திங்கள், 14 அக்டோபர், 2013

ஸ்தம்பித நிலையில் அமெரிக்கா

சா.சுமித்திரை

அமெரிக்க அரச சேவைகள் அனைத்தும், கடந்த வார ஆரம்பத்திலிருந்து முடங்கிப் போயுள்ளன. சாதாரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அரச சேவையாளர்கள் ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டாலேயே அதன் பாதிப்புகள் என்னென்னவென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரச துறையின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டிருக் கும் பணிப்பகிஷ்கரிப்பால் அவர்கள் சார்ந்த ஏனைய பிரிவுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கும்.

ஆனால், அமெரிக்காவில் தற்பொழுது நிகழ்ந்திருப்பது பணி பகிஷ்கரிப்பல்ல. அப்படியிருந்தும் கடந்தவார ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவின் அரச சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த ஸ்தம்பித நிலைமையால், அரசின் மீது அமெரிக்கர்கள் விசனமடைந்து காணப்படுகின்றனர். அதேசமயம், அரசின் முடக்கம் தொடர்பாக அமெரிக்கர்கள் பல்வேறு வடிவங்களிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் “ஒபாமா கெயார்’ என்னும் சுகாதாரத் திட்டம், அக்டோபர் 1 இல் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே அதனை முறியடிக்க குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். ஒபாமாவின் இந்தத் திட்டம் வெற்றிகரமானது. இந்தத் திட்டம் ஒபாமாவின் தற்போதைய வரவு செலவுத் திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இத்திட்டத்தின் சட்ட அமுலாக்கம் தொடர்பாக ஆலோசித்திருந்த ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடன் இணைந்து குடியரசுத் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை தோல்வியடையச் செய்திருந்தார்.

ஆயினும், அக்டோபர் 1இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கு அனுமதியளிக்க இரு காங்கிரஸ் சபைகளும் மறுத்து விட்டதால் வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், அரசின் ஒரு பகுதி முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புதிய வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கம் காண அமெரிக்காவின் இரு சபைகளும் தவறிவிட்டதால் எல்லாமே ஸ்தம்பிதமடையும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த மோசமான நிலைமைகளுக்கு காரணமான “ஒபாமா கெயார்’ திட்டத்தினை விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினரான எதிரணியினரை “வலது சாரிகளின் பைத்தியக்காரத் தனங்கள்’ என இலாப நோக்கற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் குடும்பஸ்தரான மார்க் கூறியுள்ளார்.

2010இல் உருவான “ஒபாமா கெயார்’ என்ற அவரது திட்டமானது மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டதொன்றாகும். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் அவர் கூறியுள்ளார். இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் தங்கள் செல்வாக்கு சரிந்துவிடுமென குடியரசுக் கட்சி கருதுகிறது. 

அதேசமயம் இத்திட்டம் ஆரம்பத்தில் குடியரசுக் கட்சியினராலேயே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் இறுதி வடிவமும், அமுலாக்கமும் ஜனநாயகக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது என 49 வயதான குடும்பஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.

“ஒபாமா கெயார்’ என்று நன்கு அறியப்பட்டதும், குறைந்த வருமானமுடைய அமெரிக்கர்களுக்கு காப்புறுதி செய்யப்படாமலேயே சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பராமரிப்பு வாய்ப்பளிக்கும் சட்ட மூலமே, ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் பிணக்கிற்கான அடிப்படை விடயமாக அமைந்துள்ளது.

மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம், இரு கட்சி தலைமை களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளால் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறானதொரு தருணத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரமுமேயாகும்.
இந்நிலையில் ஒபாமாவின் இந்தத் திட்டத்தை தடுப்பதற்கு அல்லது தாமதமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். அதேசமயம், அவர்கள் இதற்காக கப்பம் கோருவதாகக் குற்றஞ் சாட்டியுள்ள ஒபாமா, தனது சுகாதார நலன்புரி சட்டமூலத்தினை சீர்குலைப்பதற்கு குடியரசுக் கட்சியினருக்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் கூறியுள்ளார்.

4 நாட்களுக்கு மேலாக தொடரும் அரசசேவை முடக்கத்திற்கு மத்தியிலே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வி கண்டுள்ளன. கடந்த 17 வருட கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இதுதான் முதல் முறையாகும். முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பதவிக் காலத்தில் 21 நாட்கள் அரச நிறுவனங்கள் முடங்கிக் கிடந்தன. இப்பொழுது, அமெரிக்க முடக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்தும். குறிப்பாக மசகு எண்ணெய் விலை பல மடங்காக உயரும். இதனைத் தொடர்ந்து உலக பொருளாதாரம் பல கட்டங்களாகப் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலைக்கு வழிகோலும்.

அமெரிக்காவின் கடன் நெருக்கடியை தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிடின் உலகப் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, மொத்தமாக அரசாங்கத்தையே முடக்கி வைத்துள்ளார் ஜனாதிபதி ஒபாமா என லூசியானா மாகாண ஆளுநரும், அமெரிக்க வாழ் இந்தியருமான பொபி ஜிண்டால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்பொழுது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பாரிய பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு சவால்களில் ஜனாதிபதி ஒபாமாவும் நாட்டின் தேசியத் தலைவர்களும் சரியான தீர்வைக் காணவில்லை. வெள்ளை மாளிகையில் யார் ஆட்சி செலுத்துகின்றார்கள்? யார் பிரமுகர்களாக இருக்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை. வெள்ளை மாளிகையில் உள்ளோர்கள் செயலிழந்து போய்விட்டனர் என்பதே பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச சேவை முடக்கத்தால் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஊழியர்களில் 70 வீதமானோருக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம், நாட்டின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றி வருகின்றது. கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை இத்துறை கவனித்து வருகின்றது.

வலு திணைக்களத்தின் பணிகளும் முடங்கியுள்ளன. இதனால் சக்தி, வலு ஆகியவற்றை மையப்படுத்திய கைத்தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 13,814 பணியாளர்களில் 12,701 பேருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வர்த்தக நடவடிக்கைகளுக்கான திணைக்கள பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 46,420 பணியாளர்களில் 40,233 பேருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பொது பாதுகாப்புக்காக கால நிலை மற்றும் ஏனைய அறிக்கைகளை வழங்கவென 6186 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேபோல, போக்குவரத்து திணைக்களத்திலிருந்து 18,481 பேரும், சுமித் சோனியன் என்ற மிகப் பெரிய நிறுவனத்திலிருந்து 3514 பேரும், தேசிய பூங்காங்களுக்கான நிறுவனத்திலிருந்து 21,379 பேரும், உள்ளூர் பாதுகாப்பு சேவை திணைக்களத்திலிருந்து 31,295 பேருக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் அவசர சேவைகளுக்கான திணைக்களத்திலிருந்து 40,512 பேரும் கல்வித்திணைக்களத்திலிருந்து 4013 பேரும், சூழல் பாதுகாப்பு அமைப்பில் 15,136 பேரும் கடமைகளிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் முடக்கத்தால் மேற்படி நிறுவனங்கள் ஊழியர்களை சம்பளமில்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளன. இதனால் 7 இலட்சத்து 83 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்த மாதத்துக்குரிய சம்பளத்தை மட்டும் வழங்கி விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதில், அத்தியாவசிய தேவையாக சுகாதாரம், இராணுவம், பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரச முடக்கத்தால் தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம், தனியார் துறையினரும் முடங்க வேண்டிய நிலையேற்படும். தற்போதைய முடக்க நடவடிக்கையால் வாரத்திற்கு பலநூறு கோடி ரூபா இழப்பு ஏற்படுமென பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த இழுபறி நிலைமை, தொடர்வதால் சர்வதேச முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தனது கடனின் உச்ச வரம்பான 14.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை, கடந்த மே மாதமே எட்டியுள்ள நிலையில் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் 2ஆம் திகதிக்குள், இப்பிரச்சினையைத் தீர்க்காவிடின், அரசு அன்றாடச் செலவுக்கே திண்டாட வேண்டி வரும். அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் பல மடங்காக உயர்ந்து விடுமென அமெரிக்க நிதி அமைச்சகம் அப்போது எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்த போதிலும், இன்றுவரை அதில் எந்த முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவின் தற்போதைய மோசமான நிலைமை, அந்நாட்டினை மட்டுமல்லாது உலகப் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அரசாங்கத்தின் கடன் தொடர்பாக எழும் வாக்குவாதங்கள், நிதி நிர்வாகத்தில் வரும் நாளாந்த செலவுகளைக் கூட பாதிப்பாதாகவுள்ளது. 

அமெரிக்காவின் வரலாற்றுத் தொடர்புடைய இடங்கள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இதனால் செல்லுமிடங்களில் கால தாமதம் ஏற்படும். ஒவ்வொரு அரசதுறை தொடர்பிலான விடயங்களிலும் காலதாமதம் ஏற்படுமென இங்கிலாந்து, ஜேர்மனி ஆகியவை தங்கள் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் புருணே ஆகிய 4 ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஒபாமா இரத்துச் செய்துள்ளார். இதனால், ஆசியபசுபிக் ஒத்துழைப்புக்கான மாநாடு உட்பட இரு மாநாடுகளிலும் பங்குபற்ற மாட்டார்.

ஒபாமா மருத்துவத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால், ஜனநாயகக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும். இதன் மூலம், அடுத்த தேர்தலிலும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகும். எனவே, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி ஆரம்பத்திலிருந்தே இதனை கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்துக்கு அதிக நிதியொதுக்குவதால் ஏனைய துறைகளுக்கு போதிய பணம் வழங்க முடியாது என்றும் கூறிவந்தது.

இரு தலைமைகளுக்கும் இடையிலான பதவிப் போட்டியால், நாட்டு மக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதன் எதிர்விளைவுகள் சர்வதேசத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதிக்குள், அமெரிக்காவின் கடன் உச்ச வரம்புகளை உயர்த்த நடைபெறும் ஒரு நடவடிக்கை தான் இந்தப் பணி நீக்கம் என்று ஒரு சாராரும், இன்னொரு பாரிய வேலை நீக்க நடவடிக்கைக்கான முன்னோடி தான் இந்த தற்காலிக பணிநீக்கம் என்றும் மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளன.

1996ஆம் ஆண்டின் பின்னர், மீண்டும் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை தவிர்த்துக் கொள்ளக் கூடியது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், உலக சந்தைக்கு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமையுமென பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


வல்லரசான அமெரிக்காவில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த அரசசேவை முடக்கத்தினால் உலக பொருளாதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

1 கருத்து: