புதன், 4 ஜூலை, 2012

பரிணாம வளர்ச்சிக்கு உதவிய காலநிலை மாற்றம்


 சா.சுமித்திரை


 இன்றைய காலத்தில் சீரற்ற காலநிலை மாற்றங்களால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பல இயற்கை அனர்த்த அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக சுனாமி, வரட்சி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சூறாவளி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனர்த்தங்களுள் ஒவ்வொரு உயிரினங்களும் சிக்கி சிதைவடைந்து மடிந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய காலநிலை மாற்றங்களால் உலகிலுள்ள அனைத்து இடங்களிலும் மனித இனம் முற்றுமுழுதாக அழிவைச் சந்தித்து வருகின்றன.இது இவ்வாறு இருக்க இன்னொரு புறம் முன்னைய காலங்களில் இக்காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு வளர்ச்சிக்கு வழிகோலியது என்ற உண்மையும் புறந்தள்ள முடியாத ஒன்றாகியுள்ளது.
கடந்த 2 பில்லியன் ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற காலநிலை மாற்றங்களால் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளதுடன் மாற்றமடைகின்ற காலநிலை தன்மைக்கேற்ப மனித இனம் இசைவாக்க மடைந்து புதியஇடங்களுக்கு இடம்பெயர்ந்து தனது இருப்பை விரிவாக்கி வந்துள்ளது.
 புவியில் நிலவிவந்த கோடை, மாரி போன்ற பருவ காலங்களை உருவாக்கும் காலநிலை மாற்றங்களால் மனிதகூர்ப்பு விருத்தியில் உண்மையாகவே நீண்டதொரு சிறந்தநன்மை காணப்பட்டுள்ளதுடன் இக்காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மூலம் கலாசாரம் அறிவியல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக மனித இனம் முன்னேற்றம்  கண்டு வந்துள்ளது.
அதாவது ஆதிகால மனிதன் இயற்கையோடு ஒன்றி விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வழ்ந்தான். அவ்யுகத்தில் இடம்பெற்ற மழை,குளிர்,வரட்சி போன்ற காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க  படிப்படியாக பழகிய மனிதன் குகை, மரப்பொந்து,மரக்கிளைகள் போன்ற உறைவிடங்களைதேடி  குடிபுகுந்தான். முன்னைய காலங்களிலும் நிலநடுக்கம், கடல்கோள் என்பன உருவாகியுள்ளன என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன.எனினும் அக்கால மக்கள் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படக்காரணம் இறைவன் தம்மேல் கோபம் கொண்டமையே என மூடநம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்தனர்.
 அத்துடன் இத்தகைய இயற்கை அழிவுகளால் அதிகளவு உயிர்ச் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்படவில்லை.ஏனெனில் மனிதன் இயற்கைக்கு பயந்து கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தான்.
இருப்பிடங்களில் வாழப்பழகிய மனிதன் குளிரிலிருந்து பாதுகாக்கவும் இறைச்சி போன்ற உணவை வேக வைக்கவும் தீயைக் கண்டுபிடித்தான்.ஆதிகால மனிதனது முதலாவது கண்டுபிடிப்பு காலநிலை மாற்றங்களாலேயே உருவானது என நம்பப்படுகிறது.தொடர்ந்து பருவகால மாற்றங்களால் உருவாகும் மழை,கோடை காலங்களில் தனக்கு தேவையான உணவை களஞ்சியப்படுத்தவும் பாதுகாக்கவும் கற்றுக்கொண்டான்.
 எனினும் பின்னர் இந்த நாடோடி வாழ்க்கையைத்  தவிர்த்து மெல்ல மெல்ல காட்டு பகுதிகளை விலகி நதிக்கரையோரங்களை அண்டிய பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்தான். மனித நாகரிகங்கள் நதிக்கரையோரங்களிலேயே உருவானதாக வரலாறு எமக்கு கூறுகின்ற போதும் இவை காலநிலை மாற்றங்களின் மூலமே உருவாகியுள்ளமை தற்போதயை ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

 அதாவது நதிக்கரையோரங்களில் வாழ்வாதார இருப்பிடங்களை அமைத்து நிரந்தர வாழ்க்கை வாழப்பழகியவன் தனது உணவுக்காக விலங்குகளை வளர்த்து மட்டுமன்றி நீரைப் பயன்படுத்தி மண்னை வளப்படுத்தி விவசாயப் பயிர்ச் செய்கை செய்ய ஆரம்பித்தான்.எனவே விவசாயத்திற்கு தேவையான நீரை மழை காலங்களில் போதியளவு பெற்று வந்த போதிலும் கோடைகளில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்க நேர்ந்தது.
 இதன் விளைவாக மழைகாலங்களில் நீரை சேமித்து கோடை காலங்களில் பயன்படுத்தலாம் என்னும் திட்டம் இதற்கான தீர்வாக கிடைத்தது.இதனாலேயே குளங்கள்  நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் உருவாகின  எனலாம். இதனால் விவசாயத்தில் தன்னிறைவு காண்பதற்கானதொரு உந்துசக்தியை காலநிலை மாற்றம் மனிதனுக்கு வழங்கியது.
ஆகவே மனிதன் காலநிலை மாற்றங்களுக்கேற்ப இசைவாக்கப்பட்டதுடன் படிப்படியாக  அதிகரித்த சனத்தொகை காரணமாக இயற்கை வளங்களை உச்சமாக பயன்படுத்த ஆரம்பித்தான். இதன் விளைவாக உலகையே ஒரு கையுக்குள் கொண்டு வர முயன்ற மனிதன் பலகண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் காலநிலை மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டு நிகழ்த்தினான். இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பப்புரட்சி, பசுமைப்புரட்சி என ஒவ்வொன்றாக  உருவாகின.
எனவே சீரான காலநிலை மாற்றம் மனித கூர்ப்பு பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட போதிலும் இன்று  வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ள மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் சீரற்ற காலநிலை மாற்றங்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் பொருளாதார நெருக்கடி, பட்டினி மரணம்,மனவழுத்தங்கள் மற்றும் பலவகையான நோய்கள் என உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க  முடியாது திணறிவரும் மனிதகுலம் இயற்கையை வெல்ல துடித்ததன் விளைவை  இன்று கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து  வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக