வியாழன், 21 பிப்ரவரி, 2013

நுகர்வோரை மிரட்டும் பாவனைக்குதவாத பொருட்கள்



 சா.சுமித்திரை

இலங்கை நுகர்வோர் சந்தைகளையே ஆட்டங்காண  வைக்கும் வகையில் காலாவதியான பழுதடைந்த அல்லது தரமில்லாத பெருந்தொகையான  உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் பின்னர் அவை அழிக்கப்படுவதும்  அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

பொருட்களின் விலை அதிகரிப்பு, கறுப்பு சந்தைகளில் இலாபம் உழைப்பு, இறக்குமதி வரி தீர்வைகள் அதிகரிப்பு, சந்தைகளில் பொருட்களின் விலைகளில் காணப்படும் தளம்பல் நிலை, பொருள் உற்பத்திகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட சில அதிகாரம் மிக்க ஊழியர்களது முறையில்லாத நடவடிக்கைகள் என பலதரப்பட்ட காரணங்களால் உள்நாட்டு சந்தைகளில் பாவனைக்குதவாத தரமில்லாத காலாவதியான  உணவுப் பொருட்கள் நிறையவே உள்ளன.

இந்நிலைமை மேலும் அதிகரிக்குமானால் நுகர்வோர்  சந்தைகளின் ஆரோக்கிய நிலைமைகளுக்கு  கேடு விளைவிப்பதாகவும் வர்த்தக வியாபார நடவடிக்கைகளை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்து பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதாகவும் அமையுமென பொருளாதார  நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 கடந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 தொன் நிறையுடைய உருளைக்கிழங்குகள் பாவனைக்குதவாத நிலையில் பேலியகொட  நுகே வீதியில் வைத்து பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கொழும்பு பெரிய சந்தைக்குக்  கொண்டு செல்வதற்கென  முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸார்  கண்டுபிடித்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

தலைநகரிலுள்ள பிரதான சந்தைக்கே இவ்வளவு தொகையான பாவனைக்குதவாத உருளைக்கிழங்குகளை விற்பனை செய்யவென கொண்டு செல்லவிருந்த சம்பவமானது  நாட்டிலுள்ள நகர்ப்புறச் சந்தைகளிலுள்ள உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய  நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றே சொல்லவேண்டும்.

 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அநேகமானவை உள்நாட்டு வர்த்தக சந்தைகளுக்கு  ஏன் பழுதடைந்த நிலையிலே, செல்கின்றன என்ற கேள்விக்கு வர்த்தகர்களாலும் அதிகாரிகளாலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆயினும் குறிப்பாக வியாபார நடவடிக்கைகளின் முகாமைத்துவம் சரியில்லாமை, அவை  தொடர்பான சட்டதிட்டங்கள் முறையாக அமுலில் இல்லாமை, இறக்குமதியாளரின் அலட்சிய போக்கு மற்றும்  இறக்குமதி தீர்வைகளுமே இந்நிலைக்குப் பிரதான காரணங்களாகவுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை இலகுவில் பழுதடையக்கூடியவை. இவற்றினை இறக்குமதியாளர்கள் கப்பல்கள் மூலம் இலங்கைத்துறை முகத்திற்கு கொண்டுவரும் போது நீண்ட காலம் எடுக்கின்றது. அத்துடன் அவை பாதுகாப்பான முறைகளிலே பொதி செய்யப்பட்டு அனுப்பட்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

 அதேபோல, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சில சமயங்களில் காலம் தாழ்த்தி வருகையில் அவை கொள்வனவு செய்யப்பட்ட விலையைவிட உள்நாட்டு சந்தைகளிலேயே விலை குறைவாக இருக்கும். அத்துடன், அவற்றினை விற்றுக் கிடைக்கும் இலாபத்தை விட இறக்குமதி வரிகள்  அதிகமாக காணப்படும். இதுபோன்ற காரணங்கள் பொருட்களை இறக்குமதி செய்த பின்பு சிலர் அவற்றினை துறைமுகத்திற்கு சென்று பெற்றுக்கொள்வதில்லை.

 இதன் விளைவாக குறிப்பிட்ட கால எல்லைகளின் பின்னர் அவை துறைமுக அதிகார சபையினால் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இதனைக் குறைந்த விலைகளிலே கொள்வனவு செய்து வியாபாரிகள் சிறிது இலாபம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதேபோல வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட உணவுப் பொருட்களை கட்டளைகள் மூலம் இறக்குமதி செய்ய இணையங்களையோ தொலைபேசி இணைப்புகளையோ அல்லது முகவர்களையோ நாடுகின்றனர். ஆனால், இறக்குமதியாகும்  எல்லாப் பொருட்களும் தரமானவை என்பதை இறக்குமதியாளர்களோ அல்லது ஏற்றுமதியாளர்களோ  உறுதிப்படுத்த  முடியாது. இது போன்ற காரணங்களாலேயே இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தைகளுக்கு வரும் சில பொருட்கள் தரமில்லாமலும்  பாவனைக்குதவாத நிலையிலும்  காலாவதியான நிலையிலும் உள்ளன.

 கடந்த 5 ஆம் திகதியன்று கண்டி நகரிலிருந்து  5 இலட்சம் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள் பாவனைக்குதவாத நிலையிலே சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டிருந்தன. இவற்றைப் பழப்பாகு, பழச்சாறு தயாரிக்கும் உற்பத்தியாளர்  குறைந்த விலையில் வாங்கிச் சென்று பயன்படுத்துவதாகவும் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிகளில் மட்டும்  சில உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அக்காலப்பகுதிகளில் பொருட்களின் நிரம்பல் அதிகமாகவுள்ளமையால் அவைகளின் விலைகளும் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏனைய காலப்பகுதிகளில் அவற்றின் விலை உயர்வாக இருக்கும். எனவே சில வர்த்தகர்கள் மலிவான காலப்பகுதிகளில் அப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்நிலையிலும் பொருட்களின் தரம் மாற்றமடைகின்றது.

இதேவேளை. பொருட்களின் விலை அதிகரிக்குமென ஏதேனும் எதிர்வு கூறப்பட்டால் குறிப்பாக மொத்த  வியாபாரிகள்  மூடை மூடையாக பதுக்கி விடுகின்றனர். ஆனால் அவை சில வேளைகளில் அந்த விலையேற்றம்  2 அல்லது 3 மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுமானால் அவை உற்பத்திக் காலத்தை விட மேலும் 5,6 மாதங்கள் கடந்து விடும். இதன் விளைவாக பொருட்களின் பாவனைக்காலமோ அல்லது தரமோ மாறிவிடுகின்றன. இதனால் பிறகு அப்பொருட்களை மலிவு விலையில்  வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன.

 இதுபோன்ற  எத்தனையோ சம்பவங்கள் வியாபாரிகளின் சுயநல போக்கினால் மட்டுமே நடைபெறுகின்றன. அவர்களது நோக்கம் இலாபம் உழைப்பதில் மட்டுமே காணப்படுகின்றது என்பதை எவராலும்  மறுக்க முடியாது.

 கடந்த மாதம் சீமெந்து கலந்த அரிசி, பருப்பு போன்றவை ஒரு தொகையாக கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிந்தன. அதேபோல பாவனைக்குதவாத எண்ணெய் கொள்கலன்கள், மாசி கருவாடு,சீனி ,மா, தேயிலை என பல உணவுப் பொருட்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தினமும்  கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தரமில்லாத இதுபோன்ற உணவுப் பொருட்களால் வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஆரோக்கிய மற்றதொரு  நிலையே  உருவாகும்.

அநேகமாக மொத்த வியாபார நிலையங்களின் களஞ்சிய சாலைகளிலிருந்தே பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம்  மட்டும் நுகர்வோர் அதிகார சபையினால் 27877 திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பாவனைக்குதவாத பழுதடைந்த தரமில்லாத உணவுப் பொருட்கள் தொடர்பான முறைகேடுகளுக்கு 91 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலே இவ்வருட முதல் மாதத்தில் பழுதான நிலையில் இறைச்சி வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு, மாசி, கருவாடு என நுகர்வோர் அதிகாரசபை  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை அறிந்து நுகர்வோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், சுகாதார கேடுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
 இதேபோல், சில அதிகாரிகளது முறையற்ற செயல்களாலும் அவர்களது அலட்சிய போக்காலும் பாவனைக்குதவாத பொருட்கள் நுகர்வோர் கைகளில் தவழும் சம்பவங்களையும்  கட்டாயம் சொல்லியாக வேண்டும்.
 இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சில காரணங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்கள்  நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டு வருகின்றமை வேதனை தரக்கூடிய விடயமாகும்.கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியில்  மீளக்குடியேறிய நாவலடி, பூம்புகார் மற்றும் அரியாலை  கிழக்குப் பகுதி மக்களுக்கு .நா.வின் முகவர் அமைப்பான யுனிசெப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனங்கள் உலருணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தன.

 இப்பகுதியிலுள்ள 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை, ஷம்போ மற்றும் உலருணவுப் பொருட்கள் பாவனைக்குதவாதவையாக காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

 அதேபோல், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலருணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்காது பதுக்கிவைக்கப்பட்டிருந்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி 140 மூடை அரிசி, 70 மூடை பருப்பு, 1200  ரின்மீன்கள் 40 மூடை சீனி என்பன மன்னார் பல நோக்குக்கூட்டுறவுச் சங்கக் களஞ்சியத்திலிருந்து  பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனையடுத்து களஞ்சியசாலை சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதாகக் கூறி அது சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில் பாவனைக்குதவாத உருளைக்கிழங்கு ,வெங்காயம், கருவாடு என்பன இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டுச் செல்லப்பட்டு வீசப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

 பாவனைக்குதவாத தரமில்லாத பொருட்களிலிருந்து பாவனையாளர்களை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு  நிவாரணங்களை வழங்குதல் வேண்டும். அதேவேளை, பாவனையாளர்களுக்கு ஒவ்வொரு உற்பத்திப் பொருட்கள், தொடர்பான அறிவூட்டல்களையும் வலுவூட்டல்களையும் வழங்குதல் மற்றும் நியாயமற்ற போட்டி வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வியாபாரிகள். உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான போட்டிகளை ஏற்படுத்துவதன் மூலம் சுகாதாரமான உணவுப் பொருட்கள் ஓரளவேனும்  சந்தைகளுக்கு வரும். அத்துடன் நுகர்வோர் அதிகாரசபை பொருளாதாரங்களில்  நிலவுகின்ற போட்டித்தன்மை சந்தை நிலவரங்கள்  தொடர்பிலே அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

 இதேபோல, ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்குமிடையே நம்பிக்கையான  உறவினை வலுப்படுத்திக்  கொள்ள வேண்டும். இதுபோன்ற சில நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தைககளுக்கு வரும் பழுதடைந்த தரமில்லாத பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை படிப்படியாக இல்லாது செய்யமுடியும் .

ரோபோ நோயாளி



 மருத்துவ மாணவர்களுடைய செயன்முறைப் பயிற்சிகளில் எதிர்காலத்தில் உபயோகிக்கக் கூடிய வகையிலே இதயத் துடிப்பு , கண் அசைவுகள் மற்றும் உண்மையான இரத்த காயங்கள் உடைய ஆச்சரியமான ரோபோ நோயாளர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

வீரியம் கூடிய எபேலா வைரஸ், நுரையீரல் புற்றுநோய் , பக்க வாதம் விபத்துகள் மற்றும்  வன்முறைச் சம்பவங்களில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றப்பாடுகளைக் கொண்டவையாக இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி நோயாளர்களது நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவும் அதற்கேற்ப சிகிச்சை வழங்கவும் முடியும். இந்த ரோபோ  நோயாளி (ஏதட்ச்ண கச்tடிஞுணt குடிட்தடூச்tணிணூ) சராசரியான நோயாளியொருவரின் குறைபாடுகளுக்கான பல்வேறு அறிகுறிகளைக் காட்டக் கூடிய வகையிலே இந்த ரோபோக்களின் செயற்பாட்டுத் திட்டம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

சுவாசம், ஒட்சிசனை உள்ளெடுத்து , காபனீரொட்சைட்டை வெளிவிடல்), நாடி, நாளம் மற்றும் இதயத் துடிப்புகள், இரத்த அழுத்த அளவீடுகள் என ஒவ்வொன்றும் மனிதனைப் போல இடம்பெறுவதுடன் அவற்றினை பரிசோதனை செய்தும்  பார்க்கக் கூடியதாக உள்ளன.
 அதேபோல ஒளிக்கேற்ப உறுத்துணர்ச்சி காட்டல் அதிக ஒளி தாக்கினால் கண்களை மூடிக் கொள்ளல் , கண் அசைவுகள் போன்றவற்றையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. சிகிச்சைகளுக்கு ஏற்ப நோயின் தன்மையை வெளிப்படுத்தல் மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்புகளுக்கேற்ப அறிகுறிகளை சரி செய்தல் போன்றவையையும் இந்த ரோபோக்கள் செயற்படுத்துகின்றன.

 செக்கனுக்கு செக்கன் வேறுபட்ட சிகிச்சைகளுக்குரிய விளைவுகளை கணினி முறைமையினூடாக  கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளமையே இந்த ரோபோக்களின் சிறப்பாகும்.

உதாரணமாக, நரம்பு மூலமாக மருந்து வழங்கல் மற்றும் சுவாசச் சுற்றோட்டம் போன்ற நடைமுறைகளுக்கு நோயாளி ரோபோக்களால் (இககீ) பதிலளிக்க முடியும். இந்த முறையிலே மருத்துவ மாணவர்களால் விடப்படும் தவறுகளால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் மற்றும்  அங்கவீனங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதேவேளை, முக்கியமான நிஜ வாழ்க்கைச் சூழலைக் கையாளவும் மருத்துவத்தின் மகத்துவத்தையும் சிறப்புத் தன்மையையும் மருத்துவ மாணவர்களுக்கு தெளிவாக உணர்த்தவும் முடியும்.
புதிதாகத் திறக்கப்பட்ட ஸ்காட்டிஷ் மருத்துவ உருவகப்படுத்துதல் மையத்தில் வைத்து ஏச்ணூஞீ ச்ணஞீ ண்ணிஞூt ணூதஞஞஞுணூடிண்ஞுஞீ ணீடூச்ண்tடிஞி  மூலப் பொருட்களை கொண்டு இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் கம்பிகள், மோட்டார்கள், குழாய்கள், ரப்பர் குழாய்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் கணினி சிப் போன்றனவும் இந்த ரோபோக்களுள் பொருத்தப்பட்டுள்ளன.

 லார்பேட்டிலுள்ள ஃபோர்த் வெல்லி ரோயல் மருத்துவமனையில் (ஊணிணூt ஙச்டூடூஞுதூ கீணிதூச்டூ ஏணிண்ணீடிtச்டூபயிற்சி பெறும் மாணவர்களுக்கு உதவியாக இந்த ரோபோக்கள் வழங்கப்படவுள்ளதாக வடிவமைப்பாளர் டாக்டர் டோனா பர்ஸர் தெரிவித்துள்ளார்.
 இம்மாணவர்கள் ரோபோக்களில் மேற்கொள்ளும் செயல்முறை பயிற்சிகளின் மூலம் பயனுள்ள நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக் கொள்வார்களென டோனா நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.




 புத்தகங்களிலுள்ளவற்றை வாசித்துக் கற்பதை விட கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல் முறைப் பயிற்சிகளின் மூலம் தெளிவான அனுபவ அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, நாம் ஏனையவருடன் பேசுவதைப் போல இந்த ரோபோக்களும் பேசக் கூடிய வகையிலே குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன  எனவும் டோனா தெரிவிக்கின்றனர்.
இஅஉ  சுகாதார பாதுகாப்பு அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட இவை உயர் தொழில் நுட்ப ரீதியான ரோபோ குடும்ப உறுப்பினர் வகைகளில் ஒன்றாகும். ( டடி tஞுஞிட ஞீதட்ட்டிஞுண்) .

 அவசர பிரிவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதியர்கள் பயிற்சி பெற உதவும் இந்த ரோபோக்கள் குருதி வழங்கல் மற்றும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. இதேவேளை, கர்ப்பிணிப் பெண் , இரு சிறுவர்கள் மற்றும் பிறந்த சிசு போலவும் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையான கர்ப்பிணிப் பெண் ,பிறந்த குழந்தை ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கோளாறுகள் என்பவற்றை இந்த ரோபோக்களும் வெளிப்படுத்துகின்றமை சிறப்பு அம்சமாகும்.

 16 இறாத்தல் நிறையுடைய "சிம்' எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ குழந்தை கெஞ்சுதல், அழுதல், சிரித்தல் , பயப்படுதல் , வாயில் எச்சில்  சுரத்தல் , கண்களிலிருந்து கண்ணீர் வெளியாகுதல் போன்ற செயல்களையும் செய்கின்றது. அதேவேளை, அசைவுகள் மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற  உணர்வுகளின் வெளிப்பாடுகளும் சிம்மிடம் உள்ளன

சிம்மினை பார்ப்பவர்களுக்கு அதுவொரு உண்மையான குழந்தை என்ற எண்ணமே ஏற்படும். ரோபோ குழந்தையில் பொருத்தப்பட்டுள்ள இறப்பர் குழாய் மாதிரிகளினூடாக சுவாச நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
நோயாளியின் பாதுகாப்பு மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள  இந்த ரோபோக்கள் மூலம் மருத்துவ மாணவர்கள் சிறப்பான பயனைப் பெறுவார்கள் என அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் மிக்கேல் மனிபெனி தெரிவித்துள்ளார்.

சா. சுமித்திரை



கொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் மூளையின் உட்பகுதியினுள் இருண்ட படை


கொலையாளிகள் , பாலியல் குற்றவாளிகள் போன்றோரின் மூளைகளிலுள்ள இருண்ட படலம் பகுதியொன்றை நரம்பியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 குற்றவியல் வன்முறை எண்ணம் கொண்டவர்களின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது மூளையில் இருண்ட படலப் பகுதி வெளிப்படுத்தப்படுமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கொலையாளிகள்பாலியல் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள் என ஒவ்வொரு வகைக் குற்றவாளிகளின் மூளைப் பகுதியிலும் இருண்ட படலப் பகுதியொன்று காணப்படுவதாக ஜேர்மன் நரம்பியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்  ரேயிலுள்ள ஒரு வெகுஜன கரும் பகுதி போல மூளையின் மத்திய மடல் பகுதியிலேயே இந்த இருண்ட பகுதியுள்ளதென விஞ்ஞானியான டாக்டர் ஜேர்கார்ட் ரோத் தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் சிறைக் கைதிகளாகவுள்ளவர்களை மையப்படுத்தி ஜேர்மன் அரசின் ஆய்வுகளுக்காக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் போதே ஜேர்கார்ட் மூளையின் இருண்ட பகுதியை கண்டுபிடித்தார்.
நாம் கைதிகளுக்கு சில குறும்படங்களை காண்பிப்பதுடன்  அதன் பின்னர், அவர்களுடைய மூளையின் அலைகளை அளவிட்டு கண்காணிக்கின்றோம்குறும்படங்களில் வரும் மிருகத்தனமானதோ , கொடூரமானதோ அல்லது ஆபாசக் காட்சிகளின் போதோ அவர்களின் மூளையின் இருண்ட பகுதி சொல்ல முடியாதளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. ஆனால், அக் காட்சிகளில் வரும் கருணை, இரக்கம், சோகம் போன்றவற்றிற்கு மூளையின் இருண்ட பகுதி எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.
மூளையின் இருண்ட பகுதியென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பகுதியில் குற்றவியல் வன்முறைகளுக்கான பதிவுகள் உள்ளதென ஜேர்கார்ட் கூறுகின்றர். சில குற்றவாளிகளின் வன்முறைகளுக்கு மரபியல் காரணங்கள்
 இருக்க வேண்டுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவர்களின் மூளையின் கீழ் நெற்றிப் பகுதியில் ஒரு கருமையான பகுதி இருக்குமென ஜேர்கார்ட் கூறியுள்ளார்.
சில வேளைகளில் அப்பகுதியில் காயமோ அல்லது கட்டிகளோ ஏற்படுமாயின் அதனாலேயே குற்றவாளியாக உருவாகும்  வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் மூளையின் பகுதியில் உருவாகும் கட்டிகளை சத்திர சிகிச்சையினூடாக அகற்றி அல்லது காயத்தைக் குணப்படுத்தினாலே குறித்த நபர் குணமடைந்து வக்கிர குணமற்ற மனநிலை அடைந்து விடுவார். இல்லையெனில் அந்நபரின் மூளை திறம்பட செயற்படமாட்டாது. எனவே, குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக இது தானாக செயற்படாது . ஆனால், முளையுடன் தொடர்புடைய வன்முறை போக்குகளை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்என்பது, பல்வேறுபட்ட  மேலோட்டமான  உணர்ச்சிகள்  இரக்க குணம் இல்லாமை, சூழ்ச்சித் திறன், பொறுப்பற்ற தன்மை, திடீர் உணர்ச்சிகள் , மூக விரோத  நடத்தைகள் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை போன்ற ஆளுமைக் கோளாறுகளாகும்.

 மூளையின் முன் நெற்றியின் கீழ் இருண்ட பகுதி உள்ளவர்களில் 66 வீதமானோர் வன்முறை உணர்வுகளை கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே சமூக விரோத நடத்தை  கொண்டவர்களை எளிதாக இனங்காண முடியுமெனவும் டாக்டர் கூறுகின்றார்
எனவே, இக்கோளாறு கொண்டவர்களை இளம் பராயத்திலே  இனங்கண்டு  பெற்றோர்களின் அன்புடன் சீர்திருத்தங்களை மேற்கொள்வதனூடாக அவர்கள் எதிர்காலங்களில் ஆரோக்கியமான மனநிலையுடன் செயற்படுவார்கள் எனவும் ஆராய்ச்சிக் குழு உறுதிப்பட கூறுகின்றது.

சா. சுமித்திரை


வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

காதலுக்கு கொமாண்டோ பாதுகாப்பு


சா. சுமித்திரை

உலகில் அனைத்து உயிரினங்களுமே காதல் வசப்படுகின்றன. இதில், மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா? ஒவ்வொருவரது  வாழ்நாட்களிலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் காதல் ஏற்பட்டிருக்கும். யாராவது ஒருவர் தனது வாழ்நாட்களில் ஒரு தடவை கூடக் காதலிக்கவில்லை எனக் கூறுவார்களா?

 அவர்களது காதல் சிலவேளைகளில் நிறைவேறாமலோ அல்லது மறைக்கப்பட்டோ இருக்கலாம். ஆனால் காதல்  நிஜமானது, அவர்களது காதல் நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.

 ஆனால் இன்று தமது காதலில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் கூட தமது பிள்ளைகளின் காதல் என்றதும் உடனே எதிர்ப்புக் காட்டத்தொடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் காதல் சோடிகளை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். லவ் கொமாண்டோக்கள். இவர்கள் காதலுக்கு ஆதரவு தருகின்றார்களா? எனவும் இதுபோன்ற அமைப்புகள் மேலைத்தேய நாடுகளில்தான் இருக்குமெனவும் இளம் காதல் சோடிகள் எண்ணலாம். ஆனால் இந்த லவ் கொமாண்டோ அமைப்பு எமது அயல்நாடான  இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில்தான் உள்ளது.

கட்டாயத் திருமணங்கள், கௌரவக் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து இளம் காதல் சோடிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முயற்சியில் காதலைக் காதலிக்கும் லவ் கொமாண்டோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தியாவிலே ஒவ்வொரு வருடமும் காதல் உறவுகளால் ஏற்படும் தொடர்புகளால் 1000 இற்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 இந்தப் படுகொலைகள் கூட "கௌரவக் கொலைகள்" எனச் சாதாரணமாக அழைக்கப்பட்டு வரும் நிலையிலே காதல் என்னும் தெய்வீக உணர்வுக்கு அடிமைப்பட்ட ரோமியோ ஜூலியட் காதல் ஜோடிகளுக்கு இரகசிய அடைக்கலம் கொடுத்து மென்மையான காதல் மனங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த லவ் கொமாண்டோக்கள்.

 கடும் தொனியில் கூடப் பேசத் தெரியாத இந்த அமைப்பினருடன்  கதைத்துக் கொண்டு இருந்தாலே போதும், கனமான இதயங்கள் அமைதியடைந்து விடும். ஒருவருடைய காதல் உறவினை அவருடைய குடும்பத்தினர் ஏற்கவில்லை எனில் அச்சோடிகளை அழைத்து வந்து திருமணம் செய்து  வைக்கின்றனர்.

 அதேவேளை சட்ட மற்றும் நடைமுறை உதவிகளை வழங்குதல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான இரகசிய அடைக்கலம் வழங்கல் , அச்சோடிகளுக்கெதிராக எழும் அச்சுறுத்தல்கள், கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் எனப்பல உதவிகளையும் இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர். எதிர்ப்பான காதலர்களுக்கு உதவி செய்வோருக்கு நிச்சயம் உயிர் ஆபத்துக் காணப்படும்.

 ஆனாலும் இன்னொருவருடைய காதலுக்காக லவ் கொமாண்டோக்கள் தமது உயிரையே பணயம் வைத்து காதல் உணர்வுக்கு மட்டும் அர்ப்பணம் செய்து வேறிரு உயிர்களை வாழ வைக்கின்ற சேவை உண்மையிலே உணர்வுபூர்வமானதாகும்.

 சமூக அந்தஸ்து, வசதி வாய்ப்புகள், கல்வித் தகைமை, தொழில், பதவியுயர்வு போன்ற காரணங்களைக் காட்டி தமது குடும்பத்திற்கேற்ற சரியான தெரிவு இல்லை எனவும் வேறு மதம் அல்லது சாதி ஆகியவற்றாலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் காதலை நிராகரித்து விடுகின்றனர். அதேவேளை பெற்றோரை மீறும் பிள்ளைகளை சமூகத்திற்கு பயந்து தமது கௌரவத்தை மட்டும் கருத்தில் கொண்டு சில பெற்றோர் கொலை கூட செய்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் வருட மொன்றிற்கு 1000 இற்கு மேற்பட்ட காதல் ஜோடிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

சில சோடிகளில் ஒருவர் மட்டும் மரணமாக மற்றவர் தனது வாழ்நாளைத் தொலைத்து விட்டு மனநோயாளர்களாக தனிமையில் கழிக்கின்றனர். இது போன்ற எத்தனையோ காதல் மனங்களைக் கொல்லும் சம்பவங்களுக்கு எதிராக இந்த லவ் கொமாண்டோக்கள் உள்ளனர்.
 கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் 22  வயதான தனது தங்கை காதலனுடன் ஓடியதையறிந்த 29 வயது சகோதரன் தங்கையைத் தேடிக் கண்டு பிடித்து அவரை வீதிக்கு இழுத்து வந்து அவ்வீதியில் வைத்தே தங்கையின் தலையைத் துண்டித்திருந்தார். மனிதனுக்கு இயற்கையாக உருவாகின்ற மென்மையான உணர்வான காதலுக்கு உயிர் எப்படி ஈடாகும்?

இதே போன்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கையிலே லவ் கொமாண்டோக்களின் இச்சேவை கட்டாயம் பேசப்பட வேண்டியதொன்றாகும்.
 இந்தியாவின் பழைய டில்லியில் மிகவும் வசதி குறைந்ததும் சேரிப் பகுதியுமாகவுள்ள ஒரு சிறு ஒழுங்கையிலுள்ள பாழடைந்த கட்டிடத்திலேயே இந்த லவ் கொமாண்டோ  அமைப்பு உள்ளது. இக் கட்டிடக் கதவில்கூட அடையாளம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும் இல்லாத நிலையிலே இக்கட்டிடத்தைக் கண்டுபிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல.
 ஒரு சமூகப் புரட்சியின் விதைகள் விதைக்கப்பட்டு வேர்கொள்ள செய்யப்படுவதாகவே இக்கட்டிடத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரது மனநிலையும் சொல்லும்.

லவ் கொமாண்டோக்களின் அன்பு என்னும் வாடகையில் 7 பாதுகாப்பான வீடுகள், அவை ஒவ்வொன்றும் 5 அறைகளாகப் பிரிக்கப்பட்ட சிறிய சொத்து தற்பொழுது அன்பு என்னும் பாதுகாப்பின் கீழ் 5 காதல் சோடிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக  லவ் கொமாண்டோக்களை அண்மையில் டெய்லி மெயில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தது.
 இந்த லவ் கொமாண்டோக்களைப் பற்றி டெய்லி மெயில் மேலும் பல தகவல்களைத் தந்திருந்தது. அவை உங்களுக்காக!

இந்த அமைப்பின் நிறுவுனராக சஞ்ஜோய் சச்தேவ் ஆதரவில் மனிதாபிமான மற்றும் சட்ட உதவிகளுடன் இந்த தற்காலிக கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது.
முன்னாள் ஊடகவியலாளரான 52 வயதுடைய சஞ்ஜோய், இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன்னார்வ பங்களிப்புகளினூடான நிதியுதவி மூலம் லவ் கொமாண்டோக்கள் அமைப்பினை உருவாக்கியிருந்தார்.

டில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலுள்ள இளம் காதல் சோடிகளிடமிருந்து வருடமொன்றுக்கு 100 அல்லது 200 அழைப்புகள் வருமென எண்ணுவதாக சஞ்ஜோய் தெரிவித்திருக்கின்றார்.

 நாடு முழுவதும் சுமார் 11, 000 லவ் கொமாண்டோக்கள் தொண்டர்களாக செயற்பட்டு வரும் அதேவேளை, காதல் சோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல், தற்கொலை, மனவிரக்திகளிலிருந்து காதலர்களை மீட்டெடுத்தல், இலவச சட்ட உதவிகளை வழங்கல் என பலதரப்பட்ட உதவிகளை காதல் பாதுகாவலர்களாக இருந்து 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர்.

 இந்தப் பாதுகாப்பான இரகசிய அடைக்கலத்தில் சுமார் 80 காதல் சோடிகள்  தங்கியிருந்து லவ் கொமாண்டோக்களின் உதவிகளைப் பெற்றுள்ளன. இவர்களில் சிலர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்தனர். வேறு சிலர் சிலகாலம் தங்கியிருந்தனர். எவ்வாறாயினும் அவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைகையை வளமாக வடிவமைத்துக் கொண்டனர் என்ற ஆத்ம திருப்தியடைகின்றனர் இந்த காதல் பாதுகாவலர்கள்.

"வட இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் வங்கிக் கணக்காளராக கடமையாற்றும் 29 வயதான அப்துல் ஹக்கீம் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். அவர் 25 வயதான  மேவிஸ் என்னும் பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார். இதனையறிந்த பெண் வீட்டார் அவ்விருவரையும் படுகொலை செய்வதற்கென 2 இலட்சம் ரூபாவுக்கு கூலியும் நிர்ணயித்திருந்தனர். எனினும் அவ்விருவரும் தப்பியோடி வந்து எம்மிடம் அடைக்கலம் கோரினர்.

 நாம் அடைக்கலம் கொடுத்த அன்பினால் ஆதரித்திருந்தோம். பின்னர் இரு வருடங்களன் பின்னர் தமக்குப் பிறந்த பெண்குழந்தையுடன் அக்காதல் தம்பதியினர் தமது கிராமத்துக்குச் சென்றிருந்த போது அவர்களது குடும்பத்தினர் எந்தக் கோபமோ, ஆத்திரமோ இன்றி ஆதரித்து வரவேற்றிருந்தனர்.

 ஆயினும் ஒரு வாரத்துக்குள் அப்துல் ஹக்கீம் அக்கிராமத்தில் வைத்து பட்டப்பகலிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி சம்பவத்தையும் காதல் கொமாண்டோ நிறுவுனுரான சஞ்ஜோய் விபரித்தார்.

 பொதுவாக சமூகத்தில் பெண்கள் முக்கிய இலக்காவர். காதலுக்குத் தடை மீறினால் கொலைகளும் அச்சுறுத்தல்களும், பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம் என பெண்கள் பலவகைகளிலும்  நசுக்கப்பட்டு வருகின்றனர்.பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவை நடைமுறையிலுள்ளதாக தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

"சாதிகளால் வேறுபட்ட நாம் காதலால் ஒன்றிணைந்தோம்" என பாஸ்கர் கோசாமி (வயது 28), பூஜா சிங் (வயது 22) ஆகிய இருவரும் கூறுகின்றனர். அதேபோல "சமூக பிரிவுகளால் எங்களுடைய காதலுக்கு தடைபோடப்பட்டது. அதனை மீறி நாம் இன்று சந்தோசமாக நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" என தர்மேந்திரர்குமார் (வயது 24), சப்னா மிடால் (வயது 23) காதல் சோடி கூறுகின்றது. இது போல பெற்றோர்களால் தடுக்கப்பட்ட காதலை அவர்களை விட்டு வெளியே வந்து இந்த அடைக்கலத்தில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோல சாதி, சமூக அமைப்புகள், மதம் பொருளாதார வர்க்கம், கல்வி நிலை ஏற்றத்தாழ்வுகள் எனப்பல வேறுபாடுகளால் பிரிந்து காணப்படுகின்ற மனிதனை காதல் என்னும் ஒரு உணர்வு மட்டும் இணைத்து மனிதநேயத்தை உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றது.

 காதலைப் பாதுகாக்கும் கொமாண்டோக்களிடம் அடைக்கலம் கோரியுள்ளோரில் பெரும்பாலானோர் படித்த சமூகத்தில் , நல்ல தொழில் வாய்ப்புகளில் உள்ளவர்களாவர். ஆசிரியர்கள், வங்கியாளர்கள், பயிற்சிக் கணக்காளர்கள் எனக் கௌரவமான தொழில்களை மேற்கொண்டு வருபவர்களும் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் சஞ்ஜோய் தெரிவிக்கின்றார்.

இந்தியாவிலேயே தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் இதுவரை தனிப்பட்ட ரீதியிலே இடம்பெறுகின்றன. 2010 ஆம் ஆண்டு  பிரிட்டனில் இதுபோன்ற 3000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 காதல் என்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக காதலிப்பவர்களை ஏன் தடுக்க வேண்டும்? நியாயமானதும், தெய்வீகமானதுமான காதலை தடுப்பவர்களுக்கு இந்த லவ் கொமாண்டோக்கள் நிச்சயம் எதிரிகளாகவே இருப்பார்கள். ஆனாலும் காதலிப்பவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகளற்ற ஒதுக்குப் புறத்தில் உள்ள இரகசிய அடைக்கலம் அன்பு நிறைந்த வசந்தமாளிகையாக இருக்கும் என்பது நிச்சயம்.