புதன், 4 ஜூலை, 2012

வணிக மயமாகிவிட்ட காதலர் தினம்


பொதுவாக ஒரு விடயம் தொடர்பாக சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே விசேட தினங்கள் பிரகடனப்படுத்தி அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தினங்கள் விசேடமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பெப்ரவரியென்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பெப்ரவரி 14 ஆம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினமாகும். இது இன்றோ, நேற்றோ கொண்டாடப்படுவதல். பல வருடங்களுக்கு முன்பே இத்தினத்திற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமையே இந்நாளின் சிறப்பாகும். 1840 ஆம் ஆண்டு அமெரிக்க மாதாந்த இதழின் பிரபல எழுத்தாளரான லஹ்எர்க் ஸ்மித் செயிண்ட் வலன்டைன் தினம் ஒரு தேசிய தினமாக ஆகிவிட்டது என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூரலாம்.


உண்மையிலே காதலர் தின வரலாற்றினை நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தினம் இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடப்படக்கூடிய ஒரு தினமா? என எண்ணத் தோன்றும். ஏனெனில் காதலர் தினம் பலரது தூய காதலுக்காக தன்னுரியிரையே கொடுத்த ஒரு ரோம் பாதிரியாரின் மரணத்திற்கான ஆரம்பமாகும்.  ஒரு தியாகம் நிறைந்த நாளை  அமைதியாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்ததாகும். அதாவது கி.பி. 250 ஆம் ஆண்டுகளில் ரோமப் பேரரசாகவிருந்த கிளாடியஸ் தனது அரசியல் வாழ்க்கையிலே தொட்ச்சியாக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தான். இதேவேளை இவனது ஆட்சியில் மக்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை. அவர்கள் நாட்டிற்காக சேவையாற்றாது குடும்பம், காதல், மகிழ்ச்சியென இருக்கின்றமையால் தான் படைகளில் இணைய மறுக்கிறார்கள் என நினைத்து கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தான்.
இதனையெதிர்த்து வந்த பாதிரியரான வலன்டைன் பல இரகசியத் திருமணங்களை செய்து வைத்தார். இதனால் பேரரசு கிளாடியஸ் கோபம் கொண்டான். உடனே பாதிரியாரைச் சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்தான். கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்றே பாதிரியார் வலன்டைன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கௌரவப்படுத்தவே புனித தியாக நாளாக இக்காதலர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் பெப்ரவரியென்றால் காதலர்களும் சரி இளவயதினரும் சரி தங்களுடைய காதல் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏதோவொரு வகையிலே வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். காதலர்களது அன்பினை புனிதப்படுத்தி உள்ளங்களில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளிக்கொண்டு வர உகந்த நாள் காதலர் தினமென ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். எமது கலாசார விழுமியங்களை சீர்குலைக்கின்றன என காதலர் தினத்தை இன்னொரு சாரார் எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் ஏனைய தினங்கள் அமைதியான வாழ்த்துக்களுடன் முடிந்து போகின்றன. ஆனால், காதலர் தினம் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கின்றதோ என்ற அச்சமும் ஆதங்கமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இன்று காதலர் தினம் வணிகமயமாக்கப்பட்டு வருகின்றமையாலே தானோ என்னவோ இத்தகைய எதிர்ப்புகள் உருவாகின்றன என சிந்திக்கத் தோன்றுகின்றது.
காதலர் தினத்தை ஆடம்பரமாக்க இலத்திரனியல் ஊடகங்களும் துணை போகின்றன. அதாவது வர்த்தக நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களை இவ் ஊடகங்கள் மூலம் அதிகளவில் விளம்பரப்படுத்துகின்றன. அவர்களது காட்சியறைகளிலே நவீன ரகத்திலான இறக்குமதி செய்யப்பட்ட பல அன்பளிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றின் வாடிக்கையாளர்களில்  அதிர்ஷ்டசாலியான காதல் ஜோடி தெரிவு செய்யப்பட்டு ஒரு கணினி வழங்கப்படுவதுடன் 3 நாள் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது என பல கவர்ச்சியான விளம்பரங்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றன.
இதனால், காதலர் தினமென்றால் காதலர்கள் அன்பளிப்புப் பொருட்களை வாங்கி பரிமாறிக்கொள்ளல், சினிமா, நண்பர்களுக்கு விருந்து என பல வகைகளில் பணத்தை அள்ளிவீசி செலவளிப்பது என்றே ஆகிவிடுகிறது. வர்த்தக, நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும், வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் விதம்விதமான வாழ்த்து மடல்கள், மலர்ச்செண்டுகள், பரிசுப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், ஆடை அணிகலன்கள் என எல்லாவற்றிலும் காதலர் தின ஸ்பெஷல் என்ற முத்திரை பதித்து குவித்து விடப்பட்டிருக்கம்.
இத்தகைய பொருட்களை வாங்க நினைக்காதவர்களைக் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்த்து அவற்றினை அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். இதனை விட நாம் அன்பு செலுத்துகின்ற யாருக்குமே அவ் அன்பளிப்புகளை வழங்கி எமது உண்மையான அன்பினை வெளிக்காட்டலாம் எனக் கூறி இலவச ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உதாரணமாக ஒரு தந்தைக்கோ அல்லது கற்பிக்கின்ற ஆசிரியருக்கோ மகன் அல்லது மாணவன் என்ற ரீதியிலே ஒரு தூய அன்பு உள்ளது. இதனைக் கூட வியாபாரமாக்கி அவ்விருவர்களுக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டக் கூடியதாகவுள்ள தகுந்த பரிசுகளை காட்டி விற்றுவிடுகின்றனர். இதனால், காதலர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருமே காதலர் தின மலிவு விற்பனையில் அன்பை காட்ட தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி பரிசளிக்க விரும்புகின்றனர்.
இவர்களது வியாபார தந்திரங்களை உணராத நாம் வாழ்த்து அட்டைகள், மலர்ச் செண்டுகள், இனிப்புப் பண்டங்கள் என பல ரூபாக்கள் செலவளித்து வாங்குகின்ற போது அவர்கள் அமைதியாகவே இருந்து கொண்டு பல ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கின்றனர்.
அதேபோல அன்றைய தினம் வீதிகளில் காணப்படுகின்ற சாப்பாட்டுக் கடைகள் முதற்கொண்டு பிரபல்யம் உல்லாச விடுதிகள் வரை காதல் ஸ்பெஷல் உணவுகள் கிடைக்கின்றன. ஆனால், அங்கு வழமையாகவே விற்பனையாகின்ற உணவு வகைப் பட்டியலே காதல் ஸ்பெஷல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கும்.
வியாபார நிலையங்களில் விதம்விதமான வடிவங்களில் சொக்லேட் பெட்டிகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் காதலர் தின வாழ்த்துக்கள், ஆங்கில முதலெழுத்துக்கள் குறிக்கப்பட்ட கவர்களினால் சுற்றி அலங்கரித்து அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். இவற்றினைப் பார்க்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியோர்களுக்கும் கூட வாங்க வேண்டுமென்ற ஆசை வரும். உடனே அவற்றினை அதிக விலை கொடுத்தும் வாங்கி விடுவார்கள். ஆனால், அவ்வலங்கரிக்கப்பட்ட பைகளினை பிரித்துப் பார்க்கும் போது உண்மையான பெறுமதி மிகச் சாதாரணமானதாகவே இருக்கும். அப்பொழுது தான் நாம் கடைக்கார்களிடம் ஏமாந்து விட்டோம் என்ற உண்மை தெரிய வரும்.
மேலைத்தேய நாடுகளைப் போல எமது நாட்டில் காதலர் தினத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படுவதில்லை. எனினும் இத்தகைய வியாபார நடவடிக்கைகளே இளம்வயதினர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முனைகின்றன. விளம்பர மேம்பாடு, மையப்படுத்தப்பட்ட சந்தை முயற்சிகள் மூலம் சிங்கப்பூரள், சீனா, தென்கொரியா, இந்தியா என சில ஆசிய நாட்டவர்களே காதலர் தினத்திற்கு என அதிகளவான பணத்தை செலவிடுகின்றனர்.
உலகிலே கிறிஸ்மஸுக்கு அடுத்தபடியாக வாழ்த்து மடல்களை அனுப்புவதிலும் பரிசுப் பொருட்களை வழங்குவதிலும் விருந்து உபசாரங்களிலும் இரண்டாவது இடத்திலே காதலர் தினம் உள்ளதாக புள்ளிவிபரமொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல் பெண்களை விட ஆண்களே சராசரியாக இருமடங்கு செலவிடுகின்றனர் எனவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் ஒரு காதலைத் தொடர வேண்டுமாயின் நிறையப் பணம் செலவிட வேண்டும். அப்பொழுது தான் அன்பு நீடிக்கும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் உண்டு. உண்மையான காதலை பொருள் கொடுத்தோ, பணம் கொடுத்தோ வாங்க முடியுமா? வருடத்தின் 365 நாட்களும் கிடைக்காத தூய காதல் இந்நாளில் மட்டும் கிடைத்து விடுமா? இதனை விட ஒரு காதலன், அல்லது காதலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவோ, தொலைந்த காதலை தேடவோ, இல்லையென்றால் எனக்கு யாரும் இல்லையே என அங்கலாய்க்கவோ தான் இந்நாளைக் கொண்டாட வணிக நிறுவனங்கள் பலவந்தப்படுத்துகின்றன. இக்காதலர் தினம் அன்பின்  அடையாளத்தை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதே ஒழிய கேலிக்கூத்துகளுக்கும் ஆடம்பர செலவுகளுக்கும் அல்ல. எனவே இந்நாளில் வர்த்தக சமூகத்தினரின் தந்திரோபாயங்களுக்கு காதலை விற்று விலை போகாது இனிமையான என்றும் இளமையான உண்மைக் காதல் உங்களுடனே இருக்கும் என்பதில்நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக.

சா.சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக