புதன், 31 ஜூலை, 2013

இலங்கையை ஆட்டுவிக்க போகும் கசினோக்கள்?

சா.சுமித்திரை


இலங்கை மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பெரும் தலையிடியாகவுள்ள சூதாட்டம் சட்டவிரோதமான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.  ஆயினும் சில நாடுகள் சட்ட மூலங்களை பயன்படுத்தி அதன் கட்டுப்பாட்டின் கீழ் கசினோ நிலையங்களை அமைத்து மறைமுகமாக சூதாட்டத்தினை பாதுகாத்து வருகின்றன.




 இந்நிலையில் தலைநகர் கொழும்பிலுள்ள டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் 36 மாடிகளைக் கொண்ட கசினோ சூதாட்ட மையமொன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 350 மில்லியன் டொலர் முதலீட்டில் க்ரவுண் கலம்போ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்த சூதாட்ட மாளிகையில் நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பார்க்கர் இலங்கையில் கசினோ வர்த்தகத்தை ஆரம்பிக்கவுள்ளார். இதற்காக அவர் பெரும் தொகை பணத்தை முதலீடு செய்யவுள்ளதாகவும் தலைநகரிலுள்ள பிரதான ஹோட்டல் உரிமையாளர்களையும் சில அமைச்சர்களையும் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருந்தது.

 இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கிலேயே இந்த முதலீட்டைச் செய்யவுள்ளதாக பிரபல கசினோ மன்னர் பார்க்கர் கூறியுள்ளதாகவும் ராய்ட்டர் கூறியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சூதாட்ட பந்தய சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சூதாட்டம் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது இதன் நன்மைகள் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டத்தின் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் சூதாட்டம் மற்றும் பந்தய நிலையங்களை ஒரு இடத்திற்கு கொண்டு வர முடியுமெனவும் மதத்தலங்கள்  உட்பட பொது இடங்களுக்கு அண்மையில் அவற்றின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் கூறியிருந்தனர்.


 ஆயினும் தற்போது லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனம், அரச அலுவலங்கள் மற்றும் மதத்தலங்கள் உள்ள பகுதியிலே கசினோ நிலையம் கட்டப்படவுள்ளமையை சட்ட மூலம் நிறைவேற்றியோருக்கு தெரியாதுள்ளது வேடிக்கையான விடயமாகும்.

 சூதாட்டம் இன்றோ அல்லது நேற்றோ உருவானதொன்றல்ல. மிக மிக புராதன காலங்களிலேயே சூதாட்டத்தினால் ஏற்பட்ட பாரிய சம்பவங்களை வரலாறு சான்று பகிர்கின்றன. பணத்தையோ அல்லது பெறுதியான பொருட்களையோ அல்லது நம்பி வந்த உறவுகளையோ வைத்து ஆடுகின்ற மோசமான விளைவுகளைதத் தரக்கூடிய ஒரு விளையாட்டாகவே சூதாட்டம் உள்ளது. பணயமாக வைக்கப்படும் பொருளிலும் கூடிய பெறுமதியை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே  சூதாட்டம் ஆடப்படுகிறது.

 அத்துடன் சூதாட்டத்தின் முடிவை குறுகிய நேரத்திலே பெற்றுக் கொள்ள முடியும். அதாவது ஆண்டியானவன்  சிலவேளைகளில் கோடிஸ்வரனாவான். பணக்காரன் ஒரு சில நிமிடங்களிலே பிச்சைக் காரனாகவும் போவான்.
 சூதாட்டத்தின் பாதிப்புகளை அனைத்து மதங்களுமே போதித்துள்ளன.
மகாபாரதம், நளவெண்பா போன்றவற்றில் சூதாட்டம்  தொடர்பான விழிப்புணர்வுகள்  நன்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. மகாபாரதத்திலே துரியோதனனுடன்  சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள் பொருள் பண்டங்களையும், ஆட்சியையும் இறுதியில் நாட்டினையும் இழந்தனர். மனைவி திரௌபதியை வைத்தும் ஆடினர். இறுதியிலே கட்டிய மனைவியைக் கூட காப்பாற்றத் திறனற்றவர்களாக அவர்கள் வெளியேறினர்.
 அதேபோல திருவள்ளுவர் கூட திருக்குறளில் சூதாட்டங்களால் ஏற்படும்  பிரதி கூலங்கள் தொடர்பாக “சூது” என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். எனவேதான் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பல நாடுகளில் சூதாட்டம்  தடை செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் முற்றாகத் தடை  விதித்துள்ளதுடன் அத்தகையோருக்கு எதிராக மிகக் கடுமையான  சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன.

 நல்லொழுக்கங்களை போதிக்கின்ற பல அற நூல்களிலே சூதாட்டம் ஒரு தீய பழக்கமாக சொல்லப்படுகின்றது. அத்துடன் இன்றைய காலத்திலே எத்தனையோ பழைமையான  விடயங்கள் மறைந்து கொண்டு போகின்ற போதிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சூதாட்ட பந்தய விளையாட்டு மட்டும் மறைந்து போகவில்லை. இந்த ஆட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பவர்களாக அரசின் பின்னணியிலுள்ள பணம் படைத்தவர்களே  உள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், தாயம், கோழிச் சண்டை என சூதாட்டத்ததில் பல வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இலங்கையிலே அரச அனுமதியுடனும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் தான் அதிர்ஷ்ட லாபச் சீட்டு, குதிரைப் பந்தயம் என்பன இடம்பெற்று வருகின்றன. எனவே தான்  தலைநகர் உட்பட நகர்ப்பகுதிகளில் காளான்களைப் போல ஆங்காங்கே நியோன் விளக்குகளின் கீழ் பகிரங்கமாக சூதாட்டங்கள் ஆடப்படுகின்றன.
 கடந்த வருடம் நாடு முழுவதிலும் சுமார் 810 கசினோ சூதாட்ட மையங்கள் இயங்கி வருவதாக பிரதிநிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன கூறியிருந்தார்.

இவை மாகாண சபை சட்டங்களின் கீழ்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சூதாட்டங்களுக்காக தனியான சட்டங்களை அமுல்படுத்தும் திட்டம் கிடையாதெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 2010 ஆம் ஆண்டில் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து 245 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் இந்த வருடம்  முதல் (2012) கசினோ சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்படுமெனவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் சூதாட்டம் மற்றும் பந்தயத்துக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனையடுத்து நாட்டில் பல்வேறு தரப்பட்டவர்களால் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்களது  எதிர்ப்புக் கருத்துகளோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ எந்தகளவுக்கு கசினோ மையங்கள் மீது தாக்கம் செலுத்தும் என்று கூறமுடியாதுள்ளது.

 பந்தய சூதாட்ட வரி விதிப்பனவுத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 100 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மகிந்த சிந்தனையினூடாக நாட்டை தர்மதீவாக மாற்றுவதாக கூறிக் கொண்டு  கசினோ தீவாக அரசு மாற்றுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜீத் பெரேரா தெரிவித்திருந்தார்.
 இதேவேளை கலாசாரம் மரபு என்பவற்றை சீர்குலைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் கசினோ மையங்களை எதிர்பார்ப்பதில்லை. எமது நாட்டின் மரபுகளையும், கலாசாரத்தையும் ஆயுர்வேத வைத்திய முறையையும் பின்பற்ற விரும்பியே  சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இந்த கசினோ  நிலையம் அமைக்கப்படுமானால் மதுபான விற்பனையும், விபசார நடவடிக்கைகளும் அதிகரிக்கும் எனவும் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

 அதேபோல ஜனநாயக உரிமை மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கசினோ சூதாட்ட முதலாளிகளுக்கு வழங்கப்படுவதாக காலணித்துவத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வண. தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

 கசினோ சூதாட்ட நிலையங்களில் ஆட்சி கவிழ்ப்பு இரகசிய சூழ்ச்சிகள், சதித் திட்டங்கள் போன்றன கலந்துரையாடப்படுகின்றன. 1990 களில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர்,கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு கசினோ மையங்களே காரணமாக அமைந்திருந்தமையை எவரும் மறந்து விட முடியாது.

 எமது நாட்டிலும் ஆங்காங்கே நடைபெறும் சூதாட்டங்களால் குடும்ப, சமூக பிரச்சினைகளுக்கும் வித்திட்டுள்ளன. மன்னார்  தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய கரிசல் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக சூதாட்டங்கள் இடம்பெறுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இவற்றினால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு குடும்பப் பெண்கள் முகம் கொடுக்க மறுபுறம் கணவன்மார் தங்க நகைகள், வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள் என ஒன்றையும் விடாது அனைத்தையும் வைத்து சூதாட்டத்தில்  ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு இலட்சம்  ரூபா திரட்டி பெரு மூச்சு விடும் இவர்கள் மறுநாள் அனைத்தையும் தொலைத்து விட்டு வருகின்றனர்.

 இத்தகையோரது பொறுப்பற்ற தன்மையை நம்பி எவ்வாறு குடும்பத்தவர்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியும்? கசினோ வலயங்களை ஊக்குவிக்கும் போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.

அதேபோல கடந்த வருடம் மங்காத்தா, ஆடுகளம் போன்ற படங்கள் அதிக வசூலை தேடித் தந்திருந்தன.  இவை சூதாட்டங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை சூதாட்டம்  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தாது அவற்றினை ஊக்குவிப்பது போலவே படமாக்கப்பட்டிருந்தன. சமூகத்திற்கு நல்ல செய்திகளைத் தரும் திரைப்படங்களே காலத்துக்கும்  நிலைத்து நிற்கக்கூடியவை  என்பதை திரைப்பட இயக்குனர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

 இதேவேளை உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும். இது போன்ற சூதாட்டங்களை ஊக்குவிக்கும் கசினோ மையங்கள் மனித நேயமற்ற தொன்றாகவே கருத முடியும்.

 அதேபோல தாயம் போடுதல் என்பது உண்மையிலே தாயம் ஆடுபவர்களின் வாழ்க்கையைத் தடுமாறச் செய்கின்றது. எனவேதான் தாயக் கட்டைகளை மனித தலைக்கு ஒப்பாக குறிப்பிடுவர்.

 மேலைத்தேய நாடுகளில் சூதாட்டங்களால் பாரியளவில் பாதிப்புகள் என்று சொல்ல முடியாத போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. எனவேதான் இந்தியாவில் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டம் ஆடுபவர்களது கண் நரம்புகளிலும்,மூளை நரம்புகளிலும் சில இரசாயனப் பொருட்கள் சுரப்பதினால் குறைபாடுகள் ஏற்பட்டு ஆரோக்கியத்தை கெடுக்கின்றதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆரோக்கிய ரீதியிலும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பான தொன்றாகவே  சூதாட்டம் உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டவர்களுக்காகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளுக்காகவோ கசினோ மையங்களை  அமைப்பதை விடுத்து அந்நிதியை பொருளாதார அபிவிருத்தியில் முதலிட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்

 இந் நடவடிக்கைக்கு பொது சமூக அமைப்புகள் உதவ வேண்டும்.
சாதாரண மக்களை சூதாட்டங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் ஏதோவொரு குறைபாடு உள்ளது போலவே தோன்றுகின்றது. இச்சட்டமூலம் சூதாட்டங்களை பாதுகாப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அக்குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையேல் இலங்கை சூதாட்ட தீவாக மாறுவதுடன், அதில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அதற்காக அடகு வைக்கப்படுவோம் என்பதே உண்மை.

மென்மையான அதிகாரத்தை பறைசாற்றியுள்ள சீனாவின் முதற்பெண் “பெங் லியென்”

சீனாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷி ஜின்பிங் தனது முதல் பயணத்தின் போது  எதிர்பாராத சுவாரசியமான பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்.

 வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கான விஜயத்தினை ஷி மோற்கொண்டிருந்தார். இதன் போது சீனாவின் புதிய ஜனாதிபதி யார்? என்ற தேடலுக்கு மாறான சூழ்நிலைக்கு ஷி தள்ளப்பட்டிருந்தார்.

 மொஸ்கோ பிராந்தியங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது  அங்கு நடைபெற்ற பல்வேறு  நிகழ்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஷி ஜின்பிங்  பல விடயங்கள் பற்றியும் உரையாற்றியிருந்தார்.  ஆனால் மொஸ்கோ  பிராந்திய ஊடகங்களில் சிறப்பான முயற்சியால் ஷி மீதான  மோகம் மறைக்கப்பட்டு அவருடைய கவர்ச்சியான மனைவியும், நாட்டுப்புறப்பாடகியுமான பெங் லியோனின் ஆதிக்கம் வெளிக்காட்டப்பட்டிருந்தது.

 வெள்ளிக்கிழமை சீன எயார் விமானத்தில் மொஸ்கோ விமான நிலையத்தை ஷி தம்பதியினர் வந்தடைந்தனர். விமானத்திலிருந்த தனது கணவனுக்கு அருகிலேயே பெங்லியேன் இறங்கி வரும் காட்சியை ஆயிரம் கமராக்களும் கண் சிமிட்டியிருந்தன.

சீனாவின் முதல் பெண்ணாக முதன்முறையாக பொதுமக்கள் முன்தோன்றிய பெல் லியெனைப் பல ஆயிரக் கணக்கான சீன இணையப் பாவனையாளர்கள் கண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

 சீனாவின் நன்கறியப்பட்ட கவர்ச்சியான பெண் பெங் என்பதும் இந்த மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு ஒரு காரணமாகும். 1962 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம்  திகதி  பெங் சான் டொங்கிலுள்ள யுங் செங் வட்டம் என்னும் பகுதியில் பிறந்தார். 1982 காலப்பகுதியில் இசைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பெங் சீன நாட்டார், ஓபாரா இசைப் பாடல்களைப் பாடும் திறன் பெற்றவராவார்.

 இந்நிலையில் பெங் சீனப்புத்தாண்டு நிகழ்ச்சியாக சீன தொலைக்காட்சி  ஒன்றில் ஒளிபரப்பி வந்த சிறப்பு நிகழ்ச்சிகளில்  பங்கேற்று  புகழ் பெற்றவராவார். அத்துடன் சீனாவில்  பரவலாக நடைபெற்ற இசைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு  வெற்றிகளைப் பெற்று புகழின் உச்சிக்கு சென்றவராவார்.

சீனாவின் சியாமென் நகர துணை மேயராக ஷி ஜின்பிங் இருந்த போது பெங்கினை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.  சீன தொலைக்காட்சியில் தேச பக்திப்பாடல்களைப் பாடி வந்த பெங்லியென் திருமணத்துக்குப் பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டார். ஷி தம்பதிகளுக்கு மிங் ஷி என்னும் ஒரு மகள் உள்ளார். மிங் அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வருகிறார்.

 நாட்டின் முன்னணி நாட்டுப்புறப்பாடகியான பெங் தனது 19 ஆவது வயதிலே சீன இராணுவத்திலும் இணைந்து பணியாற்றியவராவார். சீனாவின் மக்கள் விடுதலைப் படையில் குடிசார் உறுப்பினராகவுள்ள இவருக்கு மேஜர் ஜெனரலுக்கு இணையான பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் காசநோய் மற்றும் எயிட்ஸ் நோய்க்கான  நல்லிணக்க தூதராகவும் கடமையாற்றி வருகிறார்.

 கடந்த தசாப்தத்தில் தனது கணவனான தற்போதைய ஜனாதிபதி ஹியை விட பிரபல்யமாக விளங்கிய பெங் தனது கணவரின் கட்சியில் மத்திய குழு நிலை ஆணைக்குழுவின் முக்கியஸ்தராக நியமிக்கப்பட்ட பின்னர் அண்மையில் ஒரு குறைந்த சுய விபரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சீனாவின் முன்னைய அரச தலைவர்களான ஜின் ஆங் ஜீமின் மற்றும் கு ஜிண்டா ஒ ஆகியோரது மனைவிமார் பொதுமக்களின் முன்னால் அரிதாகவே தோன்றியுள்ளனர். சீன அரசாங்கத் தலைவர்களின் மனைவிமார் பொது மக்கள்  முன் தோன்றுவது தவிர்க்கப்பட்டு வந்த தொன்றாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில் சீன முதல் பெண்மணி என்ற அங்கீகாரம் பெங் லியெனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 முதன்முறையாக ஒரு சீனத் தலைவரின் மனைவிக்கென ஒரு தனி அட்டவணை மற்றும் அவருடைய சொந்த பொதுத் தொடர்பினை பேணுவதற்கான வெளிநாட்டுப் பயணம் போன்ற நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சின்ஷெங் குபிங் தெரிவித்துள்ளார்.

 மொஸ்கோ பயணத்தை தொடர்ந்து ஷி தம்பதியின் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ஆகீஐஇகு  உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது பெங் உரை நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மென்மையான தலைமைத்துவம் இரகசியமான வாழ்வில் உச்சமடைய ஒரு அரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது என்பதை பெங்கின் வெளிநாட்டுப் பயணம் காண்பித்துள்ளது.

 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து முதல் தடவையாக ஒரு கண்ணியமான முதல் பெண்மணியைக் கண்டுள்ளோம் என தென் சீனாவின் மோனங் போஸ்ட் பிளக்கர் குறிப்பிட்டுள்ளது.
 இணையத்தளங்களில் நேர்த்தியான தோற்றம் கொண்ட பெங்கின் புகைப்படங்கள் பதியப்பட்டு ஒரு மணித்தியாலங்களிலேயே ஆயிரக் கணக்கான கருத்துரைகள் வெளியிடப்பட்டு வரப்படுகின்றன.

பெங் கோட் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படமொன்றில் ஆயிரக் கணக்கான பிரதிகளை தலா 499 யுவான்  (4500 ரூபா) பெறுமதியில் ஒரு இணையத்தள நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
 சீனத் தலைவர்களாக இருந்தவர்களின் மனைவிமார்கள் தொடர்பான விபரங்கள் பெரும்பாலும் அநாமதேயமாகவே இருந்து வந்துள்ளன. ஹெல்ஸ்மனின் மனைவி ஜியாங் கினிங் கலாசார புரட்சியில் பங்குபற்றியிருந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார்.

 இதேவேளை பல தலைவர்களின் குடும்பங்கள் பற்றிய எந்தவொரு பொதுத் தகவல்களையும் வெளி ஊடகங்களுக்கு வழங்காது கட்டுப்படுத்தும் கொள்கையை சீன அரசு மேற்கொண்டிருந்தமையும் சீன முதல் பெண்கள் தொடர்பான சுவாரசியங்கள் வெளிவராமைக்குக் காரணமாகும்.


 இந்நிலையில் தற்போதைய சீன ஜனாதிபதி ஷி யின் செல்வாக்கினை விட பெங் மீதான மோகம் சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பது உண்மையாகும். பெங்கின் நேர்த்தியான இராணுவ கம்பீரம் நிறைந்த  கவர்ச்சியான தோற்றமும் இனிமையான குரலும் மென்மையாக அதிகாரத்தை பறைசாற்றுவதைக் காணலாம்.

அரச வாரிசான ஆண் குழந்தை

சா. சுமித்திரை

 முழு  உலகின் கவனமும் பிரிட்டனின் பக்கம் திரும்பியிருக்க  உலகின் முன்னணி ஊடகங்கள் எல்லாம் லண்டனில் உள்ள செயின்ட்  மேரிஸ் மருத்துவமனை முன்பாக இரவு பகலாக காத்துக்கிடக்க பிரிட்டன் இளவரசர் வில்லியமின் காதல் மனைவியான கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிரிட்டனின் அரச வாரிசான ஆண் குழந்தையை பிரிட்டன் நேரப்படி திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடமளவில் பெற்றெடுத்துள்ளார். குழந்தை மூன்றரை கிலோ நிறையுடன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக செயின் மேரிஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

 அழகு , சிருஷ்டித்தல் , அமைதி , நாணம் ,தலைமைத்துவம் என பெண்ணினத்தின் பெருமைக்கெல்லாம் தாய்மையடைதல் தலை சிறந்ததாகும். ஒரு பெண் தாய்மையடைதல் மூலம் முழுமையடைகின்றாள் என்பது நம் சமூகத்தினது மட்டுமன்றி விஞ்ஞான ரீதியிலும் உண்மையானதொன்றாகும்.

சாதாரண குடும்பத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு மருமகளாக வந்த கேட் மிடில்டன் அரண்மனையின் பல விதிமுறைகளை தகர்த்தவராவார். கேட், பிரிட்டன் இளவரசர் வில்லியமை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னரும் எந்தவொரு கௌரவ பட்டத்தினையும் பெறாமல் சாதாரணதொரு பெண்ணாகவே இன்னும் இருக்கின்றார். இந்நிலையில் பெண்ணினத்துக்குரிய  தாய்மை என்ற முதன்மையான பண்பிற்கு கேட் மட்டுமென்ன விதிவிலக்கா? இப்பொழுது அரச குடும்பத்தின் வாரிசினை பிரசவித்துள்ளார் கேட்.


கேட் மிடில்டன் பிரசவத்திற்காக லண்டனிலுள்ள சென் . மேரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் ஆரவாரங்களுமென ஒருபுறமும் கேட்டுக்கு பிறக்கப் போகும் குழந்தை தொடர்பான சூதாட்டங்கள் மறுபுறமும் எனப் பிரிட்டன் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு, பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக  பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி , வானொலி நிருபர்கள் மருத்துவமனை வளாகத்தில் செய்தி சேகரிக்கவென இரவு பகலாக காத்துக்கிடந்தனர். அத்துடன் பிரிட்டனின் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வில்லியம்ஸின் குழந்தை பற்றி ஊகங்கள் அடிப்படையிலான போட்டிகளை நடத்தியிருந்தன.

ஆண் வாரிசா ? பெண் வாரிசா ?  எந்த நாளில் எந்த நேரத்தில் பிறக்கும் ? குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்னவாக இருக்கும்? குழந்தையின் எதிர்காலம் சாதாரணமாகவா அல்லது அரச ஆட்சியாகவா இருக்கும் என்ற கேள்விகளின் அடிப்படையில் விறுவிறுப்பான போட்டிகளை ஒளிபரப்பி வந்தன.  மறுபுறம் பிறக்கப் போவது ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா என்ற சூதாட்டங்களும் பல கோடி ரூபாவுக்கு நடைபெற்றன.

இதேவேளை, குழந்தை பிறப்பு பற்றிய தகவல் முதலில் மருத்துவர் மூலம் ஒரு சீட்டில் எழுதப்பட்டு அரண்மனைக்கு அனுப்பப்படும். அங்கு அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்குப் பின் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகையில் ஒட்டப்படும். இதுவே பிரிட்டன் அரச பரம்பரையின் காலம் காலமாக செய்யும் நடைமுறையாகும்
.
 இந்த முறையான நிகழ்வுகளுக்கு முன்னரே செய்திகளை ஒளிபரப்பும் ஆர்வத்தில்  கடித்ததை தெளிவாகப் பெரிதாக்கிக் காட்டும் கமெராக்களுடன் நிருபர்கள் தயாராக  இருந்தனர். அதேசமயம் சீனா, ஜப்பான், கொரியா , அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிருபர்களும் மருத்துவமனை முன்பாக முகாமிட்டிருந்தனர்.
கடந்த 30 வருடங்களுக்கு முன் வில்லியமும் அவருடைய சகோதரர் ஹரியும் பிறந்த போது கூட இத்தனை எதிர்பார்ப்புகள், ஆரவாரங்கள் இருக்கவில்லையென பிரிட்டிஷ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 கேட், கர்ப்பம் தரித்ததிலிருந்து சுவையான சுவாரசியமான பல சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அந்நிலையில் ஒரு துக்ககரமான சம்பவமும்  இடம்பெற்று முடிந்திருந்தமை நிச்சயமாக இந்த இடத்தில் நினைவு கூரப்பட வேண்டியதொன்றாகும்.
கேட் கர்ப்பமுற்ற நிலையில் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை கவனித்து வந்த இந்திய நாட்டைச் சேர்ந்த மருத்துவ தாதி ஜெசிந்தா தற்கொலை  செய்து கொண்டமையாகும். இச் சோக சம்பவத்தினை கடந்து கேட் தொடர்பான சுவாரசியமான சம்பவங்கள் அவ்வப்பொழுது ஊடகங்களில் இடம்பிடிக்கத் தவறவில்லை.
கேட் 7 மாத கர்ப்பிணியாக விருக்கும்  போது வீட்டில் தயாரிக்கும் இந்திய உணவுகளையே  உண்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தனது வாரிசுக்கென ஒரு முன்பள்ளியையொத்த  அறையொன்றினையும் ரோயல் வடிவமைப்பாளரைக் கொண்டு வடிவமைத்திருந்தார்.

இதேவேளை, பிறக்கப்போவது ஆணா, பெண்ணா, அதற்கு அரச குடும்பத்தினர் என்ன பெயர் வைப்பார்கள் என்று உலக மக்கள் தீவிரமாக யோசித்து சில பெயர்களை பரிந்துரை செய்திருந்தனர். ஆண் குழந்தையாயின் ஹரி, வில்லியம், சார்ல்ஸ் , ஜேம்ஸ் , ஜோர்ஜ் ஆகிய பெயர்களில் ஒன்றும் பெண் எனில் சோபி, கேட், எலிசபெத் ,சாரா , விக்டோரியா ஆகிய பெயர்களிலொன்றும் வைக்குமாறும் தெரிவு செய்து அனுப்பியும் வைத்துள்ளனர்.

இதேவேளை, இளவரசர் வில்லியம் தனது குழந்தைக்கு தன் பெயரை வைக்க  வேண்டுமென பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார். டேவிட் என்ற பெயர் அழகாகவுள்ளது.  மேலும் அரச குடும்பத்து குழந்தைக்கு தனது பெயர் வைக்கப்பட்டால் தான் பெரு மகிழ்ச்சியடைவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கேட்டுக்கும் கடந்த 13 ஆம் திகதியே பிரசவ திகதியென கூறப்பட்ட போதிலும் ஒரு வாரம் கடந்த நிலையில் இயற்கையான முறையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

தனது வாரிசு இந்தப் பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை ஒளிப்பதிவு செய்ய இளைவரசர் வில்லியம் திட்டமிட்டிருந்தார். வில்லியமின் இந்த ஆசைக்கு கேட் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பிரசவ ஒளி நாடா, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அக்காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகி விடக்கூடாதென கேட் அச்சமடைந்திருந்தார். கேட்டின் முதலாவது குழந்தை பிறப்பினை முன்னிட்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

கேட் மிடில்டனின் பிரசவ தினத்தன்று பிரிட்டனில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அரச வம்சத்தின் முத்திரை பொதித்த வெள்ளி நாணயமொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி நாணயம் நீல நிறப் பையில் ஆண் குழந்தைக்கும் ஊதா நிறப் பையில் பெண் குழந்தைக்கும் வழங்கப்பட்டுள்ளது. எதுவாயினும் பல்வேறு கொணடாட்டங்களும் ஆரவாரங்களும் சூதாட்டங்களுமென காணப்பட்ட பிரிட்டிஷ் அரச வாரிசின் பிறப்பையடுத்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளது.
கேட் , தனது குழந்தையை அரச வாரிசாக வளர்க்காமல் சாதாரண குழந்தையைப் போலவே வளர்க்க விரும்புகின்றார். அதை வெளிப்படுத்தும் விதம் அவர்  அரச குடும்பத்தின் பாரம்பரிய விதிமுறைகள் சிலவற்றை உடைத்தெறியும் படி தன் குழந்தைக் கென்று ஒரு சில புதிய விதிமுறைகளையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாது கேட் தனது குழந்தைக்கு அரச குடும்பத்து ஆடைகளை  உடுத்தப் போவதில்லையென உறுதியாக தெரிவித்திருந்ததுடன் தனது கணவரோடு சேர்ந்து குழந்தைக்கான ஆடைகளையும் வாங்கி வைத்திருந்தார்.
பழங்கால பாரம்பரியத்தினைப் பின்பற்றி வரும் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கேட் தனது ஆண்வாரிசினை வளர்ப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதுவரை, பிரித்தானிய மன்னர்களுக்கு அல்லது அரசிகளுக்கு ஆண் குழந்தை இல்லாத நிலையிலேயே பெண் குழந்தைகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வழக்கம் இருந்தது. ஆனால், கேம்பிரிட்ஜ் இளவரசனாக அறியப்பட்டுள்ள இந்த ஆண் குழந்தைக்கு பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு  காலப் போக்கில் வர  உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும். அத்துடன் 15 பொது நலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் இக் குழந்தை வகிக்கும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவரது கணவர் எடின்பரோ கோமகனும் அரச ஆண் வாரிசு பிறந்த செய்தி கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அரச குடும்ப வாரிசின் பிறப்பை  நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணமென்றும் அதனை விட இதுவொரு நேசமுடனும் பாசமுடனும்  இருக்கும் ஒரு தம்பதிக்கு கிட்டியுள்ள மிக அற்புதமான தருணமெனவும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  மிச்செஷ் தம்பதியும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன் ஏனைய நாட்டுத் தலைவர்களும் தமது மகிழ்ச்சியான வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, கேட் எந்த நேரத்திலும் குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரலாம் என்பதால் மீண்டும் பரபரப்பு குறையாமல் மருத்துவமனையின் அனைத்து வாயில்களிலும் காத்திருக்கின்றனர் ஊடகவிலயாளர்களுடன் பிரிட்டனியர்கள்.

திங்கள், 29 ஜூலை, 2013

இளவரசர் ஜோர்ஜ் அரச சௌபாக்கியத்துடன் வாழ்வாரா?

 சா.சுமித்திரை

 பிரிட்டனின் வரலாற்றில் கடந்த 120 வருடங்களின் பின் முடி சூடுவதற்காக மூவர் காத்திருக்கும் நிலைமை முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட், பிரசவத்திற்குகாக லண்டனிலுள்ள சென்.மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணத்திலிருந்து முழு உலகின் கவனமும் பிரிட்டனின் பக்கம் திரும்பியிருந்தது.

நாட்டின் ஆட்சிக்கவிழ்ப்பு, நிலநடுக்கத்தில் 1000 பேர் பலி! 5 வயது சிறுமி கின்னஸ் சாதனை! என ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு பிரச்சினையும் சம்பவமும் அரங்கேறிக் கொண்டிருக்க, உலகின் முன்னணி ஊடகங்களின் பார்வை முழுவதும் சென்.மேரிஸ் மருத்துவமனை வளாகத்தை நோக்கியே இரவு பகலாக காத்துக்கிடந்தன.

இந்தக் காத்திருப்புகள், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலே கடந்த திங்கட்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4 மணி 24 நிமிடத்தில் பிரிட்டனின் மூன்றாவது முடிக்குரிய அரசவாரிசினை பிரசவித்திருந்தார் கேட்.

இந்த உணர்வுபூர்வமானதொரு தருணத்தினைத் தொடர்ந்து பிரிட்டிஷ் வரலாற்றில் கடந்த 120 வருடங்களின் பின் முடி சூடுவதற்காக மூவர் காத்திருக்கும் நிலைமை முதற் தடவையாக ஏற்பட்டுள்ளது.

கேட் கர்ப்பமடைந்த காலப்பகுதியிலிருந்தே ஆரம்பமான எதிர்பார்ப்புகளும், பரபரப்புகளும் அவர் குழந்தை பிரசவித்த பின்னரும் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை என்றே கூறவேண்டும்.

ஆணா? பெண்ணா? எந்த நாளில், எந்த நேரத்தில் குழந்தை பிறக்கும்? அதன் எதிர்காலம் சாதாரணமானதா? குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்னவாக இருக்கும்? என ஒவ்வொரு விடயத்திலும் பெரும் எதிர்பார்ப்பும் பல்வேறு கேள்விகளும் எழுந்ததுடன் பிறக்கப்போகும் பிள்ளை குறித்து சூதாட்டங்களும் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் ஒவ்வொன்றாக பதில் கிடைத்த பின்னரும் இன்னும் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் குறைந்தபாடில்லை

கேட் தனது வாரிசுக்கு தாய்ப் பாலா? அல்லது புட்டிப்பாலா? வழங்குவார் என்பதிலிருந்து மீண்டும் பரபரப்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவேதான், இந்த அரசக்குழந்தையின் அந்தரங்க விடயங்களைக்கூட சர்வதேச ஊடகச் சுழியோடிகள் விடமாட்டார்களென விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்தவாரம் முழுவதும், பிரிட்டனியர்களும் சர்வதேச ஊடகங்களும் சென்.மேரீஸ் மருத்துவமனையின் வளாகத்திலே காத்திருந்தமையானது ஒரு கேலி கூத்தான விடயமாகும். ஒரு பெண்ணுக்கு தாய்மையோ அல்லது பிரவசமோ பொதுவானதொன்றாகும்.

உலகமயமாக்கப்பட்ட இந்த எதிர்பார்ப்பு நிலைமை செயற்கைத்தனமானது என பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், செய்தி இல்லை என்பதே அங்குள்ள செய்தியென அமெரிக்க தொலைக்காட்சியொன்று குறிப்பிட்டிருந்தது.

இளவரசி டயனாவின் அந்தரங்க வாழ்வில் ஊடகங்களின் தலையீடு இருந்தமையாலேயே அவர் உயிர் துறக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதேபோன்றதொரு நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்தக்குட்டி இளவரசனும் தனது வாழ்வை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டள்ளான்.

எதுவாயினும் பிரிட்டனின் மூன்றாவது அரச வாரிசின் பிறப்பு, சர்வதேசத்தினால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைக்கு, ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இனி கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ் என அறியப்படுமென்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அரச குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாக, வரலாற்றில் புகழ்பெற்ற மன்னர்களின் பெயர்களே வைக்கப்படுவது வழக்கம். அதன்படி புகழ்பெற்ற ஜோர்ஜ் மன்னரின் பெயரை எலிசபெத் மகாராணி தெரிவு செய்திருந்தார்.

இதேவளை, இளவரசர் ஜோர்ஜ் பிறந்த தினத்தன்று பிரிட்டனில் பிறந்த ஏனைய குழந்தைகளுக்கும் அதிர்ஷ்டம் காத்திருந்தது. அரச வம்சத்தின் முத்திரை பொறித்த வெள்ளி நாணயமொன்று அனைத்து சிசுக்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

அதேசமயம், கேட்டினை பிரசவ விடுதியில் சேர்த்த செய்தியை முதலில் வெளியிட்டவர் இந்திய வம்சாவழி புகைப்படவியலாளர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

24 வயதான புகைப்படவியலாளர் ஜேசல் புருஷோத்தம் தனது சக ஊழியருடன் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வெளியில் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கேட்டினை ஆஸ்பத்திரியின் பின்பக்க வாசல் வழியாக பிரசவ விடுதிக்க கொண்டு சென்றனர். இதனை கவனித்த ஜேசல் உடனடியாக அங்கு சென்று உறுதிசெய்த பின்னர் இச்செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியை வெளியிட்டது தான் எனது வாழ்நாளில் மிகப்பெரிய முதன்மையான செய்தியாக இருக்குமென நினைக்கின்றேன் என ஜேசல் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கேட்டுக்கு பிரசவம் பார்த்த மருத்துவகுழுவில் மும்பையைச் சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றிருந்தார். மும்பையில் பிறந்து, வளர்ந்து, படித்த மருத்துவர் சுனித் கொடாம்மே இந்த மருத்துவ குழுவில் இடம்பெறிருந்தாரென பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மகாராணி எலிசபெத் முடிசூடிக்கொண்ட 60ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தால், இழந்திருந்த சோபையை இளவரசர் ஜோர்ஜ் பிறப்பு மூலம் அரச குடும்பம் மீண்டும் பெற்றுவிட்டது.

கேட் தனது குழந்தையை அரச வாரிசுபோல வளர்க்காமல் சாதாரண குழந்தை போலவே வளர்க்க விரும்புவதாக கூறியிருந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில் அரச குடும்பத்தின் பாரம்பரிய விதிமுறைகள் சிலவற்றையும் தகர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, கேட் தனது குழந்தைக்கு அரச குடும்பத்து ஆடைகளை உடுத்தப்போவதில்லையென உறுதியாக தெரிவித்துள்ளதுடன் அதனையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

பழங்கால பாரம்பரியத்தினை பின்பற்றி வரும் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையிலேயே கேட் தனது ஆண்வாரிசினை நிச்சயம் வளர்க்க வேண்டும்.

பொருளாதர வீழ்ச்சி, நிதி நெருக்கடி, மோசமான காலநிலை மாற்றம் என பலவற்றுக்கு முகம் கொடுத்து வரும் உலகத்தவர்களுக்கு மத்தியிலே, இளவரசர் ஜோர்ஜ் அரச சௌபாக்கியங்களுடன் வளர்வது என்பது இலகுவாக அமையாது. அவரும் சாதாரண நடைமுறை வாழ்க்கையை பின்பற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

எனவேதான், புதிய இளவரசர் பிறந்திருக்கும் உலகமானது, அவரின் தந்தை வில்லியம்ஸ் பிறந்தபோது இருந்ததைப்போன்று இருக்காதெனவும் பாரிய வேறுபாடுகளை கொண்டதாகவே அமைந்திருக்குமெனவும் பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

1982இல் இளவரசர் வில்லியம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதென அறிவிக்க 7 நாட்களும், 1948இல் இளவரசர் சார்ள்ஸ் என்ற பெயர், புதிதாக பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க ஒரு மாதம் எடுத்திருந்தது. ஆனால், தனது பூட்டப் பிள்ளைக்கு இளவரசர் ஜோர்ஜ் என பெயரிட மகாராணி எலிசபெத் வெறும் 30 நிமிடங்களே செலவிட்டிருந் தார்.

இதேவேளை, எனது குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒரு அழகிய குழந்தையும் புதிதாக இணைந்துள்ளது. இளவரசர் ஜோர்ஜிற்கு வேடிக்கை காட்டி மகிழ்விப்பதே எனது கடமைகளிலொன்றாகுமென இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

எதுவாயினும், இளவரசர் ஜோர்ஜ் செலவழிக்கவுள்ள எந்தவொரு வாழ்க்கையும், எப்பொழுதும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கப்போகின்றது என்பதில் ஐயமில்லை.

எகிப்து; மீண்டுமொரு புரட்சியை நோக்கி...

சா.சுமித்திரை


எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து இராணுவ புரட்சிமூலம் ஜனாதிபதி முர்சி பதவிக் கவிழ்க்கப்பட்ட பின்னரும்கூட, வன்முறை ஆர்ப்பாட்டங்கள் குறைந்தபாடில்லை. இடைக்கால ஜனாதிபதி பதவியேற்றும், எகிப்திய அரசியலில் தலைமையில்லாத போக்கே கடந்த ஒரு மாதமாக காணப்படுகின்றது.

எகிப்திய ஜனாதிபதியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் கடந்த நிலையில், அந்த நாட்டின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உருவெடுத்துள்ளது. 

எகிப்திய இராணுவ தளபதி, நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அதேவேளை, பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முகமட் முர்சியின் ஆதரவாளர்களும், வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்புவிடுத்திருந்தனர். 

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக, தலைநகர் கெய்ரோ உட்பட நாட்டின் பல நகரங்களும் கொந்தளித்துப் போயுள்ளன. நாட்டின் ஸ்திரத்தன்மை, சமாதானம் என்பன இல்லாது போய் கலவரங்களும் வன்முறை ஆர்ப்பாட்டங்களும் அங்கு இடம்பெறுகின்றன. இந்நிலையில், எதிரான இந்த இரு தரப்பினர்களினதும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்பானது எரியும் நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றி பற்ற வைப்பதைப் போலாகும்.

எகிப்தில், இரு தரப்பினதும், இருவேறுபட்ட நோக்கங்களுக்கான அழைப் பானது, தொடரும் பதற்றமான நிலைமையினை மேலும் உக்கிரமடையச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். தீவிரவாதம் மற்றும் வன்முறைகளுக்கெதிராக ஒன்றிணையுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பதாஹ் அல் சிசி கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்தி ருந்தார்.சிசியின் இந்த அழைப்புக்கு பின்னரும், முர்சியின் ஆதரவாளர்க ளால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இராணுவம், தேசிய எச்சரிக்கையை பிரகடனப்படுத்தியிருந்தது. இப்பிரகடனத்தை தொடர்ந்து தலைநகர் கெய்ரோவின் வான் பரப்பில் இராணுவ ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டு வருகின்றன. பாதுகாப்பும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கிஸா நகரில் இடம்பெற்ற முர்சியின் ஆதரவுப் பேரணிக்கு மேலால், கோழிக்குஞ்சுகளைக் கண்ட பருந்து போல, இராணுவ ஹெலி கொப்டர்கள் சுற்றிச் சுற்றி வட்டமிடுவதை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

நஸா நகரிலும் ஆயிரக்கணக்கான முர்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியை மீண்டும் ஜனாதிபதியாக அமர்த்துமாறு கோரியிருந்தனர். அதேசமயம், அந்நகரிலுள்ள ரபா அல்அதவிய பள்ளிவாசலுக்கு முன்னால் முர்சியின் ஆதரவாளர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ளனர்.

இதேபோல, பல நகரங்களிலும் பள்ளிவாசல்கள், சதுக்கங்களுக்கு முன்னால் மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல ஆங்காங்கே ஆர்ப் பாட்ட பேரணிகளும், வன்முறை மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

“தீவிரவாதம் மற்றும் வன்முறை மோதல்களை முடிவுக்கு கொண்டுவர, எனக்கு அனுமதியளிக்கும் வகையில், கௌரவமுள்ள அனைத்து எகிப்து பிரஜைகளும் வெள்ளிக்கிழமை வீதியில் இறங்கி ஆதரவு வழங்க வேண்டும்’ என சிசி அழைப்பு விடுத்திருந்தார். இந்த உரை எகிப்தின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த உரையில் கௌரவமுள்ள எகிப்தியர்கள் எனக் குறிப்பிட்டிருந்தமையா னது, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்களை அவமானப்படுத் தும் ஒன்றாகவே பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்களை தீவிரவாதிகள் என இராணுவ தரப்பினரும், முர்சியின் எதிர்ப்பாளர்களும் கூறி வருவது அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம் மற்றும் புரட்சியைப் பாதுகாக்க அனைத்து மக்களும் வீதியில் இறங்கி ஒன்றிணைய வேண்டுமென இடைக்கால ஜனாதிபதி அட்லிமன்சூரும் அறைகூவல் விடுத்துள்ளதுடன் சிசியின் உரையினையும் ஏற்றுள்ளார்.

இந்த உரையைத் தொடர்ந்தே, எகிப்திய இராணுவம் நாட்டில், தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இதேவேளை, இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக மில்லியன் கணக்கான மக்கள் பேரணி நடத்துவதை உங்கள் எச்சரிக்கையால் தடுத்துவிட முடியாது. உங்கள் அலுவலகத்திலிரு ந்து சதி வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றீர்கள். ஆனால், நாட்டு மக்கள் எம்முடன் கை கோர்த்துள்ளனர் என, இராணுவ தளபதியின் அழைப்புக்கு பதிலடியாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இஸாம் அல் எரியான் நேரடியாக பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் எகிப்திற்கு கூடுதலாக நான்கு எப்16 ரக போர் விமானங்கள் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கலவரமும், அமைதியின்மையும் குடிகொண்டுள்ள நிலையில் எகிப்திற்கு போர் விமானங்களை வழங்குவது தகுந்த செயலாக அமையாதென பென்டகன் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எகிப்துடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உறவு இதன் மூலம் பாதிப்படையாதென்றும், பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது தோல்வியை தவிர்க்கும் வகையிலேயே சிசி செயற்பட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாகவே தனது கடைசி முயற்சியை கையாண்டுள்ளார். அது சிவில் யுத்தத்திற்கே வழி வகுத்துள்ளதென சுதந்திரத்திற்கும், நீதிக்குமான கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முர்சி தலைமையிலான அரசில் அமைச்சராக பதவி வகித்தவருமான அம்ர் டாரக் வேல்ட் ஸட்ரீட் தெரிவித்துள்ளார்.

அதேபோல, சிசியின் அழைப்பை நூர் கட்சி மற்றும் ஏப்ரல் 6 புரட்சியின் இளைஞர் முன்னணியும் நிராகரித்துள்ளன. அணி திரள்வுக்கு எதிராக அணி திரள்வு சிவில் யுத்தத்திற்கே வழி வகுக்குமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதுவாயினும், இவ்விரு தரப்புகளினதும் அழைப்பு மேலும் வன்முறையை தூண்டிவிட்டுள்ளன. எகிப்தின் இந்நிலைமை தொடர்பில் முஸ்லிம் நாடுகள் தலைமையிலான சர்வதேசத்தின் அவதானம் குறைவாக காணப்படுகின்றது. எனவேதான், முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையிலே அதனை நிறுத்திவிட்டு, இராணுவத்தின் ஆர்ப்பாட்டங்களை ஒளிபரப்ப பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வந்திருந்தன.

எகிப்தில் மோசமான அரசியல் நிலைமைக்கு பிரதான காரணமாக பொருளாதார வீழ்ச்சியே காணப்படுகின்றது. ஆகையால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேசம் கூடிய கவனம் செலுத்தாவிடின், அந்நாட்டின் நிலைமை அபாயகரமானதொன்றாக மாறிவிடும்.

சனி, 6 ஜூலை, 2013

முர்சியின் ஆட்சிக் கவிழ்ப்பும் எகிப்தின் எதிர்கால ஆபத்தும்



h.சுமித்திரை


வடஆபிரிக்காவிலுள்ள குடியரசு நாடுகளிலொன்றான எகிப்தில் மீண்டும் ஒரு இராணுவ புரட்சி முலமான ஆட்சிக்கவிழ்ப்பும்,இடைக்கால தலைவரின் பதவியேற்பும் கடந்த ஒரு வார காலத்திற்குள் இடம் பெற்று முடிந்துள்ளது.

முர்சியின் ஒரு வருட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முஸ்லீம் சகோரத்துவ அதிகாரமும் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து,அக்கட்சியின்; எதிரணியினரின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. ஆனால்,அக்கொண்டாட்டங்கள் குறுகிய காலத்தினைக் கொண்டதாகவே அமைந்திருக்க போகின்றன. அத்துடன் பரந்த மத்திய கிழக்கில் எகிப்திற்கு ஒரு ஆபத்தான தருணமாகவே பார்க்கப்படுகின்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.






கடந்த 2011 இல், ஜனாதிபதியாகவிருந்த கொஸ்னி முபாரக்கிற்கெதிராக பொதுமக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முபாரக்கிற்கெதிரான மக்கள் புரட்சிக்கு தலைமை வகித்தவரே இந்த முர்சி தான்.  அதனைத் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில், புதிய ஜனாதிபதியாக முகமது முர்சி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான முர்சியும் அந்நாட்டு இராணுவம் பதவியிலிருந்து வெளியேற்றியுள்ளதுடன், நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார்.

முர்சி; ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அரசியல் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனக்கு அளவில்லாத அதிகாரத்தினை வைத்திருக்கும் முறையினைக் கொண்டு வந்தார் .அவரின் இந்த தான்தோன்றித்தனமான போக்கு பொதுமக்களிடையே பலத்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது.

இந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாக மக்கள் தொடர்ச்சியாக தமது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் முகமது முர்சி பதவியேற்று ஒராண்டு நிறைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன்போது,  முர்சியின் முஸ்லிம் சகோரத்துவக் கட்சியினரும்,எதிர்க்கட்சியினரும் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். இக்கலவரத்தில் அமெரிக்க பிரஜையான மாணவனொருவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை தலைநகர் கெய்ரோ,அலெக்சாண்டியா உள்ளிட்ட நகரங்களில் அணிதிரண்ட இலட்சக்கணக்கானோர் முர்சி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். ஒரு தொற்றுநோய் போல தொடர்ந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது முஸ்லிம் சகோரத்துவ கட்சி அலுவலகங்கள் மீது தீ வைக்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொண்டனர். இதில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

அதேசமயம் மக்கள் புரட்சியின் ஒரு  உச்சக்கட்டமாக  ஆர்ப்;பாட்டங்களை பதிவு செய்யவென சென்ற டச்சு நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரொருவர் மிகமோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார். கூட்டத்திற்கு நடுவிலே ஐந்து பேர் கொண்ட குழுவொன்றினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட அப்பெண் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமுகத்திற்கு பொறுப்பு மிக்க சேவையாற்றுபவரே ஊடகவியாலாளர். சமுகத்தின் தேவை,உரிமைகளை பாதுகாக்கவும் நீதியை பெற்றுக் கொடுக்கவுமென செய்தி சேகரிக்க சென்ற அதுவும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் மீதான காட்டுமிராண்டித்தனமான இச்செயற்பாடு அந்நாட்டின் மக்கள் புரட்சியையே அர்த்தமற்றதாக்கியுள்ளது.

ஒரு நாட்டின் ஆட்சிக்கெதிராக மக்கள் புரட்சி ஏற்படுமாயின், அந்தளவிற்கு பொதுமக்கள் பல்வேறு ரீதியில் அடக்கி ஆளப்படுகின்றனர் என்பதேயாகும்.ஆனால் அப்பெண் மீதான இழிவான செயற்பாடு உண்மையிலே, அந்நாட்டு மக்கள் தமது உரிமைகளுக்காவே போராடுகின்றனரா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்ட அந்தவொரு இரவில் மட்டும் மொத்தம் 41 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்க கூடிய விடயமாகும்.இதுபோன்ற வன்முறைச்சம்பவங்கள் வலுவடைந்ததைத்தொடர்ந்து முர்சியை பதவி விலகுமாறு அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கையை விடுத்தது.

ஆயினும், இராணுவம் விடுத்த இறுதி எச்சரிக்கையை முர்சி நிராகரித்தால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்திருந்தது. அத்துடன்,  திங்கட்கிழமை முர்சிக்கு 48 மணிநேர கெடு எதிர்கட்சியினரால் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், ஆர்ப்;பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது கமெல் ஆமர்,சுற்றுலாத்துறை அமைச்சர் ஸிஹாம் சாசூ, நீதி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஹாதம் பகாடொ, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆதப் ஹில்மி உட்பட 5 முக்கிய பதவி அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முர்சியின் ஆட்சி ஆட்டங்காண ஆரம்பித்தது. இந்நிலையில்,முர்சியை பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையில் எவ்விதமான உள்நோக்கமோ பேரமோ கிடையாது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் கடமை இராணுவத்திற்கு உள்ளது. எனவேதான் இந்த மக்கள் புரட்சியில் இராணுவ தலையீடு காணப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் அப்துல் பதேஎல் சி;ஸ்சி குறிப்பிட்டிருந்தார்.

இதனைத தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் முர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மோதல்களில் 50 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.முஸ்லீம் சகோதரத்துவக்கட்சியை சேர்ந்த 300பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கபப்ட்டுள்ளது.

இதேவேளை முர்சி ஆதரவாளர்களுக்கும்இ எதிரணியினருக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையால் அங்கு மேலும் பதற்றமான அச்ச நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். வுpயாழக்கிழமை தலைநகர் கெய்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அத்லி மன்சூர் இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். எதிர்வரும் தேர்தல் வரை அத்லியே ஜனாதிபதியாக செயற்படுவாரென இராணுவம் அறிவித்துள்ளது.





தற்போது, எகிப்திற்கு நிச்சயமாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் கிடையாது.உள்ளுர் மதசார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுமில்லை. எனவே, வடகொரியா,  ஈரான், போன்ற தேசமாக பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.


அதேநேரம் வெள்ளிக்கிழமை முர்சியின் பதவி கவழ்க்கப்பட்டமைக்கு எதிராக அவருடைய ஆதரவாளர்களால் திட்டமிட்ட நிலையில் அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.முர்சிக்கு இன்னமும் கணியமான ஆதரவு இருபடபதாக அவரது கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ள போதிலும்,அவருடைய எதிரணியினரும் வீதிகளில் இறங்கி போராட தயாராகி விட்டனர்

இஸ்லாமிய அரசியலின் பிறப்பிடமான எகிப்தில், எப்போதும் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களை எதிர்க்கும் வகையில் வன்முறைகளை தூண்டி விடவோ அல்லது அத்தகையோருக்கு சட்டபூர்வமாகவே அதிகாரத்தினை இல்லாதொழிக்கவோ சில இஸ்லாமிய வட்டாரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

எகிப்தின் தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் பாரியதொரு அபாயத்தினை நிலைநிறுத்தப் போகின்றதென முஸ்லீம் சகோதரத்துவ  அமைப்பின் பிரிட்டன் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எகிப்தியர்கள்  அனைத்தும் விடயங்களையும் தங்கள் கைகளாலே எடுத்துக் கொள்கின்றமை மிக பெரிய அச்சம தரக் கூடிய விடயமாகும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கானோர் வாக்களித்து முர்சியை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். நாம் அதனையொரு ஜனநாயகம் என நினைத்தோம். ஆனால் நாம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்;. இக்கருத்தினை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஸ்ராபோர் சர்வதேச புலனாய்வு குழு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.



அரபு வசந்தத்தின் இன்னொரு பகுதியாக எகிப்தில் அரங்கேறியுள்ள இந்நிகழ்வுகள் சர்வதேச அரசியல் பெரியளவில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.ஜனநாயக அமைப்பில் சர்ச்சைகளை தீர்க்க இந்த மக்கள்  புரட்சியும் ஆட்சி கவிழ்ப்பும் ஒரு வழியாகவுள்ள போதிலும் எகிப்திய இராணுவ தலையீட்டிற்கு தாம் ஆதரவு வழங்க முடியாததென பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எகிப்திய இராணுவத்தின் நடவடிக்கை மிகவும் ஆழ்ந்த கவலையளிக்கும் விடயமாகும். அதேசமயம் எகிப்தியர்கள் ஜனநாயக ரீதியான அரசாங்கத்தினை அமைக்க அழைப்பு விட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், எகிப்திய ஜனாதிபதி முகமது முர்சி இராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எகிப்தில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே,பொது வாக்கெடுப்பு நடத்தி மீண்டும் ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போலியானதொன்று என்பதை எகிப்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்லாமிய அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சிரிய ஜனாதிபதி பஸார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

பஸாருக்கெதிரான சிவில் யுத்தம் உள்நாட்டிலேயே மிகவும் கடுமையாக நடைபெற்று வரும் நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையானது, அரபுலகில் பஸாருக்கான ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மு~hரப்பிற்கு பின்னரான கடந்த ஒரு வருட காலப்பகுதியிலும் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை என்பதை கடந்த வாரம் சம்பவங்கள் நிருபித்துள்ளன.. ஆட்சி பொறுப்பேற்ற முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர் நாட்டில் பண்பாட்டு புரட்சியை அமைதியாக ஏற்படுத்துவதாக கூறினர். போதைவஸ்து பாவனையிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினர்.

பூச்சிய நிலையிலிருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரச செலவீனங்களை குறைத்து மாற்றுத்திட்டத்தினை செயற்படுத்தினர். இதுபோன்ற திட்டங்கள் முன்னேடுக்கப்படுவ்தாக சர்வதேச ஊடகங்களுக்கு முர்சி தலைமையிலான அரசு காண்பித்திருந்தது. ஆயினும் நாட்டின் பொருளாதாரத்தினை சீர்படுத்துவதிலுத் பாதுகாப்பு விடயத்திலும் முர்சி சரியாக செயற்படவில்லையெனக் கூறியே அங்கு போராட்டம் வெடித்தது.

தற்போது, எகிப்திற்கு நிச்சயமாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் கிடையாது.உள்ளுர் மதசார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுமில்லை. எனவேஇ வடகொரியா, ஈரான், போன்ற தேசமாக பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

 


ஏகிப்தியர்கள் அரசியலை தம் கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுடைய தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்வார்களா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.