வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஓசோன் படலத் துவாரத்தை முதன் முதலாக எச்சரித்த விஞ்ஞானி மரணம்


-சா .சுமித்திரை -


சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் துவாரம் குறித்து முதன் முதலாக எச்சரிக்கை விடுத்துவரும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசினைப் பெற்ற வருமான ஷேர்வூர் ரொளலண்ட் தனது 84 ஆவது வயதில் கடந்த 10 ஆம் திகதி காலமானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராக இருந்த ரொளலண்ட் ஓசோன் படலம் எவ்வாறு பூமியை சூழ அமைந்துள்ளது? சுற்றுச் சூழல் பாதிப்பின் மூலம் அதில் எவ்வாறு துவாரம் ஏற்படுகின்றது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு இயற்கை தொடர்பாக எழுதிய தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையிலே ஓசோன் படலம் குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவதாக எச்சரித்திருந்தார்.


3 ஒட்சிசன் அணுக்கள் இணைந்து உருவாகின்ற ஓசோன் மூலக் கூறால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் நச்சுப் புற ஊதாக் கதிர்கள்  (290 நனோ மீற்றர்களிலும் குறைவான அலை நீளமுடையவை) பூமியை தாக்காது பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது.

இம்மகத்தான தொழிலைச் செய்யும் ஓசோன் படலம் மனிதனின் பல்வேறு முறையற்ற நடவடிக்கைகளால் உருவாகின்ற கரிமச் சேர்ம வளிமங்கள் புவியிலிருந்து 30 கீலோ மீற்றர் தொலை வரையுற்ற வளிமண்டலப் படலங்களைச் சிதைவடைக்கின்றமையால் ஏற்படும் தாக்கங்களால் குளோரின், மற்றும் குளோரின் ஒக்சைட்டுக்கள் உருவாகி ஓசோன் மூலக் கூறுகளை நேரடியாக தாக்குகின்றன.

இதனால் ஓசோனின் மெல்லிய படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதனூடாக புற ஊதாக்  கதிர்கள்  ஊடுருவி புவியை தாக்க வழி செய்கின்றன என ஷேர்வூர் ரௌலண்ட் தன்னுடைய உதவியாளர் மரியோ மொலினாவுடன் இணைந்து கண்டுபிடித்து இதனை தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கினார். இதனையடுத்தே அவரால் கட்டுரையில் முன்மொழியப்பட்ட கருத்துகளை கொண்டு ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

குளிர் சாதனப் பெட்டிகள், ஸ்பிரே கலன்கள், வாசனைத் திரவியங்கள், ஏரோசோல் ஸ்பிரேக்கள் போன்றவற்றின் அதீத பாவனைகள் காரணமாகவே அதிகளவு குளோரோபுளோரோக் காபன் துணிக்கைகள் வெளியேறுகின்றன. இவ் ஆய்வுக்கட்டுரை வெளியான பின்பே 1985 ஆம் ஆண்டு இரசாயன ஆய்வாளர்கள் அந்தார்டிக்கா கண்டத்தின் மேல் ஓசோன் படலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதையும் குளோரோபுளோரோக் காபன் போன்ற வாயுக்ககளின் தாக்கத்தாலேயே இது உருவானதாகவும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்தே மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் இரசாயனவியலாளர்கள்.

அதேவேளை 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையையடுத்து (இஊஇஊஇ  (குளோரோ புளோரோ காபன்) கள் மீதான சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓசோன் துவாரம் கடந்த பத்தாண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன என்பதை 3 செயற்கை கோள்களும் 3 தரை நிலையங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஓசோன் படலத் துவாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ரௌலண்டுக்கு அவருடைய ஆய்விற்காக 20 ஆண்டுகளின் பின்பு 1995 ஆம் ஆண்டே இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருடைய இழப்பு இரசாயனவியல் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். நாம் எங்களுடைய மிகச் சிறந்த நண்பனையும், ஒரு அனுபவசாலியையும் இழந்து விட்டோம் என இவினி கலிபோனியா பல்கலைக்கழக (க்இஐ ) பௌதீகவியல் விஞ்ஞானப் பீடத் தலைவர் கென்னித் யன்டா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

பார்க்கின்சன் நோய் காரணமாக காலமான ரொளலண்ட் வளிமண்டல இரசாயனவியல், வேதி வினை வேக இயல் ஆகிய துறைகளிலும் தனது ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக