ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சிரியா மீது போர் தொடுக்க முண்டியடிக்கும் மேற்குலகம்

சா.சுமித்திரை

சிரியாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதொரு கட்டத்தினை எட்டியுள்ளது என்பதைத் தொடர்ந்து சர்வதேச தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக  சிரிய விவகாரம் தொடர்பில் வெளியாகி வரும் செய்திகள் திகில் நிறைந்ததாகவே பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அங்கு நடைபெறும் அநேகமான சம்பவங்கள் பூசி மெழுகப்பட்டு திரிபுபடுத்தப்பட்டவையாகவே உள்ளன என சிரிய அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, மிக மோசமான பல சம்பவங்கள் சிரியாவில் அரங்கேறிக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர். 

திங்கட்கிழமை, சிரியா மீதான இராணுவப் படையெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காங்கிரஸிடம் அனுமதி கோரியிருந்தார். 

சிரியா இரசாயனத் தாக்குதலில், பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள் உட்பட 1,429 பேர் கொல்லப்பட்டதையடுத்து சிரியா மீதான தீவிர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அமெரிக்கா, இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது. 
சிரிய விவகாரம் தொடர்பில், தீர்மானமெடுக்க நாளை திங்கட்கிழமை காங்கிரஸ் மீண்டும் கூடவுள்ளது. 

இதேவேளை, எந்த நடவடிக்கையும் வரையறைக்கு உட்படுத்தப்படும் எனக் கூறியுள்ள  ஒபாமா, தரை  மூலமான நடவடிக்கையை  நிராகரித்துள்ளார். அதற்கு கட்டியம் கூறுவது போல, அமெரிக்காவின் ஏவுகணை தாங்கிய கப்பல், மத்திய தரைக் கடலில் தாக்குதலுக்கு தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ்.ஹாரி, எஸ்.ட்ருமான் விமானத் தாங்கிக் கப்பல் சுயஸ் கால்வாய் ஊடாக செங்கடலைச் சென்றடைந்துள்ளது. 

அத்துடன், ஜோர்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் எப்.16 ரக போர் விமானங்களும் பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபடுமென கூறப்படுகின்றது. அதேசமயம், மத்திய தரைக் கடல் டவுலான் துறைமுகத்தில் பிரான்ஸின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபுக் குடியரசில் நிறுத்தப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானங்களும்  சிரியாவின் மீது தாக்குதல் நடத்த கடல் வழியாக சுற்றி வளைத்துள்ளன. 

பிரிட்டனும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் சைப்பிரஸின் அனுமதியுடன் அதன் இராணுவத் தளத்தை பயன்படுத்தவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. பல நாடுகளின் உதவியுடன் மேற்குலக நாடுகள் சிரியாவை தாக்க கடல் வழியாக சூழ்ந்து கொண்டுள்ளன. 

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, சிரிய ஜனாதிபதி பஷாத் அல்  அசாத்தினை பதவி விலகக் கோரி, ஆரம்பிக்கப்பட்ட சிவில் யுத்தம், இன்று எவ்வித இலக்குமின்றி நகர்ந்து செல்கிறது. 

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக, நீடித்து வரும் சிரியாவின் உள்நாட்டு போர், பிராந்திய யுத்தமாக மாற்றமடைந்திருந்தது. தொடர்ந்து பிராந்திய நெருக்கடிக்கு பாரிய அளவில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டாதிருந்த நிலையில் இன்று மூன்றாம் உலகப் போருக்கு வழி கோலுகின்றது. 

இத்தகையதொரு மோசமான கட்டத்திலும், ரஷ்யா அரபுலகின் தனது ஒரேயொரு நட்பு நாடான சிரியாவிற்கு ஆதரவு காட்டுவது வேடிக்கையானதொன்றாகும். தனது சொந்த நாட்டு மக்களையும் பச்சிளங் குழந்தைகளையும்  கண் மூடித்தனமாக கொன்று குவித்து வரும் நிலையில், சிரிய ஜனாதிபதி பஷாத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆதரவு காட்டி வருகின்றார். 

சிரிய அரசாங்கம், கிளர்ச்சிக்காரப் படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெற்று வருகின்ற ஒரு நேரத்தில் மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான துருப்புச் சீட்டு மாதிரியான ஒரு காரியத்தை சிரியாவின் அரசாங்கம் செய்யும் என்று சொல்வது முட்டாள் தனமாக உள்ளதெனவும் விளாடிமிர் புட்டின் தனது ஆதரவினை நியாயப்படுத்தியுள்ளார். 

ஆனால், சிரியா இத்தகையதொரு செயலை செய்துள்ளது என்பது கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் திகில் நிறைந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. பூனை கண்ணை மூடிக் கொண்டு  பால் குடிப்பது போலவே புட்டினின் கருத்தும் அமைகின்றது. 

எனினும், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்க ஜனாதிபதியுமான பராக் ஒபாமா, சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அதனால் அந்நாட்டில் பாதிக்கப்படக் கூடிய மக்களின் கஷ்டங்களை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுமென புட்டின் கேட்டுள்ளார். 

இரு வருடங்களுக்கு மேலாக, யுத்தம் நீடித்துக் கொண்டிருக்கும் சிரியாவின் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், உடல் அவயவங்கள் இழப்பு, சொத்து,  தொழில் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் என சொல்லிலடங்காத துன்ப துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் இருக்கும் சிரியா மீது மேற்குலக நாடுகள் தான் தோன்றித் தனமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின் மோசமாக பாதிக்கப்படப் போவது சிரிய மக்களேயாவர். எனவே,  தான் சிரியா மீதான சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் துருப்புகள் பங்கேற்க அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

எனவே, எந்தவொரு பிரச்சினைக்கும் சமாதான பேச்சுவார்த்தையே தீர்வாக அமையும். அதிலும் குறிப்பாக, பொது மக்கள் சார்ந்த பிரச்சினைக்கு எப்படி இராணுவத் தலையீடு தீர்வாக அமையும்? ஆகையால், மேற்குலக நாடுகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். 

சிரியாவின் இரு தரப்பிற்கும் இராணுவ ஆயுத உதவி, நிதியுதவிகளை மேற்குலக நாடுகளே மாறி மாறி  செய்து வந்துள்ளன. புகைந்து கொண்டிருந்த சிரிய உள்நாட்டு போரினை பற்ற வைத்தது மேற்குலக நாடுகளே. இன்று பற்றி எரியும் தீயினை தண்ணீர்  ஊற்றியணைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதும்  இந்த மேற்குலக நாடுகள் தான். 

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சிரியாவில் இராணுவத்தினரை படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. 

சிரிய விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தமது அதிகாரத்தினை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டன. எவ்வாறாயினும், சிரியா மீது இராணுவத் தலையீடு அற்ற முன்னெடுப்புகளே அந்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும். 

அமெரிக்கா, சிரியா மீது எடுத்து வரும் கரிசனை அந்நாட்டுக்கு சாதகமாக அமையுமா என்பதும் கேள்விக் குறியே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக