புதன், 4 ஜூலை, 2012

மனித உயிர்களுடன் விளையாடும் போலி வைத்தியர்கள்




 இலங்கையில் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையாற்றுவதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டில் வைத்தியத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே  ஏனைய துறைகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். அந்த வகையில் இலங்கையானது பல்வேறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயற்படுவதால் அந்நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக வெளிவரும் சில சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இனிமேலும் இந் நிலை தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் 50 ஆயிரம்  போலி வைத்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சட்ட விரோத மருந்தகங்கள், மருந்துவ நிலையங்கள் சுற்றி வளைப்பு, போலி மருந்து விற்பனை நிலையம் முற்றுகை , கருக்கலைப்பு  நிலையங்களின் அதிகரிப்பு என மருத்துவத் துறைக்கு சவால்களாக  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து  வருகின்றோம். இதனால் வைத்திய சாலைகள், சிகிச்சை நிலையங்கள், வைத்தியர்களிடம் செல்வதற்கு மக்கள் பல்வேறு வகையிலும் ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்டியில் கடந்த 20 வருடங்களாக சாதாரண பரீட்சையில் கூட சித்தியடையாத ஒருவர் போலியான வைத்திய சான்றிதழ்களை வைத்துக் கொண்டு சிகிச்சை நிலையமொன்றினை நடத்தி வந்துள்ளார் என்பது கடந்த வருடமே தெரிய வந்தது. இதனையடுத்து அப்போலி வைத்தியரையும், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் யாழ். நகரில் கடந்த 5 வருடங்களாக இயங்கி வந்த பல் மருத்துவ சிகிச்சை நிலையத்தினை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போலி வைத்தியரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைப் போல மலாய் பெண்ணொருவர் தனக்ப்கு புற்றுநோய் உள்ளதென பரிசோதனை முடிவில் அறிந்து கொண்டு மேலதிக சிகிச்சை பெற முயன்ற போது இயற்கை வைத்தியம் மூலம் இலகுவாக குணப்படுத்த முடியுமென ஒரு போலி வைத்தியர் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த  பெண், 4000 ரிங்கட்டினை கொடுத்து சில சிகிச்சைகளைப் பெற்றுள்ளார். எனினும் சில காலத்தின் பின்னரே அவ் வைத்தியர் ஒரு போலியானவர்  என்றும் தான் ஏமார்ந்து விட்டேன் என்பதையும் தெரிந்து கொண்டார். தற்பொழுது மலாய் பெண்ணுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணத்தை நெருங்கிய நிலையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இப் பெண்ணைப் போல பலர் இலகுவாக  குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடிய நோய்களை தகுதியற்ற போலி வைத்தியர்களிடம்  காட்டி சிகிச்சை பயனளிக்கவில்லையென நோய் தாக்கம் அதிகரித்த பின் அரச வைத்தியசாலைகளை நாடி நிற்கின்றனர். நிலைமை கவலைக்கிடமாக மாறிய பின் வேறு பல நோய்களையும் இலகுவாக வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
இதனைப் போல  முறையாக மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்யாது தாங்கள் மருத்துவர்கள் எனக் கூறிக் கொண்டு சமூகத்திலே பலர் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே தான் போலிப் பட்டங்களை பணம் மூலமாகவும் சமூக அந்தஸ்து மூலமாகவும் பெற்றுக் கொண்டு வைத்தியர்கள் போல் நடித்து பொது மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்குமாறு சுகாதார  அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 இதற்காக போலி வைத்தியர்கள் தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் நகல் சட்ட மூலத்தை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதனடிப்படையில் போலி வைத்தியர் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படின் 5 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை  மிகவும் கடுமையாக அமுலாக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலத்திலே வைத்தியத் துறையென்பது சமூகச் சேவையாக பார்க்கப்படுவது குறைவாக உள்ளது. இதையொரு பணங் கொழிக்கும் தொழிலாகவே சில வைத்தியர்கள் கருதுகின்றனர். பணம் கட்ட வசதி இருந்தால் வைத்தியசாலையினுள் நோயாளியை  அனுமதியுங்கள். இல்லையெனில் வேறு வைத்தியசாலை பாருங்கள் என்ற உரையாடல் அதிகளவில் தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகும்.
 போலி வைத்தியர்கள் 5 வருட சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வந்த பின்னரும் கூட புதிய இடத்திற்கு சென்று மீண்டும்  அதே குற்றத்தைச் செய்ய முற்படலாம்.  எனினும்  தற்பொழுது போலி வைத்தியார்கள் உருவாகுவதை ஒரளவேனும் தடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார அமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்க தொன்றாகும்.
அதிகளவில் போலி வைத்தியர்கள் கிராமப் பகுதிகளிலேயே  சட்டவிரோதமாக சேவையாற்றி வருகின்றனர். இதற்குக்  காரணம்  கிராம மக்களிடையே மருத்துவத்துறை சார்ந்த தெளிவான அறிவின்மையே . இவர்கள் அநேகமாக ஆயுர் வேத வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவற்றையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இவ் வைத்திய முறைகள் வழக்கொழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தை போலி வைத்தியர்கள் பயன்படுத்தி பணம் உழைக்கின்றனர்.
 அதேபோல் சட்ட விரோத  கருக்கலைப்பு நிலையங்கள், நகரங்களில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. போலி வைத்தியர்களை அதிகளவாக கொண்ட நாடாக மட்டுமன்றி, கருக்கலைப்பு அதிகளவு நடைபெறும்  நாடாகவும் இலங்கை மாறி வருவதாக  பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு 45100  வரையிலான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வறிக்கையொன்று  சுட்டிக்காட்டுகின்றது. இந்த கருக்கலைப்பு நிலையங்களில் அதிகளவில் போலி வைத்தியர்களே பணியாற்றுகின்றனர். கருக்கலைப்பு எண்ணிக்கையை விட போலி வைத்தியர்கள் அதிகமாக உள்ளமை அதிர்ச்சி தரும் விடயமாக உள்ளது.
இந்தப் போலி வைத்தியர்களிடம் போதிய கல்வியறிவோ, அனுபவமோ இல்லாமையால் கருக்கலைப்பு நடவடிக்கைகளின் போது அதிகளவு குருதிப்  பெருக்கு ,கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், முறையற்ற ஆலோசனைகள் போன்றவற்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
எந்த வித பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களும் மருத்துவ துறை தொடர்பான அறிவு இல்லாதவர்களும் வைத்தியர்கள் என அப்பாவி மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.  இதனால் மனித இனம் பாரிய போராட்டத்தை எதிர்நோக்குகிறது. எனவே தான் அரசாங்கம்  வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய போலி வைத்தியர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு  மாகாணத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை கட்டுப்படுத்த அரசு மற்றும் அரசு சாராத மருத்துவ துறை நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருந்தனர் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டில் இருந்த தகைமை வாய்ந்த  ஆங்கில வைத்தியருக்கும் போலி வைத்தியருக்கும் இடையிலான விகிதம்  ஒன்றுக்கு நான்கு எனவும் தெரிவித்திருந்தது.
 ஆனால் தற்போதைய சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி போலி வைத்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாகும். எனவே, கடந்த 8 வருடங்களில் மேலும் 10 ஆயிரம் போலி வைத்தியர்கள் உருவாகியுள்ளனர்.  மருத்துவ துறையை போலிகளிடமிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சு முன்னெடுத்து வந்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் போதுமானளவு உறுதியுடையவையாக இல்லை என்பதையே இந்த அதிகரிப்பு காட்டுகிறது.
எந்தத் துறையிலும் கலப்படம் இருக்கலாம். அவற்றினால் பாரியளவு பாதிப்புகள் சமூகத்திற்கு ஏற்படாது எனலாம். ஆனால் மருத்துவத் துறையில் போலி வைத்தியர்கள், போலி மருந்துகள் என கலப்படம் காணப்பட்டால் அது மனித உயிருக்கே பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். இத் துறை மனித உயிருடன் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து உறுதியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது எடுக்க முனைய வேண்டும். இல்லையெனில் மேலும் 5 வருடங்களின் பின்பு நாட்டில் இருக்கக் கூடிய போலி வைத்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும் சனத்தொகையின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக