திங்கள், 29 ஜூலை, 2013

இளவரசர் ஜோர்ஜ் அரச சௌபாக்கியத்துடன் வாழ்வாரா?

 சா.சுமித்திரை

 பிரிட்டனின் வரலாற்றில் கடந்த 120 வருடங்களின் பின் முடி சூடுவதற்காக மூவர் காத்திருக்கும் நிலைமை முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட், பிரசவத்திற்குகாக லண்டனிலுள்ள சென்.மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணத்திலிருந்து முழு உலகின் கவனமும் பிரிட்டனின் பக்கம் திரும்பியிருந்தது.

நாட்டின் ஆட்சிக்கவிழ்ப்பு, நிலநடுக்கத்தில் 1000 பேர் பலி! 5 வயது சிறுமி கின்னஸ் சாதனை! என ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு பிரச்சினையும் சம்பவமும் அரங்கேறிக் கொண்டிருக்க, உலகின் முன்னணி ஊடகங்களின் பார்வை முழுவதும் சென்.மேரிஸ் மருத்துவமனை வளாகத்தை நோக்கியே இரவு பகலாக காத்துக்கிடந்தன.

இந்தக் காத்திருப்புகள், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலே கடந்த திங்கட்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4 மணி 24 நிமிடத்தில் பிரிட்டனின் மூன்றாவது முடிக்குரிய அரசவாரிசினை பிரசவித்திருந்தார் கேட்.

இந்த உணர்வுபூர்வமானதொரு தருணத்தினைத் தொடர்ந்து பிரிட்டிஷ் வரலாற்றில் கடந்த 120 வருடங்களின் பின் முடி சூடுவதற்காக மூவர் காத்திருக்கும் நிலைமை முதற் தடவையாக ஏற்பட்டுள்ளது.

கேட் கர்ப்பமடைந்த காலப்பகுதியிலிருந்தே ஆரம்பமான எதிர்பார்ப்புகளும், பரபரப்புகளும் அவர் குழந்தை பிரசவித்த பின்னரும் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை என்றே கூறவேண்டும்.

ஆணா? பெண்ணா? எந்த நாளில், எந்த நேரத்தில் குழந்தை பிறக்கும்? அதன் எதிர்காலம் சாதாரணமானதா? குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்னவாக இருக்கும்? என ஒவ்வொரு விடயத்திலும் பெரும் எதிர்பார்ப்பும் பல்வேறு கேள்விகளும் எழுந்ததுடன் பிறக்கப்போகும் பிள்ளை குறித்து சூதாட்டங்களும் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் ஒவ்வொன்றாக பதில் கிடைத்த பின்னரும் இன்னும் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் குறைந்தபாடில்லை

கேட் தனது வாரிசுக்கு தாய்ப் பாலா? அல்லது புட்டிப்பாலா? வழங்குவார் என்பதிலிருந்து மீண்டும் பரபரப்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவேதான், இந்த அரசக்குழந்தையின் அந்தரங்க விடயங்களைக்கூட சர்வதேச ஊடகச் சுழியோடிகள் விடமாட்டார்களென விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்தவாரம் முழுவதும், பிரிட்டனியர்களும் சர்வதேச ஊடகங்களும் சென்.மேரீஸ் மருத்துவமனையின் வளாகத்திலே காத்திருந்தமையானது ஒரு கேலி கூத்தான விடயமாகும். ஒரு பெண்ணுக்கு தாய்மையோ அல்லது பிரவசமோ பொதுவானதொன்றாகும்.

உலகமயமாக்கப்பட்ட இந்த எதிர்பார்ப்பு நிலைமை செயற்கைத்தனமானது என பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், செய்தி இல்லை என்பதே அங்குள்ள செய்தியென அமெரிக்க தொலைக்காட்சியொன்று குறிப்பிட்டிருந்தது.

இளவரசி டயனாவின் அந்தரங்க வாழ்வில் ஊடகங்களின் தலையீடு இருந்தமையாலேயே அவர் உயிர் துறக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதேபோன்றதொரு நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்தக்குட்டி இளவரசனும் தனது வாழ்வை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டள்ளான்.

எதுவாயினும் பிரிட்டனின் மூன்றாவது அரச வாரிசின் பிறப்பு, சர்வதேசத்தினால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைக்கு, ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இனி கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ் என அறியப்படுமென்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அரச குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாக, வரலாற்றில் புகழ்பெற்ற மன்னர்களின் பெயர்களே வைக்கப்படுவது வழக்கம். அதன்படி புகழ்பெற்ற ஜோர்ஜ் மன்னரின் பெயரை எலிசபெத் மகாராணி தெரிவு செய்திருந்தார்.

இதேவளை, இளவரசர் ஜோர்ஜ் பிறந்த தினத்தன்று பிரிட்டனில் பிறந்த ஏனைய குழந்தைகளுக்கும் அதிர்ஷ்டம் காத்திருந்தது. அரச வம்சத்தின் முத்திரை பொறித்த வெள்ளி நாணயமொன்று அனைத்து சிசுக்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

அதேசமயம், கேட்டினை பிரசவ விடுதியில் சேர்த்த செய்தியை முதலில் வெளியிட்டவர் இந்திய வம்சாவழி புகைப்படவியலாளர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

24 வயதான புகைப்படவியலாளர் ஜேசல் புருஷோத்தம் தனது சக ஊழியருடன் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வெளியில் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கேட்டினை ஆஸ்பத்திரியின் பின்பக்க வாசல் வழியாக பிரசவ விடுதிக்க கொண்டு சென்றனர். இதனை கவனித்த ஜேசல் உடனடியாக அங்கு சென்று உறுதிசெய்த பின்னர் இச்செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியை வெளியிட்டது தான் எனது வாழ்நாளில் மிகப்பெரிய முதன்மையான செய்தியாக இருக்குமென நினைக்கின்றேன் என ஜேசல் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கேட்டுக்கு பிரசவம் பார்த்த மருத்துவகுழுவில் மும்பையைச் சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றிருந்தார். மும்பையில் பிறந்து, வளர்ந்து, படித்த மருத்துவர் சுனித் கொடாம்மே இந்த மருத்துவ குழுவில் இடம்பெறிருந்தாரென பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மகாராணி எலிசபெத் முடிசூடிக்கொண்ட 60ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தால், இழந்திருந்த சோபையை இளவரசர் ஜோர்ஜ் பிறப்பு மூலம் அரச குடும்பம் மீண்டும் பெற்றுவிட்டது.

கேட் தனது குழந்தையை அரச வாரிசுபோல வளர்க்காமல் சாதாரண குழந்தை போலவே வளர்க்க விரும்புவதாக கூறியிருந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில் அரச குடும்பத்தின் பாரம்பரிய விதிமுறைகள் சிலவற்றையும் தகர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, கேட் தனது குழந்தைக்கு அரச குடும்பத்து ஆடைகளை உடுத்தப்போவதில்லையென உறுதியாக தெரிவித்துள்ளதுடன் அதனையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

பழங்கால பாரம்பரியத்தினை பின்பற்றி வரும் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையிலேயே கேட் தனது ஆண்வாரிசினை நிச்சயம் வளர்க்க வேண்டும்.

பொருளாதர வீழ்ச்சி, நிதி நெருக்கடி, மோசமான காலநிலை மாற்றம் என பலவற்றுக்கு முகம் கொடுத்து வரும் உலகத்தவர்களுக்கு மத்தியிலே, இளவரசர் ஜோர்ஜ் அரச சௌபாக்கியங்களுடன் வளர்வது என்பது இலகுவாக அமையாது. அவரும் சாதாரண நடைமுறை வாழ்க்கையை பின்பற்ற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

எனவேதான், புதிய இளவரசர் பிறந்திருக்கும் உலகமானது, அவரின் தந்தை வில்லியம்ஸ் பிறந்தபோது இருந்ததைப்போன்று இருக்காதெனவும் பாரிய வேறுபாடுகளை கொண்டதாகவே அமைந்திருக்குமெனவும் பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

1982இல் இளவரசர் வில்லியம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதென அறிவிக்க 7 நாட்களும், 1948இல் இளவரசர் சார்ள்ஸ் என்ற பெயர், புதிதாக பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க ஒரு மாதம் எடுத்திருந்தது. ஆனால், தனது பூட்டப் பிள்ளைக்கு இளவரசர் ஜோர்ஜ் என பெயரிட மகாராணி எலிசபெத் வெறும் 30 நிமிடங்களே செலவிட்டிருந் தார்.

இதேவேளை, எனது குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒரு அழகிய குழந்தையும் புதிதாக இணைந்துள்ளது. இளவரசர் ஜோர்ஜிற்கு வேடிக்கை காட்டி மகிழ்விப்பதே எனது கடமைகளிலொன்றாகுமென இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

எதுவாயினும், இளவரசர் ஜோர்ஜ் செலவழிக்கவுள்ள எந்தவொரு வாழ்க்கையும், எப்பொழுதும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கப்போகின்றது என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக