திங்கள், 4 நவம்பர், 2013

அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ளும் குடியேற்ற வாசிகள்

சா.சுமித்திரை

உள்நாடுகளில் காணப்படும் அசாதாரண நிலைமைகளான போர், வறுமை, வேலை வாய்ப்பு இன்மை, உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமையுடன் மேலைத்தேய நாடுகள் மீதான மோகத்தை அடிப்படையாகக் கொண்டு, தமது உயிரையும் துச்சமெனக் கருதி மிகவும் அபாயகரமான பயணத்தினை மேற்கொள்ளும் குடியேற்ற வாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அண்மைக் காலங்களில் வெகுவாக அறிய முடிகின்றது. 

அதேசமயம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நம்பிக்கைத் தீவாக இத்தாலியின் லம்பீடுஸா மாறி வருகின்றது என்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அனர்த்த நிகழ்வுகள் காண்பித்துள்ளன.  வட ஆபிரிக்க கரைப் பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்கு சட்ட விரோதமாக செல்வதற்கு  இந்தக் கடல் மார்க்கம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. 

அக்டோபர் 3 இல் 500 இற்கும் மேற்பட்ட குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று இத்தாலியத் தீவான லம்பீடுஸா கடலில் மூழ்கியதில் 359 பேர் உயிரிழந்தனர். மத்திய தரைக் கடலில் மூழ்கிய இப்படகிலிருந்த எதியோப்பியர், சோமாலியர் மற்றும் சிரியர்கள் உட்பட 545 பேரில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது வெறும் 155 பேர் தான். 

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து மற்றொரு படகு மால்ட்சே நீர்நிலையில் லம்பீடுஸா தீவிற்குத் தெற்கே அக்டோபர் 11 இல் மூழ்கியது. இதில் 34 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தனித்தனி சம்பவங்களில், இத்தாலியத் தீவான சிசிலிக்கு அருகே 500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் மத்திய தரைக் கடலைக் கடந்து, இத்தாலிக்குள்  நுழைய முயன்றுள்ளனர். இவர்களில், பலர் துனிசீயா, லிபியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து போர் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க வெளியேறியவர்கள். 

இந்நிலைமையில் அகதிகள் மீட்பு நடவடிக்கையை மிக மோசமாகப் பின்பற்றுவதாகக் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. 

ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுவதற்கு முயற்சிக்கும் குடியேற்றவாசிகள் மத்திய தரைக் கடற் பிராந்தியத்தில் அதிகளவு ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் மீட்பு நடவடிக்கையை கடுமையாகப் பின்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
படகு அகதிகள் அதிகளவில் பலியாகும் எண்ணிக்கைகள்  தொடர்பாக ஐ.நா.வின் தரவுகள் அதிகரித்துக் காட்டுகின்றன. அடுத்த வாரம் நடைபெறும் பிராந்திய மாநாடொன்றில் இவ்விவகாரங்கள் குறித்து பேசப்படுமென மால்ட்டா, இத்தாலியப் பிரதமர்கள் கூறியுள்ளனர். 

அதேசமயம், ஒரு வார காலத்துக்கு பொறுமை காக்க முடியாதெனக் கூறியுள்ள இத்தாலியப் பிரதமர்  என்றிகோ வெட்டா, மத்திய தரைக் கடலில் தமது படைகளை மும்மடங்காக அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, எம்மால் பல கோடி டொலர்களை செலவளிக்க முடியும். இராணுவ, மனித நேயப் பணிகளுக்காக நாம் திட்டமிட்டுள்ளோம். இதனால், எம்மால் சிறப்பாக பணியாற்ற முடியும். மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையும் உள்ளதெனவும் லெட்டா சுட்டிக் காட்டியுள்ளார். 

அதேசமயம், தமது, கடல், வான் மார்க்க ரோந்துப் பணிகளையும் கடந்த வாரம் ஆரம்பத்திலிருந்து இந்த நாடுகள் அதிகரித்துள்ளன. அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் அப்பகுதியில் பலியாவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்தாலியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த இரு தசாப்தங்களில், ஐரோப்பிய கோட்டைக்குள் நுழைய எத்தனிக்கும் முயற்சியில் மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன.  அதேசமயம், அகதிகளில் 95 வீதமானோருக்கு ஐரோப்பாவில் எங்கும் புகலிடம் கோருவதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. 

ஐ.நா.வில் 1.6 மில்லியன் சிரியர்கள் தம்மை அகதிகள் என உத்தியோக பூர்வமாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் 3.45 மில்லியன் சிரியர்கள் அகதிகளாகலாமெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த நூற்றாண்டின் பாரிய யுத்தம் தின்ற தேசமாக சிரியா பார்க்கப்படுகின்றது. மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல்கள், வன்முறைகள், இடம்பெயர்வுகள், போஷாக்கின்மை, வறுமை என அண்மைய வரலாற்றில் நினைத்துக் கூட, பார்க்க முடியாத சம்பவங்கள் அங்கு அரங்கேறி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிரியர்கள் சுற்றுலா விசாவில் தங்கள் நாட்டுக்குள் நுழைய லெபனிய அரசாங்கம் அனுமதிக்கிறது. அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவில்லை. லெபனானில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிரியர்கள் உள்ளனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான சிரியர்கள், ஜோர்தான் எல்லையில், ஆபத்தான சூழலில், எல்லையைத் தாண்டி நுழைவதற்காக காத்திருக்கின்றனர். 

அதேசமயம், லம்பீடுஸா வழியாக ஐரோப்பாவை அடைய முயலும் அகதிகளைக் கொண்ட பல லிபிய துறைமுகங்கள் வழியாக ஆபத்தான  படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், இத்தகைய சட்ட விரோத நுழைதலை தடுக்கும் வகையில், வருடாந்தம் 30 மில்லியன் யூரோக்கள் என்னும் உடன்படிக்கையொன்றை லிபிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. யூபம் லிபியா என்ற இந்த உடன்பாடு எல்லை நிர்வாகம் மூலோபாயம், எல்லை நிர்வாகத்திற்கான சட்ட பூர்வமான வடிவமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது. 

இதுபோன்ற இரகசிய உடன்படிக்கைகளை, இடைத் தரிப்பிடங்களாகவுள்ள நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேணி வருகின்றது. இறைமை, எல்லை நிர்ணயம், எல்லைப் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ரகசிய உடன்படிக்கைகளே புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு இட்டுச் செல்கின்றன. 

கடந்த மாதம் சட்ட விரோதமான முறையில் ஐரோப்பாவினுள் நுழைய முயன்ற 700 பேரை இத்தாலிய கடற்படையினர் கைது செய்திருந்தனர். 
அதுவும்   இரு நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே  கைது செய்யப்பட்டனர். இதில், சிரியா, எகிப்து, எரித்ரியா, நைஜீரியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகச் சென்று கொண்டிருந்ததாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

கைதுகள், தடுத்து வைப்புகள் என்பவற்றுக்கு மேலாக, உயிர்களை பணயம் வைத்து, ஆபத்தான கடற்பயணங்களை திறந்த படகுகளில் மேற்கொண்டு வருவோரின் எணணிக்கை இரட்டிப்பாகி வருகின்றமை அதிர்ச்சி தரக் கூடியது என்பதை விட, உண்மையிலே வேதனை தரக் கூடியதாகும். 

உள்நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை, அச்சுறுத்தல்கள், சித்திரவதைகளுக்குப் பயந்து, அயல் தேசங்களுக்கு தஞ்சம் கோரி செல்வோர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதானது, வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போலாகும். 

பெண்கள், கைக் குழந்தைகள் உட்பட பல நூற்றுக் கணக்கான அகதிகளை பலியெடுக்கும் மயான பூமியாக மத்திய தரைக் கடல் பகுதி மாறியுள்ளது. அதேசமயம், இந்த உயிரிழப்புகள் தற்பொழுது அதிகரித்திருப்பதற்கு காரணம் சிரிய நெருக்கடியாகும். 
இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும்  உள்நாட்டுப் போரினால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

சிரியாவின் அயல் பிராந்தியங்களான ஜோர்தான், லெபனான், ஈராக், துருக்கி மற்றும் எகிப்திலும் இலட்சக் கணக்கான சிரியர்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். 

அகதிகள் நெருக்கடி இந்த ஆண்டு அதிகரித்து விட்டது என சுட்டிக் காட்டியுள்ள ஐ.நா.வின் அறிக்கை இந்நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அச்சம் வெளியிட்டுள்ளது. 

அகதிகளாக சென்ற சிரியர்களின் அடிப்படை உரிமைகள், அத்தியாவசிய வசதிகள் அப்பிராந்திய நாடுகளில் மறுக்கப்படுவது அகதிகளை அபாயத்துக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையிலேயே அவர்கள் ஐரோப்பிய கடற் பரப்புக்குள் நுழைந்து அபாயகரமான பயணங்களை மேற்கொள்கின்றனர். 

ஜோர்தானில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும். குடியுரிமை இல்லாமலும் 5 இலட்சம் சிரியர்கள் முகாம்களில் உள்ளனர். இதன் மூலம், அந்நாட்டு சனத்தொகையில் இரு வருடங்களில் 8 சதவிகிதம் ஆகிவிட்டனர். ஜாடரி முகாமில் 1,30,000 மக்கள் மிக மோசமான நிலையில் கடும் நெரிசலுக்குள் வாழ்கின்றனர். 

இதேவேளை, 2011 இல் லிபியத் தலைவர் முகம்வர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அது லிபியாவின் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதுடன், ஜனநாயகத்திற்கும் ஒரு முன் மாதிரி எனப் பேசப்பட்டது. ஆனால், லிபியாவில் ஒரு குற்றம் நிறைந்த ஆட்சியும் கிளர்ச்சியாளர்களின் வன்முறை அட்டகாசங்களுமே வெளிப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி லிபியர்கள் துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் அனுபவிக்கின்றனர். 

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர்கள், உயிர் அச்சுறுத்தல்கள் வாழ்வதற்கான சூழல் இன்மை ஆகிய காரணிகளே இந்த ஆபத்தான கடற்பயணங்களை மக்கள் மேற்கொள்ள பிரதான காரணங்களாகும் இந்நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை படகுப் பயணங்கள் குறையப் போவதில்லை. உயிரிழப்புகளும் சாதாரணமாகி  விடும். எனவே, படகு அகதிகளின் அபாய நிலையினைத் தடுப்பதற்கான பல்வேறு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேசமயம் அதற்கான காரணிகளை இல்லாதொழிக்க வேண்டும். 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை ஐரோப்பிய எல்லைகளை பலப்படுத்துவது தான் உயிர்களை காப்பாற்றுவதற்குரிய வழி என்று கருதுகிறது.இக்கருதுகோளின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், இச்செயற்பாடு எதிர்விளைவுகளை மட்டுமே தந்து கொண்டிருக்கின்றது. எனவே, இச் செயற்பாடுகளில் குறைபாடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் காணப்படுகின்றமை அம்பலமாகின்றன. 

இக் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் வரை  அலைகடலில் உயிரிழக்கும் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக