புதன், 13 மார்ச், 2013

இலங்கையில் ஒருவாரத்தில் உருவாகும் ஐந்து லட்சாதிபதிகள்


சா.சுமித்திரை

இலங்கையைப் பொறுத்தவரையில்  உழைத்து வாழ வேண்டும் என நினைப்பவர்களைவிட அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் தான் அதிகம் என நினைக்குமளவுக்கு அதிர்ஷ்டலாப சீட்டுகளின்  விற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன. வாரத்தின் ஏழு நாட்களும் ஏதோவொரு  பெயர்களில் பல மில்லியன் அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் விற்பனையாகி கோடிக்
கணக்கான பணத்தை லொத்தர் சாலைகள் ஈட்டிக் கொள்கின்றன.
அதிர்ஷ்டலாப சீட்டுகள் மூலம் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு பங்களிப்பைச் செய்து வருவதாக இந்த லொத்தர் சாலைகள் கூறுகின்றன. அதேவேளை, பல வறிய குடும்பங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி நிர்க்கதியாகி வீதிக்கு வரும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

 பொருளாதார நெருக்கடி, தேவைகளை விட அதிகரித்து வரும் விருப்பங்கள், இயந்திரங்களுடனான போட்டிகள் என பலவற்றுக்கும் முகம் கொடுத்து கடல் பேரலைகளுக்குள் சிக்கியவர்களாக வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றோம். அச்சவால்களை இலகுவாக முறியடிக்க முக்கிய  தேவையாகவுள்ள பணத்தைப் பெற இந்த அவசரமான உலகில் உறக்கத்தைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து
கொண்டிருக்கின்றோம்.

தன்னம்பிக்கையுள்ள கடின உழைப்பாளிகளோ அல்லது வேலையில்லாத சோம்பேறிகளோ தமது நிறைவான வாழ்வாதாரத்தை முன்னடத்திச் செல்ல பணம் அவசியத் தேவையாகவுள்ளது. பணத்தை மையப்படுத்தியே குடும்பங்களுக்குள் சச்சரவுகள், சமூகப் பிரச்சினைகள், தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள் எனப் பல துரதிர்ஷ்டமான சம்பவங்களும் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையிலேதான் அதிர்ஷ்ட தேவதை உருவிலே பணம் வீட்டுக் கதவைத் தட்டாதா என ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். மனிதனின் பண்டமாற்று வியாபாரத்தை இலகுவாக்க ஒரு அலகாக அவனாலேயே வெற்றுத் தாள்களில் அச்சடிக்கப்பட்ட பணம் என வரையறுக்கப்பட்ட தாள்களுக்காகவே பல போராட்டங்களைச் சந்திக்கின்றமை வேடிக்கையானதுதான். ஆனால், பணம் என்ற இலக்கைக் கொண்டே உலகில் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கையில் என்ன செய்ய முடியும்?
 இதற்கமைய சிறு மூலதனம் மூலம் அதிர்ஷ்ட வடிவில் பணத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து இலட்சாதிபதிகளாக்குவோமெனக் கூறிக் கொண்டு உலகின் பல நாடுகள் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இலங்கை, இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது அபிவிருத்தி கண்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்றவற்றிலும் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முறைகளுக்கு அதிக வரவேற்புக் காணப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு சட்ட திட்டங்களுக்கேற்ப ஒரு நியதி, நிபந்தனைகளை வரையறுத்து அவற்றின் கட்டுப்பாட்டுகளின் கீழ் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 இதேவேளை, சில நாடுகளில் தனியாரின் அனுசரணையுடனும் இது நடைபெறுவதுடன் சட்டவிரோதமான அதிர்ஷ்டலாப சீட்டு விற்பனைகளும், சீட்டிழுப்புகளும் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், இதுபோன்ற முறைகளில் பாரியளவான மோசடிகளே இடம்பெற்று வருகின்றமையால் அதற்கான வரவேற்பு அந்நாட்டு மக்களிடையே கிடைக்கப்பெறுவதில்லை. இவை ஒரு சில குறுகிய காலங்களிலேயே மழைக்கு முளைக்கும் காளான்கள் போல வந்து  பின்னர் காணாமல் போய் விடுகின்றன.
 எமது நாட்டைப் பொறுத்தவரை சட்டத்துக்கு முரணான சிறுசிறு அதிர்ஷ்டலாப சீட்டு விற்பனைகளும், சீட்டிழுப்புகளும் இடம்பெற்று வருகின்ற போதிலும் அவற்றினால் பாரிய மோசடிகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவரவில்லை.

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு முறையும் ஒரு சூதாட்டமாகவே பார்க்கப்படுகின்ற போதிலும் இலங்கை அரசின் மேற்பார்வையின் கீழ் சட்ட மூலங்களாலும் வரையறுக்கப்பட்டுள்ளமையால் இம்முறை மூலம் பொது மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

 அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை என இரு அங்கீகாரம் பெற்ற சபைகள் இயங்குகின்றன. இவற்றினூடாக பல பெயர்களில் பல்வேறு நோக்கங்கள் கருதி தினமும் அதிர்ஷ்டலாப சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வாசனா சம்பத, ஜயோதா, சனிதா வாசனா, சனிக்கிழமை அதிர்ஷ்டம், சூப்பர் போல்ட், ஜனஜய, கொவிசெத, ரணவிரு எனப் பல பெயர்களில் வாரத்தின் ஏழு நாட்களும் சீட்டிழுப்புகளை நடத்தி வருவதுடன், நாட்டின் அபிவிருத்தி இலக்குக்கென கோடிக்கணக்கான பணத்தை வழங்கி அதிர்ஷ்டசாலிகளை உருவாக்கி வருகின்றன.

அந்த வகையில் 50 ஆண்டுகளை நெருங்கும் இலங்கையில் தேசிய லொத்தர் சபையானது நாட்டு மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மக்களினூடாக பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.

ஒரு வாரத்திற்கு 5 இலட்சாதிபதிகளை உருவாக்கி வருவதுடன் குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களையும் உருவாக்கும் நோக்கிலேயே அதிர்ஷ்டலாப சீட்டுக்களை விற்பனை செய்து வருவதாக தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் எம்.எஸ். கருணாரட்ண தெரிவிக்கிறார்.
 முன்னைய ஆண்டுகளில் 10 பில்லியன் ரூபா வருடாந்த கையிருப்பு மாற்றாகவிருந்த போதிலும் கடந்த 2012 இல் 12 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

 அத்துடன் கடந்த வருடம் மட்டும் 10.9 பில்லியன் மில்லியன் அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த  அவர் இச்சீட்டுக்களை விற்பனை செய்யவென 27 மாவட்ட பங்காளர்களும் 2700 சிறுமுகவர்களும், 300 நிறுவன ஊழியர்களும் பணியாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

 இதேவேளை ஒரு முகவர் ஒரு அதிர்ஷ்டலாப சீட்டினை விற்பனை செய்தால் 3 ரூபா 50 சதம் தரகுப் பணமாக வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
 அதேபோல 1981 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி முதல் அபிவிருத்தி லொத்தர் சபையும் மக்களின் வாழ்வை வழப்படுத்தி வருகின்றது. இதுவும் தனது ஆரம்பத்திலிருந்து பல மில்லியன் ரூபாவை பணப்பரிசுகளாகவும் மேலும் பல மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கும் இலாபமாக வழங்கி வருகின்றது.

கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கு மேலதிகமாக 10, 20 இலட்சம் உள்ளிட்ட வெவ்வேறு பெறுமதியிலான பரிசுகளை வென்ற இலட்சாதிபதி வெற்றியாளர்களையும் இச்சபை உருவாக்கியுள்ளது.

 எனவேதான் கடந்த 5 வருட காலப்பகுதிகளில் இச்சபைகள் 4565.27 மில்லியன் ரூபா இலாபமீட்டியது என கடந்த வருடம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.  அபிவிருத்தி லொத்தர் சபை 2009 இல் 9014.82 மில்லியனும், 2007 இல் 860.06 மில்லியன் ரூபாவும், 2008 இல் 731.22 மில்லியன் ரூபாவும், 2009 இல் 726.18 மில்லியன் ரூபாவும், 2010 இல் 1081.82 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியது. அதேபோல தேசிய லொத்தர் சபை 2006 இல் 58.32 மில்லியன் ரூபாவும், 2007 இல் 70.76 மில்லியன் ரூபாவும், 2008 இல் 43.04 மில்லியன் ரூபாவும், 2009 இல் 45.51 மில்லியன் ரூபாவும், 2010 இல் 31.63 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 இதேவேளை இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் உண்டு. என்றோ ஒருநாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பி பலர் தினமும் சிறு
பணத்தை செலவிட்டு அதிர்ஷ்டலாப சீட்டுக்களை கொள்வனவு செய்கின்றனர். பல இலட்சக் கணக்கானோரிடமிருந்து அதிர்ஷ்டம் என்ற பெயரில் சுரண்டப்படும் கோடிக்கணக்கான பணத்திலேயே வாரத்திற்கு 5 இலட்சாதிபதிகள் உருவாக்கப்படுகின்றனர்.

அபிவிருத்தி லொத்தர் சபையோ அல்லது தேசிய லொத்தர் சபையோ நாட்டு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதைவிட அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை வாங்கும் ஒவ்வொரு கொள்வனவாளர்களே பங்களிப்புச் செய்கின்றனர் என்றே கூற வேண்டும்.

 அதிர்ஷ்டம் என்ற போதைக்குள் இருக்கும் அதிர்ஷ்டலாபச் சீட்டுக் கொள்வனவாளர்கள் தம்மை அறியாமலே தினமும் குறிப்பிட்டதொரு தொகையை செலவு செய்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்காற்றி வருகின்றனர்.

 அதிர்ஷ்டத்தை நம்பும் பல இலட்சம் பேரில் சிலரே அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். பல இலட்சம் பேர் செலவிடும் தொகையில் ஒரு சிலருக்கு சில இலட்சங்களை கொடுப்பதால் பெரிதாக என்ன நடந்து விடப்போகின்றது. ஆயிரக்கணக்கானோர் நன்மையடைய இலட்சக் கணக்கானோர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேபோல அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கிய ஒருவருடைய எண்ணுக்கு ஒரு கோடி ரூபா அதிர்ஷ்டமாக விழுந்துள்ளது. இதன்மூலம் குறித்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இந்நிலையில் அவருடைய மனநிலை கொஞ்சம் கூட வர்ணிக்க முடியாதளவுக்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

 ஆனால், அதிர்ஷ்டம் கிடைத்த இலக்கத்துக்கு முன்போ அல்லது அடுத்து வரும் ஒரு இலக்கமோ  எழுத்தோ மாறியமையால் ஒரு கோடி ரூபா பெறும் அதிர்ஷ்டத்தை இழந்தவரின் மனநிலையை எப்படிச் சொல்ல முடியும்.

 அதாவது அ 2013 என்ற இலக்கமுள்ள அதிர்ஷ்டலாப சீட்டுக்கே ஒரு கோடி ரூபா விழுந்துள்ளதெனில், 2014 அல்லது அ 2012 என்ற எண்களைக் கொண்ட அதிர்ஷ்டலாப சீட்டுகளை வாங்கியவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும்.
எனவே, எதிர்வு கூறப்படாத அதிர்ஷ்டத்தை நம்பி வருமானத்தை இழக்க முடியும்? இதனால் மத்திய தர வர்க்கத்தினரும், வறிய மக்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

 வாரம் 5 இலட்சாதிபதிகளை உருவாக்குவதாக கூறும் லொத்தர் சபைகள் இதுவரை காலமும் எத்தனை மக்களினதோ அல்லது பிச்சைக் காரர்களினதோ  வாழ்க்கையை ஒளியேற்றி வைத்துள்ளன? இச்சம்பவங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும் என்பது போல சாதாரண வர்க்கத்தினர் அதிர்ஷ்டலாப சீட்டுகளை வாங்கி  வைத்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். சில வீடுகளில் இவ்வாறு வாங்கப்படும் அதிர்ஷ்டலாப சீட்டுகள் சுவாமிப் படங்ளுக்கு ஒப்பானவையாகவே பாதுகாக்கப்படுகின்றன. அப்படிப் பாதுகாக்கின்ற போதிலும் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கடவுள்கள் கூட கைவிட்டு விடுகின்றனர்.

 இதேபோல இவ்வாரத்திற்கு இவ்வளவு பரிசுத் தொகை எனக் குறிப்பிடப்படும் பெருந்தொகை அநேகமாக யாராலும் வெற்றி கொள்ளப்படுவதில்லை. இது மக்களைக் கவர்ந்திழுப்பதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகின்றது.

என்றோ ஒருநாள் எமக்கும் அதிர்ஷ்டம் இந்த அதிர்ஷ்டலாபச் சீட்டுகளின் வடிவில் வருமெனக் காத்திருப்பவர்களின் மனநிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.  அதேபோல அதிர்ஷ்டலாபச் சீட்டுகள் கிடைக்கும் இலாபங்கள் உரிய முறையிலே அந்தந்த துறைகளுக்கு சென்றடைகின்றதா என்பதும் கேள்விக்குறியே.

 அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் மூலம்  கோடீஸ்வரர்கள் ஆனவர்களில் எத்தனைபேர் அப்பணத்தை முறையாக. உரியவகையிலும் பணத்தை செலவிட்டுள்ளனர். சும்மா வந்த பணந்தானே என களியாட்ட நிகழ்ச்சிகளுக்கும் தேவையில்லாமலும் செலவிடுகின்றனர். கஷ்டப்பட்டு உழைக்கும் பணமே நிலையானது. அதன் மூலம் கிடைப்பதே உண்மையான மகிழ்ச்சி தரும்.

 ஏனெனில், பணத்தை சேமித்து வைத்து பாதுகாப்போரில் எத்தனைபேர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் எனச்சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, அதிர்ஷ்டலாபச்சீட்டு குலுக்கல் முறைகளால் நன்மை சொல்லக் கூடியதாக உள்ளபோதிலும் பாரிய  எதிர்விளைவுகளே காணப்படுகின்றன.

 இவைமூலம் நாட்டு மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு பாரிய பங்களிப்பு கிடைக்கின்றது என சொல்லிக் கொண்டிருக்காது அம்முறையில்  உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அவை தீர்க்கப்பட வேண்டும். இதனால் அதிர்ஷ்டத்தை நம்பி தமது வருமானத்தை இழக்கும் குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக