திங்கள், 14 அக்டோபர், 2013

நோபல் பரிசுகள்-2013

சா.சுமித்திரை

மனித குலத்திற்கு அரிய சேவையாற்றுபவர்களை கௌரவித்து வழங்கும் நோபல் விருது, இவ்வருடத்திற்கான ஒவ்வொரு துறைகளின் சாதனையாளர்களின் பெயர்களும் கடந்த வார ஆரம்பத்திலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இரசாயனவியல், பௌதீகவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. 

அண்மைக்காலமாக, நோபல் பரிசு வழங்கும் நிகழ்வும், அதனையொட்டிய  விழாக்களும் உலகளாவிய  பொது நிகழ்ச்சியாக மாறி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதினை இரு அமெரிக்கர்களும், ஒரு ஜேர்மனியரும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஓமோன்கள்   நொதியப் பொருட்கள் மற்றும் மூலக் கூறுகள், கலங்களுக்குள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைக் கண்டு பிடித்ததற்காகவே மருத்துவத்துக்கான நோபல் பரிசு இந்த மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் யாவே பல்கலைக்கழகப் பேராசிரியர் ரொத்மான் (வயது 62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்சேக்மன் (64 வயது), 2008 இல் ஸ்ரான்ட் போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள  பேர்கிலே சுயோ டோப் (வயது 57) ஆகிய மூவருமே இந்த விருதினை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை, பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பெற்றோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். அணுக்கூறு பௌதீகத்திற்கான சிறப்புடன் பணியாற்றிய பிரிட்டன், பிரான்ஸ் விஞ்ஞானிகள் இருவர் இதனைப் பகிர்ந்து கொள்கின்றனர். 

1964 இல் சிறுதுகள்கள் எவ்வாறு பெரும் துணிக்கையாகவும் பொருளாகவும் உருவாகின்றன என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும் பொறிமுறையை பீற்றர் ஹிக்ஸ் மற்றும் பிரங்கோயிஸ் இங்லெற் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர். 

இவர்களது கண்டுபிடிப்பு, நவீன அணுக் கூறு பௌதீகத்திற்கு வழிகோலியுள்ளது. “ஹிக்ஸ் போசன்’ என்னும் கடவுளின் துகள், கடந்த வருடம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனை அங்கீகரிக்கும் வகையிலே, இவ்விரு விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

ஆயினும், கடவுளின் துகள் கண்டு பிடிப்புக்கு, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதில், சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த விருது சுவிற்ஸர்லாந்திலுள்ள சி.இ.ஆர்.என் பரிசோதனையின் கூடத்திற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென நோபல் பரிசுக்கான நடுவர் குழு உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வு கூடத்திற்குப்  பரிசு வழங்காததை ஒரு தவறான முடிவாகக் கருதுகிறேன். சி.இ.ஆர்.என். பரிசோதனைக்  கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இடம்பெற்ற ஆய்வின் பயனாகவே கடந்தவருடம் கடவுளின் துகள் கோட்பாடு முழுமை பெற்றுள்ளது. 

அந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முயற்சி அற்புதமானதும் பாராட்டத்தக்கதுமாகும். அத்தகைய ஆராய்ச்சி நடந்த பரிசோதனைக் கூடத்திற்கும் நோபல் பரிசு கிடைக்குமென பலர் எதிர்பார்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆயினும், இதுவரை காலமும் இவை சார்ந்த விருதுகள் தனிநபருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளது. இச்சர்ச்சை தொடர்பில் ஏனைய குழு உறுப்பினர்கள் என்ன முடிவெடுப்பார்களென பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 
புதன்கிழமை, இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இரசாயன செயற்பாடுகளை எதிர்வு கூறுவதற்கும், புரிந்து கொள்வதற்குமான கணினி வடிவங்களுக்கான ஆரம்பப் பணிகளை முன்னெடுத்த மார்ட்டின் கார்பளஸ், மிக்ஷெல் லெவிட் மற்றும் ஆரி வார்ஷல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிக்கலான இரசாயனவியல் செயல்முறைகளை, பல அடுக்கு மாதிரிகள் மூலம் எளிமைப்படுத்தி விளக்கும் செயல்முறையை உருவாக்கியதற்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

சூரியத் தகடுகளை திறனேற்றம் செய்வது, வாகனங்களின் செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகள் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் வேதியியல் விஞ்ஞானிகளுக்கு இவர்களது கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாகும். 

வியாழக்கிழமை, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவின் எழுத்தாளர் அலிஸ்  முன்ரோவுக்கு இவ்வருடத்துக்கான விருது வழங்கப்படுகின்றது. 

டியர் லைப் மற்றும் டான்ஸ் ஒப் தி ஹப்பி ஸ்டோஸ் ஆகியவை உட்பட பல நூல்களை எழுதிய 82 வயதான முன்ரோ, 1901 ஆம்ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை வெல்லும் 13 ஆவது பெண் மணியாவார். வெள்ளிக்கிழமை, இரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஒபிசி டபிள்யூ) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. 

நெதர்லாந்தினை தளமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பில் 190 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் இரசாயன ஆயுத ஒழிப்புக் குழுவினர், தற்போது சிரியாவில் இரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட இறுதிப் பட்டியலில் பாகிஸ்தானிய சிறுமி மாலாலா யூசுப்பின், இணைய ஊடுருவி எட்வெட் ஸ்நோடேன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இவ்வருடத்துக்கான அமைதி நோபல் பரிசு, சிறுமி மலாலாவிற்கே கிடைக்குமென சர்வதேச அளவில் பேசப்பட்டிருந்த நிலையில், இந்த அமைப்புக்கு கிடைத்துள்ளது. 

சமூகத்திற்கென அரிய தொண்டாற்றியவர்கள் எதற்கும் நிகரில்லாத பல ஆய்வுகளை  மேற்கொண்டவர்கள் மற்றும் பாரிய தொழில்நுட்பங்கள் அல்லது பயன் நிறைந்த உபகரணங்களைக் கண்டு பிடித்தவர்கள் என சேவையாளர்களை கௌரவிக்கும் விருதே நோபல் பரிசாகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. 

1895 இல், இரசாயனவியலாளர் அல்பிரட் நோபல் என்பவரால் நோபல் விருது ஆரம்பிக்கப்பட்டது. 1901 இல் முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு பரிசு கூட, அறிவிக்கப்படாமல் போன சில வருடங்களும் உண்டு. எனினும், குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு ஒரு தடவையாவது இந்த விருது அறிவிக்கப்படும் அதேசமயம் நோபல் பரிசு திரும்பப் பெறத்தக்கதல்ல. 

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதியன்று, சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் அல்பிரட் நோபெல் பிறந்தார். பொறியியலாளர் குடும்பத்தில் பிறந்த இவர், தனது வாழ்நாளை இரசாயனவியலாளராகவும், பொறியியலாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் பணியாற்றினார். 

1894 இல் நோபெல், போபர்சு இரும்பு மற்றும் உருக்கு ஆலையை வாங்கினார். அதனைபாரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். இவர் தான்  புகையில்லாத இராணுவ வெடி பொருட்களுக்கான மூலப் பொருட்களைக் கண்டு பிடித்தவராவார். இதுவே, பிரிட்டன் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்டுக்கும் முன்னோடியாகும். 

நொபெல் 335 இற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் டைனமைட் மூலக் கூறு பிரதானமாகும். இத்தகையதொரு தருணத்தில் 1888 இல் பிரான்ஸ் செய்தி நாளேட்டில் “மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்ற தலைப்பில் தனது இறப்புச்  செய்தி கண்டு  அதிர்ந்தார். அல்பிரட் நோபெல். 

ஆனால், அப்பொழுது அல்பிரட்டின் சகோதரரான லுட்விக்கே இறந்தவராவார். ஆனால், திரிபுபடுத்தப்பட்ட செய்தி, நோபெலை கவலையடையச் செய்தது. இதையடுத்து, தான் இறந்த பிறகு, எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என தீவிரமாக சிந்தித்தார். 

இந்தச் சிந்தனையில் உதயமானதே, நோபல் பரிசாகும்.  மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களை கௌரவிக்கும் இந்த நோபல் பரிசுக்கென அவரின் சொத்தில் 94  வீதமானவை செலவளிக்கப்படுகின்றன. 
1895 டிசம்பர் 10 ஆம் திகதி இத்தாலியின் சான்ரெமோ மாளிகையில் அல்பிரட் நோபெல் தனது 63 ஆவது வயதில் காலமானார். 

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் அமைதி ஆகிய துறைகளுக்கே, நோபெல்லின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். 1968 இல், சுவீடன் வங்கி தனது 300 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, பொருளியலுக்கான நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டது. 

அமைதிக்கான நோபல் பரிசை அளிக்கும் பொறுப்பு நோர்வேயிடமும், ஏனைய பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடன் அமைப்புகளின் வசமும் உள்ளன. 
பௌதீகவியலுக்கான முதல் நோபல் பரிசை வென்றவர் வில்கேம் கென்ராட் ரோங்க்டேன் ஆவார். எக்ஸ் கதிர்களை கண்டு பிடித்தமைக்காக, இவருக்கு இவ்விருதுவழங்கப்பட்டிருந்தது. இயற்பியலுக்கான பரிசு, கதோட்டுக் கதிர்களை கண்டு பிடித்த பிலிப் லெனார்ட்டுக்கு வழங்கப்பட்டது. 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேர்மனிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியியலாளரான வழங்கப்பட்டது. 1890 களில் எரிக் வான், தொண்டையழற்சிக்கான நோயெதிர்ப்பூக்கியை கண்டு பிடித்தார். அதுவரை காலமும் தொண்டையழற்சி நோயினால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாகவே, விருது வழங்கும் முறை உள்ளது. ஆனால்,  போட்டியாளர்களை யார் ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதே இதன் முக்கிய வேறுபாடாகும். 

நோபல் ஆணைக்குழு மூலம் 3 ஆயிரம் தனிநபர்கள் பற்றிய பரிந்துரை வடிவங்கள் அனுப்பப்படுகின்றன. பொதுவாக செப்ரெம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே பரிந்துரைகள் அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணைகள், அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள் என உயர் மட்டத் தலைமைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பரிந்துரை வடிவங்கள் திரும்பி வருவதற்கான  காலக்கெடு, விருது ஆண்டின் ஜனவரி 31 ஆம் திகதியாகும். நோபல் பரிசு குழு, இந்தப் பரிந்துரைகளிலிருந்து சுமார் 300 பேரை தெரிவு செய்யும். பின்னர், இவர்களிலிருந்து அந்தத் துறைகளைச் சேர்ந்த நிகரில்லா சேவையாற்றிய ஒரு சிலரை தெரிவு செய்து நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கும். 

வருடந்தோறும், நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் திகதியன்று அமைதிக்கான நோபல் பரிசு தவிர, ஏனைய அனைத்து விருதுகளும், சுவீடனிலுள்ள ஸ்ரொக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றது. அன்றைய தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வும்  இடம்பெறும். 

இதேவேளை, நோபல் பரிசினைப் பெறாமல் நிராகரித்தவர்கள், அதனை பெற அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் குறித்த நபர்களுக்கு அவ்விருதுக்கான அங்கீகாரம் வழங்காமை போன்ற வரலாறுகளும் இதற்கு உண்டு. 

மெய்யியலாளர், நாடகாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல்வாதி இலக்கியத் திறனாய்வாளர் என பல்முகங்களைக் காண்பித்தவர் ஜோன் பவுல் சாட்டர். 1964 இல் ஜோன் பவுலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். 

ஜோன் பவுல் சாட்டர் என கையெழுத்திடுவதும், நோபல் பரிசு பெற்ற ஜோன் பவுல் சாட்டர் என கையெழுத்திடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தானொரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாதெனக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற மறுத்து விட்டார். 

இதேவேளை, 1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜேர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதை ஹிட்லர் தடை செய்திருந்தார். இதனால், எழுத்தாளர் கார்ல் வான் ஒஸ்ட்ஸ்கி (1935), வேதியியலாளர் ரிச்சர்ட் (1938), மருத்துவவியலாளர் ஜெர்ஹார்ட் டொமாக் (1939) மற்றும் இரசாயனவியலாளர் அடொல்ப் புடேனட் (1939) ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுகளை பெற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

அதேவேளை, 2010 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும்  மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியோபோவிற்கு அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் லியூ சீன அரசினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால், லியூ இந்தப் பரிசை பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே, அந்த வருட நிகழ்வில் அவரது புகைப்படம்  வைக்கப்பட்ட நாற்காலிக்குப் பரிசளிக்கப்பட்டது. 

இவ்வாறு ஏமாற்றங்கள்,  நிராகரிப்புகள், சர்ச்சைகள், மகிழ்ச்சிகள் என பல விடயங்களுடன் நோபல் பரிசு என்னும் வரலாற்றுத் தடம் கடந்த 112 வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக