சா.சுமித்திரை
இயற்கைக்கு பயந்து அதோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் படிப்படியாக அவற்றைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் அபரிமித பயனைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினான். அதன் விளைவாக இன்று இயற்கை அனர்த்தங்கள், உயிர் அழிவுகள், வளப்பற்றாக்குறை, உயிரினம் நிலவுகையில் சந்தேகம் எனப் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஆயினும் தனது நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள வளப் பற்றாக்குறை, புதுவகையான நோய்கள், காலநிலை மாற்றம், புவியியல் தோற்றம் ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றுக்கு தீர்வாக பல பதிலீடுகளையும் தற்காலிக தடுப்புப் பாதுகாப்புத் திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டுள்ளான் மனிதன்.
அந்த வகையிலே செயற்கை மழை, செயற்கை உடல் அவயவங்கள், செயற்கை உயிரினங்கள், செயற்கை கருக்கட்டல், செயற்கை இறைச்சிகளும், மீன்களும், செயற்கைக் குருதி என ஒவ்வொரு பற்றாக்குறையாகவுள்ள தேவைகளுக்கும் பதிலீடுகளை அமைத்துக்கொண்டு வருகின்றான்.வரட்சிக் காலம் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் பற்றாக்குறையைத் தீர்த்துக்கொள்ள செயற்கை மழைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை மூலம் மழை பெற்று வருவதில் சீனா முன்னிலை வகிக்கின்றது. இதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏனெனில், செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி, மழை பெய்யச் செய்வதல்ல. வளிமண்டலத்திலிருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டுமென நினைக்கும் இடத்திற்கு நேர் மேலே வரும் போது இரசாயனப் பொருட்கள் தூவி அவற்றினை மழை மேகங்களாக்கி மழை பெய்யச் செய்வதாகும்.
உயிரின நிலவுகை பற்றாக்குறை, சனத்தொகை பெருக்கம் என்பவற்றால் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் உயிரினங்கள் வதை செய்து கொல்வதைத் தடை செய்யும் செயற்கையாக இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளின் தசைகளிலிருந்து மூலவுயிர் கலங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவை ஆய்வுக் கூடங்களில் தசையிழையப்பட்டைகளாக உருவாக்கப்படுகின்றன. பின் அவற்றினை செயற்கைக் கொழுப்புக் கலங்களுடன் சேர்த்து இறைச்சியாக மாஸ்டிரிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
நிஜமான இறைச்சியைப் போல, இளஞ்சிவப்பு நிறம் கொடுக்கவும், சமைக்க, சாப்பிடுவதற்கு ஏற்ற வகையிலே, இறைச்சி போன்ற சுவையை வழங்குவதும் இந்த ஆராய்ச்சியாளருக்கு பாரிய சவாலாக அமைந்திருக்கும்.
அதேபோல, மரபணு மாற்றப்பட்ட செயற்கை மீன் தயாரிக்கும் திட்டமொன்று விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விபத்துகளிலோ, அல்லது வேறு காரணங்களினாலோ கை, கால் போன்ற உடல் அவயவங்களை இழந்தோருக்கு வரப்பிரசாதமாக செயற்கை அவயவங்கள் உள்ளன. முன்பு அங்கவீனப்படுபவர்களை மரத்தாலான போலிக் கைகளுடனோ அல்லது காலுடனோ பார்த்திருப்போம். ஆனால், தற்பொழுது உண்மையான கை, கால்களை போல நெகிழ்வான உயிர்ப்பான உணர்வுள்ள உடல் அவயவங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
விவசாய உற்பத்தியை பெருக்கும் நோக்கிலே, செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நைதரசன், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற மூலப் பொருட்களாலான இவை சக்தியிழக்கும் மண்ணுக்கு தற்காலிகமாக வளமூட்டுகின்றன.
நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உணவுப் பொருள் உற்பத்திக்கு, நுண்ணுயிர்கொல்லிக்கு எனப் பல காரணங்களுக்காக செயற்கை உயிரிகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக டெங்கு நுளம்பின் வீரியத்தைக் குறைக்க அதனை விட வீரியம் கூடிய நுண்ணுயிரியை விசுறுதலாகும்.
விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சியால், இழப்புகளும் பற்றாக்குறைகளும் ஓரளவு ஈடுகட்டப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஆயினும், இவற்றினால் இயற்கைக்கேற்ப ஈடு செய்ய முடியாது. இந்த இழப்பீடுகளை மீளப்பெறவென அதிக பணம் செலவளித்தும் மீண்டும் மீண்டும் சுற்றுச் சூழலுக்கு நாம் பாதிப்பையே ஏற்படுத்தி வருகின்றோம் என்பதே உண்மை. மனிதன் எவ்வளவு தான் அறிவியல் விஞ்ஞானத்துடன் ஒன்றி மேல் பறந்தாலும் அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருந்தால் மட்டுமே அறிவியல் நிலைத்திருக்கும்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக