ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மற்றொரு போருக்கு ஜப்பான் தயாராகிறதா?

சா.சுமித்திரை

நான்காவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், அதிக பட்ச இராணுவ செலவீனங்களைக் கொண்ட 5 ஆவது நாடாகவும் உள்ள ஜப்பான், உலக நாடுகளின் மீது போர் தொடுப்பதற்கு தயாராகி வருகின்றனவா? என்ற சந்தேகம் அண்மைக் காலமாக வலுவடைந்துள்ளது.

அதற்குக் கட்டியம் கூறுவது போல, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யவுள்ளமை, வருடாந்த இராணுவ செலவீனங்களை அதிகரித்தமை, சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு பிரதமர் ஷின் ஷோ விஜயம் செய்திருந்தமை, சீனா தனது வான் பரப்பு எல்லையை பிரகடனப்படுத்தியமை என ஒவ்வொரு சம்பவங்களாக அரங்கேறி வருகின்றமையானது,  சர்வதேச ரீதியில் அதிர் வலைகளையும் பதற்ற நிலைமையினையும் தோற்றுவித்துள்ளது. 

குறிப்பாக, தமது படைகள், பிற நாடுகளின் மீது படையெடுக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஜப்பான், உலகப் போரின் போதும் இயற்கை அனர்த்தங்களின் போதும் பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது. சுனாமி தாக்கிய போது ஜப்பானின் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

ஜப்பானின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்குமென பொருளியலாளர்களால் எதிர்வு கூறிக் கொண்டிருக்கும் போதே, சாம்பலில் இருந்து எழும்பும் பீனிக்ஸ் பறவைகள் போல, அனைவரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு அதன் பொருளாதாரம் அபிவிருத்தி கண்டிருந்தது. 

குறிப்பாக, ஜப்பானின் அபிவிருத்தி எப்பொழுதுமே வியப்புக்குரியதாகவே அமைந்துள்ளது. அதேசமயம், இரண்டாம் உலகப் போரின் போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே தனது முப்படைகளும் பயன்படுத்தப்படுமென வரையறை செய்யப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை  கருத்திற் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக பிரதமர் சின்சோ அபே தெரிவித்திருந்தார். 

மேலும், நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு, 68 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் மாறிவரும் சூழலுக்கேற்ப, அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்படுமெனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை, கடந்த மாதம் 26 ஆம் திகதி சர்ச்சைக்குரிய யாசூகூனி நினைவகத்திற்கு அபே விஜயம் செய்திருந்தமையானது. இராஜதந்திர அனர்த்தமொன்றினை உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. 

பிரதமர்  அபே, யாசூகூனி நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய விவகாரமானது, சர்வதேச கவனத்திற்குள்ளாகியுள்ள அதேசமயம், இந்த விஜயம் தனது தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஒரு வருடத்தை குறிப்பதாகவும், ஜப்பான் மீண்டும் ஒரு போதும் யுத்தத்தை மேற்கொள்ளாது என்ற உறுதி மொழியை புதுப்பிக்கவே அங்கு சென்றதாகவும் அவர் கூறியிருப்பது பலரையும் சினமடைய வைத்துள்ளது. 

ஆனால், அவரது அரசாங்கம் தான், இந்த தசாப்தத்தில் முதற் தடவையாக இராணுவ செலவீனங்களை அதிகரித்துள்ளதுடன் கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளின் மீதான பதற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. 

ஏனெனில், 1945 களிலிருந்து, சென்யாகு அல்லது டையாகு தீவுகளின் பிரச்சினை, யப்பானுக்கும் சீனாவுக்குமிடையே இருந்து வருகின்றது. இத்தீவுகளை தாய்வானும் உரிமை கோரி வந்த நிலையில், அத் தீவுக் கூட்டங்களை அதன் உரிமையாளரிடமிருந்து ஜப்பான் 2012 இல் வாங்கிக் கொண்டது. இதனையடுத்து, சீனா ஆத்திரமடைந்துள்ளது. 

இந்நிலையிலேயே, தற்பொழுது சீனாவுடன் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும், சீனாவிற்கெதிராக அமெரிக்க யுத்த தயாரிப்புகளை ஜப்பான் கொள்வனவு செய்து வருகின்றது. இதேசமயம், பிராந்திய பதற்ற நிலைமையை அதிகரிக்கும் வகையில், அபே யாசூகூனி நினைவகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  

கடந்த 7 வருடங்களில் இங்கு சென்ற முதலாவது ஜப்பானிய பிரதமராக அபே உள்ளார். அபேயின் விஜயமானது, ஏற்கனவே, அப்பிராந்தியத்தில் தூண்டி விடப்பட்டுள்ள பதற்ற நிலைமையை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. 

ஆசியாவின் நாசி கல்லறை என வர்ணிக்கப்படும், யாசூகூனி நினைவகத்திற்கு அபே சென்றமைக்கு சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. 

யாசூகூனி கல்லறை ஒரு யுத்த நினைவிடமாக மட்டுமல்லாது, 1930, 1940 களின் ஜப்பானிய இராணுவ வாதத்தின் முக்கிய சின்னமாகவும் அமைந்துள்ளது. மேலும் யுத்த குற்றவாளிகள் உட்பட  யுத்தத்தின் போது கொல்லப்பட்ட 2.5 மில்லியன் ஜப்பானியர்களையும் அடையாளப்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றது. இந்நிலையில் அபேயின் யாசூகூனி விஜயமானது, ஜேர்மனியில் ஒரு  அரசியல் தலைவர், நாசி தலைவர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்தால் எவ்வாறு இருக்குமோ அதற்கு ஒத்த விதத்திலேயே அமைந்துள்ளது. 

இதேவேளை, யப்பான், சீனா மற்றும் தாய்வான் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக கிழக்கு சீனக் கடலில் ஒரு வான்  பாதுகாப்பு வலயத்தினை கடந்த மாதம் சீனா பிரகடனப்படுத்தியிருந்தது. 

இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு இரு நாட்களுக்குள்ளேயே அமெரிக்காவின் பி52 ரக போர் விமானங்கள் பறந்து சீனாவிற்கு தண்ணி காட்டின. தொடர்ந்து, ஜப்பானும் தென்கொரியாவும் தாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர், என்பது போல தங்களது போர் விமானங்களையும் அந்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டிருந்தன. 

இந்தவொரு காரணத்தினைக் காட்டியே, இவ்வருடத்துக்கான இராணுவ செலவீனத்தையும் அபே தலைமையிலான அரசாங்கம் அதிகரித்துள்ளது. 
இந்த நெருக்கடிக்குள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், சைபர் தாக்குதல் உபகரணங்கள் மற்றும் செய்மதிகளை செயலிழக்கச் செய்யும் உபகரணங்கள் என அனைத்தும் நவீன ரகத்திலான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவே இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சர்ச்சைக்குரிய தீவுகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய வாகனங்கள் மற்றும் சத்தமின்றி சென்று தாக்கும் போர் விமானங்கள் ஆகியவையும் வாங்கப்படுவதாக அபேயின் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

ஜப்பானின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் அது யுத்த பிரியமுள்ள நாடாகவே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், சீனா மற்றும் பலமிக்க நாடுகள் யுத்தத்திற்கு தயாராகி வருகின்ற அதேசமயம், சாதாரண நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களுக்கும் தூவமிட்டு வருகின்றன. 

இத்தகையதொரு மோசமான நிலைமை, மூன்றாம் உலக யுத்தத்திற்கான அறிகுறியாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே, இனிமேலும் யுத்தம் ஏற்படுமாயின் அது நீருக்கான யுத்தமாக, அல்லது நீர் சார்ந்த யுத்தமாகவே இருக்குமென எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவு விவகாரமும் நீர் சார்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, மூன்றாம் உலகப் போருக்கு ஜப்பான் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக