புதன், 4 ஜூலை, 2012

இலவசக் கல்வியைக் கூட தொடராது ஏன் மாணவர்கள் இடை விலகுகிறார்கள்?


பாடசாலைக் கல்வியைத் தொடராமல் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் இடைவிலகுவது இலங்கையிலே  பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றதென கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பல காரணங்களால் பாடசாலைகளில் இலவசமாக வழங்கப்படும் கட்டாயமான அடிப்படைக் கல்வியைக் கூட கற்காது இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க பல்வேறுபட்ட அமைப்புகள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிகளை முன்னெடுக்கின்ற போதிலும், சில காரணங்களால் மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலையை விட்டு இடை விலகும் வீதம் குறைந்தபாடில்லை.



 இலங்கையில் பல தசாப்தங்களாக அரச பாடசாலைகளில் இலவசக் கல்வியே வழங்கப்பட்டு வருவதுடன், சீருடைகள் மற்றும் பாடநூல்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பரீட்சைக் கட்டணங்கள் போன்ற சில செலவுகளுக்கு மாத்திரம் ஒரு தொகை பணத்தை பெற்றோர்களிடமிருந்து பாடசாலைகள் அறவிட்டு வருகின்ற அதேவேளை, சில பாடசாலைகளில் இலைக்கஞ்சி போன்ற சத்துணவுத் திட்டம் காலையுணவுத் திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கல்விக்காக அரசு பெருமளவு பணத்தைச் செலவழித்து வழங்கும் இத்தகைய வசதிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்முக நாடுகளில் மட்டுமன்றி அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இல்லையென துணிந்து சொல்லலாம். இருந்த போதிலும், ஏனைய நாடுகளை போலல்லாது எமது நாட்டிலேயே தற்காலத்தில் பாடசாலைக் கல்வியை தொடராதோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று கவலைதரும் தகவலை வெளியிட்டுள்ளது.
பாடசாலையிலிருந்து இடை விலகும் மாணவர்கள் அதற்காகச் சொல்லும் காரணங்களில் முக்கியமானது வறுமையாகும். இதனை விட கல்வி கற்பதில் ஆர்வமின்மை, பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை, குடும்பப் பொறுப்பு, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல் இளவயது திருமணங்கள், மற்றும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களினால் உடல், உள ரீதியிலே பாதிக்கப்பட்டிருந்தல் என பல காரணங்களால் மாணவர்கள் கல்வியைத் தொடராது இடைவிலகுகின்றனர். இதனை விட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தங்களின் போது ஏற்பட்ட வடுக்கள் காரணமாகவும் கல்வியை தொடர்வதில் பல மாணவர்கள் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
முன்னைய காலங்களைப் போலல்லாது, இன்று கல்வி முறைமைகளில் அதிகளவு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காலங்களில் ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே மாணவர்கள் அறிவைப் பெற்றனர். ஆனால், இன்று இணையத்தளம் ஊடகங்கள் என பல்வேறு வழிகளிலும் கல்வியறிவையும் தொழில் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்கின்றமையால் சில வேளைகளில் ஆசிரியர்கள் கூட சில தகவல்களையும் அனுபவங்களையும் மாணவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை ஆசிரியர்களோ, ஏனைய பெரியோர்களோ அவமானமாகக் கருதக்கூடாது. நீ எனக்கு சொல்லித் தருவதா? என அதற்கு பதிலடி கொடுக்க ஆசிரியர்கள் ஆரம்பித்து விட்டால் அது மாணவர்கள் கல்வி மீது கொண்டுள்ள விருப்பத்தினைக் குறைத்து விடும். இறுதியில் பாடசாலைக் கல்வியை விட்டு இடை விலகி விடுவார்கள்.
அதேபோல் சில பெற்றோர்கள் தங்களுடைய பரம்பரைத் தொழிலையே எங்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும். எமது தொழிலுக்கு இந்த கல்வியறிவு போதும் என்று கூறி பாடசாலைக்குச் செல்லவிடாது தடுத்து நிறுத்தி விடுவார்கள். வட கிழக்குப் பகுதிகளிலே பல குடும்பங்களில் குடும்பப் பொறுப்பினை விதவைப் பெண்களே சுமக்க வேண்டியதொரு சூழ்நிலை யுத்தத்தின் பின் உருவாகியுள்ளது. இதனால் அப் பெண்கள் வேலைகளுக்குச் செல்லும் போது தங்களுடைய இளைய பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மூத்த பிள்ளையை பாடசாலைக்கு செல்லவிடக்கூடாது தடுத்து விடுகின்றனர்.
கிராமப் பகுதியில் வாழ்கின்ற சிறுவர்களே அதிகளவில் பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர். ஏனெனில் ஆரம்பக் கல்வியை அவர்களுடைய கிராமங்களிலே தொடர்கின்ற போதிலும் இடை நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை கற்க அவர்களுடைய கிராமங்களில் போதிய வசதிகள் காணப்படுவதில்லை. எனவே உயர் வகுப்பு கல்விக்காக தமது கிராமங்களுக்கு அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், அவர்களுக்கு நகர் பாடசாலைகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளோ அல்லது பொருளாதார வசதிகளோ இல்லாத காரணத்தினால் கல்வியைத் தொடராது விட்டு விடுகின்றனர். இத்தகைய தடைகளையும் தாண்டி சில மாணவர்கள் நகரப் பாடசாலைகளில் சேர்த்து விடுவார்கள். ஆனால், சில நகரப் பாடசாலைகளிலுள்ள அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியிலேயே கிராமத்திலிருந்து வந்து கல்வி தொடரும் மாணவர்களை அனுசரித்து வழிநடத்த தவறிவிடுகின்றனர். அதேபோல் அவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைகளால் வகுப்புக்கு தாமதமாக வந்தால் உடனே ஆசிரியரோ, அதிபரோ அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை  வழங்குகின்றனர்.
சில  பாடசாலைகளில் மாணவர்களுக்கு பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்பது, அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை சொல்லிக் காட்டுவது உதாரணமாக உன்னுடைய அப்பா ஒரு குடிகாரன், உன்னுடைய அண்ணா கள்ளன், உன்னுடைய சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என சொல்லிச் சொல்லி அம்மாணவர்களின் மனதினைக் காயப்படுத்துகின்றனர். அதேபோல் திறமைகளுக்கு சில பாட ஆசிரியர்கள் முன்னுரிமையளிப்பதில்லை. செல்வாக்கும், பணமும் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். இதனால் திறமையிருந்தாலும் வறிய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றமையால் அவர்கள் கல்வி மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.
இதேபோன்ற பல்வேறு விதமான உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்களினாலும் மாணவர்கள் இடை விலகுவதுடன் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இடை விலகும் மாணவர்களில் அதிகமானோர் 11 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டவர்களாகவே உள்ளனர். இப்பருவம் தான் சிறார்கள் சமூகத்தை அதிகளவு உணர்ந்து கொள்ளும் பருவமாகும்.
பாடசாலை நேரங்களில் சில பாட ஆசிரியர்கள் கற்பிக்க விரும்புவதில்லை. மாலை மற்றும் விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கு வருமாறு வற்புறுத்துவதுடன் தனிப்பட்ட கட்டணங்களையும் அறவிடுகின்றனர். இத்தகைய பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல வசதியற்ற மாணவர்கள் பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றனர். அதேபோல் சில பெற்றோர்களும் தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவும் சிந்திப்பதில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகும் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை கல்வி வளர்ச்சி வீதமும் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தமிழர்களது  அழிக்க முடியாத. சொத்தான கல்வியறிவினைப் பார்த்து சர்வதேச நாடுகளும் கூட ஆச்சரியப்பட்டன. தமிழ் சான்றோரிடம் வந்து கல்வி கற்பதற்காக வடக்கிற்கு படையெடுத்த ஒரு  காலம் இருந்தது. ஆனால், இன்றைய கல்வி நிலையினை கல்வி சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடைவிலகிய மாணவர்களை பாடசாலைகளில் மீண்டும் சேர்த்து. அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடை என்பவற்றையும் இலவசமாக வழங்கி. உதவி வருகின்றனர் பலர் சமூக ஆர்வலர்கள். ஆனால், மீண்டும் புதிய வகுப்புகளில் இணையும் இம்மாணவர்கள் பழைய நிலைக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, வயது குறைந்தவர்களுடன் படிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மீண்டும் கல்வி ஆர்வமில்லாது ஏனோதானோ என்று வற்புறுத்தலின் பேரில் பாடசாலை சென்று வருகின்றனர்.
எனவே அத்தகைய மாணவர்களை மனதளவிலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் நிலையை சக மாணவர்களுக்கு உரிய முறையிலே எடுத்துக் கூற வேண்டும். இது போன்ற சின்ன சின்ன மாற்றங்கள் மூலமே இடை விலகிய மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைந்து கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

சா.சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக