சனி, 5 அக்டோபர், 2013

இலங்கையிலிருந்து விடைபெற்ற தந்தி

சா. சுமித்திரை  

இலங்கையில் சுமார் 115 வருடங்களாக தனக்கென ஒரு தனித்துவத்தில் தொடர்ந்து சேவை செய்து வந்த தந்தி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் சகல தபால் காரியாலயங்களிலும் இருந்து விடை பெற்றுச் சென்றுள்ளது. 

 நாடளாவிய ரீதியிலுள்ள சகல  தபால் நிலையங்களில்  இருந்தும் தந்திச் சேவை அக்டோபர் முதலாம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர்  ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். 

 தந்திச் சேவை இன்றைய தலைமுறையினருக்கு சிலவேளைகளில் புதியதாக இருக்கலாம் . இல்லையெனில்  அதன் பெறுமதி கூட தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், எம் மூத்த தலைமுளைறயினருக்கு இந்த செய்தி நிச்சயம் கவலை தரக் கூடியதாக இருக்குமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 

 ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொலைத் தொடர்பு வசதிகள் பெரியளவில் வளர்ச்சி கண்டிருக்கவில்லை. இக் காலப் பகுதியே தந்திச் சேவையின் பொற்காலம் எனலாம். நகரப் பகுதியில் பணியாற்றும் மகன், பெற்றோரை கிராமத்திற்கு வந்து பார்க்கப் போகின்றான் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பது தந்தியே. வெளிக் கிராமங்களில் வேலை செய்யும் கணவனின் நலத்தை மனைவிக்கு சொல்வதும் தந்தியே. ஏன் கிராமத்திலுள்ள பெரிசுகளுக்கு எதுவும் நடைபெற்று விட்டால் நகரப் பகுதிகளிலுள்ள உறவுகளுக்கு செய்தியைக் கொண்டு செல்வது தந்தியே. 

 சிலருக்கு தந்தி கிடைத்து விட்டால் தலை கால், புரியாத மகிழ்ச்சியாக கொண்டாடுவர். மேலும் சிலர் தந்தி வந்து விட்டால் பதற ஆரம்பித்து விடுவர். இவ்வாறு பல வரலாற்றுத் தடயங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தந்தியை இனிமேலும் எவரும் கொண்டாடவும் முடியாது. எதிர்பார்த்துக் காத்திருக்கவும் முடியாது. 

தபால் திணைக்களமும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனமும் இணைந்து இணக்கப்பாட்டுக்கு வந்தமையையடுத்து தந்திச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எந்தவொரு தபால் காரியாலயஙகளிலும் தந்தி இனிமேல் பொறுப்பேற்கப்பட மாட்டாது. 

வங்கிகள் மற்றும் பொதுச் சேவை நிறுவனங்கள் தந்திச் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வந்தன. இச் சேவையால் ரயில் சேவைகள் , பங்குச் சந்தைகள் , வர்த்தகங்கள் மேம்பட்டன. நிறுவனங்களுக்கிடையிலான மற்றும் உள்ளூர் தகவல் பரிமாற்றச் செலவு குறைவடைந்தது. 

 இலங்கையிலே வறிய மக்கள் விரும்பக் கூடிய சேவையாக தந்தி விளங்கியது. வேலை நியமனங்கள்,  உடல் நிலை , மரணச் செய்திகள், சடங்கு ,திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள், வங்கி நிதி நிலைகள் ஆகியவற்றிற்கு  தந்திச் சேவை முதன்மையாக விளங்கியது. அதேசமயம் சில அரச அலுவலக திணைக்கள ஊழியர்கள்,ö வளியிடங்களுக்குச் சென்றிருக்கும் போது தமக்குத் தேவையான லீவு மற்றும் ஏனைய விடயங்களை தந்திகள் மூலமே அறியத் தர வேண்டுமென்ற கட்டாயமும் இருந்து வந்தது. 

 ஆனால், தற்பொழுது இணையம், மின்னஞ்சல் ,தொலைநகர், குறுந்தகவல் போன்ற தொழில் நுட்ப தொலைத் தொடர்பு சாதன முறைமைகளின் வருகையால் தந்திச் சேவை தனது வாடிக்கையாளர்களை இழந்தது.  இதனால் பல கோடி ரூபா நட்டத்திலேயே வருடாந்தம் இயங்க ஆரம்பித்தது. நாளொன்றுக்கு 50 தந்திகள் வரையே அனுப்பப்பட்டு வந்தன. இதனால் தான் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தந்திச் சேவையை இடைநிறுத்த இலங்கை அரசாங்கம் முடிவுக்கு வந்தது.

 கடந்தாண்டில் 3 பில்லியன் ரூபாவை அஞ்சல் சேவை நஷ்டமாக சந்தித்திருந்தது  என தபால் துறை அமைச்சர் ஜீவன் குமார துங்க சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதில் பணியாற்றும் 1800 பணியாளர்களையும் அஞ்சல் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

 பலரின் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தித் தந்த தந்திச் சேவை இன்று எம்மை விட்டுச் சென்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவிலும் தந்திச் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல மலேசியா (2012), அவுஸ்திரேலியா (2011), நேபாளம் (2009),  அமெரிக்கா (2006), அயர்லாந்து (2002), நெதர்லாந்து (2001) உள்ளிட்ட நாடுகளும் தந்திச் சேவையை நிறுத்திவிட்டன. 
1898 ஆம் ஆண்டு டச்சு காலனித்துவ ஆட்சியின் போது இலங்கையில் தந்தி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலங்களில் பிரித்தானிய நிர்வாகம் குதிரை வண்டில்களின் மூலம் தந்திகளை பரிமாறி  வந்தமை குறிப்பிடத்தக்கது. 

19 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட  பின்னர் மின்சாரத் தந்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. 1900 களின் ஆரம்பத்தில் வானொலி கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் அறிமுகப்படுத்தியது.  மின்சாரத் தந்தியில் கருவிகள் மின் காந்த சக்தியின் துணைக் கொண்டு இயக்கப்படுகின்றன. 1837 இல் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்ஸ் என்பவரே மின்சாரத் தந்தியைக் கண்டுபிடித்தார். அதனாலேயே மோர்ஸ் தந்தியென அழைக்கப்படுகிறது. 

1890 களின் ஆரம்பத்தில் அறிஞர் நிக்கோலா தெஸ்லாவின் குழுவினர் கம்பியில்லாத் தந்தி முறைமைமை அறிமுகப்படுத்தியிருந்தனர். 1895  மே மாதம் 5 ஆம் திகதியன்று  பொது மக்களுக்கு அலெக்சாண்டர் பப்வோவா தனது கம்பியில்லாத தந்திக் கருவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அறிவியல் துறையின் பாரிய வளர்ச்சியின் விளைவாக பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டன. 

 1844 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதியன்று உலகின் முதல் தந்தி அனுப்பப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனுக்கும் பால்டி மோர் நகருக்குமிடையே அனுப்பப்பட்டது. தொலைத் தொடர்பு புரட்சியை ஏற்படுத்திய தந்தியின் வரலாறு உண்மையிலேயே நீண்டதொன்றாகும். கிரேக்க மொழியில் ரெலி என்றால் தூரம் , கிராபி என்றால்  எழுதுவது எனப் பொருள்படும்.  

இலங்கை, இந்தியா  ஆகியவற்றில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தந்திச் சேவை அறிமுகமானது. வெள்ளையனே வெளியேறு எனக் குரல் கொடுத்து அவர்களை வெளியேற்றிய பின்னரும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சேவைகள் தொடர்கின்றன. அச் சேவைகளிலொன்றான தந்திச் சேவை நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பெல்ஜியம்,கனடா , பிரான்ஸ் ,ரஷ்யா, ஹங்கேரி, இஸ்ரேல்,ஸ்லாவேனியா, சுவீடன் ,ஜப்பான், மெக்சிக்கோ, பஹ்ரேன் ஆகிய நாடுகளில் ஏதோவொரு வழியில் தந்திச் சேவை இன்னும் வழங்கப்படுகின்றது. 

1999 இல் நியூசிலாந்தில் தந்திச் சேவை நிறுத்தப்பட்டு பின் 2003 இல் பொது மக்களை தவிர்த்து நிறுவனங்களின் பாவனைக்கு மட்டும்  சேவை வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் 2003 இல் பிரிட்டனின் தந்திச் சேவை தனியார் மயமாக்கப்பட்டது. 

இந்தியா தான் தந்திச் சேவைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியிருந்தது. உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் புகார் கூட ஒரு மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. ஏராளமான வழக்குகள் இதுபோல் விசாரிக்கப்பட்டு பலர்  பயனடைந்துள்ளனரென இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  அத்தகைய பல பயன்களை பெற்ற இந்தியர்கள் கூட கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் தந்திச் சேவைக்கு விடை கொடுத்திருந்தனர். 

உலகப் புகழ் பெற்ற தந்திச் சேவை  
1. 1844 மே 24 இல் சாமுவேல் மொர்ஸால், வாஷிங்டனிலிருந்து பால்டிமோருக்கு அனுப்பிய முதல் தந்தி . 

2. 1897 இல் பிரபல ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவைன் இறந்து விட்டதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. லண்டனில் இதைப் படித்த மார்க், அமெரிக்க பத்திரிகைகளுக்கு  அனுப்பிய தந்தியில் எனது இறப்பு பற்றி தாங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளீர்கள் எனக் கிண்டலாக குறிப்பிட்டார். 

3. ஆங்கிலத்தில் மிகச்  சிறிய தந்தியை அனுப்பியவர் அயர்லாந்து எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட். அப்போது வெளியிடப்பட்ட தனது  புத்தகம் எப்படி விற்பனையாகின்றது என்பதை அறிய புத்தக வெளியீட்டாளர்களுக்கு ஒரு தந்தி அனுப்பினார். பாரிஸிலிருந்து லண்டனுக்கு அனுப்பிய தந்தியில் அவர்  ? என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தகம் எப்படி விற்கிறது என்பது தான் அதன் அர்த்தமாகும். அதற்குப் பதிலாக அவர் ?  என்று மட்டும் குறிப்பிட்டு புத்தக வெளியீட்டாளரும் தந்தி அனுப்பினார். இதற்கு அர்த்தம் ஆச்சரியப்படும் வகையில் நன்றாக விற்பனையாகிறது என்பதாகும். இன்று வரை இச் சாதனை முறிடியக்கப்படவில்லை. 

4. 1903 இல் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலிருந்து நண்பர்களுக்கு தந்தி அனுப்பினர் . அதில் வியாழன் காலை வெற்றிகரமாக 4 விமான ஓட்டங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

5. 1922  ஏப்ரல் 15 இல் டைட்டானிக் கப்பல் மூழ்கிக்  கொண்டிருந்த போது அதிலிருந்து கொடுக்கப்பட்ட தந்தியில் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். பயணிகளை படகுகளில் ஏற்றுகிறோம் . டைட்டானிக் எனக் குறிப்பிட்டிருந்தது.  

இவ்வாறு பல வரலாற்று தடங்களை தன்னகத்தே கொண்டு பயணித்துக் கொண்டிருக்கும் தந்தி என்னும் சகாப்தம் நம் நாட்டிலிருந்து விடை பெற்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக