சனி, 21 டிசம்பர், 2013

காற்றினில் கலந்த “கறுப்பு வைரம்’

சா.சுமித்திரை

அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்த மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் குரல் மௌனித்து விட்டது. 

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி, மனித நேயத்தை  சிதைத்து, அவல நிலைகளும் அநீதிகளும் எங்கெல்லாம் மேலோங்கி நிற்கின்றதோ, அங்கெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரோ ஒருவர் தன்னை அவர்களுக்காக அர்ப்பணித்து போராடுவது வரலாறாகும். 

எனினும், அவர்களை எந்தளவிற்கு இந்தச் சமூகம் கௌரவப்படுத்தி பார்க்கின்றதோ, அந்தளவிற்கு அவர்களை ஏனைய சமூகம் கண்கொண்டு பார்ப்பதில்லை. அதுவும் சில புரட்சியாளர்கள் மரணித்த பின்னரே அவர்களுக்கான அந்தஸ்து வழங்கப்படுகின்றது. எனினும், ஒரு சிலரையே வாழும் போதே சர்வதேசம் பிரமித்துப் பார்க்கின்றது. 


மனிதநேயர் மார்டின் லூதர் கங், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன் என்ற வரிசையில் இடம் பிடித்தவர் தான்  நெல்சன் மண்டேலா. தன் இனத்தவர்களை மட்டுமல்லாது, உலகிலுள்ள அனைத்து இனங்களையும் நேசித்து அவர்களுக்காக சுவாசித்தவர் தான் இந்த நெல்சன் மண்டேலா. 

அத்தகைய பெருந்தகையும் மனித நேயத்தின் அடையாளமுமாக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் ஜோஹனர்ஸ் பேர்க்கிலுள்ள தனது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலமானார். 

சொந்த மண்ணிலேயே தன்னினம் அடக்கி ஒடுக்கப்படுவதைக் கண்டு, பொங்கியெழுந்த நெல்சன் மண்டேலா வெள்ளையர்களுக்கெதிராக போராடி வென்றார். ஆயினும், இயற்கையுடன் போராட முடியாது, தன் ஆத்மாவையும் இந்த  இயற்கையுடனேயே சேர்த்துக் கொண்டார். 

மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், தென்னாபிரிக்க வரலாற்றில் முதற் தடவையாக ஒரு அரச தலைவருக்கு 12 தினங்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், பிரதிநிதிகள், குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் என பெருந்தொகையானோர் மறைந்த மா மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மண்டேலாவின் உழைப்பினால், சமாதானமான தென்னாபிரிக்காவை காண்கின்றோம் என பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது இரங்கல்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

தென்னாபிரிக்கா தனது புதல்வனை இழந்து விட்டதென அந்நாட்டின் ஜனாதிபதி ஜேகப் சுமா தெரிவித்துள்ளதுடன், மண்டேலாவை சந்தித்ததே தனது வாழ்க்கையில் கிடைத்த பெரும் கௌரவம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மண்டேலா நீதிக்கான ஒரு இலச்சினை. மண்டேலாவின் உதாரணங்களை எமது வாழ்நாட்களில் கடைப்பிடிப்போம் என ஐ.நா.செயலாளர் பான்கீமூன் தெரிவித்துள்ளார். 

நெல்சன் மண்டேலா என்ற உதாரண புருஷர் இல்லாவிடின் எனது வாழ்க்கையைக் கற்பனை செய்திருக்க முடியாதெனவும் உலகுடன் அசாதாரண மனிதரைப் பகிர்ந்து கொண்ட மண்டேலாவின் குடும்பத்தினருக்கு நன்றிகள் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இதேபோல, சர்வதேச தலைவர்களும் மாமனிதர் மாண்டேலாவிற்கு தனது இறுதி அஞ்சலியை காணிக்கையாக்கி வருகின்றனர். இவர் தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவராவார். மண்டேலா குலு என்ற கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். சிறு வயது முதலே ஆட்சி விவகாரங்கள், நிர்வாகம், சமூக நலன்கள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். 

மண்டேலா, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டதுடன், 1941 இல் ஜொகனஸ் பேர்க்கில் சட்டத்துறை படித்தார். 
இந்நிலையில் பல சொல்லொணாத் துயரங்களை பிரிக்க கறுப்பினத்தவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு பொங்கியெழுந்த மண்டேலா, தம்மை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் வெள்ளையரைத் துரத்த வைராக்கியம் கொண்டு அகிம்சை வழியில் போராடினார். 

அகிம்சை வழி வெற்றியளிக்காமையையடுத்து கெரில்லா யுத்தத்தைக் கையாண்டு வெற்றி கொண்டார். 1964 இல் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த அவரின் சிறைவாசம் 27 வருடங்களாகத் தொடர்ந்தது. 

உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம். 1994 இல் மண்டேலா தென்னாபிரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், தென்னாபிரிக்காவில் 300 வருடங்கள் நீடித்த வெள்ளையரின் ஆட்சி முடிவிற்கு வந்தது. இருந்த போதிலும், மண்டேலாவிற்கெதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 2008 இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். 

மண்டேலா, பொது வாழ்க்கையிலிருந்து விலகிய போதிலும் கடந்த 15 வருடங்களாகத் தன் நாட்டிற்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக