சா. சுமித்திரை
உலகில் அனைத்து உயிரினங்களுமே காதல் வசப்படுகின்றன. இதில், மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா? ஒவ்வொருவரது வாழ்நாட்களிலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் காதல் ஏற்பட்டிருக்கும். யாராவது ஒருவர் தனது வாழ்நாட்களில் ஒரு தடவை கூடக் காதலிக்கவில்லை எனக் கூறுவார்களா?
அவர்களது காதல் சிலவேளைகளில் நிறைவேறாமலோ அல்லது மறைக்கப்பட்டோ இருக்கலாம். ஆனால் காதல் நிஜமானது, அவர்களது காதல் நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் இன்று தமது காதலில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் கூட தமது பிள்ளைகளின் காதல் என்றதும் உடனே எதிர்ப்புக் காட்டத்தொடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் காதல் சோடிகளை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். லவ் கொமாண்டோக்கள். இவர்கள் காதலுக்கு ஆதரவு தருகின்றார்களா? எனவும் இதுபோன்ற அமைப்புகள் மேலைத்தேய நாடுகளில்தான் இருக்குமெனவும் இளம் காதல் சோடிகள் எண்ணலாம். ஆனால் இந்த லவ் கொமாண்டோ அமைப்பு எமது அயல்நாடான இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில்தான் உள்ளது.
கட்டாயத் திருமணங்கள், கௌரவக் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து இளம் காதல் சோடிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முயற்சியில் காதலைக் காதலிக்கும் லவ் கொமாண்டோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவிலே ஒவ்வொரு வருடமும் காதல் உறவுகளால் ஏற்படும் தொடர்புகளால் 1000 இற்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் படுகொலைகள் கூட "கௌரவக் கொலைகள்" எனச் சாதாரணமாக அழைக்கப்பட்டு வரும் நிலையிலே காதல் என்னும் தெய்வீக உணர்வுக்கு அடிமைப்பட்ட ரோமியோ ஜூலியட் காதல் ஜோடிகளுக்கு இரகசிய அடைக்கலம் கொடுத்து மென்மையான காதல் மனங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த லவ் கொமாண்டோக்கள்.
கடும் தொனியில் கூடப் பேசத் தெரியாத இந்த அமைப்பினருடன் கதைத்துக் கொண்டு இருந்தாலே போதும், கனமான இதயங்கள் அமைதியடைந்து விடும். ஒருவருடைய காதல் உறவினை அவருடைய குடும்பத்தினர் ஏற்கவில்லை எனில் அச்சோடிகளை அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.
அதேவேளை சட்ட மற்றும் நடைமுறை உதவிகளை வழங்குதல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான இரகசிய அடைக்கலம் வழங்கல் , அச்சோடிகளுக்கெதிராக எழும் அச்சுறுத்தல்கள், கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் எனப்பல உதவிகளையும் இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர். எதிர்ப்பான காதலர்களுக்கு உதவி செய்வோருக்கு நிச்சயம் உயிர் ஆபத்துக் காணப்படும்.
ஆனாலும் இன்னொருவருடைய காதலுக்காக லவ் கொமாண்டோக்கள் தமது உயிரையே பணயம் வைத்து காதல் உணர்வுக்கு மட்டும் அர்ப்பணம் செய்து வேறிரு உயிர்களை வாழ வைக்கின்ற சேவை உண்மையிலே உணர்வுபூர்வமானதாகும்.
சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள், கல்வித் தகைமை, தொழில், பதவியுயர்வு போன்ற காரணங்களைக் காட்டி தமது குடும்பத்திற்கேற்ற சரியான தெரிவு இல்லை எனவும் வேறு மதம் அல்லது சாதி ஆகியவற்றாலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் காதலை நிராகரித்து விடுகின்றனர். அதேவேளை பெற்றோரை மீறும் பிள்ளைகளை சமூகத்திற்கு பயந்து தமது கௌரவத்தை மட்டும் கருத்தில் கொண்டு சில பெற்றோர் கொலை கூட செய்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் வருட மொன்றிற்கு 1000 இற்கு மேற்பட்ட காதல் ஜோடிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.
சில சோடிகளில் ஒருவர் மட்டும் மரணமாக மற்றவர் தனது வாழ்நாளைத் தொலைத்து விட்டு மனநோயாளர்களாக தனிமையில் கழிக்கின்றனர். இது போன்ற எத்தனையோ காதல் மனங்களைக் கொல்லும் சம்பவங்களுக்கு எதிராக இந்த லவ் கொமாண்டோக்கள் உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் 22 வயதான தனது தங்கை காதலனுடன் ஓடியதையறிந்த 29 வயது சகோதரன் தங்கையைத் தேடிக் கண்டு பிடித்து அவரை வீதிக்கு இழுத்து வந்து அவ்வீதியில் வைத்தே தங்கையின் தலையைத் துண்டித்திருந்தார். மனிதனுக்கு இயற்கையாக உருவாகின்ற மென்மையான உணர்வான காதலுக்கு உயிர் எப்படி ஈடாகும்?
இதே போன்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கையிலே லவ் கொமாண்டோக்களின் இச்சேவை கட்டாயம் பேசப்பட வேண்டியதொன்றாகும்.
இந்தியாவின் பழைய டில்லியில் மிகவும் வசதி குறைந்ததும் சேரிப் பகுதியுமாகவுள்ள ஒரு சிறு ஒழுங்கையிலுள்ள பாழடைந்த கட்டிடத்திலேயே இந்த லவ் கொமாண்டோ அமைப்பு உள்ளது. இக் கட்டிடக் கதவில்கூட அடையாளம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும் இல்லாத நிலையிலே இக்கட்டிடத்தைக் கண்டுபிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல.
ஒரு சமூகப் புரட்சியின் விதைகள் விதைக்கப்பட்டு வேர்கொள்ள செய்யப்படுவதாகவே இக்கட்டிடத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரது மனநிலையும் சொல்லும்.
லவ் கொமாண்டோக்களின் அன்பு என்னும் வாடகையில் 7 பாதுகாப்பான வீடுகள், அவை ஒவ்வொன்றும் 5 அறைகளாகப் பிரிக்கப்பட்ட சிறிய சொத்து தற்பொழுது அன்பு என்னும் பாதுகாப்பின் கீழ் 5 காதல் சோடிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக லவ் கொமாண்டோக்களை அண்மையில் டெய்லி மெயில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தது.
இந்த லவ் கொமாண்டோக்களைப் பற்றி டெய்லி மெயில் மேலும் பல தகவல்களைத் தந்திருந்தது. அவை உங்களுக்காக!
இந்த அமைப்பின் நிறுவுனராக சஞ்ஜோய் சச்தேவ் ஆதரவில் மனிதாபிமான மற்றும் சட்ட உதவிகளுடன் இந்த தற்காலிக கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது.
முன்னாள் ஊடகவியலாளரான 52 வயதுடைய சஞ்ஜோய், இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன்னார்வ பங்களிப்புகளினூடான நிதியுதவி மூலம் லவ் கொமாண்டோக்கள் அமைப்பினை உருவாக்கியிருந்தார்.
டில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலுள்ள இளம் காதல் சோடிகளிடமிருந்து வருடமொன்றுக்கு 100 அல்லது 200 அழைப்புகள் வருமென எண்ணுவதாக சஞ்ஜோய் தெரிவித்திருக்கின்றார்.
நாடு முழுவதும் சுமார் 11, 000 லவ் கொமாண்டோக்கள் தொண்டர்களாக செயற்பட்டு வரும் அதேவேளை, காதல் சோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல், தற்கொலை, மனவிரக்திகளிலிருந்து காதலர்களை மீட்டெடுத்தல், இலவச சட்ட உதவிகளை வழங்கல் என பலதரப்பட்ட உதவிகளை காதல் பாதுகாவலர்களாக இருந்து 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர்.
இந்தப் பாதுகாப்பான இரகசிய அடைக்கலத்தில் சுமார் 80 காதல் சோடிகள் தங்கியிருந்து லவ் கொமாண்டோக்களின் உதவிகளைப் பெற்றுள்ளன. இவர்களில் சிலர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்தனர். வேறு சிலர் சிலகாலம் தங்கியிருந்தனர். எவ்வாறாயினும் அவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைகையை வளமாக வடிவமைத்துக் கொண்டனர் என்ற ஆத்ம திருப்தியடைகின்றனர் இந்த காதல் பாதுகாவலர்கள்.
"வட இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் வங்கிக் கணக்காளராக கடமையாற்றும் 29 வயதான அப்துல் ஹக்கீம் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். அவர் 25 வயதான மேவிஸ் என்னும் பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார். இதனையறிந்த பெண் வீட்டார் அவ்விருவரையும் படுகொலை செய்வதற்கென 2 இலட்சம் ரூபாவுக்கு கூலியும் நிர்ணயித்திருந்தனர். எனினும் அவ்விருவரும் தப்பியோடி வந்து எம்மிடம் அடைக்கலம் கோரினர்.
நாம் அடைக்கலம் கொடுத்த அன்பினால் ஆதரித்திருந்தோம். பின்னர் இரு வருடங்களன் பின்னர் தமக்குப் பிறந்த பெண்குழந்தையுடன் அக்காதல் தம்பதியினர் தமது கிராமத்துக்குச் சென்றிருந்த போது அவர்களது குடும்பத்தினர் எந்தக் கோபமோ, ஆத்திரமோ இன்றி ஆதரித்து வரவேற்றிருந்தனர்.
ஆயினும் ஒரு வாரத்துக்குள் அப்துல் ஹக்கீம் அக்கிராமத்தில் வைத்து பட்டப்பகலிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி சம்பவத்தையும் காதல் கொமாண்டோ நிறுவுனுரான சஞ்ஜோய் விபரித்தார்.
பொதுவாக சமூகத்தில் பெண்கள் முக்கிய இலக்காவர். காதலுக்குத் தடை மீறினால் கொலைகளும் அச்சுறுத்தல்களும், பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம் என பெண்கள் பலவகைகளிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர்.பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவை நடைமுறையிலுள்ளதாக தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
"சாதிகளால் வேறுபட்ட நாம் காதலால் ஒன்றிணைந்தோம்" என பாஸ்கர் கோசாமி (வயது 28), பூஜா சிங் (வயது 22) ஆகிய இருவரும் கூறுகின்றனர். அதேபோல "சமூக பிரிவுகளால் எங்களுடைய காதலுக்கு தடைபோடப்பட்டது. அதனை மீறி நாம் இன்று சந்தோசமாக நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" என தர்மேந்திரர்குமார் (வயது 24), சப்னா மிடால் (வயது 23) காதல் சோடி கூறுகின்றது. இது போல பெற்றோர்களால் தடுக்கப்பட்ட காதலை அவர்களை விட்டு வெளியே வந்து இந்த அடைக்கலத்தில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோல சாதி, சமூக அமைப்புகள், மதம் பொருளாதார வர்க்கம், கல்வி நிலை ஏற்றத்தாழ்வுகள் எனப்பல வேறுபாடுகளால் பிரிந்து காணப்படுகின்ற மனிதனை காதல் என்னும் ஒரு உணர்வு மட்டும் இணைத்து மனிதநேயத்தை உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றது.
காதலைப் பாதுகாக்கும் கொமாண்டோக்களிடம் அடைக்கலம் கோரியுள்ளோரில் பெரும்பாலானோர் படித்த சமூகத்தில் , நல்ல தொழில் வாய்ப்புகளில் உள்ளவர்களாவர். ஆசிரியர்கள், வங்கியாளர்கள், பயிற்சிக் கணக்காளர்கள் எனக் கௌரவமான தொழில்களை மேற்கொண்டு வருபவர்களும் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் சஞ்ஜோய் தெரிவிக்கின்றார்.
இந்தியாவிலேயே தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் இதுவரை தனிப்பட்ட ரீதியிலே இடம்பெறுகின்றன. 2010 ஆம் ஆண்டு பிரிட்டனில் இதுபோன்ற 3000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் என்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக காதலிப்பவர்களை ஏன் தடுக்க வேண்டும்? நியாயமானதும், தெய்வீகமானதுமான காதலை தடுப்பவர்களுக்கு இந்த லவ் கொமாண்டோக்கள் நிச்சயம் எதிரிகளாகவே இருப்பார்கள். ஆனாலும் காதலிப்பவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகளற்ற ஒதுக்குப் புறத்தில் உள்ள இரகசிய அடைக்கலம் அன்பு நிறைந்த வசந்தமாளிகையாக இருக்கும் என்பது நிச்சயம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக