சனி, 30 ஜூன், 2012

புதையல் தோண்டும் மர்மம்

 -சா .சுமித்திரை -

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களில் புதையல் தோண்டுதல் தொடர்பான சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு ஊடகங்களின் செய்திகளை அவதானித்தாலும் புதையல் தோண்டுதல் தொடர்பான செய்திகள் ஏதோவொரு வகையிலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.


அண்மையில் அம்பன்பொல மற்றும் மதவாச்சியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை  சம்பவ இடங்களில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் கடந்த வாரம் ஆனமடுவவில் உப்பலாவத்தைப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தவர்களை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த இடத்தில் நரபலி கொடுப்பதற்காக சில விலங்குகளை அடைத்து வைத்திருந்ததுடன் மந்திரப் புத்தகமொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


அதேபோல புதையல் தோண்டுவதற்கு முன் மனித நரபலிகொடுக்கவென வாழைச்சேனையில் வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், கடத்தல்காரர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் அச்சிறுவனைக் கடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு கல்குடாவிலும் அக் குழுவினர் சிறுமியொருவரை கடத்த முயற்சித்த போதும் அச்சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.


இச்சம்பவங்களையடுத்து பொதுமக்கள் மத்தியிலே மிகுந்த பதற்றமும் அச்சமும் காணப்படுவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ அனுப்புவதற்குக் கூட தயக்கம் காட்டி வருகின்றனர். அதேவேளை, தாங்களும் வீடுகளை வீட்டு வெளியேறுவதற்கு பயப்படுகின்றனர்.


புதையல் தோண்டும் கொள்ளையர்களில் சிலர் மந்திரவாதிகளின் ஆலோசனைகளைப் பெற்று இந்த இளம் பாலகர்களை கடத்திச் சென்று படுகொலை செய்து அவர்களின் இரத்தத்தையும் சில உடற்பாகங்களையும் புதையல் தோண்டும் முயற்சிக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பாதகர்களுக்கு புதையலோ, பொக்கிஷமோ கிடைக்கின்றதோ இல்லையோ ஆனால், இக்குழந்தைகளின் உயிர்களின் பெறுமதியையோ அச்சிறுவர்களினது பெற்றோர்களின் வாழ்நாள் உயிர்த்துடிப்புகளையோ இவர்கள் அறிந்து கொள்ளப் போவதில்லை. மிகக் கொடுமையான செயலாகும்.


காணாமல் போகும் எத்தனையோ குழந்தைகளின் உயிர்கள் இந்தப் புதையல் கொள்ளையர்களிடம் பறிபோகும் பல சம்பவங்கள் திரைக்கு மறைவிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


நாட்டிலே அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருட்களின் விலையேற்றம் என்பவற்றால் திருட்டு, கொலை, மோதல், வன்முறைகள் என பல வகையான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எனவேதான் புதையல் தோண்டுதல் என்பது இன்று அநேகமானோர்களின் சுயதொழிலாக உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவர் எந்த நோக்கத்தில் தெரிவித்திருந்தாரோ தெரியவில்லை. எனினும் அவரது பேச்சில் ஒரு உண்மையுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கதிர்காமம் லுணுகம்வெகரப் பகுதியில் பெறுமதியான மாணிக்கக் கற்கள் கிடைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே புதையல் தோண்டும சம்பவங்களும் அதிகளவில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறு களுகங்கைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 16 பேரை ஹொரணை விசேட அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், அகழ்வுக்கென பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதேவேளை, புதையல் தோண்டிய சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 352 பேர் சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே புதையல் தோண்டும் குற்றச் செயல்கள் அதிகளவு இடம்பெற்று வருகின்றன.


கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான கால இடைவெளியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதையல் தோண்டிய 250 சம்பவங்களும் 522 தேவையற்ற அகழ்வுச் சம்பவங்களும் பதிவாகியுள்ள அதேவேளை இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட 1381 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பால சூரிய தெரிவித்தார். அதிலும் குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களும் உறவினர்களும் இணைந்தே புதையல் தோண்டும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின் கிட்டத்தட்ட 2 வருடங்களில் தொல்பொருட்களை சேதப்படுத்தியமை, அவற்றினை திருடி விற்பறமை புதையல் தோண்டியமை என பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் 40 மில்லியன் ரூபா தண்டப்பணமாக அறிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


புதையலென்பது இயற்கையானதென்றும் புதையல் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் சிலர் நினைக்கலாம். அதேபோல் பெரிய குடங்கள் பானைகளினுள் தங்கக் காசுகள், வைர நகைகள், மாணிக்கக் கற்கள் நிரப்பப்பட்டு மண்ணினுள் புதைத்து காணப்படுவதுதான் புதையல் எனவும் சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் நினைப்பது சரியென்றாலும் புராதன விக்கிரகங்கள், சிலைகள் போன்ற தொல்பொருட்களும் ஒரு புதையலாகும். புராதன காலம் தொட்டே புதையல் என்பது முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. நாம் சிறுவயது முதலே  இத்தகைய புதையல் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வுகள்  மற்றும் கதைகளை பெரியவர்களின் பேச்சுக்களின் போதோ, வரலாற்று ஏட்டுச் சுவடுகள் மூலமாகவோ அல்லது மதத் தலைவர்களது பிரசங்கங்கள மூலமாகவோ அறிந்து வந்துள்ளோம்.


மன்னர் கால ஆட்சிகளின் போது தமது எதிர்கால சந்ததியினர் ஏதேனும் கஷ்டங்களோ பஞ்சங்களோ ஏற்படுமாயின் இவற்றினை எடுத்துப் பயன்பெற வேண்டுமென பெறுமதியான பொருட்கள், ஆபரணங்கள், தங்க நாணயங்கள் என்பவற்றை ஏதாவது ஒரு பானையிலோ பெட்டிகளிலோ போட்டு புதைத்து விடுவார்கள்.  அத்துடன் அதனைப்பற்றி சுவடுகளிலோ அல்லது பாறைகளிலோ எழுதிப் பொறித்து விடுவார்கள்.
அதேவேளை, சில மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இடம்பெறும் யுத்தங்களின் போது தமது சொத்துகளைப் பாதுகாக்க தடயங்களை வைத்தோ அல்லது குறிப்புகளை வைத்தோ புதைத்து விடுவார்கள். எனினும் இவர்கள் அவற்றினை மீண்டும் பெறாது இறந்துவிட்டால் அவை பல தசாப்தங்களாக மண்ணினுள் புதைந்து காணப்படும். அநேகமாக இலங்கையைப் பொறுத்தவரை புதையல் தொடர்பான தகவல்கள் அக்காலங்களில் ஓலைச்சுவடிகளிலும் கற்பாறைகளிலும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 
மன்னர்கள் வாழ்ந்ததாக வரலாற்றில் கூறப்படும் இடங்களைத் தேடியறிந்தும் சில பிக்குகள் போன்ற மதத் தலைவர்களின் ஆதரவுடன் ஓலைச் சுவடிகளிலும் சுவடுகளிலும் பொறிக்கப்பட்ட தகவல்களை பெற்றும் புதையல்களைத் தேடி தோண்ட முற்படுகின்றனர். மேலும் சிலர் மந்திரவாதிகள், ஜோதிடர்களின் பின் நாயாக பேயாக அலைந்து திரிந்து அவர்களிடம் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று புதையல் தோண்டுகின்றனர். இதனால் தான் காட்டுப் பகுதிகளில் தனிமையான இடங்களிலுள்ள குகைகள், பெரிய பொந்துகள், பழைமை வாய்ந்த விகாரைகள், இந்து ஆலயங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் என புதையல் தோண்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மதத் தலங்களைக் கூட விட்டு வைக்காத இந்த புதையல் கொள்ளையர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொலநறுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலினை முற்றுமுழுதாக சேதடுத்தியுள்ளதுடன், கோயிலின் மூலஸ்தானத்திலுள்ள சிவனுக்கு கீழே கிட்டத்தட்ட 3 1/2  அடி ஆழத்திற்கு பாரிய குழி தோண்டியுள்ளனர். இதனை விட இக்குழி எப்பொழுது தோண்டப்பட்டது என்பது கோயில் நிர்வாகத்திற்கே தெரியாததொன்றாகவுள்ளது. இதனைப் போல இந்து ஆலயங்கள், விகாரைகளை இலக்கு வைக்கும் இந்த புதையல் கொள்ளையர்களால் கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.






புதையல் எடுப்பதற்காக மதத்தலங்களும் தொல் பொருட்களும் சேதமாக்கப்படுகின்றன. அத்துடன் புதையல் தோண்டுபவர்கள் புதையல் தோண்டுவதற்காக பாரிய உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பின்னணியில் இருந்து செயற்படுகின்றமையால் இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சுலபமானதொன்றல்ல.
விலச்சி பகுதியில் இடம்பெற்ற புதையல் தோண்டும் நடவடிக்கையில் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து புதையல் தோண்டியதாகவும் புதையல் தோண்டுவதற்காக பாரிய குழி தோண்டும் இயந்திரமான பெக்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதையல் தோண்டும் முயற்சிக்கு விடேச அதிரடிப்படையினரை அனுப்பியது தான்  என பொலிஸ் மா அதிபரும் தெரிவித்துள்ளார்.
எனவேதான் புதையல் தோண்டும் சம்பவங்களின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகளும் சில தொழிலதிபர்களும் உள்ளதால் இவர்கள் சட்டத்தின் பிடியில்சிக்கமாட்டார்கள் என அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் உடுகம  ஸ்ரீ புத்திரகித்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே புதையல் தோண்டுபவர்களின் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களே முதலில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.  அத்துடன் புதையல் தோண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அபராதம் மட்டும் விதிக்காது கடுமையான சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.
எமது நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் ஒன்றான கொழும்பு தொல்பொருட் காட்சியகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாரம்பரியதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான அரச உடைமையான தொல் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. எனினும் இதுவரை இந்தத் திருட்டுப் போன பொருட்கள் எங்கு உள்ளன? யார் திருடினார்கள் என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் இல்லை. இவ்வாறான பொருட்கள் திருடப்படுகின்றமை மூலம் நாம் எமது நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் பாரம்பரியங்களையும் தொலைக்கின்றோம் என்றுதான் கூறவேண்டும்.
நாட்டுக்கே உரிய 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த'" பொருட்களை இவ்வாறு திருடுவதோ சேதப்படுத்துவதோ அல்லது விற்பதோ நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். இந்த விலைமதிப்பற்ற புராதன பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு தொல்பொருள் ஆய்வாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதுடன் தொல் பொருட்கள் உள்ளதாகக் கருதப்படும் இடங்கள். வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் பாதுகாப்புகளையும் பலப்படுத்த வேண்டும். இதன் மூலமே புதையல் கொள்கையர்களிடமிருந்து எமது வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக