புதன், 31 ஜூலை, 2013

அரச வாரிசான ஆண் குழந்தை

சா. சுமித்திரை

 முழு  உலகின் கவனமும் பிரிட்டனின் பக்கம் திரும்பியிருக்க  உலகின் முன்னணி ஊடகங்கள் எல்லாம் லண்டனில் உள்ள செயின்ட்  மேரிஸ் மருத்துவமனை முன்பாக இரவு பகலாக காத்துக்கிடக்க பிரிட்டன் இளவரசர் வில்லியமின் காதல் மனைவியான கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிரிட்டனின் அரச வாரிசான ஆண் குழந்தையை பிரிட்டன் நேரப்படி திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடமளவில் பெற்றெடுத்துள்ளார். குழந்தை மூன்றரை கிலோ நிறையுடன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக செயின் மேரிஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

 அழகு , சிருஷ்டித்தல் , அமைதி , நாணம் ,தலைமைத்துவம் என பெண்ணினத்தின் பெருமைக்கெல்லாம் தாய்மையடைதல் தலை சிறந்ததாகும். ஒரு பெண் தாய்மையடைதல் மூலம் முழுமையடைகின்றாள் என்பது நம் சமூகத்தினது மட்டுமன்றி விஞ்ஞான ரீதியிலும் உண்மையானதொன்றாகும்.

சாதாரண குடும்பத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு மருமகளாக வந்த கேட் மிடில்டன் அரண்மனையின் பல விதிமுறைகளை தகர்த்தவராவார். கேட், பிரிட்டன் இளவரசர் வில்லியமை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னரும் எந்தவொரு கௌரவ பட்டத்தினையும் பெறாமல் சாதாரணதொரு பெண்ணாகவே இன்னும் இருக்கின்றார். இந்நிலையில் பெண்ணினத்துக்குரிய  தாய்மை என்ற முதன்மையான பண்பிற்கு கேட் மட்டுமென்ன விதிவிலக்கா? இப்பொழுது அரச குடும்பத்தின் வாரிசினை பிரசவித்துள்ளார் கேட்.


கேட் மிடில்டன் பிரசவத்திற்காக லண்டனிலுள்ள சென் . மேரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் ஆரவாரங்களுமென ஒருபுறமும் கேட்டுக்கு பிறக்கப் போகும் குழந்தை தொடர்பான சூதாட்டங்கள் மறுபுறமும் எனப் பிரிட்டன் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு, பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக  பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி , வானொலி நிருபர்கள் மருத்துவமனை வளாகத்தில் செய்தி சேகரிக்கவென இரவு பகலாக காத்துக்கிடந்தனர். அத்துடன் பிரிட்டனின் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வில்லியம்ஸின் குழந்தை பற்றி ஊகங்கள் அடிப்படையிலான போட்டிகளை நடத்தியிருந்தன.

ஆண் வாரிசா ? பெண் வாரிசா ?  எந்த நாளில் எந்த நேரத்தில் பிறக்கும் ? குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்னவாக இருக்கும்? குழந்தையின் எதிர்காலம் சாதாரணமாகவா அல்லது அரச ஆட்சியாகவா இருக்கும் என்ற கேள்விகளின் அடிப்படையில் விறுவிறுப்பான போட்டிகளை ஒளிபரப்பி வந்தன.  மறுபுறம் பிறக்கப் போவது ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா என்ற சூதாட்டங்களும் பல கோடி ரூபாவுக்கு நடைபெற்றன.

இதேவேளை, குழந்தை பிறப்பு பற்றிய தகவல் முதலில் மருத்துவர் மூலம் ஒரு சீட்டில் எழுதப்பட்டு அரண்மனைக்கு அனுப்பப்படும். அங்கு அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்குப் பின் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகையில் ஒட்டப்படும். இதுவே பிரிட்டன் அரச பரம்பரையின் காலம் காலமாக செய்யும் நடைமுறையாகும்
.
 இந்த முறையான நிகழ்வுகளுக்கு முன்னரே செய்திகளை ஒளிபரப்பும் ஆர்வத்தில்  கடித்ததை தெளிவாகப் பெரிதாக்கிக் காட்டும் கமெராக்களுடன் நிருபர்கள் தயாராக  இருந்தனர். அதேசமயம் சீனா, ஜப்பான், கொரியா , அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிருபர்களும் மருத்துவமனை முன்பாக முகாமிட்டிருந்தனர்.
கடந்த 30 வருடங்களுக்கு முன் வில்லியமும் அவருடைய சகோதரர் ஹரியும் பிறந்த போது கூட இத்தனை எதிர்பார்ப்புகள், ஆரவாரங்கள் இருக்கவில்லையென பிரிட்டிஷ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 கேட், கர்ப்பம் தரித்ததிலிருந்து சுவையான சுவாரசியமான பல சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அந்நிலையில் ஒரு துக்ககரமான சம்பவமும்  இடம்பெற்று முடிந்திருந்தமை நிச்சயமாக இந்த இடத்தில் நினைவு கூரப்பட வேண்டியதொன்றாகும்.
கேட் கர்ப்பமுற்ற நிலையில் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை கவனித்து வந்த இந்திய நாட்டைச் சேர்ந்த மருத்துவ தாதி ஜெசிந்தா தற்கொலை  செய்து கொண்டமையாகும். இச் சோக சம்பவத்தினை கடந்து கேட் தொடர்பான சுவாரசியமான சம்பவங்கள் அவ்வப்பொழுது ஊடகங்களில் இடம்பிடிக்கத் தவறவில்லை.
கேட் 7 மாத கர்ப்பிணியாக விருக்கும்  போது வீட்டில் தயாரிக்கும் இந்திய உணவுகளையே  உண்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தனது வாரிசுக்கென ஒரு முன்பள்ளியையொத்த  அறையொன்றினையும் ரோயல் வடிவமைப்பாளரைக் கொண்டு வடிவமைத்திருந்தார்.

இதேவேளை, பிறக்கப்போவது ஆணா, பெண்ணா, அதற்கு அரச குடும்பத்தினர் என்ன பெயர் வைப்பார்கள் என்று உலக மக்கள் தீவிரமாக யோசித்து சில பெயர்களை பரிந்துரை செய்திருந்தனர். ஆண் குழந்தையாயின் ஹரி, வில்லியம், சார்ல்ஸ் , ஜேம்ஸ் , ஜோர்ஜ் ஆகிய பெயர்களில் ஒன்றும் பெண் எனில் சோபி, கேட், எலிசபெத் ,சாரா , விக்டோரியா ஆகிய பெயர்களிலொன்றும் வைக்குமாறும் தெரிவு செய்து அனுப்பியும் வைத்துள்ளனர்.

இதேவேளை, இளவரசர் வில்லியம் தனது குழந்தைக்கு தன் பெயரை வைக்க  வேண்டுமென பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார். டேவிட் என்ற பெயர் அழகாகவுள்ளது.  மேலும் அரச குடும்பத்து குழந்தைக்கு தனது பெயர் வைக்கப்பட்டால் தான் பெரு மகிழ்ச்சியடைவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கேட்டுக்கும் கடந்த 13 ஆம் திகதியே பிரசவ திகதியென கூறப்பட்ட போதிலும் ஒரு வாரம் கடந்த நிலையில் இயற்கையான முறையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

தனது வாரிசு இந்தப் பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை ஒளிப்பதிவு செய்ய இளைவரசர் வில்லியம் திட்டமிட்டிருந்தார். வில்லியமின் இந்த ஆசைக்கு கேட் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பிரசவ ஒளி நாடா, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அக்காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகி விடக்கூடாதென கேட் அச்சமடைந்திருந்தார். கேட்டின் முதலாவது குழந்தை பிறப்பினை முன்னிட்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

கேட் மிடில்டனின் பிரசவ தினத்தன்று பிரிட்டனில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அரச வம்சத்தின் முத்திரை பொதித்த வெள்ளி நாணயமொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி நாணயம் நீல நிறப் பையில் ஆண் குழந்தைக்கும் ஊதா நிறப் பையில் பெண் குழந்தைக்கும் வழங்கப்பட்டுள்ளது. எதுவாயினும் பல்வேறு கொணடாட்டங்களும் ஆரவாரங்களும் சூதாட்டங்களுமென காணப்பட்ட பிரிட்டிஷ் அரச வாரிசின் பிறப்பையடுத்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளது.
கேட் , தனது குழந்தையை அரச வாரிசாக வளர்க்காமல் சாதாரண குழந்தையைப் போலவே வளர்க்க விரும்புகின்றார். அதை வெளிப்படுத்தும் விதம் அவர்  அரச குடும்பத்தின் பாரம்பரிய விதிமுறைகள் சிலவற்றை உடைத்தெறியும் படி தன் குழந்தைக் கென்று ஒரு சில புதிய விதிமுறைகளையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாது கேட் தனது குழந்தைக்கு அரச குடும்பத்து ஆடைகளை  உடுத்தப் போவதில்லையென உறுதியாக தெரிவித்திருந்ததுடன் தனது கணவரோடு சேர்ந்து குழந்தைக்கான ஆடைகளையும் வாங்கி வைத்திருந்தார்.
பழங்கால பாரம்பரியத்தினைப் பின்பற்றி வரும் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கேட் தனது ஆண்வாரிசினை வளர்ப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதுவரை, பிரித்தானிய மன்னர்களுக்கு அல்லது அரசிகளுக்கு ஆண் குழந்தை இல்லாத நிலையிலேயே பெண் குழந்தைகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வழக்கம் இருந்தது. ஆனால், கேம்பிரிட்ஜ் இளவரசனாக அறியப்பட்டுள்ள இந்த ஆண் குழந்தைக்கு பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு  காலப் போக்கில் வர  உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும். அத்துடன் 15 பொது நலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் இக் குழந்தை வகிக்கும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவரது கணவர் எடின்பரோ கோமகனும் அரச ஆண் வாரிசு பிறந்த செய்தி கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அரச குடும்ப வாரிசின் பிறப்பை  நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணமென்றும் அதனை விட இதுவொரு நேசமுடனும் பாசமுடனும்  இருக்கும் ஒரு தம்பதிக்கு கிட்டியுள்ள மிக அற்புதமான தருணமெனவும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  மிச்செஷ் தம்பதியும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன் ஏனைய நாட்டுத் தலைவர்களும் தமது மகிழ்ச்சியான வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, கேட் எந்த நேரத்திலும் குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரலாம் என்பதால் மீண்டும் பரபரப்பு குறையாமல் மருத்துவமனையின் அனைத்து வாயில்களிலும் காத்திருக்கின்றனர் ஊடகவிலயாளர்களுடன் பிரிட்டனியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக