புதன், 4 ஜூலை, 2012

போதையால் பாதை மாறும் எதிர்காலச் சமுதாயம்



உலகளாவிய ரீதியிலே போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை என போதைப் பொருட்களின் ஆதிக்கம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. இதில் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னணி வகித்து வருகின்றமையானது நாட்டின் எதிர்கால சமூகத்தினரது நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய இளைஞர்கள் மத்தியிலே போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றதாக போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையும் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கைப் படி உலகிலே 6 இலட்சம் பேரும் இலங்கையிலே 45 ஆயிரம் பேரும் மிதமிஞ்சிய போதைப் பொருள் பாவனையாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போதைப் பொருள் பாவனை மூலம் சமூகம் சீரழிவது மட்டுமன்றி, குற்றச் செயல்கள், வன்முறைகள், விபத்துக்கள் போன்றவை அதிகரிக்கவும் இது வழி கோலுகின்றமை ஒரு யதார்த்த உண்மையாகும். போதைப் பொருள் பாவனையாளர்களால் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 6 இலட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போதைப் பொருட்களில் மது பாவனையே முதலிடத்தில் உள்ளது. வயது வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினரையும் மது விருந்து என்னும் களியாட்ட நிகழ்வு ஆட்கொண்டு வருகின்றது. திருமண வீடு என்றாலும் மரண வீடு என்றாலும் இத்தகைய மது விருந்து முக்கிய பங்கு வகிக்கின்றது.


அது மட்டுமன்றி புதிய வாகனம், புதிய உடுப்பு என ஒவ்வொரு அநாவசியமான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதும் காதல், பரீட்சை தோல்விகள் என சின்னச் சின்ன விடயங்களையும் காரணம் கூறி அதிகளவு பணம் செலவழித்து நண்பர்களிடையே தங்களுடைய மகிழ்ச்சியையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள மதுவென்னும் அரக்கனை நாடுகின்றனர்.
இதனை விட கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜீவானா என பல வகையான உயிர்க்கொல்லி போதைப் பொருட்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு இத்தகைய போதைப் பொருட்கள் உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் மூலமே கொண்டு வரப்படுகின்ற போதிலும் இன்று கறுப்புச் சந்தையில் இது பாரியளவில் நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறைமுகமாக போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையின் கேந்திர மையமாக இலங்கை செயற்பட்டு வருகின்றது. அதற்கு எடுத்துக்காட்டாகவே யாழ்ப்பாணப் பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதை அறியக் கிடைத்தது. இச் செய்தி யாழ்.மண்ணில் எந்தக் காலமும் அறிந்திராத விதத்தில் போதைப் பொருள் பாவனை மோகம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அதிர்ச்சியை எமக்குத் தந்துள்ளது.
அதேபோல், கடந்த வருடம் மெதபித்தமைன் என்னும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் இலங்கையிலே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசுக்கே பேரிடியாக இருந்துள்ளது.
ஆகவேதான், இலங்கை அரசு போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எனினும் திட்டமிட்ட அடிப்படையிலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல், பாவனை மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் இதற்கு உடந்தையாக சில உயர்மட்டக் குழுக்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமையால் இவற்றை இல்லாதொழிப்பது மிகவும் கடினமானதாகவும் சவால்மிக்கதாகவும் காணப்படுகின்றது.
போதைப் பொருட்களுக்கு சமூக, குடும்பப் பிரச்சினைகள், பரீட்சை, கல்வி போன்றவற்றில் தோல்வி, அன்பானவர்களின் பிரிவு, கடுமையான நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்கள், வேலையின்மை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவு அடிமையாகியுள்ளனர்.
கிராமப் பகுதிகளை விட அதிகளவு நகரங்களிலேயே போதைப் பொருள் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு கணிசமான அளவு பணத்தை செலவிடுகின்றனர். சிலர் தமது வருமானத்தின் முழுப் பணத்தையும் செலவிடுவதுடன் கடன்களை பெற்றும் செலவு செய்கின்றனர்.
இத்தகையோர் போதைப் பொருளை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்ற போது அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது.
இப் போதைப் பொருள் பழக்கம் 88.2 வீதம் நண்பர்களாலும் 10 வீதம் உறவினர்களாலும் மிகுதி தனிப்பட்ட காரணங்களாலும் சமூகத்தினரிடையே பரவுகின்றது.  அதேவேளை இளம் பராய வயதினரான 15 வயது தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே அதிகளவு போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றது.
முன்னைய காலங்களில் எமது சமூகத்தில் ஒரு பிள்ளையை  அப்பிள்ளையின் தந்தையே கையை பிடித்து அழைத்து செல்வார். ஆனால், இன்று மது போதையில் தள்ளாடும் தந்தையை மகன் மதுபான கடைகளிலிருந்து வீட்டிற்கு கூட்டிச் செல்லும் காட்சிகள் நாளாந்தம் அரங்கேறி வருகின்றன.
ஏன் இன்று இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது? இதனால், போதைப் பொருள் பாவனையாளர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர் என்ற உண்மையை அனைத்து போதைப் பொருள் பாவனையாளர்களும் உணர வேண்டும்.
இத்தகைய போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களுக்கும் அனைத்து சமூக மட்டத்தினருக்கும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.  அதேபோல் போதைப்  பொருள் பாவனையாளர்களையும் போதைப் பழக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு சமூகத்துடன் இணைக்க சமூக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்கதையாகும் நிலையே ஏற்படும்.

சா.சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக