சனி, 30 ஜூன், 2012

இலங்கையை ஆட்டிவிக்கும் சூதாட்டம்

 சா .சுமித்திரை -

உலக நாடுகள் மட்டுமல்லாது, இலங்கையிலும் பெரும் தலையிடியாக மாறி வருகின்ற பிரச்சினைகளில் சூதாட்டம்  முக்கிய இடம்பெற்றுள்ளது. சூதாட்டம் இன்றோ அல்லது நேற்றோ உருவானதொன்றல்ல. மிக மிக புராதன காலங்களிலேயே சூதாட்டங்கள் தொடர்பான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன.


பணத்தையோ அல்லது பெறுமதியான பொருட்களையோ அல்லது நம்பி வந்த உறவுகளையோ வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவுகளையும் கொடுக்கக்கூடிய ஒரு வகை விளையாட்டாகவே சூதாட்டம் பார்க்கப்படுகின்றது. பணயமாக வைக்கப்படும் பொருளிலும் கூடிய பெறுமதியை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே  சூதாட்டம் ஆடப்படுகின்றது. அத்துடன் சூதாட்ட விளையாட்டின் முடிவு குறுகிய காலத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந்து சமய நூல்கள் மகாபாரதம், நளவெண்பா, போன்றவற்றில் சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் நன்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.


மகாபாரதத்திலேயே, துரியோதனனுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள் நாட்டினை இழந்தனர். ஆட்சியை இழந்தனர். மனைவி திரௌபதியை வைத்தும் ஆடினார்கள். இறுதியிலேயே மனைவியைக் கூட காப்பாற்ற முடியாத திறனற்றவர்களாக பாண்டவர்கள் வெளியேறினர். இந்நிலைக்கு சூதாட்டத்தின் மீது இருந்த மதிமயக்கமே காரணமாகும்.


 அதேபோல திருவள்ளுவர் கூட திருக்குறளில் சூதாட்டங்களால் ஏற்படும் பிரதி கூலங்கள் தொடர்பாக சூது  என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். எனவே தான் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பல நாடுகளில் சூதாட்டம் தடை செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் முற்றாக தடை செய்துள்ளதுடன், சூதாட்டம் ஆடுபவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன. எனினும் சில நாடுகளில் அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளன.


நல்லொழுக்கங்களை போதிக்கின்ற பல அற நூல்களிலே சூதாட்டம் ஒரு தீய பழக்கமாக சொல்லப்படுகின்றது. ஆனால், இன்றைய காலத்திலே எத்தனையோ பழைமையான விடயங்கள் மறைந்து கொண்டு போகின்ற போதிலும் பல காலங்களாக  தொடரும் இச்சூதாட்டம் மட்டும் மறைந்து போகவில்லை. இந்த ஆட்டத்திற்கு புத்துயிர் அளிப்பவர்களாக பணம் படைத்தவர்களே உள்ளனர்.


குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், அதிஷ்டலாபச் சீட்டு, கோழிச்சண்டை என சூதாட்டத்தில் பல வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இலங்கையிலே  அரச அனுமதியுடனும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் தான் அதிஷ்ட லாபச் சீட்டு இழுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.


அதேபோல நகரப் பகுதிகளிலே கசினோக்கள் என்னும் சூதாட்ட விடுதிகள் ஆங்காங்கே முளைத்துக் காணப்படுகின்றன. இவை நியோன் விளக்குகளின் கீழ் பகிரங்கமாக சூதாட்டங்கள் ஆடப்படுகின்ற போதிலும் அரசு அது சூதாட்ட விடுதிகளை ஓரளவேனும் கட்டுப்படுத்தியுள்ளன.


கடந்த வாரம் சண்டைச் சேவல்களை மோதவிட்டு பணம் சம்பாதிக்கும் கும்பலொன்றை வென்னப்புவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.


இதேவேளை மன்னார்தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய கரிசல் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு மேலாக பல வகையான சூதாட்டங்கள் இடம்பெற்று வருவதாக  ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் பொது அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கும் முறையிட்டுள்ளனர்.


தங்க நகைகள், வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள், வீட்டு உறுதிகள் என ஒன்றையும் விடாது அனைத்தையும் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியிலுள்ள பல வறிய குடும்பத்து கணவர்கள் ஒரு நாளைக்கு சூதாட்டத்தின் மூலம் பல இலட்சம் ரூபா திரட்டி விட்டு பெரு மூச்சு விடும் இவர்கள் மறுநாள் அனைத்தையும் தொலைத்து விட்டு வருகின்றனர்.


இதனால் பொறுப்பற்ற இவர்களை  நம்பி வாழும், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் பல வகையிலே மன உளைச்சல்களுக்கு உள்ளாகின்றனர். இத்தகையோரது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை கைவிடுகின்றனர். அத்துடன் வேறு பல சமூகப் பிரச்சினைகளுக்கும் அத்திவாரம் இடப்படுகின்றது.


கடந்த ஜனவரி மாதம் கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள மதுபான விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 69 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இவர்கள் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே கைது செய்யப்பட்டனர். இச்சுற்றிவளைப்புகள் ஒவ்வொரு நாளும் இடம்பெற்றிருந்தால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்?


அதேவேளை தங்கொட்டுவ,, தபரவிலப் பகுதியில் சூதாட்டத்துடன் தொடர்புபட்ட 3 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டிய இத்தகைய அதிகாரிகளே சூதாட்டத்திற்கு துணை போகின்றனர். இது போன்ற சம்பவங்களை வைத்தே கடந்த வருடம் "மங்காத்தா' என்னும் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நடிகர் அஜித் பொலிஸாக இருந்து கொண்டு கிரிக்கெட்டில் 500 கோடி ரூபாவை வைத்து சூதாடப்பட்டதை  இவர் மீண்டும் சூதாடி தனதாக்கிக் கொள்வதாக படமாக்கப்பட்டிருந்தது. அதேபோல "ஆடுகளம்' போன்ற பல படங்கள் சூதாட்டங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாது சூதாட்டத்தை தொடர்வது போலவே படமாக்கப்பட்டுள்ளன.


உலகிலேயே பணக்காரர்களின் விளையாட்டாகவே சூதாட்டம் உள்ளது. இவ்வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுமார் 5000 கோடி ரூபா சூதாட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அதேவேளை உலகிலே ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சூதாட்டத்திற்காக புழங்குகின்றன. அதிலும் குறிப்பாக ஆசியாவில் நடைபெறும் சூதாட்டங்கள் ஒலிம்பிக் போட்டிகளின் பெயரையே கெடுக்கின்றன என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனவே தான் இம்முறை ஒலிம்பிக்கில் முதன்முறையாக உலகளவில் நடைபெறும் போட்டிகள் மீது பந்தயங்கள் கட்டப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவிவை உருவாக்கியுள்ளதாக பிரிட்டன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹ்யூ ராபர்டஸன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரைப் பணயம் வைத்து பல சூதாட்டங்கள் நடைபெறகின்றமை ஒரு அதிர்ச்சிதரக் கூடிய விடயமாகும். அவற்றிலே ஹாக்டக் என்னும் சிக்கன் விளையாட்டு பிரபல்யமான சூதாட்டமாக உள்ளது. அதாவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலே ஒரு வெள்ளை நிற கோட்டினை வரைவார்கள். இக்கோடு தான் வெற்றி பெற்ற வரை நிர்ணயிக்கும். தொலைவிலிருந்து எதிர் எதிரே மிக வேகத்தில் காரினை செலுத்துவார்கள். எந்தக் காரின் டயர் வெள்ளைக் கோட்டின் மீது உள்ளதுடன் போட்டியாளர் உயிருடன் உள்ளாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அவருக்கு பந்தயத்தில் கட்டப்பட்ட பணம் கிடைக்கும். இருவருமே இறந்து விட்டால் கட்டப்பட்ட பணம் அதற்குரிய நிறுவனத்திற்கு சொந்தமாகும். அத்தகயை விளையாட்டுகளில் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ இந்த ஆட்டங்களை பார்வையிடுவதற்கு பலர் செல்கின்றனர். விபத்து இடம்பெற்ற இடத்தினை நாம் பார்ப்பதற்கே நெஞ்சு பதறும் ஆனால், விபத்து ஏற்படப் போகின்றது என தெரிந்து ஆவலுடன் பார்த்து மகிழ்கின்ற இவர்களின் மன நிலை விசித்திரமானது.
சூதாட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெறும். இந்த வகையிலே உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை 11.11.11 என்னும் திகதியிலே பிறக்குமென 150 கோடி ரூபாக்கள் பந்தயம் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களுக்குக் கூட பந்தயம் கட்டப்படுகின்றது. அதேவேளை இணையத்தளங்களின் ஊடாகவும் சூதாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சூதாட்டங்களில் ஒன்றான தாயம் போடுதல் என்பது உண்மையிலே தாயம் ஆடுபவர்களின் வாழ்க்கையையே தடுமாறச் செய்கின்றது. எனவே தான் தாயக் கட்டைகளை மனித தலைகளுக்கு ஒப்பாக குறிப்பிடுவார்கள். எனவே தான் மகாபாரதத்தில் வருவது போல தன் மனைவியையும் சூதாட்டத்தில் வைத்து இறுதியில் தோற்றுப் போன சம்பவமொன்று இந்தியாவிலே இடம்பெற்றுள்ளது. மேலைத் தேய நாடுகளில் சூதாட்டங்களால் பெரியளவில் பாதிப்புக்கள் என்று சொல்ல முடியாத போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டம் காண வைக்கின்றது.
பெண்களை விட அதிக ஆண்களே சூதாட்ட விளையாட்டில் அதிகளவு ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்றோ ஒரு நாள் பெற்ற குருட்டு அதிஷ்டத்தினை கொண்டோ அல்லது என்றோ ஒரு நாள் அதிஷ்டம் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனோ தான் ஆடுகின்றனர். சூதாட்டத்தில் தோற்க, தோற்க அறிவாற்றல் செயலிழக்கின்றது. எனவே எதை வைத்து சூதாடுவது என்று தெரிவதில்லை. தனக்கு சொந்தமானது மற்றவர்களுக்கு சொந்தமானது என எல்லாவற்றையும் வைத்து விளையாடி இறுதியிலே தன் தலையினையும் வைத்து சூதாட ஆரம்பித்து விடுகின்றனர்.
அதிக சூதாட்டம் ஆடுபவர்களது கண் நரம்புகளில் சில இராசயனப் பொருட்களின் குறைபாடு காரணமாகவே இந்நிலை தூண்டப்படுகின்றது. ஆகவே இக்குறைபாடு காரணமாக அவர்களுக்கு இந்நிலை அதிக சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையிலே அரச அனுமதியின்றி ஆடப்படும் சூதாட்டங்களுக்கு அபராத தொகையும் 5 வருட சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமுண்டு. எனினும் இதுவரை  காலங்களிலே அவை எந்த வகையிலே அதிகரிக்கும் சூதாட்டங்களை கட்டுப்படுத்தியதோ தெரியவில்லை. எனவே அரசு பாரிய விளைவைத் தராத சூதாட்டங்களை தனது கட்டுப்பாட்டிலே வைத்துக் கொண்டு ஏனைய வகை சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும். இந்நடவடிக்கைக்கு பொது சமூக அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும். இல்லையெனில் இலங்கையர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக