புதன், 4 ஜூலை, 2012

மனித உயிர்களுடன் விளையாடும் போலி வைத்தியர்கள்




 இலங்கையில் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையாற்றுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டில் வைத்தியத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே  ஏனைய துறைகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். அந்த வகையில் இலங்கையானது பல்வேறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயற்படுவதால் அந்நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக வெளிவரும் சில சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இனிமேலும் இந் நிலை தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் 50 ஆயிரம்  போலி வைத்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சட்ட விரோத மருந்தகங்கள், மருந்துவ நிலையங்கள் சுற்றி வளைப்பு, போலி மருந்து விற்பனை நிலையம் முற்றுகை , கருக்கலைப்பு  நிலையங்களின் அதிகரிப்பு என மருத்துவத் துறைக்கு சவால்களாக  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து  வருகின்றோம். இதனால் வைத்திய சாலைகள், சிகிச்சை நிலையங்கள், வைத்தியர்களிடம் செல்வதற்கு மக்கள் பல்வேறு வகையிலும் ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்டியில் கடந்த 20 வருடங்களாக சாதாரண பரீட்சையில் கூட சித்தியடையாத ஒருவர் போலியான வைத்திய சான்றிதழ்களை வைத்துக் கொண்டு சிகிச்சை நிலையமொன்றினை நடத்தி வந்துள்ளார் என்பது கடந்த வருடமே தெரிய வந்தது. இதனையடுத்து அப்போலி வைத்தியரையும், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் யாழ். நகரில் கடந்த 5 வருடங்களாக இயங்கி வந்த பல் மருத்துவ சிகிச்சை நிலையத்தினை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போலி வைத்தியரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைப் போல மலாய் பெண்ணொருவர் தனக்ப்கு புற்றுநோய் உள்ளதென பரிசோதனை முடிவில் அறிந்து கொண்டு மேலதிக சிகிச்சை பெற முயன்ற போது இயற்கை வைத்தியம் மூலம் இலகுவாக குணப்படுத்த முடியுமென ஒரு போலி வைத்தியர் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த  பெண், 4000 ரிங்கட்டினை கொடுத்து சில சிகிச்சைகளைப் பெற்றுள்ளார். எனினும் சில காலத்தின் பின்னரே அவ் வைத்தியர் ஒரு போலியானவர்  என்றும் தான் ஏமார்ந்து விட்டேன் என்பதையும் தெரிந்து கொண்டார். தற்பொழுது மலாய் பெண்ணுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணத்தை நெருங்கிய நிலையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இப் பெண்ணைப் போல பலர் இலகுவாக  குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடிய நோய்களை தகுதியற்ற போலி வைத்தியர்களிடம்  காட்டி சிகிச்சை பயனளிக்கவில்லையென நோய் தாக்கம் அதிகரித்த பின் அரச வைத்தியசாலைகளை நாடி நிற்கின்றனர். நிலைமை கவலைக்கிடமாக மாறிய பின் வேறு பல நோய்களையும் இலகுவாக வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
இதனைப் போல  முறையாக மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்யாது தாங்கள் மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டு சமூகத்திலே பலர் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே தான் போலிப் பட்டங்களை பணம் மூலமாகவும் சமூக அந்தஸ்து மூலமாகவும் பெற்றுக் கொண்டு வைத்தியர்கள் போல் நடித்து பொது மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார  அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 இதற்காக போலி வைத்தியர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் நகல் சட்ட மூலத்தை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதனடிப்படையில் போலி வைத்தியர் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படின் 5 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை  மிகவும் கடுமையாக அமுலாக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலத்திலே வைத்தியத் துறையென்பது சமூகச் சேவையாக பார்க்கப்படுவது குறைவாக உள்ளது. இதையொரு பணங் கொழிக்கும் தொழிலாகவே சில வைத்தியர்கள் கருதுகின்றனர். பணம் கட்ட வசதி இருந்தால் வைத்தியசாலையினுள் நோயாளியை  அனுமதியுங்கள். இல்லையெனில் வேறு வைத்தியசாலை பாருங்கள் என்ற உரையாடல் அதிகளவில் தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகும்.
 போலி வைத்தியர்கள் 5 வருட சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வந்த பின்னரும் கூட புதிய இடத்திற்கு சென்று மீண்டும்  அதே குற்றத்தைச் செய்ய முற்படலாம்.  எனினும்  தற்பொழுது போலி வைத்தியார்கள் உருவாகுவதை ஒரளவேனும் தடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார அமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்க தொன்றாகும்.
அதிகளவில் போலி வைத்தியர்கள் கிராமப் பகுதிகளிலேயே  சட்டவிரோதமாக சேவையாற்றி வருகின்றனர். இதற்குக்  காரணம்  கிராம மக்களிடையே மருத்துவத்துறை சார்ந்த தெளிவான அறிவின்மையே . இவர்கள் அநேகமாக ஆயுர் வேத வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவற்றையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இவ் வைத்திய முறைகள் வழக்கொழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தை போலி வைத்தியர்கள் பயன்படுத்தி பணம் உழைக்கின்றனர்.
 அதேபோல் சட்ட விரோத  கருக்கலைப்பு நிலையங்கள், நகரங்களில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. போலி வைத்தியர்களை அதிகளவாக கொண்ட நாடாக மட்டுமன்றி, கருக்கலைப்பு அதிகளவு நடைபெறும்  நாடாகவும் இலங்கை மாறி வருவதாக  பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 45100  வரையிலான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வறிக்கையொன்று  சுட்டிக்காட்டுகின்றது. இந்த கருக்கலைப்பு நிலையங்களில் அதிகளவில் போலி வைத்தியர்களே பணியாற்றுகின்றனர். கருக்கலைப்பு எண்ணிக்கையை விட போலி வைத்தியர்கள் அதிகமாக உள்ளமை அதிர்ச்சி தரும் விடயமாக உள்ளது.
இந்தப் போலி வைத்தியர்களிடம் போதிய கல்வியறிவோ, அனுபவமோ இல்லாமையால் கருக்கலைப்பு நடவடிக்கைகளின் போது அதிகளவு குருதிப்  பெருக்கு ,கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், முறையற்ற ஆலோசனைகள் போன்றவற்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
எந்த வித பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களும் மருத்துவ துறை தொடர்பான அறிவு இல்லாதவர்களும் வைத்தியர்கள் என அப்பாவி மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.  இதனால் மனித இனம் பாரிய போராட்டத்தை எதிர்நோக்குகிறது. எனவே தான் அரசாங்கம்  வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய போலி வைத்தியர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு  மாகாணத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை கட்டுப்படுத்த அரசு மற்றும் அரசு சாராத மருத்துவ துறை நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருந்தனர் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டில் இருந்த தகைமை வாய்ந்த  ஆங்கில வைத்தியருக்கும் போலி வைத்தியருக்கும் இடையிலான விகிதம்  ஒன்றுக்கு நான்கு எனவும் தெரிவித்திருந்தது.
 ஆனால் தற்போதைய சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி போலி வைத்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாகும். எனவே, கடந்த 8 வருடங்களில் மேலும் 10 ஆயிரம் போலி வைத்தியர்கள் உருவாகியுள்ளனர்.  மருத்துவ துறையை போலிகளிடமிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சு முன்னெடுத்து வந்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் போதுமானளவு உறுதியுடையவையாக இல்லை என்பதையே இந்த அதிகரிப்பு காட்டுகிறது.
எந்தத் துறையிலும் கலப்படம் இருக்கலாம். அவற்றினால் பாரியளவு பாதிப்புகள் சமூகத்திற்கு ஏற்படாது எனலாம். ஆனால் மருத்துவத் துறையில் போலி வைத்தியர்கள், போலி மருந்துகள் என கலப்படம் காணப்பட்டால் அது மனித உயிருக்கே பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். இத் துறை மனித உயிருடன் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து உறுதியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது எடுக்க முனைய வேண்டும். இல்லையெனில் மேலும் 5 வருடங்களின் பின்பு நாட்டில் இருக்கக் கூடிய போலி வைத்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும் சனத்தொகையின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும் என்பது திண்ணம்.

வணிக மயமாகிவிட்ட காதலர் தினம்


பொதுவாக ஒரு விடயம் தொடர்பாக சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே விசேட தினங்கள் பிரகடனப்படுத்தி அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தினங்கள் விசேடமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பெப்ரவரியென்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினமாகும். இது இன்றோ, நேற்றோ கொண்டாடப்படுவதல். பல வருடங்களுக்கு முன்பே இத்தினத்திற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமையே இந்நாளின் சிறப்பாகும். 1840 ஆம் ஆண்டு அமெரிக்க மாதாந்த இதழின் பிரபல எழுத்தாளரான லஹ்எர்க் ஸ்மித் செயிண்ட் வலன்டைன் தினம் ஒரு தேசிய தினமாக ஆகிவிட்டது என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூரலாம்.


உண்மையிலே காதலர் தின வரலாற்றினை நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தினம் இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படக்கூடிய ஒரு தினமா? என எண்ணத் தோன்றும். ஏனெனில் காதலர் தினம் பலரது தூய காதலுக்காக தன்னுரியிரையே கொடுத்த ஒரு ரோம் பாதிரியாரின் மரணத்திற்கான ஆரம்பமாகும்.  ஒரு தியாகம் நிறைந்த நாளை  அமைதியாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்ததாகும். அதாவது கி.பி. 250 ஆம் ஆண்டுகளில் ரோமப் பேரரசாகவிருந்த கிளாடியஸ் தனது அரசியல் வாழ்க்கையிலே தொட்ச்சியாக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தான். இதேவேளை இவனது ஆட்சியில் மக்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை. அவர்கள் நாட்டிற்காக சேவையாற்றாது குடும்பம், காதல், மகிழ்ச்சியென இருக்கின்றமையால் தான் படைகளில் இணைய மறுக்கிறார்கள் என நினைத்து கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தான்.
இதனையெதிர்த்து வந்த பாதிரியரான வலன்டைன் பல இரகசியத் திருமணங்களை செய்து வைத்தார். இதனால் பேரரசு கிளாடியஸ் கோபம் கொண்டான். உடனே பாதிரியாரைச் சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்தான். கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்றே பாதிரியார் வலன்டைன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கௌரவப்படுத்தவே புனித தியாக நாளாக இக்காதலர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் பெப்ரவரியென்றால் காதலர்களும் சரி இளவயதினரும் சரி தங்களுடைய காதல் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏதோவொரு வகையிலே வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். காதலர்களது அன்பினை புனிதப்படுத்தி உள்ளங்களில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளிக்கொண்டு வர உகந்த நாள் காதலர் தினமென ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். எமது கலாசார விழுமியங்களை சீர்குலைக்கின்றன என காதலர் தினத்தை இன்னொரு சாரார் எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் ஏனைய தினங்கள் அமைதியான வாழ்த்துக்களுடன் முடிந்து போகின்றன. ஆனால், காதலர் தினம் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கின்றதோ என்ற அச்சமும் ஆதங்கமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இன்று காதலர் தினம் வணிகமயமாக்கப்பட்டு வருகின்றமையாலே தானோ என்னவோ இத்தகைய எதிர்ப்புகள் உருவாகின்றன என சிந்திக்கத் தோன்றுகின்றது.
காதலர் தினத்தை ஆடம்பரமாக்க இலத்திரனியல் ஊடகங்களும் துணை போகின்றன. அதாவது வர்த்தக நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களை இவ் ஊடகங்கள் மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்துகின்றன. அவர்களது காட்சியறைகளிலே நவீன ரகத்திலான இறக்குமதி செய்யப்பட்ட பல அன்பளிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றின் வாடிக்கையாளர்களில்  அதிர்ஷ்டசாலியான காதல் ஜோடி தெரிவு செய்யப்பட்டு ஒரு கணினி வழங்கப்படுவதுடன் 3 நாள் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது என பல கவர்ச்சியான விளம்பரங்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றன.
இதனால், காதலர் தினமென்றால் காதலர்கள் அன்பளிப்புப் பொருட்களை வாங்கி பரிமாறிக்கொள்ளல், சினிமா, நண்பர்களுக்கு விருந்து என பல வகைகளில் பணத்தை அள்ளிவீசி செலவளிப்பது என்றே ஆகிவிடுகிறது. வர்த்தக, நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும், வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் விதம்விதமான வாழ்த்து மடல்கள், மலர்ச்செண்டுகள், பரிசுப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், ஆடை அணிகலன்கள் என எல்லாவற்றிலும் காதலர் தின ஸ்பெஷல் என்ற முத்திரை பதித்து குவித்து விடப்பட்டிருக்கம்.
இத்தகைய பொருட்களை வாங்க நினைக்காதவர்களைக் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்த்து அவற்றினை அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். இதனை விட நாம் அன்பு செலுத்துகின்ற யாருக்குமே அவ் அன்பளிப்புகளை வழங்கி எமது உண்மையான அன்பினை வெளிக்காட்டலாம் எனக் கூறி இலவச ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உதாரணமாக ஒரு தந்தைக்கோ அல்லது கற்பிக்கின்ற ஆசிரியருக்கோ மகன் அல்லது மாணவன் என்ற ரீதியிலே ஒரு தூய அன்பு உள்ளது. இதனைக் கூட வியாபாரமாக்கி அவ்விருவர்களுக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டக் கூடியதாகவுள்ள தகுந்த பரிசுகளை காட்டி விற்றுவிடுகின்றனர். இதனால், காதலர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருமே காதலர் தின மலிவு விற்பனையில் அன்பை காட்ட தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி பரிசளிக்க விரும்புகின்றனர்.
இவர்களது வியாபார தந்திரங்களை உணராத நாம் வாழ்த்து அட்டைகள், மலர்ச் செண்டுகள், இனிப்புப் பண்டங்கள் என பல ரூபாக்கள் செலவளித்து வாங்குகின்ற போது அவர்கள் அமைதியாகவே இருந்து கொண்டு பல ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கின்றனர்.
அதேபோல அன்றைய தினம் வீதிகளில் காணப்படுகின்ற சாப்பாட்டுக் கடைகள் முதற்கொண்டு பிரபல்யம் உல்லாச விடுதிகள் வரை காதல் ஸ்பெஷல் உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், அங்கு வழமையாகவே விற்பனையாகின்ற உணவு வகைப் பட்டியலே காதல் ஸ்பெஷல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும்.
வியாபார நிலையங்களில் விதம்விதமான வடிவங்களில் சொக்லேட் பெட்டிகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் காதலர் தின வாழ்த்துக்கள், ஆங்கில முதலெழுத்துக்கள் குறிக்கப்பட்ட கவர்களினால் சுற்றி அலங்கரித்து அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். இவற்றினைப் பார்க்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியோர்களுக்கும் கூட வாங்க வேண்டுமென்ற ஆசை வரும். உடனே அவற்றினை அதிக விலை கொடுத்தும் வாங்கி விடுவார்கள். ஆனால், அவ்வலங்கரிக்கப்பட்ட பைகளினை பிரித்துப் பார்க்கும் போது உண்மையான பெறுமதி மிகச் சாதாரணமானதாகவே இருக்கும். அப்பொழுது தான் நாம் கடைக்கார்களிடம் ஏமாந்து விட்டோம் என்ற உண்மை தெரிய வரும்.
மேலைத்தேய நாடுகளைப் போல எமது நாட்டில் காதலர் தினத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படுவதில்லை. எனினும் இத்தகைய வியாபார நடவடிக்கைகளே இளம்வயதினர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முனைகின்றன. விளம்பர மேம்பாடு, மையப்படுத்தப்பட்ட சந்தை முயற்சிகள் மூலம் சிங்கப்பூரள், சீனா, தென்கொரியா, இந்தியா என சில ஆசிய நாட்டவர்களே காதலர் தினத்திற்கு என அதிகளவான பணத்தை செலவிடுகின்றனர்.
உலகிலே கிறிஸ்மஸுக்கு அடுத்தபடியாக வாழ்த்து மடல்களை அனுப்புவதிலும் பரிசுப் பொருட்களை வழங்குவதிலும் விருந்து உபசாரங்களிலும் இரண்டாவது இடத்திலே காதலர் தினம் உள்ளதாக புள்ளிவிபரமொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல் பெண்களை விட ஆண்களே சராசரியாக இருமடங்கு செலவிடுகின்றனர் எனவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் ஒரு காதலைத் தொடர வேண்டுமாயின் நிறையப் பணம் செலவிட வேண்டும். அப்பொழுது தான் அன்பு நீடிக்கும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் உண்டு. உண்மையான காதலை பொருள் கொடுத்தோ, பணம் கொடுத்தோ வாங்க முடியுமா? வருடத்தின் 365 நாட்களும் கிடைக்காத தூய காதல் இந்நாளில் மட்டும் கிடைத்து விடுமா? இதனை விட ஒரு காதலன், அல்லது காதலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவோ, தொலைந்த காதலை தேடவோ, இல்லையென்றால் எனக்கு யாரும் இல்லையே என அங்கலாய்க்கவோ தான் இந்நாளைக் கொண்டாட வணிக நிறுவனங்கள் பலவந்தப்படுத்துகின்றன. இக்காதலர் தினம் அன்பின்  அடையாளத்தை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதே ஒழிய கேலிக்கூத்துகளுக்கும் ஆடம்பர செலவுகளுக்கும் அல்ல. எனவே இந்நாளில் வர்த்தக சமூகத்தினரின் தந்திரோபாயங்களுக்கு காதலை விற்று விலை போகாது இனிமையான என்றும் இளமையான உண்மைக் காதல் உங்களுடனே இருக்கும் என்பதில்நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக.

சா.சுமித்திரை

பரிணாம வளர்ச்சிக்கு உதவிய காலநிலை மாற்றம்


 சா.சுமித்திரை


 இன்றைய காலத்தில் சீரற்ற காலநிலை மாற்றங்களால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பல இயற்கை அனர்த்த அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக சுனாமி, வரட்சி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சூறாவளி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனர்த்தங்களுள் ஒவ்வொரு உயிரினங்களும் சிக்கி சிதைவடைந்து மடிந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய காலநிலை மாற்றங்களால் உலகிலுள்ள அனைத்து இடங்களிலும் மனித இனம் முற்றுமுழுதாக அழிவைச் சந்தித்து வருகின்றன.இது இவ்வாறு இருக்க இன்னொரு புறம் முன்னைய காலங்களில் இக்காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு வளர்ச்சிக்கு வழிகோலியது என்ற உண்மையும் புறந்தள்ள முடியாத ஒன்றாகியுள்ளது.
கடந்த 2 பில்லியன் ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற காலநிலை மாற்றங்களால் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளதுடன் மாற்றமடைகின்ற காலநிலை தன்மைக்கேற்ப மனித இனம் இசைவாக்க மடைந்து புதியஇடங்களுக்கு இடம்பெயர்ந்து தனது இருப்பை விரிவாக்கி வந்துள்ளது.
 புவியில் நிலவிவந்த கோடை, மாரி போன்ற பருவ காலங்களை உருவாக்கும் காலநிலை மாற்றங்களால் மனிதகூர்ப்பு விருத்தியில் உண்மையாகவே நீண்டதொரு சிறந்தநன்மை காணப்பட்டுள்ளதுடன் இக்காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மூலம் கலாசாரம் அறிவியல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக மனித இனம் முன்னேற்றம்  கண்டு வந்துள்ளது.
அதாவது ஆதிகால மனிதன் இயற்கையோடு ஒன்றி விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வழ்ந்தான். அவ்யுகத்தில் இடம்பெற்ற மழை,குளிர்,வரட்சி போன்ற காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க  படிப்படியாக பழகிய மனிதன் குகை, மரப்பொந்து,மரக்கிளைகள் போன்ற உறைவிடங்களைதேடி  குடிபுகுந்தான். முன்னைய காலங்களிலும் நிலநடுக்கம், கடல்கோள் என்பன உருவாகியுள்ளன என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன.எனினும் அக்கால மக்கள் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படக்காரணம் இறைவன் தம்மேல் கோபம் கொண்டமையே என மூடநம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்தனர்.
 அத்துடன் இத்தகைய இயற்கை அழிவுகளால் அதிகளவு உயிர்ச் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்படவில்லை.ஏனெனில் மனிதன் இயற்கைக்கு பயந்து கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தான்.
இருப்பிடங்களில் வாழப்பழகிய மனிதன் குளிரிலிருந்து பாதுகாக்கவும் இறைச்சி போன்ற உணவை வேக வைக்கவும் தீயைக் கண்டுபிடித்தான்.ஆதிகால மனிதனது முதலாவது கண்டுபிடிப்பு காலநிலை மாற்றங்களாலேயே உருவானது என நம்பப்படுகிறது.தொடர்ந்து பருவகால மாற்றங்களால் உருவாகும் மழை,கோடை காலங்களில் தனக்கு தேவையான உணவை களஞ்சியப்படுத்தவும் பாதுகாக்கவும் கற்றுக்கொண்டான்.
 எனினும் பின்னர் இந்த நாடோடி வாழ்க்கையைத்  தவிர்த்து மெல்ல மெல்ல காட்டு பகுதிகளை விலகி நதிக்கரையோரங்களை அண்டிய பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்தான். மனித நாகரிகங்கள் நதிக்கரையோரங்களிலேயே உருவானதாக வரலாறு எமக்கு கூறுகின்ற போதும் இவை காலநிலை மாற்றங்களின் மூலமே உருவாகியுள்ளமை தற்போதயை ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

 அதாவது நதிக்கரையோரங்களில் வாழ்வாதார இருப்பிடங்களை அமைத்து நிரந்தர வாழ்க்கை வாழப்பழகியவன் தனது உணவுக்காக விலங்குகளை வளர்த்து மட்டுமன்றி நீரைப் பயன்படுத்தி மண்னை வளப்படுத்தி விவசாயப் பயிர்ச் செய்கை செய்ய ஆரம்பித்தான்.எனவே விவசாயத்திற்கு தேவையான நீரை மழை காலங்களில் போதியளவு பெற்று வந்த போதிலும் கோடைகளில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்க நேர்ந்தது.
 இதன் விளைவாக மழைகாலங்களில் நீரை சேமித்து கோடை காலங்களில் பயன்படுத்தலாம் என்னும் திட்டம் இதற்கான தீர்வாக கிடைத்தது.இதனாலேயே குளங்கள்  நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் உருவாகின  எனலாம். இதனால் விவசாயத்தில் தன்னிறைவு காண்பதற்கானதொரு உந்துசக்தியை காலநிலை மாற்றம் மனிதனுக்கு வழங்கியது.
ஆகவே மனிதன் காலநிலை மாற்றங்களுக்கேற்ப இசைவாக்கப்பட்டதுடன் படிப்படியாக  அதிகரித்த சனத்தொகை காரணமாக இயற்கை வளங்களை உச்சமாக பயன்படுத்த ஆரம்பித்தான். இதன் விளைவாக உலகையே ஒரு கையுக்குள் கொண்டு வர முயன்ற மனிதன் பலகண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் காலநிலை மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டு நிகழ்த்தினான். இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பப்புரட்சி, பசுமைப்புரட்சி என ஒவ்வொன்றாக  உருவாகின.
எனவே சீரான காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட போதிலும் இன்று  வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ள மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் சீரற்ற காலநிலை மாற்றங்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் பொருளாதார நெருக்கடி, பட்டினி மரணம்,மனவழுத்தங்கள் மற்றும் பலவகையான நோய்கள் என உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க  முடியாது திணறிவரும் மனிதகுலம் இயற்கையை வெல்ல துடித்ததன் விளைவை  இன்று கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து  வருகிறது.

இலவசக் கல்வியைக் கூட தொடராது ஏன் மாணவர்கள் இடை விலகுகிறார்கள்?


பாடசாலைக் கல்வியைத் தொடராமல் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் இடைவிலகுவது இலங்கையிலே  பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றதென கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பல காரணங்களால் பாடசாலைகளில் இலவசமாக வழங்கப்படும் கட்டாயமான அடிப்படைக் கல்வியைக் கூட கற்காது இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க பல்வேறுபட்ட அமைப்புகள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிகளை முன்னெடுக்கின்ற போதிலும், சில காரணங்களால் மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலையை விட்டு இடை விலகும் வீதம் குறைந்தபாடில்லை.



 இலங்கையில் பல தசாப்தங்களாக அரச பாடசாலைகளில் இலவசக் கல்வியே வழங்கப்பட்டு வருவதுடன், சீருடைகள் மற்றும் பாடநூல்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பரீட்சைக் கட்டணங்கள் போன்ற சில செலவுகளுக்கு மாத்திரம் ஒரு தொகை பணத்தை பெற்றோர்களிடமிருந்து பாடசாலைகள் அறவிட்டு வருகின்ற அதேவேளை, சில பாடசாலைகளில் இலைக்கஞ்சி போன்ற சத்துணவுத் திட்டம் காலையுணவுத் திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கல்விக்காக அரசு பெருமளவு பணத்தைச் செலவழித்து வழங்கும் இத்தகைய வசதிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்முக நாடுகளில் மட்டுமன்றி அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இல்லையென துணிந்து சொல்லலாம். இருந்த போதிலும், ஏனைய நாடுகளை போலல்லாது எமது நாட்டிலேயே தற்காலத்தில் பாடசாலைக் கல்வியை தொடராதோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று கவலைதரும் தகவலை வெளியிட்டுள்ளது.
பாடசாலையிலிருந்து இடை விலகும் மாணவர்கள் அதற்காகச் சொல்லும் காரணங்களில் முக்கியமானது வறுமையாகும். இதனை விட கல்வி கற்பதில் ஆர்வமின்மை, பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை, குடும்பப் பொறுப்பு, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல் இளவயது திருமணங்கள், மற்றும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களினால் உடல், உள ரீதியிலே பாதிக்கப்பட்டிருந்தல் என பல காரணங்களால் மாணவர்கள் கல்வியைத் தொடராது இடைவிலகுகின்றனர். இதனை விட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தங்களின் போது ஏற்பட்ட வடுக்கள் காரணமாகவும் கல்வியை தொடர்வதில் பல மாணவர்கள் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
முன்னைய காலங்களைப் போலல்லாது, இன்று கல்வி முறைமைகளில் அதிகளவு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காலங்களில் ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே மாணவர்கள் அறிவைப் பெற்றனர். ஆனால், இன்று இணையத்தளம் ஊடகங்கள் என பல்வேறு வழிகளிலும் கல்வியறிவையும் தொழில் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்கின்றமையால் சில வேளைகளில் ஆசிரியர்கள் கூட சில தகவல்களையும் அனுபவங்களையும் மாணவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை ஆசிரியர்களோ, ஏனைய பெரியோர்களோ அவமானமாகக் கருதக்கூடாது. நீ எனக்கு சொல்லித் தருவதா? என அதற்கு பதிலடி கொடுக்க ஆசிரியர்கள் ஆரம்பித்து விட்டால் அது மாணவர்கள் கல்வி மீது கொண்டுள்ள விருப்பத்தினைக் குறைத்து விடும். இறுதியில் பாடசாலைக் கல்வியை விட்டு இடை விலகி விடுவார்கள்.
அதேபோல் சில பெற்றோர்கள் தங்களுடைய பரம்பரைத் தொழிலையே எங்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும். எமது தொழிலுக்கு இந்த கல்வியறிவு போதும் என்று கூறி பாடசாலைக்குச் செல்லவிடாது தடுத்து நிறுத்தி விடுவார்கள். வட கிழக்குப் பகுதிகளிலே பல குடும்பங்களில் குடும்பப் பொறுப்பினை விதவைப் பெண்களே சுமக்க வேண்டியதொரு சூழ்நிலை யுத்தத்தின் பின் உருவாகியுள்ளது. இதனால் அப் பெண்கள் வேலைகளுக்குச் செல்லும் போது தங்களுடைய இளைய பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மூத்த பிள்ளையை பாடசாலைக்கு செல்லவிடக்கூடாது தடுத்து விடுகின்றனர்.
கிராமப் பகுதியில் வாழ்கின்ற சிறுவர்களே அதிகளவில் பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர். ஏனெனில் ஆரம்பக் கல்வியை அவர்களுடைய கிராமங்களிலே தொடர்கின்ற போதிலும் இடை நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை கற்க அவர்களுடைய கிராமங்களில் போதிய வசதிகள் காணப்படுவதில்லை. எனவே உயர் வகுப்பு கல்விக்காக தமது கிராமங்களுக்கு அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், அவர்களுக்கு நகர் பாடசாலைகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளோ அல்லது பொருளாதார வசதிகளோ இல்லாத காரணத்தினால் கல்வியைத் தொடராது விட்டு விடுகின்றனர். இத்தகைய தடைகளையும் தாண்டி சில மாணவர்கள் நகரப் பாடசாலைகளில் சேர்த்து விடுவார்கள். ஆனால், சில நகரப் பாடசாலைகளிலுள்ள அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியிலேயே கிராமத்திலிருந்து வந்து கல்வி தொடரும் மாணவர்களை அனுசரித்து வழிநடத்த தவறிவிடுகின்றனர். அதேபோல் அவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைகளால் வகுப்புக்கு தாமதமாக வந்தால் உடனே ஆசிரியரோ, அதிபரோ அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை  வழங்குகின்றனர்.
சில  பாடசாலைகளில் மாணவர்களுக்கு பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்பது, அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை சொல்லிக் காட்டுவது உதாரணமாக உன்னுடைய அப்பா ஒரு குடிகாரன், உன்னுடைய அண்ணா கள்ளன், உன்னுடைய சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என சொல்லிச் சொல்லி அம்மாணவர்களின் மனதினைக் காயப்படுத்துகின்றனர். அதேபோல் திறமைகளுக்கு சில பாட ஆசிரியர்கள் முன்னுரிமையளிப்பதில்லை. செல்வாக்கும், பணமும் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். இதனால் திறமையிருந்தாலும் வறிய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றமையால் அவர்கள் கல்வி மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.
இதேபோன்ற பல்வேறு விதமான உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்களினாலும் மாணவர்கள் இடை விலகுவதுடன் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இடை விலகும் மாணவர்களில் அதிகமானோர் 11 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டவர்களாகவே உள்ளனர். இப்பருவம் தான் சிறார்கள் சமூகத்தை அதிகளவு உணர்ந்து கொள்ளும் பருவமாகும்.
பாடசாலை நேரங்களில் சில பாட ஆசிரியர்கள் கற்பிக்க விரும்புவதில்லை. மாலை மற்றும் விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கு வருமாறு வற்புறுத்துவதுடன் தனிப்பட்ட கட்டணங்களையும் அறவிடுகின்றனர். இத்தகைய பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல வசதியற்ற மாணவர்கள் பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றனர். அதேபோல் சில பெற்றோர்களும் தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவும் சிந்திப்பதில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகும் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை கல்வி வளர்ச்சி வீதமும் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தமிழர்களது  அழிக்க முடியாத. சொத்தான கல்வியறிவினைப் பார்த்து சர்வதேச நாடுகளும் கூட ஆச்சரியப்பட்டன. தமிழ் சான்றோரிடம் வந்து கல்வி கற்பதற்காக வடக்கிற்கு படையெடுத்த ஒரு  காலம் இருந்தது. ஆனால், இன்றைய கல்வி நிலையினை கல்வி சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடைவிலகிய மாணவர்களை பாடசாலைகளில் மீண்டும் சேர்த்து. அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடை என்பவற்றையும் இலவசமாக வழங்கி. உதவி வருகின்றனர் பலர் சமூக ஆர்வலர்கள். ஆனால், மீண்டும் புதிய வகுப்புகளில் இணையும் இம்மாணவர்கள் பழைய நிலைக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, வயது குறைந்தவர்களுடன் படிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மீண்டும் கல்வி ஆர்வமில்லாது ஏனோதானோ என்று வற்புறுத்தலின் பேரில் பாடசாலை சென்று வருகின்றனர்.
எனவே அத்தகைய மாணவர்களை மனதளவிலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் நிலையை சக மாணவர்களுக்கு உரிய முறையிலே எடுத்துக் கூற வேண்டும். இது போன்ற சின்ன சின்ன மாற்றங்கள் மூலமே இடை விலகிய மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைந்து கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

சா.சுமித்திரை

சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூக இணையத்தளங்கள்

இன்றைய இளைஞர்கள் இருந்த இடத்திலேயே சமூக இணையத்தளங்கள் மூலம் முழு உலகினையும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சமூக வலைத்தளங்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள அனைத்து சமூகத் தரப்பினரையும் எந்தவித வயது வித்தியாசமும் இன்றி ஆட்கொண்டுள்ளதுடன் அவர்களின் பொழுது போக்கும் மையமாகவும் செயற்பட்டு வருகின்றன என்றால் மிகையாகாது.
இத்தொழில்நுட்ப யுகத்திலேயுள்ள இளம் சமூகத்தினரிடையே உள்ள யாராவது ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால், சமூக இணையத்தளங்களுக்குரிய கணக்கு இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு சமூக இணையத்தளங்கள் பிரபல்யம் பெற்றுள்ளன. பேஸ்புக் (ஞூச்ஞிஞுஞணிணிடு) டுவிட்டர் (கூதீடிttஞுணூ) மை ஸ்பேஸ் (ட்தூ ண்ணீச்ஞிஞு) லிங்ட்  இன் பிலிக்தர் (ஞூடூடிஞிடுஞுணூ)  என பல வகையான பெயர்களில் சமூக இணையத்தளங்கள் இணையங்களில் உலா வருகின்றன. அவற்றில் ஒவ்வொருவரும் தமது வசதி, தேவை போன்றவற்றுக்கேற்ப அவற்றில் இணைந்துகொண்டு சேவையினை தாராளமாகப் பெற்று வருகின்றனர்.
இச்சமூகத்தளங்களின் பாவனை தற்பொழுது இளைஞர்களின் மத்தியிலே அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்ற அதேவேளை அவை தொடர்பான பிரச்சினைகளும் சர்ச்சைகளும் அதேவேகத்திலே அதிகரித்து வருகின்றன என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக இச் சமூக இணையத்தளங்களில் உலா வரும் போது தனிநபர் ஒருவரது தகவல்களை பயன்படுத்துவது,  அத்தகவல்களை திருடி இன்னொருவருக்கு விற்றல், பயனாளர்களின் சுதந்திரத்தில் தலையிடுதல், தெரியாதவர்களுடன் அளவுக்கதிகமாக உரையாடுவது இவற்றை தவிர இத்தளங்களின் அதீத பாவனைகளின் போது ஏற்படுகின்ற அர்த்தமற்ற காதல், கல்வியில், தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் என வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் சம்பவங்கள் நாள்தோறும் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றன. மேலும் சமூகத் தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுபவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் உடல் ரீதியான பாதிப்புகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உருவாக வழிகோலுகின்றன. இவற்றை போல சமூக இணையத்தளப் பாவனையால் ஏற்படுகின்ற எத்தனையோ பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.
இதனால்தான் என்னவோ எமது மூத்த சமூகத்தினர் இச்சமூகத்தளப் பாவனை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர். இவர்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் இதற்கு சிறிதும் ஆதரவு வழங்காது இருக்கின்றனர். இதன் விளைவாக எங்கேயோ ஒரு இடத்தில் இவற்றின் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பை  ஏதோவொரு வழியில் அறிந்து கொண்டால் உடனே தங்களுடைய வீட்டிலேயே அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது போல எண்ணி வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது இளைய சமூகத்தினர் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாகவே ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் எந்தவொரு செயல்களுக்கும் நன்மை, தீமை என இருபக்கம் உண்டு. ஒரு பொருள் பாவனை என்றாலும் சரி அல்லது பொதுவான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் என்றாலும் சரி அனுகூலங்களுக்குச் சமனான பிரதி கூலங்கள் உள்ளன என்பதை அனைத்து பெற்றோரும் மூத்த சமூகத்தினரும் உணர வேண்டும். இவர்கள் தீமைகளை மட்டும் இனங்கண்டு விட்டு அவற்றினை தடை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றினால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதும் இல்லை.

இத்தகைய சமூகத்தளங்கள் மூலம் எத்தனையோ பேர் தமது வாழ்க்கைக்கு ஒளியேற்றி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித்தரும் அரிய பல உதவிகளை இச்சமூக வலையமைப்புகள் செய்து வருகின்றன. அண்மையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் 14.4 மில்லியன் பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 8.3 வீதத்தினர் தமது வாழ்வின் வெற்றிக்கு பேஸ்புக் என்னும் சமூகத்தளம் உதவி உள்ளது என மனதார வாழ்த்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
பேஸ்புக் சமூகத்தளத்தை அதன் நிறுவுனர் மார் சுகேபேரி (ட்ச்ணூடு த்தஞிடுஞுணூஞஞுணூதூ) தனது கல்லூரித் தோழர்களை ஒன்றிணைக்கும் விதமாகவே உருவாக்கினார். எனினும் பின்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பல கூறுகளை இணைத்து தனித்தனியாக ஒவ்வொரு தேவைகளையும் ஒருமுகப்படுத்தி மக்கள் பாவனைக்காக விட்டார். இன்று சமூகத் தளங்கள் மூலம் 500 மில்லியன் பாவனையாளர்கள் பயனடைகின்றனர். இவற்றின் மூலம் இளமைப் பருவங்களில் தொலைத்த பல பழைய நண்பர்களைத் தேடி புதிய நட்புப் பாலத்தை உருவாக்கலாம். பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பிக்கலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் இனிமையாக இணையலாம் என பல பரிமாணங்களைக் கொண்ட பயன்கள் அனைத்து மட்டத்தினருக்கும் கிடைத்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் முன்னேறி வருகின்றமையால் தற்போதைய கல்வி முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று பல தனியார்  கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி அரச கல்வி நிறுவனங்களும் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை இச்சமூகத்தளங்கள் மூலம் மேம்படுத்தி வருகின்றன. அதேபோல் பல விளம்பர நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் இவற்றினை பயன்படுத்துகின்றன. இச் சமூகத்தளங்கள் மூலம் இலவச வைத்திய, மனநல ஆலோசனைகள், அழகு, சமையல் குறிப்புகள், ஆன்மீக விடயங்கள், பொது விடயங்கள் என பலவற்றை உடனுக்கு உடன் தொகுத்தும் தனித்தும் தகவல்களைப் பெற உதவி செய்து வருகின்றன. இதனைப் போல எத்தனையோ அனுகூலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே இத்தகைய சமூகத் தளங்களை ஆரோக்கியமான முறையிலே பயன்படுத்தி சமூகப் பயனுள்ள திட்டங்களைச் செய்ய வேண்டும். இதனை விடுத்து வெறுமனே பயனுள்ள வெட்டிப் பேச்சுகளுக்கும் பொழுது போக்கு விடயங்களுக்கும் முன்னுரிமையளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனை விட சில சமூகத் தளங்களை வெளிப்படுத்தும் அவற்றின் உரிமை நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்று அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் நிலையும் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
எமக்கு எது நன்மையளிக்கக்கூடியது, எது தீமை தரக்கூடியது என இனங்கண்டு கொள்ள முடியாது ஆளுமை இல்லாத சிறுவர்களும் ஏன் வயது வந்தவர்களும் கூட இச்சமூகத்தளங்கள் தரும் அளவற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் வேறு பல வழிகளாலும் சுரண்டப்படுவதற்கும் தவறான எண்ணங்களால் வழி நடத்தப்படுவதற்கும் அச்சுறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு க்கள்காணப்படுகின்றன. இதனால் தான் சமூக இணையத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் எமது சமூகத்தினர் மத்தியிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி பேசப்படுகின்றன.
இத்தகைய சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளங்களின் பாவனை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளமையாலேயே அவற்றிற்குள்ள வரவேற்பு குறைவதில்லை. உதாரணமாக ஏனையவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு சுவாரசியமான விடயங்களை நண்பர்களுடன் பகிர்தல், பலரிடமும் எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளல், எமது ரசøனைகள், திறமைகள் போன்றவற்றை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் என பலவற்றுக்கு இவை தளமாக காணப்படுகின்றன. எனவே நாம் பயனுள்ள வழிகளில்  இவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இனங்கண்டு பாதுகாப்பாக பயன்படுத்தினால் எல்லோருக்கும் நன்மை கிட்டும்.

சா.சுமித்திரை

போதையால் பாதை மாறும் எதிர்காலச் சமுதாயம்



உலகளாவிய ரீதியிலே போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை என போதைப் பொருட்களின் ஆதிக்கம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. இதில் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்றமையானது நாட்டின் எதிர்கால சமூகத்தினரது நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய இளைஞர்கள் மத்தியிலே போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றதாக போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையும் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கைப் படி உலகிலே 6 இலட்சம் பேரும் இலங்கையிலே 45 ஆயிரம் பேரும் மிதமிஞ்சிய போதைப் பொருள் பாவனையாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போதைப் பொருள் பாவனை மூலம் சமூகம் சீரழிவது மட்டுமன்றி, குற்றச் செயல்கள், வன்முறைகள், விபத்துக்கள் போன்றவை அதிகரிக்கவும் இது வழி கோலுகின்றமை ஒரு யதார்த்த உண்மையாகும். போதைப் பொருள் பாவனையாளர்களால் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 6 இலட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போதைப் பொருட்களில் மது பாவனையே முதலிடத்தில் உள்ளது. வயது வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினரையும் மது விருந்து என்னும் களியாட்ட நிகழ்வு ஆட்கொண்டு வருகின்றது. திருமண வீடு என்றாலும் மரண வீடு என்றாலும் இத்தகைய மது விருந்து முக்கிய பங்கு வகிக்கின்றது.


அது மட்டுமன்றி புதிய வாகனம், புதிய உடுப்பு என ஒவ்வொரு அநாவசியமான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதும் காதல், பரீட்சை தோல்விகள் என சின்னச் சின்ன விடயங்களையும் காரணம் கூறி அதிகளவு பணம் செலவழித்து நண்பர்களிடையே தங்களுடைய மகிழ்ச்சியையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள மதுவென்னும் அரக்கனை நாடுகின்றனர்.
இதனை விட கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜீவானா என பல வகையான உயிர்க்கொல்லி போதைப் பொருட்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு இத்தகைய போதைப் பொருட்கள் உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் மூலமே கொண்டு வரப்படுகின்ற போதிலும் இன்று கறுப்புச் சந்தையில் இது பாரியளவில் நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறைமுகமாக போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையின் கேந்திர மையமாக இலங்கை செயற்பட்டு வருகின்றது. அதற்கு எடுத்துக்காட்டாகவே யாழ்ப்பாணப் பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதை அறியக் கிடைத்தது. இச் செய்தி யாழ்.மண்ணில் எந்தக் காலமும் அறிந்திராத விதத்தில் போதைப் பொருள் பாவனை மோகம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அதிர்ச்சியை எமக்குத் தந்துள்ளது.
அதேபோல், கடந்த வருடம் மெதபித்தமைன் என்னும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் இலங்கையிலே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசுக்கே பேரிடியாக இருந்துள்ளது.
ஆகவேதான், இலங்கை அரசு போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எனினும் திட்டமிட்ட அடிப்படையிலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல், பாவனை மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் இதற்கு உடந்தையாக சில உயர்மட்டக் குழுக்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமையால் இவற்றை இல்லாதொழிப்பது மிகவும் கடினமானதாகவும் சவால்மிக்கதாகவும் காணப்படுகின்றது.
போதைப் பொருட்களுக்கு சமூக, குடும்பப் பிரச்சினைகள், பரீட்சை, கல்வி போன்றவற்றில் தோல்வி, அன்பானவர்களின் பிரிவு, கடுமையான நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்கள், வேலையின்மை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவு அடிமையாகியுள்ளனர்.
கிராமப் பகுதிகளை விட அதிகளவு நகரங்களிலேயே போதைப் பொருள் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு கணிசமான அளவு பணத்தை செலவிடுகின்றனர். சிலர் தமது வருமானத்தின் முழுப் பணத்தையும் செலவிடுவதுடன் கடன்களை பெற்றும் செலவு செய்கின்றனர்.
இத்தகையோர் போதைப் பொருளை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்ற போது அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இப் போதைப் பொருள் பழக்கம் 88.2 வீதம் நண்பர்களாலும் 10 வீதம் உறவினர்களாலும் மிகுதி தனிப்பட்ட காரணங்களாலும் சமூகத்தினரிடையே பரவுகின்றது.  அதேவேளை இளம் பராய வயதினரான 15 வயது தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே அதிகளவு போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றது.
முன்னைய காலங்களில் எமது சமூகத்தில் ஒரு பிள்ளையை  அப்பிள்ளையின் தந்தையே கையை பிடித்து அழைத்து செல்வார். ஆனால், இன்று மது போதையில் தள்ளாடும் தந்தையை மகன் மதுபான கடைகளிலிருந்து வீட்டிற்கு கூட்டிச் செல்லும் காட்சிகள் நாளாந்தம் அரங்கேறி வருகின்றன.
ஏன் இன்று இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது? இதனால், போதைப் பொருள் பாவனையாளர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர் என்ற உண்மையை அனைத்து போதைப் பொருள் பாவனையாளர்களும் உணர வேண்டும்.
இத்தகைய போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களுக்கும் அனைத்து சமூக மட்டத்தினருக்கும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.  அதேபோல் போதைப்  பொருள் பாவனையாளர்களையும் போதைப் பழக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு சமூகத்துடன் இணைக்க சமூக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்கதையாகும் நிலையே ஏற்படும்.

சா.சுமித்திரை