புதன், 13 மார்ச், 2013

பெருகி வரும் போலி விளம்பரங்கள்


சா.சுமித்திரை

பத்திரிகைகள் மற்றும் ஏனைய வெகுஜன ஊடகங்களினூடாக பிரசுரிக்கப்படும் போலி விளம்பரங்கள் மூலம் இளம்பெண்கள் உட்பட அதிகளவானோர் மோசடிக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் நிலையத்தின் பொது மக்கள் தொடர்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல நிறுவனங்களின் புலமை பரிசில்களுடன் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, நடிப்புத்துறைகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் என் பல வகையிலான போலி விளம்பரங்கள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், சமூகத்தளங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவை ஊடாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சில பரீட்சை முடிவுகள் வெளியாகும் போது அப்பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற சில மாணவர்களின் விபரங்களை பெற்று தமது கல்வி நிறுவனங்களில் கற்றதன் மூலமே அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றனர் என சில கல்வி பயிற்சி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

சில கல்வி நிறுவனங்களில் பரீட்சையின் இறுதிக் கருத்தரங்குகளில் மட்டும் பங்குபற்றியிருப்பார்கள் அல்லது அங்கிருந்து சில பாடக்குறிப்புகள் பெற்றிருப்பார்கள். ஆனால் இதனை மட்டும் வைத்துக் கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தமது கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்கள் என விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்நிலையங்களில் பரீட்சையின் இறுதி வாரங்களில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் மாதிரி பரீட்சைகளில் மட்டும் அம்மாணவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள். அவ்வாறு இறுதிக்காலப்பகுதியில் மட்டும் பங்குபற்றி எவ்வாறு அதிக மதிப்பெண் பெறமுடியும்? அப்படியாயின் அந்நிலையில் கற்ற ஏனைய மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இம்மாணவர்கள் தம்மிடம் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றனர் என விளம்பரப்படுத்துகின்றனர். இவை எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் அதிக மாணவர்களை உள்ளீர்த்து இலாபம் உழைக்கும் திட்டமாகவே அமைந்துள்ளது.

இதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த போலி கல்வி நிறுவனமொன்றினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்து கற்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானியாவில் பட்டப்படிப்பினையும் தொழில் வாய்ப்பினையும் பெற்றுத் தருவதாக தெரிவித்து மாணவர்களிடம் பெரும் தொகை பணம் அறவீடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான அளவில் இயங்கி வந்த கல்வி நிறுவனம் தம்மிடம் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கேம்ரீட் ஏசியன் ஒப் மெனேஜர்ஸ் என்று பொறிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களில் பாரியளவு விளம்பரங்கள் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்ததுடன் சில பத்திரிகைகள் இக்கல்வி நிறுவனச் சேவையை புகழ்ந்து கட்டுரைகளும் வெளியிட்டிருந்தன.

ஆனால் அங்கு கற்ற மாணவர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தி மேற்குலக நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும் பிரித்தானியாவிற்கு விசா கோரிய போதும் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்த இக்கல்வி நிறுவனத்தின் பெயரில் பிரித்தானியாவில் எந்தவொரு கல்வி நிறுவனமும் இயங்கவில்லையென விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
அச்சு ஊடகங்களில் வெளியாகும் சில சிறு விளம்பரங்களில் நிறுவனத்தின் பெயரோ முகவரியோ அல்லது வேறு எந்த விபரங்களோ குறிப்பிடப்படாமல் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

அத்துடன் இவை பிரசுரமாகி சிறிது காலத்தின் பின் ஏதேனும் காரணங்களுக்காக அத்தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அவ்விலக்கங்கள் செயலிழந்து இருப்பதாகவும் குற்றஞ் சாட்டப்படுகின்றது.

கவர்ச்சிகரமான சம்பளம், இலவச உணவு, தங்குமிடம் மருத்துவ உதவிகள் எனக் கூறி பிரசுரிக்கப்படும் சிறு விளம்பரங்கள் மூலம் அநேகமான இளம் பெண்களும் இளைஞர்களும் கவரப்படுகின்றனர். இதனால் பாடசாலை கல்வியை முடித்து வெளியேறியோர் பாடசாலையை விட்டு இடைவிலகியோர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்விளம்பரதாரர்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.
 விளம்பரதாரர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை இவ்விளம்பரங்கள் வறுமையில் பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களையும் கவர்வதால் இலவச கல்வியைக் கூட தொடராது கை விட்டு வேலை பெறச் செல்கின்றனர். இந்த விளம்பரங்களும் இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைய காரணமென அது தொடர்பான ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேபோல் போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறி வைத்து விளம்பரங்கள் மூலம் களமிறங்கியுள்ளன. தலைமுடி உதிர்வதை தடுக்க, உடல் நிறை குறைவடைய, நீண்ட நாள் நோய்கள் குணப்பட மற்றும் புற்று நோய்களுக்கான மாற்று வைத்திய முறைகள் என பலவகையிலும் மருந்துவ துறையையும் ஆட்டங்கான வைக்கும் வகையில் போலி விளம்பரங்கள் உருவெடுத்துள்ளன.

பொதுவாக பல மாற்று மருந்துகளில் அனேகமானவை நிச்சயமாக பலன் தருமென நிரூபிக்கப்படாதவையாகவே இருக்கும் போது சில போலி விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் தொலைத்து வருகின்றோம்.

அதேபோல் தொப்பை குறைக்கும் கருவி, இளமையை மீண்டும் கொண்டு வரும் அழகு சாதனப் பொருட்கள், சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம், தவளை வைத்தியம், காந்த வைத்தியம், எயிட்ஸ் மூலிகை என ஒவ்வொரு நவின நோய்களுக்கும் புதுமை சேர்த்து பல பொருட்களை விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பெரும்பணம் சம்பாதித்து வருகின்றன சில கம்பனிகள்.

இதனைவிட பேய் பிசாசு விரட்ட, பிரிந்தவர் ஒன்று சேர, சேர்ந்தவரை பிரிக்க, பணம் சம்பாதிக்க என பலவற்றைக் கூறிக்கொண்டு பரிகாரம் தோசம் செய்து தரப்படுமெனவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இதனை நம்பி பெரும்பாலான குடும்பப் பெண்கள் மோசடிகளுக்குள்ளாகி வரும் சம்பவங்களும் ஊடக வாயிலாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. எம்மால் உருவாக்கப்படும் பிரச்சினைகளோ அல்லது எம்மை சார்ந்தோரால் உருவாகும் பிரச்சினைகளுக்கு எம்மால்  மட்டுமே தீர்வு காண முடியும். இவ்வாறு இருக்கையிலே ஏன் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு ஏமாறுகின்றனர்.

பல துறைகளில் காணப்படும் குறைபாடுகளை மறைத்து நுகர்வோர் சந்தைக்கு விடுவதற்கு அநேகமானோர் கையில் எடுப்பது விளம்பரங்களாகும். திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பரங்களில் தோன்றி பொருட்களை விற்க உதவுகின்றனர். ஒரு பொருளினை அறிமுகப்படுத்தும் விளம்பரத்திற்கு விவேகானந்தர், விபுலானந்தர் போன்ற சமயத் தலைவர்கள் போலவோ அல்லது சமூக சேவையாளர்கள் போலவோ தோன்றினால் அவ்விளம்பரத்திற்குபெரிதாக ஆதரவு கிடைப்பதில்லை. இவ்வாறானவர்களால் சொல்லப்படும் கருத்துகளை விட திரைப்பட நடிகர், நடிகை  தோன்றினாலே விளம்பரத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கின்றது.

இவர்களால் விளம்பரங்களில் அறிமுகப்படுத்தும் பொருட்களில் பல தரமற்றவையாகவே உள்ளன. அத்துடன் சில ஊடகங்களில் இதில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல என்றும் குறிப்பொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றமை வேடிக்கையான விடயமாகும்.
ஏனெனில் மறைந்து கிடக்கும் உண்மைகளை பாமர மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நியதியிலேயே ஊடகங்கள் தொழிற்படுகின்றன. இந்நிலையில் தமது ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல என்றால் இலாபம் உழைக்கும் ஒரு நோக்கிலேயே இவ்வாறான ஊடகங்கள் செயற்படுகின்றமை தெளிவாகின்றது.

அதேபோல் சமூகத்தளங்களான பேஸ்புக், ஜீமெயில், டுவிட்டர் போன்றவற்றினூடாகவும் போலி விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்நிலையிலே விளம்பரங்கள் பாதுகாப்பானவையாகவும் அனுமதியின்றி நுழையாத படியும் மேலும் முடிந்தளவு தொடர்புடையதாக இருப்பதையும் உறுதிப்படுத்த கடுமையாக பணியாற்றி வருகின்றோம் என கூகிள் தேடுதல் பொறி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் போலியான பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்லது பயனரின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவை உள்ளிட்ட தமது கொள்கைகளை மீறும் விளம்பரதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் பல்லாயிரக்கணக்கான கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் தடை செய்வதாகவும் கூகிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பின் உந்து சக்தியாக பங்களிப்புச் செய்து வருகின்றவை விளம்பரங்கள். ஆனால் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் வர்த்தக மயமாக்குதல், பொது அமைவிடங்களை தனியார்மயப்படுத்துதல், விரும்பம் மற்றும் வாழ்க்கை முறைகளின் மாற்றம், சுற்றுச்சூழல் மீது மேற்கொள்ளப்படும் எதிர்மறை தாக்கம் உட்பட போதுமான அளவில் விளம்பரங்கள் மீது கவனம் செலுத்தப்படாமையாலேயே போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற உண்மைத்தன்மை இல்லாத விளம்பரங்களை நம்பி இளம் பெண்கள் தவறான வழிக்குச் செல்வதுடன் பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். அத்துடன் அதிக இளைஞர்கள் பண மோசடிகளுக்கும் உள்ளாகின்றதாக பொலிஸில் முறைபாடுகள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் உறுதிப்படுத்திய பிறகே அவை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து தீர விசாரிக்காது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆபத்தானவையாகவே முடியும்.
இந்நிலையில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் போலி விளம்பரங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் பொருட்கள், வியாபார நோக்க தயாரிப்புகள் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் தொடர்புபட்ட விடயங்கள் மக்களை சென்றடைய வேண்டுமானால் விளம்பரங்கள் என்பது அவசியம். ஒரு விளம்பரத்தின் ஊடாகவே அப்பொருளை அல்லது நிறுவனங்களை பிரபல்யப்படுத்தி மக்களை அதன்பால் கவர்ந்திழுக்க  முடியும். ஆனால் இந்த விளம்பரங்களை போலிகளும் மோசடி பேர்வழிகளும் பயன்படுத்துவதால் தரமான பொருட்கள் நாணயமான நிறுவனங்களின் விளம்பரங்களைக் கூட மக்கள் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விளம்பரங்களை அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பிரசுரிக்கும் போதோ அல்லது ஒளி, ஒலி பரப்பும் போதோ அவை தொடர்பிலான உண்மைத்தன்மைகள் தரம் போன்றவற்றை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பதிவுகளை உறுதி செய்வது அவசியம். இதன்மூலம் தமது வாசகர்கள், நேயர்கள், ரசிகர்களை இந்த அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பாதுகாப்பதுடன் தமது நம்பகத்தன்மையையும் மக்களிடத்தில் மேலும் அதிகரிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக