சனி, 30 ஜூன், 2012

இயற்கை அனர்த்தங்கள் அதிகரிப்பதற்கு பெரிய பங்காளி மனிதனே






காலநிலை மாற்றங்கள், கண்டங்களின் இடப்பெயர்வு, எரி கற்கள் புவியுடன் மோதுகை , எரிமலை வெடிப்புகள், கடல்கோள் என பல்வேறுபட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிவடைந்து வருவதுடன், இயற்கைக்குரிய இயல்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன. இவை இயற்கையாகவே உருவாகின்றதொன்றாகவே கருதப்படுகின்ற போதிலும் அதிகளவு தடவை இவ் அனர்த்தங்கள் உருவாகுவதற்கு மனிதனின் பல்வேறு பட்ட நடவடிக்கைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் இயற்கையுடன் ஒன்றி அவற்றுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தான். ஆனால் புவியிலே மனிதயினம் ஓர் ஆட்சியினமாக தோன்றிய பின் தன்னை வளப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டான்.

தொழில் நுட்ப புரட்சிகள் ,கைத்தொழில், நகர மயமாக்கங்கள், சனத் தொகை பெருக்கம், அணுப் பரிசோதனைகள்,காடழிப்பு என தன்னுடைய பல்வேறு தேவைகள், விருப்பங்களை நிறைவேற்ற இயற்கையை பயன்படுத்தினான். மனிதனின் இயற்கை வள அதீத பாவனை காரணமாக அவை படிப்படியாக அழிவடைந்து வருவதுடன், மனித இனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இனி வரும் காலங்களிலாவது இயற்கை வளங்களை முறையாகவும் அவற்றின் சமனிலை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ள அதேவேளை, அழிவடைந்து வரும் இயற்கை வளங்களை மீண்டும் விஞ்ஞான தொழில் நுட்ப முறைகள் மூலம் விஞ்ஞானிகள் மீட்க நடவடிக்கை  எடுத்து வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் சில வளங்கள் மாற்ற முடியாமலும் திரும்ப பெற முடியாத வகையிலும் பரிமாண மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இயற்கைக் குரிய இயல்புகளுடன் மீளப் பெறுவது சந்தேகம் தான் என்றாலும் ஓரளவு இயற்கை வளத்தினை பாதுகாக்க முடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

 அண்மைக் காலமாக பல வகையான மண் , தாவர,  விலங்கு இனங்கள், சுற்றுச் சூழல், பல் வகைகள் பற்றி விஞ்ஞான ஆய்வுகள் அதிகளவு இடம்பெற்று வருகின்றமையால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. அமிலத் தன்மையான மண்ணை நல்ல மண்ணாக மாற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றி கண்டுள்ளன. பல கழிவுப்பொருட்கள் பயனுள்ள பொருட்களாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
 தொழில் நுட்ப முறை மூலம் சூறாவளி , பருவக் கால மாற்றம், கடல்கோள் போன்ற அனர்த்தங்களின் ஆபத்துகளை முன் கூட்டியே எதிர்வு கூறுகின்றோம்.
அதேபோல் அனர்த்தங்கள் ஏற்படாது தடுக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சூறாவளி வேகத்திலுள்ள சக்தியில் எமக்குத் தேவையான பல வருடக்கணக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் சூறாவளியின் மையப் பகுதிக்கு சென்று அதன் மையத்தில் சில உப்புகளை போட்டு வேகத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்க வான் படையினர் ஈடுபட்டுள்ளார். அத்துடன் நிலநடுக்கத்தால் வரும் சேதங்களை குறைக்கும் தொழில் நுட்ப முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் , தாய்வான், இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் இலங்கையிலும் அனர்த்தங்களால் பாதிக்கப்படாத வகையிலே தொழில்  நுட்பங்களை கொண்டு கட்டிடங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரிய வெள்ளப் பெருக்கை கட்டுப்படுதுகின்றன. மண் சரிவினையும் தொழில்நுட்ப முறைகள் மூலம் தடுக்கின்றனர். சாதாரணமாக மேல் இருக்கும் மண் படையும் கீழ் இருக்கும் படையும் ஒன்றுக் கொன்று விசையினால் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்தவிசை விலகும் போதே மண் சரிவு ஏற்படுகின்றது. இவ் விசையினை அதிகரிக்க புவித்துணிகள் (எஞுணி கூஞுதுtடிடூஞு)  என்னும் உபகரணத்தை புதைக்கின்றனர். இதனால் மண் அடுக்குகளுக்கிடையே விசை விலகாது இருக்கும்.  இதற்கான செலவு தற்பொழுது மிக அதிகமாக உள்ள போதிலும் எதிர்காலங்களில் குறைந்த செலவில் சாத்தியமாகலாம்.
ஐரோப்பாவில் பல இடங்களில் நிலக்கரி, உலோக கனிய அகழ்வுகளால் பாழடைந்து அழிந்து போன பகுதிகளை மீளச் சீரமைத்துள்ளனர். அத்துடன் பாலைவனப் பகுதிகளையும் இயற்கை மரங்கள் கொண்ட பிரதேசமாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தண்ணீர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்ய பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் வெளியேற்றும் கழிவு நீர் பல்வேறு தொழில் நுட்ப முறைகளின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நீர் பற்றாக்குறை மட்டுமன்றி நதிகள், குளங்கள், ஏரிகளிலுள்ள நீரும் கழிவு நீர் சேராது தூய்மையாக இருக்கும்.
 மாசடைந்து அழிவடைந்து வருகின்ற இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை விஞ்ஞான முறைகள் மூலம் புதுப்பித்து மீள உருவாக்குகின்ற விஞ்ஞானிகள் மனித நடவடிக்கைகளால் அழிவடைந்த தாவர ,விலங்குகளையும் மீளவும் உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை. அழிவடைந்து வரும் தாவர ,விலங்குகளின் கலம் , இழையங்கள் என்பவற்றை கொண்டு இழைய வளர்ப்பு, குளோனிங், சோதனை குழாய் என பல்வேறு விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை கொண்டு  உருவாக்கி  சாதனை படைக்கின்றனர். முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்ட மிருக, தாவர இனங்கள் மீண்டும் உருவாக்குவதென்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிவடைந்த மமூத் என்னும் பெரிய உரோமங்களால் போர்க்கப்பட்ட யானை இனத்தினை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளமையானது இதற்கு சான்று பகர்கின்றது.
 எனவே, நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப உயிரியல் முறைமைகள் மூலம் இயற்கையின் பல வளங்களைத் திருப்பி உண்டாக்க முடியும். புதியதாக படைக்கப்படும் வளங்கள் புதிய பரிணாம வழிகளில் இயற்கையோடு இணைந்து எம்முடன் இயற்கை வளங்களாக பயணிக்கும் என்பது திண்ணம்.

சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக