சனி, 30 ஜூன், 2012

மம்மிகள் பதப்படுத்தப்படும் முறையை மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்க முயற்சி







இத்தாலியில் மம்மிகள்  பதப்படுத்தப்பட்ட முறையினை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டுவதற்காக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகளைத் தோண்டியெடுத்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

பண்டைய நாகரிகங்களில் குறிப்பாக எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் போன்ற பெரும் தலைவர்கள் இறக்கும் போது அவர்களின் உடல் பழுதடையாது பல ஆயிரம் ஆண்டுகள் இருக்குமாறு விசேடமாக பதப்படுத்தப்பட்டு அதற்குரிய பேழையினுள் வைத்து புதைப்பார்கள். இம்முறை மூலம் இவை பல ஆண்டு காலம் பழுதடையாமலும் துர்மணம் வீசாமலும் இருப்பதற்கான மர்மம் இன்றைய காலம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தான் தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மம்மிகளின் உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  விரோனா நகரிலுள்ள டிசென்ஸனோ வைத்தியசாலையில் அவை பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றது. எனினும் 5 மம்மிகளின் உடல்களின் பல பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றில் கழுத்துகளுடன் கூடிய 5 தலைகள், ஒரு இதயம் மற்றும் 2 உடல்கள் ஆகியவையே கிடைத்துள்ளன.

இந்த மம்மிகளின் தலையிலுள்ள இரத்தக் குழாய்களான நாடி, நாளம் மற்றும் தசையிழையங்கள் என்பவற்றை ஆராய்ச்சி நிபுணர் ஜியேவன் பட்டிஸ்ரா ரினி தனித்தனி மாதிரிகளாக எடுத்து ஆய்விற்குட்படுத்தி வருகின்றார்.

இம்மம்மிகளின் உடல்கள் எவ்வாறு பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் எடுத்து வைத்திருக்கும் மாதிரிகளை சி.ரிஸ்கேன், எக்ஸ்ரே கதிர் வீச்சு என்பவற்றின் ஊடாக பரிசோதிக்கப்பட்டு வரப்படுவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இம்மாதிரிகளின் பரிசோதனை மூலம் இரசம், ஆர்சனிக் ஆகிய இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை இவ்விரசாயனப் பொருட்களில் புதைத்தோ பதப்படுத்தியோ பாதுகாக்கப்பட்டிருக்கின்றமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்விசானப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தியுள்ளமையால," இதுவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்ட மம்மிகளை விட தற்போது கிடைத்துள்ள மம்மிகளின் உடல் பாகங்கள் அதிக தடிப்பாக உள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மம்மிகளுக்கு செயற்கை பற்கள், கண்கள் மற்றும் முடி ஆகியவற்றைப் பொருத்தி மேலதிக ஆராய்ச்சிகளையும் மருத்துவ படிப்பினையும் மேற்கொள்ள உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

19 ஆம் நூற்றாண்டகளின் மனித உடல்களை பாதுகாக்க சிலிக்கன் டைஒக்சைட்டு, சல்பர், சுண்ணாம்பு என்பவற்றையே  பயன்படுத்தி வந்துள்ளனர். எனினும் இத்தாலியில் தோண்டியெடுக்கப்பட்ட மம்மிகளில் இரசம், ஆர்சனிக் போன்ற இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுடல்களைப் பதப்படுத்தும் பயன்படுத்திய மருத்துவ முறைகள் இன்றைய மருத்துவ வளர்ச்சிக்கு சவாலாகவும் அமையலாம்.

 சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக