ஞாயிறு, 17 நவம்பர், 2013

இயற்கையால் வஞ்சிக்கப்படும் பிலிப்பைன்ஸ்

கடும் புயல்களால்
தொடரும் பேரழிவுகள் 


சா.சுமித்திரை

உலகின் பல்வேறு நாடுகளிலும் அவ்வப்போது , இயற்கை அனர்த்தங்களும் உயிரிழப்புகளும் பாரிய பெரும் சேதங்களும்  ஏற்படும் நிலையில், பிலிப்பைன்ஸில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம், கடுமையாகத் தாக்கிய ஹையான்  என்ற சூறாவளியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், 80 வீதமானோர் குடியிருப்புகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர்.

உலகின் நான்காவது மிகப் பெரிய சூறாவளியாகக்  கருதப்படும் ஹையான் புயலின் தாக்கம்  குறைவடைந்து ஒரு வார காலமாகியும் , இதுவரை  உயிரிழப்புகளின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி, ஏற்கனவே கடந்த மாதம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. 7.2 மக்னிரியூட் அலகளவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருந்ததுடன், உடைமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

 பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல, அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாத நிலையில் பிலிப்பைன்ஸிற்கு, இந்த அனர்த்தம் நிச்சயம் பேரிடியாகவே அமைந்திருக்குமென்பதை எவராலும் மறுக்க இயலாது.

70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் வருடத்திற்கு 20 இற்கும் மேற்பட்ட சூறாவளி அனர்த்தங்களை  சந்தித்து வருகின்றது. ஆனால், இம்முறை ஏற்பட்ட சூறாவளி மிகவும் சக்தி வாய்ந்தது.
கடலில்  மணித்தியாலத்திற்கு 242 மீற்றர் வேகத்தில் வீசிய காற்று, ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகளை அண்மித்த போது 20 அடி உயரத்திற்கு அலைகளை எழுப்பியது.

சூறாவளியுடன், சுனாமியும் ஏற்பட்டுவிட்டது போன்ற நிலையே அன்றைய தினம் வெளியாகியிருந்தது. 20 அடி உயரமான அலைகள் தீவுகளை  கடந்தபோது, அங்கிருந்த மரங்கள், கட்டிடங்கள், உயிரினங்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தன.

ராலோபன் நகரிலுள்ள லோரி தீவு பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளது. 80 வீதமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீதிகளெங்கும் பிணங்களே காணப்படுகின்றன. இவற்றில் சில உடல்கள் துண்டாடப்பட்டும் காணப்படுகின்றன. குடிநீர் அசுத்தமடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில், இப்பொழுதும் கூட சேற்று நீரும், இடிபாடுகளின் சேதங்களுமே நிரம்பிக் காணப்படுகின்றன. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள் என எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாத நிலைக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில், ஹையான் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3691 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ சபை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

41 மாகாணங்களைச் சேர்ந்த 6.9 மில்லியனுக்கு மேற்பட்டோர் இதன்போது , பாதிக்கப்பட்டுள்ளனர். 582,303 பேர் இடம்பெயர்ந்துள்ள போதிலும், 993 தற்காலிக முகாம்களில் 286,433 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரையோர  மாவட்டங்களிலுள்ள 80,087 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. சமர் தீவின் கிழக்கு பகுதியிலிருந்து 162 உடல்களும், மேற்கு பகுதியிலிருந்து 200 உடல்களும், வெட்டியிலிருந்து 1299 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பல உடல்களை அடையாளம் காணமுடியவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தின் போது, 3624 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.

இதற்கும் மேலாக, தற்காலிக முகாம்களில் வழங்கப்படும் உணவுப் பொதிகளுக்காக  பட்டினியுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவற்றினை பெற முண்டியடித்தவர்கள் சிலர் நசுக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

கோர அனர்த்தத்தில், உயிர் தப்பியுள்ளவர்களுக்கு அவசர உதவிகளை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் மீட்பு படையினரும் இராணுவத்தினரும் வழங்கி வருகின்ற போதிலும், அவர்களின் நிலைமை  இருண்டதாக்கப்பட்டுள்ளதாக  விபரிக்கப்படுகின்றது.

மீட்பு மற்றும் உதவி பணிகளுக்கென அமெரிக்காவும், பிரிட்டனும் போர்க் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளன. புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காகவும், அமெரிக்கா தனது குழுவை அனுப்பியுள்ளது. அ“ததுடன் விமானத்தாங்கி கப்பலான ஜோர்ஜ் வாஷிங்டன் லெய்தே தீவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

21 ஹெலிகொப்டர்களுடன் சென்றுள்ள ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலில், மக்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இங்கிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் மக்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வரப்படுவதுடன், கடல் நீரைக் குடிநீராக  மாற்றும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, சுத்தமான குடிநீரும் வழங்கப்படுவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 3 ஆவது கடற்பிரிவைச் சேர்ந்த 90 வீரர்களுடன் முதலாவது போர் விமான பிரிவைச் சேர்ந்த கேசி  130 ஜே,ஹேர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு புயலினை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலத்தில் ஹரிகென் என சொல்லப்படுகின்ற புயல், அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசுபிக் பகுதியிலிருந்தும், சைக்லோன் எனும் புயல் தென் பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்தும் தைபூன் எனும் புயல் வடமேற்கு பசுபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன.

அமெரிக்காவின் தைபூன் எச்சரிக்கை மையம் வரையறுத்துள்ளபடி, புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் என்னும் வேகம்கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகள் சுப்பர் தைபூன் என அழைக்கப்படும்.

வெப்ப மண்டலப் புயலான ஹையான்,தைபூன் வகையைச் சேர்ந்ததாகும். பிலிப்பைன்ஸினை  தாக்கிய ஹையான், இதுவரை அளவுக்கு மண்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ பாரிய இரைச்சல் சத்தம். கடும் மழையுடன் கேட்டது. உடனே, அது என்னவென்று வெளியே வந்து பார்த்தேன் .சில விநாடிகளில், நான் மரத்துடன் தூக்கி வீசப்பட்டேன். மயக்கமுற்ற நிலையிலிருந்த நான் சில மணித்தியாலங்களின் பின்னர், சுயநினைவு பெற்று வீட்டை பார்த்தபோது, அது மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. எனது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதையுண்டு மாண்டு போயுள்ளனர்.

எனது வீட்டை அண்மித்த ஏனைய கட்டிடங்களும் தரைமட்டமாகியிருந்தன.  சில உடல்கள் வெள்ள நீரில்  அடித்துச் செல்லப்படுவதையும் கண்டேன். என இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய ஒருவர், தனது அனுபவத்தை விபரித்திருந்தார்.

இரு தினங்களுக்கு முன், பிரசவித்த ஒரு சிசுவை வெள்ளநீர் அள்ளிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த தாயின் அலறல், உண்மையிலேயே அனைவரையுமே  பதற வைக்கும் நிகழ்வொன்றாகும்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதால், பெண்ணின் இடுப்புக்கு கீழ்  செயற்படமுடியவில்லை. இரத்த வெள்ளத்திலிருந்த அப்பெண் தனது குழந்தையை  இயலாமையினால்  கைவிட்டுள்ளார். துடித்துக் கொண்டிருந்தபோது, பிறந்து இரு நாட்களேயான சிசுவை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. தான் பெற்ற குழந்தையை, கண்முன்னே பறிக்கொடுத்த இந்த தாயினை எவ்வாறு ஆறுதல்படுத்த முடியும்?

இவ்வாறு பல்வேறு சோகங்களையும், அழுகுரல்களையும் தன்னகத்தே கொண்டு பயணிக்கின்றது பிலிப்பைன்ஸ். இந்நிலையில் , வலிகளையும், இழப்புகளையும் சந்தித்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டினர், தமது எதிர்காலத்தையும் தொலைத்துள்ளனர்.

போதுமான உணவு, மருத்துவம், வாழ்வாதாரம், கல்வி மற்றும் இதர வசதிகள் என 11.3 மில்லியன் மக்களுக்கு அவசர தேவை காணப்படுவதாக மனிதநேய விவகார ஒத்துழைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் கிழக்கு கரையோர பகுதிகள் முழுமையாக  அழிவடைந்துள்ளன. உலகத்தின் முடிவு போல, அன்றைய  தினம் அமைந்திருந்ததாக யோலண்டா மேயர், அனர்த்தத்தின் கோர தாண்டவத்தை விபரித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட 6000 மக்களில், 480 குடும்பங்களுக்கே உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான உணவுப் பொதிகளே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட ஏனையோர் ஆத்திரமடைந்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பட்டினிக்கான போராட்டம் மோசமடைந்துள்ளதாகவும் அவர் அங்குள்ள தற்போதைய நிலைமையை வெளிக்கொண்டு  வந்துள்ளார்.

பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ துருப்புகள் இணைந்து அவசர உதவிப் பணிகளை  முன்னெடுத்து வருகின்றன.மேற்குலக ஊடகங்கள், நிவாரணப்பணிகளுக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடன் நடவடிக்கைகளுக்கும் 23 மில்லியன் டொலர்களை மீட்பு பணிகளுக்குமென ஒதுக்கியுள்ளது.

தற்காலிக கூடாரங்கள், மருத்துவ ஊழியர்கள், மீட்பு பணிக்கான  விமானங்கள், உணவுப்பொதிகள்  உட்பட 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

சீன அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஐரோப்பிய ஒன்றியம் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், யப்பான் 50 மில்லியன் டொலர்களையும், தென்கொரியா 5 மில்லியன் டொலர்களையும், சவுதி அரேபியா 10 மில்லியன் டொலர்களையும், அமெரிக்கா 20 மில்லியன் டொலர்களையும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன.

மருந்துகள், மின் பிறப்பாக்கிகள், உலர் உணவுப் பொதிகள் உட்பட பல மனிதநேய உதவிகளை இந்தோனேசியா வழங்கியுள்ளது. ஆயினும், இந்நிலையில் இது போதாது என்ற  விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

அனர்த்தத்தில், உயிர் தப்பியவர்களில் 45,000 பேரின் எதிர்காலம் இருளடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அனர்த்தத்திலிருந்து மீள முடியாமல் உள்ள  மக்களை வறுமையும் சுகாதாரச் சீர்கேடும் ஆட்கொண்டுள்ளன. தினமும் கொள்ளைச் சம்பவங்களும், வன்முறை மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

 பிலிப்பைன்ஸை இதற்கு முன் 1964 இல், சாலி என்ற தைபூன் புயலும்,2011 இல் வஷி, 2012 இல் போபா எனும் தைபூன் புயல்களும் சூறையாடியுள்ளன.பிலிப்பைன்ஸை மட்டும் அதிகளவில் புயல் தாக்குவதற்கு காரணம் அந்தப் பகுதி பசுபிக் பெருங்கடலை அண்மித்து காணப்படுவதேயாகும்.

அப்போது, இத்தகைய புயல் எழும்புவதற்கும், புயலின் வேகம் அதிகரிப்பதற்கும் பருவகால நிலை மாற்றமே முக்கிய காரணமாகுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கு பசுபிக் கடற் பகுதியில், கடந்த சில வாரங்களாகவே மேற்பரப்பு நீர் மற்றும் ஆழத்திலுள்ள நீர் இரண்டிலும் வெப்பம் அதிகமாகவே, இருந்துள்ளது. வெப்ப அதிகரிப்பினால், அதை காற்று உள்வாங்கிக் கொண்டது. இதுவே, ஹையான் புயல் உருவானதற்கும், தீவிரமடைந்ததற்கும் காரணமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற உலக நாடுகளும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கைகொடுக்கும் என்றாலும், அழிவடைந்த  வீடுகளையும், சிதைவடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் மீள கட்டியமைக்க நிச்சயம் நீண்ட காலம் எடுக்கும்.

மெல்ல மெல்ல மீண்டு வரும் காலப்பகுதியில், இதுபோன்ற புயல்களும், நிலநடுக்கங்களும் மீண்டும் தாக்கலாம். ஆகவே, இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டை பாதுகாக்க நடவடிக்கையெடுப்பதே உடனடித் தேவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக