சா.சுமித்திரை
பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இரகசியங்களை அழித்து நாசமாக்கி விடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாதென சமூக இணையத்தளங்கள் உட்பட முன்னணி இணையச் சேவை நிறுவனங்களின் சேமிப்பகங்களுக்குள் ஊடுருவி இரகசியத் தகவல்களை பதிவு செய்யும் சி.ஐ.ஏ.யின் தொழில்நுட்ப பணியாளர் எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள இணையத்தளங்கள் மூலம், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு, சர்வதேச சமூகத்தினரால் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், ஏதோவொரு பரபரப்பான சம்பவம் எழுவதும், பின்னர் அப்படியொன்று இடம்பெறாது போல் அது அடங்கிப் போவதும் வழமையே. ஆனால், இவ்விடயத்தை அப்படிவிட்டு விடமுடியாது. ஏனெனில், அமெரிக்காவின் இந்த உளவு நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாடுகளின் அரசியல் விவகாரங்களின் இரகசியங்களும் பரவலாக, கசிய விடப்படும். இதன் மூலம் ஒவ்வொரு நாட்டுத் தலைமைகளும் அந்தந்த நாட்டு மக்களுடன் திக்குமுக்காட வேண்டிய நிலையேற்படும்.
அமெரிக்காவின் முக்கிய வேலை, அடுத்த வீட்டில் மூக்கை நுழைப்பதேயாகும். யுத்தம் நடைபெறும் நாடுகளில் சமாதானத்தை நிலைநாட்டுவது போல தட்டிக்கொடுப்பதும், இன்னொரு நாட்டிடம் கோள் மூட்டிக் குழப்புவதுமே அமெரிக்காவின் பொதுவான செயலாகும். இப்பொழுது மேற்குலக நாடுகளின் விவகாரங்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்குள் அவ்வப்போது, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்; “அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு இரகசிய முறையில் தகவல்களை சேகரிக்கப் பயன்படுத்தும் வழிமுறைகளில் எனக்கு உடன்பாடில்லை. எனவேதான், அது தொடர்பான இரகசியங்களைத் அம்பலப்படுத்துகின்றேன் என எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரமைப்பில் தொழில்நுட்ப பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் எட்வர்ட் ஸ்நோடென் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் யூஸ் அலென்ஹமிடனுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஸ்நோடென் பணியாற்றியிருந்தார்.
“ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த ஒபாமா தவறிவிட்டார். ஆட்சியில் நடைபெறும் இரகசியமான செயல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டுமென்ற மனச்சாட்சியின் உந்துதலினாலேயே இவ்வாறு செயற்பட்டேன். உலகில் எனக்கு உயிர்வாழவும் விருப்பமில்லை’ எனவும் 29 வயதான ஸ்நோடென் கூறியுள்ளார்.
பல மில்லியன் அமெரிக்கர்களின் தொலைபேசி உரையாடல் விபரங்கள், பதிவு செய்யப்படுகின்றன என்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆயினும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளதால் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது தவிர்க்க முடியாத ஒன்றென ஒபாமா தலைமையிலான அரசு நியாயப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளி லொன்றாக தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்டல் சரிவர இருந்திருப்பின் பொஸ்டன் குண்டுத்தாக்குதலை இவர்களால் தடுத்திருக்க முடியாமல் போனது ஏனென்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொஸ்டன் மரதனோட்டப் போட்டியில் வெறும் 19,26 வயதுகளை உடைய சகோதரர்கள் இருவர் பதம் பார்த்திருந்தனர். இதேபோல, பல சம்பவங்கள் அமெரிக்காவில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்கவே, தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றமை தான் பூச்சாண்டி காட்டுவது போன்றதாகும்.
எனினும், இவ்விடயம் தொடர்பாக அமெரிக்காவில் இரு வேறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் உளவு அமைப்புகள் செய்து வரும் இரகசிய உளவு வேலைகளை வெளியுலகுக்கு முதன் முதலில் அம்பலப்படுத்தியவரான எட்வேர்ட் ஸ்நோடென் கொங்ஹொங்கில் இருக்கின்ற போதிலும், அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகின்றது.
திங்கட்கிழமை இரவு கொங்ஹொங்கில் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஸ்நோடென் வெளியேறிவிட்டதாக பிரிட்டனின் “த ரெலிகிராப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்நோடென்னை நாடு கடத்த வேண்டுமென கொங்ஹொங் அரசை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் விசாரணை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்க பொருத்தமான இடமாக கொங்ஹொங் இருக்குமென்பதாலேயே இங்கு வந்திருப்பதாக ஸ்நோடென் கூறியிருந்தார்.
பிரிட்டனின் முன்னாள் காலனித்துவ நாடான கொங்ஹொங்குடன் அமெரிக்கா, நாடு கடத்தல் ஒப்பந்தத்தை செய்திருந்த போதிலும், அங்கி ருந்து கொண்டு இது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட முடியுமென ஸ்நோடென் கருதியே கொங்ஹொங்கினை தனது பாதுகாப்பிற்கு பொருத்தமான இடமாக தெரிவு செய்திருந்தார்.
ஆனால், ஸ்நோடெனுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக கொங்ஹொங் அமையாதெனவும் அவர் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும், கொங்ஹொங்கின் புதிய மக்கள் கட்சியின் தலைவர் திங்கட்கிழமை கூறியிருந்தார். மே 20இல் கொங்ஹொங்கிற்கு வந்துள்ள அமெரிக்க பிரஜையான ஸ்நோடென் சட்டரீதியாக 90 நாட்கள் அங்கு தங்க முடியும்.
அந்நாட்களுக்குள் ஸ்நோடென் அமெரிக்காவுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையைக் கொண்டிராத நாடொன்றிற்கு செல்ல வேண்டும். அல்லது ஐ.நா.வினூடாக புகலிடக் கோரிக்கை விடுக்க முடியும். இந்நிலையில், ஸ்நோடென் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகள் அதிகளவிற்கு கசிந்து விட்டனவா என்பது தொடர்பில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். அத்துடன் எந்தளவிற்கு அமெரிக்காவின் இரகசியத் தன்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்நாட்டின் தேசிய புலனாய்வுக்குழுவின் தலைவர் தயானி பெயின் ஸ்ரீபன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஸ்நோடெனின் இந்நடவடிக்கையை “ஒரு தேசத்துரோகம்’ என கண்டித்துள்ளார்.
சீனா சைபர் குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்திக்கொண்டு அமெரிக்கா செய்துள்ள இந்த மிகப்பெரிய இணைய மோசடியால் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் கதிகலங்கியுள்ளனர். அத்துடன் நாடுகள் வாரியாக எந்தெந்த நாடுகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதில் ஈரான் முதலிடத்திலுள்ளது. அந்நாட்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் மட்டும் 14 கோடி இரகசியத் தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது.
இதற்கு அடுத்த படியாக, பாகிஸ்தான், ஜோர்டான் ஆகியவற்றிலிருந்து அதிக தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் திருடியுள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடுகளாக காட்டிக்கொள்ளும் அரபு நாடுகள் இப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளன. இதனைத் தொடர்ந்து எகிப்தும் 5ஆவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவிலிருந்து 6 கோடியே 30 இலட்சம் முக்கிய தகவல்களை அமெரிக்கா இரகசியமாக சேகரித்துள்ளது.
இதேவேளை, எந்தெந்த நாடுகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென்பதை நிறங்கள் மூலம் அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. இதில் பச்சை நிறக்குறியீடு கொடுக்கப்பட்டுள்ள நாடுகள் தீவிர கண்காணிப்புக்குள்ளாகவில்லை. சிவப்பு நிறக்குறியீடு உள்ள நாடுகள் அதிகம் கண்காணிக்கப்படுகின்றன. செம்மஞ்சள் நிறக்குறியீடுகள் உள்ள நாடுகள் தேவையான தருணங்களின் போது மட்டுமே கண்காணிக்கப்படுகின்றன.
இதேவேளை பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் தொலைபேசி உரையா டலை ஒற்றுக்கேட்டதன் மூலமே, அவரது சதிவேலை முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுபோலவே, அமெரிக்காவில் முன்னெடுக்கப் படவிருந்த பல நாசகார வேலைகள் முறியடிக்கப்பட்டுள்ளன என அமெரிக்கா தன்னை நியாயப்படுத்தியுள்ளது.
ஐரோப்பியர்கள் தொடர்பான இலத்திரனியல் தகவல்களை இரகசியமான முறையில் சேகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், அது சட்ட விரோதமானதென்றும் அடிப்படை உரிமைகளைப் பாரதூரமாக மீறும் செயலெனவும் ஐரோப்பியத் தலை நகரங்களிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உடனடியாக அமெரிக்க அதிகாரிகள் பதிலளிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.
அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் அதன் அயல்நாடான இலங்கையின் அரசியல் விவகாரங்களிலும் அமெரிக்காவின் உளவு நடவடிக்கை செல்வாக்கு செலுத்தும் என்பதை மறுக்க முடியாது. இதேவேளை, ஸ்நோடெனால் வெளியிடப்பட்ட இத்தரவுகளை அந்தந்த நாடுகளை ஆட்டுவிக்கும் தீவிரவாதக் குழுக்களிடம் அவர் இரகசியமான முறையில் வழங்கியிருந்தால் நிலைமை என்னவாகும்?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக