புதன், 18 செப்டம்பர், 2013

மறதி’யை மறக்க முடியாத பிரிட்டன் பிரதமர்

சா.சுமித்திரை

உலகளவில் பல கசப்பான சம்பவங்களுக்கும் துயரமான நிகழ்வுகளுக்குமே முகம் கொடுத்து வருகின்ற இன்றைய காலப்பகுதியில் பலரை மறதி என்னும் பண்பே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை எவராலும் மறந்து விட முடியாது.

மறதி மட்டும் இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே இருப்பர். அத்துடன் நாம் அனுபவிக்கும் ஒரு துக்க சம்பவத்தை ஓரிரு நாட்களிலோ அல்லது சில காலப்பகுதியிலோ மறந்து விடாவிடின் மோசமான மனநிலை பாதிப்புகளுடன் வாழ நேரிடும்.

“மறதிக்கு மருந்து மாஸ்டரின் பிரம்பு’ என்ற காலம் மாறிப் போய் இன்று மறதியே கட்டாய தேவையாகிவிட்டது. ஆயினும் மறதியால் ஏற்படும் பாதிப்புகளும் சொல்லிலடங்காதவை.

மறதியால் எத்தனையோ உயிரிழப்புகள், சொத்து சேதங்கள், நோய்கள், உறவுகளுக்குள் விரிசல் எனப் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ஆனால் தன் மறதியால் ஒரு நாட்டின் முக்கியஆவணங்களையே தொலைத்து சர்சைக்குள் சிக்கியுள்ளார் பிரிட்டன் பிரதமர்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது உத்தியோகபூர்வ இரகசிய ஆவணங்களைக் கொண்டு செல்லவென பயன்படுத்தும் ஒரு சூட்கேஸ் பெட்டியை தான் பயணித்த ரயிலின் பெட்டியிலேயே மறந்து வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

டேவிட் கமரூனுக்கு மறப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே தனது 9 வயது மகளை சாப்பிடச் சென்ற ரெஸ்ரோடன்டிலேயே விட்டு விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

கடந்த  ஜூன் மாதம் காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ரெஸ்ரோ டிரன்டிற்கு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிட்டு முடிந்த பின்னர் 9 வயதான தன் மகள் நான்சியை மட்டும் அந்த உணவகத்திலேயே விட்டு விட்டு தானே காரினை செலுத்திக் கொண்டு ஏனையவர்களுடன் வீடும் வந்து சேர்ந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பின்பே நான்சியை எல்லோரும் தேடியுள்ளனர். அப்பொழுதுதான் கை கழுவும் பகுதியில் நான்சியை விட்டு வந்தது கமரூனுக்கு நினைவுக்கு வந்தது.

பின்னர் மீண்டும் காரினை செலுத்திக் கொண்டு உணவகத்திற்குச் சென்ற போது அச்சிறுமி அமைதியாக தனது தந்தைக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இரகசிய ஆவணங்களை கொண்டு செல்வதற்கென உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும் சூட்கேஸினை தான் பயணித்த ரயில் பெட்டியிலேயே வைத்து விட்டு மறந்து போய் இறங்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்ற ஜீ20 மாநாட்டில் பங்குபற்றி விட்டு நாடு திரும்பியவுடனேயே ரயிலில் யோர்க்ஸ்ரேக்கு சென்றுள்ளார்.
யோர்ஸ்ரேயில் கமரூனின் மனைவி சமந்தாவின் சகோதரிக்கு திருமணம் இடம்பெற்றது. இந்த திருமண நிகழ்விலும் கலந்து கொள்ளவே தனது மனைவி சமந்தாவுடன் லண்டன் வடக்கிலுள்ள கிங்ஸ் குரோஸிலிருந்து யோர்க்ஸ்ரேக்கு ரயிலில் புறப்பட்டுள்ளார்.

ஜீ 20 மாநாட்டில் கமரூன் பங்குபற்றிய போது கூட இரகசிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் சிவப்பு நிற சூட்கேஸினை வைத்திருந்துள்ளார். மாநாட்டில் பங்கு பற்றிய போது சிவப்பு நிற சூட்கேஸுடன் கமரூன் காணப்படும் புகைப்படம் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜீ 20 மாநாட்டில் சிரியா விவகாரம் தொடர்பாக புலனாய்வு தரவுகள் பற்றியும் பேசப்பட்டிருந்தது. இவை தொடர்பான ஆவணங்களும் அச்சிவப்பு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

இதுபோன்ற பல இரகசிய ஆவணங்களைக் கொண்ட இப்பெட்டியை கமரூன் மறந்து  வைத்து விட்டுச் சென்றுள்ளார். அதனை விட சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் சூட்கேஸ் பெட்டியின் சாவியும் அதனுடன் இருந்தமையேயாகும்.

உயர் பதவிக்கென விஷேடமாக பயன்படுத்தும் இந்த சிவப்பு நிற சூட்கேஸின் வெளி மேற்பரப்பில் “பிரை மினிஸ்டர்’ (பிரதமர்) என அவருடைய பதவி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுள் உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்துக் கொண்டு யோர்ஸ்ரேக்கில் நடைபெறும் தனது மைத்துனியின் திருமணத்தில் கலந்து கொள்ளவும் சென்றுள்ளார்.

குறித்த ரயிலிலிருந்து மாறி இன்னொரு ரயிலில் ஏறி தனது பயணத்தினை கமரூன் தொடர்ந்துள்ளார். இதேசமயம் கமரூன் பயணித்த முதல் ரயில் பெட்டியில் தவற விடப்பட்டிருந்த சிவப்புப் பெட்டியை  அதில் பயணித்த பயணியொருவர் படம் பிடித்துள்ளார்.

இதேவேளை, பிரிட்டன் பிரதமரின் வாசஸ்தலமான டவிங் ஸ்ரீட்டிற்கு இவ்விடயம் தொடர்பாக செய்தி அனுப்பப்பட்டது. இதற்கிடையே சிவப்பு பெட்டி கமரூனின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

இதேசமயம் இந்த சிவப்புப் பெட்டி கமரூனின் பொலிஸ் பாதுகாப்புக் குழுவின் முழுமையாக கண்காணிப்பின் கீழேயே இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த சிவப்பு நிறப் பெட்டி எவரினதும் கண்காணிப்பும் இன்றி இருந்துள்ளதாகவும் தான் விரும்பியிருந்தால் அதனை எடுத்துக் கொண்டு சென்றிருக்க முடியுமெனவும் ஒரு ரயில் பயணி பிரிட்டன் ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

அப்பெட்டியுடன் சாவியும் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன் சாவி இல்லாமலேயே அப்பெட்டியின் பூட்டினை இலகுவாக உடைக்கக்கூடிய நிலைமையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் பிரதமர் கமரூனின் சிவப்புப் பெட்டியை தவற விடவில்லையெனவும் அவருடைய பாதுகாப்பில் இருந்துள்ளதாகவும் பிரதம அலுவலக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தருணத்தில் கமரூன் குழப்பமடைந்தவராக இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது வாகனங்களில் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ தனித்துச் செல்லும்  போது  அவர்களுடைய அலுவலக ஆவணங்களைக் கொண்டு செல்வது தொடர்பில் அறிவுறுத்தப்படுகின்றது.

1999 இல் அந்நாட்டின் அப்போதைய தொழிற்துறை அமைச்சராகவிருந்த பீற்றர் கீல்பைல்லும் இது போன்றதொரு சங்கடத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமரூன் தனது கடமையுணர்ச்சியை  காண்பிக்கப் போய் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். ஆயினும் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது போன்ற விடயங்களில் கமரூன் இனிமேலும் அக்கறை செலுத்தாவிடின் பிரிட்டனின் பிரதமர் தான் என்பதையும் அவர் மறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

அதேசமயம் இப்படியானதொரு பிரதமரோ ஜனாதிபதியோ நம் நாட்டிற்கு கிடைத்திருந்தால்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக