சனி, 12 அக்டோபர், 2013

இலங்கையரின் விதியைத் தீர்மானிக்கும் வீதிகள்

சா. சுமித்திரை

 ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றவென  அரசு எடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் காபெட்  வீதியிடல் திட்டம் முன்னிலை பெறுகின்றது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படுகின்ற அல்லது ஏற்படப் போகின்ற அபிவிருத்திகளுக்கு சிறப்பான போக்குவரத்து பிரதான காரணியாக அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நகரங்கள், கிராமங்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பல கோடி ரூபா செலவில்  காபெட் கொங்கிரட் வீதிகள் இடப்பட்டு வருகின்றன. 

வடக்கினையும் தெற்கினையும் இணைப்பதாகக் கூறிக் கொண்டு சன நடமாட்டம் இல்லாத வன விலங்குகளின் பகுதிகளையும் ஊடறுத்துக்  கூட வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

ஒருபுறம்  வீதி அபிவிருத்தி , புனரமைக்கப்பட்ட வீதிகள் பயனாளிகளிடம் கையளிப்பு என திறப்பு விழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையிலே மறுபுறம் வீதி விபத்துகளும், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

மனிதனின் விதியை வீதி விபத்துக்களே தீர்மானிக்கின்றன என்று சொல்லும் அளவிற்கு அவை மலிந்து காணப்படுகின்றன. தினமும் செய்தித் தாளைப் புரட்டும் போதோ அல்லது இணையச் செய்திகளைப் பார்க்கும் போதோ விபத்துகள் மட்டுமே பிரதானமாக இடம்பெற்றிருக்கும். 

இலங்கையில் நாளொன்றுக்கு 100 வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ் விதம் வருடமொன்றுக்கு 50 ஆயிரம் வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன. இவற்றில் 20 ஆயிரம் வீதி விபத்துகள் பாரதூரமானவையாகும். வாகன விபத்துகளினால் நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார். 

 2010 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 630  பேரும், 2011 இல் 2 ஆயிரத்து 684 பேரும் வாகன விபத்துக்களினால் பலியாகியுள்ளனர்.  2012 ஆம் ஆண்டில் 42,145 வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 444 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 320 பேர் தனியார் பஸ் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர். மது போதையிலும் , மித மிஞ்சிய வேகமாகவும் மோட்டார் வாகனங்களையும் , மோட்டார் சைக்கிளையும் மற்றும் முச்சக்கர வண்டிகளையும் ஓட்டுபவர்களே இத்தகைய கோர வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றனர். 

இதனைவிட தலைநகர் கொழும்பிலும் ஏ 9 வீதியிலும் தனியார் பஸ் சாரதிகளுக்கிடையே ஏற்படும் போட்டியால் வேகமாக பஸ்களை செலுத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  இதன் மூலம் வாகன விபத்துக்களுக்கும் வழி கோலுவதுடன் அதனுள் பயணிக்கும் பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பஸ் சாரதி திடீரென வேகத்தை அதிரிக்கும் போது அதில் பயணிக்கும் பயணிகள் விழுந்து காயங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. 

 இதே சமயம் பாதசாரிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திடீரென்று வீதியின் இரு பக்கங்களையும் பார்க்காமல் கடக்கும் போதும் அதிகளவிலான வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன.  இதனை விட பாதசாரிகள் மஞ்சள் கோட்டுக் கடவையினால் கடக்கும் போதே அவர்களை வந்து மோதி விட்டு தலைமறைவாகியுள்ளனர் எத்தனையோ சாரதிகள். 

 கடந்த வருடம் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டினைக் கடந்த இரு சிறுவர் உட்பட மூவரை வாகனமொன்று மோதி விட்டுச் சென்ற சம்பவத்தை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. இதுபோன்ற விபத்துகள் தற்பொழுது அதிகளவு இடம்பெறுவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர்  அண்மையில் தங்களிடமுள்ள புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி கருத்து வெளியிட்டிருந்தார். 

 இதேவேளை , விபத்தின் மூலம் மரணங்களை ஏற்படுத்தி விட்டு சட்டத்தின் முன் வராது தப்பிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு சில பொலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை போகின்றமை வேதனை தரக் கூடியது. 

வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் பிரதானமானது வீதி ஒழுங்கு  விதிகளை அனுசரித்து நடக்காமையாகும். குறிப்பாக தலைநகர்  கொழும்பில் ஆங்காங்கே மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல சாரதி பயிற்சி மையங்கள் திறக்கப்படுகின்றன. அப் பயிற்சி நிலையங்களில் அநேகமானவை  இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன. சாரதி பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு தேவையான நேரம் வழங்கி பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. மாறாக அதிக மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் நோக்கில் பயிற்சி மையங்கள் செயற்படுகின்றன.  

 இதனால், சாரதிப் பயிற்சியை முறைப்படி முடிக்காது இலஞ்சம் கொடுத்து சாரதி அனுமதிப் பத்திரம் பெற்று வாகனங்களை செலுத்துகின்றனர். சாரதிப் பயிற்சியை முறைப்படி பூர்த்தி செய்யாது, சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களே அதிகமென ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.   ஆயினும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையிலே விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வேகமாக வாகனங்களைச் செலுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை ஓட்டுநர்கள் சிந்தித்துப்  பார்க்கத் தவறுவதும்  வீதி விபத்துகளுக்குக் காரணமாகும். நான் பல மாதக் கணக்காக எனது வாகனத்தை வேகமாகவே செலுத்துகின்றேன். ஒரு நாளும் எந்த விபத்திலும் சிக்கவில்லை. நான் வாகனம் செலுத்துவதில்  அவ்வளவு திறைமைசாலியென சிலர் நினைக்கலாம். 

 ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல என்றோ ஒரு நாள் ஏற்படும் விபத்தினால் கிடைக்கும் விளைவுகள் பாரதூரமானவையே என்பதை மறுக்க முடியாது. இதனை விட இலங்கையில் வாகனம் செலுத்தக் கூடிய அதிவேகம் என்னவெனும் அறிவித்தல் பலகையோ அல்லது வளைவுகள் , செங்குத்துப் பாதை போன்றவற்றுக்கான வீதிக் குறியீடுகளோ அநேகமான வீதிகளில் காணப்படாமையும் ஒரு குறையாகும். 

இதனைவிட சில நகரங்களில் வைக்கப்பட்டிருக்கும் வீதிச் சட்ட ஒழுங்கு குறியீடுகள் மற்றும் அறிவித்தல் பலகைகளை சில விஷமிகள் கழிவு ஒயில் மற்றும் மை தெளித்து சேதப்படுகின்றனர். இத்தகைய சமூக விரோதிகளின் செயற்பாடுகள் உயிரிழப்புகள் ஏற்பட மட்டுமே வழி கோலும். 

 அதேசமயம் அநேகமான வீதிகளில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை . அல்லது செயலிழந்து காணப்படுகின்றன. இதனாலேயே இரவு வேளைகளில் வீதி விபத்துகள் அதிகளவு  இடம்பெறுவதற்கு காரணமாகின்றன.  வீதிகளில் தெரு விளக்குகளைப் பொருத்தவும் மாதாந்தம் அவை செயபடுகின்றனவா ? என அறிந்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அந்தந்தப் பகுதி மாநகர , நகர சபை அதிகாரிகள் முன் வர வேண்டும். 

 இந் நடவடிக்ககளினாலும் வீதி விபத்துகளை குறைத்துக் கொள்ளக் கூடிய அதேசமயம் வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகள், நாய்களின் தொந்தரவுகளையும் கட்டுப்படுத்த இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏனெனில் வீதி விபத்துக்களுக்கு வீதிகளுக்குக் குறுக்கே திடீரென பாயும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களும் காரணமாக அமைந்துள்ளன. 
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு பிரதான காரணிகளாக இவையே சொல்லப்படுகின்றன. சில சமயம் வாகனங்களுடன் மோதுண்டு என்பு முறிவுகள் ஏற்படும் சில கட்டாக் காலி மாடுகள், கவனிப்பாரற்று சில நாட்கள் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. 

இதேவேளை வாகன விபத்துகள் ஏற்படுவதற்கு இன்னொரு காரணம், வீதிகள் சரியாக  போடப்படாமையாகும். சில வீதிகள் அதிகம் வழுக்கிச் செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும் சில வீதிகள் குண்டும் குழியுமாக உள்ளன. அத்துடன் வேகமாக செல்லும் நெடுஞ்சாலைகளில்  ஏற்படும் வளைவுகளுக்கு முன்னால் வேகத் தடைகள் போடப்படுவதில்லை. 

 இதன் மூலம் சாரதி செலுத்தி வந்த வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமலே வளைவில் திரும்பும் போது வீதியின் அருகிலிருக்கும் வீடுகளின் மீதே கட்டிடங்களின் மீதோ மோத வேண்டிய நிலையேற்படும்.  எனவே, வேகத்  தடைகள் தேவையான இடங்களுக்கும் பாதசாரிகள் கடவைகள் தேவையான இடங்களுக்கும் போடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். 

அதேபோல பயணிப்பதற்குத் தகுதியில்லாத வாகனங்களும் தற்பொழுது வீதிகளில் செலுத்தப்படுகின்றன. அதாவது பிரேக் இல்லாமை, எஞ்சின் கோளாறு , வாகனங்களை அலங்கரிக்கவென புதிய உலோகப் பொருட்களை இணைத்தல், ரயர்கள் தேய்ந்திருத்தல் போன்ற பல குறைபாடுகள் கொண்ட வாகனங்கள்,  வீதிகளில் செலுத்துவதற்கு தகுதியற்றவையாகும்.   

அதேவேளை, மது போதையில் வாகனம் செலுத்து வோருக்கு எதிராகக் கடும் சட்டங்கள் உள்ள போதிலும் அவர்கள் குறித்த அதிகாரிகளிடம் சிறு தொகை பணத்தைக் கொடுத்து விட்டு தப்பிச் செல்கின்றமை கவலை தரக் கூடியதாகும்.  இதனைவிட தொலைபேசியில் கதைத்துக் கொண்டும், குறுஞ் செய்தி அனுப்பிக் கொண்டும் வாகனங்களைச்  செலுத்துவதும் விபத்துக்குக் காரணமாகும். 

இதேவேளை, நீண்ட தூரம் பயணங்களின் போது வாகனச் சாரதிகள் இரவு முழுவதும் கண் விழித்தே இருக்க வேண்டியுள்ளது. இதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நீண்ட தூர பயணங்களின் போது வாகன சாரதிகள் தமக்குத் தேவையான அளவு ஓய்வினை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதனை விடுத்து வாகனங்களைச் செலுத்துவாராயின் அவரே உணராததொரு தருணத்தில் உறங்கிவிடுவார். இதுவும் பாரிய விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் வீதி விபத்துகள் குறைந்து கொண்டு வருகின்றன. ஆனால், ஆசிய நாடுகளில்  வீதி விபத்துக்கள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதிலும் இலங்கையில் தற்பொழுது வாகன விபத்துகள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கான அறிகுறியல்ல. 

 கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற 120, 150 வாகன விபத்துகளில் 10,890  விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சாரதிகளின் மது பாவனையால் 6,235 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. விபத்தில் உயிரிழப்பவர்களை விட காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். அதுவும் இத்தகையோரில் எத்தனை பேரின்  எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது !

கடந்த கால யுத்தத்தால் ஊனமுற்றோரின் எண்ணிக்கையை விட விபத்துக்களால் அங்கவீனமானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையையே அண்மைக்கால புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. 

இலங்கையில் வாகன விபத்துகள் அதிகரிப்பதிற்கு வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த சரியான திட்டமிடல் இன்மை  போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர்களில் இரண்டு இலட்சம் பேருக்குச் சாரதி ஆசனத்திற்குப் பின்னால் நிற்கக் கூடத் தகுதியில்லையெனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப் பெரும ஒரு தடவை பகிரங்கமாகவே கூறிச் சாரதிகளின் இலட்சணத்தை வெளிப்படுத்தியிருந்தார்
அரசாங்கம் “மதுவுக்கு முற்றுப் புள்ளி’ என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மது போதையால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்த நிலையிலேயே மதுவுக்கு முற்றுப் புள்ளி எந்தளவிற்கு வெற்றியடைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. எனவே,  எங்கோ ஒரு இடத்தில் காணப்படும் குறைபாட்டைக்  கண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். 

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் சிறைத் தண்டனையும் பெருமளவான அபராதமும் விதிக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாக கடந்த வருடம் வீதி விபத்து தவிர்ப்பு வாரத்தை சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்தது. 

 அக்டோபர் 26 ஆம் திகதியன்று உலகின் வீதி விபத்து தவிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை மையப்படுத்தி எமது நாட்டிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதனொரு பகுதியாக விபத்துகளைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு தடவையாவது அந்தந்த பிரதேச கிராம சேவகர்களினூடாகவும் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளினூடாகவும் மேற்கொள்ள பொலிஸ்  திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

அதேபோல  பாடசாலை மாணவர்களிடையேயும்  கருத்தரங்குகள், நாடகங்கள் மூலமும் விபத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை . ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளால் தேசிய பொருளாதாரத்தில் 9.34 பில்லியன் ரூபா நஷ்டமாகின்றதாகவும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

உயிரிழப்புகள் , உடல் அங்கவீனம், பொருளாதார  நஷ்டம் எனப் பாரிய பாதிப்புகளை வீதி விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றன. வீதி விபத்துகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி மேலும் முன் வராவிடின் ஒவ்வொரு இலங்கையரின் விதியையும் வீதி விபத்தே தீர்மானிக்க வேண்டிய  நிலையேற்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக