திங்கள், 29 ஜூலை, 2013

எகிப்து; மீண்டுமொரு புரட்சியை நோக்கி...

சா.சுமித்திரை


எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து இராணுவ புரட்சிமூலம் ஜனாதிபதி முர்சி பதவிக் கவிழ்க்கப்பட்ட பின்னரும்கூட, வன்முறை ஆர்ப்பாட்டங்கள் குறைந்தபாடில்லை. இடைக்கால ஜனாதிபதி பதவியேற்றும், எகிப்திய அரசியலில் தலைமையில்லாத போக்கே கடந்த ஒரு மாதமாக காணப்படுகின்றது.

எகிப்திய ஜனாதிபதியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் கடந்த நிலையில், அந்த நாட்டின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உருவெடுத்துள்ளது. 

எகிப்திய இராணுவ தளபதி, நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அதேவேளை, பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முகமட் முர்சியின் ஆதரவாளர்களும், வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்புவிடுத்திருந்தனர். 

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக, தலைநகர் கெய்ரோ உட்பட நாட்டின் பல நகரங்களும் கொந்தளித்துப் போயுள்ளன. நாட்டின் ஸ்திரத்தன்மை, சமாதானம் என்பன இல்லாது போய் கலவரங்களும் வன்முறை ஆர்ப்பாட்டங்களும் அங்கு இடம்பெறுகின்றன. இந்நிலையில், எதிரான இந்த இரு தரப்பினர்களினதும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்பானது எரியும் நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றி பற்ற வைப்பதைப் போலாகும்.

எகிப்தில், இரு தரப்பினதும், இருவேறுபட்ட நோக்கங்களுக்கான அழைப் பானது, தொடரும் பதற்றமான நிலைமையினை மேலும் உக்கிரமடையச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். தீவிரவாதம் மற்றும் வன்முறைகளுக்கெதிராக ஒன்றிணையுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பதாஹ் அல் சிசி கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்தி ருந்தார்.சிசியின் இந்த அழைப்புக்கு பின்னரும், முர்சியின் ஆதரவாளர்க ளால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இராணுவம், தேசிய எச்சரிக்கையை பிரகடனப்படுத்தியிருந்தது. இப்பிரகடனத்தை தொடர்ந்து தலைநகர் கெய்ரோவின் வான் பரப்பில் இராணுவ ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டு வருகின்றன. பாதுகாப்பும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கிஸா நகரில் இடம்பெற்ற முர்சியின் ஆதரவுப் பேரணிக்கு மேலால், கோழிக்குஞ்சுகளைக் கண்ட பருந்து போல, இராணுவ ஹெலி கொப்டர்கள் சுற்றிச் சுற்றி வட்டமிடுவதை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

நஸா நகரிலும் ஆயிரக்கணக்கான முர்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியை மீண்டும் ஜனாதிபதியாக அமர்த்துமாறு கோரியிருந்தனர். அதேசமயம், அந்நகரிலுள்ள ரபா அல்அதவிய பள்ளிவாசலுக்கு முன்னால் முர்சியின் ஆதரவாளர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ளனர்.

இதேபோல, பல நகரங்களிலும் பள்ளிவாசல்கள், சதுக்கங்களுக்கு முன்னால் மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல ஆங்காங்கே ஆர்ப் பாட்ட பேரணிகளும், வன்முறை மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

“தீவிரவாதம் மற்றும் வன்முறை மோதல்களை முடிவுக்கு கொண்டுவர, எனக்கு அனுமதியளிக்கும் வகையில், கௌரவமுள்ள அனைத்து எகிப்து பிரஜைகளும் வெள்ளிக்கிழமை வீதியில் இறங்கி ஆதரவு வழங்க வேண்டும்’ என சிசி அழைப்பு விடுத்திருந்தார். இந்த உரை எகிப்தின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த உரையில் கௌரவமுள்ள எகிப்தியர்கள் எனக் குறிப்பிட்டிருந்தமையா னது, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்களை அவமானப்படுத் தும் ஒன்றாகவே பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்களை தீவிரவாதிகள் என இராணுவ தரப்பினரும், முர்சியின் எதிர்ப்பாளர்களும் கூறி வருவது அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம் மற்றும் புரட்சியைப் பாதுகாக்க அனைத்து மக்களும் வீதியில் இறங்கி ஒன்றிணைய வேண்டுமென இடைக்கால ஜனாதிபதி அட்லிமன்சூரும் அறைகூவல் விடுத்துள்ளதுடன் சிசியின் உரையினையும் ஏற்றுள்ளார்.

இந்த உரையைத் தொடர்ந்தே, எகிப்திய இராணுவம் நாட்டில், தேசிய எச்சரிக்கை காலத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இதேவேளை, இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக மில்லியன் கணக்கான மக்கள் பேரணி நடத்துவதை உங்கள் எச்சரிக்கையால் தடுத்துவிட முடியாது. உங்கள் அலுவலகத்திலிரு ந்து சதி வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றீர்கள். ஆனால், நாட்டு மக்கள் எம்முடன் கை கோர்த்துள்ளனர் என, இராணுவ தளபதியின் அழைப்புக்கு பதிலடியாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இஸாம் அல் எரியான் நேரடியாக பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் எகிப்திற்கு கூடுதலாக நான்கு எப்16 ரக போர் விமானங்கள் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கலவரமும், அமைதியின்மையும் குடிகொண்டுள்ள நிலையில் எகிப்திற்கு போர் விமானங்களை வழங்குவது தகுந்த செயலாக அமையாதென பென்டகன் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எகிப்துடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உறவு இதன் மூலம் பாதிப்படையாதென்றும், பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது தோல்வியை தவிர்க்கும் வகையிலேயே சிசி செயற்பட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாகவே தனது கடைசி முயற்சியை கையாண்டுள்ளார். அது சிவில் யுத்தத்திற்கே வழி வகுத்துள்ளதென சுதந்திரத்திற்கும், நீதிக்குமான கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முர்சி தலைமையிலான அரசில் அமைச்சராக பதவி வகித்தவருமான அம்ர் டாரக் வேல்ட் ஸட்ரீட் தெரிவித்துள்ளார்.

அதேபோல, சிசியின் அழைப்பை நூர் கட்சி மற்றும் ஏப்ரல் 6 புரட்சியின் இளைஞர் முன்னணியும் நிராகரித்துள்ளன. அணி திரள்வுக்கு எதிராக அணி திரள்வு சிவில் யுத்தத்திற்கே வழி வகுக்குமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதுவாயினும், இவ்விரு தரப்புகளினதும் அழைப்பு மேலும் வன்முறையை தூண்டிவிட்டுள்ளன. எகிப்தின் இந்நிலைமை தொடர்பில் முஸ்லிம் நாடுகள் தலைமையிலான சர்வதேசத்தின் அவதானம் குறைவாக காணப்படுகின்றது. எனவேதான், முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையிலே அதனை நிறுத்திவிட்டு, இராணுவத்தின் ஆர்ப்பாட்டங்களை ஒளிபரப்ப பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வந்திருந்தன.

எகிப்தில் மோசமான அரசியல் நிலைமைக்கு பிரதான காரணமாக பொருளாதார வீழ்ச்சியே காணப்படுகின்றது. ஆகையால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேசம் கூடிய கவனம் செலுத்தாவிடின், அந்நாட்டின் நிலைமை அபாயகரமானதொன்றாக மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக