவுப் பணிகளால் தான் ஏராளமானோரின் உயிர்களைக் காப்பாற்றவும் நட்பு நாடுகளை பாதுகாத்திடவும் முடிந்துள்ளதெனவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டது வாஷிங்டன். 

ஆயினும், ஒட்டுக் கேட்பு நடவடிக்கைகளால் நட்பு நாடுகள் கவலையடைவதை புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் நியாயமான கவலைகளை அமெரிக்கா பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது எனவும் கூறி தன்னை பாதுகாத்துக் கொண்டது. 

நாம் செய்யும் தவறுகளை செய்து கொண்டே இருப்போம். ஏதேனும் நெருக்கடி வந்தால் மட்டும் மிகவும் கவலையடைகிறோம் என்று ஒரு சொல் சொன்னால் போதும் என்பது தான் அமெரிக்காவின் தற்போதைய தலையாய மந்திரமாகவுள்ளது. 

அந்த தலையாய மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல, பாதிக்கப்பட்ட நாடுகளும் தலையாட்டுகின்றன. பிறகென்ன? இந்தப் பிரச்சினை முடிவடைந்து விட்டது. இனி அடுத்த புதிய பிரச்சினை என்பது போலவே அமெரிக்காவின் மாயாஜாலங்களுக்குள் சிக்குண்டு இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் அநேக நாடுகள் தவிர்த்து வருகின்றன. 

ஜேர்மன் சான்சிலர் அஞ்சலாவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படும் விவகாரத்தை என்.எஸ்.ஏ.யின் தலைவரால் ஏற்கனவே, ஒபாமாவிடம் விவரிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஒபாமா அதனை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக, அஞ்சலாவிடமிருந்து ஒட்டுக் கேட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரிக்குமாறு வெள்ளை மாளிகை உத்தரவிட்டது.

ஏற்கனவே, யூரோவின் பணப் பெறுமதியை உயர்த்த ஜேர்மனி மேற்கொண்ட நடவடிக்கைகள், ஈராக் போரின் போது படைகளை அனுப்ப மறுத்தமை, லிபியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளிடையே கசப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டது. 

இந்நிலையில், தனது நட்பு நாடுகளிலொன்றாக ஜேர்மனியும் உள்ளதென அமெரிக்கா வெளியே காண்பித்துக் கொண்டு, உள்ளே ஆப்பு வைக்கும் நோக்கில் செயற்பட்டு வந்துள்ளது. 

வேவு பார்த்தல் தொடர்பான சர்ச்சைகள் குறித்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் இவ்வருட இறுதியில் அமெரிக்காவுடனான பேச்சுகளை நடத்த விரும்புவதாக ஜேர்மன் சான்சிலர் அஞ்சலா அழைப்பு விடுத்துள்ளார். 

அதாவது, அவநம்பிக்கைக்கான விதைகளை ஒரு தடவை கண்டு விட்டால் அதன் மூலம் புலனாய்வு ஒத்துழைப்புகள் மேலும் மோசடைமந்து சிக்கல் நிலைமையினை தோற்றுவிக்கும் என்பதாலேயே இந்த அழைப்பினை அஞ்சலா மார்கெல் விடுத்துள்ளார். 

இந்நிலையில் தனது நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். 

நட்பு நாடுகளையே உளவு பார்த்த நடவடிக்கையால் இராஜதந்திர சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள அமெரிக்காவின் உறவினை அந்தந்த நாடுகள் இனிமேல் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது. 

இதேவேளை, தனது நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதை  நிறுத்தி வைக்குமாறு பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளமையானது நிரந்தரமாகவா? அல்லது தற்காலிகமானதா?  என்பதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது.

இதேவேளை, வல்லரசு நாடான அமெரிக்கா தன்னை உலகக் காவலனெனக் காட்ட எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக இல்லையென்பதை இந்த ஒட்டுக் கேட்டல் நடவடிக்கை அம்பலமாகியுள்ளது. 
அமெரிக்காவின் நடவடிக்கைகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கூட வேவு பார்க்கும் நிலைமையும் எதிர்காலத்தில் ஏற்படலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக