ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கொழுந்து விட்டெரியும் எண்ணெய் வள நாடு

சா.சுமித்திரை

சுதந்திரம் பெற்று சிறிது காலத்திற்குள்
அதிகாரப் போட்டிக்குள் சிக்கித்
தவிக்கும் தென் சூடான்


உலகில் புதிய நாடாக உதயமாகிய தென் சூடானில் இனப்படுகொலைகள், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வீதிப் பேரணிகள், கொந்தளிப்புகள் என கடந்த இரு வார காலமாகவே ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இரு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்திருந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருந்த சூடானியர்களுக்கு தற்போதைய  பதற்றமான நிலைமை மிக மோசமான விளைவுகளையே நிச்சயம் ஏற்படுத்தப் போகின்றது. 

தற்போதைய நிலைமை மூலம், சிவில் யுத்தத்திற்கான உள்மறைவொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் மிக மோசமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் அங்குள்ள ஐ.நா. தூதரகங்களில் புகலிடம் கோரி ஆயிரக்கணக்கான தென் சூடானியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்த போதிலும் உயிருக்குப் பயந்து தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி மக்களின் முகாம்களைக் கூட, விட்டு வைக்காது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அப்பாவி மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இரு தலைமைகளின் அதிகார மோதல்களே காரணமாக அமைந்துள்ளன. 

சுதந்திரம் கண்ட பின்னர் குறுகியதொரு வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ள தென் சூடான், பாரியதொரு சவாலுக்கு சர்வதேச ரீதியில் முகம் கொடுத்துள்ளது. 

தென் சூடானின் பெரும்பான்மை பழங்குடியினமான டிங்கா பிரிவைச் சேர்ந்தவர் ஜனாதிபதி சல்வா கிர். இவர் தன்னை கவிழ்க்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ் சாட்டியதையடுத்தே இந்த பாரிய வன்முறைகள் வெடித்துள்ளன. 

இதற்குக் காரணமானவரெனக் குற்றஞ் சாட்டப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ரியேக் மக்சார் முதலில் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்த போதிலும் பின்னர் அரச எதிர்ப்புப் படைகள் மக்சார் தலைமையிலேயே செயற்படுகின்றமையை உறுதிப்படுத்திக் கொண்டார். தென் சூடானின் இரண்டாவது பெரும்பான்மையினமாக நூர் பிரிவு உள்ளது. மக்சார் இந்தப் பிரிவையே சேர்ந்தவராவார். 

மக்சார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்து கீர் அகற்றியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு மேலாக, அதிகார உட்பூசல்களே இந்தப் பதவி அகற்றலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததென பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

இந்நிலையிலேயே ஆளும் சூடான் மக்கள் விடுதலை முன்னணிக்குள் மீண்டும் அதிகார மோதல்களுக்காக சொந்த மக்களையே படுகொலை செய்யும் அளவுக்கு ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர். ஏற்கனவே, தென்சூடானில் 90 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். அதிக எண்ணெய் வளம் நிறைந்த நாடாக உள்ள போதிலும் பல்வேறு நிலைகளிலும் எவ்வித அபிவிருத்தி  இல்லாமலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தென் சூடான் தனித்து இயங்கும் நிலையை எட்டுதற்கு நாட்டின் உருவாக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளிலும் பாரிய சவால்கள் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன், துறைசார் நிபுணத்துவமும் ஆளணி வளங்களும் பெருமளவில் தேவைப்படுகின்றது. 

அதிக எண்ணெய் வளம்  தென் சூடானில் காணப்படுகின்ற போதிலும் எண்ணெய் ஏற்றுமதிக்காக சூடானையே பெரிதும் தங்கியிருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. ஏனெனில், தென்சூடானது கடல் தொடர்புகள், துறைமுகம் என்பன இல்லாத புவியியல் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. 
எனவே, எண்ணெய்க் குழாய்கள் மூலம் சூடான் துறைமுகத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டு  செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி  செய்யப்பட வேண்டும். 

இதுபோன்று தென் சூடானின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வேறு நாடுகளை அது தங்கியுள்ளது. அத்துடன், அங்குள்ள மக்கள் கல்வியறிவு, சுகாதார வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளிலும் பின்தங்கியே உள்ளனர். இந்நிலைமையில் இப்படியான வன்முறைகளும் ஆர்ப்பாட்டங்களும் நிச்சயம் எதிர் விளைவுகளை மட்டுமே அங்கு ஏற்படுத்தப் போகின்றது. 

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புப் படையினரால், நூர் இனத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஐ.நா. அதிகாரிகள் முன் சாட்சியம் அளித்துள்ளனர். 

டிங்கா இனக்குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரர்களே நூர் இனத்தைச் சேர்ந்தவர்களை சரமாரியாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐ.நா. பொதுச் செயலர் பான்கீ மூனின் பரிந்துரைக்கமைய மேலதிக துருப்புகளை அனுப்பும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பும் இடம்பெற்றிருந்தது. 

இதில் 12,500 அமைதி காக்கும் படையினரையும் 1323 சர்வதேச பாதுகாப்புப் பொலிஸாரையும் அனுப்புவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த நெருக்கடிக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாதெனவும் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த அரசியல் மூலமே தீர்வு காண வேண்டுமெனவும் ஐ.நா. பொதுச்செயலர் பான்  கீ மூன் வலியுறுத்தியதுடன் ஐ.நா. குழுவினரை அங்கு 48 மணித்தியாலங்களுக்குள் சென்று பணியைத் தொடருமாறு கூறியுள்ளார். 

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென் சூடானில் சமாதான உடன்படிக்கைக்கு உலகத் தலைவர்களும் வலியுறுத்தி அழைப்பு விடுத்துள்ளனர். 

யேசு கிறிஸ்து பிறப்பின் மகிமையைக் கூறும் இம் மாதத்தில் இரத்தம் படிந்த வாரமாக தென்சூடான் காணப்படுகின்றமை வேதனையானதாகும். அதுவும் அங்கு மூன்று பாரிய மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தலைநகர் ஜுபாவில் இரு மனித புதை குழிகளும் பென்ரியூவில் ஒரு மனிதப் புதை குழியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். 

இன ரீதியாக மக்கள் கொல்லப்படுகின்ற தற்போதைய நிலைமையானது ஒரு நோக்கத்திற்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் புதிய நாடு இனக் கலவரத்தை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளது. 

இந்த திசை திருப்பல் மூலம் தென் சூடானினுள் நேரடியாகவே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் மேலோங்கியிருக்கப் போகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் கிழக்குப் பிராந்தியமான யொங்லைய்யின் தலைநகர் பொரில், விமானமொன்று சுடப்பட்டதில் அமெரிக்கப் பிரஜைகளை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். 

இச்சம்பவத்திற்கு அமெரிக்கா தனது பலத்த கண்டனங்களை வெளியிட்டிருந்ததுடன் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதானது அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தினரால் வழங்கப்படும் நீண்ட கால ஆதரவினை முடிவுக்கு கொண்டு வரக் காரணமாகி விடுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்தும் இருந்தார்.

நாட்டிலுள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய  பொறுப்பு தென் சூடானியர்களுக்கு உள்ளதென வலியுறுத்திக் கூறியதுடன் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் சும்மாவே தலையிட அமெரிக்கா முயலும், இந்நிலைமையில் தென் சூடானில் கணிசமான முதலீட்டுத் திட்டங்களை அமெரிக்கா வைத்துள்ளது. எண்ணெய் விவசாய அபிவிருத்தி மற்றும் நீரலை மூலமான சக்தி உருவாக்கம் குடிநீர் (நைல் நதி) போன்ற முதலீட்டினை மேற்கொள்ளும் திட்டங்களை கைவசம் வைத்துள்ளது.  இத்திட்டங்களை மேம்படுத்த இந்த விமானத் தாக்குதலென்ற காரணமே போதுமானதாகும். 

ஏற்கனவே, இந்த காரணத்தைக் கூறி நகரில் பீரங்கிகள், ஹெலிகொப்டர்கள், சிவி22 ஒஸ்பிரேஸ் ரக எறிகணை விமானங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. 

மேலும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டிருந்த 150 கடற்படையினரை டஜிபோரில் உள்ள தனது தளத்திற்கு ஒபாமா நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. டயிபோரிக்கும் தென் சூடானுக்குமிடையிலான தூரம் வெறும் ஆறு மணித்தியாலங்களேயாகும். 

அதேபோல் தென் சூடானை சுற்றியுள்ள தனது பிராந்திய இராணுவ முகாம்களிலும் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஏற்கனவே, சூடானிலிருந்து தென் சூடான் பிரிந்து செல்வதற்கு அமெரிக்கா இரு காரணங்களுக்காக தனது ஆதரவினை வழங்கியிருந்தது. ஒன்று, எண்ணெய் வள ஏற்றுமதிக்கான தனியுரிமையினை சூடான் அரசாங்கம் சீனாவிற்கு வழங்கியிருந்தமையாகும். மற்றையது எல்லை கடந்த இஸ்லாமிய தீவிரவாதத்திற்கான தளமாக சூடான் செயற்பட்டமையாகும். 

இவ்விரண்டிலும் அமெரிக்காவின் சுயநலமே காணப்பட்டது. தற்பொழுது, உள்நாட்டு நெருக்கடியையும் தனக்கு சாதகமாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. 

இந்த நிலையில் சீனாவின் தலையீடு என்னவாக இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதேவேளை, தலைநகர் ஜுபாவில் ஜனாதிபதி கீருடன் எதியோப்பியா மற்றும் கென்யா ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தையொன்றினை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கென்யாவின் தலைநகர் நைரோபியில் கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த எட்டு அரச தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

தென் சூடானிய நெருக்கடியினை முடிவுக்கு கொண்டு வரும் நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் இரு தலைமைகளுக்குமிடையிலான அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் அந்நாட்டின் மீதான சர்வதேசத்தின் கள்ளக் காதலை தடுத்து நிறுத்துவதன் மூலமே நிரந்தரமான தீர்வு எட்டப்பட முடியும். 

இதேவேளை, இந்த நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாவது காணப்பட வேண்டும்.  சிறிய தீப்பொறி போல உருவான நெருக்கடி 14 நாட்களுக்குள் தென் சூடானின் அனைத்து பிராந்தியங்களிலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. அதன் தாக்கம் அயல் நாடுகளிலும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டுமாயின், உடனடித் தீர்வு கட்டாய தேவையாகின்றது. 

சுதந்திரம் கிடைத்த பின்னரான  மிகவும் குறுகிய வரலாற்றினைக் கொண்ட தென்சூடான் மிக மோசமான வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளமையானது  அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும் அதேவேளை, எதிர்காலத்தில் பிரிவினை கோரும் நாடுகளினதோ அல்லது தீவுகளினதோ  சுதந்திர பிரகடனங்களுக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்குமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக