சனி, 30 ஜூன், 2012

புதையல் தோண்டும் மர்மம்

 -சா .சுமித்திரை -

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களில் புதையல் தோண்டுதல் தொடர்பான சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு ஊடகங்களின் செய்திகளை அவதானித்தாலும் புதையல் தோண்டுதல் தொடர்பான செய்திகள் ஏதோவொரு வகையிலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.


அண்மையில் அம்பன்பொல மற்றும் மதவாச்சியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை  சம்பவ இடங்களில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் கடந்த வாரம் ஆனமடுவவில் உப்பலாவத்தைப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தவர்களை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த இடத்தில் நரபலி கொடுப்பதற்காக சில விலங்குகளை அடைத்து வைத்திருந்ததுடன் மந்திரப் புத்தகமொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


அதேபோல புதையல் தோண்டுவதற்கு முன் மனித நரபலிகொடுக்கவென வாழைச்சேனையில் வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், கடத்தல்காரர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் அச்சிறுவனைக் கடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு கல்குடாவிலும் அக் குழுவினர் சிறுமியொருவரை கடத்த முயற்சித்த போதும் அச்சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.


இச்சம்பவங்களையடுத்து பொதுமக்கள் மத்தியிலே மிகுந்த பதற்றமும் அச்சமும் காணப்படுவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ அனுப்புவதற்குக் கூட தயக்கம் காட்டி வருகின்றனர். அதேவேளை, தாங்களும் வீடுகளை வீட்டு வெளியேறுவதற்கு பயப்படுகின்றனர்.


புதையல் தோண்டும் கொள்ளையர்களில் சிலர் மந்திரவாதிகளின் ஆலோசனைகளைப் பெற்று இந்த இளம் பாலகர்களை கடத்திச் சென்று படுகொலை செய்து அவர்களின் இரத்தத்தையும் சில உடற்பாகங்களையும் புதையல் தோண்டும் முயற்சிக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பாதகர்களுக்கு புதையலோ, பொக்கிஷமோ கிடைக்கின்றதோ இல்லையோ ஆனால், இக்குழந்தைகளின் உயிர்களின் பெறுமதியையோ அச்சிறுவர்களினது பெற்றோர்களின் வாழ்நாள் உயிர்த்துடிப்புகளையோ இவர்கள் அறிந்து கொள்ளப் போவதில்லை. மிகக் கொடுமையான செயலாகும்.


காணாமல் போகும் எத்தனையோ குழந்தைகளின் உயிர்கள் இந்தப் புதையல் கொள்ளையர்களிடம் பறிபோகும் பல சம்பவங்கள் திரைக்கு மறைவிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


நாட்டிலே அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருட்களின் விலையேற்றம் என்பவற்றால் திருட்டு, கொலை, மோதல், வன்முறைகள் என பல வகையான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எனவேதான் புதையல் தோண்டுதல் என்பது இன்று அநேகமானோர்களின் சுயதொழிலாக உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவர் எந்த நோக்கத்தில் தெரிவித்திருந்தாரோ தெரியவில்லை. எனினும் அவரது பேச்சில் ஒரு உண்மையுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கதிர்காமம் லுணுகம்வெகரப் பகுதியில் பெறுமதியான மாணிக்கக் கற்கள் கிடைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே புதையல் தோண்டும சம்பவங்களும் அதிகளவில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறு களுகங்கைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 16 பேரை ஹொரணை விசேட அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், அகழ்வுக்கென பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதேவேளை, புதையல் தோண்டிய சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 352 பேர் சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே புதையல் தோண்டும் குற்றச் செயல்கள் அதிகளவு இடம்பெற்று வருகின்றன.


கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான கால இடைவெளியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதையல் தோண்டிய 250 சம்பவங்களும் 522 தேவையற்ற அகழ்வுச் சம்பவங்களும் பதிவாகியுள்ள அதேவேளை இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட 1381 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பால சூரிய தெரிவித்தார். அதிலும் குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களும் உறவினர்களும் இணைந்தே புதையல் தோண்டும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின் கிட்டத்தட்ட 2 வருடங்களில் தொல்பொருட்களை சேதப்படுத்தியமை, அவற்றினை திருடி விற்பறமை புதையல் தோண்டியமை என பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் 40 மில்லியன் ரூபா தண்டப்பணமாக அறிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


புதையலென்பது இயற்கையானதென்றும் புதையல் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் சிலர் நினைக்கலாம். அதேபோல் பெரிய குடங்கள் பானைகளினுள் தங்கக் காசுகள், வைர நகைகள், மாணிக்கக் கற்கள் நிரப்பப்பட்டு மண்ணினுள் புதைத்து காணப்படுவதுதான் புதையல் எனவும் சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் நினைப்பது சரியென்றாலும் புராதன விக்கிரகங்கள், சிலைகள் போன்ற தொல்பொருட்களும் ஒரு புதையலாகும். புராதன காலம் தொட்டே புதையல் என்பது முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. நாம் சிறுவயது முதலே  இத்தகைய புதையல் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வுகள்  மற்றும் கதைகளை பெரியவர்களின் பேச்சுக்களின் போதோ, வரலாற்று ஏட்டுச் சுவடுகள் மூலமாகவோ அல்லது மதத் தலைவர்களது பிரசங்கங்கள மூலமாகவோ அறிந்து வந்துள்ளோம்.


மன்னர் கால ஆட்சிகளின் போது தமது எதிர்கால சந்ததியினர் ஏதேனும் கஷ்டங்களோ பஞ்சங்களோ ஏற்படுமாயின் இவற்றினை எடுத்துப் பயன்பெற வேண்டுமென பெறுமதியான பொருட்கள், ஆபரணங்கள், தங்க நாணயங்கள் என்பவற்றை ஏதாவது ஒரு பானையிலோ பெட்டிகளிலோ போட்டு புதைத்து விடுவார்கள்.  அத்துடன் அதனைப்பற்றி சுவடுகளிலோ அல்லது பாறைகளிலோ எழுதிப் பொறித்து விடுவார்கள்.
அதேவேளை, சில மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இடம்பெறும் யுத்தங்களின் போது தமது சொத்துகளைப் பாதுகாக்க தடயங்களை வைத்தோ அல்லது குறிப்புகளை வைத்தோ புதைத்து விடுவார்கள். எனினும் இவர்கள் அவற்றினை மீண்டும் பெறாது இறந்துவிட்டால் அவை பல தசாப்தங்களாக மண்ணினுள் புதைந்து காணப்படும். அநேகமாக இலங்கையைப் பொறுத்தவரை புதையல் தொடர்பான தகவல்கள் அக்காலங்களில் ஓலைச்சுவடிகளிலும் கற்பாறைகளிலும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 
மன்னர்கள் வாழ்ந்ததாக வரலாற்றில் கூறப்படும் இடங்களைத் தேடியறிந்தும் சில பிக்குகள் போன்ற மதத் தலைவர்களின் ஆதரவுடன் ஓலைச் சுவடிகளிலும் சுவடுகளிலும் பொறிக்கப்பட்ட தகவல்களை பெற்றும் புதையல்களைத் தேடி தோண்ட முற்படுகின்றனர். மேலும் சிலர் மந்திரவாதிகள், ஜோதிடர்களின் பின் நாயாக பேயாக அலைந்து திரிந்து அவர்களிடம் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று புதையல் தோண்டுகின்றனர். இதனால் தான் காட்டுப் பகுதிகளில் தனிமையான இடங்களிலுள்ள குகைகள், பெரிய பொந்துகள், பழைமை வாய்ந்த விகாரைகள், இந்து ஆலயங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் என புதையல் தோண்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மதத் தலங்களைக் கூட விட்டு வைக்காத இந்த புதையல் கொள்ளையர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொலநறுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலினை முற்றுமுழுதாக சேதடுத்தியுள்ளதுடன், கோயிலின் மூலஸ்தானத்திலுள்ள சிவனுக்கு கீழே கிட்டத்தட்ட 3 1/2  அடி ஆழத்திற்கு பாரிய குழி தோண்டியுள்ளனர். இதனை விட இக்குழி எப்பொழுது தோண்டப்பட்டது என்பது கோயில் நிர்வாகத்திற்கே தெரியாததொன்றாகவுள்ளது. இதனைப் போல இந்து ஆலயங்கள், விகாரைகளை இலக்கு வைக்கும் இந்த புதையல் கொள்ளையர்களால் கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.






புதையல் எடுப்பதற்காக மதத்தலங்களும் தொல் பொருட்களும் சேதமாக்கப்படுகின்றன. அத்துடன் புதையல் தோண்டுபவர்கள் புதையல் தோண்டுவதற்காக பாரிய உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பின்னணியில் இருந்து செயற்படுகின்றமையால் இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சுலபமானதொன்றல்ல.
விலச்சி பகுதியில் இடம்பெற்ற புதையல் தோண்டும் நடவடிக்கையில் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து புதையல் தோண்டியதாகவும் புதையல் தோண்டுவதற்காக பாரிய குழி தோண்டும் இயந்திரமான பெக்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதையல் தோண்டும் முயற்சிக்கு விடேச அதிரடிப்படையினரை அனுப்பியது தான்  என பொலிஸ் மா அதிபரும் தெரிவித்துள்ளார்.
எனவேதான் புதையல் தோண்டும் சம்பவங்களின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகளும் சில தொழிலதிபர்களும் உள்ளதால் இவர்கள் சட்டத்தின் பிடியில்சிக்கமாட்டார்கள் என அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் உடுகம  ஸ்ரீ புத்திரகித்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே புதையல் தோண்டுபவர்களின் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களே முதலில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.  அத்துடன் புதையல் தோண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அபராதம் மட்டும் விதிக்காது கடுமையான சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.
எமது நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் ஒன்றான கொழும்பு தொல்பொருட் காட்சியகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாரம்பரியதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான அரச உடைமையான தொல் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. எனினும் இதுவரை இந்தத் திருட்டுப் போன பொருட்கள் எங்கு உள்ளன? யார் திருடினார்கள் என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் இல்லை. இவ்வாறான பொருட்கள் திருடப்படுகின்றமை மூலம் நாம் எமது நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் பாரம்பரியங்களையும் தொலைக்கின்றோம் என்றுதான் கூறவேண்டும்.
நாட்டுக்கே உரிய 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த'" பொருட்களை இவ்வாறு திருடுவதோ சேதப்படுத்துவதோ அல்லது விற்பதோ நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். இந்த விலைமதிப்பற்ற புராதன பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு தொல்பொருள் ஆய்வாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதுடன் தொல் பொருட்கள் உள்ளதாகக் கருதப்படும் இடங்கள். வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் பாதுகாப்புகளையும் பலப்படுத்த வேண்டும். இதன் மூலமே புதையல் கொள்கையர்களிடமிருந்து எமது வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

செயற்கை உயிரியல் எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும்






சா.சுமித்திரை

 படைப்பு இறைவனின் அருள் என்ற நிலை மாறி மனிதனாலும் உயிர்களை உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டமையே அறிவியலின் உச்சம் எனலாம்.

 கோயில்களையும் வேப்பமரங்களையும் சுற்றி வந்த பெண்களை மருத்துவமனையின் ஆய்வுக் கூடங்களை நோக்கி இழுத்து வந்தது அறிவியலின் இந்த மகத்தான கண்டுபிடிப்பு !

உலகிலே கருத்தரிப்பு முறைகளிலே கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சோதனைகள் மூலம் மாற்றங்களும் முன்னேற்றங்களும் இடம்பெற்று இயற்கைப் படைப்புக்களை குளோனிங் (பல் படியாக்கம்) முறையிலே உருவாக்கும் நிலை பற்றி சிந்திக்கும் அளவுக்கு அறிவியல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது.

அதாவது சோதனைக் குழாய் மூலமும், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியதுடன் அவை இன்றைய காலத்திலே சாதாரணதொரு மருத்துவத்துறையாகவும் சாதாரண மக்கள் பின்பற்றும் வழிமுறையாகவும் காணப்படுகின்றது. தொடர்ந்து அனைத்து இன உயிரினங்களையும் பல் படியாக்கம் (இடூணிணடிணஞ்)  முறையிலே உருவாக்கலாம் என்பதை உறுதிறபட செய்து காட்டியுள்ளமை அறிவியல் மருத்துவத் துறைக்கு ஒரு மைல்  கல்லாகும்.

மிக அண்மையில் பஷ்மினா இனத்தைச் சேர்ந்த வெள்ளாடொன்றினை குளோனிங் முறைகளைப் பின்பற்றி அதன் நகலாக ஒரு ஆட்டுக் குட்டி ஒன்றினை இந்தியாவின் காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ரிபாய் அகமது ஷா தலைமையிலான குழுவினர் உருவாக்கியிருந்தனர். இந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் 1.3 கிலோ எடையுடன் இது ஆரோக்கியமாக உள்ளதுடன் குளோனிங் முறையிலே முதன் முதலாக உருவாக்கப்பட்ட வெள்ளாடு இதுவேயாகும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் உயிரியலின் சாதனையாகவுள்ள பல் படியாக்க முறை மூலம் பறவைகள், விலங்குகள் , தாவரங்கள் மட்டுமன்றி மனிதர்களைக் கூட உருவாக்க முடியும். பல் படியாக்கம் செய்யப்படும் உயிரங்கியின் உடலியல் வேறுபாடோ அல்லது அவற்றின் குணயில்யபு வேறுபாடுகளோ எதுவுமின்றி அவ் வங்கியை ஒத்த இன்னொரு அங்கியை உருவாக்குவது குளோனிங்காகும்.

அதாவது ஆணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அந்த ஆணின் பிரதியாகவும் ஒரு பெண்ணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அப் பெண்ணில் நகலாகவும் காணப்படும்.

ஒரு ஆணும் பெண்ணும் இணையாமல் ஒரு ஆணின் உயிரணுவையோ அல்லது பெண்ணின் உயிரணுவையோ கொண்டு உருவாக்கும் உயிரே குளோனிங் முறையில் உருவான உயிரினமாக கருதப்படும்.

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவியல் வரலாற்றிலே ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. ஏனெனில் அவ்வருடமே முதன் முதலாக குளோனிங் முறையிலான உயிரினம் உருவாக்கப்பட்டது. இக் குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டியொன்று உருவாக்கப்பட்டு உலகத்தையே திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. அயன் வில்மட் என்னும் உயிரியல் விஞ்ஞானியே டாலி என்ற ஆட்டுக் குட்டியை உருவாக்கி செயற்கை உயிரியலுக்கு வலுச் சேர்த்தார்.

டாலியின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக 3 பெண் செம்மறியாடுகள் இருந்துள்ளன. இனப் பெருக்கச் செயற்பாட்டிற்கு ஆண் செம்மறியாட்டின் பங்கோ அல்லது எந்த ஆண் செம்மறியாட்டின் உயிரணுக் கலப்போ இல்லாமல் டாலி  பிறந்தமையால் இதுவொரு அறிவியலில் வியக்கத்தக்க செய்தியாகும்.

ஒரு ஆட்டுக் குட்டியில் ஆரம்பித்த இக் குளோனிங் முறை இன்று குழந்தைகளையும் உருவாக்கலாம் என அடித்துச் சத்தியம் செய்கின்றது. ஆரம்பத்தில் விலங்குகளில் குளோனிங் முறையை பயன்படுத்தி பல விலங்குகள் உருவாக்கப்பட்டமையை அடுத்து தற்போது இதனை உலகந õடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

குளோனிங் முறையிலே ஆட்டுக் குட்டிகளை தவிர ஓட்டகம், நரி , எலி , பன்றி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதனிலிருந்து குளோனிங் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை பிரான்ஸ் பெண் மருத்துவ விஞ்ஞானியொருவர் கண்டு பிடித்த பின் பல  நாடுகள் மனித இனத்தில் குளோனிங் முறை கூடாது என தடை செய்யப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத்தேய நாடுகள் குளோனிங் முறையிலான குழந்தைப் பேறுக்கு தடைவிதித்தன.

இருந்த போதிலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதக் கருவைப் பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர்.  வளர்ந்த பாலூட்டிகளின் மூல உயிரணுக்களை பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த குளோனிங் முறை அதிக வெற்றியை தரவில்லை என்றே கூறலாம். இத் தோல்விக்குக் காரணம் வளர் நிலையிலுள்ள உயிரணுக்களின் சிறப்புத் தன்மையே யாகும். உயிரணுக்கள் அனைத்தும் ஒரே மரபணுக் கூறின் அமைப்பினைக் கொண்டுள்ள போதிலும் ஓர் உயிரணு ஒரு உயிரியாக வளர்ச்சியடையும் போது அவை தங்களுடைய உள்ளார்ந்த இயல்புத் தன்மைகளை இழந்து விடுகின்றன. உதாரணமாக தோல் உயிரணு இன்சுலின் உற்பத்தியை செய்வதில்லை. மாறாக மெலனின் எனப்படும் தோலின் நிறத்திற்கு காரணமாக உ ள்ள நிறமிகளுடனே தொடர்பு கொண்டுள்ளன. அதாவது மனித  உடலின் ஒவ்வொரு பாகங்களிலுமுள்ள  உயிரணுக்கள் அப் பாகங்களின் தொழில்களுக்காகவே சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியது போல குளோனிங் முறையிலே உயிரினங்களை உருவாக்காமல் உடலுறுப்புக்களை உருவாக்கலாம். இதன் மூலம் மனித வர்க்கத்திற்கு எதிர்கால நன்மையுள்ளதுடன் உடற்பாகங்கள் வலுவின்றியும் பழுதடைந்தும் ஆரோக்கியமற்ற எத்தனையோ இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கைக்கு ஒளியேற்ற முடியும்.
எனினும் மனித பல்படியாக்க முறையில் உருவாக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று பெல்ஜியத்தில் வளர்வதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் இருந்து வெளியாகும். சண்டே டைம்ஸ் தெரிவித்திருந்தது. எனினும் இதனை பெல்ஜிய நாட்டு  விஞ்ஞானிகள் மறுத்திருந்தனர்.
 இதேவேளை வில்மட்டின் சோதனைகள் அறிவியலின் விதிமுறைத் தன்மைகளின் கட்டுக்கடங்காத நிலையை எடுத்துரைக்கின்றமையால் குளோனிங் மனித இன அழிவிற்கு காரணமாக அமையும் என இங்கிலாந்தின் அணுக் கரு இயற்பியல் அறிஞரான ஜோசப் ரோட் பிளாக் தெரிவித்தார். அதேபோல் பல எதிர்ப்புகளை குளோனிங் முறை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமய , ஆன்மீக வாதிகளிடம் இருந்தே அதிக எதிர்ப்புகள் எழுந்தன. ஏனெனில் இக் குளோனிங் முறை இயற்கை விதிகளுக்கு மாறனது எனவும் இதன் எதிர் விளைவுகள் எதிர்காலத்தில் மனித வர்க்கத்திற்கோ ஏனைய உயிரினங்களுக்கோ பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
 இதேபோல சில அறிஞர்களும் இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். அணு குண்டு கண்டுபிடிப்புக்கு ஈடாகவே இப்படியாக்க முறை உள்ளதாக அனைத்து சமூக வர்க்கமும் குறிப்பிடுகின்றது.
இதனால் எதிர்காலத்தில் உ லக அமைதியை விரும்பாத தீய சக்திகளோ அல்லது பயங்கரவாதிகளோ இவ் வறிவியலுடன் மேலும் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி தீங்கிழைக்க கூடிய மாற்று உயிரினங்களை உருவாக்கலாம். இதனால் எத்தனையோ இடி அமீன்களும்  எத்தனையோ ஹிட்லர்களும் உருவாவார்கள். ஆகவே நினைத்துக் கூட பார்க்க முடியாத பாரிய மாற்றங்களையும் விளøவுகளையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இக் குளோனிங் முறையில் பிறந்த டாலியின் ஆயுட் காலம் எவ்வளவு என்பதை யாராலும் கூற முடியாத நிலை ஒன்று உ ள்ளது. ஏன் எனில் டாலியை உருவாக்கப் பயன்பட்ட உயிரணுவின் தன்மையாகும். அதாவது செம்மறியாட்டின் பால் மடியில் இருந்து பெறப்பட்ட உயிரணுவைப் போல அவ்வாட்டின் ஏனைய உடற் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள் இருக்குமா என்ற வினாவிற்கான விடை தெரியாமையே ஆகும்.  இதேபோல் குளோனிங்கில் உள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படுவதன் மூலம் ஆரோக்கியமான குளோனிங் உயிரினங்கள் உருவாக வழிகோலாக அமையும்.
அதேவேளை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய உருவத்தை கொண்ட மமூத் என்றும் யானை இனத்தை ஒத்த விலங்கினை குளோனிங் முறையில் உ ருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கான ஆராய்ச்சிகளை ரஷ்யாவின் சக்கா குடியரசின் மமூத் அருட்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக்கழகமும் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வந்த மமூத்தின் தொடை எலும்புப் பகுதியில் இருந்து பெறப்பட்ட கலம் மூலம் குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த முயற்சி எதிர்வரும் 5 ஆண்டுகளில் வெற்றி கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அழியும் விளிம்பிலுள்ள பல உயிரினங்களை இம் முறை மூலம் உருவாக்கி இயற்கை சமனிலை பாதுகாக்க வழி செய்யலாம். எந்தவொரு கண்டுபிடிப்புகள் ஆயினும் செயற்பாடுகளாயினும் நன்மைகளுக்கு சரிசமனான தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே தீமைகளை மட்டும் எடுத்துக் கூறாது எத்தனையோ ஹிட்லர்கள் என்பதற்கு பதிலாக எத்தனையோ அன்னை தெரேஸாக்கள் , அப்துல் கலாம்கள், ஆபிரகாம் லிங்கன்கள் என உருவாக்கினால் உலகம் அழிவுப் பாதையில் இருந்து ஒரள வேனும் மீளும். அத்துடன் உணவுப் பயிர்களையும் இதுபோல குளோனிங் முறை மூலம் உருவாக்கினால் உலகிலே உணவுத் தட்டுபாடு, வறுமை, பசி என்பன இல்லாது போகும். இவற்றுக்கு எல்லாம் சரியான தீர்வு பெற குளோனிங் முறை ஓர் ஆரோக்கியமான அணுகு முறை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ளது.

இலங்கையை ஆட்டிவிக்கும் சூதாட்டம்

 சா .சுமித்திரை -

உலக நாடுகள் மட்டுமல்லாது, இலங்கையிலும் பெரும் தலையிடியாக மாறி வருகின்ற பிரச்சினைகளில் சூதாட்டம்  முக்கிய இடம்பெற்றுள்ளது. சூதாட்டம் இன்றோ அல்லது நேற்றோ உருவானதொன்றல்ல. மிக மிக புராதன காலங்களிலேயே சூதாட்டங்கள் தொடர்பான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன.


பணத்தையோ அல்லது பெறுமதியான பொருட்களையோ அல்லது நம்பி வந்த உறவுகளையோ வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவுகளையும் கொடுக்கக்கூடிய ஒரு வகை விளையாட்டாகவே சூதாட்டம் பார்க்கப்படுகின்றது. பணயமாக வைக்கப்படும் பொருளிலும் கூடிய பெறுமதியை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே  சூதாட்டம் ஆடப்படுகின்றது. அத்துடன் சூதாட்ட விளையாட்டின் முடிவு குறுகிய காலத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந்து சமய நூல்கள் மகாபாரதம், நளவெண்பா, போன்றவற்றில் சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் நன்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.


மகாபாரதத்திலேயே, துரியோதனனுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள் நாட்டினை இழந்தனர். ஆட்சியை இழந்தனர். மனைவி திரௌபதியை வைத்தும் ஆடினார்கள். இறுதியிலேயே மனைவியைக் கூட காப்பாற்ற முடியாத திறனற்றவர்களாக பாண்டவர்கள் வெளியேறினர். இந்நிலைக்கு சூதாட்டத்தின் மீது இருந்த மதிமயக்கமே காரணமாகும்.


 அதேபோல திருவள்ளுவர் கூட திருக்குறளில் சூதாட்டங்களால் ஏற்படும் பிரதி கூலங்கள் தொடர்பாக சூது  என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். எனவே தான் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பல நாடுகளில் சூதாட்டம் தடை செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் முற்றாக தடை செய்துள்ளதுடன், சூதாட்டம் ஆடுபவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன. எனினும் சில நாடுகளில் அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளன.


நல்லொழுக்கங்களை போதிக்கின்ற பல அற நூல்களிலே சூதாட்டம் ஒரு தீய பழக்கமாக சொல்லப்படுகின்றது. ஆனால், இன்றைய காலத்திலே எத்தனையோ பழைமையான விடயங்கள் மறைந்து கொண்டு போகின்ற போதிலும் பல காலங்களாக  தொடரும் இச்சூதாட்டம் மட்டும் மறைந்து போகவில்லை. இந்த ஆட்டத்திற்கு புத்துயிர் அளிப்பவர்களாக பணம் படைத்தவர்களே உள்ளனர்.


குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், அதிஷ்டலாபச் சீட்டு, கோழிச்சண்டை என சூதாட்டத்தில் பல வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இலங்கையிலே  அரச அனுமதியுடனும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் தான் அதிஷ்ட லாபச் சீட்டு இழுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.


அதேபோல நகரப் பகுதிகளிலே கசினோக்கள் என்னும் சூதாட்ட விடுதிகள் ஆங்காங்கே முளைத்துக் காணப்படுகின்றன. இவை நியோன் விளக்குகளின் கீழ் பகிரங்கமாக சூதாட்டங்கள் ஆடப்படுகின்ற போதிலும் அரசு அது சூதாட்ட விடுதிகளை ஓரளவேனும் கட்டுப்படுத்தியுள்ளன.


கடந்த வாரம் சண்டைச் சேவல்களை மோதவிட்டு பணம் சம்பாதிக்கும் கும்பலொன்றை வென்னப்புவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.


இதேவேளை மன்னார்தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய கரிசல் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு மேலாக பல வகையான சூதாட்டங்கள் இடம்பெற்று வருவதாக  ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் பொது அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கும் முறையிட்டுள்ளனர்.


தங்க நகைகள், வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள், வீட்டு உறுதிகள் என ஒன்றையும் விடாது அனைத்தையும் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியிலுள்ள பல வறிய குடும்பத்து கணவர்கள் ஒரு நாளைக்கு சூதாட்டத்தின் மூலம் பல இலட்சம் ரூபா திரட்டி விட்டு பெரு மூச்சு விடும் இவர்கள் மறுநாள் அனைத்தையும் தொலைத்து விட்டு வருகின்றனர்.


இதனால் பொறுப்பற்ற இவர்களை  நம்பி வாழும், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் பல வகையிலே மன உளைச்சல்களுக்கு உள்ளாகின்றனர். இத்தகையோரது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை கைவிடுகின்றனர். அத்துடன் வேறு பல சமூகப் பிரச்சினைகளுக்கும் அத்திவாரம் இடப்படுகின்றது.


கடந்த ஜனவரி மாதம் கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள மதுபான விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 69 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இவர்கள் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே கைது செய்யப்பட்டனர். இச்சுற்றிவளைப்புகள் ஒவ்வொரு நாளும் இடம்பெற்றிருந்தால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்?


அதேவேளை தங்கொட்டுவ,, தபரவிலப் பகுதியில் சூதாட்டத்துடன் தொடர்புபட்ட 3 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டிய இத்தகைய அதிகாரிகளே சூதாட்டத்திற்கு துணை போகின்றனர். இது போன்ற சம்பவங்களை வைத்தே கடந்த வருடம் "மங்காத்தா' என்னும் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நடிகர் அஜித் பொலிஸாக இருந்து கொண்டு கிரிக்கெட்டில் 500 கோடி ரூபாவை வைத்து சூதாடப்பட்டதை  இவர் மீண்டும் சூதாடி தனதாக்கிக் கொள்வதாக படமாக்கப்பட்டிருந்தது. அதேபோல "ஆடுகளம்' போன்ற பல படங்கள் சூதாட்டங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாது சூதாட்டத்தை தொடர்வது போலவே படமாக்கப்பட்டுள்ளன.


உலகிலேயே பணக்காரர்களின் விளையாட்டாகவே சூதாட்டம் உள்ளது. இவ்வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுமார் 5000 கோடி ரூபா சூதாட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அதேவேளை உலகிலே ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சூதாட்டத்திற்காக புழங்குகின்றன. அதிலும் குறிப்பாக ஆசியாவில் நடைபெறும் சூதாட்டங்கள் ஒலிம்பிக் போட்டிகளின் பெயரையே கெடுக்கின்றன என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனவே தான் இம்முறை ஒலிம்பிக்கில் முதன்முறையாக உலகளவில் நடைபெறும் போட்டிகள் மீது பந்தயங்கள் கட்டப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவிவை உருவாக்கியுள்ளதாக பிரிட்டன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹ்யூ ராபர்டஸன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரைப் பணயம் வைத்து பல சூதாட்டங்கள் நடைபெறகின்றமை ஒரு அதிர்ச்சிதரக் கூடிய விடயமாகும். அவற்றிலே ஹாக்டக் என்னும் சிக்கன் விளையாட்டு பிரபல்யமான சூதாட்டமாக உள்ளது. அதாவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலே ஒரு வெள்ளை நிற கோட்டினை வரைவார்கள். இக்கோடு தான் வெற்றி பெற்ற வரை நிர்ணயிக்கும். தொலைவிலிருந்து எதிர் எதிரே மிக வேகத்தில் காரினை செலுத்துவார்கள். எந்தக் காரின் டயர் வெள்ளைக் கோட்டின் மீது உள்ளதுடன் போட்டியாளர் உயிருடன் உள்ளாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அவருக்கு பந்தயத்தில் கட்டப்பட்ட பணம் கிடைக்கும். இருவருமே இறந்து விட்டால் கட்டப்பட்ட பணம் அதற்குரிய நிறுவனத்திற்கு சொந்தமாகும். அத்தகயை விளையாட்டுகளில் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ இந்த ஆட்டங்களை பார்வையிடுவதற்கு பலர் செல்கின்றனர். விபத்து இடம்பெற்ற இடத்தினை நாம் பார்ப்பதற்கே நெஞ்சு பதறும் ஆனால், விபத்து ஏற்படப் போகின்றது என தெரிந்து ஆவலுடன் பார்த்து மகிழ்கின்ற இவர்களின் மன நிலை விசித்திரமானது.
சூதாட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெறும். இந்த வகையிலே உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை 11.11.11 என்னும் திகதியிலே பிறக்குமென 150 கோடி ரூபாக்கள் பந்தயம் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களுக்குக் கூட பந்தயம் கட்டப்படுகின்றது. அதேவேளை இணையத்தளங்களின் ஊடாகவும் சூதாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சூதாட்டங்களில் ஒன்றான தாயம் போடுதல் என்பது உண்மையிலே தாயம் ஆடுபவர்களின் வாழ்க்கையையே தடுமாறச் செய்கின்றது. எனவே தான் தாயக் கட்டைகளை மனித தலைகளுக்கு ஒப்பாக குறிப்பிடுவார்கள். எனவே தான் மகாபாரதத்தில் வருவது போல தன் மனைவியையும் சூதாட்டத்தில் வைத்து இறுதியில் தோற்றுப் போன சம்பவமொன்று இந்தியாவிலே இடம்பெற்றுள்ளது. மேலைத் தேய நாடுகளில் சூதாட்டங்களால் பெரியளவில் பாதிப்புக்கள் என்று சொல்ல முடியாத போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டம் காண வைக்கின்றது.
பெண்களை விட அதிக ஆண்களே சூதாட்ட விளையாட்டில் அதிகளவு ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்றோ ஒரு நாள் பெற்ற குருட்டு அதிஷ்டத்தினை கொண்டோ அல்லது என்றோ ஒரு நாள் அதிஷ்டம் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனோ தான் ஆடுகின்றனர். சூதாட்டத்தில் தோற்க, தோற்க அறிவாற்றல் செயலிழக்கின்றது. எனவே எதை வைத்து சூதாடுவது என்று தெரிவதில்லை. தனக்கு சொந்தமானது மற்றவர்களுக்கு சொந்தமானது என எல்லாவற்றையும் வைத்து விளையாடி இறுதியிலே தன் தலையினையும் வைத்து சூதாட ஆரம்பித்து விடுகின்றனர்.
அதிக சூதாட்டம் ஆடுபவர்களது கண் நரம்புகளில் சில இராசயனப் பொருட்களின் குறைபாடு காரணமாகவே இந்நிலை தூண்டப்படுகின்றது. ஆகவே இக்குறைபாடு காரணமாக அவர்களுக்கு இந்நிலை அதிக சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையிலே அரச அனுமதியின்றி ஆடப்படும் சூதாட்டங்களுக்கு அபராத தொகையும் 5 வருட சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமுண்டு. எனினும் இதுவரை  காலங்களிலே அவை எந்த வகையிலே அதிகரிக்கும் சூதாட்டங்களை கட்டுப்படுத்தியதோ தெரியவில்லை. எனவே அரசு பாரிய விளைவைத் தராத சூதாட்டங்களை தனது கட்டுப்பாட்டிலே வைத்துக் கொண்டு ஏனைய வகை சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும். இந்நடவடிக்கைக்கு பொது சமூக அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும். இல்லையெனில் இலங்கையர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

செவ்வாய், 22 மார்ச், 2011

எமது கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டியது


யுத்தத்திற்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் மீன் பிடித்துறை தன்னிறைவு கண்டிருந்தது. திரைகடல் ஓடி திரவியம் தேடிய பலர் இம்மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளான முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளிலும் மீன் பிடித்துறை சிறப்புற்று விளங்கியது. இம்மாகாணத்தின் கடலுணவுத் தேவையை நிறைவு செய்ததுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடல் உணவு வகைகளை ஏற்றுமதி செய்யுமளவுக்கு மீன்பிடித்துறையில் கைதேர்ந்தவர்களாக இம்மாகாண மீனவர்கள் விளங்கினர்.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் இவர்கள் பயன்படுத்திய மீன்பிடி முறைமை நாட்டின் ஏனைய பகுதி மீனவர்களாலும் பின்பற்றப்பட்டன. இவர்கள் பாட்டன், பூட்டன் காலத்து மீன்பிடி நுட்பங்களுடன் நவீன மீன் பிடிச் சாதனங்களைக் கையாள்வதிலும் சிறந்து விளங்கினர். அதே போல் தமது கடல் வளத்தினைப் பாதுகாக்கக் கூடிய மீன்பிடி முறைகளைக் கொண்டு மீன் பிடித்தலிலும் அவர்கள் அக்கறையுடன் செயற்பட்டனர்.
இந்த நிலை கடந்த கால யுத்தத்தின் பொழுது மாற்றமடைந்தது. கடல் வலயத் தடைச்சட்டங்களினால் இம்மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்ததுடன் ஏ-9 பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டதால் கடல் உணவு வகைகளுக்கான சந்தை வாய்ப்பினை பெறுவதிலும் இவர்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக நொந்து போயிருக்கும் மீனவர்களால் இந்திய மீனவர்களின் அதி நவீன மீன்பிடிக் கலங்களுடன் போட்டி போட்டு மீன் பிடிக்க முடியாதுள்ளது.
யுத்தத்தின் பின்பு மீள்குடியமர்த்தப்பட்ட இம்மீனவர்கள் தமக்குக் கிடைத்த வாழ்வாதார உதவிகளையும் வங்கிக் கடன்களையும் கொண்டு சிறியளவான மீன்பிடிச் சாதனங்களின் உதவியுடன் தமது தொழிலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இவர்களின் இந்த சிறியரக கடற்றொழில் உபகரணங்கள் இந்திய மீன்பிடிப் படகுகளால் தினமும் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளிடம் முறையிடுகின்றனர். ஆனால் எந்த ஒரு பரிகாரங்களையும் இதுவரை அதிகாரிகள் இந்த மீனவர்களுக்கு செய்து கொடுக்கவில்லை.
தமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அண்ணிய தேசத்தவர் தமது கடற்பரப்பினுள் அத்துமீறி தமது கடல் வளத்தினையும் தமது சொத்துக்களையும் அழிப்பதாகவும் இந்த நிலைமை யுத்த காலத்தில் இருந்ததை விடவும் மிகவும் அபாயமாக உள்ளதாகவும் இம்மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் மட்டத்திலான பல சந்திப்புக்களும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் மட்டத்திலான சந்திப்புக்களும் நடைபெறுகின்றன. யாழ் குடாநாட்டையும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற ஏனைய பகுதிகளையும் பொறுத்தவரையில் யுத்தத்தினால் முழுமையான சொத்தழிவுகளைச் சந்தித்த பல மீனவர்கள் வாழ்கின்ற பகுதிகளாகக் காணப்படுகின்றன.
இவர்கள் யுத்தத்தின் போழுது இடம்பெயர்ந்து தற்பொழுது சொந்த இடங்களில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீண்ட கால நோக்கில் நமது பொருளாதார மீள் எழுச்சிக்குரிய உரிய செயற்திட்டங்களையும் முன்வைக்குமாறு கோரியுள்ளனர். தொண்டு நிறுவனங்களினூடாகவும் அரச நிவாரணங்கள், மானியங்கள் ஊடாகவும் தமது எதிர்கால வாழ்வு வளம் பெற உதவுமாறும் தமக்கு வட்டி இல்லாத இலகு வட்டி அடிப்படையில் கடன்களைத் தருமாறும் கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாகவே தெரிகின்றன.
சீரும் சிறப்பும் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வடபுல மீனவர் இன்றி அந்நிய நாட்டு மீனவர் தமது கடல் வளங்களைச் சுரண்டிச் செல்ல பார்த்துக கொண்டு கை கட்டி மெளனிகளாக நிற்க வேண்டிய வர்களாகவுள்ளனர். அதிநவீன மீன்பிடி முறைகளை பயன்படுத்தி எமது மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால் இந்திய மீனவர்களுடன் போட்டி போட்டு ஆழ் கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் என்பது சில மீனவப் பிரதிநிதிகளின் கருத்தாகவுள்ளது.
குடா நாட்டுச் சந்தைகளில் மீன், கணவாய், இறால், நண்டு போன்ற கடலுணவு வகைகளின் விலைகளினை கேட்டால் தலை சுற்றுமளவுக்கு இருக்கிறது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டுமாயின் யுத்தப் பாதிப்பிக்களை எதிர்கொண்ட மீனவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட அரசாங்கமும் அரச சார்பற்ற அமைப்புகளும் உதவ வேண்டும் வறிய மீனவர்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட வேண்டிய வாகளாக உள்ளனர்.
எனவே யுத்தத்தின் பின்னரான பொருளாதார அபிவிருத்திக்கு இந்த வட புல மீனவர் சமூகத்தின் முழுமையான வினைத்திறனை ஒத்துழைப்பினைப் பெற வேண்டுமா யின் இவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் செய்து கொடுக்கப் பட்டு இவர்களுடைய தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இயல் பான கடற்றொழிலுக்கு ஏற்ற வழி வகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாக இந்திய தென்னிந்திய மீனவர்கள் அழிக்க முன்னர் எமது கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இயற்கை அழிவை தடுக்க மனித சக்தி ஒன்றுபடல் அவசியம்


இயற்கை அழிவு அதை சார்ந்த மக்கள், சுற்றுச் சூழல் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மையுடைய அபாயங்களை அல்லது அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகும். அழிவு சம்பவம், துன்பங்கள் அனைத்தும் மனிதர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அர்த்தமுடையதாகின்றது.

மனிதன் சுயநலம் போட்டி, பொறாமை காரணமாக இயற்கை அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று, ஒலி போன்றவற்றை மாசடையச் செய்கின்றான். அதை இயற்கை சமனிலைக்கு மாறான வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாற்றுகின்றான்.
இதனால் அதிகரிக்கும் சனத்தொகை, சூழல் மாசடைதல், இயற்கை சமனிலை குழம்புதல் போன்ற தொடர்ச்சியான மாற்றங்களால் இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக உருவாகின்றன.
இயற்கை அழிவுகள் அதிகம் இடம்பெறக் காரணம் மனிதனின் நடத்தை பழக்கவழக்கங்களின் மாற்றங்களாகும். கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ தமது திமேயஸ் மற்றும் கிரேட்டிஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் லிபியா மற்றும் துருக்கியில் பெரும் பகுதிகளை விட அட்லாண்டிக் தீவுகளில் முதிர்ச்சியடைந்த சமுதாயம் காணப்பட்டது.
அச் சமுதாயம் பல்தேசங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பின் செல்வச் செழிப்பு, அதிகாரம் போன்றவற்றால் சமுதாயம் சீரழிந்தது. அதனைத் தொடர்ந்து பெரும் நில நடுக்கங்களாலும், எரிமலை சீற்றத்தாலும் அழிந்தது என்று கூறியிருந்தமை இன்று எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது தொடர் வன்முறைகள், கலாசார சீரழிவுகள், பாகுபாடுகள் உலகில் எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம் மனித வாழ்வின் இயல்பு நிலையை குலைத்து இடப்பெயர்வு, மனித சொத்து சூறையாடுதல், உயிர் சேதம் போன்ற பல பகுதிகளிலும் பணக்காரன், ஏழை, மதம் என எந்த பேதமின்றி காவு கொள்கின்றது.
வாழும் வரை தான் வாழ்க்கை. அழிவு வந்தால் எல்லோரும் ஒன்றுதான். இயற்கையான அனர்த்தங்கள் பொருட்சேதம், உட்கட்டமைப்பு சேதம், வாழ்வாதார சேதம், தொழிற் சேதம் என்பன போனால் தேடிக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் திரும்பக் கிடைக்குமா? ஆனால் இன்றைய காலப் பகுதியில் இதுவும் சாத்தியமில்லை.
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியாக சுனாமி, சூறாவளி, வெப்ப பேரலை, வர்சி, ஆலங்கட்டி மழை, எரிமலை வெடிப்பு, பெரு வெள்ளம், தீ, சூரிய கிளர் ஒளிக் கற்றை, கம்மா ஒளிக்கற்றை வெடிப்பு என இயற்கை அனர்த்த கோலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் யப்பானில் தொடர்ந்து மூன்று நாட்களுள் 168 தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலநடுக்கமானது உலக அணுவாயுத கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடருமாயின் உலகமே அழிவுக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கின்றார்கள்.
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்ட சேரிட்டி ஆக்ஸ்போம் அமைப்பு பொதுப்படையாக 2015ம் ஆண்டுக்குள் 375 மில்லியனுக்கு மேற்பட்டோர் வெப்ப வானிலை சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று அறிக்கையிட்டு உள்ளது.
எனவே இயற்கை மனித உயிர்கள் எஞ்சியிருந்தாலும் வரட்சி, சூழல் மாற்றம், தொற்றுநோய் அபாயம், தொடர்ந்து வாழ வளங்கள் பற்றாக்குறை என மனித எச்சங்களும் படிப்படியாக மடிந்து அழியும் நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருகின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. மனித சக்தி ஒன்று சேர்ந்தால் சகல சக்திகளையும் வெல்லலாம். உலக மனித சக்தி ஒன்றுபட்டு உலகைக் காக்கப் புறப்படும் காலம் வந்துவிட்டது என்றே கூறலாம்.