செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆஸி.ப் பிரதமரும் அகதிகள் பிரச்சினையும்

சா.சுமித்திரை

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்ட ரொனி அபொட், படகுகள் மூலம் வருகை தரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்த, துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார். 

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் மூலம்  தொழிற் கட்சியின் 6 வருட கால ஆட்சியை அபொட்டின் லிபரல் தேசியக் கூட்டணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர் மத்தியில்  ரொனி அபொட் உரையாற்றும் போது கூட, முக்கியமாக புகலிடக் கோரிக்கையை தடுப்பது  தொடர்பாகவே அவரது உரை அமைந்திருந்தது. 
இறையாண்மையுள்ள எல்லைகள் பாதுகாக்கும் நடவடிக்கைகள் விரைவில் அமுல்படுத்தப்படும். அதனூடாக, புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை தடுக்கப்படுமென, 55 வயதான அபொட் தன் மக்கள் முன் உறுதியாக கூறியுள்ளார். 

2001 இலிருந்தே அவுஸ்திரேலிய அரசிற்கு புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம்  பெரும் தலையிடியாகவே இருந்து வருகின்றது. 
அவுஸ்திரேலியாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பல நாடுகளைச் சேர்ந்தோர் புகலிடம் கோரி சட்ட விரோத குடியேற்றவாசிகளாக உள்ளனர். ஆரம்பத்தில், பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு வெளியேறி புகலிடம் கோரி வந்தவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது போல அவுஸ்திரேலிய அரசு காட்டிக் கொண்டது. 

ஆயினும், தனது நாட்டினுள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன்  மூலம் பல சவால்களை எதிர் கொண்டது. உலக  பொருளாதார வீழ்ச்சி, யூரோ வலய நெருக்கடி, சட்ட விரோத செயல்கள், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என பல பிரச்சினைகள் உருவாகின.

இதனைத் தொடர்ந்தே, பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவுகளில், புகலிடம் கோரி வருவோரை தடுத்து வைத்து விசாரிக்கும் “பசுபிக் தீர்வு’ என்னும் கொள்கையை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. 

இதனையடுத்து படகுகளில் சட்ட விரோதமாக வருவோரை கிறிஸ்மஸ் தீவு, நவுறு தீவு மற்றும் பப்புவா நியு கினியாவின் மனுஸ் தீவுகளிலுள்ள தடுப்பு நிலையங்களில் வைத்து விசாரிக்கப்படுவர். நியாயமான கோரிக்கை எனில், அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவர். 

ஆயினும் இனிமேல், சட்ட விரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்பட மாட்டாதென ரொனி அபொட் கடுமையாகக் கூறியுள்ளார். 

ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சீனா, வியட்நாம், இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தே புகலிடம் கோரி அதிகளவானோர் பாதுகாப்பற்ற படகுகளில் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயல்கின்றனர். 

நீண்ட காலப் படகுப் பயணங்களை மேற்கொண்டு உயிரிழப்புகளை சந்தித்து, உணவு உறக்கமின்றி அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லையென அந்நாட்டு அரசினால் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், புகலிடக் கோரிக்கையாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தாமை வேதனைக்குரிய விடயமாகும். 

நம் நாட்டிலிருந்தும் பல இலட்சங்களை செலவழித்து பிஞ்சுக் குழந்தைகளுடன் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் மீண்டும்  நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், சட்ட விரோத கடற்பயணத்தினைத் தடுக்கும் வகையில் இலங்கையுடன் அந்நாட்டு அரசாங்கம் உடன்படிக்கையொன்றினையும் கைச்சாத்திட்டுள்ளது. 
“பசுபிக் தீர்வுத் திட்டத்தின் கீழ், 30 வீதமானோர், மீண்டும் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 43 வீதமானோர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் ஏனைய நாடுகளுக்கு குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, 2007 இலிருந்து தொழில் வாய்ப்புக் கோரி செல்லும் சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு நீதிமன்றங்களில் தண்டனையும் வழங்கப்படுகிறது. 2013 ஜூன் மாதம் 1 ஆம் திகதியன்று சட்ட விரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவோருக்கான சிவில் தண்டனைகளையும் அபராதங்களையும் புதிய சட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சட்ட விரோத குடியேற்ற வாசிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதை அவுஸ்திரேலிய நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 
2007 இல், கெவின் ரூட்டின் தொழிற் கட்சி அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட போதிலும், புகலிடம் கோருவோருக்கும், அகதிகளுக்கும் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை. 

ரூட் தலைமையிலான தொழிற் கட்சி “எல்லைப் பாதுகாப்பு’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அதற்கென 650 மில்லியன் டொலர் செலவழித்ததுடன் மேலும் நிதியொதுக்கீடுகளை கண்காணிப்பிற்கு ஒதுக்கியது. அவுஸ்திரேலிய, இந்தோனேசிய அதிகாரிகளின் இரகசிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. 

அதேசமயம், இந்தோனேசியா சர்வதேச புகலிட சட்ட விதிகளில் கையெழுத்திடாத நாடாகும். எனவே, அங்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கோ அல்லது அகதிகளுக்கோ அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படமாட்டாது. 

இந்நிலைமையில், அவுஸ்திரேலியாவிற்குள் சட்ட விரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் முயற்சியாக, இந்தோனேசியாவின் மீன் பிடிப் படகுகளை வாங்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு முன் வைத்திருந்தது. 

அபொட்டின் இந்தத் திட்டத்தினை, இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ரைய நரெலிஹவா நிராகரித்துள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதாகவும் கூறியுள்ளார். 

இதேவேளை, அபொட் தனது பிரசாரத்தின் போது, ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தரும் இந்தோனேசியர்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் சன்மானமாக வழங்கப்படுமெனவும் கூறியிருந்தார். 

அதுபோலவே, அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் பிரசாரத்தின் போதும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து  நிறுத்துவது, காபன் வெளியேற்ற வரியினை நீக்குவது போன்ற இரு  உறுதி மொழிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலைமையில், எல்லை பாதுகாப்பு தொடர்பில், இந்தோனேசிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜூலி பிசெப் தெரிவித்துள்ளார். 

அபொட் இது தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், புகலிடம் கோருவோருக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.  புகலிடம் கோரி வருவோரை தரையிறங்க விடாது திருப்பி அனுப்பும் திட்டத்தை அபொட் அறிமுகப்படுத்தியுள்ளார். 

அவுஸ்திரேலியாவிற்கு எத்தனையோ ஆபத்துகளை கடந்து புகலிடம் கோரி வருவோரின் எண்ணிக்கை குறைவடையவில்லையென்றால் அதற்கான காரணத்தினையும் கண்டறிய முயல வேண்டும். 

அவுஸ்திரேலியாவில், தொழிலாளர்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் குடியேற்றம், புகலிடம் என்று அழைக்கப்படும் போலி முகவர்களின் வாக்குறுதி, அவுஸ்திரேலிய அதிகாரிகள் சிலரின் சட்ட விரோத செயற்பாடுகள் போன்றவை கட்டாயம் நிராகரிக்கப்பட வேண்டும். இவையே, அவுஸ்திரேலியாவிற்கு  குறைந்த செலவில் செல்ல முடியுமென்ற எண்ணம் புகலிடம் கோருவோர் மத்தியில் ஏற்பட சாதாரணமாய் அமைந்து விடும். 

உலக அகதிகளுக்கான நெருக்கடி, முதலாளித்துவ இலாப முறையின் அழிவினால் உருவாகுவதாகும். இன, மத, படுகொலைகள், பொருளாதாரமின்மை, வறுமை, ஏகாதிபத்திய அதிகாரம், உள்நாட்டுப் போர் போன்றவையாலேயே அகதிகள் அதிகளவில் உருவாகின்றனர். 

இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு உரிய தீர்வினை வழங்க அவுஸ்திரேலியா உட்பட அனைத்து மேற்குலக நாடுகளும் முன் வர வேண்டும். அதன் மூலமே அகதிகளும், புகலிடக் கோரிக்கையாளர்களும் உருவாகுவது தடுக்கப்படும். 

இல்லாவிட்டால் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபொட் என்னதான் கடுமையான சட்ட  நடவடிக்கை மேற்கொண்டாலும் உயிரிழப்புகளை மட்டுமே சந்திக்க முடியும். அகதிகள் தொடர்பில் அபொட் எடுத்த கடுமையான நிலைப்பாடும் அவரது தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது. தற்போது தனது ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் அபொட் எல்லைப் பாதுகாப்புக்கு  எடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் உருவாகுவதை தடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க முன் வருவதே இப்பிரச்சினைகளைத் தடுக்க ஆரோக்கியமானதாக அமையும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக